(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“லேடீஸ் அன்ட் ஜென்ட்ல்மன்… நவ்..தி காபம் த பிக் வண்…!
அகில உலக சமுத்திரச் சண்டையின் அதிபாரப் பெருஞ் சண்டியனுக்கான வெற்றிக் கிண்ணம்…”
அறிவிப்பாளர் உற்சாகம் நிரம்பிய உச்சக் குரலில் சத்தமிட்டார். இட்ட சத்தத்தில் அவரது மூலம் வெளியே வந்து விடும் என்று தோன்றியது.
ஆழ்கடலின் அற்புதங்களின் ஒளிப் பதிவே நம் உள்ளத்தை அள்ளிக் கொண்டு போகிறது என்றால் கடலுக்குள் நடக்கும் ஒரு சர்வதேசப் போட்டி எவ்வளவு பரவசத்தைத் சர்வதேசப் போட்டி தரும் என்று நினைத்துப் பாருங்கள். அந்தப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின் உச்சக்கட்டம் அது.
பெயரைச் சொல்வதற்கிடையில் சண்டியர் கெத்தாக முன்னால் வந்தார். அவரது பார்வையில் ஓர் அலட்சியம் பொங்கி வழிந்தது. அகில உலகக் கடற் சண்டியரல்லவா?
மைக் டைசனைப் போல் யாருடைய அங்க அவயவங்களையும் கடிக்கக் கூடாது என்பது போட்டியின் அதி முக்கியமான விதி. போட்டி நடைபெறும் எல்லைக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய அறிவித்தலாக இந்த விதி பெரிய எழுத்துக்களில் பதாதையாகத் தொங்க விடப்பட்டிருந்தது.
90களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால் ஏற்பாட்டுக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விதி முறைகள் பற்றிக் கலந்து ரையாடல் நடத்திக் கொண்டுதான் இருந்தது. 89ல் கடைசியாக நடந்த போட்டியில் போட்டியாளர்களின் தொகையும் அதிகம். அந்தப் போட்டியும் மிகக் கோரமானதாக வேறு இருந்தது. போட்டியாளர்கள் சிலர் போட்டியின் போது இரத்தத்தில் தோய்ந்தார்கள். விளையாட்டு என்பது வினையாக மாறுவதோ கோபத்தின் வடிகாலாக அமைவதோ அனுமதிக்கக் கூடிய தில்லை. ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொண்டு சண்டையிடுவது போட்டி என்று அல்லது விளையாட்டு என்று அழைக்கப்படத் தக்கதல்ல. கடந்த காலங்களில் போட்டி விதிகள் எதுவும் இருக்கவில்லை. எப்படியும் மோதிக் கொள்ளலாம். யாரும் யாரையும் எந்த வகையிலும் தாக்கலாம். சண்டைதான் முக்கியமாக இருந்ததே தவிர விதிகள் எவையும் அமுலில் இருக்கவில்லை. அதைப்பற்றி யாரும் அக்கறை செலுத்தவு மில்லை.
எனவே 2010ல் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்ட போது ஆளையாள் கடிப்பது தவிர்க்கப்படல் வேண்டும் என்ற விதி மிகக் கடுமை யாக அமுல்படுத்தப்படும் என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்தது. இவ் விளையாட்டு விதியை வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ- எந்த விதத்தில் மீறினாலும் மீறுபவர் தோல்வியாளராக அறிவிக்கப்பட்டு விடுவார் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
எழுபதுகளின் முற்பகுதியிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் நடந்த போட்டிகளில் போட்டியிட்டவர்கள் அசட்டுத் தைரியத்துடன் மோதிக் கொண்டார்கள். அந்தப் போட்டிகள் யாருக்கும் ஆபத்தை விளை விக்கக் கூடியனவாக அமையவில்லை. வெல்வதற்குக் குறுக்கு வழிகளை நாடும் முறை அந்தக் காலங்களில் யாருடைய சிந்தனையிலும் எழவில்லை.
கடந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தித் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கவில்லை. எல்லாவற் றிலும் நேர்மையும் நியாயமும் இருக்க வேண்டும் என்பது இரத்தத்தில் ஊறிக் கிடந்தது.
நாகரிகத்தின் வளர்ச்சியானது தீராத ஆசைகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருப்பது. பெருமை, பொறாமை, தம்பட்டம் ஆகியன ஆதிக்கம் செலுத்தும் சிந்தனை வளர்ச்சியின் காரணமாக ஏதோ ஒரு வகையில் வெல்வது முக்கியம் என்ற மனோ நிலை ஏற்பட்டு விட்டது. வெல்வதற்காக யாருடைய தாலியறுந்தாலும் கவலைப்படாத நிலை ஏற் பட்ட போதுதான் ஏற்பாட்டுக் குழு விழித்துக் கொண்டது. போட்டி என்பது வெல்வதையும் தோற்பதையும் உள்ளடக்கியது. ஒருவர் வென்றால் மற்றவர் தோற்றேயாக வேண்டும். வெல்வதற்காக எதையும் செய்யலாம் என்றால் அது ஒரு போட்டியாக இருக்க முடியாது என்பது ஏற்பாட்டுக் குழு தாம் அறிவித்த விளையாட்டு விதிக்குக் கொடுத்த விளக்கம்.
உலக அதிபாரக் குத்துச் சண்டையைப் போல நடை பெறும் இந்தப் போட்டியை இம்முறை நான்கே நான்கு பிரிவுகளில் நடத்த முடிவு செய்தது ஏற்பாட்டுக் குழு. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சம்பியன் தெரிவா வார். எனவே இம்முறை எண்மரைத் தெரிவு செய்வதில் காலம் சற்று நீண்டுதான் போய்விட்டது. 2009 பிற்பகுதியில் ஆரம்பமான பல்வேறு தகுதி காண் சுற்றுக்களில் போட்டிக்கேற்ற உடல்வாகு, வேகம், நீச்சல் நளினம், டைவ் செய்வதில் உள்ள லாவண்யம், உடல் சக்தி ஆகியன அளவிடப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இலங்கை சார்பில் போட்டியிட என்றுமில்லாத வகையில் இம்முறை நாற்பத்தெட்டுப் பேர் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அரசியல் ஆதிக்கம் செலுத்தாத முறையில் இவர்களில் தகுதிகாண் பரீட்சைகளில் அதிகம் புள்ளிகள் பெற்ற நால்வர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களோடு போட்டியிட வெளிப்பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் இருபத்து மூன்று பேர் மாத்திரமே. புதிய விதியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி வெளிப் பிரதேச – அதாவது வெளிநாட்டுப் போட்டியாளர்கள் நால்வர் தாமாகப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள். மீதிப்பேரில் நால்வர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.
இந்து சமுத்திரத்தின் முத்தை வெல்லும் சவால்! அகில உலக மூன்றாவது சண்டைப் போட்டி – 2010
இலங்கைக் கடற்பரப்பைச் சேர்ந்த மீன்களுக்கும் சர்வதேசக் கடற்பரப்பைச் சேர்ந்த சுறாக்களுக்குமிடையிலான பலப் பரீட்சை!
என்ற பிரம்மாண்டப் பதாதைகள் ஏற்பாட்டுக் குழுவால் போட்டி நடைபெறும் இடத்தின் நான்கு திசைகளிலும் போடப்பட்டிருந்தது.
வெல்லமுடிந்தால் வெல்லுங்கள்! -இலங்கை நெத்தலிகள் சங்கம்
இப்படை தோற்பின் எப்படை வெல்லும்? – அகில இலங்கைக் கூனி இறால்களின் கூட்டமைப்பு
இலங்கை வீரர்கள் வாழ்க! – ஸ்ரீலங்காக் கடற்கெழுத்திகளின் மாற்றுக் குழு
தோல்வி என்பது எப்படியிருக்கும்? – ஓல் சிலோன் கொடுவாக்கள் கூட்டுறவுச் சங்கம்
போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! – ஸ்ரீலங்கா கீரி மீன்கள் காங்கிரஸ்
இன மற்றும் பிரதேச வேறுபாட்டை ஒழிப்போம்! ஐக்கிய உலகை அமைப்போம்! – தேசிய ஐக்கிய அறுக்குளா அசெம்பிளி
ஆகியன இலங்கை அனுசணையாளர்கள் போட்டிருந்த பலநூறு பதாதைகளில் சற்றுத் தூக்கலாகத் தெரிந்தவை. ஸ்ரீலங்கா முள்ளுவாளை முன்னணி, ஆற்றோர இறால்கள் முற்போக்குச் சங்கம். இலங்கை ஐக்கிய கரையோர நண்டுகள் அமைப்பு என்று பலநூறு அமைப்புகளும் தமது பதாதைகளை தத்தமது வசதிகளுக்கேற்ப வைத்திருந்தன. இலங்கைக் கடற்பகுதிச் சுறாக்கள் இலங்கையின் தேசியக் கொடியைப் போர்த்தியபடி வலம் வந்து கொண்டிருந்தன.
இந்து சமுத்திரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி சர்வதேச அளவில் பிரபலம் பெற்றிருந்தது. உலகம் தோன்றிய நாள் முதல் கடல்வாழ் உயிரினங்களுக்கிடையிலான போட்டிகள் எப்போதும் நடந் திருக்கவில்லை. அப்படி நடந்திருந்தாலும் அவை பற்றிய எந்தக் குறிப்புக் களோ வீரம் செறிந்த வாய் மொழிப் பாடல்கள் நிலவியதற்கான சுவடு களோ கிடைக்கவில்லை. முதன் முதலாக 1970களில் உடல் தினவெடுத்த இலங்கை மீன்கள் பசுபிக் சமுத்திரத்தின் ஒரு சுறாவை வம்புக்கிழுத்துத் தோல்வியடையச் செய்ததுடன் இவ்வாறான ஒரு போட்டி நடைபெற ஆரம்பித்தது.
இதன் பிறகு நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டிகளில் வெளிநாட்டில் இருந்து வந்து போட்டியிட்ட எந்தவொரு சுறாவும் வெற்றி யுடன் திரும்பியதில்லை. சுறாக்களால் இலங்கை மீன்கள் கடித்துக் குதறப் பட்ட போதும் அவை வெற்றியைத் தமதாக்கிக் கொண்டே வந்திருந்தன. இதனால் பசுபிக், அத்லாந்திக் சமுத்திரங்களில் விசேட பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டுத் துறைசார் சுறாக்களால் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின் றன. ஒவ்வொரு முறையும் இலங்கை வீரர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று கடும் பயிற்சி மேற்கொண்டு அவை வந்த போதும் வெறுங்கை யுடன்தான் திரும்பிச் சென்றிருக்கின்றன.
இம்முறை கடந்த எல்லாப் போட்டிகளையும் விடச் சிறப்பாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மத்தியஸ்தர்களாக மத்திய தரைக் கடலிலிருந்து ஐந்து டொல்ஃபின்களும் நேர்முக வர்ணனையாளர் களாகத் தென் துருவத்திலிருந்து பெயர் தெரியாத அழகான மூன்று மீன்களும் வரவழைக்கப்பட்டிருந்தன. ஆர்ட்டிக் கடலிலிருந்து நூறு திமிங்கிலங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பொய் என்.என், பீ.பி.சி., ரூமர் பிரஸ் ஆகிய வெளிநாட்டு ஊடகங்களும் லங்கா பொறு. சத்தி நிறுவனம், வாந்தி வானொலி உட்படப் பல உள்ளூர் ஊடகங்களும் நிகழ்ச்சி பற்றிய தகவல்களை உலகுக்கு வழங்கின.
போட்டி ஆரம்பமான போது உற்சாகம் கரை புரண்டோடியது. சிறு மீன் குழுக்கள் ஆரவாரித்துக் கொண்டு பாட்டம் பாட்டமாக ஊர்வலம் போயின. ‘ஸ்ரீலங்கா ஜெயவேவா!’ என்ற ஆர்வக் கோஷம் கடலைப் பிளந்து கொண்டு வெளிவந்தது. டீ பிரிவு, சி பிரிவு ஆகிய இரண்டு போட்டிகளும் சட்டென முடிவுக்கு வந்து விட்டன. இலங்கை சார்பில் இரண்டு கொடுவா மீன்கள் அப்போட்டிகளில் கலந்து கொண்டன. பீ பிரிவுப் போட்டி அரை மணி நேரம் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை சார்பில் அறுக்குளா மீன் பங்கு கொண்டது. அறுக்குளாவின் தாக்குதலில் இடுப்பு முறிந்ததால் அதை எதிர்த்துச் சண்டை செய்த சுறாமீன் செந்தூண்டில் சங்கத்தால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஏ பிரிவு போட்டி நாற்பத்தெட்டு நிமிடங்கள் நடைபெற்றது. இலங்கை சார்பில் கலந்து கொண்ட தளப்பத் மீன் காட்டிய வால் சாகசம் அனைவரையும் பரவசத்துக்குள்ளாக்கிற்று. முகம்மத் அலியின் வண்ணத்துப் பூச்சி வட்டமிடும் வகைத் தாக்குதல் அழகோடு சுறாவைத் தாக்கியது. எதிராளியை முன்னர் போலக் கடிக்க முடியாது என்பதால் வெளிநாட்டுச் சுறாக்கள் கடுங் கோபத்துடனும் பெரும் ஆற்றாமையுடனும் மோதின. ஆனால் இலங்கை மீன்களின் உடல் வலு மெச்சத்தக்கதாகவும் ஆச்சரியப்படத் தக்கதாகவும் இருந்தது.
போட்டியின் போது இலங்கைத் தளப்பத் மீன் சட்டென மேலெ ழுந்து சுறாவின் நடு முதுகில் குதித்துத் தாக்கிய போது நேர்முக வர்ண னையாளர் தன்னை மறந்து கூவினார். அந்தக் காட்சி பார்வையாளர் அனை வரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
காப்பி முடிவு வழமை போலவே அமைந்தது. சகல பிரிவுகளிலும் சண்டியர் பட்டத்தை இலங்கை மீன்கள் தட்டிக் கொண்டன. ஒவ்வொரு போட்டி முடிவின் போதும் இலங்கை மீன்களின் சந்தோஷ ஆரவாரத் தைப் பார்ப்பதாயின் ஆயிரம் கண்கள் வேண்டும்.
அமெரிக்க உளவுச் சுறாக்கள் இலங்கையின் வெற்றியின் ரகசியம் குறித்துத் தனிப்படை அமைத்து ஆராய்ந்து வந்தன. அவர்களது பார்வையில் எல்லா அம்சங்களிலும் பின் தங்கிப் போன ஒரு பிச்சைக்காரச் சுண்டைக்காய் நாடு இலங்கை. இந்தப் போட்டியில் மட்டும் எப்படி ஆட்டங்காணாத நிலையைத் தக்க வைத்திருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பதற்காகத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தன. உண்மையில் தங்களது பிரதேசத்து வீரர்களின் தோல்வியில் உண்டான தொடர் அவமானமே அவைகளை இதில் ஈடுபட வைத்தது என்பதுதான் பொருத்தம்.
ஆய்வின் பின்னணியில் ருசிகரமான பல சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. வங்காள விரிகுடாவில் கற்பாறைகளில் படிந்திருக்கும் பாசியைத் தின்பதால்தான் இலங்கை மீன்களுக்கு இத்தனை பலம் வந்திருக்க வேண்டும் என்று போகிற போக்கில் ஓர் பிரிட்டிஷ் விஞ்ஞானி உளறிவிட்டுப் போக வங்காள விரிகுடாவில் உள்ள கற்கள் அனைத்தும் சுத்தமாகிவிட்டன. அது பிழையான கருதுகோள் என்பது பின்னர் தெரிய வந்ததுது.
எனினும் எதிலும் ஆழ்ந்து முழுமையான முடிவுக்கு வந்து விடும் நோக்கில் இரகசியமாகவும் சுற்றுலா என்ற போர்வையிலும் முகத்து வாரங்களூடாக இலங்கையின் ஆறுகளில் உள்ள சேற்றையும் பாசியையும் அள்ளிக் கொண்டு வெளிநாட்டுச் சுறாக்கள் சென்றுமிருக்கின்றன. களவில் அல்லது ஏதாவதொரு நொண்டிச் சாட்டில் இன்னொரு நாட்டுக்குள் புகுந்து நியாயம் பேசுவதற்குப் பழக்கப்பட்ட மேலை நாட்டாருக்கு அவ்வாறு கொள்ளையடித்துச் செல்வது ஒன்றும் சிரமமானது அல்லவே. காலம் காலமாக அவை இதைத்தானே செய்து வருகின்றன.
ஐம்பது வருடகால இரகசியம் அது. இந்த இரகசியத்தை அறிவ தற்கு கிட்டத்தட்ட இருபது வருட காலமாக அமெரிக்கச் சுறாக்கள் அலை யாய் அலைந்து திரிந்தன. அந்த அலைச்சலெல்லாம் வெற்று வேலை என்பதை இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் அவை தெரிந்து கொண் டன. அந்த இரகசியம் இவ்வளவு சுலபமாக வெளிவரும் என்று கனவில் கூட அவை எண்ணியிருக்கவில்லை. இரகசியம் வெளியான ஆச்சரியத்தை விட அந்த இரகசியத்தின் பின்னணிதாம் அவற்றைப் பெரிதும் திகைப்புக்குள்ளாக்கிற்று.
தனக்கு இந்தப் பரிசுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிற தினுசில் சண்டியர் தனது விருதைப் பெற்றுக் கொண்டார். உலகில் எந்தக் கொம்பன் வந்தாலும் உதைப்பேன் என்பது போல நின்றிருந்த அவரிடம் அறிவிப்பாளர் சம்பிரதாயமாக உரையாடினார். அவரது பதில் களைக் கேட்பதற்காக அத்தனை கடல்வாழ் உயிரினங்களும் அமைதி காத்துக் காது தாழ்த்தி நின்றிருந்தன.
“வாழ்த்துக்கள்… சண்டியரே…” – அறிவிப்பாளர்.
“நன்றி!”
“இன்றைய போட்டி நாற்பந்து நிமிடங்களுக்கு நீண்டு விட்டதே…?”
“பதினைந்து நிமிடங்களிலேயே என்னால் வெற்றியைப் பெற்றி ருக்க முடியும். ஆனால் இது ஒரு சர்வதேசப் போட்டி. இங்கு ருக்க ம ஆயிரக் கணக்கில் பார்வையார்கள் கூடியிருக்கிறார்கள். தொலைக் காட்சிகளில் கோடிக்கணக்கான ஆர்வலர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை ஏமாற்ற முடியாது!”
“ஒவ்வொரு முறையும் இலங்கையரே வெற்றி கொள்கிறார்கள். சர்வதேச அளவில் இது ஒரு சந்தேகத்தைக் கூட ஏற்படுத்தி யிருக்கிறது என்று சொல்லலாம். இந்த வெற்றியின் இரகசியம்தான் என்ன?”
“வெற்றியில் எந்த இரகசியமும் இல்லை. உங்கள் கண்முன்தானே போட்டி நடைபெற்றது? நேரடியாகப் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள்? ஆசிய நாட்டவர் வெற்றி பெற்றாலே மேலை நாட்டவருக்குச் சந்தேகம் வந்து விடுகிறது… இது கவலைக் குரியது.”
“அப்படியாயின் உங்கள் நாட்டவரின் உடல் வலுவின் இரகசியம் என்ன என்று சொல்லுங்களேன்… நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்!”
அறிவிப்பாளர் விளங்காத வகையில் போட்ட வார்த்தைத் தூண்டிலில் தற்பெருமை பொங்க நின்ற சண்டியர் சொன்னார்:-
“இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் காலப்பகுதிகளில் எங்களது நிலப்பரப்பில் என்ன நடந்தது என்பதை அவதா னித்திருந்தீர்களானால் இந்தக் கேள்விக்கு அவசியமே இருந்திருக்காது.
உங்களுக்குத் தெரியுமா… ஏனைய நாடுகளின் நிலப் பரப்பில் நியாயங்களுக்கப்பால் கொல்லப்படும் மனிதர்களை ஒன்றில் புதைத்து விடுகிறார்கள். அல்லது எரித்து விடுகிறார்கள். எங்கள் நாட்டில் கடலில் அல்லது ஆறுகளில் வீசி விடுகிறார்கள்.
…உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். நன்றி!”
– 05.07.2010
– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.