ஆங்கோர் ஏழைக்கு…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 4,861 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவும் கண்ணயர்ந்து விட்ட நடுநிசி வேளை. உறக்கமற்ற சீதளக்காற்று மனக்குமைச்சலுடன் மலைகளைச் சுற்றிச்சுற்றி கால்கள் கடுத்துப் போக அசதியுடன் மலைவெளியில் கரம் கோர்த்து நிற்கும் பனிப்புகாரில் தலையைச் சாய்த்துக் கொள்கின்றது.

அந்தக் காற்றின் தழுவலில் மெய்மறந்து பனிமலர்கள் புல்லின் நுனிகளில் பூத்துவிட அடியெடுத்துத் தவழ்ந்தபோது; மலைச்சரிவினில் தொல் பொருளா கிவிட்ட அந்த எட்டுக்காம்பிரா லயத்தின் ஓட்டைத் தகரங்களின் இந்திரக் கண்கள் பனிக்கின்றன.

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தத்தில் அக்கினிப் பிரவேசம் செய்தும், இரண்டு தலைமுறையாய் தன்னோடு ஒன்றுவிட்ட, அந்த காம்பிரா வாசிகளுக்காக “லயன் உடைந்தால் பழைய இரும்புக்கடை” என்ற சாபவிமோசனமின்றிருக்கும் லயத்தின் தொங்கல் காம்பிராவின் மூலையில் அணையாத மனச்சாட்சியே போன்று குப்பிலாம்பு எரிந்து கொண்டிருக்கின்றது. ஏனைய காம்பிராக்கள் நாளைபொழுது எப்படி விடியும் என்ற வினாவைப் போன்று நிச்சயிக்க முடியாத எதிர்காலத்தைப் போலவே இருண்டு போய்க்கிடக்கின்றன.

தனியொரு மின்மினியென கும்பிலாம்பு கண் சிமிட்டும் தொங்கல் காம்பிராவில் உறக்கமின்றி தவித்துக்கொண்டிருக்கும் இராமலிங்கம் “கும்பிலாம்பை நூர்த்து விடுவோமா? என்று ஒரு கணம் யோசித்தான். பின்னர் பிள்ளைகுட்டி உள்ள வீடு லாம்பெண்ணெய்ச் செலவைப் பார்த்தால் முடியாது. பூச்சிபட்ட ஏதும் வந்தால் என்ன செய்யிறது? எனப் பயந்து “எரியட்டும்” என்று அப்படியே விட்டுவிட்டான். நினைவுச் சக்கரம் சுழன்றது. எப்போது பொழுது விடியும்? இன்னும் கொஞ்சநேரத்தில் கோழி கூவிடும்…காலையிலேயே கிட்டுவைக்கூட்டிக்கிட்டு போகணும்… பெரிய சேரைக்கண்டு புள்ளையை ஆறாம் வகுப்பில் சேர்த்துக்கிட்டு தான் மத்த சோலியெல்லாம்…ஒரு நாள் பொழைப்பு போனாலும் பரவாயில்லை. புள்ளவுட்டு படிப்பு பெருசா, வேல பெருசா? என்னா வேலை கல்லுடைக்கிறகசுமால வேலை. என் பிள்ளைய படிக்க வச்சிட்டா போதும்…”

மனம் கற்பனைக்குச் சிறகுகட்டிக்கொண்டு இருந்தது. தனது குடும்பத் துக்கும் லயத்தில் உள்ளோருக்கும் இனி ‘நல் வாழ்வே இல்லையென நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்த போதும், இப்படி ஒரு திருப்பு முனை ஏற்படுமென அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

“அவனுக்கு அவன் வணங்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பூரண நம்பிக்கை இருந்தது. எப்படியும் அந்த மாரிகாப்பாற்றுவாள். தன்னைக் கைவிடமாட்டாள்!” என்று நிச்சயமாக நம்பினான்.

அந்த நம்பிக்கை மீண்டும் துளிர்விட்டு…அவன் மனதில் நர்த்தனமாட, அவன் உறக்கமின்றி சிந்தனைகளில் விழித்துக் கொண்டு புலரும் பொழுதைத் தேடிக் கொண்டிருந்தான்.

துள்ளித் திரியும் பதினொரு வயதிலேயே உதிர்ந்த பிஞ்சாகத் துவண்டு கிடக்கும், அவனது நம்பிக்கை நட்சத்திரமான கடைசி மகன் கிட்டு மூட்டைக் கடிக்குப் பயந்து சுவற்றிலிருந்து பயந்து, ஒதுங்கி, கிழிந்த ஒரு படங்குத் துண்டைப் போர்த்திய படி உறங்கிக் கொண்டிருந்தான். இராமலிங்கத்தின் மனைவி அழகம்மா, பழந் துணியின் மேல் துயரங்களையே தலை அணையாக வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

இராமலிங்கம் உறக்கத்திலிருக்கும் மகன் கிட்டுவைப் பார்க்கிறான். “மூணு மடிப்பிச்சை போட்ட தெய்வம் இரண்டை எடுத்துக்கிட்டாலும், பேரு சொல்ல ஆசைக்கொரு ஆண் பிள்ளையை என்னோடவிட்டு வச்சிருக்கே அது போதும் கொள்ளி வைக்க” என்ற ஆறுதல் மனதில் ஏற்படும் போது கவலை போய் தெம்பு ஏற்படுகின்றது.

அவனுக்கும் அழகம்மாவுக்கும் திருமணம் நடந்து இருபது வருடங்களா கின்றன. இருந்த போதும் அந்த வைபவம் அன்றைய தினத்தில் நடந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்துமே நேற்று நடந்தது போல அவன் மனதில் பசுமையாக உள்ளன.

திருமணத்துக்குப் பின்னர் மூன்று ஆண்பிள்ளைகளுக்கு அவன் தந்தையாகி மகிழ்ந்து உலாவிய போது, அவர்களது சாம்ராஜ்யமான அந்த தோட்டம் சுவீகரிக்கப்பட்டு, அயலவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, அந்த தோட்டத்தில் இருந்தவர்கள் நிராதரவானார்கள். மூடிய அந்த வட்டம் எல்லோருக்குமே திறந்து விடப்பட்டபோது இவர்களுக்கு மட்டும் மூடப்பட்டு விட்டது.

தோட்டம் என்ற ஒன்றில் வாழ்ந்த போது தொல்லைகள், துன்பங்கள் என்பன உடன்பிறந்த நோயாக; நித்திய; நிரந்தர சோகத்தை அளித்த போதிலும்; அசையாத சுழலும் சக்கரத்தைப் போன்று அன்றாட வாழ்க்கைக்கு ஏதோ ஓர் உத்தரவாதம் இருந்தது.

சிறுபிரச்சனையென்றாலும், “எங்கே விடியுது?… ஜில்லாவில் விடியுது என்று தலைவர் மாவட்டப் பிரதிநிதியிடம் போய் நின்று விடுவார். மாவட்டப் பிரதிநிதி கொஞ்சம் அசந்துவிட்டால் போதும்; மறுபயணம் மத்திய கமிட்டிவரை நடக்கும். நீதிகிடைத்த பின்னர் தான் ஓய்வார்கள். அதுவும் சங்கபேப்பரில் கோரிக்கை வெற்றி என்ற செய்தி வந்த பின்னரே “விட்டேனா பார்” என்ற திருப்தி ஏற்படும்.

அப்படி ஒரு வேகம். உழைப்பு தரும் உத்வேகம். பாடுபடும் தொழிலாளர் என்ற உணர்வு தரும் ஆவேசம். மொத்தத்தில் ஒரு சத்திய வேட்கை.

ஆனால். அது அன்று! இராமலிங்கத்தைப் பொறுத்தவரை அவையாவுமே முடிந்து போன சங்கதி. கம்பனியாக இயங்கிய தோட்டம் இன்று சிறகறுந்த சடாயுவாக கூறுபட்டு, சிறுசிறு தோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்னர் தோட்டம் என்ற பெயரும் மறைந்துவிட ஒரு கிராமமாகி; மலையெங்கும் வண்ண வண்ண வீடுகள் முளைத்து வெசாக் கூடுகள் தொங்கும் மரத்தைப் போன்று ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

மலையகத்தின் தாழ் நிலத்திலுள்ள தோட்டங்கள் கை நழுவதைப் போல; காலம் நழுவிக் கொண்டிருக்கின்றது. தோட்டம் கைநழுவிப்போக, குடியிருந்த லயத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டாகி விட்டது. லயம் சோறு போடுமா? தொழில்? முன்பு செய்த போதே பற்றாக்குறை தான். உடை, பண்டிகை, திருமணம் என்பன வந்து குறுக்கிட்டு விட்டால் துண்டு விழுந்து விடும் இப்போது?

சேவைக் காலப் பணம் முதல் ஊழியர் சேமலாபநிதிவரை கிடைக்க வேண்டிய சகல கொடுப்பனவுகளை எல்லாம் பெற்று, ஆறு மாதங்களை ஒட்டிய பின்னர், இனியும் தாக்குப் பிடிக்க முடியாத சில குடும்பங்கள் வவுனியாவுக்கு நடையைக் கட்டி விட்டன. மீதியானவை நம்பிக்கைத் துணையாகக் கொண்டு இரு மைல்களுக்குள்ளிருக்கும் நகருக்கு நடந்து அன்றாடம் பொழுதை ஓட்ட, கிடைக்கும் தினக் கூலித்தொழில்களை தேடிக் கொண்டுவிட்டன.

நகரத்தின் பக்கத்தில் அமைந்ததில் ஏற்பட்ட நன்மை இது! இராமலிங்கமும் அவன் மனைவி அழகம்மாவும் களுதாவளை கல்முதலாளி சிவாவின் கற்குழியில் கல்லுடைக்கும் தொழிலில் சேர்ந்தனர்.

தோட்டத்தொழில் போய், கல்லுடைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந் தவர்களை கலகம் வந்து ஓடவைத்து விட்டது. சேர்ந்து நின்று வழிபாடு செய்தவர்கள்; பிரிந்து நின்று வணங்கிய தெய்வத்தையே எரித்த போது “என்ன நடந்தது ஏன் இப்படி” என்று செய்வதறியாது திகைத்துப் போனார்கள். மானத்தை ஈனமாகப் பறித்த கயவர்களின் செயலை நினைத்து, வெதும்பி ஊனுமே! உருகி நின்றார்கள்.

கொள்ளை… தீவைப்பு… நினைத்துப் பார்க்க முடியாத அனர்த்தங்கள் அன்பில் கனிந்த இதயங்கள் அம்பு எய்த ரணமாய் மாறி வாட்ட, சீ… மிருகங்களே என்று மனம் வெறுப்பினைக் கொட்ட, சே…. கொடுமை… கொடியவர்கள்… இனி இவர்கள் முகத்தில் விழிக்கக்கூடாது என, தன்மானம் உலுப்ப, வெந்த உள்ளங்கள் வீறாப்புடன் புறப்பட்டன.

பிறந்து வளர்ந்த தோட்டங்களைத் தவிர வேறு உலகத்தையே காணாதவர்கள் ஊர்விட்டு ஊர்; பரதேசியாக போனார்கள். ஆலயங்களும், அகதிமுகாம்களும் அடைக்கலம் கொடுக்க துணிவுடன் புதிய ஏட்டைப் புரட்டினார்கள்.

திடங் கொண்ட உள்ளங்கள் சோர்ந்து விடாமல் வடக்கு சென்றது வரள் நில வளரிகளில் புகுந்து, வைரம் பாய்ந்த பாலைகளை வெட்டி வீழ்த்தி, மண்ணை வணங்கிக் கொத்திப் புரட்டி புதுத்தெம்புடன் வானத்தை நிமிர்ந்து பார்த்த போது…

மண்ணில் தெரிந்தது பூத்துக்குலுங்கும் புதிய பூக்கள்; பூத்து நிற்கும் புதிய அலைகள்…எகிறிக் குத்திட..

போர் மேகங்கள் திரண்டு சூழ… ஆகாயத்தை துளைத்து, சல்லடையாக்கி இரத்தம் கசிய, விண்மீன்கள் நொருங்கி விழ… வெள்ளிப் பறவைகள் இட்ட முட்டைகள் குடிசைகளைத் தழுவ, இராமலிங்கத்தின் இரு புத்திரர்களையும் தீ நாக்கு சுவைத்து விட்டது. துப்பாக்கி ரவைகள் இட்ட முத்தத்தில் அந்தப் பிரதேசம் ரணக்களமான போது…. நம்பிக்கையின் கடைசித் தந்தியும் அறுபட, மிஞ்சிய கடைசிப் பையனையேனும் காப்பாற்றினால் போதுமென மனவைராக்கியத்தை ஒரு பக்கம் மூட்டை கட்டிவிட்டு பிள்ளைப் பாசத்தையே உருக்கொண்டவனாக பழைய இடத்துக்கே திரும்பி வந்து சேர்ந்த போது குற்றுயிராகக் கிடக்கும் அந்த லயம் மட்டும் எவ்வித பேதமும் இன்றி ஒரு தாயின் வாஞ்சையுடன் அவர்களை அரவணைத்துக் கொண்டது.

கல்லுடைக்க இராமலிங்கத்தின் குடும்பம் திரும்பி வந்து சேர்ந்தால் சிவா முதலாளிக்கு பூரண திருப்தி. திருமலைக்குக் குடிபெயந்தவர்களும் தன்னிடம் வந்து சேர்ந்துவிட வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.

இராமலிங்கம் கைப்பொருளை இழந்து துன்பத்தோடு, புத்திரசோகமும் சேர்ந்து வாட்ட விரக்தியுடன் இருந்த போதிலும் அயலில் உள்ளோர் அஞ்சி ஓடிய மனநிலை மாறி, உறுதிகொண்ட நெஞ்சுடன் வாழ்வதைக் காண ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்பட்டது. நாளடைவில் அவனும் மனம் தேறினான். சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் சக்கரவாகப்பட்சியென சமுதாயமே வீறுகொண்டு நின்றது.

சோர்வுற்ற சமூகத்திற்குப் புதிய இரத்தம் பாய்ச்சும் பணியில் இளைய தலைமுறையினர் முன்னின்று உழைத்தனர். காமன் தகனத்தையும், கூத்து களையுமே கண்டிருந்த தோட்டம் கல்விக்கருத்தரங்குகளையும், கலை நிகழ்ச்சி களையும் நடத்திக் கொண்டிருந்தது. பக்கத்திலுள்ள பாடசாலையில் இளைஞர் நடத்திய கருத்தரங்கில் பங்கு பற்றி அவனையும் அழைத்திருந்தார்கள். அந்த கருத்தரங்கில் தொழிலாளர் கல்வி பற்றி இளைஞர் வேலாயுதம் ஆற்றிய உரை அவன் மனதில் சிலையில் எழுத்தெனப் பதிந்தது.

‘நாம் உழைக்கவும் இறக்கவுமே பிறந்தவர்கள் என்ற மனநிலை மாற வேண்டும். வீழ்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தைக் கல்வியினால்தான் எழுச்சியுறச் செய்ய முடியும். மலையகத்தின் இளைய தலைமுறை அறிவு பூர்வமாக, ஆக்க பூர்வமாக வளர வேண்டும். உங்கள் குழந்தை தோட்டப் பாடசாலையில் கிடைக்கும் ஐந்தாம் வகுப்பு ஆரம்பக்கல்வியுடன் நின்று விடக்கூடாது. நகர்ப்புறங் களுக்குச் சென்று உயர் கல்வியினைப் பெறவேண்டும்.

“கல்வி மாத்திரமல்ல, வெளிப்பழக்கம் நல்ல மனோநிலையினையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தும் – தாழ்வு மனப்பான்மையினை நீக்கும்.

“அன்ன சத்திரங்கள், ஆலயங்கள் ஆயிரம் அமைப்பதை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்து உயர்வடையச் செய்வதே மேல்!” என உணர்வு பூர்வமாக அவர் ஆற்றிய உரை அவனைச் சிந்திக்க மட்டுமன்றி செயல் படவும் தூண்டிவிட்டது.

கூட்டம் முடிய, அவரைக் கண்டு வணங்கினான் இராமலிங்கம், அவர் தன்னை ஒரு தோட்டத்தொழிலாளியின் பிள்ளையென பெருமையுடன் கூறியதைக் கேட்க அவனுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும் நம்பிக்கை வளர்ந்தது.

அந்த இளைஞனைப் போலவே தன் மகனையும் வளர்த்து ஆளாக்க வேண்டுமென உறுதி பூண்டான். உடன் செயலிலும் இறங்கினான்.

விடியலில் சேவல்கள் சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி இசைக்க. இராமலிங்கத்தின் கனவுகள் “திரி-டி” திரைப்படமாக மலர்ந்தன, “கிட்டு என்னைப் போல கல்லுடைத்து, கை நொந்து சாகமாட்டான். நேற்று மேடையில் முழங்கிய அந்த இளைஞனைப் போல், தான் வசித்து தோட்டத்தின் துரையைப் போல் கிட்டு அழகாக நடந்து வருவதைப் போன்று உருவகித்து மகிழ்ந்தான்.

பொழுது புலரும் முன்பே; மகள் கிரிஸ்ணசாமிங்க கிட்டு சகிதம் அந்த கல்லூரி “கேற்’ வாசலில் துவார பாலகராய் நின்றிருந்த இராமலிங்கம், அதிபரின் காரியாலயத்துக்குள் அடியெடுத்து வைக்கும் போது காலை மணி பத்திற்கும் மேலாகிவிட்டது.

பல்வேறு அவசர வேலைகளில் ஈடுபட்டிருந்த அதிபர்; உதவி அதிபரைப் பார்த்து பேசும்படி பணிக்கின்றார். இராமலிங்கம் உதவி அதிபரைக் கண்டு உதவி கேட்க, அந்தப் பணிமனையின் வாசலில் நந்தியாய் அமர்ந்திருக்கும் கிளார்க்கிற்கு வழிகாட்டுகின்றார். வரவு இடாப்பிலுள்ள வட்டங்களை – எண்ணிக் கொண்டிருந்த கிளார்க்கிடம் தன்னுடைய சோகக் கதையை ஆதியோடந்தமாக எடுத்துக்கூறி “என் பிள்ளையை சேருங்க சாமி” என்று சேவித்து நின்றான்

“கிளார்க்” இராமலிங்கத்தை ஒரு பாவியைப் பார்ப்பது போல பார்க்கின்றார். கேள்விக்குறி எழுப்பி நிற்கும் அவருடைய அந்த முகம் பாடசாலை அட்மிஷனில் உள்ள ஆயிரம் அர்த்தங்களுக்கு கட்டியம் கூறி நிற்கின்றது.

“அப்ளிகேஷன் போட்டியா”

“என்னங்க ஐயா சொல்லுறீங்க…. விளங்கல்லையே கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க…”

கிளார்க் தலையில் அடித்துக் கொள்ளாத குறையா, “காலையிலேயே அறுவை கேஸ்” என்று முணுமுணுத்தபடி “பாடசாலையிலே சேர போனவருஷமே விண்ணப்பம் செய்தியா?”

“இல்லங்க கலவரத்துக்குப் பிறகு இங்க இருந்துட்டு போயிட்டு, பிறகு அங்கேயும் இருக்க முடியாம வந்திட்டேங்க…மூணு பிள்ளைங்க…கறிவேப்பிலை கொத்தாட்டம், மூத்தது ரெண்டையும் பலி கொடுத்திட்டேங்க. இவன் கடைசி புள்ளைங்க. தோட்டத்து பள்ளியிலே அஞ்சாம் வகுப்பு படிச்சிட்டு…. வீட்டுலத்தாங்க சும்மா இருந்தான். கடைசிப் புள்ளைய சரி படிக்க வைக்கலாமுனுதாங்க…சாமி யோசிச்சு வந்தேன்… ஓங்க மாதிரி ஒரு படிச்சவருதாங்க நேற்று கூட்டத்துல பேசி என் கண்ணை திறந்து வைச்சாரு”

“அவங்களுக்கென்ன மேடையில் பேசுவாங்க. இங்க எங்களுக்கு இருக்கிற புரபளம் அவுங்களுக்குத் தெரியுமா? சரி டொனேஷன் எவ்வளவு கொடுப்பா?” வார்த்தை நறுக்கென விழுந்தது.

“டொனேஷன் இல்லையங்க….பையன் பேரு கிட்ணசாமீங்க…வீட்டுல கிட்டுன்னு கூப்பிடுவாங்க” இராமலிங்கம் திகிலுடன் பதில்கூறினான்.

கிளார்க்கின் முகம் சிவந்தது. அட்மிஷனுக்குப் பொறுப்பான உதவி அதிபர் கழன்று கொண்டு தன்னிடம் அனுப்பி வைக்கும் போதே இது உருப்படி இல்லாத கேசு என்று நினைத்தார். அது இப்போது ருசுவாகி விட்டது. நல்ல கேசா இருந்தா இப்படி தன்னிடம் வரும்?” என்று அலுத்துக் கொண்டு,

“இந்தா ஐயா எனக்கு நெறைய வேலை இருக்கு….. உன்னோட அக்கப்போர் அடிக்க முடியாது. பாடசாலையில் இடம் எடுக்க டொனேஷன் அதாவது பணம் கொடுக்கணும் பணம் கொடுக்க முடியாதுன்னா பையன் இருந்து படிக்க ஒரு வாங்கு மேசையும் ஒரு கதிரையும் வாங்கிவாங்க… இல்லாட்டி இங்க சேர்க்க முடியாது.”

“ஐயா சாமி நான் ஏழைங்க இந்த ரெண்டு கைகளையும் பாருங்க….. கல் உடைச்சி தான் எங்க குடும்பம் கஞ்சி குடிக்குது. பெரிய மனசு வைச்சு என்புள்ளையை ஸ்கூல்ல சேர்த்திடுங்க…. நான் அகதிங்க…”

“உங்களுக்கு மத்த வேலைகளுக்கெல்லாம் பணம் இருக்கும் படிப்பு, பாடசாலைன்னு வந்தா மட்டும்தான் பணம் இருக்காது. உன் பிள்ளைய மட்டும் “ப்ரியா ” சேர்த்தா நாளைக்கு பி.டி.ஏ.யில கேள்விகேட்டா யார் பதில் சொல்லுறதாம்…. இங்க இடமில்லை. வேறுஸ்கூல்ல பாரு…”

கிளார்க் எழுந்துவிட்டார்.

அவர் தலைக்குமேலே வேலைப்பாடுகள் அமைத்து பிரேம் போடப்பட்ட ஒரு பெரியவர் படம். அதற்குக் கீழே இலவசக் கல்வியின் தந்தை என்று எழுதப்பட்டிருந்தது.

‘ஐயா இங்க டவுனுல ஆம்புள புள்ளைங்களுக்கு வேறு பாடசாலை இல்லைகளே’

இராமலிங்கத்தின் குரல் கிளார்க்கின் செவியில ஏறவில்லை. அதிபரின் முகத்தைப் பார்த்து மீண்டும் தன் நிலையை சொன்னால் தனது பிள்ளைக்கு வழி பிறக்குமென இராமலிங்கத்தின் உள் உணர்வு உணர்த்திய போதும் அந்த இடத்தில் தான் ஒர் அந்நியனைப்போல் அவமானப்பட்டு நிற்பதாகக் துணுக்குற்று நடந்து விட்டான்.

கல்லூரி ஆபிசில் அதிபர் தான் சரஸ்வதி பூஜையின் போது, “பேசிய பேச்சு கொட்டை எழுத்தில், “மலையக மாணவர்கள் டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும் வரவேண்டும், இதுவே என்வாழ்க்கையின் இலட்சியம்” – என்று பத்திரிகையில் நாலுகளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பி திருப்பி வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

பத்திரிகை நிருபர், பாடசாலையில் தான் உதவி ஆசிரியர். அவருக்கு நேர சூசி கிடையாது. வரும் நேரம், போகும் நேரம் என்ற கட்டுப்பாடு கிடையாது.

“அரசாங்க பாடசாலைகளில் டொனேசன் கேட்க்க கூடாது.” சுற்றறிக்கை முதல் அறிவுரைகள் எல்லாம் ஏட்டுச் சுரக்காய் தம்பட்டங்களே “டொனேசன் கேட்கத்தானே கூடாது. தாரளமாக வாங்கலாம் – இது நடமுறை.”

இராமலிங்கத்தின் நொருங்கிய மனதுடன் பாடசாலையிலிருந்து திரும்பி வரும் போது கிட்டு தனக்கு தேநீர் வாங்கித்தருமாறு அவனிடம் கேட்டான்.

இவருவரும் பஸ் நிலையத்துக்கு எதிர்ப்புறமாக இருக்கும் அந்த ஓட்டலில் தேநீர் அருந்திவிட்டு காசைச் செலுத்த; கல்லாவிருக்கும் முதலாளியிடம் சென்ற போது, இராமலிங்கத்தின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்தார் முதலாளி. அந்த குளிர்ந்த பார்வை ஆயிரம் அர்த்தங்களை பேசி நின்றது.

‘என்ன பையன் உங்க பிள்ளையா… எங்க வேலை செய்யிறான்’ என் மகன் தாங்க….. அஞ்சாம் வகுப்பு சோதனையில பாஸ் ஆகிவிட்டான். ஆறாம் வகுப்புல சேர்க்க அழைச்சிட்டு வந்தேன். ஸ்கூல்ல சேர பணம் கட்டணுமாம். இல்லாட்டி மேசை நாற்காலி வாங்கிக் கொடுக்கணுமாம். ஏங்கிட்ட அவ்வளவு ஏதுங்க. ஒரு நாள் பொழுது ஓட்டுறதே சிவனறிஞ்சுப் போவுது. இராமலிங்கத்துக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஹி….ஹி….ஹி…” முதலாளி சிரித்தார். சிரித்துவிட்டு, “இந்தாப்பா உனக்கு என்னாத்துக்குப் பெரிய ஆசையெல்லாம் வெரலுக்குத் தகுந்த வீக்கம்னு பெரியவுங்க சொல்லி இருக்காங்க இல்லியா? என் பிள்ளைகள் ரெண்டுக்கும் பத்து பத்தாயிரம் கட்டித்தான் பாடசாலையில் அட்மிசன் எடுத்தேன். நீ மேசை நாற்காலி வாங்கிக் கொடுத்து…. பையன் படிச்சி உத்தியோகம் பார்த்து… இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? உனக்கு சம்மதமுன்னா சொல்லு நான் பையன் என் கடையில மேசை தொடைக்க வச்சிக்கிறேன்…. சாப்பாடு போக மாசம் இருபது போட்டு தாரேன். யோசிக்காத…”

இராமலிங்கம் ஏதேதோ யோசித்து கலங்கி திகைத்த போதும் கடை முதலாளியின் பேச்சுக்குப் பச்சைக் கொடி காட்டுவது போல தலையசைத்தான்.

மேசை நாற்காலி வாங்கிக் கொடுக்க முடியாதபடியால், மேசை துடைக்க வேண்டியுள்ளதே என்பதை உணராத கிட்டு கண்ணாடி அலுமாரியினுள் வகைவகையாக நிறைந்து கிடக்கும் இனிப்புக்களையும், தின்பண்டங் களையும் கண்களால் அளந்து. மனதில் சுவைத்துக் கொண்டிருந்தான். பாடசாலையில் சேருவதற்கு வாங்கு மேசை நாற்காலி வாங்க முடியாத அவனை சைவக்கடை மேசையுமா “தன்னை துடைக்க வேண்டாமென ” விரட்டியடித்து துரத்தி விடவா போகின்றது.

– வீரகேசரி 1986, அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *