(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கள்ளச்சிரிப்புடன் கூடிய பணிவுடன் எதிரே நின்றிருந்த மேஸ்திரி சின்னானை ஏறிட்ட ராமநாதன். மனதுக்குள் ஏன் இப்படி கொஞ்சமும் நன்றியில்லாமல் நடந்துகொள்கிறான் இந்தச் சின்னான் என்று யோசித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன் முதன் முதலில் சின்னான் அவர் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து கண்ணில் கண்ணீருடன் ஐய்யா உங்களைப் பத்தி நிறையா பேரு சொன்னாங்க என்னோட நிலைமை ரொம்ப மோசம். இருந்த ரெண்டு காணி நெலத்தையும் விவசாயம் பண்ண முடியாம வித்துப்போட்டு வந்துட்டேனுங்க. ஏற்கெனவே ரெண்டு பொட்டைப் பிள்ளைகளை பெத்து வெச்சிருக்கேன் இப்போ இருக்கிற நெலமையிலே என்னாலே அந்த கிராமத்திலே வாழ முடியலைங்க.
என்னை ஏமாத்தி நான் வித்த நெலத்தையும் அடி மாட்டு வெலைக்கு வாங்கிகிட்டாரு எங்க கிராமத்துலெ இருக்கிற பெரிய மனுஷன் அவரை என்னாலே ஒண்ணும் செய்ய முடியாதுங்க. அதுனாலே பட்டணத்துக்கு பஞ்சம் பொழைக்க வந்தேனுங்க நிறையா இடத்திலே வேலை கேட்டேன் யாரும் ஒரு உதவியும் செய்ய மாட்டேங்கறாங்க.
ஒருத்தர் சொன்னாரு உங்களைப் பாக்கும் படி அதுனாலேதான் வந்தேன். எப்பிடியாச்சும் எனக்கு ஒரு நல்ல வழி காமிச்சீங்கன்னா நான் பொழச்சுக்குவேன், என் குடும்பத்தை காப்பாத்துங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போவும் என்ன வேலை குடுத்தாலும் செய்யிறேன் சாமி. என்று கதறிய சின்னான் அவர் கண் முன்னே தெரிந்தான்.
அவன் மேல் இரக்கப்பட்டு பல பேரிடம் சொல்லி ஒரு தெரிந்த கட்டிடம் கட்டும் மேஸ்திரியிடம் சொல்லி அவனுக்கு சித்தாள் வேலை வாங்கிக் கொடுத்ததும் சின்னானும் அவரை அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போவதும் தொடர்ந்தது.
ஒருநாள் சின்னான் . ஐய்யா உங்க புண்ணியத்துலே நிறைய வேலை கத்துகிட்டேனுங்க இப்போ பெரிய ஆளு கூலி குடுக்கறாங்க, ஒரு நாளைக்கு நான் வேலைக்குப் போய்ட்டா நானூத்தி அம்பது ரூவா தராங்க. ஏதோ உங்க புண்ணியத்துலெ கொஞ்சம் காசு பணம் சேத்து புள்ளைகளைப் படிக்க வெச்சிகிட்டு இருக்கேன் நீங்களும் அப்பப்போ உதவறீங்க.
அதுனாலே நானும் ஒரு மனுஷனா சுத்திக்கிட்டு இருக்கேனுங்க உங்களை என் வாழ்நாளுலே மறக்க மாட்டேனுங்க. என்று கூறிய சின்னானா இப்போது தன் எதிரே நின்றுகொண்டு பெரிய கட்டிடப் பொறியாளன் போல் பேசிக் கொண்டிருக்கிறான், அதுவும் கொஞ்சமும் நன்றியில்லாமல் இது வரை அவர் கொடுத்த பணத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு ஆரம்பித்த அவருடைய வீட்டை பாதியிலே நிறுத்தி பலவகையிலும்
அவருக்கு தொல்லை கொடுத்து அவனை விட்டால் வேறு வழிகிடையாது என்னும் நிலையை உருவாக்கிவிட்ட அவனை நிமிர்ந்து பார்த்தார் ராமநாதன்
ஒரு வேளை இவனை நம்பி இந்த வீடுகட்டும் வேலையை ஒப்படைத்தது தவறோ. தலைக்குமேலே போய்விட்ட நிலையை எண்ணிப் பார்த்துவிட்டு சரி முடிவா என்ன சொல்றே சின்னான் இன்னும் மேல் தளமே போடலை அதுக்குள்ள ஏற்கெனவே நான் போட்டு வைத்திருந்த கணக்குப்படி நிறைய பணம் செலவாயிடிச்சு இன்னும் எவ்வளவு நாள் இப்படியே வேலையய இழுக்கப் போறே எப்போ முடிப்பே என்றார்.
உடனே சின்னான் என்னங்க இப்பிடிப் பேசறீங்க நீங்களும் நாப்பது நாளா தினமும் வரீங்க,நாங்க செய்யிற வேலையைப் பாத்துகிட்டு தானே இருக்கீங்க என்னா செய்யிறது சிமண்டு,மணலு எல்லாம் வெலையேறிப் போச்சுங்க,அதுமட்டும் இல்லீங்க வெலை செய்யிறதுக்கு ஆளும் கிடைக்க மாட்டேங்கறாங்க, தினோம் நானு இவனுங்களைத் தேடிப்பிடிச்சு கூட்டியாறேன் உங்க வேலை நிக்கக் கூடாதுன்னுட்டு. நான் என்னா செய்ய முடியும் சொல்லுங்க என்றான்.
ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஏதேதோ காரணம் சொல்லி கடந்த பதினைந்து நாட்களாக வேண்டுமென்றே இழுத்துக்கொண்டிருக்கும் அவனைப் பார்த்த சரி பேசினதையே பேசிக்கிட்டு இருந்தா ஒண்ணும் ப்ரயோசனமில்ல நாளைக்கு தளம் போட்டாகணும் இப்போ முடிவா என்ன சொல்றே என்றார் ராமநாதன்.
அதானுங்க நானும் சொல்றேன் இந்தப் பயலுங்க இருக்கானுவளே இவிங்களுக்கு கொஞ்சமும் நன்னி கிடையாதுங்க இத்தினி நாளா இங்க வேலை குடுத்து சாப்பாடு குடுத்து, டீ வாங்கிக் குடுத்து எல்லாம் செஞ்சிருக்கோமுங்க இவனுங்க என்ன சொல்றாங்க தெரியுமா. நாளைக்கு வேலைக்கு வந்து தளம் போடணும்னா இது வரைக்கும் நாம் குடுத்த கூலியைவிட அதிகமா குடுத்தாதான் வருவானுங்களாம், நான் நல்லாச் சத்தம் போட்டுட்டேனுங்க. கொஞ்சம் கூட நன்னி இலாத பசங்க என்றான் சின்னான்.
என்னது இன்னும் அதிக கூலி குடுத்தாதான் வருவாங்களா அதிர்ந்து போய் உட்கார்ந்தார் ராமநாதன். அப்போது அங்கே வந்த அவருடைய பிள்ளை ரமேஷ் அப்பா ஏம்ப்பா இப்பிடி உக்காந்திருக்கீங்க என்ன ஆச்சு என்றான் இன்னும் அதிக கூலி குடுத்தாதான் நாளைக்கு வேலைக்கு வருவாங்களாம் என்றார் சோகமாக ரமேஷ் அப்பா இப்போ என்ன ஆயிடிச்சு ஏன் பதர்றீங்க இப்பல்லாம் அப்பிடித்தாம்பா சின்னான் சொல்றது உண்மை, வேலை செய்ய ஆட்கள் கிடைக்கிறது இல்லே அதுனாலே அவங்க கேக்கிற கூலியைக் குடுத்து வேலையை முடிப்போம் வேற வழியில்லே.
சின்னான் நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க ஆமாம் எவ்ளோ அதிகமா கேக்கறாங்க என்றான் ரமேஷ். ஒவ்வொருத்தனும் நூறு ரூபாய் அதிகமா கேக்கறாங்க தம்பி, நானு எப்பிடியாவது வேலையை சீக்கிறம் முடிச்சுடனும்னு பாக்குறேன், அப்பா புரிஞ்சுக்க மாட்டெங்கறாரு என்றான் சின்னான்.
சரி நாளைக்கு நீங்க எல்லாரையும் கூட்டிகிட்டு காலையிலே ஒன்பது மணிக்கு வந்துடுங்க வேலையை ஆரம்பிச்சு ஒரே முச்சுலே தளத்தை போட்டு முடிக்கணும், என்றான் ரமேஷ்.
ஆமுங்க தளம் போடும்போது நிறுத்டி நிறுத்திப் போட்டா ஒட்டாதுங்க, அப்புரம் ஒழுகும்,அதுனாலே நாளைக்கு வெரசா வந்து வெலையை தொடங்கிடறேனுங்க பொழுது போறதுக்குளே முடிச்சே ஆவணும். அப்போ நானு வரேனுங்க என்று கூறிவிட்டு அவனுடைய ஆட்களை ஒரு பார்வை பார்த்தான் சின்னான்.
ஐய்யாவை எப்பிடி பணிய வைத்தேன் பார்த்தீர்களா என்னும் பொருள் அடங்கி இருந்தது. அந்தக் கூலியாட்களும் அந்தப் பார்வையை அமோதிப்பது போல புன்னகை செய்தனர் மறு நாள் காலை ஒன்பது மணி, சின்னானும் அவனுடைய ஆட்களும் கட்டிடம் கட்டும் இடத்துக்கு வந்தபோது ஏற்கெனவே அங்கே சித்தாள்களும் ஒரு மேஸ்திரியும், வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அதிர்ந்து போய் கத்த ஆரம்பித்தான் சின்னான்.
என்னாது இது எங்களை ஏமாத்தறீங்களா! அது எப்பிடி நாங்க வேலை செஞ்ச கட்டிடத்திலே எங்களை விட்டு வேற ஆளுங்களை வேலை செய்யச் சொல்லுவீங்க மரியாதையா எல்லாரையும் கீழே இறங்கி போகச் சொல்லுங்க இல்லேன்னா அசிங்கமாயிடும் என்று கத்தினான் சின்னான்.
சர்ரென்று ஒரு காவல்துறை வாகனம் வந்து நின்றது அதிலிருந்து இறங்கிய காவல்துறை அதிகாரி நேராக சின்னானிடம் வந்து என்னப்பா என்ன கலாட்டா செய்யிறியா ஏற்கெனவே நீ மிஸ்டர் ராமநாதனிடம் வாங்கிய பணம், மணல் ஜல்லி எல்லாம் வாங்கினதுக்கு நீ அவர்கிட்ட குடுத்த ரசீது, எல்லாம் எங்க கிட்ட குடுத்திருக்காரு. நீ குடுத்த ரசீது எல்லாத்திலேயும் அதிகமா பணம் போட்டு ரசீது வாங்கி இருக்கே, அந்தக் கடையிலெல்லாம் விசாரிச்சிட்டுதான் இங்கே வந்திருக்கோம். இதோ பாரு இந்த ரசீது இதைக் கணக்கு பார்த்தா நீ இவரை ஏமாத்தி எண்பதாயிரம் ரூபா அதிகமா வாங்கி இருக்கே. உன்மேலே கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு மிஸ்டர் ரமேஷ் மரியாதையா உடனே எண்பதாயிரத்தை குடுக்கிறியா இல்லே உள்ளே போட்டு உங்க எல்லாரையும் விசாரிக்கணுமா எப்பிடி வசதி என்றார் காவல்துறை அதிகாரி. சின்னான் முகம் ரத்தம் சுண்டி வெளுத்தது, நிலமையின் விபரீதம் அவன் மூளைக்குள் உரைத்தது .
சின்னான் காவல்துரை அதிகாரியிடம் வந்து ஐய்யா எங்களை மன்னிச்சிருங்க எங்க கிட்ட அவ்ளோ பணம் கிடையாது, நாங்க இன்னையிலேருந்து நாணயமா வேலை செஞ்சு இந்தக் கட்டிடத்தை முடிச்சுக் குடுத்துர்றோம் என்றான்.
கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் கீழே வந்து ராமநாதனிடம் என்னங்க நீங்க கூப்டீங்கன்னுதானே வந்தோம் இப்போ எங்களுக்கு வேலை இல்லாம பண்ணிட்டீங்களே என்றார்கள்.
ராமநாதன் இங்க பாருங்க இன்னிக்கு உங்களுக்கு கூலியை நான் குடுத்துடறேன், உங்களை வெறும் கையோட அனுப்ப மாட்டேன், ஏதோ தெரியாத்தனமா தப்பு பண்ணிட்டான் சின்னான் அவனே செய்யட்டும் மீதி வேலையை என்றார் ராமநாதன். சின்னானின் ஆட்களால் வேலை மும்மரமாக ஆரம்பிக்கப்பட்டது.
காவல் துறை அதிகாரியும் சுமுகமா முடிஞ்சு போச்சுங்க நாங்க கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு வேலையாட்களும் காவல் துறை ஆட்களும் அங்கிருந்து அகன்றனர்.
கோடம்பாக்கத்தில் நாடகம், தொலைக் காட்சித் தொடருக்கு உடைகள், தரும் கடையில் வேலையாட்களும், காவல்துறை அதிகாரியும், காவலர்களும் தங்கள் உடைகளைக் கழற்றிக் கொடுத்தனர், சின்னத்திரை நடிகர்கள் அவர்கள், அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பினான் ரமேஷ்.
கிருகப் ப்ரவேஸம் அன்று ராமநாதன் சின்னானிடம் இதோ பாரு நடுவுலே நீ கொஞ்சம் புத்தி மாறிப் போய்ட்ட இருந்தாலும் இந்த வீடு நீதான் நல்லபடியா முடிச்சுக் குடுத்திருக்கே, நீயும் உங்க ஆட்களும் நல்லா சாப்ட்டுட்டுதான் போகணும் அப்போதான் எனக்கு திருப்தியா இருக்கும் என்றார்.
ரமேஷ் ராமநாதனையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவர் போட்டுக்கொடுத்த திட்டம் எவ்வளவு நன்றாக பலனளித்தது என்று எண்ணிப் பார்த்து மனதுக்கு சபாஷ் அப்பா என்று சொல்லிக்கொண்டான் ரமேஷ்.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.