கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 1,571 
 
 

பாகம் ஒன்று

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

அத்தியாயம் ஏழு – முதல் அஸ்திரம்

நாள் வந்ததா! இல்லை, குகை குழியில் இருந்து அந்த இரவு சாரவ் தான் வெளியே வந்தான். நான்கு வாரங்களுக்குப் பிறகு இன்று தான் அவன் கால்கள் வெளியே வந்தவுடன் நடந்தன. கடந்த நாட்கள் எல்லாம் மனம் மட்டுமே நடந்து சென்றிருக்கும்.

வோர் ஒருத்தனுக்கு நல்ல கூடாரம் தான். தீ பந்தம் எரிகிறது மட்டும் தூரத்தில் ஒரு வெளிச்சம். சுற்றிலும் இருள், இங்கிருந்து மறைந்து செல்ல மரம் செடி கொடிகள் உதவிக்கு இல்லை. அவன் நிற்பது நிலவு வெளிச்சத்தில் நன்றாகத் தெரியும். இருந்தாலும் தைரியத்தை வர வழைத்துக் கொண்ட பதுங்கிய உடல், சுற்று முற்றும் கழுகுப் பார்வையை செலுத்திக் கொண்டு அமைதியாக நகர்ந்தது. கூடாரத்தில் ஒரு ஆள் அல்ல, இரண்டு ஆட்கள். அடக் கடவுளே! திரும்பி ஓடவில்லை. கண்கள் கூர்ந்தது. உடல் தரையை ஒட்டிக் கொண்டு பதுங்கியது. வோர் வீரனும் பதுங்கி விட்டானா! கீழே கிடப்பது யார்? நின்றுக் கொண்டிருப்பவன் கத்தியை துணியால் துடைக்கிறான்! அது கொலைதான். அந்த வோர் மிருகம் செத்துட்டாண்டா! என்ற இனம் புரியா பீதியின் துடிப்பு. நின்றவனை பார்த்தால், பயம் உடலை நெரித்தது.

என்ன உருவம் இது. ஆப்பிரிக்க குகை கல்லில் நான் வரைந்த ஓவியத்தில் இருந்த உடையை ஒத்த உடை தரித்த உருவம். சிறப்பு வீரனா! அல்லது, சந்திரன் கூறிய பகையாலிகளா! அவர்கள் மட்டும் என்ன மனிதர்களா. பேரு சமூக தீவிரவாதம் தானே. நான் படித்த சந்திரன் குகை நூல் குறிப்பு, நினைவுக்குச் சொல்லியது. இது குகை கைப்பற்றல்தான். இந்த குகைக்கு அப்படியா கேள்விகள்! சந்திரனுக்கு தெரிந்தால் இது என்னவாகும். ஞானி புதிய திட்டம் வகுப்பானா? ஐயோ! வாரங்கள் மாதங்கள் ஆகிவிடும். ஆனால் சாரவ், சாரவ்வின் மூளையும் இளம் காளைதான். தக்க சமயத்தில் சிந்திப்பான்.

நிலத்தில் பதிந்திருந்த கால்கள் கட்டுப்பாடில்லாமல் வந்தவாறு ஓடியது. குகைக்கு எதிர் திசையில் சென்றான். நில ஒளிகள் அந்தப்பக்கம் மங்கலாத்தான் வீசியது. ஓடிய சாரவ் இருளில் மறைந்த போது, கால்கள் தடுமாறியது. பள்ளத்தில் சறுக்கி, உடல் சறுக்கிச்சென்று வீழ்ந்தது. பதுங்குவதற்கு உருவாகிய இடமா என ஒரு கணம் தோன்றியது. அடி ஏதும் இல்லை. அந்த நொடியில் சறுக்கல் சத்தம்தான் அமைதியை ஒழித்தது. கீழே பள்ளம் இல்லை சமதரை தான் என்று உணர்ந்தான். நடந்து வந்த மணல் நிலம் தலைக்கு மேல் உள்ளது. இருள் கண்களை குருடனாக்கிவிட்டது. சறுக்கிய பள்ளத்தை உடலோடு ஒட்டிக் கொண்டே மெதுவாக நடந்தான். குகையில் இருந்து பார்த்த தொலைதூர வோர் கூடாரம் அருகே நெருங்கி வந்தது. இந்த பள்ளத்தை ஒட்டி நேராக சென்றால் யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தை அடையாளம் என நினைத்தான். வோரில் ஒருவன், யாரும் அறியாத எம வீரன். அவனையே கொன்றவன் எப்படி இருப்பான். அவனது ஆடை அணிகலன்களே சொல்கிறது அரக்கன் மனித உரு எடுத்து இந்த உலகத்திற்கு வந்து விட்டான் என்று. கூடாரத்தில் இருந்து வெளிவந்தான் அந்த அரக்கன். நடையில் நிலம் அதிர்கிறது. இதயம் ஓடிடு என்று பட படத்து துடிக்கிறது.

பதுங்கி சென்ற கால்கள் எவ்வளவு தூரம் சென்றுவிட்டது. மேலே இருளில் உருவாகிய பொருள் அருகே நெருங்கி உள்ளது. ரப்பர் வாசனை. டயர். அது வாகனம் தான். லாரி அல்ல, ஜீப் தான். எவ்வளவு பெரிது. பின் பக்க டிக்கியில் பதுங்கினால் கூட யாரும் காணாதபடி மறைந்து விடலாம். இருளில் எவ்வளவு யூகம் அவனுக்கு. பள்ளத்திலிருந்து எழுந்து வந்து அந்த ஜீப் வாகன பின் டிக்கியில் பாய்ந்தான். போர்வை ஒன்று இருந்தது. அதனைப் போர்த்தி மறைந்துக் கொண்டான். கொலைகாரன் அருகே நெருங்கி வந்தான். கதவு தடக் தடக் என்று திறந்து மூடியது. ஜீப் வண்டி எஞ்சின் செயல்படுத்தலில் துடித்தது. அங்கிருந்து சென்றது, சென்றது. ஒன்று அல்ல. இரண்டு வாகனம் வழி காட்டி போல் இதற்கு முன்னே செல்கிறது. பின் டிக்கியில் பாய்ந்ததை எந்த கண்களும் பார்க்கவில்லை போல. விடுதலை என்ற உணர்வு; குகையிலிருந்து மட்டும் தான்.

செல்பவன் எங்கு செல்வான். இன்னொரு சிறையா! அந்த குகை, சந்திரன், அவனிடம் என்ன சொல்வது. எப்படி சொல்வது. அவனை விட்டு செல்கிறேன். இனி எப்போது அந்த ஜீவனை பார்ப்பேன். நான் தப்பி விடுவேன் என்று அவனுக்கு தெரியும். அவனுடன் இருந்த நாட்களில் என்னை முழுதாக படித்தான். நானும் அவனது நூலகத்தின் புத்தகம் போல. வாகனத்தை செலுத்தும் மனிதனுக்கு தெரியும் எல்லாம். குகை, வோர்,

இந்த இடம். இவன் இன்னொரு கொலை செய்ய செல்கிறானா. கொலை செய்யும் கூட்டமா! இது என்ன தொழிலா…! வாகனத்தில் பதுங்கிய உயிர் எதிர்பார்ப்பு தாங்க முடியாத நினைவுகாளால், தாங்கி செல்லும் வாகனத்தை விட வேகமாக சென்றது.

செல்ல செல்ல வேகம் குறையவே இல்லை. டயர் இடுக்கில் சிக்கி பாயும் மணல்கள் அரையும் சத்தம். புழுதிகள் கிளம்பி புகையாக பாய்ந்தது. குண்டு குழிகள் இல்லை. இவ்வளவு நேரமாக கப்பலில் பயணிப்பது போல் உள்ளது.

திடீரென்று…

தரை என்ன ஜீப்பை தாலாட்டுகிறதா! நில அதிர்வுகள் உருவாகி விட்டதா! பாம்புகள் கூட இந்த அளவு வளைந்து வளைந்து செல்லாது. அமைதியாக அசைவின்றி பதுங்கியவன் வலது இடது என குழுங்கினான். வேகத்திற்கு குறைச்சல் இல்லை இன்னும் அதிகமானது. குளிர் காற்று உடம்பை துளைத்து சென்றது. குகைக்கு வெளியில் இருந்ததைக் காட்டிலும் குளிர் அதிகம். வாகனப் போர்வை காற்றில் மிதக்கும் போதெல்லாம் கைகள் பற்றிக்கொண்டது. போர்வையை முற்றாக இருக்கப் பற்றிக்கொண்டான்.

ஒரு வாகனம், நாலு டயர்கள் சுழலும் சத்தம். இரண்டு வாகனம் பக்கத்தில் செல்ல வேண்டும். இவனுடைய ஆட்களா! அருகில் போட்டியிடும் வாகனங்களிடம் இருந்து தப்பி செல்வது போல “எதுக்கு ச்சேஷிங் மாதிரி இந்த ஸ்பீட்ல போரான்” இரண்டு பக்கத்திலிருந்து இரண்டு ஜீப் வாகனங்கள் தடால் தடால் என்று மோதியது. ஒரே நேரத்தில் ஒரேடியான சரமாரி மோது. அந்த அதிர்வு உடலை இரும்பாக மாற்று என்றது. பக்கத்தில் சென்ற ஜீப் ஒன்று சரி சமமான துரத்தலில் தூரமாக விலகி மீண்டும் வேகத்துடன் சீறி அருகில் வந்து மோதியது. அதிர்வு உடலை பயத்தில் ஆட்டுவித்தது. போர்வை விலகிய கண்கள் பார்த்தது. இன்னும் ஒரு மோதலில் இந்த ஜீப் தலைகீழாக பிரண்டு விடும். வேகம் குறையவில்லை.

சர்ர்ர்…

எதிர் பாரா கணத்தில் நின்றது. உடல் தூக்கி வாரிப் போட்டது. பாயும் புழுதிகள் புகைகளாக கரைந்தன. என்ஜின் புகையில் வாகனம் மறைந்து விடும் போல. இதய துடிப்பு வேகம் குறையவில்லை. வாகனம் நின்றவுடன் லப் டப் வேகமாகிவிட்டது.

ச்சேஷிங்கில் ஓடிய வாகனம் கண் எட்டா தூரத்தில் தொலைந்து நின்றது. இந்த கொலைகார கும்பலின் வாகனமும் முன்னேதான். இவன் அதை நோக்கி ஓடி விட்டான். கோபம் தலைக்கு ஏறீருக்கும். இனி போர் தான். இத்தனை நேரம் புரட்டி போட்ட வாகனத்தின் பின் பக்கத்தில் கையில் அடிபட்ட பொருள்! ஆயுதம் தான். துப்பாக்கி அல்ல. வெட்டு விலும் கத்தி கோடாரிகள் அல்ல. அதிசய தீவின் ஆயுதம். நில ஒளிகள் கூட அதை பார்க்காதே என்றது. இருளில் கையில் பிடித்தவுடன் உணர்ந்தான். குறி வைப்பது தான்… தலை போகும் காரியம். வில், அம்பு. பெயர் அறியா தேசம். மாசு படாத தமிழ் மக்கள். வித்தியாச உடை, வில், அம்பு, இதெல்லாம் உணரும் மனது எந்த நிலையில் உள்ளதோ!

துப்பாக்கி சத்தங்கள் உடலை இருளில் மறைத்து விடு என்றது. குண்டு வெடிப்பு, காது செவ்வுகள் கிழிந்து விட்ட அதிர்வு. அதில் உயிர் பிழைத்தவன் இருந்தால், செவிடன், இல்லை பைத்தியம் ஆகியிருப்பான். யாராவது ஒருவனது உயிர் மிஞ்சுமா! மிருகத்தனமான போர். துப்பாக்கி வெடிப்புகள் விட்டு விட்டு ஒலித்தன. கதறும் சத்தங்கள் உயிர் பிரியும் வழி என்றது. கால் மணி நேரம் இருக்கும். போர் சத்தங்கள் ஓய்ந்தது. சாரவ் அம்புகள் அடுக்கிய பையை தோலில் சுமந்து கொண்டான். ஒரு கையில் அம்பும் மறு கையில் வில்லும். சிறு நடுக்கம் கூட இல்லை. நேர்த்தியான பிடி. அம்பை வில்லில் வைத்து இழுப்பதற்கு கை உறுதியாக அழுத்தம் தந்தது. கைகள் இரும்பு பிடி போல் வில் அம்புடன் ஒட்டிக்கொண்டது. பயம் இல்லை உடலிலும், மனதிலும். வாகனத்தின் பின் பக்கத்தில் இருந்து குதித்தான். சற்று தூரத்தில் ஏற்பட்ட போர் சூழலில் நிலவொளி தங்க வில்லை. குண்டு வெடிப்பிற்கு இரையாகிய வாகனம் எரிந்துக்கொண்டிருக்கும் தீயின் ஒளியில் இரு மாந்தர்கள், இருள் மந்தர்களாக இருந்தனர். யார் அவர்கள்! விரட்டி வந்தவர்கள் தான்; எதோ யூகம் மூளையில் சட்டென பாய்ந்தது. சற்று முன்னே சென்றான். வில்லை நேராக பிடித்துக்கொண்டு குறியை கச்சிதமாக வைத்துக்கொண்டு நடந்தான். இரு மனிதர்கள் கையில் ஆயுதம் எதோ ஒன்று. துப்பாக்கி போல் உள்ளது. அவர்கள் கண்களுக்கு சாரவ் தெரியமாட்டான். அவன் அருகில் எந்த தீ பிளம்பும் அல்ல. நில ஒளிகளும் அல்ல. இருள் அவனுக்கு போர்வையாகிவிட்டது. ஒருவனுக்கு குறி வைத்து எறிந்தால். அடுத்தவனுக்கு, அடுத்த நொடியே… பையில் இருக்கும் அம்பு கையில் வந்து வில்லில் அமர வேண்டும். பழக்கம் இல்லை. ஆனால் குறுகிய நொடியில் அப்படி செய்து ஒத்திகை பார்த்துக்

கொண்டான்.

வலது கையில் தாங்கிய அம்பு புறப்பட்டது. குறி வைத்தவன் தலையில் வீழ்ந்தது. சதைகள் கிழிந்து குருதி பாய்ந்தது. அந்த நொடி, பயம், கிளிர்ச்சி என்று ஒன்றுமே இல்லை. உடலில் நடுக்கம் கூட இல்லை. முகத்தில் ஒரு இறுக்கமும், உடலில் ஒரு உறுதி மட்டுமே செயல்பட்டது. அடுத்து நொடி அடுத்த அம்பு புறப்பட்டது. இரண்டாமவன் கழுத்தில் பாய்ந்தது. அம்பு பாயும் ஒரு நொடி முன் கையின் விரல் துப்பாக்கியை வெடிக்க வைத்திருக்கும். “டுமில் டுமில்” என்ற சத்தம் மட்டும். தீப்பொரிகளாக வானத்தை நோக்கி சென்றது. அதில் ஒரு குண்டு, சாரவ் மறைந்திருந்த வாகனத்தில் பட்டு தெறித்தது. இரும்பாக மாறிய முகம் கலைந்தது. இருளில் மறைந்துள்ள பயம், சாரவ்வை பற்றியது. துப்பாக்கி குண்டு அவன் மேல் பட்டிருந்தால்…! என்ற பயம் நடுக்கமானது.

இரண்டு உருவங்கள் உயிர் நீத்தவுடன் போரில் சிதைந்திருந்த வாகனத்தில் மறைந்திருந்த புதிய உருவம் ஒன்று வெளியேறியது. இரு மனிதர்கள் சாகும் போது இல்லாத உரு, இப்போது விழித்துக் கொண்டது; துப்பாக்கி சத்தத்தால். கையில் ஆயுதமற்றவன். இருளில் இருந்து வரும் தாக்குதலால் பயந்து விட்டான். இருளில் என்ன தேடிட முடியும். அருகில் நெருங்கும் போது சாக வருகிறான் என்றே தோனுகிறது. தூரத்திற்கு குறி வைக்கத் தேவையில்லை. அம்பிற்கு வேகம் கொடுத்த கைகள் முறுக்கி உள்ளது. காற்றை கிழித்த ஒளியுடன் அம்பு தலைக்குச் சென்றது. மண்டை ஓட்டை கூட துளைத்து விட்டதா! அப்படி ஒரு அதிர்வுச் சத்தம். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள.

சாரவ்வின் கால்கள் போர் முடிந்த களத்தை நோக்கி நடந்தது. இருள் பார்வை அகன்று தீயின் வெளிச்சம் உருக்களை உருவாக்கியது. அருகில் மனிதர்கள் அல்ல, போரில் அழிந்த பிணங்களை தவிர. அம்பில் துளைத்த உடல்களை பார்வை வேண்டாம் என்றது. ஆரம்பத்தில் கண்ட கொலையாளி மத்தியில் வீழ்ந்திருந்தான். உடலில் உயிர் பிரியும் அளவு காயங்கள் இல்லை. ஆரம்பத்தில் வந்த இரு மனிதர்கள் இந்த உடலை நோக்கியே வந்திருக்க வேண்டும் என்று யோசனை ஒலித்தது. பிரியாத மூச்சி சத்தத்தோடு உடல் அசைவு உள்ளது. அந்த ஆள் அருகில் செல்ல தயக்கம் தடையானது. கொலையாளி ஆகி விட்டேன் என்ற உணர்வு. உயிர்கள் தன் கையால் போகும் போது, பாவங்கள் எனும் நீங்க சாபங்கள் உடலை நனைக்கிறது. உடலை தீயில் எரித்தால் கூட மீண்டும் மனிதனாக மாற மாட்டேன். கொன்றது யாரை தீய உணர்வில் உருவெடுத்த மனித சாத்தான்களை தானே. அங்கும் இங்கும். எதற்காக? உயிர் பிரியாத உடல் ஒன்று களத்தில் வீழ்ந்திருப்பதற்காகவா? அவனும் ஒரு கொலையாளியே! புதையும் அதிசய தீவிலே ஒரு சமூகம். தமிழ் மொழி மட்டும் காற்றில் வீசும் சமூகம். ஆச்சர்யம் ஒரு பக்கம், சந்திரன் கூறிய பாதையும் ஒரு பக்கம், மனதில் சுழன்றது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *