அவ்வளவுதானா…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 2,059 
 
 

வேலைக்காரி ‘அம்மா நான் போயிட்டு வாறேன்’ சொல்லி விட்டு வெளியே

கிளம்ப தயாரானாள். அவளை, கதவை திறந்து அனுப்பிவிட்டு சிறிது நேரம் நிற்கலாமே என்று நின்றாள் பாக்கியத்தம்மாள்..

பகல் பதினோரு மணிக்கு மேல் ஆகியிருந்ததால் எதிர் பிளாட், பக்கத்து பிளாட், எல்லா குடியிருப்புக்களும், அமைதியாகியிருந்தன.

பாக்கியத்தம்மாள், நின்று கொண்டிருப்பது ஐந்தாவது தளம், இந்த தளத்திலேயே சுற்றி வர இருபது குடியிருப்புக்கள். அனைத்தும் சுற்றி வர இருந்ததால் ஒவ்வொரு குடியிருப்புக்கும், கதவை திறந்தவுடன் “சின்ன பால்கனி” இருக்கும், அதுதான் அவர்களுக்கு வாசலும், பொழுதை போக்க, நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும் இடமும்.

கதவு திறந்து வெளியே வந்து இரண்டு மூன்று அடி வைப்பதற்குள் படி ஆரம்பித்து விடும். அது வழியாக மேல் தளத்துக்கோ கீழ் தளத்துக்கோ செல்ல முடியும். இதே போல் பின்புறமும் இருப்பதால் பின்புற குடியிருப்புகளுக்கு கீழ் தளத்திலிருந்தே படிகள் தனியாக பிரிந்து விடும்.

இரண்டும் இடைப்பட்ட இடத்தில் “லிப்ட்” இரண்டும் அமைக்கப்பட்டிருக்கும். அதை இயக்குவதற்கும் மற்ற வேலைகளுக்கும் ஆள் இருந்து கொண்டே இருக்கும்.

வெளியே வந்து நின்ற பாகியத்தம்மாள் சுற்றி வர பார்த்தாள். இவளது “பிளாட்டை” ஒட்டியே எதிர்புறமும் இதே உயரத்தில் கட்டிடம் இருந்தது. அதுவும் இந்த “பிளாட்டை” கட்டியவர்தான் கட்டியிருந்தார். அதற்கும் இதே போல் அமைப்புத்தான். அது போக வலதும் இடதுமாகவும் இதே போல் கட்டிடத்தை எழுப்பி இருந்தார்.

அதனால் மேலிருந்து பார்ப்பதற்கு “ப” வடிவத்தில் பிளாட் அமைந்திருக்கும்.. பாக்கியத்தம்மாள் வெளியில் நின்று பால்கனியில் பார்த்தாள் ஐம்பதடிக்குள் இவர்களுக்கு எதிர்புறமும் இதே போல் பால்கனியுடன் கூடியதாக இருக்கும்.

இதனால் மாலை வேளைகளில் ஒவ்வொரு குடும்பமும் வாசலில் உட்கார்ந்து எதிர் வாசல் குடும்பங்களுடன் அரட்டை கச்சேரிகளும் நடத்துவதுண்டு.

பாக்கியத்தம்மாளுக்கு “வாய் பேச” அந்த நேரத்தில் ஒருவரும் தென்படாததால் சலிப்புடன் கதவை நோக்கி திரும்ப எத்தனித்தாள். அப்பொழுது அவள் பார்வை எதேச்சையாக, கீழ் தளத்தின் இடது புற பிளாட்டின் ஜன்னலில் ஒரு காட்சி தெரிந்தது.

ஒரு ஆள் கையில் கத்தியுடன், அதுவும் இரத்த கறையுடன், யாரையோ மிரட்டி கொண்டிருந்தது இங்கிருந்து தெரிந்தது. ஆனால் எதிரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. காரணம் ஜன்னலின் ஒரு பகுதிதான் இங்கிருந்து பார்ப்பதற்கு தெரியும். அதில் இவன் கத்தியுடன் கையை ஆட்டி பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஆனால் குரல் எதுவும் கேட்கவில்லை.

அதை கண்டவுடன் பாக்கியத்தமாளுக்கு “ஜிவ்” என்று ஒரு உணர்வு எழுந்தது. என்ன நடக்கிறது? அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?

சுற்றும் முற்றும் பார்வயை ஓட்டினாள். ஒருத்தரும் கண்ணில் படவில்லை. கடவுளே என்னமோ நடக்க போகிறது, கொலை கூட நடந்திருக்கலாம்., என்ன செய்வது? யாரிடம் சொல்வது?

பக்கத்து வீட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார் ஒருவர். குடும்பம் வெளியூரில் இருப்பதாகவும், சொல்லியிருந்தார். அதற்கு அடுத்த வீடு போவதாயிருந்தால் இடையில் சின்ன திண்டு, அதை தாண்டி போக வேண்டியிருக்கும். சாதாரணமாக போக முடியும். ஆனால் பாக்கியத்தம்மாளுக்கு அப்படி போகும்போது கீழே பார்க்க தோன்றும், அப்படி பார்த்தால் தலை சுற்றல் வருவதால் அதிகமாக அந்த பக்கம் போவதில்லை.

சரி ‘போன்’ செய்து யாருக்காவது சொல்லலாம், ஏன் தன் மகள் இரண்டு மூன்று தெரு தள்ளித்தான் குடும்பத்துடன் இருக்கிறாள். அவளிடம் போன் செய்து சொல்லலாம். முதலில் அவள் ‘இந்நேரம்’ வீட்டில் இருக்க வாய்ப்பே இல்லை. அவள் அரசு வங்கியில் பணி புரிந்து கொண்டிருப்பவள். வாடிக்கையாளர்கள் மொய்த்து கொண்டிருக்கலாம். இந்த நேரத்தில் போன் செய்தால்..!

அவளின் பதட்டத்தை சட்டை செய்யாத மாதிரிதான் எவ்வித அசைவுகளும் அருகில் தென்படவே இல்லை. என்ன செய்வது? தடுமாறினாள்.

மாலை ஆறு மணிக்கு பரசுராமர் வந்ததும் வராததுமாக அவரிடம் இதை ஒப்பிவித்து விட்டாள். ஏன்னா போய் ஏதாவது செய்ய முடியுமான்னு நம்ம அசோசியேஷன்ல சொல்லி விசாரிக்க சொல்லுங்களேன்.

பரசுராமர் அலுத்து களைத்து வந்திருந்தார். ஓய்வு பெற இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும். பாக்கியத்தம்மாள் சொன்ன விஷயத்தை எப்படி மற்றவர்களிடம் சொல்ல முடியும்? அப்படி உண்மையிலேயே ஏதாவது நடந்து விட்டால் அப்புறம் சாட்சி அது இது என்று எவனால் அலைய முடியும்.

காலையில் எழும்போதே இருவரும் கீழ் தளத்தில் பரபரப்பாயிருக்கும் என்று எதிர்பார்த்தே இருந்தார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. எல்லாம் வழக்கம் போல அங்கு குடியிருந்த குடியிருப்புவாசிகளின் காலை நேர பரபரப்பாக பணிக்கும், பள்ளிக்கும், ஆண்களும், பெண்களும் பரபரத்து கிளம்பி கொண்டிருந்தனர்.

என்ன ஆச்சு? பாக்கியத்தம்மாள் வெளியே பால்கனியில் நின்று கீழ் தளத்தில் ஜன்னலை உற்று உற்று பார்த்து கொண்டிருந்தாள். அங்கு மனித நடமாட்டங்கள் தெரியவில்லை.

கத்தியை எடுத்து கத்தி கொண்டிருந்தவன் என்ன செய்தான்? அங்குள்ளவர்களை குத்தி போட்டு விட்டு அப்படியே போய் விட்டானா? உள்ளே இறந்து கிடப்பதால் கூட அசைவில்லாமல் இருக்கலாமல்லவா?

மண்டையே வெடித்து விடும்போல் இருந்தது. “அம்மா” வேலைக்காரியின் குரல் கேட்கவும்தான் இவளுக்கு ஞாபகமே வந்தது

என்னம்மா வெளியவே நின்னுட்டீங்க, இவளை எதிர்பார்த்து நிற்கிறாளோ என்னும் எதிர்பார்ப்பில் கேட்டாள்.

ஒண்ணுமில்லை, சமாளித்தவள், இவளிடம் நான் பார்த்ததை சொன்னால். அப்புறம் இவள் அக்கம் பக்கம் போய் பாக்கியத்தம்மாள் ‘இப்படி பார்த்தார்கள்’ என்று சொல்லி விட்டால், சொல்ல வந்தவள் சட்டென முழுங்கி விட்டு, ஆமா கீழ் வீட்டுல யாரு இருக்காங்க?

எந்த வீடும்மா கேக்கறீங்க? இவள் கை காட்டி நேற்று பார்த்த ஜன்னலை காட்டி சொன்னாள் இந்த வீட்டுக்காரங்க.

அங்க யாரு இருக்காங்கன்னு எனக்கு தெரியாதும்மா, அந்த வீடு தாண்டி நாலாவது வீட்டுல நான் வேலை செய்யறேன். உங்க வீட்டுல முடிச்சுட்டு அந்த பக்கமா படியில இறங்கி அங்க போய் வேலை செஞ்சுட்டு ஒரு மணிக்கு கீழே போயிடுவேன். சாயங்காலம் கீழேயே இரண்டு வீடு வேலை இருக்கும்.

பாக்கியத்தம்மாளுக்கு தேவையான விவரங்கள் கிடைக்காததால் சற்று பொறுமலுடன் சரி நீ உள்ளே போய் வேலையை பாரு, அனுப்பி வைத்தாள்.

தலை வலித்தது. பரசுராமர் அவளை பரிதாபமாக பார்த்தபடி கிளம்பி விட்டார். சே..என்ன குடியிருப்பு இது? இத்தனை குடிகள் இருக்கின்றது. பட்ட பகலில் ஒருவன் ஒரு வீட்டுக்குள் கத்தியுடன் இருந்திருக்கிறான், அவனை காட்டி கொடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறேனே.

ஹலோ மாம்? மென்மையான குரலில் காதருகில் கேட்கவும் சட்டென உணர்வுக்கு வந்தாள். பக்கத்து வீட்டுக்காரர்.

வயது நாற்பதுக்குள் இருக்கலாம், இது வரை அதிகமாக பேசியதில்லை. வந்த புதிதில் அறிமுக பேச்சோடு சரி.

இவரிடம் சொல்லி பார்க்கலாமோ?

மெல்ல பேச்சு கொடுத்தாள், வேலைக்கு கிளம்பி கொண்டிருப்பதாகவும், உங்களை பார்த்தவுடன் விசாரிச்சேன், வரட்டுமா? சட்டென கிளம்பினார்.

கிளம்பிட்டீங்களா? ஏமாற்றமாய் இவள் கேட்கவும், அவர் வியப்பாய் என்ன மேடம் ஏதாவது சொல்லணுமா?

இல்லை, நேத்து பதினோரு மணிக்கு மேல இதா இங்க தெரியுது பாருங்க இந்த ஜன்னல் வழியா பார்த்தப்ப ஒருத்தர் கத்தியோட யார் கூடவோ கோபமா பேசிகிட்டு இருந்தாரு, கத்தியில இரத்த கறை கூட தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு, அதை யார் கிட்ட சொல்றதுன்னு யோசிச்சுகிட்டு நின்னுகிட்டிருந்தேன்.

அப்படியா முகவாய் கட்டையை தேய்த்தவாறு யோசித்து நின்றவர், சரி மேடம் நான் வரும்போது விசாரிச்சு பார்க்கறேன், கவலையை விடுங்க.

அப்பா..தன் கவலையை மற்றொருவரிடம் பகிர்ந்து விட்ட திருப்தியில் தலையசைத்தாள் பாக்கியத்தம்மாள். நல்லா விசாரிச்சுட்டு வாங்கோ.

வேலைக்காரி பதினொரு மணிக்கு மேல் கிளம்பும் போது மறக்காமல் சொன்னாள், அந்த வீட்டுல யாரு இருக்கான்னு விசாரிச்சுட்டு வர்றியா? அதிசயமாய் பார்த்த வேலைக்காரி என்னாத்துக்குமா உங்களுக்கு? யாராவது தெரிஞ்சவங்க இருக்கறாங்களா?

என்ன சொல்வது யோசித்தவள் வெறுமனே தலையசைத்தாள்.

நம்பிக்கை இல்லாமல் அவள் பாக்கியத்தம்மாளை பார்த்து விட்டு போனாள்.

மீண்டும் ஜன்னலை பார்க்கையில் அதே இளைஞன் கையில் கத்தியுடன் நேற்று பார்த்தது போல் அதே போல் கத்தி கொண்டிருந்தான். கத்தியில் இரத்தம் கறைபடிந்திருந்ததும், அவளுக்கு நன்றாக தெரிந்தது.

அதை விட அவன் தலை நிமிர்ந்து இவளை பார்த்த பார்வை… அவ்வளவுதான் நடுங்கி போய் விட்டாள். கடவுளே என்ன கொலை வெறி கொண்ட பார்வை…!

பயத்துடன் நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக்கொள்ள சட்டென உள்ளே நுழைந்தவள் கதவை இறுக்கி தாழ் போட்டு கொண்டாள்.

போச்சு போச்சு, அவன் அந்த வீட்டுக்குள்ளதான் இருந்திருக்கான். அங்க ஒருத்தரை ஒருத்தரா கொன்னுகிட்டிருக்கான். இன்னைக்கு அவன் கண்ணுல நான் பட்டுட்டேன். கடவுளே, அடுத்து நானா? எப்ப வேணா வரலாம். மனம் எல்லாம் நடுங்க, என்ன செய்வது? கணவனுக்கு போன் செய்யலாமா? மகளுக்கு போன் செய்யலாமா? என்னை கொல்ல வரப்போறான்னு.

மேடம், மேடம்..கதவை தட்டும் சத்தம். ஐயோ அவனா? நடுக்கத்துடன் கதவருகே வந்து நின்றாள்.

மேடம் நான் பக்கத்து வீட்டுக்காரன், கதவை தட்டியவர் குரல் தர இவரா..! கதவின் இடையில் வெளியில் இருப்பவர்களை பார்க்க சிறிய கண்ணாடி, பக்கத்து வீட்டுக்காரர் நின்று கொண்டிருந்தார். அருகில் காக்கி உடையுடன் யாரோ?

அவர்களை கண்டவுடன் தைரியமாக கதவை திறந்தாள். வாங்க வாங்க உள்ளே, அவர்களை உள்ளே அழைத்தவள், சார் நீங்க போன பின்னால வேலைக்காரிய அனுப்பிச்சுட்டு கீழே பார்த்தேன். அங்க அதே கொலைகாரன் கத்தியோட நின்னுகிட்டிருந்தான். கத்தி எல்லாம் ஒரே இரத்தமா இருந்துச்சி. என்ன பண்னறதுண்ணே தெரியலை, அதுதான் உள்ளே ஓடி வந்துட்டேன்.

கவலைப்படாதீங்க, இவரு பக்கத்து ஸ்டேசன்ல சப்-இன்ஸ்பெக்டரா இருக்காரு, எதுன்னாலும் இவர் கவனிச்சுக்குவாரு, அவரை அறிமுகப்படுத்தினார்.

வந்தவர் இதை எதையும் கருத்தில் கொள்ளதவர் போல் ஆமா நீங்க மட்டும்தான் இருக்கீங்களா? கேள்வி கேட்பதில் மும்முரமாய் இருந்தார்.

ஆமாங்க, வேலைக்காரி பதினோரு மணிக்கு போயிடுவா, அப்புறம் சாயங்காலமாத்தான் எங்க வீட்டுக்காரரு வருவாரு.

அப்ப தனியா இருக்கறதுனாலதான் பயந்து கிட்டிருக்கீங்க, சரிதானே.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையசைக்க…

கொஞ்சம் இருங்க உங்களுக்கு குடிக்கறதுக்கு ஏதாச்சும் தர்றேன், மெல்ல எழுந்து தடுமாற்றமாய் உள்ளே சென்று பாலை காய்ச்சி அதில் காப்பி தூளை போட்டு கலப்பதற்குள்..

வெளியே யாரோ கதவை தட்டும் ஓசை, கேட்கவும் விருக்கென பயத்துடன் திரும்பியவள் எதிலோ மோதி விட்டாள் போல் இருந்தது, மயங்கி சரிந்தாள்…

கண்ணை விழித்து பார்த்த போது அதே கொலைகார விழிகள் அவள் முகத்திற்கு நேராய்..ஐயோ வாய் விட்டு கத்த முற்படுமுன், என்னம்மா எந்திரிச்சிட்டியா? அட இது கணவரின் குரல் அல்லவா?

மலங்க மலங்க விழித்து எழுந்தவள் தான் கட்டிலில் படுத்திருப்பதையும், தலை விண்ணென்று வலிக்க தொட்டு பார்த்தாள். தலையில் கட்டு ஒன்று போடப்பட்டிருந்த தையும் உணர்ந்தாள்.

என்னாச்சு? என்னாச்சு? அலங்க மலங்க விழித்தவளிடம்,

பதட்டபடாதீங்க, ‘சார்’ நேத்து நீங்க என்னை பார்த்து பயந்ததையும் சொன்னாரு, இன்னைக்கும் என்னை பார்த்து பயந்து ஓடுனதையும் நான் பார்த்துட்டுத்தான் உங்களை சமாதானப்படுத்த, மேல வந்தேன்.

அப்ப என் கூட இருந்தவங்க,

அவங்க உங்க தலையில தடியில அடிச்சுட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போக முயற்சி பண்ணிகிட்டிருந்தாங்க.

நான் கதவை தட்டவும், அவங்க உஷாராகி உங்களை அடிச்சு இதா இதுக்குள்ள தள்ளிட்டு போய் ஒளிச்சு வச்சுட்டாங்க, அப்புறம் கதவை திறந்து எங்கிட்ட அவங்க எங்கியோ அவசரமா கிளம்பி போனதாவும், அவர் சொந்தக்காரர் சப் இன்ஸ்பெகடரை இங்க காவலுக்கு வச்சுட்டு போனதாகவும் சொன்னாங்க.

எனக்கு அவங்க மேல சந்தேகமா இருந்துச்சு, உடனே என் கடைக்கு போன் போட்டு இரண்டு மூணு பேரை வர சொல்லி அவங்களை புடிச்சு ஸ்டேசனுக்கு ஒப்படைச்சி அனுப்பிச்சோம். அதுக்குள்ள “சார்” வரவும் அவரை சமாதானப்படுத்தி நடந்ததை சொன்னோம். மூச்சு விடாமல் பேசினான் அந்த இளைஞன்.

அப்படியானால் உண்மையில் இவர்கள்தான் மோசமானவர்களா?

இரவு ஒன்பது மணி வரைக்கும் அந்த இளைஞன் பேசிக்கொண்டிருந்தான். எங்களை என்ன பண்ண சொல்றீங்க மேடம்? நான் கறிக்கடை வச்சிருக்கேன், “கொரோனாவுல” கடைய திறக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு இந்த குடியிருப்புலயே நானூறு கிலோவுக்கு மேல வியாபாரம் ஆகற இடம்.

யாருமே கடைக்கு வரலையின்னா எங்க புழைப்பு எப்படி ஓடும்?. அதுதான், விடியற்காலையில, கடைக்குள்ள ஆடு கோழி எல்லாத்தையும் வெட்டி கறியோட இங்க கொண்டு வந்து பிரிச்சு வச்சு அந்தந்த வீட்டுக்கு சப்ளை பண்ணிடுவோம்.

இது நான் வாடகைக்கு இருக்கற வீட்டு சொந்தகாரங்களுக்கோ, இல்லை உங்க “அசோசியேசனுக்கோ” தெரிஞ்சா எங்களை செய்ய விடமாட்டீங்க. அதுதான் இந்த ரூமில வச்சு அறுத்து பிரிப்போம். அப்ப கூட வேலை செய்யறவங்களை நான் சத்தம் போடுவேன். அவ்வளவுதான்.

அவ்வளவுதானா…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *