கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,282 
 
 

“சொளேர்’ என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து வழிந்தது. உடம்பும், உடையும் தொப்பலாகி இருக்க, முந்திச்சேலை எடுத்து, முகத்தையும், கழுத்தையும் அழுந்த வழித்து துடைத்தாள்.

“ஏங்க… இருமாத்தூர் பஸ்சு போயிருச்சுங்களா?”

“இல்லைங்க… ஒன்றரைக்கு வர வேண்டியது… மணி ரெண்டேகால் ஆகுது, இன்னும் வந்தபாடில்லை,” பக்கத்தில் நின்ற ஆள் அங்கலாய்த்தான்.

அவள்பாலாமணிக்கு உடம்பும், வயிறும் தகதகத்தது. காலையில் அரை குவளை நீராகாரத்துடன் டவுனுக்கு கிளம்பியவள், வழியில் சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை. “வீட்டிற்குள் நுழைந்ததும் முதல்சோலியாய், ஒரு சொம்பு தண்ணீரை மடக் மடக் என்று குடிக்க வேண்டும்…’ என்று நினைத்துக் கொண்டாள்.

வீரய்யன் இருந்தவரைக்கும், அவளுக்கு எந்தத் துயரமுமில்லை. வேண்டியதை வாங்கி வந்து குவித்து விடுவான். ஆயிற்று… அவன் போய் சேர்ந்து நான்கைந்து வருடங்கள்… அப்போது, மல்லிகாவுக்கு, 10 முதல் 12 வயசுதான் இருக்கும். இப்போது அவள் வளர்ந்து, திருமணத்திற்கு நிற்கிறாள்.

தொண்டியத்தில், குத்தகை நிலம் காணி இருந்தது. ஆத்துப்பாசனம்… நல்ல விளைச்சல். இத்தனை நாள் எந்தச் சிரமமும் தெரியவில்லை. ரெண்டு மாசத்துக்கு முன், மருவானப்பட்டியில் இருந்து உப்பிலி வந்து, மல்லிகாவை பெண் கேட்கும் வரைக்கும்…

உப்பிலி சதையான ஆள்தான்… மருவானப்பட்டியில் கான்க்ரீட் வீடும், சொந்தமாய் சைக்கிள் கடையும் வைத்திருந்தான். பாலாமணிக்கு தம்பிமுறை… கொடுக்கலாம் என்று மனசும், உணர்வும் சம்மதம் சொன்னது.

பத்து பவுன் நகையும், 10 ஆயிரம் ரொக்கமும் தந்தே ஆக வேண்டும் என, அத்தை சொல்லி விட்டாள். அதற்கு குறைவானால் வெளியில் பார்த்துக் கொள்வதாய் சொன்னதால் தான், முடிவாய் மஞ்சக்காட்டை விலைபேசி கிரயம் செய்துவிட்டு, இன்றுதான் ரிஜிஸ்தார் முன்னிலையில் கையெழுத்து போட்டுவிட்டு, கையில் காசோடு திரும்பிக் கொண்டு இருந்தாள்.

சரியாய், 2.30 மணிக்கு இருமாத்தூர் வண்டி வந்து விட்டது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. அதுவே நிம்மதியாய் இருந்தது. பாலாமணிக்கு மடியில் கனமிருந்ததால் மனசு பயந்தது. இருக்கையில் அமர்ந்து, மடியை தொட்டுப் பார்த்தாள், பணம் பத்திரமாய் இருந்தது.

ஒரு நீண்ட பெருமூச்சு… நெஞ்சைத் தொட்டு வெளியானது. இந்த மஞ்சக்காடு… வீரய்யன் ஆசையாய் வாங்கிப் போட்டது. ஒரு காலத்தில், இதில் காசு கொழிக்கும். முதல் வருமானத்தில், வீரய்யன் பாலாமணிக்கு தாலிச்சரடு வாங்கிப் போட்டான். இப்போது, மேற்பார்வைக்கு ஆளில்லை… அதனால்தான், 17 ஆயிரத்துக்கு விலை பேசி விட்டாள். மல்லிகாவை கட்டிக்கொடுத்த பின், நிலத்து வருமானமே இவளுக்கு போதும்…’

சட்டென்று நினைவு களைய, டிரைவர் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருந்தார். பள்ளத்தூர் ஸ்டாப்பிங். அங்கே எக்கச்சக்கமாய் கூட்டம் வண்டியில் முண்டியடித்து ஏறியது.

பாலாமணிக்கு பக்கத்து இருக்கை காலியாகி இருக்க, அதில், அவள் வந்து அமர்ந்தாள்… பதபதவென வளர்ந்து நின்ற முடியை வழித்து. கொண்டை போட்டு இருந்தாள். இரண்டு பக்கமும் புளியங்கொட்டை அகல மூக்குத்தி; தொள தொளத்த மஞ்சள் ரவிக்கை, ஆரஞ்” நிற கைத்தறி புடவை; மினுமினுத்த கறுப்பு நிறம்; கழுத்தை சுற்றிக்கிடந்த மஞ்சள்கயிறு, நிறம் இழந்து அழுக்கேறி இருந்தது… மூக்குத்தியை தவிர துளி நகையில்லை… அவள் உடம்பில்.

“யக்கா… செத்த நவுந்து உட்காந்துக்க…” அவள் சொன்ன போதுதான், கையில் குழந்தை இருப்பதை கவனித்தாள். எரிச்சலாய் வந்தது பாலாமணிக்கு, கொஞ்சமாய் உ<டம்பை குறுக்கி, ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள். பாலாமணி, அனுசரித்து போகும் ரகமென்றாலும், இன்று மடியில் காசிருந்ததால், பயமாக இருந்தது.

வெயிலு என்னமா காயுது… மண்டை உருகிப் போச்சு… இந்த வெயில்ல பச்சைபுள்ளையை தூக்கிட்டு ஓடியார்றது தலை வேதனை…” அவள் முகம் பார்த்து சொல்லவும், பாலாமணி பதில் பேசவில்லை. இப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பர்.

“அக்காவுக்கு இருமாத்தூரே தானுங்களா…”

“ஆமாம்…” ஒற்றையாய் பதில் சொன்னாள்.

“எனக்கு கடத்தூர். இன்னைக்கு தான் இருமாத்தூர் போறேன். எங்க நாத்தனாரோட சம்பந்தக்காரம்மாவுக்கு மேலுக்கு முடியலயாம்… பாத்துட்டு வரலாம்ன்னு,” அவள் சலசலவென பேசும் ரகம் போல. அவளிடம் பேசப் பிரியப்படாமல்… கண்களை மூடிக் கொண்டாள் பாலாமணி.

“இருமாத்தூர்ல கிளப் கடை வச்சிருக்கிற சோலை முத்துவை தெரியுமாக்கா?” அவளும் விடாப்பிடியாய் நின்றாள்.

“அதாறோ… எனக்கு தெரியாது.”

“என்ன இப்படி சொல்றீக… சரி, சீட்டுபுடிக்கிற ராசாத்தியை தெரியுமா? செவப்பா, தாட்டியா இருக்கும். சோத்தாங்கண்ணு கூட மாறுகண்ணா இருக்கும்… அவள் பதிலுக்காக முகத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.

போனவாரம் தரகு கடை பரமு சொன்னது நியாபகத்தில் வந்தது.

“வவுத்து புள்ளை நழுவி விழற மாதிரி, பசப்பு பேச்சு பேசிட்டு, பக்கத்துல உட்கார்ந்திருந்தாள். வூட்டுக்கு வந்து பாத்தா, பைல இருந்த ரெண்டாயிரத்தை காணல, பஸ், ரயிலுல… இதைப்போல கும்பலா ஆம்பளையும், பொம்பளையும் அலையுறாங்களாம்…”

பஸ் கண்டாம்பட்டியில் நின்று, இன்னும் கொஞ்ச பேரை வழித்துக் கொண்டு கிளம்பியது. மூச்சு காற்றின் அனல் வீச்சு. வேர்வை நசநசப்பு கலந்த நாற்றம்… குழந்தைகளின் வீரிடல்.

அவள் மடியில் இருந்த குழந்தை, புழுக்கம் தாளாமல் அழுதது, ஒரு நொடி வண்டி நின்றால் கூட, உயிரே போய்விடும் போலிருந்தது.

“ஏக்கா… நேத்து முழுக்க இருமாத்தூர்ல, நல்ல மழையாமே… அப்படியும் கூட வெயிலு… இப்படி பொசுக்குது.”

இப்போதும் பாலாமணி பதில் பேசவில்லை. எப்போது ஊர்வரும் என்பது கவலையாக இருந்தது.

“சீட்டு வாங்காதவுக எல்லாம் வாங்கிடுங்க… நடுவுல, “செக்’பண்ண ஆள் வந்துட்டா… நான் பொறுப்பாளி இல்ல,” என்று கண்டக்டர் கூட்டத்திற்கு நடுவே கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.

“யக்கா… ஏன் பேசவே மாட்டுதீக… வழித்துணைக்கு பேசிட்டு வந்தா நல்லா இருக்கும்ல…”

“வழிக்கு வந்து விட்டாள்…” மடியில் முள்ளங்கி பத்தையாய் பதினேழாயிரம் ரூபாய் இருப்பதை அறிந்து டவுனில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு வருகிறவளா இருக்கும்.

“இது எங்களுக்கு ரொம்ப நாள் கழிச்சு பொறந்த புள்ளை. அதேன் சாமிபேரை வுட்ருக்கோம்… சாமூண்டீஸ்வரி. அக்காளுக்கு புள்ளைங்க எத்தனை?”

பாலாமணிக்கு பொசுக்கென்று கோபம் வந்தது. இத்தனை நேர பொறுமையையும் கடந்து கோபம் எட்டிப் பாய்ந்தது.

“த பாரு… வாயை மூடிட்டு உட்காரு… நாந்தேன் பேசப்பிரியப்படாம உட்கார்ந்திருக்கேன்ல… பின்ன எதுக்கு கழுத்தறுக்கற? நவுந்து உட்காரு.”

குப்பென்று வைக்கோல்பிரியில் பொறி விழுந்தால், தீப்பற்றிக் கொள்ளுமே, அதுபோல் சுரீரென்று பற்றி எரிந்தது வார்த்தைகள். அந்தப்பெண் ஒரு கணம் ஆடிப்போய் விட்டாள். பக்கவாட்டில் நின்றிருந்தவர்களும், முன் இருக்கை, பின் இருக்கை பயணிகள், அவளையே கூர்ந்து வெறிக்க, சுருங்கிப் போனாள்.

பாலாமணிக்கு நிம்மதியாய் இருந்தது. இத்தனை நேரத்து மன அரிப்பும், நொடியில் விலகியது போல் உணர்ந்தாள். அடுத்த ஐந்தாம் நிமிட முடிவில், இருமாத்தூரில் புழுதி கிளப்பி வண்டி நின்றது.
இவளும், அவளும் இன்னும் ஓரிருவரும் இறங்கிக் கொள்ள, வண்டி புறப்பட்டுப் போனது. மூளையையே உருக்கிக் கொட்டும் உக்கிரம்… இந்த வெயில்காட்டில் பண்ணைக்காரர் வயலையும், சுடலையாண்டி தோப்பையும் தாண்டி போனால்தான் ஊர் வரும். முந்தானை சேலையில் முக்காடு போட்டு, வெரசாய் நடக்க ஆரம்பித்தாள்.

கூடவந்த ஓரிருவரும், குறுக்கு பாதையில் பிரிந்து போய்விட, பாலாமணிக்கு பின், பத்தடி தொலைவில் அவள் மட்டுமே வந்தாள். அடிவயிற்றில், “கிலி’ படர, நடையை எட்டிப் போட்டாள். இரண்டு எட்டுத்தான் விசிறிப்போட்டிருப்பாளாக்கும்… <உச்சியில் சுளீரென்று வலி. கண்கள் திரைக்கட்டி இருட்டிப் போக, நினைவு தப்பி, அப்படியே வெயிலில் மல்லாந்தாள்.

குளிர்ந்த தண்ணீர் முகத்தில் பட்டபோது, விசுக்கென முழித்துக் கொண்டாள். புளியமரத்து காற்று விசுவிசுவென இதமாய் நெஞ்சை நீவியது. நெடுஞ்சாண் கிடையாய் மர நிழலில் கிடக்க, இவளைச் சுற்றி அந்தப்பெண்ணும், இன்னும் ஓரிருவரும் நின்று கொண்டிருந்தனர்.

அவளுடைய குழந்தை, மணலில் புளியங்கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்தது.

“ஆத்தாடி… கண்ணு தொறந்துட்டியளா… என் சாமிக்கு வந்தனம். நடக்க… நடக்க… நீங்க மண்ணுல சட்டுன்னு சரிஞ்சுட்டீங்களா… நான் பதறி போயிட்டேன். நான் ஒத்தை ஆளு… கண்ணுக்கெட்டின தொலைவு வர மனுஷரில்லை… பக்கத்து வயலுல இருந்தவுகளை இட்டாந்து, உங்களை வெயில்தாள கிடத்திபுட்டு, முகத்துல தண்ணி தெளிச்சேன்.”

கூட நின்றவர்கள், பாலாமணி, கண் விழித்ததை பார்த்ததும் விலகி போய் விட, அவள் மட்டும் அனுசரணையாய் வந்து நின்றாள், பாலாமணிக்கு நெகிழ்வாய் இருந்தது.

“யக்கா… விழுந்த வேகத்துல மடிச்சீலை அவுந்து, பணக்கட்டு தெறிச்சு, மண்ணுல விழுந்து கிடந்தது. நான் பதறிப் போயிட்டேன்”.
“ஒத்தையாளா போறே…. யாரும் பார்த்துட்டா ஆவாதில்லே, வேகமா எடுத்து உன் மடில செருகி, இடுப்பு சேலையை இறுக்கி விட்டேன்.”

பாலாமணிக்கு மனசு கூசியது. மடியை தடவிப் பார்த்தாள்.

நோட்டுக்கட்டு சரியாய் இருந்தது. எழுந்து கொண்டாள்.

“த புள்ளை… நான் கூறுகெட்டத்தனமா, உன்னை வண்டியில ஏசிபுட்டேன்… என்னை மன்னிச்சுடு தாயீ.” வேறென்ன சொல்வது என்று தோன்றவில்லை. இந்தக்கணம், அவள் ஒரு தேவதையாய் தெரிந்தாள்.

அவள் மட்டும் விரும்பி இருந்தால்… இந்நேரம் பணத்தோடு பறந்து இருக்கலாம், ஒரு துளி விஷம்கலக்கா பால்குடமில்லையா அவள் மனசு.

“அட அதுனால என்னக்கா… கூடப் பொறந்த பொறப்பு, ஒரு வார்த்தை தாங்காமயா போயிடுவோம். உன்கையில பணமிருந்ததால… மனுஷரை உனக்கு எடைபோட முடியாம போயிடுச்சு. என் கையில பணமில்லை… அதான் உன்னை சரியா எடை போட்டேன்.

“நீயொரு வெள்ளந்தி… உன் நெத்தியில இருக்கிற துன்னூறு, நீ தொணை இல்லாதவன்னு சொல்லுது. உனக்கு துணை இருக்குற பணங்காசு பறிபோயிடும்ன்னு பயந்து, நீ தூங்குற மாதிரியே நடிச்சிருக்கே… <உண்மையில நீ தூங்கல… எப்படி தூங்க முடியும்?

“சரிக்கா… நான் புறப்படறேன். அந்த ஒத்தையடி பாதையில நடந்தா. நாலடியில நான் போற இடம் வந்துடும். நீயும் சுதானமா போ. கையில பணமிருக்கு…”

தன் குழந்தையை எடுத்து, தோளில் கிடத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்… நல்ல வேதாந்தி, அவள் சொல்லின் வீச்சு நாடிக்குழியில் நசுங்கிக் கொண்டது. பசுமரத்து ஆணியாய் மனசில் படம் மாட்டிக் கொண்டது. பணம் என்ற கருவி. மனசை மறக்கடித்து விட்டதை, வெகு நாசூக்காய் வெளியாக்கி விட்டுப் போனாள்.

தூரத்தில் அவள் தொலைந்து கொண்டிருந்தாள். அவள் குழந்தையின் கையில் பணம் தந்திருக்கலாம்… அப்போதுதான் உரைத்தது. அவள் பேரைக்கூட கேட்டுக் கொள்ள மறந்து போனதை… எப்போதும் தாமதமாய் தனக்கு தோன்றும் ஞானோதயத்தை எண்ணி வெட்கமாய் இருந்தது பாலாமணிக்கு.

– மே 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *