அவலக்ஷணத்தின் விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 272 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படே படே ஆசாமிகளெல்லாம் காலம் கெட்டுப்” போயிற்று என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நல்ல காலம் ஓர் அவலக்ஷணத்துக்குப் பிறந்தது என்றால் யார்தான் ஆச்சரியப் பட மாட்டார்கள்? நீங்கள் ஆச்சரியப் பட்டாலும் படாவிட்டாலும் எனக்கு என்னவோ பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 

என்னுடைய நண்பன் ஜயராமன் அவலக்ஷணத்தின் அவதாரம். தடித்த உருவம். கோணலான மூஞ்சி. வாயின் இரண்டு பக்கத்திலும் மூன்றங்குலம் நீண்ட பற்கள், சப்பட்டை மூக்கு. பெரிய பயங்கரமான கண்கள். இவ்வளவையும் அவனுடைய திருமேனியழகுக்குக் காரணமானவைகளாகச் சொல்லலாம். நல்ல கறுப்பு; ந ல்ல என்று சொல்லி விட்டதனால் கிருஷ்ணர் ராமர் இவர்களைப் போன்ற கறுப்பென்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் எல்லாம் நிலக்கரியைப் போல் பளபளப்பான கறுப்பர்கள். ஜயராமன் வெறுங்கரி போல மழுங்கின கறுப்பன். உடலுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லையென்பதை அவனிடம் காணலாம். சாதுர்யமாகப் பேசும் அவனுடைய பேச்சுக்களுடைய மதிப்பை அவனது அவலக்ஷண ஸ்வரூபம் உலகத்திற்குத் திரை போட்டு மறைத்தது. 


ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். தபால்காரன் ஒரு பெரிய கடிதம் கொணர்ந்து கொடுத்தான். அதைப் பிரித்து வாசித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! ஐந்து வருஷங்களுக்கு முன்பு எங்கேயோ ஓடி விட்ட என் நண்பன் ஜயராமனின் கடிதம் அது! சென்னையிலிருந்து எழுதப் பட்டது. அதனை அப்படியே உங்களுக்குக் காட்டுகிறேன். முற்றும் படித்த பிறகு நான் ஆச்சரியப் படுவது பிசகென்று நீங்கள் சொன்னால், ‘வேறு என்ன செய்ய வேண்டும்?’ என்று உங்களை யோசனை கேட்கலாமென்று இருக்கிறேன். 


அன்பார்ந்த நண்பனே! 

இந்த ஐந்து வருஷங்களாக என்னைச் சந்திக்காமையால் ஒரு கால் என்னை மறந்திருக்கலாம். என்னுடைய அவலக்ஷணம் அவ்வளவு சீக்கிரம் மறப்பத ற்குரியதென்று. நான் நினைக்கவில்லை. நான் ஊரை விட்டு வந்து விட்ட பின்பு நீயும் பிறரும் என்னைப் பற்றிப் பலவாறாக. நினைத்திருக்கலாம். என்னுடைய அவலக்ஷணம் எனக்கே.. அருவருப்பை உண்டாக்கி இந்த உலகத்திலிருந்தே மறைந்து விடச் செய்திருக்கும் என்பது போன்ற எண்ணங்: கள் எழுவது சகஜந்தான்! ஆனால் கடவுள் புண்ணியத். தால் என்னுடைய அவலக்ஷணம் நீடுழி வாழ வேண்டும். என்று வாழ்த்துகிறேன். நீயும் ‘ததாஸ்து’ என்று சொல், ஏன் தெரியுமா? நான் இந்த உலகில் வாழ நிலையான காரணம் வேண்டுமென்றால் அது என் அவலக்ஷண உருவமே யாம்; இதில் சிறிதேனும் பொய்யில்லை. 

என்ன! நான் சொல்வது ஒன்றும் உனக்கு விளங்க வில்லையல்லவா? நல்லது; இந்த அவலக்ஷணம் எனக்குப் பரிய அதிருஷ்டத்தை உண்டாக்கி யிருக்கிறது. நீ இதை நம்புவதற்கு இடம் இராது, ஒரு சமயம் அவலக்ஷணப் பரிசு ஒன்றை ஏற்படுத்தி உலகிலேயே மிகவும்: அவலக்ஷ்ணமுள்ளவர்களுக்கு அதனைக் கொடுப்பதாகச் சில கனவான்கள் முன்வந்தார்களென்றும். அது யாரோ ஒரு ஸ்திரீக்குக் கிடைத்ததென்றும் நீ கேட்டிருக்கலாம். அந்த. மாதிரி ஒரு பரிசு ஆண்களுக்குள் அவலட்சண சிகாமணிக்குக் கொடுப்பதாக ஓர் இயக்கம் உண்டாயிருக்கலாமென்று நீ நினைக்கலாம். அந்த மாதிரி சமாசாரம் ஒன்றும் இல்லை — 

நானே உழைத்துச் சம்பாதித்து வருகிறேன். கௌரவ மான வேலை. என்னுடைய பெயரும் பிரசித்தப்பட்கு வருகிறது. ‘ஓகோ! ஏதாவது பத்திரிகையின் ஆசிரிய அல்லது பிரசங்கியாகப் போயிருக்கலாம்’ என்று அவசரப் பட்டு எண்ணிவிடாதே. பத்திரிகாசிரியருக்குப் புகழ் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. பிரசங்கியாருக்குக் கிடைக்கும் புகழின் ஒரு பங்கு அவருடைய லட்சணத்திற்கும் ஆடம்பரத்திற்கும் சொந்தம். ஸ்திரீகள் செய்யும் பிரசங்கத்திற்கும் கதைகளுக்கும் அதிகமான கூட்டம் கூடுவதும் மெடல்கள் விழுவதும் உருவத்திற்கும் பிரசங்கத்திற்கும நெருங்கிய சம்பந்தம் இருப்பதைக் காட்டவில்லையா? எனவே, நான் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தால் என்னுடைய அவலக்ஷணம் குறுக்கே நின்று ஒருவரையும் வரவொட்டாமல் கதவைச் சார்த்தித் தாழ்ப்பாள் போட்டுவிடுமே என்னுடைய உத்தியோகம் இவைகளுக்கெல்லாம் மேலானது. என்னுடைய உயர்ந்த அவலட்சணமே அந்த உத்தியோகத்திற்கு உரிய யோக்கியதை. 

செப்பிடு வித்தைக்காரன் ஜாலம் செய்வது போல் எழுதுவதாக எண்ண வேண்டாம். எனக்கு இப்பொழுது மாதம் ஐந்நூறு ரூபாய் வருகிறது. என் பெயரும் படமும் பத்திரிகைகளில் வருகின்றன. இந்த நிலை எப்படி எனக்கு வந்ததென்று அறிய விரும்புவாய்; சொல்லுகிறேன். கேள்: 

நான் ஊரைவிட்டுப் புறப்பட்டவுடன் சென்னைக்கு வந்தேன். சென்னையில் என் உருவத்தோடு சஞ்சாரம் செய்ய நாணினேன். கையில் இருந்த பணம் செலவழிந்த பிற்பாடு பசி கொடுக்கும் சாட்டை அடியை என்னால் பொறுக்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு வேலையில் அமரலாம் என்றாலோ வேறு உடம்பு வேண்டும். ஏன் சென்னைக்கு வந்தோம் என்று எண்ணினேன். இப்படிப் பசியோடும் ஆலோசனையோடும் ஒரு தெரு வழியே நடந்து கொண்டிருந்தேன். பைத்தியக்காரன் கூடப் பத்துப் பேர்’ என்றபடி என்னுடைய போட்டிபோட முடியாத அவலக்ஷ்ண ரூப தரிசனம் செய்து கொண்டு பல பேர்கள் என்னைத் தொடர்ந்து வந்தார்கள். ‘அழகைத்தான் பார்ப்பதுண்டு அவலக்ஷ்ணத்தை ஏன் இவர்கள் பார்க்கிறார்கள்?’ என்று நினைத்தேன். எவ்வளவோ இடங்களில் அழகைப் பார்த்து. இருந்தாலும் என்னைப் போன்ற அவலக்ஷண உருவத்தை எங்கும் பார்த்தே இருக்க மாட்டார்கள் : ஆதலினால் என் னுடைய அவலக்ஷணம் ஒரு புதுமையாக இருந்தது. 

திடீரென்று ஓர் ஆள் என்னை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய கட்டிடத்திற்குள் சென்று கனவான் ஒருவரிடம் விட்டான். 

“நீர் எந்த ஊர்? இங்கேஎன்ன பண்ணுகிறீர்” என்றார் அவர். 

“நான் தஞ்சாவூர்ப் பக்கம். பட்டணம் பார்க்க வந்தேன். இப்பொழுது பசியோடு போராடுகிறேன்” என்றேன். 

அவர் என் அவலக்ஷண உருவத்தைப் பார்த்து வியந்து கொண்டிருந்தார். உடனே சிற்றுண்டிகள் கொண்டு வரச் செய்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டேன். அவர் என்னைத் தலை முதல் அடி வரையில் சாவதானமாக உற்று நோக்கினார். எதற்காக அவர் என்னை உபசரிக் கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை. 

“ஐயா. என்னுடைய பசி தீர இவற்றை அளித்ததற்கு வந்தனம். முன்பின் அறியாத தாங்கள் இவ்வளவு அன்பு கூர்ந்து இந்தக் குரூபி -” என்று சொல்லுகையில் இரண்டு நாட்களாகச் சென்னையில் அலைந்த அலைச்சலும், ‘ஏன் இந்த அவலக்ஷண உருவத்தோடு பிறந்தோம்’ என்ற எண்ணமும் என்னை அறியாமல் துக்கத்தைக் கிளப்பி விடவே, ஓவென்று அழுது விட்டேன். அவர், “வருத்தப் பட வேண்டாம். என்னுடனே இரும்” என்று கூறிய குளிர்ந்த வார்த்தைகள் என் நெஞ்சைக் குளிர்வித்தன. 

“ஐயா, என்னால் உமக்கு என்ன பிரயோசனம் எழுதுதல் படித்தல் முதலிய காரியங்களை நான் செய்வேன். ஆனால் உங்கள் நண்பர்கள் என்னைக் கண்டால் அருவருக்கக் கூடும்.’ 

“உமது உருவந்தான் எனக்குப் பயன்படப் போகிறது. என் நண்பர் ளும் பிறரும் அதைத்தான் போற்றப் போகிறார்கள்.”

“போதும் ஐயா! இனியும் ஏளனம் செய்ய வேண்டாம். நான் பிறந்தபொழுதே அவமதிப்பும் எனக்கு உடன் பிறந்த உரிமையாகி விட்டதால் நீங்கள் இப்படிக் கூறுவது யுதிதல்ல. அநாவசியமாக உ ங்கள் நேரத்தை வீணாக்குகிறேன். எனக்கு விடை கொடுங்கள்.”

”என்ன? நான் சொல்வதை நீர் நம்பவில்லையா? பாவம்! உலகம் உம்மைப் பயமுறுத்தி விட்டது. இப்பொழுது விஷயத்தை விளக்குகிறேன், கேளும். நான் ஒரு சினிமாக் கம்பெனியின் சொந்தக்காரன். எங்கள் கம்பெனியில் பல வகையான நாடகங்கள் தயாராகின்றன. மிகவும் லட்சண மான நடிகர்கள் எங்கள் வசம் இருக்கிறார்கள். அவர் களுக்கெல்லாம் தக்க சம்பளம் கொடுத்து வருகிறோம். எங்க இந்தியாவிற் பிரசித்தி பெற்ற சினிமாக்களுள் களுடையதே முதன்மையானது. ஆனாலும், இப்பொழுது எங்கே பார்த்தாலும் போட்டி பலமாக இருக்கிறது. நாம் ஒன்று செய்தால் அதே மாதிரி மற்றொருவன் ஒன்று செய்து போட்டி போடுகிறான். நாங்கள் அமைக்கும் கதை நிகழ்ச்சியின் போக்கும் அந்த அந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு கொடுக்கும் வேலையும் மேனாட்டாரும் மதிக்கத் தக்க புகழை எங்களுக்குக் கொடுத்திருக்கின்றன. வடநாட்டுக் கம்பெனிகளிற் சில எங்கள் முறையைப் பின்பற்றி வருகின்றன. அழகிய பெண்களும், ஆடவர்களும் தேசம் முழுவதும் நிரம்பி இருக்கிறார்கள். ஆகையால் ஊருக்கு ஒரு சினிமாக் கம்பெனி ஆரம்பித்தாலும் நடிகர்கள் கிடைப் பார்கள். உமக்கு நான் சொல்லிக் கொண்டு வருவது விளங்குகிறதா?” 

”ஆகா! விளங்குகிறது.” 

”ஆகையால், நாங்கள் எவ்வளவு அழகான நடிகர் களைச் சம்பாதித்தாலும் அவர்களை விட மேலானவர்கள் மற்ற கம்பெனிகளுக்குக் கிடைத்து விடுகிறார்கள். இந்தக் காரணத்தால், எங்களுடைய புகழுக்கு ஒன்றும் குறை இல்லாவிட்டாலும், மேலும்மேலும் புதிய புதிய நாடகங்களை அமைத்து உலகத்தாருடைய உயர்ந்த மதிப்பைப் பெற முடியவில்லை. பழைய புகழின் ஒளியில் ஆடி வருகிறோம். எனவே புதுமுறை ஒன்றைக் கைக்கொண்டால் அதனால் புதிய கீர்த்தியைச் சம்பாதிக்கலாம் என்று நெடுங்காலம் யோசித்தேன். ‘ஸ்திரீ வேஷங்களை ஆண்களுக்கும் ஆண் வேஷத்தைப் பெண்களுக்கும் போட்டு நடிக்கச் செய்ய லாமோ?” என்பது போன்ற எவ்வளவு பைத்தியக்கார எண்ணங்களை நினைத்ததுண்டு. அவையெல்லாம் எங்கள் கம்பெனிக்குப் பென்ஷன் கொடுத்து மூலையில் உட்கார்த்தி விடுவதற்கு ஏற்றவையாக இருந்தன. லக்ஷணமானவர் களைக் கதாபாத்திரங்களாக அமைப்பதில்தானே போட்டி? அவலக்ஷணமானவர்களைக் கதையில் முக்கியமான நடிகர்களாக வைத்துச் சில நாடகங்கள் நடத்தக் கூடாது? என்ற ஒரு நல்ல எண்ணம் தோன்றியது உடனே அதற்காக 40 வயசுள்ள ஒருவரைத் தேடிப் பிடித்து அவருக்கு நடிக்கும் முறைகளைக் கற்றுக் கொடுத்து. மாதிரிக்காசு ஒரு கதையைத் தயார் செய்தோம். எதிர் பார்த்ததற்கு அதிகமாக எங்களுக்கு அதிக மதிப்பை அந் நாடகம் உண்டாக்கியது. எங்களுடைய துரதிர்ஷ்டம்; அந்தப் பிரதம நடிகர் சென்ற மாதந்தான் திடீரென்று இறந்து விட்டார். இனி என்ன செய்வதென்று ஏங்கி கொண்டிருந்தோம். உம்மைக் கண்டவுடன் எனக்குப் போன உயிர் வந்தது போல் இருக்கிறது.ஸினிமாவில் நடிப்பது எவ்வளவோ சந்தோஷச் செயல்” என்று மேலேயும் சொல்ல ஆரம்பித்தார். 

“அதைப் பற்றி அதிகமாகச் சொல்ல வேண்டாம். இந்த உடம்பை எப்படி வேண்டுமானாலும் உபாயாகிக்கலாம். உங்கள் உத்தரவிற்கு இரண்டில்லை” என்று அவர் காலடியில் வீழ்ந்தேன். 


நான் விரைவாக நடிக்கும் முறையைக் கற்றுக் கொள்வதும் உள்ளக் கருத்தை நன்றாய்ப் பாவனை செய் வதும் ஸினிமாக் கம்பெனிக்காரருக்குத் திருப்தியை விளைதன. அடுத்த மாதம் ஒரு கதையில் நான் கதாநாயகனாக நடித்தேன்.ஒரு மந்திரியும் அரசனும் இளமையில் நண்பர்களாக இருந்த போது ஒருவருக்குப் பெண்ணும் ருவருக்குப் பிள்ளையுமாக பிறந்தால் இருவருக்கும் கல்யாணம் செய்வதென்று சத்தியம் செய்து கொண்டார் கள். மந்திரிக்கு ஒரு பிள்ளை பிறந்தான். ஆனால் அவன் மிகக் குரூபியாக இருந்தான். அரசனுக்கு ஒரு குமாரி பிறந்தாள். அவள் நல்ல அழகி. மந்திரி குமாரன் குரூபி யாக இருப்பதைக் கண்டு அரசன் தன் சத்தியத்தை நிறைவேற்றாமல் இருந்தான்; மந்திரி குமாரனுக்கும் அரச குமாரிக்கும் அந்த சத்தியத்தைப் பற்றிய வரலாறு. தெரிந்தது. அரச குமாரி வாக்குப் பிசகக் கூடாதென்றும் தனக்குக் குரூபி கணவனாக ஆனாலும் அரசனுக்கு அசத்தியவான் என்னும் இழிவு வரக்கூடாதென்றும் எண்ணினாள். மந்திரி குமாரன் எப்படியும் அரச குமாரியை மணப்பதென்று உறுதி கொண்டான். பல வீரச் செயல்கள் செய்து அவளைக் கவர்ந்து சென்று மணந்து கொண்டான். ஆனாலும் அவளை மனைவியாக நடத்தாமல் மரியாதையாக ஒரு முனி இருந்து வந்தான். அவள் துக்கப் பட்டாள். வருடைய அனுக்கிரகத்தால் மந்திரி குமாரன் அழகிய உருவம் அடைகிறான். ஆனாலும் வேண்டிய பொழுது. பழைய ரூபத்தைக் கொள்ளும் சக்தியையும் பெற்றான். தன் அழகிய வடிவத்தை மனைவிக்குக் காட்டாமல் இருந்து வந்தான. ஒரு நாள் அவள் அதனைக் கண்டு விட்டாள். அப்புறம் அனை பழைய உருவத்தைக் கொள்வதே இல்லை – இதுதான் கதை, 

இந்தக் கதையில் நான் யாராக நடித்திருப்பேன் என்னும் என்பதைச் சொல்ல வேண்டாம். ஆ குணத்திற்கு இதுதான் முடியும். இது முடியாதென்று எண்ணுகிற சக்தியே இல்லை. மந்திரி குமாரன் அழகிய உருவத்தைப் பெற்றதைப் படம் பிடிக்கும்போது எனக்குப் அப்படி பதிலாக வேறொரு நடிகர் வந்தார். நானே மாறும் சக்தி உண்மையாகவே வந்துவிடக் கூடாதா என்று என் பேதை மனம் நினைந்து சில நிமிஷம் ஏங்கியது. 

அந்த நாடகம், கம்பெனிக்காரர் நம்பினபடி மிகச்சிறந்த பெயரை உண்டாக்கிற்று. அதற்குமுன் எடுக்கப் பட்டவற் றிற்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது, நான் பிரதான நடிகனாய் இருந்தமையே. அந்தப் படம், சென்னையில் இருபது வாரங்களும், பம்பாயில் பதினைந்து வாரங்களும், இன்னும் எங்கெங்கோ பல வாரங்களும் ஓடியது. மேல் நாட்டுக்குக்கூடப் போய் வந்தது. 

என் நடிப்பை எல்லோரும் சிலாகித்தவண்ணமாக இருக்கிறார்கள். மிகவும் திறமையுள்ளவர்களாலும் பின் பற்ற முடியாத சிறப்புடையதென்று சொல்லிக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும்விட, என் அவலட்சணத்துடன் போட்டி போடுபவர் இந்த உலகத்தில் எங்கும் இல்லையென்பது எங்கள் கம்பெனியின் சிறப்புக்கு முக்கிய காரணம். 

மந்திரி மகனாக நடித்த கதைக்குப் பிறகு பூதமாகவும், ராட்சசனாகவும், பிசாசாகவும், வேதாளமாகவும் நடித்த கதைகளுக்கு அளவில்லை. கதாநாயகனாக நான் நடித்த கதைகள் பல. என்னுடைய பெயர் ஜே.ஆர். மன் என்று மாறிவிட்டது. மாஸ்டர் ஜே.ஆர். மன்னைப்பற்றி நாள் தவறாமல் பத்திரிகைகள் எழுதுகின்றன. அவனுக்காகப் புதிய கதையை ஜோடிக்க இரண்டு கதாசிரியர்கள் பேனா வும் கையுமாக இருக்கிறார்கள். என்னை இந்தத் துறையில் புகுத்திய அந்த மகாப்பிரபு இந்தக் கம்பெனியின் லாபத்தில் ஐந்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுக்கிறார். எனக்குத் தனிப் பங்களா; வேலையாள் முதலியவர்கள் உண்டு. 

இந்தக் கூத்தில் ஒன்று கேட்டாயா! என் உருவத்தைக் கண்டு என்னைக் காதலிக்கும் பெண் இருக்கப் போவ தில்லையென்பது நிச்சயம். ஆனால் இதுவரைக்கும் கல்யாணம் செய்து பத்துப் பேருக்குமேல் என்னைக் கொள்ளப் பெண்கள் வந்தார்கள். வெறும் பணத்திற்காக வேண்டுமானால் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள லாமே ஒழிய என் லக்ஷணத்திற்கு அவர்கள் ஜோடியல்ல என்பது எனக்குத் தெரியும். நான். பிரமசாரியாகவே காலம் கழிக்க உத்தேசித்து விட்டேன். 

நான் சம்பாதிக்கும் பணமெல்லாம் என் அவலக்ஷணத் தால் வந்ததுதானே? அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! ஒரு பெருந் தொகையைச் சேர்த்து அவலட்சணமான ஸ்தீரி புருஷர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதற்குரிய ஸ்தாபனம் ஒன்றை நிறுவலாம் என்பது என் உத்தேசம். அதற்குரிய யோசனை உனக்கு ஏதாவது தெரிந்தால் எழுத வேண்டும். 

என்னுடைய பல வேஷங்களின் படங்களைத் தனித் தபாலில் அனுப்பியிருக்கிறேன்…

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *