‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி நாணயம் ஒன்றும் தெப்பக்குளத்தில் புதிதாக விடப்பட்டுள்ள மோட்டர் படகு சவாரிக்கான அனுமதிச் சீட்டும் இலவசமாகத் தருவதாக அறிவித்துப் பத்து தினங்களுக்கும் மேலாகியிருந்தது. அறிவிப்பைக் கேட்டு லட்சக்கணக்கான ஜனங்கள் வரக்கூடுமென்று இவ்விளையாட்டை அறிவித்திருந்த மோட்டர் படகு நடத்தும் நிறுவனம் காத்திருந்தது. உலகத்திலுள்ள அனைத்துக் குப்பைகளும் கொட்டப்படும் இந்நகரத்தில் வாழ்கிறவர்கள் தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கேட்டுப் பழகியிருந்தனர். அவர்கள் நிறுவனத்தின் வண்ண நோட்டீஸ் காகிதத்தைப் படிக்காமலேயே கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டனர். மேலும் புதிய புதிய நிறுவனங்கள் தங்களது உத்திரவாதங்களையும் பரிசுகளையும் அறிவுப்புகளையும் நோட்டீஸ் அடித்து நகரம் முழுக்க வீசி எறிந்து பறக்கச் செய்திருக்கின்றன. நிறுவனங்களின் ஆசைக்குப் பலியாகப்போகும் ஜனங்களுக்காக நகரம் காத்திருக்கிறது.
நகரத்தின் தெருக்களிலிருக்கும் ஒவ்வொரு குப்பைத்தொட்டியிலும் தங்களது அறிவிப்பு நோட்டீஸ் குப்பைகளாகச் சேர்ந்திருந்ததை நிறுவனத்தினரும் அவற்றின் ஊழியர்களும் அறிந்துதான் இருந்தனர். இருந்தபோதிலும் அறிவிப்பின் புத்தம் புதிய நோட்டீஸ் காகிதங்கள் பல வண்ணங்களில் நகர வீதிகளில் பறந்துகொண்டிருந்தன. நகரத்தின் ஒவ்வொரு வீதியிலும் வண்ணக் காகிதங்கள் நுழைந்து ஜனங்களின் பொதுப்புத்திக்குள் புகுந்து அமர்ந்துகொள்ளப் பிரயாசைப்பட்டுக்கொண்டிருந்தன. ஜனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெளியூர்வாசிகளுக்கும் தேசாந்திரப் பிரயாணிகளுக்குமாகக் காத்திருக்கும் ராட்சஸக் குப்பைத் தொட்டியில் குப்பைகளோடு குப்பைகளாகத் தங்களை இணைத்துக்கொள்ள அவற்றுக்கு அவகாசமிருந்தது.
பாக்கியமுத்துகூட நோட்டீஸை வாங்கி வேலைக்குச் செல்லும் அவசரகதியில் கோபத்தில் கிழித்து உலகக் குப்பைகளோடு குப்பையாகப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறான். இந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தற்செயலாக ஒரு நாள் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் தனது கம்பெனி வேலையின் பொருட்டு நடந்து சென்றுகொண்டிருந்தவன், ‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்ற வாக்கியத்தைக் கேட்டான். கம்பெனியின் வாடிக்கையாளரின் விலாசத்தைத் தேடிக்கொண்டிருந்த குழப்பத்தில் அதைப் பொருட்படுத்தவில்லை. அதற்குப் பிறகு ஒருமுறை மத்தியப் பேருந்து நிலையத்தில் இத்தொடரைக் கேட்டபோதுதான் அவன் கவனிக்கத் தொடங்கினான்.
பேருந்துநிலையத்தில் நின்றிருந்த பாக்கியமுத்து அந்தத் தொடரைக் கேட்டதும் திரும்பிப்பார்த்தான். அவ்வாக்கியத்தைச் சொன்னது யார் என்று தேடினான். அதைச் சொன்னது ஒரு பெண்தான். நடைமேடை, பூக்கடைகள், டீக்கடைகள் எனச் சுற்றிலும் தேடிப்பார்த்தான். அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாகக் காலையில் பணிக்குச் செல்லும் அவசரத்தில் வேகவேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். சற்றுத்தொலைவில் ஒரு பெண் தனியாக நின்று கைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவள் அருகில் சென்றான். அவள் பேசியதைக் கேட்டான். அவள் ஏதோ குடும்ப விசயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டி ருந்தது அவளது பேச்சிலிருந்து தெரிந்தது. என்ன பேசினாள் எனப் புரியவில்லை. ஆனால் இரண்டு வாக்கியங்கள் அவன் காதில் விழுந்தன. ‘என்னையே நீ நம்பாமல் வேற யாரை நம்பப்போறே?’ மற்றொன்று ‘நானாவது உன்னுடன் வாழ்கிறேன். வேறொருத்தியின்னா இந்நேரம் விஷத்தைக் குடிச்சு செத்துத் தொலைஞ்சு போயிருப்பா.’ பாக்கியமுத்து அவளைக் கடந்து சென்றான். நடைமேடையில் சற்றுத் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்த மற்றொரு பெண் தனக்கு எதிரே நின்றிருந்தவளிடம், ‘அங்க பாரு, உன் ஆளு வந்துட்டான். சிக்னல் தர்றான். கிளம்பு கிளம்பு’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். தனது ஊரிலிலிருந்து இந்நகரத்திற்குத் தினமும் வேலைக்காக வரும் பாக்கியமுத்துவிற்கு 24 வயது முடிந்து 25 தொடங்கப்போகிறது. உலகக் குப்பைகள் வழிந்துகிடக்கும் இந்நகரத்திற்கு வேலைக்கென வந்து மூன்று வருடங்கள் முடியப்போகின்றன. தினமும் காலையில் தன் ஊரிலிலிருந்து பேருந்தில் வருவான். இரவு ஊருக்குத் திரும்பிவிடுவான். நேற்று இரவு அலுவலகம் முடிந்து ஊருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, வழியில் பெண்ணொருத்தி, ‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்று யாரிடமோ கூறிக்கொண்டிருந்ததை மூன்றாம்முறையாகக் கேட்டான். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. இப்போது வரை அந்த வாக்கியத்தை யோசித்தபடியிருந்தான். யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. அந்த வாக்கியத்தைச் சொன்ன பெண்ணை ஏற்கனவே பார்த்திருக்கிறான். அவளை எங்கோ பார்த்த ஞாபகமாக இருந்தது. எங்கே என்பதுதான் நினைவில் இல்லை. அந்த வாக்கியத்திற்கு அர்த்தம் என்ன, அப் பெண்ணைத் திரும்பவும் பார்ப்போமா, அவள் யார், அவள் எங்கிருந்து வருகிறாள் என்பனவெல்லாம் புரியாதவனாக நடைமேடையில் நடந்தான். சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். நடைமேடையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று புகைபிடித்தான். ஜனங்களின் முகங்களைப் பார்த்தான். அலைச்சலும் தவிப்பும் கூடிய முகங்கள். வழக்கமாக அவன் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான். இருக்கையிலிருந்தபடி சுற்றிலும் பார்த்துக்கொண்டான். ஓட்டுநருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். டிரைவர் அவளுக்காகத்தான் டி.வியில் படம் போடாமல் இருந்ததாக நினைத்தான். அவள் பேசி முடித்ததும் டி.வியின் சுவிட்சைப் போட்டார். ஒரு சண்டைக் காட்சி. சண்டை முடிந்ததும் பேருந்து கிளம்பியது. ஜன்னலைத் திறந்துவைத்துக் கொண்டவனுக்குத் தூக்கம் வரத் தொடங்கியது.
பாக்கியமுத்து கண்விழித்துப் பார்த்தபோது, பேருந்து நடுச்சாவடிக்கு அருகில் நின்றிருந்தது தெரிந்தது. அவன் இருக்கையைவிட்டு எழுந்து நின்றுகொண்டான். பேருந்திலிருந்தவர்கள் அனைவரும் உறங்கி விழித்திருந்தனர். பேருந்துகள் முன்னும் பின்னுமாக வரிசையாக நின்றிருந்தன. சற்றுத் தொலைவில் கண்மாய்க்குளத்து மேட்டிற்கு எதிர்ப் புறத்திலும் பேருந்து நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பின்னால் நின்றிருந்த பேருந்திலிருந்து ஹார்ன் சத்தம் கேட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஓட்டுநர் பேருந்தைவிட்டுக் கீழே இறங்கிச் சண்டையிடத் தொடங்கினார். நடுச்சாவடியைத் தாண்டியதும் வரும் ரயில்வே கிராஸ்வரை எந்தக் குடியிருப்பும் இல்லை. பகலில் ஆடு மேய்ச்சலுக்கும் காட்டு வேலைக்கும் போகிறவர்களைத் தவிர நடமாட்டம் ஏதுமில்லை. பேருந்துகள் லெவல் கிராஸிற்கு எதிரும் புதிருமாக வரிசையாக நின்றிருந்தன. பாக்கியமுத்து பேருந்தைவிட்டு இறங்கிச் சாலையில் நின்றுகொண்டான். சிறுநீர் கழித்துவிட்டுப் பேருந்தில் அமர்ந்துகொள்ளலாமெனச் சாலையின் பக்கவாட்டிலிருந்த புதர்களின் ஊடே நடந்தான். மறைவிடம் எதுவும் இல்லை. பேருந்து ஜன்னல் வெளிச்சம் புதர்களின் ஊடே விழுந்துகொண்டிருந்தது. புதர்களைத் தாண்டி நடந்தான். கற்றாழைச் செடிகளைத் தாண்டி, கருவேலம் முட்புதரைத் தாண்டி ஒரு மரத்தின் அருகே போய் நின்று மூத்திரமிருந்தான். அவன் நின்றிருந்த இடத்திற்கு நேராக நீரின் சலசலப்பு கேட்டது. எட்டிப்பார்த்தான். ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தாள். அவளருகே கம்மாய் சலனமற்று நிலவையும் அவளையும் தன்மேல் படரவிட்டுக்கிடந்தது. அப் பெண்ணைப் பாக்கியமுத்து வேறெங்கோ பார்த்திருக்கிறான். எங்கே என்பது சரியாக நினைவில் இல்லை. நேற்றுகூட அவளைப் பார்த்ததாக ஞாபகம். எங்கே எனத் தெரியவில்லை. அவள் இவனைப் பார்த்ததும், ‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்று கேட்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க?’ என்று கேட்டான். அவள் சிரித்துக்கொண்டாள். அவள் சிரிப்பதைக் கேட்டுச் சற்றுத்தொலைவிலிருந்து ஒருவன் வெளிப்பட்டு இருவரையும் நோக்கி வந்தான். பாக்கியமுத்து முதலில் பயந்தான். பேருந்து சத்தமாகக் கிளம்புவது கேட்டது. திரும்பி நடந்தவனிடம், ‘பாட்டில் கொண்டாறலையின்னாலும் பரவாயில்லை. என்கிட்டேயிருக்கு. வாங்கிட்டுப்போ. சூடா இருக்குப்பா’ என்றான். பாக்கியமுத்து ஒன்றும் பேசாமல் சாலைக்கு வந்தான். பேருந்தின் அருகிலேயே நின்றுகொண்டான். பாஸஞ்சர் ரயில்வண்டி ஆள்காட்டிக் குருவியைத் தாண்டி வரும் சத்தம் கேட்டது. வழக்கமாக வரும் நேரம். பாஸஞ்சர் ரயில் வேகமாகத் தடதடத்து ஓடியது. அவன் கண்களை மூடிக்கொண்டான். காதுகளைப் பொத்திக்கொண்டான். இருந்தபோதிலும் மனம் ரயிலோடு ரயிலாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் மனத்தில் கடைசிப் பெட்டி மறைந்ததும் தூரத்தில் சிவப்பு விளக்கு தெரிந்தது. அவன் தன் கண்களைத் திறந்துகொண்டபோது சண்முகம் உடல் துண்டித்து இறந்துகிடந்த தண்டவாளத்தின் மேல் பேருந்துகள் ஒவ்வொன்றாகக் கடந்துசெல்லத் தொடங்கின. அவன் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான். உறக்கம் வரவில்லை. சண்முகம் இதேபோல ஓரிரவில் ஓடிவரும் ரயிலின் ஊடே விழுந்து தற்கொலை செய்துகொண்டதைப் பற்றித் தனது ஊர் சேரும்வரை நினைத்துக்கொண்டான். அவனால் அன்றிரவு சண்முகத்தை மறக்க முடியவில்லை. ரயிலைப் பார்க்கும் கணம்தோறும் சண்முகத்தின் நினைவு அவனை இம்சித்தது. ரயிலைத் தூரத்திலிருந்து பார்த்தாலும் சினிமாவில் பார்த்தாலும் தினமும் ஊருக்குப் போகும்போதும் வரும்போது லெவல்கிராஸிங்கைக் கடக்கும்போதும் சண்முகத்தின் நினைவு தண்டவாளத்தில் உறைந்த ரத்தத்தோடு நினைவுக்குவருகிறது. உடல் வெட்டுப்பட்டுக்கிடந்தவனை அரசாங்க மருத்துவமனையில் போய்ப் பார்த்தான். பிரேதத்தை வாங்கிக்கொள்ளவென அவனது ஊரிலிருந்து வந்த ஆட்கள் அமைதியாக இருந்தார்கள். அவனுக்கு ஓங்கிக் கத்த வேண்டும்போலிருந்தது. யாரையாவது அடித்துப்போட வேண்டும்போலிருந்தது. அவனால் எதுவும் முடியவில்லை. அவனும் அங்கிருந்த ஆட்களைப் போல அமைதியாக இருந்தான்.
அதற்குப் பிறகு இந்த உலகக் குப்பைகள் மிகுந்த நகரத்தில் இரண்டொரு நிறுவனங்கள் வரத் தொடங்கின. அவர்களின் அறிவிப்புகள் கொண்ட நோட்டீஸைப் பாக்கியமுத்து படித்தான். ‘வண்ண வண்ணப் பலூனுக்கு வின்னை முட்டும் பலூனுக்கு, காற்றோடு போகும் பலூனுக்குப் பலூன் என்று பெயர் வைத்தேன். காற்றில்லாதபோது என்ன பெயர் வைக்க?’ மூச்சுவிடாமல் சொல்பவர்களுக்குப் பரிசுகள் காத்திருந்தன. பண்பலை ரேடியோவில் இந்த அறிவிப்பை மணிக்கொரு தடவை சொல்லி நேயர்களுக்குப் பயிற்சி தந்துகொண்டிருந்தார்கள். நேயர்களும் வேலைக்குப் போகும் அவசரத்தில் தங்களது ஞாபகத்தில் இருந்த சொற்களைச் சொல்லி வெற்றிபெற முயன்றார்கள். முடியாதவர்கள் பலரும் தோல்வியோடு வேலைக்குச் சென்றார்கள். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருக்கும் கழிப்பறையில் அமர்ந்துகொண்டு அவர்களாகச் சொல்லிப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். சிரித்தபடி கழிப்பறையைவிட்டு வெளியேறுபவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மற்ற சிப்பந்திகளும் சிரித்தபடி வழிவிட்டுக் கழிப்பறைக்குள் சென்றார்கள். அவர்களும் உள்ளே சென்று சிரிக்கத் தொடங்கினார்கள்.
பாக்கியமுத்து இந்த வார்த்தையைக் காலையில் ஊரிலிருந்து வரும்போது பேருந்தில் கேட்டான். அவன் இரண்டு பைகளைப் பிடித்திருந்தான். ஊரிலிருந்து காலை உணவும் மற்றொன்றில் மதிய உணவும் கொண்டுவந்துவிடுவான். சூடாக சாம்பார் சாதமும் கொத்தவரங்காயுடன் கடலைப்பருப்பும் கலந்துசெய்த பொறியலும் மதிய உணவுக்கென அவனது அம்மா செய்து தந்திருந்தார்கள். இந்த உலகக் குப்பைகள் நிறைந்த நகரத்தில் மதிய உணவுக்கான கடைகள் பெருகிவிட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் உணவுக் கடைகள். விலையும் பதார்த்தங்களின் நிறமும் அவனைப் பயமுறுத்தின. அக்கடைகளின் உணவு வயிற்றுவலியோடு மலச்சிக் கலையும் தந்து அவனைத் துயரப்படுத்தியது. அதன் பிற்பாடு வீட்டிலிருந்து மதியச் சாப்பாட்டைக் கொண்டுவரத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து சாப்பாட்டைக் கொண்டுவருவதற்கான மற்றொரு காரணமும் இருந்தது. அலுவலகத்தில் சாப்பிடும்போது, அக்கட்டடத்தில் இருக்கும் ஏஜென்ஸி கம்பெனியில் வேலைசெய்யும் ரேணுகாஸ்ரீ வந்து அவனுடன் பணிபுரியும் கம்ப்யூட்டர் பெண் திப்னேஷாவுடன் சாப்பிடுவாள்.
ரேணுகாஸ்ரீ அழகாயிருந்தாள். அவள் மோதிரம் அணிந்திருந்தாள். தோடும் ஜிமிக்கியும் போட்டிருந்தாள். தினமும் ஓர் உடை உடுத்திக்கொண்டு வாசமாக வந்தாள். அவள் தன்னைக் கடந்த ஒவ்வொருமுறையும் விதவிதமான வாசனைகளை உணர்ந்தான். கைகழுவும் இடத்தின் இடைஞ்சலில் அவளை நெருங்கிச் செல்லும் தருணத்தில் அவனுக்கு உயிர் போய் உயிர் வரும். அந்தச் சமயங்களில் தனக்கு வந்த கற்பனைகள் முழுவதும் நிஜமாக வேண்டுமென அவன் விரும்பினான். கடவுளை அவன் வணங்கினான். மாலைநேரங்களில் நகரத்தின் சாலைகளில் ஊர்வலமாக வரும் உற்சவர்களை மிதியடியைக் கழற்றிவிட்டு வணங்கி விபூதியும் குங்குமமும் பெற்றுக்கொண்டு, நெற்றியில் பூசிக்கொள்வான். ஆனால் திப்னேஷாவைப் பார்த்தவுடன் அவனது கற்பனைகள் அனைத்தும் கரைந்துபோய்விடும்.
ரேணுகாஸ்ரீ தினமும் அவள் கொண்டுவரும் மதிய உணவை அங்கிருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிப்பாள். காய்கறிகள், மிக்ஸர், பக்கா வடை, மசால்வடை, அப்பளம், வடகம் என்று தருவாள். பாக்கிய முத்துவும் அவளுக்கு ஏதாவது தர வேண்டுமென்று விரும்பினான். கொத்தவரங்காயுடன் கடலைப் பருப்புப் பொறியலும் செய்துதரச் சொல்லி அம்மாவை நச்சரித்து இன்றுதான் வாங்கிக்கொண்டு வந்தான். அவனுக்கு உடல் சிலிர்ப்பாக இருந்தது. தங்கள் அலுவலகத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் சமயத்தில் தான் கொண்டுவந்த பதார்த்தங்களை ரேணுகாஸ்ரீ பங்கிட்டுக்கொடுப்பாள். அப்போது தானும் பதிலுக்குத் தன்னிடமிருக்கும் கொத்தவரங்காய்ப் பொறியலைத் தர வேண்டுமென்று நினைத்துக்கொண்டான். ரேணுகாஸ்ரீ இரண்டு தினங்களுக்கு முன்பு சாப்பிடும்போது அனைவருக்கும் காலிஃ பிளவர் போண்டா தந்தாள். அவனுக்கு இரண்டு துண்டுகள் கொடுத்தாள். பதிலுக்குத் தருவதற்கு அன்று அவனிடம் எதுவுமிருக்க வில்லை. தயிர்சாதம் டிபன் பாக்ஸ் நிறைய இருந்தது. புளிப்பாக இருந்த சாதத்தைப் பிசைந்து பிசைந்து சாப்பிட்ட பின்பு கைகழுவும் இடத்தில் அவளிடம் ‘தேங்க்யூ’ என்று சொன்னான். அவள் சிரித்துக்கொண்டாள்.
அதற்குப் பிறகு நேற்றுக் காலையில் அடைதோசை செய்து கொண்டுவந்து அங்கிருப்பவர்களுக்குத் தந்தாள். அவன் சிரித்தபடி வாங்கிக்கொண்டான். திப்னேஷா அவனைப் பார்த்து, ‘சீக்கிரமா வசூலுக்குப் போங்க. நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே’ என்று திட்டினாள். ஆனால் நாச்சியப்பனை அவள் ஒன்றும் கோபித்துக்கொள்ளவில்லை. நாச்சிக்கும் ரேணுகாஸ்ரீ அடைதோசை தந்திருந்தாள். நாச்சியப்பன் அப்போது தான் அலுவலகத்திற்குள் நுழைந்திருந்தான். காலணியைக்கூட இன்னமும் கழற்றிப் போட்டிருக்கவில்லை. தன்னை ரேணுகாஸ்ரீயின் முன்பாகத் திட்டியது அவனுக்கு அவமானமாக இருந்தது. கொடுத்த அடை தோசையைத் தின்னாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வெளியேறிவிட்டான்.
திப்னேஷாவுக்கு வேலை நேரத்தில் யாரும் பேசிவிடக் கூடாது. கம்ப்யூட்டரின் முன்பாக அமர்ந்து இடுப்பு வலிக்க வேலைசெய்ய வேண்டும். மற்றவர்கள் கையொடிய எழுத வேண்டும். வசூலுக்குப் போகிறவர்கள் சீக்கிரம் திரும்ப வேண்டும். அதுவும் அன்றைய நாளில் தர வேண்டியவர்களிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் கொள்ளையடித்துக்கொண்டாவது வர வேண்டும். பணம் தராதவர்களின் மேலிருக்கும் கோபத்தை அங்குச் சென்று திரும்பும் வசூல்தாரர்மேல் காட்டிவிடுவாள். பாக்கியமுத்துவுக்கு அவள் பெரும் பிரச்சினையாக இருந்தாள். திப்னேஷா தினமும் அவனுடன் ஏதாவது சண்டையிட்டுக்கொண்டிருப்பாள். அவளுக்கும் அவனுக்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் சண்டை தொடர்ந்துகொண்டிருந்தது. ‘ரசீது புத்தகத்திலிருக்கும் வாடிக்கையாளரின் பெயரைச் சரியாக எழுதவில்லை. எட்டு சரியாக வளைந்திருக்கவில்லை. பத்தாயிரத்துக்கு எத்தனை சைபர், ஆயிரத்துக்கு எத்தனை சைபர்னு தெரியாமல் வேலைக்கு வந்து ஏன் எங்க உயிரை வாங்குறீங்க?’ என்று அவனைத் திட்டிக்கொண்டிருந்தாள். அவளைத் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தொந்தரவாகத் தெரியவில்லை. அவனை வேலைக்குச் சேர்த்துவிட்ட சண்முகம் ‘முதலில் அப்படித்தான் உன்னை வேலை வாங்குவாங்க. பின்னாடி டேபிள் சேர் போட்டு உட்காரவைச்சுக் கணக்கு எழுதச் சொல்லிருவாங்க. ஒரே இடத்துல ஒரு வருஷம் கண்ணை மூடிட்டு இரு. நீயே வேலைசெய்யுறதுக்கு விரும்புவ’ என்றார். அவனுக்கு அது சரி எனத் தோன்றியது. இரண்டு மாதங்கள் முடியப்போகிறது. வசூலுக்கு இன்னொரு ஆளைப் போடுங்க என்று மானேஜரிடம் சொன்னதற்கு ‘ஏன் அய்யாவுக்குக் கடை கடைக்குப் போய் நின்று வாங்குறதுக்குக் கூசுதோ’ என்று சத்தம்போட்டார். அதிலிருந்து அவன் எதுவும் பேசுவதில்லை.
பேருந்து நிலையத்திலிருந்து நடந்து அலுவலகத்திற்கு வந்து சேர்வதற்கும் அலுவலகம் திறப்பதற்கும் சரியாக இருந்தது. அலுவலகத்தின் மற்ற ஊழியர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களது மேஜைகளையும் பொருட்களையும் சுத்தம்செய்யத் தொடங்கினார்கள். திப்னேஷா மாடிப்படியேறி வந்த சத்தம் கேட்டது. அவள் யாருடனோ செல்ஃபோனில் பேசியபடி வந்தாள். அவள் சத்தமாகப் பேசிக்கொண்டு மூச்சுத்திணறியபடி செருப்பை இழுத்து இழுத்து நடந்துவருவதைப் பாக்கியமுத்து காட்சிப்படுத்திக்கொண்டான். அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் கிழவி விளக்குமாறை எடுத்துக்கொண்டு பெருக்கத் தொடங்கினாள். திப்னேஷா கைக்குட்டையை முகத்தில் வைத்துக்கொண்டு வாசலில் நின்றுகொண்டாள்.
பாக்கியமுத்து ஸ்டோர் ரூமில் உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிடத் தொடங்கினான். மின் விசிறியைச் சுழலவிட்டு அறைக் கதவைச் சாத்தியிருந்தான். திப்னேஷா அலுவலகத்திற்கு வந்தவுடன் முகத்தை ‘டச்சப்’ செய்துகொள்ள அந்த அறைக்குள்தான் நுழைவாள். கதவு சாத்தியிருந்ததைக் கண்டதும் அவளுக்குக் கோபம் வந்து கதவைத் தட்டினாள். பாக்கியமுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த கையோடு கதவைத் திறந்தான். அவள் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, ‘சீக்கிரமாச் சாப்பிட்டு வாங்க’ என்றாள்.
காலையில் வந்ததும் வராததுமாகத் தன்னைக் கத்தவிடுகிறான் என்று பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். பாக்கிய முத்து சாப்பிட்டுக் கைகழுவிக்கொண்டு வந்ததும் அவள் அறைக்குள் சென்றாள். அறைக் கதவைச் சாத்திக்கொண்டாள். அவளுக்குக் கோபம் இன்னமும் குறையவில்லை. கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். மின்விசிறியின் கீழ் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். அறையைவிட்டு வெளியே வந்து தன் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.
பாக்கியமுத்துவுக்கு இன்னமும் சிறிது நாட்கள் இந்த அலுவலகத்திலேயே இருக்கத் தோன்றியது. சண்முகம் அவனுக்கு வேறொரு வேலை பார்த்துத் தருவதாகக் கூறியிருந்தார். அவனுக்கு எந்த வேலையும் அமையவில்லை. அவன் பார்க்கும் வேலையும் காலமும் ஏனோ அலையவிட்டுக்கொண்டிருந்தன. ஓரிடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய விரும்பினான். கம்ப்யூட்டர் வகுப்பைப் பாதியில் நிறுத்தியது தவறு என்று இப்போது உணரத் தொடங்கினான். கம்ப்யூட்டரில் வேகமாகத் தமிழ் டைப்பிங் செய்யத் தெரிந்தவர்கள் வேலைக்குத் தேவை என்று டீக்கடையிலும் பேக்கரியிலும் அட்டையில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான். அவனுக்குத் தமிழ் டைப்பிங் தெரியும். துரதிர்ஷ்டவசமாகக் கம்ப்யூட்டரில் டைப் செய்யத் தெரியாது. ஓய்வாக இருக்கும் வேளையில் திப்னேஷாவிடம் கேட்டுப் பழகிக்கொள்ளலாமென்றால் அவளை நெருங்கவே முடியாது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.
திப்னேஷா ஏன் தன்மேல் இத்தனை கோபமாக இருக்கிறாள். அதற்குக் காரணம் என்ன? தான் அவளை என்ன செய்துவிட்டோம்? அவள் தன்மேல் கோபமில்லாமல் இருக்கத் தான் என்ன செய்ய வேண்டுமென்று அவன் சதா சிந்தித்துக்கொண்டிருந்தான். பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டு அவளைப் பற்றித்தான் நினைப்பான். ஊருக்கு டிக்கெட் எடுக்கும்போது ‘ஒரு திப்னேஷா கொடுங்க’ என்று நடத்துநரிடம் கேட்டு முழித்திருக்கிறான். பாக்கியமுத்துவின் கனவில் அவளது இரண்டு ஸ்தனங்களும் காளைமாடுகளின் கொம்புகளைப் போலத் துருத்திக்கொண்டு அவனை ஒவ்வொரு இரவும் தூங்கவிடாமல் பயமுறுத்திக்கொண்டு வந்தன. தூக்கமின்மையும் நடு இரவில் ஸ்கலிதமுமாக வாரத்தில் இரண்டு மூன்று இரவுகள் கழிகின்றன. இப்படியாகப் பயமும் ஸ்கலிதமுமாகக் கழியும் இரவுகளுக்குப் பின்வரும் காலை நேரங்களில் அவலுவலகத்தில் அவனால் ஒழுங்காகக் கவனத்துடன் வேலைசெய்ய முடியாது. பதற்றமும் பயமும் எதையோ பறிகொடுத்துவிட்டு ஏங்கித்தவிக்கும் மனமுமாக இருப்பான்.
பாக்கியமுத்துவிற்கு வரும் கனவுகள் பெரும்பாலும் அலுவலகத்திற்கு அவள் சேலை கட்டிக்கொண்டு வரும் நாட்களின் இரவுகளில்தான் வரும். பாக்கியமுத்துவைப் போலவே அவனுடன் வேலைசெய்யும் ஆண்களும் பேய் அடித்ததுபோல முகம் கறுத்துப்போய்க்கிடப்பார்கள். திப்னேஷாவைப் பார்க்கும்போது நடிகை நமீதா பரவாயில்லையெனத் தோன்றும். நமீதா ஒருமுறை குனிந்து நிமிரும்போது தெரியும் மார்பகத்தின் இடைவெளியின் அளவைவிடப் பெரியதாக இருந்தது திப்னேஷாவின் மார்பகத்தின் இடைவெளி. அது சகிக்க முடியாத நீள்துளையாகக் காட்சி தந்தது. வெளிர்ந்து பிதுங்கிக்கொண்டு தெரியும் அவள் ஸ்தனங்களைப் பாக்கியமுத்து பார்த்தபடி இருப்பான். வாரத்தில் சில நாட்கள் அவள் சேலை கட்டிக்கொண்டு வருவாள். பிறநாட்களில் சுடிதார்தான். பின்பக்கமும் தொடைகளும் சுடிதார் அணிந்துவரும் நாட்களில் உடையின் இறுக்கத்தில் பிதுங்கிக்கொண்டு சதைகள் வெளியேறத் தவிப்பதைப் போலிருக்கும். அதையும் பொறுத்துக்கொண்டு வேலையில் இருக்க வேண்டியதாக இருந்தது.
பாக்கியமுத்துவுக்குச் சில தினங்களில் அவளுக்கான வேலைகள் சிலவற்றையும் செய்துதர வேண்டியிருந்தது. அவளுக்கு அலுவலகத்தின் சில கட்டடங்கள் தள்ளியிருக்கும் ஹரிகிருஷ்ண விலாஸிலிருந்து சாம் பார்வடையும் காப்பியும் பார்சல் வாங்கிக்கொண்டு வரச்சொல்வாள். நாச்சியப்பனிடம் அவள் எதுவும் சொல்லமாட்டாள். நாச்சியப்பன் இத்தனைக்கும் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. நாச்சியப்பன் தனியாக அமர்ந்து சாப்பிடுவான். ரேணுகாஸ்ரீ அவனுக்கும் சேர்த்துத்தான் அடைதோசையும் காலிஃபிளவர் போண்டாவும் கொண்டுவருவாள். அவன் அவற்றை வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் கைகழுவும் பேசின் அருகே இருக்கும் குப்பை டப்பாவில் போட்டுவிடுவான். நாச்சியப்பன் அப்படி ஒரு தினம் போட்டபோது பாக்கியமுத்து பார்த்துவிட்டான். ‘அவ கொடுக்கிறதைத் திங்கிறதுக்கா பாஸ் நான் வேலைக்கு வந்திருக்கிறேன். தேவடியா முண்டை. சம்பளத்தை உருவிகிட்டு விட்டுருவாளுக பாஸ். ஜாக்கிரதையா இருங்க. வசூலை முடிச்சு, கணக்கைக் கொடுத்துட்டு நடையைக் கட்டிட்டே இருங்க. நின்னு கடலை போட்டுகிட்டுப் பல்லைக் காமிச்சிட்டு இருந்தீங்கன்னா, ஏழேமுக்கால் ஆரம்பிருச்சுன்னு அர்த்தம். வச்சு அரைச்சுயெடுத்துருவாளுங்க’ என்று அவனிடம் சொன்னான்.
பாக்கியமுத்துவுக்கு ஏற்கனவே பல இடங்களில் வேலைசெய்த அனுபவங்கள் உண்டு. அவனைப் பொறுத்தளவில் இலைமேல் நீர்த்துளி போலிருக்க வேண்டும். இந்த வாக்கியத்தையும் அதன் அர்த்தத்தையும் சொல்லிக்கொடுத்தது சண்முகம் தான். சண்முகம் தன்னுடன் வேலை செய்த பெண்ணால் கட்டப்பஞ்சாயத்து செய்துவைக்கிற அளவிற்குப் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். முப்பதாயிரம் செலவுசெய்து அந்தப் பெண்ணிடமிருந்து அவரை விடுவிக்க வேண்டியதாயிருந்தது. ஒரு நாள் இரவு சினிமாவிற்குச் சென்று வீட்டில் போய் விட்டுவிட்டு வந்ததற்குத் தண்டனையாக முப்பதாயிரம் ரூபாய். பிறகு அந்தப் பெண் வேறொரு அலுவலகத்திற்கு வேலைக்குப் போய்விட்டாள். சண்முகம், ‘அங்க எவனைக் கரக்கிறதுக்குப் போறான்னு தெரியலை பாக்கியம். நீ யாருகிட்டேயும் மாட்டிக்கிடாதே. ஒட்டியும் ஒட்டாமல் இருந்துரு. தொடையை விரிக்கிறான்னு கம்பை நீட்டிறாதே. மகனே அஞ்சு நிமிஷத்துக்காக வருஷம் முழுதும் சாவனும் பாத்துக்கோ ஆமாமப்பா சொல்லிட்டேன்’ என்று அவனை எச்சரித்திருக்கிறார். அதேபோலதான் நாச்சியப்பனும் தன்னை எச்சரித்தது அவனுக்கு மேலும் பயத்தைத் தந்தது. ஏன் நாச்சியை மட்டும் திப்னேஷா எதுவும் சொல்லாமல் இருக்கிறாள் என்பதுதான் அவனுக்குப் புதிராக இருந்தது.
வாரத்தின் இறுதி நாளில் நாச்சியப்பன் பீர் சாப்பிடலாமா என்று அவனிடம் கேட்டான். பாக்கியமுத்துவிற்கும் ஏதாவது குடிக்க வேண்டுமென்ற மனநிலைதான் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரவில் சண்முகமும் மற்றோரிரவில் திப்னேஷாவும் மாறி மாறி வந்து அவன் உறக்கத்தைக் குலைத்துக்கொண்டிருந்தார்கள்.
நாச்சியப்பன், ‘அறையெடுத்துக் கொண்டு இரவு தங்கிக்கொள்ளலாம். மறுநாள் வழக்கம்போல வேலை முடிஞ்சு ஊருக்குப் போ. காலைச் சாப்பாடும் மதியச் சாப்பாடும் நான் உனக்கு என் வீட்டிலிருந்து கொண்டு வந்து தருகிறேன்’ என்று அவனிடம் சொன்னான். நாச்சியுடன் தனியாகப் பேசுவதற்கு அது நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துப் பாக்கியமுத்து ‘சரி’ என்றான்.
நாச்சியப்பன் தன் பெயரில் அறையெடுத்துக்கொண்டதும் முதலில் ஜன்னல் கதவைத்தான் மூடினான். பாக்கியமுத்து ஏன் என்று கேட்டதற்கு ரயில் சத்தம் கேட்கும். தனக்கு ரயில் சத்தம் பிடிக்காது என்று பதில் சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு அவன் அமைதியாக இருந்தான். நாச்சியப்பன் கட்டிலின் மேல் அமர்ந்துகொண்டு ஜன்னலைப் பார்த்தான். அறையின் கதவை மூடிவிட்டுக் கழிப்பறைக்குச் சென்றான். நாச்சியப்பனுக்கு ஓடும் ரயிலினுள்ளிருக்கும் கழிப்பறையில் மூத்திரமிருப்பதுபோலவே இருந்தது. ரயிலின் சத்தம், பெட்டிகளின் ஆட்டம் முதற்கொண்டு அனைத்தையும் அவன் உணர்ந்தான். பழுப்பும் வெளுப்பும் கூடிய ரயில் பெட்டிகளைப் போல இந்த லாட்ஜ் அறைகளும் இருப்பது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. தூரத்தில் ரயில் கூவியபடி நகரத்தினுள் நுழையும் சத்தம் லாட்ஜ் முழுவதும் கேட்டது. நாச்சியப்பன் காதுகளைப் பொத்திக்கொண்டான். அதையும் மீறிக் காதுக்குள் ரயில் ஓடும் சத்தம் கேட்டது.
ஒருமுறை நாச்சியப்பன் ரயிலில் பயணம் செய்தபோது, பெட்டியில் மொத்தமே ஐந்து நபர்கள்தாம் இருந்தார்கள். சௌகரியமாகக் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டான். அடுத்த தடுப்பிலிருந்து ஒரு பெண்ணின் சன்னமான அழுகைக் குரலைத் தொடர்ந்து அவளைச் சமாதானம் செய்யும் ஆணின் குரலும் தொடர்ந்து கைப்பேசியின் அழைப்பும் அதை அவன் துண்டித்துவிடுவதுமான சத்தம் கேட்டபடியிருந்தது. நாச்சியப்பன் எழுந்து தடுப்பைத் தாண்டி எட்டிப்பார்த்தான். விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. பெஞ்சில் ஒருவர்மேல் ஒருவர் படுத்துக்கிடந்ததை அவன் பார்த்தான். படுத்திருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தான். அவளை ஏற்கனவே எங்கோ பார்த்ததுபோல ஞாபகம். எங்கே எனத் தெரியவில்லை. அவள் தன் கால்களை விலக்கி அவனைத் தனக்குள்ளாக வாங்கிக்கொண்டாள். நாச்சியப்பன் இதுவரை நீலப் படங்களில் மட்டுமே ஆண் பெண் உடலுறவுக் காட்சிகளைப் பார்த்திருக்கிறான். அவனுக்குச் சுய இன்பம் செய்யும் பழக்கமுண்டு. இதுவரை ஒரு பெண்ணின் அருகில்கூட நின்றுகொண்டதில்லை. அவன் அப்பெண்ணின் தொடைகளையும் அவளது புட்டத்தையும் பார்த்தான். ஜன்னலின் வழியாக வந்த வெளிச்சத்தில் மார்பகத்தைப் பார்த்தான். அவனால் இப்போதுவரை அப் பெண்ணையும் அவளது நிர்வாண உடம்பையும் மறக்கவே முடியவில்லை.
நாச்சியப்பன் கழிப்பறையைவிட்டு வெளியே வந்து தொலைக்காட்சியைப் போட்டுப் படம் பார்த்தான். வடிவேல் காமெடியைப் போட்டுக் கொஞ்ச நேரம் சிரிப்போம் என்று நாச்சியப்பன் சொன்னான். இருவரும் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டார்கள். பாக்கியமுத்துவிற்கு முதலில் எதைக் குறித்து அவனிடம் பேசுவது என்று தெரியவில்லை. எதைப் பேசலாம் என்று யோசித்தான். ‘நாச்சி உங்ககிட்டே ஒன்னு கேட்பேன். நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. கேட்கலாமா?’
‘கேளுங்க பாக்கியம். ஆபிஸிலே இருக்கிறதை வைச்சு நீங்க என்னைத் தப்பா நினைக்காதீங்க. வடிவேலைப் பாருங்க. மனுஷன் எப்படி அடி வாங்கிட்டுச் சிரிக்கவைக்கிறாருன்னு.’
‘ஏன் உங்களை மட்டும் திப்னேஷா எதுவும் சொல்லமாட்டேன்ங்கிறா? என்னைப் போட்டு இந்தப்பாடு படுத்துறா. நீங்களே பாருங்க. நான் வாங்குற சம்பளத்துக்கு இந்தப் பேச்சும் வேலையும் தேவையா நாச்சி?’
‘அவளை ஏன் மதிக்கிறீங்க. நானெல்லாம் கண்டுகிடவே மாட்டேன். ரொம்பத்தான் பேசுறா நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவ இரண்டு முலையையும் அறுத்துக் கையிலே தரணும். அப்பத்தான் அவளோட திமிரு அடங்கும்போல.’
பாக்கியமுத்து சிரித்துக்கொண்டான். ரூம் பாய் கொண்டுவந்த பீர் பாட்டில்களையும் சிகரெட், மிக்ஸர் பாக்கெட்டுகளையும் மேஜையில் பரப்பிவைத்து விட்டுச்சென்றான். அவன் சென்றதும் கதவை அடைத்துக்கொண்டார்கள். நாச்சியப்பன் சட்டையைக் கழற்றிவிட்டு மெத்தையில் கால்பரப்பிப் படுத்துக் கொண்டான். பாக்கியமுத்து, ‘வாங்க குடிக்கலாம். அதுக்குள்ள படுத்துட்டீங்க’ என்று அவனிடம் சொன்னான்.
‘ஏன் அவசரப்படுறீங்க. காசு போட்டு வாங்கியிருக்கோம். அவசரப்படாமல் குடிப்போம்.’
பாக்கியமுத்துவும் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு அவனைப் போலக் கால் நீட்டிப் படுத்துக்கொண்டான். முதலில் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட் தீர்ந்துபோனது. மற்றொன்றை இருவரும் பற்றவைத்துக்கொண்டார்கள்.
‘உனக்கு ஒன்னு தெரியுமா? திப்னேஷாவுக்குக் காது கேட்காது. காதுக்குள்ள சின்ன மிஷின் வைச்சிருப்பா. சத்தமாகப் பேசினாத்தான் அவளுக்குக் கேட்கும். மெல்லப் பேசினா அவளைக் கேலிசெய்யுறதா நினைப்பா. அவள் முன்னாடி யாரும் மெதுவாப் பேசிடக் கூடாது பார்த்துக்கோ.’
‘எனக்கு இது தெரியாதே. அவள் காதை நான் பார்க்கிறேன்.’
‘என் பிரண்டுகிட்டே ஒரு பாட்டில் மிலிட்டரி ரம் இருக்கு. இதே போல ரூம் போட்டுக் குடிக்கலாம். ஜாரியை ரெடி பண்ணினா நீ வருவியா? நல்ல அயிட்டம். பயப்பட வேண்டியதில்லை.’
பாக்கியமுத்து அவன் முகத்தைப் பார்த்தபடியிருந்தான். என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னொரு சிகரெட்டை எடுத்துக்கொண்டான்.
‘பீரைச் சாப்பிடுறதுக்கு முந்தியே ஒரு பாக்கெட் சிகரெட்டைத் தீர்த்துருவேபோல. சரி ஓபன் பண்ணு.’
நாச்சியப்பன் தொலைக்காட்சியில் சானலை மாற்றினான். ஒவ்வொன்றாக மாற்றிகொண்டிருந்தவன் ஆங்கிலப்படம் வரும் சானலை வைத்துவிட்டு ஒரு பாட்டிலை எடுத்துக் கைக்குட்டையால் சுற்றிக்கொண்டு பருக ஆரம்பித்தான். பாக்கியமுத்து ஒரே மூச்சில் முக்கால் பாட்டில் பீரைக் குடித்து முடித்ததைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி அவசரப்படுறே பாக்கியமுத்து? பயப்படுறியா? இல்லை எப்பவுமே இப்படித்தானா?’ என்று கேட்டான். பாக்கியமுத்துவுக்குச் சிரிப்பாக வந்தது. நாச்சியப்பன் திடீரெனத் தன்னிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேச ஆரம்பித்ததில் மேலும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் நாக்கு குழறுவதுபோலிருந்தது. மிக்ஸரை எடுத்து வாய் நிறைய அதக்கிக்கொண்டான். காரமான பண்டம் வாயில் அரைபட்டு வயிற்றுக்குள் சென்றதும் அவனுக்குப் போதை சற்றுக் கூடியது.
‘நான் திப்னேஷா மூஞ்சியிலே ஒன்னுக்கு அடிக்கணும் நாச்சி. அவளோட மூஞ்சியிலேயும் செவிட்டுக் காதிலேயேயும் அடிக்கணும். பீர் குடிச்சா நிறைய ஒன்னுக்கு வரும். இன்னொரு பீர் சொல்லுங்க நாச்சி.’
‘ஏங்கிட்டே ஏது காசு? நீதான் காசைக் கொடுக்கணும்’ என்ற நாச்சியப்பன் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டான். அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் ரகசியமாகப் பாக்கியத்தின் கண்களையும் பாக்கெட்டையும் கவனித்தான். பாக்கிய முத்துவிற்குச் சிறிதளவில் போதை. மிதக்கமாக இருந்தான். கட்டிலின் மேலேறி நடனமாடத் தொடங்கினான். நாச்சி அவனை இழுத்துக் கட்டிலில் படுக்கவைத்தான். கால்களை விரித்துப் படுத்துக்கொண்டவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து, ‘இந்தா, நாச்சி இன்னும் இரண்டு பீர் கொண்டுவரச் சொல்லு’ என்று கொடுத்தான். அவன் வைத்திருந்த பணத்தின் அளவு, வைத்திருந்த இடம் என நாச்சியப்பன் ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்த்துக்கொண்டு ரூம் பாயை அழைத்தான். அவனை பீர் வாங்கிவரச் சொன்னான். அவன் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றான். குடித்து முடித்த பாட்டில்களை அவர்கள் இருவரும் கட்டிலுக்குக் கீழே உருட்டிவிட்டார்கள். இரண்டு பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சத்தம் கேட்டது. நாச்சியப்பன் தொடர்ந்து தொலைக்காட்சிச் சேனல்களை மாற்றியபடி இருந்தான். அவனுக்கு எந்தச் சேனலைப் பார்க்க வேண்டுமென்ற குழப்பம் இருந்தது. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டவன் எழுந்து அறையின் மூடியிருந்த ஜன்னல் அருகே நின்று வேடிக்கை பார்த்தான். நகரத்தின் மேல் கவிழ்ந்திருந்த இருட்டும் விளக்குகளின் வெளிச்சமும் கட்டடங்களுக்கு மேல் படர்ந்திருந்தன. ஜனங்களின் நடமாட்டத்தையும் வாகனங்களின் நகர்தலையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். ரயில்வண்டியின் சத்தம் தொடர்ந்து கேட்டது. அவர்கள் இருவரும் காதுகளைப் பொத்தியபடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பாக்கியமுத்து கட்டிலைவிட்டு எழுந்துவந்து கழிப்பறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான். இருந்தபோதும் ரயில் நகரத்தை விட்டுத் தொலைவில் நகர்ந்து போகும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. தூரத்தில் கடைசிப் பெட்டியின் சிவப்பு விளக்கும் தண்டவாளத்தின் மேல் படர்ந்த சண்முகத்தின் ரத்தமும் கழிப்பறைக்குள்ளாக அவன் மனத்தில் புலப்பட்டுக்கொண்டிருந்தன. ரூம் பாய் கதவைத் தட்டிக்கொண்டு வந்தான். அவன் சத்தம் கேட்டுக் கழிப்பறையின் கதவைத் திறந்துகொண்டு பாக்கியமுத்து வந்தான். மற்றொரு பீர் பாட்டிலைக் குடித்துவிட்டுக் கட்டிலின் கீழே உருட்டிவிட்டான. நாச்சியப்பன், ‘ஏன் ஒரு மாதிரியாயிட்டே. வீட்டுக்குப் போகணுமின்னு நினைக்கிறயா?’ என்று கேட்டான்.
‘இல்லை, எனக்குச் சண்முகம் ஞாபகம் வந்துருச்சு. அவரை நீ பார்த்திருக்கியா நாச்சி? அவர் ஓடுற ரயில்லே விழுந்து தற்கொலை செய்துட்டாரு. எனக்கு ஒரு சிகரெட்டு குடு, நாச்சி’ என்றான் பாக்கியமுத்து. அவனுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்து விட்டு ‘எனக்கு ரயிலைப் பார்த்தா ஒரு பொம்பளையோட உடம்புதான் ஞாபகத்திற்கு வரும். ரயில் சத்தத்தைக் கேட்டாலே எனக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுரும்’ என்றான் நாச்சியப்பன். அவர்கள் ஜன்னலைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே ரயில் நிலையத்தில் ரயில்கள் புறப்பட்டுச் செல்வதும் வந்தடைவதுமாகச் சத்தமாக இருந்தது.