(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவர்கள் வாழ்ந்த நிலத்தின் பெரும்பகுதியைக் கடல் அணைத்திருந்தது! இந்து சமுத்திரத்திலிருந்து நிலத்தை நோக்கி நகரும் ஒடுங்கிய நீர்ப்பரப்பான பாக்கு நீரிணை அந்த நிலப்பகுதியின் ஓரங்களை எப்பவும் நனைத்தபடியே இருந்தது. அதன் ‘ஓ’வென்ற பேரிரைச்சலைக் கேட்டபடியே அப்பகுதியிலுள்ள அநேகம் பேர் விழித்துக்கொண்டார்கள். விரிந்து கிடக்கும் கடலின் ஓரத்தைத் தொட்டுக்கொண்டு செல்லும் நீண்ட வீதியில் எங்கு நின்று உரத்துக் கத்தினாலும் இந்தியா வின் தெற்குக் கரைக்கு அவ்வோசை போய்ச் சேர்ந்து விடும் என்கிற உற்சாகமான கற்பனையுடனும் ஒருவிதப் பாசத்துடனும் அக்கரை பற்றிய நெருக்கமானதொரு உணர்வைத் தமக்குள் எப்பவும் அவர்கள் நிறைத்து வைத்திருந்தார்கள்.
அந்த மண்ணின் புவியியல் அமைப்பு, பூர்வீகத்தில் ‘நாகதீபம்’ என அழைக்கப்பட்டு, இராவணேஸ்வரன் ஆட்சிக் காலத்தில் ‘இலங்காபுரி’ என அழைக்கபட்ட இலங்கை நாட்டின் வடமுனையில், ஒரு மனித உடலின் தலைப்பகுதியிலுள்ள மூளையை ஞாபகப்படுத்துவதாய் வரைபடங்களில் காட்சியளிக்கும். ஆதியில் நாகர் இனக் குடிகள் வாழ்ந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் நிறைந்திருக்கும் முக்கிய நிலப்பகுதி என ஆராய்ச்சியாளர் கள் கருதுகிற மணலும் கல்தரைகளும் கடல்வளமும் நிறைந்த பூமி அது.
சிங்கைநாடன் எனும் செகராசசேகர மன்னன் ஆட்சிக் காலத்தில் ‘சிங்கை நகர்’ எனப் பெயர் பெற்ற, வடஇலங்கை அரசாட்சியின் தலைநகராக விளங்கிய, ‘வல்லிபுரம்’ என்ற பகுதியையும், அதற்குச் சான்றாகப் பிரசித்தி பெற்ற ‘வல்லிபுர ஆழ்வார்’ ஆலயத்தையும், அதே வேளை, ஒல்லாந்தர் காலத்தில் முக்கிய வியாபாரமாக இருந்த பருத்தி உடை ஏற்றுமதி, இறக்குமதிகளைச் செய்யும் கடல்துறைமுகத்தையும் வெளிச்ச வீட்டையும் கொண்டிருக் கும் ‘பருத்தித்துறை’ என்ற விசாலமான ஊரையும், வாலசிங்க மகாராசனால் யாழ்பாடிக்குப் பரிசாக அளிக்கப்பட்ட மணற் பகுதியில், யாழ்பாடியுடன் வந்திருந்த தேவர்குலத்தவர்களுள் ஒருவனான வல்லித்தேவனுக்கு யாழ்பாடியால் வழங்கப் பட்ட, அதே வேளை தென்னிந்தியாவில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் ‘வல்லவர்கள்’ என அழைக்கப்பட்ட ஒரு ஜாதி யினர் வருகை தந்து, தாமே வெட்டி உருவாக்கிய துறைநிலப் பகுதியான ‘வல்வெட்டித்துறை’ என்ற ஊரையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சரித்திரப் புகழ்பெற்ற மண் அது!
இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாண சாம்ராஜ்யத்தின் முக்கிய நிலப்பகுதிகள் இவை என்று கூறப்படும் வரலாற்றுக் கதைகளை அவர்கள் வழிவழியே படித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் வளர்ந்தவர்கள்!
யாழ்ப்பாணத்தையும் இந்த நிலப்பகுதியையும் நீர்த்திடல் ஒன்று நீளமாய்ப் பிரித்திருப்பதால் கலாச்சாரம் பண்பாடு களில் கலப்புகள் ஏதுமின்றி, பூர்வீகக் குடிகளோடு மிகவும் தொடர்புபட்டிருக்கும் இந்நிலப்பகுதி ‘வடமராட்சி’ எனப் பெயர் பெற்றிருந்தது.
அதிகப் புத்திசாலித்தனமும் அதே வேளை, அதிக வெகுளித் தனமும் நிறைந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். தாம் பேசும் மொழி மீதான அதீதப் பற்றுதலும், தமிழர் பண்பாடு களிலுள்ள நெருங்கிய ஈடுபாடும், அங்கே பிரித்தெடுக்க முடியா வண்ணம் வேரூன்றிக் கிடந்தன! செந்தமிழ்ப்புலவர்களும் அறிவியலாளர்களும் வியாபாரிகளும் கப்பலோட்டிகளும் அந்நிலப்பரப்பிற்குரிய அடையாளங்களை எப்பவும் தம்மகத்தே பிரதிபலித்துக்கொண்டேயிருந்தார்கள்.
கிறிஸ்துவிற்கு 200 ஆண்டுகளிற்கு முற்பட்ட, ‘பெருங்கற் பண்பாடு’ (Megalithic Culture) பரவியிருந்த காலத்தின் பூர்வீக வரலாற்றுக் கதைகள் அங்குப் புழக்கத்தில் இருந்து கொண்டே யிருந்தன. ஆண்டாண்டுக் காலமாய் ஆண்டு வந்த தமிழினத் தின் தனித்துவம், அவர்களின் மொழி, அவர்களின் உயிர்ப்பு நிறைந்த வாழ்வு, அவர்களுடனான வளங்கள், அவர்களுக்கே யான உரிமைகள் யாவும் வெவ்வேறு வேற்றுநாட்டு மன்னர்களின் வருகைகளைத் தொடர்ந்து, மகிழ்வைத் தராத பல மாற்றங் களைப் படிப்படியாகச் சந்திக்கும் துரதிட்ட நிலைமையைக் கொண்டு வந்துகொண்டிருந்தது! இறுதியாகத் ‘துஷ்டகைமுனு’ என்னும் கெட்ட குணங்களையுடைய சிங்கள மன்னனால், போர் விதிகளிற்குப் புறம்பாகக் கொல்லப்பட்ட ‘எல்லாளன்’ என்னும் தமிழ் மன்னனின் மரணத்திலிருந்து இனங்களினதும் மனங்களினதும் கசப்பு நிலைகள் வேறொரு வடிவத்துடன் ஆரம்பிப்பதாய் அவர்கள் காலம் காலமாய் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
வரலாற்றில் கை வைக்கும் நேர்மைக்குப் புறம்பான வேற்றின அரசாட்சியின் மீதான அவநம்பிக்கை, அவ்வப்போது ஆட்சியினரால் நசித்து அழிக்கப்படும் மனித உரிமைகள், படிப்படியாகப் பாரம்பரியத்தின் வேர்களை அறுத்தெறிய விளையும் தந்திரம் மிக்கவர்கள் மேல் ஏற்படும் வெறுப்பு, இரண்டாந்தரப் பிரஜைகளாகவும் அந்நியர்களாகவும் ஆக்கப் படுவதற்கான திட்டமிடப்பட்ட செயல்திட்டங்களின் சூத்திர தாரிகள் மீதான கோபம், பாராமுகமாயிருக்கும் பச்சோந்தி களின் மேல் உண்டாகும் அருவருப்பு… இவை யாவும் ஒரு புதிய வரலாற்றிற்கான அத்திவாரங்களாகவும் அவற்றிற் கான வலிந்த திசைகாட்டிகளாகவும் மெல்லமெல்ல மாறின! அமைதியும் ஆசாரமும் அபூர்வச் சந்தோசங்களும் நிறைந்திருந்த அந்த மண்ணில், ஆற்றாமையெனும் நெருப்பின் அகோரம் பரவத்தொடங்கிற்று!
அன்றும் கடல் அப்படியே தான் அலைந்து கொண்டிருந் தது! படகுகள் அங்குமிங்குமாய்த் திரிந்து கொண்டிருந்தன. சந்தைகள் கூடியிருந்தன. பாடசாலைகள் கேள்விக்குறிகளைச் சுமந்து திரியும் மாணவர்களால் நிரம்பியிருந்தன! வாகனங் கள் வெப்பப்பெருமூச்சுகளைச் சேர்த்தள்ளியபடி ஓய்வின்றி ஓடிக்கொண்டேயிருந்தன! நகரப்பகுதிகள் அதே சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தன. ஆயினும் எல்லோரினதும் சிரிக்கும் உதடுகளிற்குப் பின்னால் நிறையவே விடயங்கள் பேசப்படா மல் காத்திருந்தன! எல்லோரினதும் கூர்மையான கண்களிற்குப் பின்னால் அச்சமும் குழப்பமும் கடல்போல் பெருகிக் கிடந்தன! எல்லோர் சிந்தனைகளிலும் புதிதுபுதிதாய் நிம்மதியற்றதும் மகிழ்வைத் தராததுமான கற்பனைகள் வந்து கொண்டே யிருந்தன!
அவர்கள் கடலைப் பார்த்தபடியே நடந்தார்கள். அவர் களுக்குப் பிடித்தமானவர்கள் அங்கிருந்து தான் வருவார்கள் அல்லது அங்குத் தான் போவார்கள் என்பது வழமையான எதிர்பார்ப்பாக உருப்பெற்றிருந்தது. பார்வைக்கெட்டிய தூரம் வரை கடலில் தெரியும் படகுகள் அவர்களுடையதாகவே இருக்கும் என்றும் எல்லோரும் எண்ணினார்கள்.
படகுகள் நிறையவே போயின! மீளவும் திரும்பின. சில திரும்பாமலே போயின! திரும்பாமல் போன படகுகள் பலருக்கும் தீராத் துயரை அளித்தன. சிலருக்கு வாழ்வில் எதிர்பாராத பெரிய மாற்றங்களை அது ஏற்படுத்தியது!
ஒரு நாள் திரும்பி வந்த படகில் அவன் வந்தான். கடலுணவும் அத்தியாவசிய உடற்பயிற்சிகளும் சேர்ந்து வளர்ந்த திடகாத்திரமான உடலுடன் கம்பீரமாக நடந்து வந்தான். அவனின் வரவு அவனைச் சார்ந்த வேறு சிலருக்கும் அவன் வருகை தந்திருந்த அந்த வீட்டிற்கும் மிகவும் புதுமை நிறைந்ததாகவும் உவகை தருவதாகவும் இருந்தது. சாதி மதப் பேதங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆசாரம் மிக்கவர்கள் என்ற தோரணையில் வாழும் சில பெரியவர்கள் அந்த வீட்டில் அனேகமான அதிகாரங்களோடு உலாவிக் கொண்டிருந்ததால் அவனின் வரவு அவர்கள் மத்தியில் பல விமர்சனங்களை அவ்வப்போது உருவாக்கிக்கொண்டேயிருந்தது.
வீட்டின் இளசுகள் அவனின் வரவால் ஒரு புத்துணர்ச்சியை யும் உற்சாகத்தையும் பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவனின் சாரக்கட்டு, சுருள் முடி, மிடுக்கான நடை, மென்மையானதும் உறுதியானதுமான பேச்சு, அவனின் உடலில் இருந்த இறுக்க மான தசைக்கட்டிகள் அதற்கும் மேலாக அவனின் இடுப்பில் சொருகியிருந்த மினுக்கமான ‘பிஸ்ரல்’ என யாவுமே அவர் களை ஈர்த்த வண்ணமே இருந்தன. அவனுக்கருகில் அதிக நேரங்களைச் செலவிட்டுக்கொண்டிருந்தவர்கள் அந்த வீட்டின் கடைக்குட்டிகள் எனச் சிலாகிக்கப்படும் சிறுவர்கள். அவர்கள் முன்பின் கண்டறியாத அவனை “மாமா” என்றே அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களின் மைத்துனர் அவனைக் “கணேசு” என்றும் “நண்பா…” என்றும் விளித்துக்கொண்டார்.
வீட்டில் ஆசாரம் கருதும் வயதான பெரியவர்கள் இல்லாத பொழுதுகளில் அவன் அநேகமாக வரப் பழகியிருந்தான்!
பகீரும் சுப்புவும் அவனின் அருகிலேயே எப்பவும் போய் நின்றுகொண்டிருந்தார்கள். அவன் எப்பொழுதும் இவர்களை அணைத்தும் தழுவியும் தன் அன்பைக் காட்டியபடி பல கதைகளை மெதுவாகச் சொல்லிக்கொண்டிருப்பான். அவனிடம் ஏராளம் கதைகள் இருப்பதாகவும் அவற்றை ஒன்று விடாமல் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற தவிப்புடனும் அவர்களிரு வரும் அவனது உதடுகளின் அசைவிற்காகக் காத்திருப்பார்கள். அவனின் உதடுகள் அசைகிற பொழுதெல்லாம் அவர்களை அதிர வைக்கும் விடயங்கள் மெதுவாக உதிர்ந்து கொண்டே யிருக்கும்! மிகப் புதிய இராமாயணக் கதையன்றைக் கேட்பதுபோல உணர்வுகள், உடல் முழுவதையும் ஆக்கிரமித்து, நரம்புகளை முறுக்கேற்றும்!
அக்கரை பற்றிய சேதிகளைக் கூறும்போதெல்லாம் அவனின் குரல் தாழ்ந்து, பரம ரகசியம் ஒன்றைப் பாதுகாப் புடன் அவிழ்த்து விடுவதுபோல வார்த்தைகள் சொரிகளாய் மெல்லமெல்ல வந்து விழும்!
பகீரின் மேலுதட்டில் அரும்பியிருக்கும் ‘வில்’ போன்ற மெல்லிய பூனை முடிகளிற்கு இடையால் பளபளவென்று வியர்வைத்துளிகள் மின்னத் தொடங்கும்! சுப்புவிற்கு இலேசான பயமும் ஆர்வமும் இருந்து கொண்டேயிருக்கும்.
கணேசுமாமா விடைபெறும்போது ‘எப்போ மீண்டும் வருவார்’ என்று ஆவலோடு கேட்டுக்கொண்டார்கள். அம்மா அவரை விரைவில் போகவிடாமல் தடுத்து வைத்து, மதிய உணவு பின் இரவுணவு எல்லாம் கொடுத்தால் மேலும் நன்றாயிருக்குமே என்று மனத்திற்குள் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.
நாடு முழுவதும் களேபரப்பட்டுக் கிடந்த ஒரு நாளில், வெயில் அடித்து ஓய்ந்ததொரு மாலை நேரத்தில் மீண்டும் ஒரு நாள் அவன் இவர்களின் வீட்டுக்கு வந்திருந்தான். அவனின் வரவு வீட்டிலுள்ள பெரியவர்களுக்குப் பதற்றத்தை யும் பயத்தையும் யோசனையையும் தந்துகொண்டேயிருந்தது. ஆனால் பகீரும் சுப்புவும் அவனைக் கண்டதும் உலகத்துச் சந்தோசங்களெல்லாம் தம்மைத் தேடி வந்ததுபோல அவனருகில் ஓடிச் சென்று அவனை வரவேற்றார்கள். அவனிடம் கேட்க வேண்டிய ஆயிரம் கேள்விகள் அவர்களிடம் காத்துக் கிடந்தன!
அவன் வழமைபோல அந்தப் பெரிய விறாந்தாவின் ஓரத்தில் மரத்தூணோடு சாய்ந்ததும் சாயாததுமாக அமர்ந்து கொண்டான். வீட்டு முற்றத்தில் கண்களைக் கவரும் வண்ணம் செவ்வரத்தம் பூக்கள் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கிக் கிடந்தன. மாதுளம் பிஞ்சுகள் குலைகுலையாகக் காற்றில் ஆடிக்கொண்டு அழகு காட்டின. விறாந்தாவோடு ஒட்டியபடியிருந்த வேம்பி லிருந்து பழங்கள் சிதறிக் கிடந்தன. அம்மா புன்னகை சிந்திய வாறே குந்தியிருந்து வேப்பம் பழங்களைக் கையால் ஒதுக்கி விட்டு, நிலத்தில் பரவிக்கிடந்த பூக்களை மட்டும் மண் சேராமல் அள்ளிக் கடகத்தில் சேர்த்துக்கொண்டிருந்தாள்.
சுபத்திரா உடுப்புகளைக் கயிற்றுக் கொடியில் காயப் போட்டவாறே பார்வையால் எல்லோரையும் தொட்டுக் கொண்டு திரிந்தாள். “அவள் எப்பவும் ஒரு பூதக்கண்ணாடி கொண்டு திரிவாள்” என்று ஒரு நாள் கணேசுமாமா சொன்ன போது பகீருக்கும் சுப்புவுக்கும் அது விளங்கவில்லை!
“பூதக்கண்ணாடியா..? அக்காவிட்டை அது இருக்கா..?” என்றவாறே இருவரும் ஒருவரையருவர் பார்த்துக்கொண் டார்கள். ஆனால் அவன் அதைச் சொன்னதிலிருந்து அவனைக் காணும் தோறும் ஒரு இலேசான வெட்கம் அவளைப் பற்றிக் கொண்டிருந்தது பற்றி அவனும் கவனித்திருப்பான் என்றே தோன்றியது. எதேச்சையாகத் திரும்பும் வேளைகளில் அங்கிருந்து வரும் மெல்லிய புன்னகையன்று எப்பவும் அவளைக் கடந்து மிதந்து போனது!
“கணேஷ் எப்ப வந்தது..?”
இடையிடையே நிமிர்ந்து பார்த்துக் குசலம் விசாரித்தாள் அம்மா.
“நேற்று…”
“பிறகு திரும்பிறது..?”
“நாளைக்குப் புறப்படவேணும் மாமி…”
அவன் தன் நண்பனின் உறவு முறையையே அம்மாவுடன் பேணிக்கொண்டிருந்தான். பகீரின் மைத்துனரது நண்பன் என்ற நினைவு எல்லோருக்கும் மறந்து போயிருக்கும் வேளை களில் அவன் “மாமி…” என விளிக்கையில் தான் திடுமென்று அது ஞாபகத்திற்கு வந்து போகும்.
“ராணியும் பிள்ளைகளும் சுகமாய் இருக்கினமோ..?”
“இருக்கினம் மாமி…”
அவன் சொல்லும்போதே ராணி அக்காவின் பென்னம் பெரிய வட்டமான குங்குமப் பொட்டுத் தான் முதலில் எல்லோருக்கும் ஞாபகத்தில் வந்தது. பகீருக்கும் சுப்புவுக்கும் ஒரே நேரத்தில் அது வந்திருக்க வேண்டும். ஒருவரையருவர் பார்த்துச் சிரித்தார்கள்.
சுபத்திரா அவித்த பனங்கிழங்கும் ஆவி பறக்கும் தேநீரும் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். அவன் “தாங்ஸ்” என்றவாறே தட்டோடு வாங்கிக் கொண்டான்.
வசதியாக அமர்ந்து கொண்டு தேநீரை அருந்தும் பொருட்டு அவன் தனது இடுப்பில் நெருக்கிக்கொண்டிருந்த பொருளை இழுத்துக் கீழே அருகில் வைத்தான். அதன் தோற்றமும் மினுக்கமும் பகீரின் உணர்வுகளை உலுக்கியது. உடனே நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு மெதுவாகவும் கவனமாகவும் பகீர் அதனைத் தூக்கினான். அவன் புன்னகை யோடு தேநீரை அருந்திக்கொண்டிருந்தான்.
பகீர் பெருமிதத்தோடும் தன்னை மீறி எழும் கிளர்ச்சி யோடும் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். அதன் கைப்பிடி பளபளப்பாகவும் பிறவுண் நிற மரத்தினாலானதாக வும் தோற்றம் அளித்தது. சுடுகலன் பகுதி மென்னிரும்பாலானது. முனைகளிலுள்ள துவாரங்களை விரல்களால் தொட்டுப் பார்த்தான். அவன் எதிர்பார்த்ததை விடக் கொஞ்சம் பாரமாகவும் இருந்தது.
“அது எம்.ஆர்.செவின்ரிதிரீ” என்றார் முகத்தைத் திருப்பாமலே மெல்லிய புன்னகையோடு.
“எத்தினை றவுண்ட்ஸ் இருக்கு..?” – பகீர் அவனின் முகத்தைப் பார்க்காமலே கையிலுள்ள பொருளை ஆராய்ந்து கொண்டு கேட்டான்.
“சிக்ஸ் றவுண்ட்ஸ்…” பகீர் மீண்டும் ஒரு தடவை அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“மேட் இன் பிரான்ஸ்…” என்றான் அவன்.
முற்றத்தில் வீட்டுக் கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன.
“நானிதை ‘ட்ரை’ பண்ணலாமா.”
“பண்ணு…” என்றான்.
கைப்பிடியில் அழுத்தமாக விரல்களைப் பதித்து வளையத் திற்குள் சுட்டுவிரலைச் செலுத்தி, றிக்கரை மெதுவாக அழுத்தத் தயாரானான் பகீர். முன்னாலிருந்த மாதுளை மரத்தின்கீழ் நின்று எதையோ மும்முரமாகக் கொத்திக்கொண்டிருந்த கறுப்புப்பேட்டுக் கோழியை நோக்கி முனை நேராக நின்றது. அவன் றிக்கரை தயங்காமல் அழுத்தினான். அது ஒரு சின்ன உதைப்புடன் மெல்லிய ஓசையைக் கக்கியது. கோழி தொடர்ந்து கொத்திக்கொண்டேயிருந்தது. பகீர் கணேசு மாமாவை ஏமாற்றத்துடன் பார்த்தான். பின்னர் ‘எம் ஆர் 73’யைக் கணேசு மாமாவிடமே கையளித்தான். அவன் பகீரின் முகத்தைப் பார்த்தபடியே தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். கோழி தள்ளாடிக்கொண்டு நடப்பதைச் சுபத்திரா பதைப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
கோழி தன் சிறகு களைக் கிளப்பியபடி கால்கள் இடற மெதுவாகச் சரிந்து சோர்ந்து படுத்தது. மெல்லிய முனகல் சேர்ந்த, சிறு துள்ள லோடு முழுமையாகத் தலையைக் கீழே மண்ணில் விழுத்திய போது அவள் இதயம் படபடத்துக்கொண்டது.
பகீர் விழிகள் நிறைந்த வியப்புடன் கணேசுமாமாவைப் பார்த்தான். அவனின் கண்களுக்குள் மெல்லிய உற்சாகமும் கலவரமும் கலந்து மின்னியது. அவன் மெதுவாக எழுந்தான். கோழி அசையாமல் அப்படியே முற்றத்தில் விழுந்து கிடந்தது.
மௌனம் கனமாய்ப் படர்ந்து கிடந்த அந்தப் பொழுதைக் கணேசுமாமா மெதுவாகக் கரைக்கத் தொடங்கினார்.
“படகை நெருங்கும் எந்த விலங்கையும் இதனால் அடக்கி விடலாம்.”
பகீர் ஒருவிதப் பரவசத்தோடு அவனைப் பார்த்தான். கணேசுமாமா திடீரென்று எழுந்தார். புறப்படத் தயாரானார்.
எல்லோரிடமும் சொல்லிவிட்டுப் புறப்படும் போது பகீர் அவரின் பின்னாலேயே வெளிவாசல் வரை போனான்.
“நான் உங்களோடு வரலாமா..?” என்றான் மெதுவாக.
“எங்கை?”
“அங்க தான் படகில…”
“எதுக்கு..?”
“நீங்கள் எதுக்குப் போறீங்களோ அதுக்கு.”
கணேசுமாமா வாசலைக் கடக்காமல் அப்படியே நின்று அவனை உற்றுப் பார்த்தான். ‘உண்மையாகச் சொல்கிறியா?’ என்பது போலிருந்தது அவரின் பார்வை.
“முதல்ல படி. பிறகு பார்ப்பம்…” என்றார்.
“இல்லை… நீங்கள் திரும்பி வராட்டில்..?” – பகீர் பார்வையை எடுக்காமலே கேட்டான்.
கணேசுமாமா ஒருவித அதிர்ச்சியோடு அவனைத் திரும்பிப் பார்த்தார்.
“நான் வராட்டில்… வீமண்ணாவைக் கேள். இப்ப கவனமாகப் படி” என்றுவிட்டுச் சுவரோடு நின்றிருந்த சுபத்திராவைப் பார்த்தார்.
“போயிட்டு வாறன்.”
சாரத்தின் ஒருபக்க நுனியைப் பற்றிப் பிடித்தவாறு படியால் இறங்கிச் சைக்கிளைத் தள்ளியபடி அவர் போய்க் கொண்டிருந்தார்.
பரபரப்பையும், தீவிரங்களையும் சுமந்தபடி நகரும் நாட்கள், வழமை போலவே எல்லா விதிகளையும் காவிச் சென்று கொண்டிருந்தன! யாருக்கும் எதுவும் முன்கூட்டியே தெரியாமல் இருந்தது! எல்லாம் திடுமென்றே நடக்கும் காரியங்களாயின! காரணங்கள் யாவும் பெரிதும் கேள்விக் குறிகளாகவே இருந்தன!
ஊரடங்குச் சட்டம் திடீரென்று வரும். திடீரென்று விலக்கப்படும். எல்லாவற்றிற்கும் ஒரு சங்கைப்போல, ஒரு அரசனின் தூதுவனைப்போல வானொலி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதில் ஒலிக்கும் அழகான தமிழ்ப்பாடல்கள் எல்லாம் மூச்சடங்கி நீண்ட காலமாகியிருந்தது! ஊர்களை அடக்குவதும் வெருட்டுவதும் பயமூட்டுவதுமான அறிவித்தல் கள் மட்டுமே வானொலியின் தமிழ்ச் சேவையினை ஆக்கிரமித் திருந்தது! வானொலிகள் அடிக்கடி முதலைகளைப்போலத் தோற்றங்காட்டின! கடைகளும் பாடசாலைகளும் அலுவலகங் களும் திறக்கப்படும் மறுநிமிடமே பூட்டப்பட வேண்டிய கட்டளைகளையும் வானொலி எந்த முன்யோசனைகளு மின்றிச் சுமந்து வந்து கொண்டிருந்தது!
வைத்தியசாலைகள் கவனிப்பாரற்ற சத்திரங்கள் போல ஆகிக் கொண்டிருந்தன! வைத்தியர்களை விட முதலுதவிப் பயிற்சியாளர்களின் பணிகள் பெரிதும் இடம்பிடிக்கத் தொடங்கியிருந்தன!
யாரோ வந்து பகீரிடம் சொன்னார்கள் ‘கடலோரத்தில் மூன்று இளைஞர்களின் பிணங்கள் வந்து கரையதுங்கிக் கிடக்கிறது’ என்று. அதில் ஒன்று ‘தும்பளை – முகுந்தனுடைய தாக இருக்கலாம்’ என்று நிலவன் சொன்னான். இன்னொன்று ‘கலட்டி – புவியினுடையதாக இருக்கலாம்’ என்று மேனன் சொன்னான். மற்றையது அடையாளம் தெரியவில்லை என்று பலரும் பேசினார்கள். பகீர் எதுவும் பேசாமல் தெருவாயிற் படியில் அமர்ந்திருந்தான். நிலவனும் மேனனும் சைக்கிள்களில் சாய்ந்தபடி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது பற்றி அவர்கள் பொருட்படுத்த வில்லை. ஒழுங்கைகள் வாகன இரைச்சல்கள் எதுவும் கேட்காத வரைக்கும் தத்தம் காரியங்களிற்காக ஆள்நடமாட்டத்துடன் இருப்பது வழமையாகிவிட்டிருந்தது.
“இன்பம் மாஸ்ரற்றை அம்மாவை நேற்றுக் கண்டனான் பாவமடா. என்னைக் கண்டதும் றோட்டில வைச்சுக் கட்டிப் பிடிச்சு ஒப்பாரி வைச்சா. தாங்க முடியாமல் போச்சுது…” நிலவன் மெதுவாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.
“அவரை ரயர் போட்டு, கொழுத்தி எரிச்சவங்களெல்லே…” மேனன் உதடுகளை அழுத்தியவாறே கூறினான். கூடவே சில கெட்ட வார்த்தைகளும் இணைந்து வந்து வெளியில் விழுந்தன.
“இன்பண்ணை, சின்னத்தம்பி ரீச்சற்றை புருஷன், தேவ ராசா, கனகண்ணையின்ரை தங்கச்சிக் குடும்பம்… பிறகு வத்தளைப்பக்கம் இவர்… எங்கட… அரவிந்தன் மாஸ்ரற்றை தமையன்… எண்டு எத்தினை பேர்? ஒருத்தரும் உயிரோட திரும்பி வரேல்லைத்தானே?”
நிலவனின் கண்களில் கோபமும் வார்த்தைகளில் வெறியும் குடியேறியிருந்தது!
“என்ன பகீர் பேசாமலிருக்கிறாய்..?” – மேனன் கேட்டான்.
“இல்லை… எங்கட அண்ணனும் 10 நாளைக்குப் பிறகு தானே தப்பி வந்து சேர்ந்தவர். தப்பினது ஒரு அதிசயம் தான்…” பகீரின் உதடுகள் மெதுவாகத் திறந்து பேசினாலும் சிந்தனை வேறொன்றில் மூழ்கிக் கிடப்பதாய்த் தோன்றியது.
சுப்பு தனியாகப் போய்க் கோயில் கிணற்றில் நல்ல தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். பெரிய பிளாஸ்ரிக் பரலை நிரப்பி மூச்சைப் பிடித்து, முக்கிமுக்கித் தூக்கிக்கொண்டு வந்தான். நிலவன் ஓடிப்போய்ச் சிறிது தூரம் கைகொடுத்துத் தூக்கி வந்து வாசலில் வைத்தான்.
சுபத்திரா, வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தபோது நிலவனும் மேனனும் போவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந் தார்கள். பெரிய வீதிப்பக்கம் வாகனச்சத்தம் கேட்பதாய்த் தோன்றியது.
“அவசரப்பட்டுப் போக வேண்டாம் பாத்துப் போகலாம், உள்ளை வாங்கோ” என்று பதறினாள் அவள். அவர்கள் சிரித்தவாறே “பரவாயில்லை… நாங்கள் இந்த ஒழுங்கையால பாய்ஞ்சிடுவம்…” என்று முணுமுணுத்தவாறே சைக்கிளை உருட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்கள்.
வாகனங்கள் சந்தியைக் கடந்து போகும் ஓசை கேட்டது. சுபத்திரா ஓடிச்சென்று ‘கேற்’ வாயிலில் நின்று எட்டிப் பார்த்தாள். அவர்கள் அதற்குள் காணாமல் போயிருந்தார்கள். பகீர் உள்ளே வந்தபோது வானொலியில் பிரதானச் செய்திகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.
‘கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் பயங்கரவாதி கள் எனச் சந்தேகிக்கப்படும் 4 தமிழ் இளைஞர்கள் பயங்கர வாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்’ என்ற செய்தியை மதியழகன் வாசித்துக்கொண்டிருந்தார்.
“ம்… இந்தக் கோதாரி விழுவாங்கள்… நல்லொரு தடைச்சட்டம் போட்டு வைத்திருக்கிறாங்கள். நாலு பேரே? இன்னும் எத்தனை பேரை இந்தச் சட்டம் அந்தப் பட்டியலுக்கை சேர்க்கப் போகுது…” அம்மா ஆற்றாமையில் முணுமுணுத்த வாறே புலம்பியபடி அடுப்படியில் பிட்டு அவித்துக்கொண் டிருந்தாள். வானொலியில் செய்திகள் முடிவடைந்து அறிவித்தல் கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. மீண்டும் ஊரடங்கு பற்றிய அறிவித்தல்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
பகீரை அம்மா சாப்பிட அழைத்தபோது அவன் வெளியில் போய்விட்டிருந்தான். அம்மா மனம் பதைக்கப் பதைக்க அவனைத் திட்டிப் பேசிக்கொண்டிருந்தாள். அந்த நேரம் அவன் வெளியில் போனது அம்மாவைக் கோபமூட்டியிருந்தது என்று அவளின் கண்கள் சொல்லின.
எல்லோருக்கும் வரும் அநேகமான கோபங்கள் பயத்தினாலும் ஆற்றாமையினாலும் தான் என்று சுபத்திரா எண்ணிக்கொண்டாள். எல்லோரும் இரவு உணவு சாப்பிட்டு நீண்ட நேரமாகிய பின்னரும் அவன் வரவில்லை. அம்மா மட்டும் சாப்பிடாமல் பகீருக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். நிலவனினதும் மேனனினதும் அம்மாக்கள் இவர்களின் வீடு தேடி வந்து குழப்பத்துடன் விசாரித்தார்கள். அம்மாக்களின் கண்களில் கலக்கமும் நெஞ்சினுள் பதற்றமுமாய் குச்சு வீதிகளிற்குள் ஓடுபட்டுத் திரிந்தார்கள்.
சுப்பு அமைதியைத் தொலைத்துவிட்டபோதும், எப்படியோ படுக்கையிலிருந்து ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
பொழுது முழுமையாக இருண்டு போயிருந்தது! வானத் தில் சில நட்சத்திரங்கள் மட்டுமே மின்னிக்கொண்டிருந்தன! சந்திரனைக் காணவில்லையே என்ற மெல்லிய ஏமாற்றத் துடன் சுபத்திரா விறாந்தாவின் ஓரத்தில் நீண்ட நேரமாய் அமர்ந்திருந்தாள். அவளின் மனத்திற்குள் ஆயிரம் கேள்விகள் முளைத்திருந்தன! இனம்புரியாத துயரமும் நம்பிக்கை தரும் புதிய கனவுகளுமாய் மனம் அலைக்கழிந்து கொண்டிருந்தது! அவள் கையில் பகீர் மேசையில் விட்டுப்போயிருந்த கடிதம் இருந்தது. அதில் “யாரும் கவலைப்படாதீர்கள். அம்மாவை அழவேண்டாம் என்று சொல்லுங்கள். நான் ஒரு நல்ல சூழலில் உங்களிடம் வருவேன்” என்று எழுதியிருந்த வரிகளை மட்டும் திரும்பத் திரும்ப அவள் வாசித்துக்கொண்டிருந்தாள்!
மறுநாள், ஊரடங்குச் சட்டம் விலக்கப்பட்ட ஒரு விடியல் உதயமாகியிருந்தது! சனங்கள் அவசரமாகச் சந்தைக்குச் செல்வதும் கோயிலுக்குச் செல்வதும் என்று பரபரப்பாகிக் கொண்டிருந்தார்கள்! சிலர் கடற்கரைப்பக்கம் புதிய சேதிகள் அறியப் புறப்பட்டுப் போனார்கள். மாலை 6 மணிக்குள் எல்லாக் காரியங்களையும் முடித்துவிட வேண்டிய அவசரங் களோடு ஊர், தலைகால் புரியாமல் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது!
மாலை 6 மணியானதும், மனிதர்களோடு சேர்ந்து, ஊரின் முழுச் சேதிகளும் வீடுகளிற்குள் வந்து அடங்கிக்கொண்டன! உற்சாகங்களைத் துறந்து, துயரங்களைச் சுமப்பதற்கு வழமை போல ஊர் தயாராகிக்கொண்டிருந்தது! ‘பேரமைதி’… ஒரு மயானத்தை வெல்வதாகக் கங்கணம் கட்டிக்கொண்டு ஊரை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது!
கடற்கரையில் ஒதுங்கியிருந்த இன்னுமொரு உடலம் கணேசு மாமாவினுடையது என்பதற்காகவும் சேர்த்து, பகீர் இல்லாத அந்த வீடு பேச்சிழந்து முழுவதுமாய் உறைந்து போய்க் கிடந்தது!
வீதியில் வாகன இரைச்சல்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன!
– நிலவுக்குத் தெரியும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2011, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.