(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தி மயங்குகின்ற வேளை…….
நவீன சிங்கப்பூரின் வரலாற்று நாயகர், சர்சுடம் போர்ட் ரெபிள்சு சிங்கைத் தீவுக்கு, “இந்தியானா” எனப் பெயரிட கலத்தில், பினாங்கிலிருந்து வந்த சமயத்தில்- நாராயண பிள்ளை என்பாரும் அவருடனே வந்து சேர்ந்தார்.
வீடு கட்டித்தரும் குத்தகையை முதன் முதலில் பெற்றவர் நாராயணபிள்ளை என்பதை, செங்கல்சூளை ஒன்றை அவர் உருவாக்கியதன் வாயிலாக அறிய முடிகிறது.
செங்கல்சூளை நிர்மாணிக்கப்பெற்ற இடம் – நூற்று ஐம்பது ஆண்டுகட்குப் பிறகு – இன்று, வானளாவிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் தலைமை அலுவலகத்தையும், மற்றும் பிற அபிவிருத்தித் துறைகளின் அலுவலகங்களை யும் தன்னகத்தே கொண்ட கட்டிடமாக எழுந்து நிற்கும் “ஏர்சுகின் குன்றமாகும். மெக்சுவல் சாலையைப் பிரதான வாயிலாகக் கொண்டு விளங்கும் அந்தக் கட்டிடத்தின் பக்கத்தில்…
சிங்கப்பூரின் ஒரேஒருதமிழ் உயர்நிலைப்பள்ளி- “சீறாப் புராணம்” யாத்தளித்த உமறுப் புலவரின் பெயர்கொண்டு இலங்குகிறது. அதனை ஒட்டி இருப்பது மெக்சுவல் சந்தை.
சந்தை ஓரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்குச் சற்று தள்ளி, மின்விளக்குச் கம்பத்தில் சாய்ந்து கொண்டு சாலைக்கு எதிர்புறமுள்ள பெக்சியா சாலையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்-அவன்.
ஏறக்குறைய ஒன்றேகால் மீட்டர் உயரமிருப்பான் ஒற்றை நாடி உருவம். சிக்குப்பழத் தோலின் நிறம் சிறிய கண்கள். கூர்க்கா கட்டாரியின் வடிவிலான புருவங்கள். இறக்கி விடப்பெற்ற அடர்த்தியான கிருதா. கீழுதட்டின் கீழ்க் குறுந்தாடி. சதையோடு ஒட்டிய தொங்கு மீசை. தோள்பட்டை வரையில் வளர்ந்து நீண்ட தலைமயிர். உடலோடு ஒட்டிய ஒட்டுப்போட்டச் சட்டை வலதுகை மணிக்கட்டில் வெள்ளிக்காப்பு, யானைக்கால் கால்சட்டை, பண்டைக் காலத்தில் ஆங்கிலேய நாரிமணிகள் அணிந்து வலம் வந்த “தூக்குச் சப்பாத்து’! போன்ற உயர் குதிகால் காலணி. இவற்றின் சொந்தக்காரன்தான் மின்கம்பத்துக்கு முட்டுகொடுத்து நிற்கும்-அவன்.
மெதுநடை போட்டு, சாலையோர நடைபாதையைக். கடந்து மீண்டும் பெக்சியா சாலையை ஆவலுடன் பார்த்தான்….
தெரு விளக்குகள் கண்சிமிட்டி ஒளி உமிழ்ந்தன. வேலை முடிந்து இல்லம் நோக்கிச் செல்லும் அத்துக்கூலித் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் சிறிய வாகனம் ஒன்று அவன் அருகில் வந்து நிற்கிறது. முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலையை வெளியே நீட்டி அவனைப் பார்த்து…
”ஏம்பா இன்னிக்கு வேலைக்கு வர’லெ..?” கனிவோடு கேட்டார்.
அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தடுமாற்றத்துடன்…
”வந்து, உடம்புக்கு சரியில்லை. அதான்…”
“நாளைக்கு வேலைக்கு வந்துடு. ஞாயிற்றுக்கிழமை, ‘டபுல்’ சம்பளம் கிடைக்கும்.”
வருத்தி வரவழைத்த முறுவலுடன், “ஆகட்டுங்க…” என்றான்.
“செலவுக்கு காசு ஏதாச்சும் வேணுமா?” வாயெல்லாம் பல்லாகக் கேட்டார் அந்த குத்தகை முதலாளி.
“பரவாயில்லிங்க..” என்று கூறிக்கொண்டே சாலையின் எதிர் மருங்கைப் பார்க்கிறான் அவன்.
”அப்ப சரி! நாளைக்கு வந்துடு”
அவன் தலையசைக்கவே, “கண்ணாயிரம் லேபர் சப்ளை” எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பெற்ற அந்த வாகனம் புறப்படுகிறது. முன் இருக்கையில் அமர்ந்திருந் தவர்தான் கண்ணாயிரம்.
கப்பல் கட்டுதல், பழுது பார்த்தல், சாலை அமைத்தல், வீடுகட்டுதல், எரிஎண்ணெப் சுத்திகரிப்பு ஆலை அமைத்தல், மேம்பாலம் கட்டுதல் போன்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை விநியோகம் செய்வது தான், ”கண்ணாயிரம் லேபர் சப்ளை” குழுமத்தின் பணி. மொத்தத்தில் ஆள்பலம் அடித்தளம்.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவன் இந்தக் குழுமத்தில் வேலைக்குச் சேர்ந்தான் – அத்துக்கூலியாக.
அந்தக் காலத்து, ‘சஞ்சி’ தொழிலாளர்களைவிட இதில் கணிசமான சுதந்திரம் உண்டு. வேலைக்குச் சென்றால் பணம், முடங்கிப் படுத்துக்கொண்டால் தட்டிக் கேட்கவோ, சட்டத்தை நீட்டவோ ஆளில்லை. நயந்து பேசுவார் முதலாளி. ஏனெனில், ஒரு ஆள் தன்னிடம் இருந்தால், அந்த மனித இயந்திரத்தின் உழைப்பில் கிடைக்கும் மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகை முதலாளிக்குச் சேருகிறது. அப்பேர்ப்பட்ட விசுவாசமிக்க ‘பொன் முட்டை’ வாத்து’ களை அதட்டிப்பேசி இழந்திட மனம் வருமா முதலாளிக்கு!
அரசு அலுவலகம் ஒன்றில், ‘தம்பி’ வேலை செய்து கொண்டிருந்தவன் தான் அவன். மூன்று வாரங்களுக்கு முன் அந்த வேலையை இழந்தான். திருடியோ, மோசடி செய்தோ, கையூட்டு வாங்கியோ அவன் தன் வேலையை இழந்தானில்லை. ஒரு சின்னச் சிக்கல். தலை மயிரில் தான். நீண்ட முடியா-நீடித்த வேலையா? என்ற விவகாரம் தலை தூக்கிய போது..
“வேலையை இழந்தாலும் கவலையில்லை; தலைமயிரை இழக்கத் தயாராயில்லை!'” என்ற பிடிவாதம் ‘தம்பி’ வேலைக்கு மங்களம் பாடி ற்று. பெக்சியா சாலையையே நோக்கிக் கொண்டிருந்த அவன் முகத்தில் திடீர் மாற்றம். உதடுகள் விரிந்து மலர்ந்தன. கனத்த உடலைச் சுமந்து கொண்டு நடக்க முடியாமல் அசைந்து வந்து கொண்டிருந்தான் ஒரு குண்டு மனிதன். சாலையைக் கடந்து குண்டு மனிதனை நோக்கி விரைந்தான் அவன்.
‘அலோ!” குண்டு அவனைப் பார்த்து கையசைத்தான்.
”ஆய் !” அவன் கூவிக்கொண்டே குண்டுவை அடுத்தான்.
குண்டுவும் அவனும் நேருக்கு நேர்.
“எவ்வளவு நேரமா காத்திருக்கேன் தெரியுமா?” அவன் அலுத்துக் கொண்டான்.
“சாரி, பிரதர். தகவல் வந்துசேரக் கொஞ்சம் லேட். ஆல் ரைட், புறப்படு!”
அவன் அவசரத்துக்குக் குண்டுவால் ஈடுகொடுக்க முடியவில்லை. முணுமுணுத்துக் கொண்டே குண்டுவுக்குப் பின்னால் ஆமையானான்.
இரண்டு சந்துகளைக் கடந்து, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய மூன்றடுக்கு வீட்டின் பின்புற வாயிலை அடைந்தனர். கதவு திறந்திருந்தது. படிக்கட்டு வழியாக மேல்மாடியை அடைவதற்குள் குண்டுவுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது: அவன் பின்தொடர்ந்தே வந்தான்.
சுவரோரம் கிடந்த பிரம்பு நாற்காலியில் ‘பொத், தென்று குண்டு சாய, அந்த அறையை அவன் கண்ணோட்ட மிட்டான். ஒரு சிறிய மேசை. அதன்மேல் ‘தக்கை’ கொண்டு மூடப்பட்டிருந்த கருப்புநிறப் புட்டி. அதனருகில். இரண்டு பளிங்குக் கோப்பைகள்.
மூக்கை உறிஞ்சிக்மொண்டான் அவன். அறையில் பரவிக்கொண்டிருந்த நெடியின் கமுக்கம் அவனுக்கு விளங்கி விட்டது. தலையைத் திருப்பி, அறையின் வலது. கோடியைக் கவனித்தான்.
‘கஞ்சா’யிலை தணிக்கப்பெற்று நெருப்பு வைக்கப் பெற்ற ‘செனை’ச் சுருட்டிலிருந்து கிளப்பிய புகையும், அதில் இழைந்து வந்த நெடியும் அவனை அப்பக்கம் நடை போடச் செய்தது.
புன்னகையை ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து முகத்தில் அப்பிக்கொண்ட தோற்றத்தில், கழுத்து நரம்புகள் புடைத்திட, வயதுகாலம் ஒன்று, கைவிரல்களுக்கு இடையே இலைச்சுருட்டை இடுக்கிக்கொண்டு மங்கலான வெளிச்சத்தில், தரையில் அமர்ந்திருந்தது.
வயதுகாலத்தை அவன் பார்த்தான். மங்கலான வெளிச்சம் பழக்கமாகி விட்டிருந்ததால், வயதுகாலம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டே, சுருட்டை நீட்டியது.
“பிரதமர்! ஒரு ‘தம்’ போட்டுக்கியேன்…!”
மீனுக்காகக் காத்துக்கிடந்த கொக்கானான் அவன் ‘லபக்’ கென்று சுருட்டைப் பிடுங்கி, கைவிரல் இடுக்கில் செருகிக் கொண்டு, உள்மூச்சின் எல்லையை எட்டிப்பிடிக் கும் தோரணையில் ஒரே முறைதான் உறிஞ்சினான். இலைச் சுருட்டு முக்கால் பாகம் சாம்பலாகிவிட்டது.
மீதச்சுருட்டை வயதுகாலத்திடம் கொடுத்துவிட்டு, கூரையை அண்ணாந்து பார்த்தபடியே வாயைப் பிளந்தான்.
உள்ளுக்கு உறிஞ்சிய புகையில் கால் வாசிகூட வெளியே வரவில்லை. மேசை மீதிருந்தக் கருப்புப் புட்டியின் ‘தக்கையை அகற்றி, கோப்பையில் கவிழ்த்தான். வரக் காப்பி’ கோப்பையை நிரப்பிற்று. சப்புக்கொட்டிக் கொண்டே கோப்பையைக் காலி செய்தான் அவன்.
“ஆய், பிரதமர்! சரக்கு பிரமாதம். வண்டர்புல்! !” அவன் குரலில் ஒரு மிடுக்கு. வயதுகாலத்தின் முகத்தில் அதே புன்னகை.
குண்டு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு எழுந்தான்.
“பிரதர், செத்த பொறு! சரக்கோட வர்றேன்.” என்று கூறிவிட்டு பக்கத்து அறையை நோக்கி அசைந்தான் குண்டு.
அவன் வயதுகாலம் பக்கம் திரும்பினான். தகரக் குவளை ஒன்றை அணையாகத் தலைக்குக்கொடுத்து, இன்பக் கனவுலகின் மெல்லிசைப் பண்ணில் மூழ்கிப் போய்விட்டி ருந்த அந்த இளமை முறுக்கேற்றிய உடலம், கஞ்சா மயக்கத்திலிருந்து மீண்டெழ எத்தனை நாழிகை ஆகுமோ? பனித்தென்றல் புன்னகை மட்டும் முகத்தைவிட்டு அகலவேயில்லை.
பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்ட குண்டு, “அது இருக்குது! என்ன சொல்றே…?” என்று அவனிம் கேட்டான்.
“எதைச் சொல்றே, பிரதர்?” விளங்காமல் விழித்தான் அவன்.
“லிக்குவிட் எரோபின்” அக்கம் பக்கம் பார்த்து மெல்லிய குரலில் சொன்னான் குண்டு.
”எரோயின்!” அவன் கண்கள் அகல விரிந்தன. “நான் ரெடி!” பணம் கைமாறுகிறது. மீண்டும் பக்கத்து அறையினுள் நுழைந்தான் குண்டு.
வயதுகாலம் புன்னகை மிளிரும் முகத்துடன் தேவதேவிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கிறது போலும்…
நேரம் நகர்ந்தது.
ஒரு சிறிய கண்ணாடிச் சிமிழைப் பயபக்தியுடன் குண்டு விடமிருந்து பெற்றுக் கொண்டு புறப்படுகிறான் அவன்.
வரும் வழியிலேயே ‘கட்டிச் சீனி’ப் பொட்டலம் ஒன்றை வாங்கிக் கொண்டு இல்லம் விரைகிறான் அவன்.
சுதவைத் தட்டுகிறான்…
நெடிதுயர்ந்த உருவம் – அவன் தந்தை – கதவைத் திறக்கிறார். உள்ளே…
அவன் அன்னையும் இரண்டு தங்கைகளும் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். சுவர்க் கெடிகாரத்தை அவன் கண்கள் நோட்டமிட்டன. இரவு மணி பத்தரை.
”உனக்காக எவ்வளவு நேரமாக்காத்துகிட்டிருக்கிறது.. “வைகுந்த ஏகாதசி’யாகையால் ஒரே கட்டணத்தில் இரண்டு, திரைப்படங்களைக் காண அவசரத்தில் அலுத்துக்கொண்டாள் அன்னை.
“கொஞ்சம் வெள்ளனையா வரப்படாதா?” ஒத்து ஊதினார் தந்தை. தள்ளாடிய நிலையில் எட்டு மணியளவில் அவர் குடலுக்குள் தஞ்சமடைந்த ‘மான்’சின்ன சீனச் சாராயம் புலியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது போலும். அவன் பேசாது இருந்தான்.
”குசினியில சாப்பாடு இருக்கு. சாப்பிட்டுட்டு தூங்கு. நாங்க போயிட்டு வர்றோம்”. நள்ளிரவு பன்னிரண்டு மணி திரைக்காட்சிக்குப் பத்தரை மணிக்கே புறப்பட்டுவிட்ட இல்லத் தலைவியின் முடிவுரையுடன் பயணம் துவங்கியது.
அவன் கதவைச் சாத்திவிட்டுப் பையிலிருந்த ‘எரோயின்’ சிமிழையும் கட்டிச் சீனியையும் எடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு அடுக்களையை நோக்கிச் சென்றான்.
குளித்தான். இரவு ஆடைகளை அணிந்து கொண்டு தலைவாரி மாவைப் பூசிக்கொண்டு, சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தான். ஏதோ ஒரு ஆங்கிலப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இசைத்தட்டுக் கருவியை முடுக்கினான். ‘கொங் ஃபூ’ இசைத்தட்டைப் பொருத்தி இயங்கவிட்டான். இசையைத் தான்மட்டும் செவிமடுக்கும் அளவில் அமைத்துச் கொண்டு, தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தான்.
”எரோயின்’ சிமிழ்!
கட்டிச்சீனிப் பொட்டலம்!!
அவன் மூளைமண்டலத்தில் என்றும் தோன்றியிராத கிளுகிளுப்பு. இதழ்க் கடையில் மென்னகை. இசைத்தட்டுக் கருவியிலிருந்து ஒலிக்கும் இசைக்கு ஏற்றவாறு. தன் கைகளையும். கால்களையும் உடலையும் அசைத்துக் கொண்டே தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்த பொருட்களை எடுத்து முத்தமிட்டான்.
பொட்டலத்தைக் கிழித்து கட்டிச்சீனி வில்லையை எடுத்தான். நாக்கில் வைத்துச் சுவைத்துச் சப்புக் கொட்டிக் கொண்டான். ‘எரோயின்’ சிமிழின் மூடியை அகற்றினான். அவனுக்கு ஒரே ஏகாந்தம்; குதூகலம்; அடைய முடியாதப் பொருளை அடைந்துவிட்டோம் என்ற இறுமாப்பு! சட்டத்தின் வலிய கரங்களையும், காவல் சுவர்களையும் தவிடு பொடியாக்கிவிட்டோம் என்ற புளங்காங்கிதம்… தனக்குத் தானே நகைத்துக் கொண்டான்.
இசைத் தென்றல் கூடத்தை வியாபித்துக் கொண்டிருந்தது…
சீனிவில்லையின் மேல் மிகவும் கவனமாக, ஒரு துளிகூட சிந்தாமல் சிதறாமல் விழும் வகையில் ‘எரோயின்’ சிமிழைக் கவிழ்த்தான். ஒன்று…இரண்டு … மூன்று துளிகள் கொட்டிக் கொண்டிருக்க, சீனிவில்லையை முழுமையாக நனைத்துக் கொண்டான். சிமிழில் கொஞ்சம் மீதமிருந்தது. அதை மேசை மேல் வைத்து, இடது கையால் மூடியை எடுத்து மூடினான்.
நாக்கால் உதடுகளை நனைத்துக் கொண்டு, நாக்கை முழுமையாக வெளியே நீட்டினான். இலாவகமாக நாக்கின் மேல் சீனிவில்லையை வைத்து உள்ளே இழுத்துக் கொண்டான். பொறுமையாகச் சப்ப ஆரம்பித்தான்.
இசைத்தட்டைத் திருப்பிப் போட்டு இயக்கினான். அவன் காதுகளில் அத்த இசை தேன்மாரி பொழிந்ததோ அல்லது ‘எரோயின்’ வேலை செய்ய ஆரம்பித்ததோ அவனுக்குத்தான் வெளிச்சம்!
உடலிலே நெளிவு. அவன் சப்பச்சப்ப, ‘எரோயின்’ தொண்டைக் குழியைக் கடந்து, அவனை எங்கோ தொலை தூரத்துக்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தது. ஒருவித வெதுவெதுப்பு. இசைத்தட்டு சுழல்வது அவன் கண்களுக்குப் புலப்பட்டதே தவிர, அதிலிருந்து எழுந்த ஒலி அவன் காது களுக்கு எட்டவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களும் கெடிகாரமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமை. வினாடிகள் நகர நகர அந்தக் கூடத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பேரண்டப் பெருவெளியில் மிதப்பதைப் போன்றதொரு உணர்வு அவனைத் தாக்கிற்று. கொஞ்ச நேரத்தில் அந்த உணர்வும் உண்மை நிகழ்ச்சியாகிவிட்டது அவன் மனவரங்கில்.
நிலப்பரப்பு அவனுக்கு நிலாப்பரப்பாகத் தோற்றம் தந்தது. அவன் அண்ட சாரதியானான்.
எழுந்தான். கால்கள் தரையில் பரவவில்லை என்பது அவன் நினைப்புப் போலும். ஏதேதோ எண்ணங்கள்: எத்தனையோ நினைப்புகள். மேசை மேலிருந்த ‘எரோயின்’ சிமிழை எடுக்க முயன்றான். முடியவில்லை. அது எங்கோ எட்டாத் தொலைவுக்கு அவனைக் கண்சிமிட்டி அழைத்தது. அடிகளைப் பெயர்க்க முயன்றான். நெடுநேரப் போராட்டத்துக்குப் பிறகு, ஒரு அடி முன்னேறினான். அளவு தெரியாமல் போதைப் பொருளை உட்கொண்டு விட்டான் போலும்… அதன் வேகம் அவனைப் பறக்க விட்டுக்கொண்டிருந்து.
உடலெல்லாம் வியர்வைப் பெருக்கெடுப்பு. மேல்சட்டை யைத் கழற்ற முயன்றான். பெருமுயற்சிக்குப் பிறகு கிழிபட்டுக் கழன்றது சட்டை. தட்டுத் தடுமாறிச் சென்று கதவீன் தாழ்ப்பாளைப் பற்றினான்.
அவனால் ஒரு நிலையில் நிற்க இயலவில்லை. ‘உல்சு, உஃசு’ என்று ஊதிக்கொண்டே கதவைத் திறக்க முயன்றான்.
நடக்கவில்லை. வலுவையெல்லாம் ஒருசேர தாழ்ப் பாளில் செலுத்திக் கதவை இழுத்தான். பற்களைக் கடித்துக் கொண்டு இழுத்தான். இறுதியில் திறந்த கதவோடு சேர்ந்து சுவரில் மோதிக்கொண்டு கீழே சாய்ந்தான். கண்களை இறுகமூடித் திறந்து தலையை வேகமாக உலுக்கினான். எச்சிலை விழுங்கிக் கொண்டே எழுந்து வெளியே வந்தான்.
பதினெட்டாவது மாடி அது. ‘சில்’ லென்று தென்றல் தவழ்ந்து வந்து அவனுக்குத் தாலாட்டுப் பாடிற்று. நடைப்பாதையின் சுவரைப் பிடித்துக் கொண்டு. வானத்தைப் பார்த்தான். வானக்கடலில் விண்மீன் வலையில் சிக்கித் தவிக்கும் நிலவுப் பெண்ணாள் அபயக்குரல் கொடுப்பது போன்றதொரு தோற்றம் அவன் மனத்திரையில் படியவே. கைகளை மேலுயர்த்தி எம்பினான். வட்டநிலா அவனுக்கு எட்டவில்லை. அவனால் பறந்து செல்ல முடியவில்லை.
திரும்பிப் பர்த்தான். கதவருகே கிடந்த முக்காலியின் மீது அவன் பார்வை விழுந்தது. தவழ்ந்து சென்று அதைப் பற்றும் முயற்சியில் முதலில் தோல்வி என்றபோதிலும், எப்படியோ இழுத்துக் கொண்டுவந்து சுவரருகேவைத்தான்.
பாடல் முடிந்து, ‘டொக்கு டொக்கு’ என்று முடிவுரை கூறிக்கொண்டிருக்கும் இசைத்தட்டுக் கருவியை அவன் பார்க்கவுமில்லை; அதன் ஒலி அவன் செவிகளில் விழவுமில்லை.
அடங்கிவிட்ட வானம்பாடியின் இனிய குரலோசை நள்ளிரவு கடந்துவிட்ட அந்த வேளையில் அவன் செவிப் பறைகளைத் தடவுகிறது. முக்காலியின்மீது ஏறிநின்று கைகளை வானோக்கித் தாக்குகிறான். நீச்சல் குளத்தில் பாய்வது போல் எம்பினான்.
அவ்வளவுதான்……!
பறந்து போய்க்கொண்டிருப்பது போன்ற உணர்வு அவனுக்கு!
என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அறிந்து கொள்ள முடியாத மோனநிலை. போதைப் பொருள் அரக்கன் பின்னும் மோகவலை!
அவன் பறந்தே போய்விட்டான் என்ற செய்தி விடியும் உலகிற்கு ..!
– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.