அவன் தந்த தீர்ப்பு…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 2,628 
 
 

லாக்அப்பிலிருந்து ஒரு சின்ன சத்தம் கூட கேட்கவில்லை..

சாதாரணமாய் அதில் சந்தேகத்தின்பேரில் அடைக்கப்படுவர்கள் யாராயிருந்தாலும்,

“ஸார்.. ஸார்.. நான் ஒண்ணுமே பண்ணல..சத்தியமா நிரபராதி சார்.. தயவுசெய்து விட்டிடுங்க..சார்…ப்ளீஸ்.. சார்… உங்க கால்ல விழறேன் சார்…”

என்று கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லி வெறுப்பேத்தி விடுவார்கள்…

ஆனால் இந்தப் பையனோ எதையோ கைகளால் எண்ணிக் கொண்டு..நடுநடுவில் சிரித்துக்கொண்டு.. இல்லையானால் மூலையில் உட்கார்ந்து கொண்டு..
குழந்தையைப் போல பாடிக் கொண்டிருக்கிறானே… !!!!

இவன் மேல் இத்தனை பெரிய பழியைத்தூக்கிப் போட யாருக்காவது மனசு வருமா…????

ஹெட் கான்ஸ்டபிள் சந்திரனுக்கு சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மேல் கோபம் கோபமாய் வந்தது..!!!

என்ன இந்த ஆள்.. பாவம்.. இந்த பையனைப் போய் பிடித்து வைத்துக் கொண்டு இத்தனை சித்திரவதை செய்ய எப்படி மனசு வந்தது…??

“டேய்..தம்பி..என்ன வேணும்…பசிக்குதா…. ஏதாச்சும் சாப்பிட வாங்கி வரட்டா….??

வந்ததிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலயே….!!”

அதற்கும் ஒரு சிரிப்புதான்…!!!!

கான்ஸ்டபிள் துரையைக் கூப்பிட்டு ஒரு இட்லி பார்சல் வாங்கி வரச் சொன்னார்..

பார்சலை வாங்க மறுத்து தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினான்.

“ஏம்பா.. இட்லி தான்…சாப்பிடு..
ஆங்.. உம் பேரு..?? என்னமோ சொன்னாங்களே… அபிஷேக்..அபிஷேக்தானே….??”

“ஆமாம்.. என்பது போல தலையாட்டினான்…

“ஏன் தம்பி..பேச வராதா…பாக்க ராஜா கணக்கா இருக்கியே…இந்தா..பிடி…”

அவன் மீண்டும் மறுக்கவே சந்திரன் பார்சலைப் பிரித்து இட்லியை சட்னியில் தோய்த்து ஒரு வாய் நீட்டினார்.. !!!

பேசாமல் வாங்கிக் கொண்டான்…

சாப்பிட்டு முடிக்கும் நேரம் ஸப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் உள்ளே நுழைந்தார்…

“என்ன…மகாராஜாவுக்கு பலமான உபசாரம் நடக்குதோ…?? ராஸ்கல்… ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி மொகத்த வச்சிக்கிட்டா நீ செஞ்ச அநியாயம் இல்லைன்னு ஆயிடுமா…?? நாலு தட்டு தட்டினா கக்கிட மாட்டான்….??? கெடந்து அலையுறானுங்க….!!

சரமாரியாக் கெட்ட வார்த்தைகள் வாயிலிருந்து அருவியாய் கொட்டியது….

“சார்..எனக்கேன்னவோ இவனால அந்த மாதிரி காரியமெல்லாம் செய்ய முடியும்னு தோணல சார்..பச்சப்பிள்ளையாட்டாம் இருக்கான்…!!

“ஆமா.. இன்னும் பால் குடி மறக்கல..அடப் போய்யா..இவன மாதிரி எத்தன கில்லாடிகள பார்த்திருப்பேன்..பாரு நானு என்ன ட்ரீட்மென்ட் தரப்போறேன்னுட்டு…!!!

சந்திரனுக்கு இது ஒன்றும் புதிதல்ல….

தான் பிடித்த ஸஸ்பெக்ட்டை குற்றவாளி என்று நிரூபிக்க எந்த எல்லைவரை இன்ஸ்பெக்டர் போவார் என்பது அந்த போலீஸ் ஸ்டேஷனில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்..

சந்திரனுக்கு வயிற்றைப் பிசைந்தது…..

“சார்….அபிஷேக்கோட அப்பா..அம்மா..வந்திருக்காங்க….”

“ம்ம்ம்.. என்ன…?? பையனப் பாக்கணுமா..??”

“சார்..இது ரொம்ப அநியாயம்.. எந்த ஆதாரமும் இல்லாம ஒரு அப்பாவிப் பையன எப்படி சார் லாக்கப்பில வைக்கலாம்..???”

“சம்பவம் நடந்த இடத்தில இருந்தவன் அபிஷேக் மட்டும்தானே..என்னவோ ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கறீங்களே…!!”

“சார்.. அவனுக்கு தன்னச்சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாது . அவனப்பத்தி உங்களுக்கு முழுசா தெரியாது….அவன விட்டிடுங்க ப்ளீஸ்…!!!”

“இதபாருங்க… கத கேக்க எனக்கு நேரமில்ல….வேணும்ன்னா பாத்துட்டு போங்க..!!”

“அபி…அபி…!! என்னடா கண்ணா…நீ எப்பிடிடா அங்க போன…??!”

அபியின் அம்மாவின் கண்கள் . முகம்.. எல்லாம் அழுதழுது வீங்கியிருந்தது…!!!

அபி அவர்களைப் பார்த்துவிட்டு மறுபடியும் மூலையில் போய் நின்று கொண்டான்….

“சார்.அவன் குழந்தை சார்.. ஒண்ணும் பண்ணிடாதீங்க..தாங்க மாட்டான்…!!”

“ஏய்…மீரா…நீ எதுக்கு அவரைப் போய் கெஞ்சிகிட்டு…! அவன்மேல ஒரு கீறல் விழட்டும்… வச்சுக்கறேன்….வா ..போலாம்.. திங்கட்கிழமை வக்கீலோட வரோம்…!!!”

“குழந்தையா இல்லையான்னு கோர்ட் தீர்மானம் பண்ணும்….. இப்போ பொத்திக்கிட்டு போங்க….!!!”

***

சந்திரன் பயந்தபடியே மறுநாள் நடந்தது..

“வணக்கம்… இன்ஸ்பெக்டர் சார்…!!!”

“வாம்மா…லஷ்மிபாய்… இதுதான் உம்பொண்ணா….???”

“ஆமா ஸார்.. எதுக்கு கூட்டியாரச் சொன்னீங்க… பச்சைப் புள்ள ஸார்…!!”

‘ பச்சப் பிள்ளை ‘ என்று அழைக்கப்பட்ட பவழத்துக்கு பதினாலு வயது இருக்கும்…. …..!!!

“எல்லாருமே பச்சப்புள்ளைங்கதான்…அதோ லாக்கப்பில இருக்கான் பாரு இன்னொரு பச்சப்பிள்ளை…!!!”

அபி கம்பியைப் பிடித்தபடி ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

“உம்பேரன்னம்மா…??”

“பவழம்…”

“லஷ்மி.இன்னைக்கு ஒரு மணிநேரம் பவளத்த இங்க விட்டுப்போட்டு போ…”

“சார்..என்ன சொல்றீங்க…அவ ஒரு தப்பும் செய்யிலியே…பொட்டப் பிள்ளைய.தனியா…
போலீஸ்ஸ்டேஷன்ல.என்னய்யா…??

நீங்க எம்புருசனுக்கு செஞ்ச உதவி மறக்காமத்தான் கூப்பிட்டதும் ஓடியாந்தேன்….”

“இதபாரும்மா…உம்பொண்ணுக்கு ஒரு ஆபத்தும் வராது ….!!!அதுக்கு நான் கேரண்டி…. லேடி கான்ஸ்டபிள் பவானியும் கூடதான் இருப்பாங்க..ஒரு மணிநேரம் கழிச்சு கூட்டிட்டு போங்க…!

“சார்… என்ன செய்யப் போறீங்க..?? DSP க்கு தெரிஞ்சா நம்ப எல்லோரையும் கூண்டோட கைலாசம் அனுப்பிடுவாரே சார்…!!!”

சந்திரனுக்கு பொறுக்கவில்லை….

“இந்தா.. ஃபோன்..DSP யக் கூப்பிட்டு சொல்லுய்யா..!!”

போயி கதவ திறய்யா… பவளம்..நீ உள்ள போயி அந்த பையனோட பேச்சுக்குடு…. சும்மா அரமணி நேரம்தான்…!! “

“சார்.. எதுக்கு இதெல்லாம்.. ஒண்ணும் புரியல…!!”

“வாயில விரல வச்சாக்கூட கடிக்கத் தெரியாதுன்னு சொல்றாங்களே…பக்கத்தில பொண்ணு..என்ன பண்றான்னு பாக்கலாம்…!!!”

ஆனாலும் இன்ஸ்பெக்டருக்கு இவ்வளவு கீழ்த்தரமாய் புத்தி போயிருக்கவேண்டாமென்று நினைத்துக் கொண்டான் சந்திரன்…

“நாளைக்கு கண்டிப்பா பையன ஜாமீன்ல எடுத்திருவாங்க….!!!
கோர்ட்டுக்கு போனா நிச்சியம் மெடிக்கல் சர்டிஃபிகேட்..
லொட்டு..லொசுக்குன்னு..வெளில கொண்டுவந்திடுவாங்க…

இன்னைக்கு ஒரு நாள்தான் எங்கையில பவர் இருக்கு……!!”

“இது சட்ட விரோதமாச்சே சார்…!!”

“நான் சமாளிக்கிறேன்…உனக்கென்னய்யா…?”

அபிஷேக் பவளத்தை ஏறடுத்தும் பார்க்கவில்லை.. அவளும் லாக்கப் கம்பியும் ஒண்ணுதான் என்பதுபோலிருந்தான்….

“பேச்சுக் குடு பவளம்….!!”

ம்ஹூம்…அபி மறுபடியும் மூலையில் போய் ஒண்டிக்கொண்டான்..

“சார்..திரும்பக்கூட மாட்ராரு…!! காது கேக்கிலியாட்டம் தோணுது..”

இவன் வித்தியாசமானவன்தான் போலிருக்கிறது.. முதன்முறையாக பாக்கியராஜுக்கு அவன்மேல் பரிதாபம் பிறந்தது…

“சரி..நீ வீட்டுக்குப் போம்மா பவளம்… பவானி..பிள்ளைய பத்திரமாய் வீட்ல கொண்டு விட்டுட்டு வா….!!”

***

திங்கட்கிழமை சொன்னபடியே வக்கீலுடன் வந்து அபியை ஜாமீனில் வெளியே எடுத்துச் சென்றார் அவனுடைய அப்பா…..

DSP காதுகளில் எப்படியோ செய்தி எட்டிவிட்டது…!!!

“நீயெல்லாம் ஒரு மனுஷனாய்யா…விட்டா ஜட்ஜாகி தீர்ப்பே சொல்லிடுவ போலியே.. போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்கே அவமானம்…!!!”

ஆறுமாத ஸஸ்பென்ஷன்.. டிரான்ஸ்ஃபர்…

சந்திரனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது…

“கடவுளே..இந்த அறியாப்பையனுக்கு தண்டனை கொடுத்து விடாதே….”‘

அபிஷேக் யார்…??? எதற்காக லாக்கப்பில்….???

***

போன வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணி அளவில்தான் அந்த பரிதாப சம்பவம் நடந்திருக்கிறது..

ஆஷா என்ற பதினாறு வயது பெண்..!!!

OMR ரோட்டில் உள்ள அவளது அபார்ட்மெண்டில் ஒரு மனித மிருகத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திதான் அது….

ஆஷா அந்த சமயம் தனியாக வீட்டில் இருந்ததாயும்.. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த அபிஷேக் எனும் பதினாறு வயது மதிக்கத்தக்க இளைஞன் சந்தேகத்தின்பேரில் கைதி செய்யப்பட்டதாயும் அச்சடித்த வாசகங்கள்…. தெருவெங்கும்….

ஆஷா.. அபிஷேக்….!!!!
யார் இந்த தலைப்புச் செய்தியின் கதாநாயகர்கள்….??

****

OMR ரோட்டில் காளான்களாய் முளைத்திருக்கும் , உயர் நடுத்தர மக்களின் தேவைகளைப் பார்த்து பார்த்து பூர்த்தி செய்து கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டு சொந்தக்காரர்கள்…

ஆஷாவின் அம்மா சூசனும்..அபிஷேக்கின் அம்மா மீராவும் பள்ளி நாட்களிலிருந்தே இணை பிரியா தோழிகள்…

பதினைந்து வருடப் பிரிவிற்குப் பிறகு தொடர்ந்த நட்பு…இருவரது கணவர்களும் ஒரே அலுவலகம்.

சொல்லி வைத்தாற்போல் இருவரும் ஒரே சமயத்தில் அம்மாவாகப் போவதாய் தெரிந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது……

அபிஷேக் பிறந்து ஒரு மாசத்தில் ஆஷா பிறந்தாள்..

இந்த மாதிரி ஒரு அனுபவம் வாய்த்தவர்களுக்குத்தான், அதனுடைய அருமை புரியும்..

மீரா ஆஷா வீட்டிலும்..சூஸன் அபிஷேக்குடனும்..மாறி மாறி.. இரட்டை குழந்தை பெற்றவர்கள் போல அத்தனை குதூகலம்…..

மூன்று மாதங்கள் போயிருக்கும்….

“ஆஷா..ஆஷா…!”

கூப்பிட்டதும் ஆஷா அழகாகத் தலையைத் திரும்பிப் பார்த்து ‘களுக்’ கென்று சிரித்தாள்…..

“சூஸி….அபியப்பாரேன்..அபி..அபின்னு கத்தினாலும் திரும்பரானா பார்…!!!”

“எல்லாம் திரும்புவான்..அவசரப் படாதே..பொண் குழந்தைங்க எல்லாமே சீக்கிரம் பண்ணுமாம்..எங்கம்மா சொல்லியிருக்காங்க…!!”

ஆனால் அது பொய்யாய் போனது..

ஆஷா எட்டடி பாயும்போது அபி இரண்டடி கூட எடுத்து வைக்கவில்லை..

ஆஷா..”ம்மா..ப்பா..”என்று அம்மாவைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுக்கும்போது அபி தொடப்போனாலே விலகி ஓடினான்..!!!!

எல்லா டாக்டர்களின் ரிப்போர்ட்டும் ஒரே புள்ளியில் குவிந்தது..

அபிஷேக் ‘ ஆட்டிசம்’ எனும் குறைபாடு உள்ள குழந்தையாகிப் போனான்..

சூஸன் மட்டும் இல்லையென்றால் மீரா நொறுங்கிப் போயிருப்பாள்….

ஆஷா மட்டும்தான் அபிஷேக் பக்கத்தில் போகமுடியும்..!!!

“அண்ணா..அண்ணா..என்று வாய் நிறையக் கூப்பிடுவாள்..

ஆஷா பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள்.. அபியும் தான்.. சிறப்புக் குழந்தைகளின் பள்ளிக்கு…

பள்ளி முடிந்ததும் பாதிநேரம் ஆஷா அபியுடன்தான்..மீராவுடன் ஆஷா வீட்டிற்கு போவது ஒன்றுதான் அபிக்கு ‘ outing’….!!!

ஒருநாளாவது தன்னை ‘ அம்மா ‘ என்று கூப்பிடமாட்டானா என்று மீரா ஏங்கினாள்…..

பதினாறு வருடங்கள்..சூசனுக்கு நிமிடமாகவும்….. மீராவுக்கு யுகங்களாகவும்.. கழிந்தது..

***

ஒரு வெள்ளிக்கிழமை..அன்று மீரா வீட்டில் ஆஷாவுக்குப் பிடித்த பருப்பு போளி….

“அபி..அப்பறமா போயி ஆஷாவுக்கு குடுத்துட்டு வருவோமா…???”

அசதியில் கொஞ்சம் தூங்கி விட்டாள் மீரா.. அபிக்கு இருப்பு கொள்ளுமா…??

குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவன் எடுத்து வைத்திருந்த பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு ஆஷாவீட்டை நோக்கி நடந்தான்.. ஆஷா வீட்டுக்குத் தனியாக செல்வது இதுவே முதல் முறை…!!

கதவு தொட்டதுமே திறந்து கொண்டது..!!

“ஆ..ஆ..”என்றபடியே உள்ளே நுழைந்தவனுக்கு ஆஷா ஏன் பதில் சொல்லாமல் படுத்திருக்கிறாள் என்பது புரியவேயில்லை…

அலங்கோலமாய்…அங்கங்கே இரத்தத் திட்டுடன் ஆஷா படுத்திருப்பதைக்காண என்னவோ வித்தியாசமாய் தெரிந்தது..

போளியை நீட்டிக் கொண்டு

“பா..பா..”என்று ஒலி எழுப்பினான் ‌..

“ம்ஹூம்..அசையக்கூட இல்லை…!!!”ஆனால் அவனையே முழித்து பார்த்தபடி இருந்தாள்…..பாத்திரத்தை அருகிலிருந்த ஸ்டூலில் வைத்தவன் ஆஷாவைப் பிடித்து உலுக்கினான்…

ஏதோ விபரீதம் என்று புரிந்து விட்டது..!!!!!

இம்மாதிரி நேரங்களில் அபி பெரிதாக கத்த ஆரம்பித்து விடுவான்..!!!!

பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஆஜர்..!!!

வேலைக்கு போயிருந்த ஆஷாவின் அப்பா … அம்மாவுக்கு தகவல் போனது… போலீசுக்கும் தான்..!!!!

அபியின் அம்மா அலறி அடித்துக் கொண்டு வந்து விட்டாள்..

போலீஸ் சூசனின் வேண்டுகோளையோ…. மீராவின் கெஞ்சலையோ… கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அபியைக் கையோடு கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள்…

அபி லாக்கப்பில்…ஆஷா மருத்துவமனையில்…!!!

நேற்றுவரை உயிர் பிரியா நண்பர்களாயிருந்தவர்கள் ஒரே நாளில் விரோதிகளாய் முத்திரை குத்தப்பட்டு விட்ட .. விதியின் விளையாட்டு…..!!!!

***
ஆஷாவுக்கு இன்றுதான் லேசாக நினைவு திரும்பியிருந்தது..

கழுகு மாதிரி வட்டம் போட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் உடனே அபிஷேக்கை ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி ஆள் அனுப்பினார்..

“உள்ள வா.. போயி அந்த பொண்ணு கிட்ட நில்லு….!!! வாக்குமூலம் எடுக்கப் போறோம்…!!”

அபிக்கு ஒன்றும் புரியவில்லை.. ஆனால் ஆஷாவைப்பார்த்ததும் ஒரே உற்சாகம்..

கையைத் தட்டிக் கொண்டு..ஆ..ஆ..என்று பக்கத்தில் போனான்…

ஆஷா ஒரேடியாய் மாறியிருந்தாள்.

கருத்து..இளைத்து.. முகமெல்லாம் பயமாய்.. கண்ணைத் திறப்பதும்…மூடுவதுமாய் இருந்தாள்..

ட்யூட்டி டாக்டர், நர்ஸுகள், அபியின் அப்பா, சூசன், இன்ஸ்பெக்டர், ஒரு லேடி கான்ஸ்டபிள்……!!!

சுற்றி நின்ற யாருமே ஆஷாவின் கண்ணுக்கு புலப்படவில்லை.. அபியின் மேல் அவள் கண்கள் நிலைகுத்தி நின்றது…

டாக்டர் ஆஷாவின் பக்கத்தில் வந்து ,

ஆஷா..ஆஷா..இத பாரும்மா.. ஒண்ணும் பயப்படாத.. நான் கேக்கிற கேள்விக்கு மட்டும் பதில் தெரிஞ்சா சொல்லணும் …சரியா…?”

ஆஷா ‘ ம்ம்ம்’ என்று ஈனஸ்வரத்தில் முனகினாள்….

“சொல்றத கவனமா எழுதுங்க…!!”

இன்ஸ்பெக்டர் படபடப்பாய் தெரிந்தார்… லேடி கான்ஸ்டபிள் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தயாராய் இருந்தாள்..

“ஆஷா..நீ இப்போ ஆஸ்பத்திரியில பத்திரமா இருக்க.இதோ !! அம்மா நிக்கிறாங்க பாரு… உனக்கு என்ன சொல்லணும்னு தோணுதோ சொல்லு..!!”

ஆஷா இப்போது கண்ணை நன்றாகத் திறந்து எல்லோரையும் பார்த்தாள்..

“அம்மா…”என்று குரலுக்காகவே காத்திருந்த சூசன் ஓடிவந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்து, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்…

“அம்மா..அழாம இருங்க.. கொஞ்சம் கட்டுபடுத்திக்குங்க…. பொண்ண பேச விடுங்க….!!”

ஆஷாவால் பேச முடியவில்லை…

டாக்டர் கனிவான குரலில்,

“ஆஷா.. ஒண்ணும் அவசரமில்ல..நிதானமா யோசிச்சு பாரு.போன வாரம்..நீ தனியா வீட்ல இருந்தப்போ என்ன நடந்தது ??? எதுவானாலும் பயப்படாம சொல்லு….”

ஆஷா லேசாக அதிர்ந்தாள்… மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தாள்…

அபியைக் கூப்பிட்டு பக்கத்தில் நிறுத்தினார் டாக்டர்….

“அபி..அபி அண்ணா….நீ ஏண்டா முன்னாடி வரல்ல…அண்ணா… அந்த பையன்…காதுல கடுக்கன் ….. அவன்.. அவன்…அண்ணா…நீ என் கூடவே இரு… பயம்மா இருக்கு….!!”

இன்ஸ்பெக்டர் முகத்தில் ஈயாடவில்லை…

“ஆஷா..சொல்லும்மா.. அந்தப் பையன் பேர் தெரியுமா…???”

மறுபடியும் நித்திரையில் ஆழ்ந்து விட்டாள் ஆஷா…
அவள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாள்……….

ஒரு சில வார்த்தைகளில் எல்லோரது சந்தேகத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மறுபடி மௌனமானாள்..!!

சூசன் மட்டும்

“ஆஷா..ஆஷா..”என்று அவள் தோளைத் தொட்டு உலுக்கினாள்….

“வேண்டாம்மா.. அவுங்களுக்கு ரொம்ப ‘ stress ‘ ஆகி இருக்கு..இந்த சமயம் தோண்டித் துருவிகேட்டா அது அவுங்க மனநிலைய பாதிக்கும்..இனிமே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் தெரிய நிறைய சான்ஸ் இருக்கு…

“இன்ஸ்பெக்டர்… உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைச்சிடுச்சில்ல..அவள ஃப்ரீயா விடுங்க..அபிஷேக்கையும் சேத்துதான்…”

***

மணிமேகலைக்கு உறக்கம் வரவில்லை… எப்படி வரும்….??

மாநிலத்தையே உலுக்கிய வழக்குக்கு நாளை தீர்ப்பு சொல்ல வேண்டியவள் அவள் தானே….

சொல்லப் போகும் தீர்ப்பு அவளுக்கு எந்த வித குழப்பத்தையோ…
சந்தேகத்தையோ அளிக்கவில்லை..

ஒரு அறியாச் சிறுவன் மேல் அபாண்டமாய் பழிபோட்டு… சந்தேகத்தின்பேரில் கைது செய்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. எப்போது விடியுமென்று காத்திருந்தாள்…..!!!!

“ஆஷாவுக்கு நேர்ந்த கொடுமை மிகவும் கண்டிக்கத்தக்கது.. இதுபோன்ற நிகழ்வுகள் பெண்கள் இன்னும் பாதுகாப்பாக தனியாய் வீட்டில் இருக்க முடியாத நிலையையே உணர்த்துகிறது.

இந்த வழக்கில் குற்றவாளி என்று சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர் அபிஷேக்..

ஆட்டிஸம் எனும் பாதிப்பிற்கு ஆளான பதினாறு வயது சிறுவன்…

ஆஷாவின் வாக்கு மூலத்திலிருந்தும்….அபிஷேக்கின் மெடிக்கல் சர்டிஃபிகேட்டுகளிலிருந்தும் அபிஷேக் இந்த குற்றத்தை செய்திருக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணமாகிறது…

அபிஷேக் போன்ற சிறுவர்களுடன்
பழகினவர்களுக்கும், இவனைப் போன்ற குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் இதை புரிந்துகொள்ள இயலும்..

மணிமேகலை கண்ணாடியைக் கழட்டிவிட்டு கண்ணைத் துடைத்துக் கொள்வதை சில பேராவது கவனித்திருப்பார்கள்….

ஆனால் இந்த சமுதாயம்…??

இவனைப் போன்ற சிறுவர்களை எந்த ஆதாரமும் இல்லாமல் கைதி பண்ணக் கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும்…!!!!!

ஒருநாளல்ல… ஒரு மணிநேரம் .இல்லை..பத்து வினாடிகள் கூட சிறைக்கைதியை நடத்துவதுபோல குரூரமாக நடத்த அனுமதிக்கக்கூடாது என நீதிமன்றம் சார்பாக போலீஸ் டிபார்ட்மென்டை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்…

இவ்வழக்கில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் பாக்கியராஜின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட ஆஷா இன்னும் கோர்ட்டுக்கு வர இயலாத நிலையில் அவளது கையெழுத்திட்ட வாக்குமூலத்தின் ஆதாரத்தின் பேரிலும்… அவளது உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் உண்மையான குற்றவாளியைக் பற்றிய எல்லா விவரங்களையும் போலீஸ் சேகரித்து வரும் தகவல்களையும் வைத்து நிரபராதியான அபிஷேக்கை எந்த நிபந்தனையுமின்றி இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது…..

இந்த வழக்கில் தமது முழு ஒத்துழைப்பைத் தந்த DSP ராஜமாணிக்கத்தையும்… புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் மதுசூதனையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளது.

அபிஷேக்கை அநாவசிய மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக நீதிமன்றம் அவனுடைய பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறது…….”

***

மணிமேகலைக்கு பெரிய பாரம் இறங்கியது போல் ஒரு ஆசுவாசம்..வீட்டில் நுழைந்ததும் அவள் கண்கள் அமுதனைத் தேடியது..

“இந்திராம்மா…. அமுதன் என்ன செஞ்சுகிட்டு இருக்கான்.. ரொம்ப தொந்தரவு குடுத்தானா…???”

“அம்மா…சொன்னா நம்பமாட்டீங்க..இன்னிக்கு மாதிரி அவன் சந்தோஷமா இருந்து பார்த்ததேயில்லை…சமத்தா சாப்பிட்டு…அதோ ரூமில விளையாடிட்டு இருக்கான் பாருங்க..!!”

“அமுதா… என் செல்லமே… இன்னிக்கு தீர்ப்ப நான் சொல்லல.. நீதான் சொல்ல வச்ச….”

பதினெட்டு வயது அமுதன் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு தன் விளையாட்டைத் தொடர்ந்தான்…….

கண் முன் அபிஷேக் வந்து போனான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *