அவன் கைவிடமாட்டான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2024
பார்வையிட்டோர்: 1,072 
 
 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

”கீய்! தீய்! குர்! குர்1 கீய்…கீய்!. குர்…குர்…!”

‘சோ’வென்று பெய்து கொண்டிருந்த மழையினூடே இந்த அவலக் குரல்… 

“மே…!ம்மே…!” என்று குழுக் குரல் எழுப்பிக் கொண்டு ஆடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தன. 

மழையும், காற்றும், இடியும், மின்னலும் போட்டி போட்டுக் கொண்டு காரியமாற்றிக் கொண்டிருந்த அந்தக் ‘கித்தா”க் காட்டில், சிதறி ஓடும் ஆட்டு மந்தையை ஓரணிக்குக் கொண்டுவரப் படாதபாடு பட்டுக் கொண்டிருந் தார் அப்துல் காதர். 

எப்படியாவது அந்த ஒற்றையடிப் பாதையில் ஆடுகளைக் கொண்டுவந்து சேர்த்தால் போதும். பிறகு அவை, நேராக – சீராக வீடுபோய்ச் சேர்ந்து விடும். 

“கீய்! கீய்! குர்! குர்! தீய்! கீய்…குர்! குர்!” 

அந்தப் பரிதாப ஒலி இப்பொழுது மென்மேலும் வேகமாக ஒலிக்க ஆரம்பித்தது. 

”ஆய்! ஊய்! டட் டட் டட் … !!” என்று குரல் கொடுத்துக் கொண்டே ஒருவழியாக ஆட்டு மந்தையை ஒற்றையடிப் பாதைக்குக் கொண்டு வந்து விட்டார் அப்துல் காதர். 

ஒன்றன்பின் ஒன்றாக அவை துள்ளாட்டம் போட்டு கொண்டு ஓடின. மழையென்றாலோ வெள்ளம் என்றாலோ ஏன்தான் இந்த ஆடுகளுக்கு இவ்வளவு பயமோ தெரிய வில்லை! ஒருவேளை வெறுப்பாக இருக்குமோ? 

குளிப்பதற்கு அலுப்புப் பட்டுக் கொள்ளும் சிவ சோம்பேறிகள், “ஆடு என்ன குளிக்குதா? அதன் இறைச் சிக்கு என்ன விலை தெரியுமா?” என்று குதர்க்கம் சொல்வதுண்டு. எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாக் லும் அவர்கள் குளிக்காமல் இருக்கட்டுமே. கசாப்புக் கடைக்கு அவர்களின் இறைச்சியைக் கொண்டு செல்ல மாட்டார்கள். மானிடராய்ப் பிறப்பது அரிதாக இருக்கலாம். இருந்தும் என்ன? தசைக்கு என்ன மதிப்பு கொடுக்கப் படுகிறது? கிளியோபாட்ரா என்றும், ரோமியோ என்றும் பிதற்றுவதெல்லாம் மூச்சு இருக்கும் வரைதான். 

“கீய்! கீய்! °ர்! குர்!” 

மழைக்காக மரத்தடியில் ஒண்டிக் கொண்டிருந்த அப்துல் காதரின் செவிப்பறைகளில் அந்த ஒலி முட்டி மோதுகிறது. 

சுற்று முற்றும் பார்வையைச் சுழலவிடுகிறார். ஒன்றும் புலப்படவில்லை. “புட்டு அடி கன்னத்தில் அணிந்திருந்த” மூக்குக் கண்ணாடியை, மழைத்துளி படாதவாறு துண்டைக் கொண்டு துடைத்து, அணிந்து கொண்டு, உள்ளங்கையை நன்றாக விரித்து நெற்றியில் தாழ்வாரம் கட்டி, கூர்ந்து நோக்குகிறார். 

எதிரே – ஒரு சிறிய மேடு. மழை வெள்ளம் படிப்படி யாகப் பெருக்கெடுத்து பள்ளத்தை நோக்கி, தான் நின்று கொண்டிருக்கும் இடத்தை நோக்கி ஓடி வருவது தெரிகிறது. 

மேட்டுக்கும் பள்ளத்துக்கும் இடையே ஒரு குழி. வளர்ச்சியடைந்த ‘கித்தா’க் கன்று ஒன்று இடம் மாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக மூன்றடி ஆழக்குழியாக நினைவுச் சின்னமாக அங்கே காட்சியளித்துக் கொண்டிருந்தது! 

தலையில் விழுந்து கொண்டிருந்த மழைத் துளிகள் அப்துல் காதரின் கண்களைத் திரைபோடவே, மீண்டும் கண்ணாடியை அகற்றி முகத்தைத் துடைத்துக் கொண்டு. மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு பார்வையைக் குழியின் பக்கம் செலுத்துகிறார். 

“கீய்! கீய்! குர்! குர்!… கீய்! கீய்! குர்! குர்!” 

குழியிலிருந்து எழும்பிய அந்த ஒலி இப்பொழுது தெளிவாகக் கேட்கிறது. கூர்ந்து கவனிக்கிறார். 

சற்றேறக்குறைய இருபதடி தூரத்தில் அந்தக் குழி. அதிலிருந்து எழுகிறது அந்தப் பரிதாப ஒலி. 

வினாடிக்கு வினாடி மேட்டு நீர் குழியை நிரப்பிக் கொண்டிருக்கிறது. புரிந்து விட்டது அப்துல் காதருக்கு. 

குழியில் ஒரு பன்றிக் குட்டி! 

மேட்டு நீர் பள்ளத்தை அடைந்து- சமதரை எங்கும் பரவிக் கொண்டிருந்தது. சந்தன நிறத்தில் கம்பளம் விரித்தாற் போன்று ‘இத்தாக்’ காடெங்கும் வெள்ளம். 

கால், அரை, முக்கால் என்று அங்குலச் கணக்கில் வெள்ளம் பெருகிக் கொண்டிருக்கிறது. 

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பார்வையைச் சுழல விடுகிறார். யாரும் தென்படவிலலை. யாரையாவது அழைத்துக் கொண்டு வரலாமென்ற எண்ணம் எழுகிறது. வானத்தை அண்ணாந்து பார்க்கிறார். எங்கும் கார்மேகக் கூட்டம். அப்துல் காதரின் உடலில் இலேசான நடுக்கம். 

குளிரால் ஏற்பட்டதா? குழியிலிருந்து வரும் ஒலியால் ஏற்பட்டதா? அவருக்கே அது தெரியவில்லை. அறுபது வயதைக் கடந்து விட்ட ஒற்றை நாடி உடலமைப்பு நடுக்கம் இருக்கத்தானே செய்யும்? 

பளிச்சிடும் மின்னலைப் போல் அவர் மனத்தில் ஓர் எண்ணம் தலை தூக்கியது. 

அன்று ஆட்டுக் குட்டியைச் சுமந்து நின்ற “ஆச்சோங்” கின் உருவம் அப்துல் காதரின் மனக்கண் முன் தோன்றி மறைந்ததுதான் தாமதம்; பச்சை நிறக் கட்டம் போட்டு தான் அணிந்திருந்த கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றார். இரண்டே சங்கிலித் தொலைவில் உள்ள ஆச் சோங் வீட்டுத் திசையை நோக்கினார். தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி ஓட ஆரம்பித்தார். 

வெள்ளக் கம்பளத்தில், கரப்பான் பூச்சிகளைப் போல் மிதந்து கொண்டிருந்த கித்தா இலை சருகுகளின் மேல் ஓடிக் கொண்டிருந்த அப்துல் காதர், “அல்லாஹ்!” என்று அலறிக் கொண்டு குப்புற விழுந்தார். வெள்ளக் கம்பளத் தால் மறைக்கப்பட்டுக் கிடந்த குழியில் இடறி விழுந்து விட்டார். எழ முயன்றார். முடியவில்லை. மெல்ல காலை மடக்க முனைகிறார்- முடியவில்லை. கொடூரமான வலி. வலது கால் மூட்டு பிசகி விட்டது போலும், மெல்ல, மெல்ல ஊர்ந்து வந்து மரத்தடியில் ஒண்டுகிறார். 

குழி தெரிகிறது. “கீய்! கீய்! குர்! குர்!” குழியிலிருந்து புறப்படும் ஒலி நின்ற பாடில்லை. 

அப்துல் காதரின் காலிலே வலி! நெஞ்சிலும் வலி! 

அந்தக் குக் கிராமத்தில் அப்துல் காதரைத் தெரியாத வர்களே இல்லை. தன்னுடைய நாற்பதாண்டு காலத்தை அந்தக் கிராமத்தில் கழித்தவர். மனைவியை இழந்த அவர், தன் ஒரே மகனை வளர்த்துப் படிக்க வைத்துப் பெரியவ னாக்க அரும்பாடு பட்டிருக்கிறார். கண்ணாடிக் கடை (சிகை அலங்கரிப்பு நிலையம்) ஒன்றை நடத்திக் கொண்டு, தன் மகனைப் படிக்க வைத்து, நகரத்திலேயே நல்ல வேலை யிலும் அமர்த்தி விட்டார். தனக்கு நகர வாழ்க்கை ஒத்து வராது என்று சொல்லி கிராமத்திலேயே இருந்து, தொழில் செய்து கொண்டிருந்தார். 

கால ஓட்டம் எனும் முதுமைக் கள்வன் அப்துல் காதரின் பார்வையை மெல்ல மெல்லக் கவரவே, தொழி லுக்கு இடையூறு ஏற்பட்டது. 

அப்துல் காதரின் மகன் கமால் பாட்சா, எவ்வளவோ பணிந்து கேட்டுக் கொண்ட போதிலும், கிராமத்தை விட்டு விட்டு வர முடியாது என்று ஒற்றைக் காலில் நின்று விட்டார்.”சொந்த ஊரே சொர்க்க பூமி” என்பதற்கிணங்க, தான் வளர்ந்து வாழ்ந்த அந்தக் குக்கிராமத்திலேயே தனது இறுதி மூச்சும் கலக்க வேண்டும் என்னும் அப்துல் காதரின் உறுதியை எவராலும் அசைக்க முடியவில்லை. 

சதாசர்வ காலமும் வேலையில் ஈடுபாடு கொண்டு, சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அப்துல் காதருக்கு, வெறுமனே இருப்பது வேம்பாகக் கசந்தது.கடையை விற்றுவிட்டு, ஒரு சிறு வீட்டைக் கட்டிக் கொண்டார். பெரிய வசதியான வீடாக இல்லாவிட்டாலும், தனக்குத் தேவையான வசதிகளை அமைத்துக் கொண்டார். 

கிணறும், நான்கு தென்னம் பிள்ளைகளும், சில வாழை மரங்களும், ஓர் ஆட்டுக் கொட்டிலும் கொண்ட அமைப்பில் அவர் வீடு திகழ்ந்தது. 

செலவு போக தன் கையிலிருந்த ஒரு சிறு தொகையைச் சேமிப்பில் முடக்கிவிட்டு, மீதத்தைக் கொண்டு ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார். 

ஆட்டு மந்தையை ஒட்டிக் கொண்டு மேய்ச்சல் களத்துக் குச் செல்வதும், அங்கே அவற்றுடன் போராட்டம் நடத்துவதும், மீண்டும் அவற்றை ஒட்டிக் கொண்டு வந்து கொட்டிலில் அடைப்பதும் அவருக்கு மிகவும் பிடித்தமான வேலை; பொழுது போக்கு! 

எது எப்படி இருந்தாலும் மார்க்க முறைகளை மட்டும் தவிர்க்க மாட்டார். 

சமுதாயக் கட்டுப்பாடுகள் எனும் சாதி முறைகள் தம் மூதாதையர்களைப் போட்டு மிதித்து, குற்றுயிரும் குலை யுயிருமாக ஆக்கிக் கொண்டிருந்த காலத்தில், தங்களை வாழவைக்க, மனிதப் பிறவிகள் தான் என்று அடையாளம் காட்ட எழுந்தது தான் இசுலாமியமார்க்கம் என்று அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார். 

நோன்புக் காலங்களில், ஆடுகளை மேய்ப்பதற்கு வேறு ஆளை அமர்த்திக் கொண்டு, இரம்லான் காலக் கடமை களைச் செவ்வனே நிறைவேற்றுவார். 

இருந்தாலும் ஒரு குறை அவர் மனதில் தோன்றி ஆர்ப்பரிப்பதுண்டு. அடிக்கடி அந்தக் குறையைப் பற்றித் தன் ஆத்ம நண்பன் அண்ணாக்கண்ணுவிடம் சொல்வார், 

குறையென்று அவர் கூறுவது ஆசையாக வளர்ந்து விட்ட ஒன்றுதான். தன் மூச்சு அடங்கவதற்கு முன், ‘திரு மெக்கா’ புனித யாத்திரையை முடிக்க வேண்டும் என்பது தான் அந்தக் குறை. அப்துல் காதரின் ஆசை! 

“என்ன நானா… நீங்க இன்னும் சின்னப் பொடியன்’னு நெனச்சுக்கிட்டு இருக்கீங்களா? மவன் தான் கை நிறைய சம்பாதிக்கிறானே, அவன்கிட்ட சொல்லி பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளச் செய்யுறது தானே…?’ என்று அண்ணாக்கண்ணு அங்கலாய்த்துக் கொள்வது வாடிக்கை. 

“மனுசன் ஒடம்பைப் பார்த்து எடை போடாதேப்பா! மனசைப் பார்க்கக் கத்துக்கணும்! என் மனசு இன்னும் வாலிபமாத் தான் இருக்கு. இந்தா பாரு அண்ணாக்கண்ணு திருமெக்கா புனித யாத்திரை போறதுக்கு இப்ப கப்பல் எல்லாம் ஏற்பாடு செய்திருக்காங்களாம். இன்னும் எட்டு மாசம் போகட்டும், ஆட்டுக் குட்டிங்க எல்லாம் வளர்ந்ததும் செனை ஆடுங்களும் குட்டி போட்டுடும். எல்லாவற்றை யும் மொத்தமா வித்துப் போட்டுட்டு சொந்த உழைப்பாலே சம்பாதிச்சப் பணத்தைக் கொண்டு பயணத்தைத் துவங்க றேனா இல்லையான்னு பாரேன்” என்று பெருக்கல் கணக் கைப்போட்டுக் காட்டி அண்ணாக்கண்ணுவைத்திணறடித்து விடுவது அப்துல் காதரின் வாடிக்கைப்பேச்சு கேட்போருக்கு வேடிக்கையாகவும் இருக்கும் சில சமயங்களில். 

வெறும் வாய்ப்பந்தல் போட்டுத் திரிவோரின் மத்தி யில், முயற்சியால், தளரா உழைப்பால் முன்னுக்கு வந்த வர் அப்துல் காதர். பல “கிழங்”களுக்கு இந்த உண்மை தெரியும். அப்துல் காதருக்கு உரிய மரியாதையை வழங்க அவர்கள் தவறியதில்லை! 

“நிக்கா விழாவா”, “சுன்னத் திருமணமா”, பாத் தியா” ஓதுவதா? விட மாட்டார்கள் அப்துல் காதரை அவரை அழைத்து அவரவர் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதில் அக்குக்கிராம மக்களுக்கு ஒரு பெருமை. 

விடுமுறை நாட்களில் கமால் பாட்சா கிராமத்துக்கு வருவான். திரும்பிப் போகும் பொழுது கைச் செலவுக்குப் பணத்தை நீட்டுவான். அப்துல் காதர் வாங்கிக் கொள்ள மாட்டார். 

”ஏண்டா, என்னை என்ன கிண்டலா பண்றே! உன் ‘அத்தா’ இன்னும் சோர்ந்து போயிடல. இதோ பாத்தியா” என்று கூறிக் கொண்டே தன் கரங்களை உயர்த்திக் காட்டுவார். மகன் மௌனியாகி விடுவான். 

“நாகரிக உலகத்துல நடமாடுறவன் நீ. பணத்தை சேர்த்து வச்சுக்க. வேலை கீலை போயிடுச்சுனா நாட்டுப் புறத்துக்கு வந்து என் மாதிரி உழைச்சுப் பொழைக்க உன் னால முடியாது. அழுக்குப் படாம வேலை செஞ்சுப் பழகிப் போனவன் நீ. ஆட்டுப் புழுக்கையை அப்புறப்படுத்த உள் னால முடிஞ்சாலும்-மனசு இடம் கொடுக்காது. உன் மனசைக் சொல்லலடா… என் மனது இடம் தராதுடா….” சொற்களைப் பனிக்கட்டியாக்கி கண்ணீர் மல்கி நிற்பார். மகன் உடலெங்கும் புல்லரித்து விடும். இப்படிப்பட்ட பேரின்ப நிலையில் இருவரும் ஐக்கியமாகி விடும் சம்பவங் கள் அவ்வப் பொழுது நிகழ்வதுண்டு! 

ஆடு வளர்ப்பவர்களுக்கு மழைக்காலம் வந்து விட்டால் தர்ம சங்கடமாகி விடும். ஆட்டு மந்தையை வெளியே மேய்ச்சல் களத்துக்குக் கொண்டு போக முடியாது. தழை களைச் சேகரித்துக் கொண்டு வந்து கொட்டடியில் கட்டித் தொங்க விட வேண்டும். காலை மாலை கஞ்சித் தண்ணீ ரையோ, பிண்ணாக்கு கலந்த நீரையோ தயார் செய்ய வேண்டும். இப்படிப் பற்பல வேலைகள். இதற்கெல்லாம் அப்துல் காதர் சளைத்தவரா என்ன? 

“தொரட்டி” கொண்டு பலாக் கிளைகளை முறிக்கும் இளவட்டங்களைப் பார்த்து, “சோம்பேறிகள்! சோம் பேறிகள்!!” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு, முசுடுகளையும் பொருட்படுத்தாமல்- அந்த வயதுக் காலத்தில்-பல மரத்தில் ஏறிக் கிளைகளை முறிப்பார். தழை களை ஒரு கட்டாகக் கட்டி, தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஏறு நடை போட்டு வரும் காட்சி, அந்தக் கிராமத்து மக்களை வியப்பில் ஆழ்த்தி விடும். 

நவீனம் என்று கூறிக் கொண்டு, சைக்கிளின் பின்னால் தழைகளைக் கட்டிக் கொண்டு வரும் இளவட்டங்கள், அப்துல் காதரின் “ஏறு நடைக்” காட்சியினைக் கண்டும் காணாதது போல் நழுவி விடுவது இன்று நேற்று நடை பெற்று வரும் நிகழ்ச்சியல்ல. 

வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சி தந்தது. மழை வந்து விடக் கூடும் என்று அறிந்து கொண்ட அப்துல் காதர், மேய்ச்சல் களத்திலிருந்த ஆடுகளைக் குரல் கொடுத்து, ஒற்றையடிப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடலானார். 

எதிரும் புதிருமாக நின்று கொண்டு, முன்னங் கால் களைத் தூக்கி, ஓர் எவ்வு எவ்வி, படுவேகமாக ஓடிச் சென்று, கொம்போடு கொம்பை மோதி சமர் புரிந்த ஆட்டுக் குட்டிகளை விலக்கி, சமாதானப் படுத்துவதற்குள் அப்துல் காதருக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. 

மழைத்துளி லிழுந்தது தான் தாமதம் மந்தையினிடை ஒரு பரபரப்பு, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு ஓட்டம் பிடித்தன. 

மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு வேகமாக நடக்கலானார் அப்துல்காதர். 

கடைத் தெருவைக் கடந்து தான் வீடுபோய் சேர வேண்டும். ஆடுகள் ஓடிவிட்டன. மழையும் கனக்க ஆரம் பிக்கவே ‘ஆ’லிக் காக்கா அங்காடிக் கடை ஓரமாக ஒதுங்கி நின்று, தேனீருக்குச் சொன்னார். 

அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். ‘இச்’ என்று சப்புக் கொட்டிக் கொண்டே தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துப் பிழிந்து, முகத்தைத் துடைத்துக் கொண்டார். 

மழைத் தூறல் அவர்மேல் விழுந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த சீனர் காப்பிக் கடையில் ஏகக்கூட்டம். அங்கே சாரல் அடிக்கவில்லை. இருந்தாலும், ‘ஆலி’க் காக்கா அங்காடிக் கடையில் தான் அப்துல் காதர் தேநீர் அருந்துவது வழக்கம். 

அதிலே அவருக்கு ஒரு நிறைவு. 

இருவரும் ஒரே காலத்தில் அந்தக் கிராமத்துக்கு வந்தவர்கள் தான். அந்தப் பாச ஈர்ப்புக் காரணமாக இருக்குமோ என்னவோ, அந்த அப்துல் காதருக்குத்தான் வெளிச்சம்! 

சுமார் ஒரு மணி நேர ஆட்டத்தை முடித்துக் கொண்டு மழை மோகினி விடைபெற்றாள். 

வீட்டை நோக்கி நடை போட்டார் அப்துல் காதர். கொட்டிலை எட்டிப் பார்த்து விட்டு, கதவைச் சாத்தி விட்டு, வீட்டுக் கதவைத் திறந்தார். 

காலணியைக் கழற்றிக் கிணற்றருகே கொண்டு சென்று கழுவி, அடுப்பின் ஓரமாகச் சாற்றி வைத்துவிட்டு, கதவைத் தாழ் போட்டார். 

உடைகளைக் களைந்து, துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு, ஈர உடைகளை எடுத்துக் கொண்டு கிணற்றை நோக்கி நடந்தார். 

உடைகளை ஒரு வாளியில் போட்டு ஊற வைத்துவிட்டு கயிறு கட்டப்பட்ட வாளியை எடுத்தார். 

அண்டாவில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு, குவளை யால் மொண்டு குளிப்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று. 

கிணற்று நீரை வாளியால் மொண்டு தலையில் ஊற்றி அவரக் குளிப்பது அவருக்குக் கைவந்த கலை. அன்றும் அப்படித்தான் வாளியை எடுத்துக், கயிற்றைச் சீராக்கிக் கையில் பிடித்துக் கொண்டு வாளியைக் கிணற்றில் விட எத்தனித்த சமயத்தில், 

“டொக்! டொக்! டொக்!” என்று கதவு தட்டப்படும் சத்தமும், 

”நானா! நானா!” என்ற குரலும், 

‘மே…ம்மே!’ என்று நடுங்கும் ஆட்டுக் குட்டியின் கத றலுமாகச் சேர்ந்து அப்துல் காதரின் காதில் ஒரே சமயத்தில் விழுந்ததுதான் தாமதம், வாளியைக் கீழே வைத்து விட்டுக் கதவை நோக்கி ஓடினார். 

“மே!..ம்மே!…” 

ஆட்டுக் குட்டியின் கதறல் மட்டும் நின்றபாடில்லை. 

அரக்கப் பறக்கக் கதவைத் திறக்கிறார். 

அங்கே. 

மேய்ச்சல் களத்துக்குப் பக்கத்தில் வசிக்கும் பன்றி வியாபாரி ‘பூச்சோங்’கின் இளைய மகன் ‘ஆச்சோங்’ ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொண்டு நின்ற காட்சியைக் கண்டு பதறிப் போனார் அப்துல் காதர். 

“ஆச்சோங் ஆட்டுக்குட்டி எங்கே கிடைச்சது?” என்று மலாய் மொழியில் தட்டுத் தடுமாறிக் கொண்டே கேட்டார். 

“பாசாக் காட்டு ஓரமா மூடாச் செடிப் புதர்ல மாட்டிக் கிட்டுக் கத்திச்சு! தூக்கியாந்துட்டேன்” என்று தனக்குத் தெரிந்த மலாய் மொழியில் பதில் சொல்லி விட்டு ஆட்டுக் குட்டியை அப்துல்காதரிடம் நீட்டினான். 

ஆதூரத்துடன் அதை வாங்கி அணைத்துக் கொண்டு ஆச் சோங்கை நோக்கினார். 

அவன் ஓர் இள நகையை உதிர்த்து விட்டுத் துள்ளிக் குதித்து ஓடிவிட்டான். 

ஆட்டுக் குட்டியின் உடலெங்கும் ஈரம். ஆற்றோரத்தில் மூடாச் செடிகள் மண்டிக் கிடப்பது அவருக்குத் தெரியும். அதனுள் மாட்டிக் கொள்ளும் பெரிய ஆடுகளே மீளுவது. சிரமம். பாவம் ஆட்டுக்குட்டி என்ன பாடு பட்டதோ! 

ஆச் சோங் நல்லவன். இரக்கமுள்ளவன். அவன் சென்ற திக்கை நோக்கினார். அவன் மறைந்து விட்டான். 

துணியை எடுத்து ஆட்டுக் குட்டியைத் துடைத்தார். அதன் காலில் கூர்மையாக ஏதோ தட்டுப்படவே கூர்ந்து நோக்கினார். முள் தைத்திருந்தது. ஆட்டுக்குட்டி கதறியது. முள்ளை எடுத்து விட்டு, அரைத்து வைத்திருந்த மஞ்சளை எடுத்து காயத்தின் மேல் அப்பி, துண்டுத் துணியால் கட்டுப் போட்டார். 

கொட்டிலின் கதவைத் திறந்தார். ஆடுகள் கூட்டுக் குரலெழுப்பின. அதில், தாய் ஆட்டின் குரல் மட்டும் பரிதாபமாக ஒலித்தது. 

மறுநாள் காலையில் எழுந்து கடன்களை முடித்துக் கொண்டு முதல் வேலையாக பூச் சோங் வீடு சென்று நன்றி சொல்லி விட்டுத் தான் மறுவேலை பார்த்தார். 

ஆடுகளை வளர்க்கும் அப்துல்காதரைப் போல் பன்றி களை வளர்த்து வியாபாரம் செய்பவன் பூச் சோங். 

ஒரு சமயத்தில் வறுமைக்கு ஆளான பூச் சோங்கின் குடும்பம் இன்று தலை நிமிர்ந்து நிற்கிற தென்றால் மூன்று பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி இரளவு வசதியோடு வாழுகிறானென்றால் 

அதற்கு பூச் சோங்கின் அயரா உழைப்பும் சகிப்புத் தன்மையும்தான் காரணம். 

ஒன்று இரண்டு என்றில்லாமல் பத்து இருபது என்று தாய்ப் பன்றி பெற்றுத் தள்ளும். குட்டிகளைக் கண்ணுங் கருத்துமாகக் காத்து வளர்ப்பதும், வாழைத் துண்டுகளாகக் கொத்தி, வேகவைத்து, பிண்ணாக்குடன் கலந்து சமையல் செய்து பன்றிகளுக்குப் படைப்பதும், கொட்டிலைக் கழுவிச் சுத்தம் செய்வதும் அவசரக்காரர்களுக்குத் தாக்குப்பிடிக்காத வேலை. நிரம்ப பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும். 

பூச் சோங்சிற்கும் அவன் மனைவி ஆலானுக்கும் இது கைவந்த கலை. 

குடு குடுவென்று ஓடித் திரியும் பன்றிக் குட்டிகளை அவ்வளவு எளிதில் பிடித்துவிட முடியாது. சிற்சில வேளைகளில் பன்றிக் குட்டிகள் கொட்டிலை விட்டு வெளியே வந்து விளையாடுவதுண்டு. அப்படி ஓடி விளையாடும் விளையாட்டு கித்தாக் காடு வரைக்கும் செல்வதுண்டு. அப்படி நிகழ்ந்த விளையாட்டின் விளைவுதான் இந்த கீய்! கீய்! குர்! குர்! 


மழை விட்டபாடில்லை! 

“கீய் கீய் குர் குர் ! சத்தம் விட்டு விட்டுக் கேட்கிறது.

எழுந்து நிற்க முயலுகிறார் அப்துல்காதர். முடியவில்லை. வினாடிக்கு வினாடி வலி அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலையைத் தூக்கி எட்டிப் பார்க்கிறார். 

குழியில் நீர் நிரம்பிக் கொண்டே வருகிறது. பின்னங் கால்களைக்குழியில் ஊன்றிக்கொண்டு முன்னங்கால்களைக் குழியின் விளிம்புக்குக் கொண்டு வர எவ்வி எவ்விப் பார்க்கிறது பன்றிக் குட்டி. 

*கீய்! கீய்! கீய்!” 

இப்பொழுது பன்றிக் குட்டியின் தோள் வரையில் நீர் பெருகி விட்டது. அப்துல் காதரின் முகம் சுருங்குகிறது. வலி அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

மழை நின்ற பாடில்லை. குழியில் நீர் நிரம்பிக் கொண்டே வருகிறது. 

“கீய், கீய்! குர்,, குர் : கீய் குர்!, குர்!!”

– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *