கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,819 
 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் எனக்கு இது அதிசயமாய்த்தான் இருக்கிறது. தன் உயிரின்மேல் அந்தக் கிழவனுக்குத்துளிக்கூட ஆசை இல்லை; ஆனால் உயிரோ அவன் மீது அளவற்ற ஆசை வைத்திருக்கிறது. என்ன செய்வான், பாவம்! படுக்கையில் படுத்தபடி ஒரு நாளைப்போலத் தன் உயிரோடு அவன் போராடிக் கொண்டிருந்தான்.

அன்று மாலை அந்த ஊர் ஆலையின் சங்கு ஊதி ஓய்ந்ததும், வழக்கம் போல் அந்தக் கிழவரின் முகம் மலர்ந்தது. “பையன் இன்னும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வந்து விடுவான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இத்தனைக்கும் அந்தப் பையன்” வந்து அவனுக்குப் புதிதாக ஆகப்போவது ஒன்றுமே யில்லை.

கிழவன் எதிர்பார்த்தபடி அவன் அவ்வளவு சீக்கரமாக அன்று வீட்டுக்கு வந்து விடவில்லை; அவனுக்குப் பதிலாக இருள்தான் அவசர அவசரமாக வந்து அவன் வீட்டைக் கவ்விக் கொண்டது.

“ஏ, முனியம்மா, நீ எங்கே போயிட்டே?” என்று கிழவன் இரைந்தான்; பதில் இல்லை.

“எங்கே போயிருப்பா? வீட்டிலே கொஞ்சம் விளக்கையாச்சும் ஏத்தி வச்சுட்டுப் போயிருக்கக் கூடாதா?”

இதற்குள் யாரோ வரும் காலடி ஓசை அவன் காதில் விழுந்தது. ‘முனியம்மா’ என்றான் கிழவன் மீண்டும்.

“ஏன்?”

‘எங்கே அம்மா, போயிட்டே? பொழுதோட விளக்கைக் கொஞ்சம் ஏத்தி வைக்கக் கூடாதா?”

‘அதுக்குத்தான் தீக்குச்சி வாங்கிவரப் போயிருந்தேன்’

“எதுக்குத் தீக்குச்சி – யாரு வீட்டு விளக்கிலாச்சும் கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்துட்டாப் போச்சு”

‘நல்லாச் சொன்னீங்க இன்னொருத்தர் வீட்டிலே நம்ம வீட்டு விளக்கை ஏத்தப் போனா சும்மா இருப்பாங்களா? அவங்க வீட்டு லச்சுமி நம்ம வீட்டுக்கு வந்துட்டான்னு சண்டை பிடிக்க மாட்டாங்களா!’

‘அட எழவே! அப்படின்னா நம்ம வீட்டுத் தரித்திரம் சுலபமாத் தொலையறதுக்கு ஒரு வழி இருக்காப்போல இருக்கே?’

‘அது என்ன வழி, மாமா?”

“யாராச்சும் ஒரு பணக்காரப் பய வீட்டுக்குப்போய் அவனுக்குத் தெரியாம ஒரு நாளைக்கு நம்ம வீட்டு விளக்கை ஏத்திக்கிட்டு வந்துட்டா, அவன் வீட்டு லச்சுமி நம்ம வீட்டுக்கு வந்துடுவா, இல்லையா?”

முனியம்மாள் சிரித்தாள்; கிழவனும் ஒருகணம் தன் கவலையை மறந்து அவளுடைய சிரிப்பில் கலந்து கொண்டான்.

*⁠*⁠*

சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை அழும் சத்தமும், அந்தக் குழந்தையை முனியம்மாள் அதட்டி அடிக்கும் சத்தமும் கிழவன் காதில் விழுந்தது.

“என்னத்துக்குக் குழந்தை அழுவுது? ஏன் அதைப் போட்டு நீ அடிக்கிறே?”என்று கிழவன் கேட்டான்.

“அத்தனை சோள மா வீட்டிலே கிடந்திச்சு. அதையாச்சும் நாலு ரொட்டியாத் தட்டி உழைச்சிட்டு வர ‘அந்த மனுச’னுக்கு வைக்கலாம்னு பார்த்தா, இந்தப் பேய்ப் பிள்ளை அது மாவாயிருக்கிறப்பவே தின்னுப் பிடணும்னு ஒரேயடியாய்ப் பிடிவாதம் பிடிச்சுத் தொலைக்குது’

“குழந்தைக்குப் பசிபோல இருக்குது. சுருக்க ஒரு ரொட்டிசுட்டு அதன் கையிலே கொடேன்!”

“எல்லாங் கொடுத்தேன் சுட்டரொட்டி வேணாமாம்; பச்சை மாவுதான் வேணுமாம்!”

“சரிதான் சோள ரொட்டியினுடைய லட்சணம் நம்ம குழந்தைக்கும் தெரிஞ்சு போச்சாக்கும்? அந்தப் பாழும் ரொட்டி தொண்டையை விட்டுக் கீழே இறங்கினாத்தானே? அதுக்குத்தான் பச்சை மாவாவே தின்னுப்பிடணும்னு குழந்தை நெனைக்குது”

“சோள ரொட்டி இறங்கலேன்னா, அப்பாவை பிஸ்கோத்து வாங்கி வந்து தரச் சொல்லிச் சாப்பிடறது தானே? நானா வேண்டாங்கிறேன்!” என்று முனியம்மாள் அந்தக் குழந்தையின் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள்.

‘குழந்தைகிட்ட உன் கோவத்தைக் காட்டாதே முனியம்மா! அது பிஸ்கோத்துக்கு எங்கே போவும்? அதன் அப்பன்தான் எங்கே போவான்? என்றான் கிழவன்.

இந்தச் சமயத்தில் அவன் மகன் கண்ணுச்சாமி உள்ளே துழைந்து மெளனமாகச்சட்டையைக் கழற்றிக்கொடியில் போட்டான்.

அவனைக் கண்டதும் “ஏண்டா அப்பா, இவ்வளவு நேரம்” என்று கேட்டான் கிழவன்.

“சங்கத்திலே இன்னிக்கு ஒரு மீட்டிங்கு அதுக்குப் போயிருந்தேன்” என்றான்.கண்ணுச்சாமி.

“மீட்டிங்காவது, கீட்டிங்காவது! பொழுதோட வீட்டுக்கு வந்து சேராம..”

“அதெப்படி வந்துவிட முடியும்? ஸ்டிரைக் கமிட்டியிலே நானுமில்லே ஒரு மெம்பராயிருக்கேன்”

“என்னது அது, என்னது அது….”

“ஸ்டிரைக் கமிட்டியிலே…”

“ஸ்டிரைக்குமாச்சு, மண்ணுமாச்சு வேலை செய்யறப்பவே வயிற்றுச் சோத்துக்கு வழியைக் காணோம். ஸ்டிரைக்காம், ஸ்டிரைக்கு!”

“அப்படித்தான் நானும், இன்னும் என்னைச் சேர்ந்த தாலைந்து பேரும் சொன்னோம். நம்ம தலைவர்களும் அப்படித்தானே சொல்றாங்க – முதல்லே உற்பத்தியைப் பெருக்கி ஊர்லே இருக்கிற பஞ்சத்தை ஒழியுங்க; அதுதான் உங்க கடமை; அப்புறம் உங்க உரிமையைப் பற்றிப் பேசிக்கலாம்னு…”

“ஆமா, அதுவரை உடம்பிலே உசிரு இருந்தாயில்லே!” என்று முனியம்மாள் குறுக்கிட்டாள்.

“சீ, சும்மா யிரு: ஸ்டிரைக் சேஞ்சா மட்டும் உடம்பிலே உசிரு வந்துடுமா? இருக்கிற உசிருமில்லே போயிடும்?”

“பொம்பளைக்கு என்னத்தைத் தெரியும்? நீ விசயத்தைச் சொல்லு” என்றான் எல்லாம் தெரிந்த ஆண்பிள்ளையான கிழவன்.

“என்னத்தைச் சொல்றது? கமிட்டியிலே எங்க கட்சிக்குப் பலமில்லே, ஸ்டிரைக் செய்யணும்னு சொல்ற கட்சிதான் ஜெயிச்சுடும்போல இருக்குது”

“அட பாவி பயல்களா திங்கிற சோத்திலே இப்படியும் மண்ணை அள்ளிப் போட்டுக்கிடுவானுங்களா?”

“யாரும் தான் சாக மருந்து தின்னமாட்டாங்க; பிழைக்கத்தான் மருந்து தின்னுவாங்க!” என்றாள் முனியம்மாள்.

“என்ன முனியம்மா! உனக்கு வாய் ரொம்ப நீண்டு போச்சே! வேலை செஞ்சி மாதம் பொறந்தா சம்பளம் வாங்கிக்கிட்டு வரப்பவே, நீ நேத்துப் பட்டினி, முந்தா நாள் பட்டினிங்கிறே, அதுவுமில்லேன்னா என்னத்தைச் செய்வே?” எனறு கேட்டான் கண்ணுச்சாமி.

“பாடுபடட்டும் ‘பசி, பசி’ன்னு பரிதவிக்கிறதைவிட பாடு படாமலே பரலோகமாச்சும் போய்ச் சேர்ந்துடலாமில்லே?”

“அதுக்கும் நாளு வரவேணாமா? அந்த நாளு வந்துட்டா தன்னாலே போய்ச் சேர்ந்துடறோம்!”

“ஐயோ இந்த இளம் வயசுலே நீங்க இப்படி உலகத்தை வெறுத்துப் பேசற கண்றாவியை நான் எங்கே போய்ச் சொல்லி அழுவேன்? பாழும் எமனும் என்கிட்ட வந்துட்டான் போல இருக்குது; நான் வேறே உங்களுக்குப் பாரமா இன்னும் இருந்துக்கிட்டு இருக்கேன்” என்றான் கிழவன்.

இந்தச் சமயத்தில் “அந்த ரொட்டி ஆறிப் போவுது; எடுத்துக்கிட்டு வரட்டுமா?” என்று தன் கணவனை நோக்கிக் கேட்டாள் முனியம்மாள்.

“சரி, எடுத்துக்கிட்டு வா எரிகிற வயித்துக்கு எதையாச்சும் போட்டு அடைக்க வேண்டியது தானே?” என்றான் கண்ணுச்சாமி.

அவன் கை கால்களை அலம்பிக் கொண்டு வருவதற்கும் முனியம்மாள் ரொட்டி கொண்டு வைப்பதற்கும் சரியாயிருந்தது. அதில் ஒன்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டே, “அப்பாவுக்குமா இந்த ரொட்டி?” என்று கேட்டான் கண்ணுச்சாமி.

“இல்லே, சாமி குத்தறப்போ விழற தவிட்டையெல்லாம் சேர்த்து வச்சிருந்தேன். அதை இன்னைக்கு எடுத்துப் புடைச்சுப் பார்த்தேன்; ஒரு கையளவு நொய் தேறிச்சு. அந்த நொய்யைக் கஞ்சியாய்க் காய்ச்சி அவருக்குன்னு எடுத்து வச்சிருக்கேன்!”

“நல்ல வேலை செஞ்சே! அவரு இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த ‘ஸ்பெஷலு கஞ்சி’யைக் குடிச்சி நமக்குத் துணையா யிருக்கட்டும்” என்றான் கண்ணுச்சாமி.

* * *

கண்ணுச்சாமியின்குடும்பத்தில் ஒருநாள் காட்சி இது. ஒருநாள் என்ன, ஒவ்வொரு நாளும் இதே காட்சி தான். மாதந்தோறும் அவனுக்கு ஏறக்குறைய நாற்பது ரூபாய் கிடைத்து வந்தது . பஞ்சப்படியையும் சேர்த்துத் தான்! இந்த வரும்படியில்தான் அந்த நாலு ஜீவன்களும் காலத்தைக் கழிக்கவேண்டும்.

‘வரவுக்குத் தகுந்த செலவு செய்ய வேண்டும்’ என்பதில், அவனுடன் அவனைச் சேர்ந்த மூன்று ஜீவன்களும் ஒத்துழைத்தன. ஆனால் ஒத்துழைக்காத ஒன்றும் அவர்களிடையே இருக்கத்தான் செய்தது. அது வேறு எதுவுமில்லை; அவரவர்களுடைய வயிறுதான்! பார்க்கப்போனால் அந்த வயிறுகளின்மீதும் குற்றம் சொல்வதற் கில்லை. ஏனெனில், ஆண்டவன்தான் ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அந்த வயிறுகளைத் தினந்தோறும் நாலு வேளைப் பசிக்கு ஆளாக்கினான். கடவுளையும் மீறி அவற்றை கண்ணுச் சாமியால் ஒருவேளை ஏமாற்ற முடிந்தது; சில நாட்கள் இரண்டு வேளைகள் கூட ஏமாற்ற முடிந்தது. ஆனால், ஒருநாளாவது நாலு வேளைகளிலும் ஏமாற்றமுடியவில்லை!

இதனால் அவன் மாதாமாதம் தன்வரும்படிக்கும் மேலே, வேறு யாரிடமாவது ஐந்து, பத்து என்று கடன்வாங்க நேர்ந்தது – வட்டிக்குத் தான் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவனால் கடன் வாங்கத்தான் முடிந்ததே தவிர, திருப்பித் தர முடியவில்லை. அப்படியே கொடுத்தாலும் அதைத் திருப்பி வாங்காமல் இருக்க முடியவில்லை.

இப்படியே ஆளுக்குக் கொஞ்சமாக வாங்கிய கடன் நாளடைவில் முப்பது ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. அதாவது, கிட்டத்தட்ட அவனுடைய ஒரு மாதச் சம்பளத்துக்குச் சேர்ந்து விட்டது; வாங்கிய சம்பளத்தைக் கடன்காரர்களிடம் கொடுத்துவிட்டு அவன் வெறுமனே வீட்டிற்கு வரமுடியுமா? ஆகவே, அவன் ஒரு யுக்தி, செய்தான். தன்னுடைய நண்பன் ஒருவன் உதவியால் ஒரு காபூலிவாலாவைப் பிடித்தான். அவனிடம் ரூபாய்க்கு இரண்டனா வட்டி விகிதத்துக்கு நாற்பது ரூபாய் மொத்தமாகக் கடன்வாங்கினான். முப்பத்தைந்து ரூபாயை கண்ணுச்சாமியிடம் கொடுத்தான். இதனால் அவனுடைய கவலையும் ஒருவாறு தீர்ந்தது. மாதா மாதம் சம்பளம் வாங்கி அப்படியே காபூலிவாலாவிடம் கொடுத்து விடுவான். அவன் அதைப் பழைய கடனுக்கு வரவு வைத்துக் கொண்டு, புதுக் கடனாக மீண்டும் நாற்பது ரூபாய் கொடுப்பான் – வட்டிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு தான் – இந்த ரீதியில் கண்ணுச்சாமியின் காலம் கழிந்து வந்தது.

மத்தியில் ஏதாவது ‘போனஸா’கக் கிடைக்கும்போது கண்ணுச்சாமி அந்தக் கடனைத் தீர்த்து தலை முழுகிவிட வேண்டும் என்று நினைப்பான். ஆனால், மனிதன் நினைப்பதுபோல்தான் தெய்வம் நினைப்பதில்லையே! – அதற்கென்று வேறு வகைகளில் ஏதாவது செலவோ, கடனோ காத்துக் கொண்டிருக்கும். அவை போனஸ் தொகையைச்சந்தடி செய்யாமல் விழுங்கிவிட்டு அப்பாற் போய்விடும். அந்த நாற்பது ரூபாய் கடன் மட்டும் என்றும் சிரஞ்சீவியாக இறவா வரம் பெற்றதாக காபூலிவாலாவுக்கு மாதம் ஐந்து ரூபாய் லாபத்தையும், கண்ணுச்சாமிக்கு ஐந்து ரூபாய் நஷ்டத்தையும் கொடுத்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும். இது கதையல்ல; கற்பனையல்ல; கண்ணுச்சாமியின் சொந்த அனுபவம்!

* * *

அன்று பத்தாந்தேதி, சனிக்கிழமை; சம்பள தினம், காலையில் கண்ணுச்சாமி வேலைக்குக் கிளம்பும் போது, ‘மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வராதீங்க அங்கேயே ஏதாச்சும் வாங்கித் தின்னுட்டு வேலையைப் பாருங்க!” என்றாள் முனியம்மாள்.

“ஏன்… ?”

“அந்தச் சோளமாக்கூட நேத்தோடே தீர்ந்து போச்சு சாயந்திரம் சம்பளம் வந்து நாளைக்குப் போய் அரிசி வாங்கிக்கிட்டு வந்தாத்தான் அடுப்புப் புகையும்!”

“உம்…..இங்கே இப்படியிருக்குது, அங்கே என்னடான்னா, அந்தப் பயலுங்கெல்லாம் நேத்துக் கூடி இன்னைக்குச் சம்பளத்தை வாங்கிக்கிறதுன்னும், நாளையிலேருந்து ‘ஸ்டிரைக்கு” செஞ்சிப்பிடறதுன்னும் தீர்மானம் பண்ணிப்பிட்டானுங்க!”

“நீங்க என்னத்துக்கு அந்த ‘ஸ்டிரைக்’கைப் பத்தியே சும்மா பேசிக்கிட்டு இருக்கீங்க? நாலு பேருக்கு ஆகிறது நமக்கும்!”

“சரி, நான் போயிட்டு வரேன்”

“வரும்போது உங்க அப்பாவுக்கும் குழந்தைக்கும் ஏதாச்சும் தின்ன வாங்கிக்கிட்டு வாங்க!” என்றாள் முனியம்மாள்.

“ஆகட்டும்!” என்றுதுண்டை உதறித் தோளின் மேல் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான் கண்ணுச்சாமி.
* * *

அன்று மாலை கண்ணுச்சாமியின் தலையில் எதிர்பாராத விதமாக ஒரு பேரிடி விழுந்தது. அவனிடமிருந்து வழக்கம்போல் பழைய கடனை வாங்கிக் கொண்ட காபூலிவாலா புதுக் கடன் கொடுக்க மறுத்துவிட்டான். காரணம் என்னவென்று கேட்டதற்கு “நீங்க நாளைக்கு வேலை செய்யாம ஸ்டிரைக் பண்ணப் போறிங்க இல்லே, நான் இன்றைக்கே உங்களுக்குக் கடன் கொடுக்காம ‘ஸ்டிரைக்’ பண்ணிப்பிட்டேன்!” என்று அவன் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிவிட்டான்.

கண்ணுச்சாமிக்கோ சிரிக்கவுந் தோன்றவில்லை; அழவுந் தோன்றவில்லை; எவ்வித உணர்ச்சியுமின்றி அவன் அடிமேல் அடி எடுத்துவைத்து வெளியே வந்தான்.

ஒருகணம் நாலா திசைகளிலிருந்தும் இடியோசை கிளம்பிக் காதுகளைத் தாக்குவது போலவும், பூமி பிளந்து கால்கள் கீழே நழுவிச் செல்வது போலவும் அவனுக்குத் தோன்றிற்று.

அவ்வளவுதான்; அப்படியே உட்கார்ந்துவிட்டான். “…சாயந்திரம் சம்பளம் வந்து நாளைக்குப் போய் அரிசி வாங்கிக்கிட்டு வந்தாத்தான் அடுப்புப் புகையும்”

“வரும்போது உங்க அப்பாவுக்கும் குழந்தைக்கும் ஏதாவது தின்ன வாங்கிக்கிட்டு வாங்க!”

இந்த அபாய அறிவிப்புகளை நினைத்ததும் கண்ணுச்சாமிக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே எழுந்தான்; எழுந்து நடந்தான். எங்கும் நிற்கவில்லை; நடந்து கொண்டேயிருந்தான்.

ஓர் ஒற்றையடிப் பாதை – அது கலக்குமிடத்தில் ஒரு சின்னத் தெரு, அடுத்தாற்போல ஒரு பெரிய வீதி. அதற்கும் அப்பால் ஒரு விசாலமான சாலை அந்தச் சாலையின் கோடியே தெரியவில்லை – அதையும் கணப் பொழுதில் கடந்துவிட்டான் அவன். ஆயினும் அவன் நிற்கவில்லை; நடந்து கொண்டேயிருந்தான், எங்குதான் போகிறான்?

“என்ன கண்ணுச்சாமி எங்கே போறே?” என்று அவனை வழிமறித்துக் கேட்டான் ஒரு சகோதரத் தொழிலாளி.

அவனை மேலுங் கீழுமாகப் பார்த்துத் திருதிருவென்று விழித்துக் கொண்டே “வேறே எங்க போவேன்? வீட்டுக்குத்தான்” என்றான் கண்ணுச்சாமி.

“ஹிஹ்ஹிஹ்ஹி! உன் வீடு எங்கே போச்சு, இங்கே வந்து நிக்கிறியே, அப்பா!”

“மறந்துட்டேன்; என் வீட்டுக்கு வழி அப்படியில்லே போவுது” என்று சொல்லிக் கொண்டே கண்ணுச்சாமி திரும்பினான்.

“எப்படிப் போவுது? – இப்படிப் போறதை விட்டுட்டு அப்படியில்லே போறே தண்ணி கிண்ணி போட்டுக்கிட்டு இருக்கியா, என்னப்பா? சரி சரி எப்படியாச்சும் தொலைஞ்சுபோ, அதுவும் ஒருவிதத்திலே நல்லதுதான்” என்று சொல்லிவிட்டு, அவன் மேலே நடந்தான்.

கண்ணுச்சாமியோதன்பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான் – வேறு திசையை நோக்கினான்.

வழியில் ஒரு சிறுவன் இராப் பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்தான். அவன் கையில் நோட்டுப் புத்தகத்தையும் பென்ஸிலையும் கண்டதும் கண்ணுச்சாமிக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றிற்று. அவனிடமிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி, அதில் ஏதோ எழுதினான். பிறகு, தான் எழுதிய பக்கத்தை மட்டும் கிழித்து எடுத்துச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு நடையைக் கட்டினான்.

இப்பொழுது அவனுடைய மூளை தீவிரமாக வேலை செய்தது. அதன் பயனாகத்தானோ என்னவோ, நாற்சந்தியொன்றைக் கண்டதும் அவனுடைய நடை சிறிது தளர்ந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் அங்கே நின்று விட்டான்! நின்றபடி யோசித்தான். யோசித்தான் – அப்படி யோசித்தான்.

பிறகு, தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று தன்னுடைய நிலைமையைச் சொல்லி, “இந்தச் சமயத்தில் எனக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?” என்று கல்லுங் கரைந்துருகுமாறு கேட்டான்.

நாளையிலிருந்து ‘ஸ்டிரைக்’ அல்லவா? ஆகவே, எல்லோரும் ஏகோபித்துக் கையை விரித்துவிட்டார்கள்.

நடைபாதை ஒன்றுதான் அவனுக்கு வஞ்சனையில்லாமல் வழி விட்டுக் கொண்டேயிருந்தது; மீண்டும் நடந்தான்!

ஒரு குளம் குறுக்கிட்டது; அதைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது.

சட்டையைக் கழற்றிக் கரையில் வைத்தான். நல்ல வேளையாக அன்றுவரை தான் நீந்தக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நினைத்துச் சந்தோஷப்பட்டான்.

அடுத்த நிமிஷம் ‘தொபுகடீர்’ என்று ஒரு சத்தம்; அவன் குளத்தில் விழுந்தேவிட்டான்!

“யார் அது ?”

“மணி பத்துக்கு மேலாகிறதே! இந்நேரத்தில் குளத்தில் குதிப்பானேன்?”

இது அவ்வழியே வந்துகொண்டிருந்த போலீஸாரின் பேச்சு

இருவரும் உடனேகுளக்கரையை நெருங்கினர்; திக்குமுக்காடும் கண்ணுச்சாமியைக் கண்டனர். கரையும் சேர்த்தனர்.

கண்ணுச்சாமி வாழ்க்கையை வெறுத்தான்; ஆனால் வாழ்க்கை அவனை வெறுக்கவில்லை!

“என்னப்பா, யாரையாவது தீர்த்துப்பிட்டு வந்து குலுத்திலே குளிக்கிறியா, என்ன?”

“கையிலே ஏதாச்சும் கத்திகித்தி இருக்குதான்னு பார், அண்ணே”

“கையிலே ஒண்ணுமில்லே, சட்டையைத்தான் இங்கே கழற்றி வைத்திருக்கிறான்!”

“அதை எடு, பார்ப்போம்?”

“இதோ பார், அப்பா!”

“என்ன அது?”

“கடிதாசி!”

“அந்த ‘டார்ச்’சை இந்தப் பக்கமாகக் கொஞ்சம் காட்டு – கடிதாசியிலே என்ன எழுதி இருக்குதுன்னு பார்ப்போம்!”

“போலீஸ் ஜவான்களுக்கு என்னை யாரும் குளத்தில் தள்ளவில்லை; நானேதான் என்னைத் தள்ளிக் கொண்டேன். காரணம் என்னவென்று தெரிந்து நீங்கள் இனிமேல் செய்யப்போவது ஒன்றுமில்லை. இந்தக் கடிதம் எதற்காக வென்றால், நீங்கள் அனாவசியமாக துப்பு விசாரித்து அவதிப்பட வேண்டாம் என்பதற்கே! – கண்ணுச்சாமி!”

“ஐயே, இவரு தற்கொலையில்லே பண்ணிக்க வந்திருக்காரு?”

“சரிசரி, நமக்கு ஏன் இந்த வம்பு ஸ்டேசனுக்கு இழுத்துக்கிட்டுப் போயிடுவோம்!”

இது போலீஸாரின் முடிவு.

* * *

அடுத்த சில தினங்களுக்கெல்லாம் கண்ணுச்சாமியின் தற்கொலை வழக்கு நீதி மன்றத்தில் வழக்கம்போல் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கண்ணுச்சாமியிடம் அனுதாபம் கொண்ட தோழர்களில் சிலர், ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, அவனுக்கென்று ஒரு வக்கீலை நியமித்தனர்.

அந்த வக்கீல் தன் கட்சிக்காரன் தற்கொலை செய்து கொள்வதற்காகக் குளத்தில் குதிக்கவில்லை என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் தேட முடியுமோ, அத்தனை ஆதாரங்களையும் தேடி எடுத்துக் காட்டி வாதித்தார்.

சர்க்கார் தரப்பு வக்கீலோ, கண்ணுச்சாமி தற்கொலை செய்து கொள்வதற்காகத்தான் குளத்தில் குதித்தான் என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் தேட முடியுமோ, அத்தனை ஆதாரங்களையும் தேடி எடுத்துக்காட்டி வாதித்தார்.

கடைசியில், சர்க்கார்தரப்பு வக்கீலின் கட்சி தான் ஜயித்தது!

நீதிபதி தமது தீர்ப்பை வாசித்தார் – கண்ணுச்சாமிக்கு ஏழு வருஷச் சிறைத் தண்டனை என்று!

இதைக் கேட்டதும் கண்ணுச்சாமி ‘இடி இடி’ என்று சிரித்துக் கொண்டே சொன்னான்:

“நல்ல வேடிக்கை ஐயா இது! எனக்கு வைச்ச வக்கீல் என்னடான்னா, நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காகக் குளத்திலே விழலேங்கிறதை நிரூபிக்கிறதுக்காக இத்தனை நேரமும் கரடியாக் கத்தினாரு. சர்க்கார் கட்சி வக்கீல் என்னடான்னா, நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காகத்தான் குளத்திலே விழுந்தேன் என்கிறதை நிரூபிக்கிறதுக்காக இத்தனை நேரமும் படாத பாடு பட்டாரு. ஆனா, ‘நான் என்னத்துக்காகத் தற்கொலை பண்ணிக்கப் போனேன்?’ என்கிறதைப் பற்றி மட்டும் யாரும் விசாரிக்கலையே! – இல்லை நான் கேட்கிறேன் – இந்த கோர்ட்டுங்க எல்லாமே குற்றத்தை மட்டுந்தான் விசாரிக்குமா? குற்றத்துக்குக் காரணம் என்னன்னு விசாரிக்கவே விசாரிக்காதா?”

அதற்குமேல் கோர்ட் சேவகன் சும்மா நிற்கவில்லை; ‘உஸ், ஸைலன்ஸ்!’ என்று உரத்துக் கூவினான்.

– கல்கி 01-02-1948.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *