‘‘வேலை வாங்குறதுக்காக அப்பா நாளைக்கு என்னைப் பட்டாசுக் கம்பெனிக்கு அழைச்சுக்கிட்டுப் போகப் போறாராம்மா? நான் ஸ்கூலுக்குப் போகணும், இல்லேன்னா டீச்சர் அடிப்பாங்க!’’ -அழுதுகொண்டே கூறிய மகனின் தலையை வாஞ்சையுடன் வருடியவாறே, ‘‘அப்பா கூப்பிட்டாருன்னா மறுக்காம போயிட்டு வாடா. எல்லாம் நம்ம நன்மைக்காகத்தான் சொல்வாரு’’ என்றாள் சரசு.
வாசல் திண்ணையில் உட்கார்ந் திருந்த ஆறுமுகத்தின் முகத்தில் கவலை ரேகைகள். ‘சரவணனை நாளைக்கு அழைச்சுக்கிட்டுப் போனால் கண்டிப்பா வேலை கிடைச்சுடுமா? சிவகாசியிலே அந்த பட்டாசு கம்பெனி யில்தான் அதிக சம்பளம் தர்றாங்களாம். வேலை மட்டும் கிடைச்சு குடும்பத்துக்கு கூடுதலா பணம் வந்துச்சுன்னா சரவணனுக்கும் அவன் தங்கச்சிக்கும் நல்ல துணிமணிகளும், மனைவிக்கு சேலையும் வாங்கிக்கலாம். வாங்கின கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சுடலாம்!’
மறுநாள்… ‘‘என்ன ஆறுமுகம், இவன்தான் எட்டாம் வகுப்பு படிக்கிற உன் பையனா? ஓ.கே! நாளை லேர்ந்து வேலைக்கு வந்திரலாம். அப்புறம், எங்க கம்பெனி கண்டிஷன் எல்லாம் தெரியுமில்லே?’’ என்று கேட்டார் மேனேஜர்.
‘‘தெரியுங்க. பசங்களை வேலைக்கு அனுப்பாம, படிக்க வைக்கிறவங்களுக்கு மட்டும்தான் இங்கே வேலை. என்னிக்குப் பசங்க படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பினாலும் எங்க வேலை போயிடும். ஏஜென்ட் எல்லாம் தெளிவா சொல்லி இருக்காருங்க. இவனைத் தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்பிப் படிக்க வைப்பேன்க!’’. நெகிழ்ச்சியுடன் கை கூப்பினான் ஆறுமுகம்.
– மே 2006