அழையா அழைப்புகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 14,076 
 
 

யார் அந்த குமார்?

எனக்குத் தெரியாது. இந்தப் பெயரைத் தவிர அவரைப் பற்றிய எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்வதிலும் விருப்பமில்லை. எவனோ ஒருவன் பற்றி நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்.? எனக்குத் தேவையும் இல்லை. ஆனாலும் அந்த குமார் என் வாழ்க்கையில் தேவையற்ற குறுக்கீடாக மாறியதற்காக என் அலுவலகத்தைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

அழையா அழைப்புகள்இடம்மாற்றம் பெற்று பணியில் சேர்ந்ததும் எனக்கு ஒரு செல்போன் கொடுத்தார்கள். அடுத்த நாளே, அதை வாங்கிக் கொண்டு வேறு எண் கொண்ட செல்போன் கொடுத்தார்கள். எனக்கு எரிச்சலாக இருந்தது. முந்தைய இரவுதான் எல்லா நண்பர்களுக்கும் எனது புதிய தொலைபேசி எண் இதுதான் என்று குறுந்தகவல் அனுப்பினேன். இப்போது மீண்டும் தொடர்பு எண் மாறுகிறது. மீண்டும் குறுந்தகவல் தர வேண்டும். அலுவலகத்தில் இதையெல்லாம் சொல்லிக்கொள்ள முடியுமா?

அந்த செல்போனை வாங்கிக்கொண்ட அன்றைய இரவுதான் எனக்குப் புரிந்தது.

என் அலுவலகம் சார்ந்த அனைத்து எண்களையும் பதிவு செய்து முடித்த சில நிமிடங்களில் அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “”ஏன் குமாரு, போன் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணவேயில்ல….” பொத்தானை அழுத்தி ஹலோ சொல்லும் முன்பாக, திறக்கப்பட்ட பீர் பாட்டில் போல நுரைத்துக் கொண்டு வந்தன வார்த்தைகள். என்னை பதில் சொல்லவே விடவில்லை. எரிச்சலுடன் தொடர்பைத் துண்டித்தேன்.

விடுவதாக இல்லை. மீண்டும் செல்போன் சிணுங்கியது.

வேறுவழியின்றி எடுத்தேன். இப்போது நுரை அடங்கியிருந்தது. “”கோபம் வருதில்ல. அப்போ எங்களுக்கு எப்படியிருக்கும்? யோசிச்சுப் பாரு”.

“”நீங்களும் யோசிச்சுப் பாக்கணும். குமாருகிட்டத்தான் பேசறோமான்னு”

என் கரகரத்த குரல் அவர் மூளைக்குள் “குமார்’ பிம்பத்தை உடைத்துக் கொண்டிருந்தது.

“”குமா..ரு..தானே”.

உறுதிப்படுத்திக்கொள்ள கேட்ட அந்த பயம் கலந்த குரலை வன்மையுடன், “”இல்ல. ஒழுங்கா நம்பரைப் பார்த்து டயல் பண்ணுங்க”. போனை கட் செய்து வைத்தேன்.

ஏதோ ஒரு ராங் கால் என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஆனாலும் மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு!. பொத்தானை அழுத்தியதும், சுடுபால் குடித்த தெனாலிராமன் பூனைபோல, “குமாரு’ என்று மெலிதான, இணக்கமான தொனியில் தொடங்கியது.

நான் மவுனமாக இருந்தேன்.

“குமாரு”

நான் என் குரலை தன்மையுடன் குழைவாக “”யாரு” என்றேன், வேண்டுமென்றே.

“”என்னப்பா நீ,விளையாடுறியா? நம்பரைப் பாத்துட்டு யாருன்னு கேக்கறே. இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம். இப்போதான் ராங்காலு போயி ஒருத்தன்கிட்ட உனக்காக பாட்டு வாங்கினேன். சும்மா விளையாடாதே குமாரு… ஒரு போன் பண்றதுக்கு உன்னால முடியலையா? நீ சொன்னாத்தானே அடுத்த வேலைய பாக்க முடியும்? ஏன் இப்படி ஆயிட்டே”

“”ஹலோ”

“”நீ எப்ப முடிச்சு குடுப்பே. உன்ன நம்பி நான் வாக்கு கொடுத்துட்டேன். இப்போ அவங்க என்னத்தானே கேக்கறாங்க. உனக்குக் கொஞ்சமாவது இது இருந்தா..”

“”உனக்கு இருக்குதா முதல்ல”, என் கரகரத்த குரலை வெளிப்படுத்தினேன்.

“”யாரு”

“”ஒருத்தன்கிட்ட பாட்டு வாங்கினேன்னு சொன்னியே அந்த ஒருத்தன்”

“”நீங்க குமாரு இல்லையா? நம்பர் செக் பண்ணித்தான் போட்டேன். எப்படி ராங் கால் ஆச்சுன்னு தெரியலையே”

நான் கட் செய்தேன்.

அடுத்தடுத்து பல அழைப்புகள் வந்தன.

-“டேய் குமாரு.. ‘

-“என்ன குமாரு… ‘

-“என்னடா ராசா… ‘

-“நான்தான் தேவியக்கா பேசறேன்’

-“சித்தோடு பஞ்சாயத்து ஆபிஸ்ல இருந்து பேசறங்க, இதோ ஐயாகிட்ட கொடுக்கறேன்’.

-“குமாரு சார், இன்னிக்கு வந்தா பணம் கிடைக்குமா?’

-“நான்தாங்க, அக்ரி ராமசந்திரன்..’

-“என்ஜினியர் சார், ஒரு லோடு ஜல்லிக்கு பணம் பாக்கி நிக்குதுங்களே!’

இவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லியதிலிருந்து ஒருவாறாக குமார் பற்றிய பிம்பம் என் மனத்திரையில் உருவானது. அவர் ஒரு கட்டடப் பொறியாளர். ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் அவரைப் பற்றி மேலும் துருவி விசாரிக்க மனம் ஆசைப்பட்டாலும், எதற்காக என்று போனைத் துண்டிப்பதே வழக்கமாக இருந்தது.

இந்த அழைப்புகள் மெல்லமெல்ல, அற்றநீர் குளத்துப் பறவைகள் போல காணாமல் போகும் என்று சும்மா இருந்தேன். ஆனால் அப்படியாகவில்லை. தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அதுவும் முக்கியமான வேலையில் இருக்கும்போதெல்லாம்- ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது, ரயில்வே டிக்கெட் கவுன்டரில் வரிசையில் நிற்கும்போது, கழிப்பறையில் உட்காரும்போது, சாலையில் உடன் நடந்துவரும் அழகான பெண்ணை கொஞ்சம் கூடுதலாக பார்க்க நினைக்கும்போது, முக்கியமான ரிப்போர்ட் எழுதும்போது, திரையரங்கில், ஷாப்பிங் காம்பளக்ஸில், நல்ல உறக்கத்தில்… அழைப்புகள் ஓயவே இல்லை.

எரிச்சலில், எதிர்முனையில் இருப்பவர் முகம் கோணும்படி திட்டினேன். ஒரு நபரிடம், “அந்த குமாரை கண்டுபிடிச்சு உதை. என்னை ஏமாத்திட்டுப் போயிட்டான்’ என்றுகூட சொன்னேன்.

அலுவலகத்தில் ஒட்டுமொத்தமாக பேரம்பேசி பெற்ற முப்பது, நாற்பது இணைப்புகளில் இந்த எண்ணும் ஒன்று என்பதால் இதை மட்டுமே தனியே சரண்டர் செய்வதா என்று ஆர்வம் காட்டாமல் விட்டார்கள்.

குமாரைக் கேட்டு வந்த தொடர்பு எண் அனைத்தையும் “இக்னோர்’ தொகுப்பில் போட்டுக்கொண்டே வந்தேன். ஆனாலும் புதிய புதிய எண்களில் ஒழிவே இல்லாமல் வந்துகொண்டிருந்தன அழைப்புகள்.

அறிமுகம் இல்லாத எண்களை எடுக்காமல் இருந்துவிடலாம் என்றாலும் முடியவில்லை. ஏதாவது முக்கியமான தகவலாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காக எடுத்துப் பேச வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் மறுபடியும் கூப்பிட்டால் பேசலாம் என்று ஒரு நெடிய அழைப்புமணி அடித்து ஓயும்வரை பேசாமல் இருப்பேன். ஆனாலும் அடுத்த நிமிடமே அதே எண்ணிலிருந்து அழைப்பு வரும்.

அந்தக் குமார் ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கலாம், வீடு கட்டித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு பணம் வாங்கிக் கொண்டு மறைவாகப் போனதால் எல்லாரும் இந்த எண்ணில் தேடிக்கொண்டிருக்கலாம். அல்லது நிறைய கடன்வாங்கி, நஷ்டப்பட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனக்கு வந்த அழைப்புகளில் ஒரு நபரிடம் நான் சொன்னேன். “அந்த குமாருக்குப் போன் செய்ய முடிந்தால், இந்த பழைய எண் சரண்டர் செய்யப்பட்டுவிட்டது, அதில் தொடர்பு கொள்ளவேண்டாம் என்று அனைவருக்கும் ஒரு குறுந்தகவல் கொடுக்கச் சொல்லுங்கள்’ என்றேன். அவரும் சரிங்க என்றார். ஆனால் அழைப்புகள் தொடர்ந்தன. அந்தக் குமார் ஒரு கடுகடுப்பான, ஏமாற்றுப்பேர்வழி என்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கியிருந்தது என் மனது.

அந்த நேரத்தில்தான் இந்த அழைப்பு வந்தது.

“”ஏய் திருடு… வரேன்னுட்டு வரல. ஒன்றரை மாசமாவுது”

இனிய பெண்குரலைக் கேட்டதும் மசமசவென்றது. ஆனாலும்… அச்சம். தொடர்பை துண்டித்தேன். இதயம் படபடத்தது.

மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு.

வழக்கமான எரிச்சல் இல்லவே இல்லை. என் இதழில் ஒரு கிருஷ்ணப் புன்னகை. அந்தக் குரலை இன்னும் கேட்க விருப்பம் பொங்கியது.

பொத்தானை அழுத்தினேன்.

“”என்ன கட் பண்றீங்க. ஓ.. நாங்க புடிக்காம போயிட்டமோ…”

கொஞ்ச நேரம் குமாராக மாறிவிட ஆசை வந்தது. ஆனால் மனது தலையில் குட்டியது.

“”நீங்க குமார்கிட்ட பேசல”

“”ஓ..வேற யாரோவா!, அதெப்படி, குமாருக்குத்தான் போன் பண்றேன்னு உனக்குத் தெரியும் குமாரு..” ஒரு குலுங்கல் சிரிப்பு. கைக்குட்டையை வாயில் வைத்துக்கொண்டு சிரிக்கும் அழகான குரலுக்குச் சொந்தமான அழகான முகத்தை நடிகையரின் அங்கங்களைப் பொருத்தி சித்திரமாக்கிக் கொண்டிருந்தது மனது.

“”நான் குமார் இல்லீங்க. அவரு இந்த நம்பரை சரண்டர் பண்ணி ரெண்டு மாசமாகுது. ஆனாலும் நிறைய கால் வருதுங்க”.

“”ஐய்..யோ சா…ரிங்க..”

“”பரவாயில்லை”

கொஞ்சம் பேசினால் மடங்கிடும்டா என்றது மூளை.

“”அவருக்கு வேற லேண்ட் லைன் இருந்தா பேசிப்பாருங்க”.

சித்திரம் வரைவதை நிறுத்திவிட்டு, பாதை விலகுகிறாய் என்றது மனது.

“”தேங்க்ஸ்ங்க. நீங்க?”

அந்தக் குரலில் எல்லையற்ற- தேவையற்ற- ஆர்வம்.

மூடிகிட்டு போனை கட் பண்ணுடா என்றது மனது.

“”இது ஆபிஸ் போனுங்க” என்று அலுவலகத்தின் பெயரைத்-தேவையே இல்லை- சொன்னேன்.

ராஸ்கல் போதும்டா என்றது கடுகடுத்த மனது.

அந்தப் பெண் என் அலுவலகம் இருக்கும் லேண்ட்மார்க்கைச் சொல்லி, “அங்கதானே..’ என்றாள்.

என் மனது என் உடலைவிட்டு வெளியே குதித்து போனைத் துண்டித்தது. அதற்குத் தெரியும். இது எதில்போய் முடியும் என்று.

அந்த அழைப்பு மீண்டும் வந்தால் எடுத்துப்பேசத் தோதாக “லவ்லி வாய்ஸ்’ என்று எண்தொகுப்பில் சேமித்தேன். மனது கோபம் கொண்டு முரண்டு பண்ணியது. முதலில் அதை அழி என்று ரகளை செய்தது. நிம்மதியாக ஒரு டீ குடிக்கவும்கூட முடியவில்லை. அதனால் அதை அழித்துவிட்டேன். அதன் பிறகு அந்த இனிய குரல் அழைக்கவே இல்லை. ஒருவேளை, நான் போனை துண்டித்த நேரம், விதம் என் மனதின் ருத்ர தாண்டவத்தை உணர்த்தியிருக்கலாம்.

ஆனாலும் அழைப்புகள் தொடருகின்றன.

யார் யாரோ பேசுகிறார்கள்? கேட்கிறார்கள். “குமாரு..!?’

இந்த மாதிரியான அழைப்புகள் வரும்போதெல்லாம், ஒரு செல்போனில் இரண்டு சிம் கார்டு போல, எனக்குள் ஒரு குமாரு புகுந்து கொண்டதாகத் தோன்றுகிறது. “நான் குமாரு இல்ல’ என்று சொல்வதும்கூட, “அவரு வீட்டல இல்ல’ என்று சொல்வதைப் போல ஆகிவிட்டது.

– ஜூலை 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *