அழகியின் துயரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 2,017 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மார்கழி மாதத்து இனிய குளிர்மை நிறைந்த காலைப்பொழுது, திருவெம்பாவை நாட்களை ஒட்டிவந்த ஒரு வெள்ளிக்கிழமை, புத்தம்புதிய பனிமலராக, நீண்டு நெளிந்த ‘பஸ்கியூவில்’ அவள் நின்றாள். கலகலப்பான காலையில், உடலைத்தடவி புத்துணர்ச்சி ஊட்டிச்செல்லும் இனிய குளிர்ந்த தென்றலில் அருவியாகச் சொரியும் ‘சவர்பாத்தில் ‘ குளித்த ஈரச் சுவடு மாறாமல் அவள் நின்றாள்; ஈரங்கலையாத தலையை வாரி, நேர் வகிடுவிட்டு, ஒற்றைப்பின்னலாகப் பின்னி, பச்சை ‘றிபன்’ கட்டியிருந்தாள்; பசிய வெண்மையான நந்தியாவட்டை மலரொன்றை கூந்தல் தொடக்கத்தில் பதித்திருந்தாள். அகன்ற நெற்றியில் மங்கலாகப் பதிந்திருந்த திருநீற்றுக் கீற்றுக்களுக்கு மத்தியில், செஞ்சாந்துப் பொட்டு இட்டிருந்தாள். 

இந்த உலக வாழ்க்கையில் எதுவித சலனமுமற்றவள் மாதிரி, அல்லது இந்த வாழ்க்கையின் நுணுக்கங்களைப் புரிந்தவள் மாதிரி ஏதோவொரு சாந்தமான உணர்ச்சியை முகத்தில் தேக்கி அவள் பஸ்கியூவில் நின்றாள். 

ஒன்றன்பின் ஒன்றாக உறுமி மறைந்த பஸ்களுக்கு ஏற்ப, கியூவும் குறைந்து வர அவளும் மெதுமெதுவாக கியூவின் முன்னணிக்கு வரலானாள். அவளுக்கு முன்னால் நாலைந்து பேரே நின்றிருந்தார்கள். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழியையும் தெரிந்த அந்தச் சுறுசுறுப்பான பொயின்ற் கொன்றோலர் பலத்துச் சத்தமிட்ட வண்ணம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக நின்ற இளம் வாலிபன் மெளனமாக நின்று, ஏதேதோ ‘கவர்ச்சிகளை’ அவதானித்துக் கொண்டிருந்தான். 

அவன் கண்களுக்கு அவள் எடுப்பாகத் தென்பட்டாள். வாழத்துடிக்கும் இளமைப் பொலிவில் எழிற்கோலம் காட்டி எத்தனையோ உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் அரம்பை போல அவள் அவனுக்குக் காட்சி தந்தாள். தமிழ்ப்புராணப் படங்களில் ‘அரம்பைகளாக’ நடிப்பவர்களை அவன் பார்த்திருக்கிறான். அவர்களின் இளமை மேடிட்ட கோலங்களை எண்ணித் தவித்திருக்கின்றான்; அவர்களை அடையத் துடித்திருக்கிறான். நிஜ வாழ்க்கையில், கண்ணுக்கெதிரே நிற்கும் ‘தேவதையாய்’ அவளை அவன் பார்த்தான். அவளில் பதித்த கண்களை எடுக்க மனமின்றித் தவித்தான். 

நீண்ட நேரத்தின்பின் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த புறக்கோட்டை பஸ் வந்து நின்றது. முதிர்ந்த கொண்றோலர் ஒழுங்கீனமாக நடக்க முயன்ற யாரோ ஒரு காற்சட்டை போட்ட மனிதரை ஆங்கிலத்தில் ஏசினார். ‘காற்சட்டை போட்ட நீங்களே உப்பிடிச் செய்தால், நாங்களென்ன செய்யிறது?’ அவர், அவன் தன்னைப் பேசவில்லை என்பது மாதிரி, அவன் பேசுவதைக் கவனியாதவர் மாதிரி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றார். 

நின்ற பஸ்சில் ஒருவர் பின் ஒருவராக ஏறினார்கள். இளம் வாலிபன், அவர்கள் ஒழுங்காக ஏறுகிறார்களோவெனக் கண்காணித்தான். இன்னும் நாலைந்து பேர் ஏறக்கூடிய இடம் பஸ்சில் இருந்தது. அடுத்ததாக அவள் ஏறப்போகின்றாள்; அவன் கண்ட ‘அரம்பை’ ஏறப்போகிறாள். அவள் பஸ்சை நோக்கி அடிவைக்கிறாள். அவன்கை நீண்டு வழியைத் தடுத்தது. அவளின் அழகிய அங்கங்கள் அவனின் கையில் பட்ட உணர்வில் அவன் புளகாங்கிதம் அடைந்தான். அவள் தலையைக் குனிந்தவண்ணம் பின்தங்கினாள். மேல்தட்டின் ஆரம்பப்படியிலும், கீழ்த்தட்டின் ஆரம்பத்திலும் கால்களை ஊன்றி நின்ற இளம் ‘கொண்டக்டர்’, அந்தக் கொன்றோலரைப் பார்த்து அர்த்தமுள்ள சிரிப்புச் சிரித்தான். அவனும் பதிலுக்குச் சிரித்தான். 

அவர்கள் சிரித்ததை அவளும் கண்டாள். அவர்கள் ஏன், எதற்காக அப்படிச் சிரித்தார்கள் என்பதை அவளும் உணர்ந்திருந்தாள். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இப்படி முன்பும் எத்தனையோ முறை அவள் ஆத்திரப்பட்டிருக்கிறாள். தன்னால் ஒன்றும் செய்யமுடியாத நாணங்கலந்த பெண்மையை நினைத்து அவள் கவலைப்பட்டிருக்கிறாள். எத்தனையோமுறை இப்படி எத்தனையோ காரணங்களுக்காக அவள் அழுதிருக்கிறாள். அப்போதும், ஒருமுறை பலத்துச் சத்தமிட்டு அழவேண்டும்போல அவள் மனம் குறுகுறுத்தது. அவளையும் மீறி அவள் கண்களில் கண்ணீர் மணிகள் பளிச்சிட்டன. கண்களில் ஏதோ தூசி விழுந்ததுபோல, தன் சேலைத் தலைப்பால் அவள் தன் கண்களை ஒற்றிக்கொண்டாள். தன் கவலைகளுக்குக் காரணமான, தன் அழகையே அவள் வெறுத்தாள். ‘நான் ஏன் இப்படி அழகாகப் பிறந்து தொலைத்தேன்’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். 

தன் வாழ்க்கைச் சூழலை எண்ணிப்பார்த்தாள். குறைந்த சம்பளம் பெறும் கடைத்தொழிலாளியாகிய தன் தந்தையின் கோலம் அவள் நினைவில் தலைகாட்டியது. அவள் உத்தியோகம் ஏற்ற ஆரம்ப காலத்தில், நகரத்தின் நாகரிக வாழ்க்கைச் சுமைகளைத் தாங்கமுடியாத மத்தியதர குடும்பத்துத் தலைவனான அவர், வளர்ந்துவந்த குடும்பப் பாரத்தைச் சுமக்கமாட்டாது தவித்தபோது குடும்பத்திலேற்பட்ட தாங்கொணாத வறுமைத் துன்பங்களின் மத்தியில், அவள் முதல் சம்பளம் எடுத்து தந்தையின் கைகளில் சமர்ப்பித்தபோது, அவர் முகத்தில் பரவசமொளிர, கண்களில் கண்ணீர்வர, சரஸ்வதி நீ என்ரை மூத்த மகளில்லையடி; மூத்தமகனென்று கூறி, அவள் தலையைத் தடவியபோது; அவள் தன்னை மறந்து நின்றாள். 

தன் உத்தியோக வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்து, இந்தக் குடும்பப் பொறுப்புக்கும், இந்த அன்புக்கட்டுகளுக்குமிடையில் அவற்றைச் சிறு துரும்புகளாகக் கருதி ஆனந்தித்தாள். ஆரம்பத்தில் பஸ்சிலேற்பட்ட அனுபவங்களையும், இன்ரவியூவின்போது, அந்தப் பெரியவர் கண்களில் விரசம் தொனிக்க, ‘இந்த மேடத்தை நாங்கள் நல்லாய்ப் பயன்படுத்த வேண்டும்’ என்று இரு அர்த்தம் தொனிக்க ஆங்கிலத்தில் சொன்ன அந்த வேதனையையும் மறந்திருந்தாள். 

தொடர்ந்த அந்த இயந்திர வாழ்க்கையில், அதிகமாக ஏற்படும் வேதனை தரும் அனுபவங்களினால் மன உணர்வுகள் மரத்துவிட்ட மாதிரி பாவனை செய்து நடிக்கும், ‘ஒன்றும் செய்யமுடியாத’ தன் நிலைமையை எண்ணிக் கலங்கினாள். 

“என்ன தங்கச்சி; எங்கே போறது” என்ற, முதிர்ந்த ‘கொன்றோலரின் குரலைக்கேட்டு தன்நினைவு வரப்பெற்றவளாக அவள் பஸ்சில் ஏறினாள். அப்பால் நின்ற இளம் வாலிபன் எதுவுமே செய்யமுடியாதவனாக அவளையே பார்த்து நின்றான். 

அவனின் பார்வை அவளை என்னவோ செய்தது. பருவம் கொழிக்கும் அவளும் எத்தனையோ இனிய கனவுகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள். ஆரம்பத்தில் தந்தைக்கு உதவி, குடும்பப் பொறுப்பு, அன்புக்கட்டு, தியாகம் என்றெல்லாம் அவள் தன்னை ஏமாற்றிய போதிலும்; அவளுக்கு இந்த வாழ்க்கைமேல் சலிப்பு ஏற்பட்டிருந்தது. புதியதோர் உலகை அவள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள். 

அவள் எத்தனையோ வாலிபர்களைப் பார்த்திருக்கிறாள். அவளையும் எத்தனையோ வாலிபர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பார்வைகளில் அன்பைத் தேடிக் களைத்திருந்தாள். 

அதனால் வாழ்க்கையில் ஒரு விரக்தி மனப்பான்மையும் கொண்டிருந்தாள். ஒருவர் பார்வையிலாதல் அந்தத் ‘தண்மையை’ அவள் காணவில்லை. அவளைப் பார்க்கும் எல்லார் பார்வையிலும், அவள் மற்றவர்கள் தன்னைப் பார்க்கின்றார்களென்று அவதானிக்கும் எந்தப் பார்வையிலும் அந்தத் தீ, அந்த விரசமான தீ, அந்த இளம் கொன்றோலர் பார்த்தது போன்ற தீ…

அவளால் அதைப் பொறுக்கமுடியாது. 

பஸ்சில் யாரோ தன்னைப் பார்ப்பதுபோல உணர்ந்து அவள் நிமிர்ந்தாள். அவளையே பார்த்துநின்ற ஒரு வாலிபன் அப்பால் திரும்பினான். 

அவள் தன்னை நொந்து கொண்டாள். 

தனக்கு அந்தப் பரிதாப நிலை ஏற்பட யார் யார், என்னென்ன விதத்தில் காலாக இருக்கின்றார்களென எண்ணிப் பார்த்தாள். தனக்கு கசப்பான அனுபவங்களைத் தரும், அந்தக் கட்டுண்ட உத்தியோக வாழ்வை விட்டு வெளியேற முடியாது தவித்தாள். அவள் உழைப்பை வெறுக்கவில்லை. அந்த உழைப்பின் போது, பெண்களுக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களை வெறுத்தாள்; என்னதான் உலகம் முன்னேறுகிறது; முன்னேறுகிறது என்றாலும் மனிதனால் அந்த ‘உணர்வுகளை’ வென்றுவிட முடியாதாவென ஏங்கினாள். 

அவளுக்கு தன் தந்தையினுடைய முதலாளியின் நினைவு வந்தது. பஸ் ஸ்ரான்டுக்கு வரும் வழியில், முற்றத்தில் அழகாகக் கத்தரிக்கப்பட்டிருக்கும் ‘குரோட்டன்கள்’ வளர்ந்து நிற்கும் அவரின் பெரிய வீட்டைப் பார்த்திருக்கிறாள். முதலாளியான அவரின் மாடி வீட்டையும், தொழிலாளியான தங்கள் வசிப்பிடத்தையும் ஒப்பிட்டு அவள் மனம் மறுகியிருக்கிறாள். 

எப்போதாவது அவர்கள் வீட்டு முற்றத்தில், அல்லது விறாந்தையில், அல்லது திரைச்சீலை விலகிய அவர்கள் வீட்டு முன்னறை ஜன்னல் கம்பிகளுக்கு அருகில், அல்லது பஸ்ராண்டில் அவள் முதலாளியின் இரு மக்களையும் பார்த்திருக்கின்றாள். உலகத்து அலங்காரங்களை யெல்லாம் தம்மீது சுமக்கும் அந்தச் செயற்கை அழகிகளை நினைத்து அவள் சிரித்திருக்கிறாள். ஆனால், அவர்கள் பஸ் ஸ்ராண்டில் அழகிய வாலிபர்களுடன் ஆங்கிலத்தில் கொஞ்சிக் குலாவிக்கொண்டு நிற்கும்போது…

அவளும் கனவுகள் காண்கின்ற இளம்பெண் தானே. 

அன்று ‘ஒவ்விசிலும்’ அவள் தன்னை மறந்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள். இப்படி எத்தனையோ அனுபவங்கள் ஏற்பட்டபோதெல்லாம், குடும்பத்தின் நிலைமைகளை நினைத்து நினைத்து கிளர்ந்தெழாத மனது இன்று மட்டும் ஏன் இப்படி அலைகிறதென்றும் அவள் சிந்தித்தாள். 

முதலாளியின் மக்களான அந்த ‘செயற்கை அழகிகளே’ அவள் கண்களில் மின்னினர். பெரிய தொந்திக்கும் மேல் ‘நாஸனல்’ போட்ட, நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்த, ஒருவிதமான லாவகச் சிரிப்பு சிரிக்கும் முதலாளியும் அவள் மனதில் தோன்றினார். மெலிந்த, வாழ்க்கையில் எந்த நேரமும் பிழைப்பு, பிழைப்பென்று திரியும் நிம்மதி காணாத தந்தையின் முகமும் அவள் மனத்தில் தோன்றியது. 

வாழ்க்கையின் இந்த ஏற்றத்தாழ்வுகளை அவள் வெறுத்தாள். உடலை வருத்தி உழைப்பவர்கள் வாழ்வில் இன்னல்களையும், உடலை வருத்தாதவர்கள் வாழ்வின் சொகுசுகளையும் அனுபவிக்கும் இந்தச் சமூக அமைப்பை அவள் வெறுத்தாள். உண்மையில் உழைக்கவேண்டிய ஒரு சாரார் உழைக்காது, உழைப்பவர்களைச் சுரண்டி வாழும் அந்த வாழ்க்கையை வெறுத்தாள். உழைத்து வாழும் பெண்களின் உணர்ச்சிகளோடு விளையாடுபவர்களையும் அவள் வெறுத்தாள். 

உழைக்காது சொகுசாகச் சுரண்டி வாழும் முதலாளி, உடலை வருத்தி உழைக்கும் தன் தந்தையின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுத்தால்-வாழ்க்கையில் பல்வேறு படிகளைத் தாண்டாத – படிக்கவேண்டிய உழைக்கக் கூடாத அந்த வயதில் தான் உழைப்பென்று உழலவேண்டியதில்லை என்பதையும் அவள் உணர்ந்தாள். 

காலம்காலமாக வந்த சில தார்மீக உணர்வுகளில் கட்டுப்பட்டு, அவற்றைப் ‘புனிதமானவை’ என்று போற்றும் தனக்கு, நாகரிகம் என்ற போர்வையில் ‘சோஷியல் மூவ்மென்ற்’ பெயரில் நிகழும் அருவருப்புகளால் உருவாகும் அவலங்கள் ஏற்பட்டிருக்காது என்றும் நம்பினாள். 

முதலாளியின் பிள்ளைகள் ஆண்களுடன் ‘அணைந்து’ பழகும்போது ‘சோஷியல் மூவ்மென்ற்’ என அங்கீகரிக்கும் சமூகம், அவளைப் போன்றவர்கள் அப்படி நடந்தால் ‘கசமுச கதைகளைக்’ கதைக்கும் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். 

இந்தச் சமூக அமைப்புகளுக்காக, அதன் மனப்போக்குகளுக்காக – அதனால் பாதிக்கப்பட்டவளென்ற வகையில் அவள் மனம் வருந்தினாள். 

மாலையிலும் இதே நினைவுகளுடனேயே அவள் பஸ்சில் ஏறினாள். கூட்டம் நெரிந்து குமைந்தது. அந்தக் கூட்டத்தில், ஒரு நடுத்தர வயது மனிதன்…..; 

‘சீ! நீயும் மனிதனா? அவள் அவளைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்; கண்களில் கனல் பறக்கக் கேட்டாள்; சீறிய பெண்புலியாக அவள் கேட்டாள். 

அவன் அசடுவழிய நின்றான். பஸ்சிலிருந்த பொம்மைகள் ஆடாமல், அசையாமல் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் அடுத்த பஸ் ஸ்ராண்டில் இறங்கிப் போய்விட்டான். 

புலியாக நின்ற அவள் பெண்ணாக மாறிக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பொம்மை ஒன்று வாய் திறந்தது. 

“பிள்ளை! உதெல்லாம் சகசம்” 

அவள் கோபத்துடன் அதை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் அழுதாள். துயரங்களால் மனம் வெதும்பி குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

அவளின் துயரங்களுக்கு விடிவு ஏற்படுமா? 

துயரங்களிலிருந்துதானே புரட்சிகள் தோன்றியிருக்கின்றன!

– தை-மாசி கற்பகம் 1971

– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *