அழகான இந்தியா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2024
பார்வையிட்டோர்: 155 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபதாம் நூற்றாண்டு ஓர் இனிமையான காலம்.அதிலும் கி.பி.1955-லிருந்து ஒரு பதினஞ்சு வருஷம் இனிமையின் உச்சக்கட்டம், என்னுடைய கல்விப் பருவம். பாளையங்கோட்டை கான்வென்ட், ஜான்ஸ் உயர்நிலைப் பள்ளி, சேவியர் கல்லூரி எல்லாவற்றையும் நான் கலக்கிக் கொண்டிருந்த காலக்கட்டம்.

அப்போது தண்ணீர்ப் பஞ்சம் இல்லை. அசோக் டாக்கிஸீக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்த வாய்க்கால் படித்துறை மண்டபத்தின் மேலேறி விடலைப் பையன்கள் யானைக்கிடங்கு என்கிற ஆழமான பகுதியில் விறால் (டைவ்) அடித்து சாகசம் பண்ணுவதைப் பரவசத்தோடு நான் பார்த்திருந்த நாட்கள் பல. வாய்க்காலில் வெள்ளம் வருகிற காலத்தில், மதகு திறந்து குளத்துக்குள் தண்ணீர்ப் பாயும்.

வாய்க்காலுக்கும் குளத்துக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் ரெண்டே ரெண்டு கட்டிடங்கள். ஒண்ணு எசக்கியம்மன் கோவில். அதையடுத்து, பத்து கிரவுண்ட் தோட்டத்துக்குள்ளே நன்னாவின் வீடு.ஊரில் நன்னாவைத் தெரியாதவர்களே இல்லை. சப் மாஜிஸ்ட்ரேட் சாய்பு என்றால் எல்லாருக்கும் தெரியும். குளத்தங்கரையிலிருந்தததால், டாங்க் வ்யூ என்று வீட்டுக்குப் பெயர் இருந்தது.

‘டாங்க் வ்யூ, பாளையங்கோட்டை’ என்று விலாசமெழுதினால் சென்னை மாகாணத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கடிதங்கள் வந்து சேர்ந்துவிடும்.அம்மா பிறந்து வளர்ந்த வீடு. தொடர்ந்து அடுத்த தலைமுறை – நானும் என் சகோதரிகளும்.

பாளையங்கோட்டை சாராட்டக்கர் காலேஜின் முதல் முஸ்லிம் மாணவி என்கிற பெருமை அம்மாவுக்கு உண்டு.

இக்னேஷியஸ் கான்வென்ட்டில் நான் ஒண்ணாங் க்ளாசும், அக்கா ரெண்டும் படித்துக் கொண்டிருந்த சின்னப் பிராயத்தில், பள்ளிக்கூடம் இல்லாத சனி ஞாயிறு களில் என்னையும் அக்காவையும் ரெண்டு கைகளிலும் பற்றிக் கொண்டு நீளமாய் வாக்கிங் போவார் நன்னா.

கால்கள் கடுக்கிற வரைக்கும் நடப்போம்.
காந்திமதி ஸ்கூல் வரைக்கும் நடப்போம்.

காந்திமதி ஸ்கூல் தான் ஊருக்குக் கிழக்கு எல்லை. அதையடுத்து ஒரே முள்ளுக்காடுதான்.ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி, மெடிக்கல் காலேஜ் எல்லாம் அப்போது கிடையாது. அக்காவுக்கும் எனக்கும் கால் ரொம்ப வலித்ததென்றால், வாக்கிங்கிலிருந்து திரும்பி வருகிறபோது டவுன் பஸ்ஸில் கூட்டிக்கொண்டு வருவார் நன்னா.

பின்னால் உள்ள செங்குத்தான பீப்பாய்க் குழாயில் நிலக்கரி அள்ளிப்போட்டு, அனலில் ஓடுகிற டீ.எம்.பி.எஸ். பஸ்.

பிற்காலத்தில் பிரம்மாண்டமான ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. தொடர்ந்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி வந்தது. மருத்துவக் கல்லூரி வந்த பிறகு நம்ம தங்கச்சிமார் ரெண்டுபேர் அங்கே படித்து டாக்டரானார்கள்.

நன்னாவுக்குக் காது மந்தம். நாலடி நீள ரப்பர்க்குழாய் தான் அவருடைய ஹியரிங் எய்டு. குழாயின் ஒரு முனையைத் தன்னுடைய காதில் பொருத்திக் கொள்வார். மறுமுனையிலிருக்கும் புனல் போன்ற அமைப்பில் நாம் கத்திப் பேசினால், அவருக்கு ஓரளவுக்குக் கேட்கும். இப்படியரு தகவல் தொடர்புக் குறைபாடு இருந்தாலும், நன்னாவுக்குச் சிநேகிதர்களுக்குக் குறைச்சலே இல்லை .)

கிராம முன்சீப் தாத்தா, நாயுடுத் தாத்தா, தென்காசி முதலாளி இவர்களில் ஒருவராவது அநேகமாய் தினமும் ஆஜராகி விடுவார்கள்.நாட்டு மருத்துவரான செங்கோட்டை ஹக்கீம் ரெண்டு மாசத்துக்கொருதரம் வந்து ஒரு வாரம் டேரா போட்டு விடுவார்.

“கொக்குக் கொத்தி மீனும் பிழைக்குமோ
கோழிக்குஞ்சும் பிறாந்தும் இணங்குமோ
நாயும் மொசலும் நடுவழி தங்குமோ”

என்று எனக்கும் அக்காவுக்கும் பாட்டுச் சொல்லிக் கொடுப்பார்.

வாய்க்காலைக் கடந்து எசக்கியம்மன் கோவிலுக்கும், டாங்க் வ்யூவுக்கும் வருவதற்குப் பாலம் ஒன்று உண்டு. மனிதர்களும் மாட்டு வண்டிகளும் பாலத்தில் வரலாம். யானைகள் வரமுடியாது. ஆகையால், பொட்டல்புதூர் யானை வருகிற போது வாய்க்காலுக்குள்ளே இறங்கித்தான் வர முடியும். அசோக் டாக்கீஸின் பின்புறத்தில், வாய்க்காலில் ஆழம் குறைந்த பகுதியில் இறங்கி, யானை எங்கள் தோட்டத்துக்குப் பக்கத்தில் கரை ஏறும்.

பொட்டல்புதூர் யானை விடுமுறை நாட்களில் தான் வரும். பாகனுக்கு உதவியாளன், யானையின் தும்பிக்கையைப் பிடித்து அந்தத் துவாரங்களுக்குள்ளே ஒரு செம்புத் தண்ணீரை ஊற்றுவான். அந்தத் தண்ணீரை எங்கள் மேலெல்லாம் யானை ஷவர் போல ஸ்ப்ரே செய்யும்.

யானையின் மேலே நான் ஏற்றப்படுவேன். அதன் கழுத்து மீது ஒரு அஞ்சு நிமிஷ ஆரோகணம். பாகனுக்கு ஓரணாவோ ரெண்டணாவோ கொடுப்பார்கள் நன்னி. இது சும்மா கொசுறுதான். முக்கியமான ஐட்டம் தென்னையோலைகள்.

தோட்டத்துத் தென்னைமரங்களிலிருந்து உதவியாளன் வெட்டிப்போடுகிற பசுமையான ஓலைகளைத் தும்பிக்கையில் வாரிச்சுருட்டிக்கொண்டு யானை வாய்க்காலில் இறங்கிப் போகும். வாய்க்காலில் இறங்குமுன், கவனமாய்க் கணிசமான அளவு லத்தி போட்டுவிட்டு போகும். வாய்க்காலுக்குக் குளிக்க வந்த சின்னப் பையன்களெல்லாம் ஆரவாரத்துடன் ஒருத்தனை யொருத்தன் இடித்துக் கொண்டு அந்த லத்திகளை ஏறி மிதித்துத் துவம்சம் செய்வார்கள்.யானை லத்தியை மிதித்தால் காலில் முள்ளுக் குத்தவே குத்தாதாம்.

தென்னை மரங்களைத் தவிர, தோட்டத்தில் பனை மரங்கள் நிறைய உண்டு. பனங்குருத்து, நொங்கு, பதனி, பனங்கிழங்கு, மஞ்சள் மஞ்சளாய்ச் சாறு ததும்புகிற பனம்பழங்கள், தகன் என்கிற பனைவேரில் விளைகிற பண்டம், எல்லாம் வாரி வழங்குகிற பனைமரங்கள்.

அப்புறம், மாதுளை, சீத்தாப்பழம், அரை நெல்லிக்காய், புளிய மரம் எல்லாம் உண்டு. அபூர்வமான நார்த்தங்காய் மரங்கள் இரெண்டு இருந்தன. நன்னியுடைய நார்த்தங்காய் ஊறுகாயை நினைத்தால் இப்போதும் கூட வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. நார்த்தங்காய் பழுத்தால் சாத்துக்குடி மாதிரி இருக்கும்.

ராத்திரியில், மொட்டை மாடியில் படுத்துக் கிடக்கையில், அசோக் டாக்கீஸ் சினிமாப் பாடல்கள் தெளிவாய்க் கேட்கும்.

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

என்று இடைவேளையில் போடுகிற பாட்டு இன்னும் தெளிவாய்க் கேட்கும். அந்தப் பாட்டைத்தான் தினம் தினம் போடுவார் கண்டி மாமா.அசோக் டாக்கீஸ் ஆப்பரேட்டர் கண்டி மாமா, நம்ம நாயுடுத் தாத்தாவுடைய மகன்.

நாயுடுத் தாத்தா, நன்னாவுடைய சிநேகிதர் மட்டுமல்ல., எங்களுக்குக் குடும்ப டாக்டர் அவர்தான். எனக்கு எனிமா கொடுப்பதற்காகப் பிரம்மாண்டமான ஸிரிஞ்சை முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டு அவர் என்னை நெருங்க, விபரீதத்தை மோப்பம் பிடித்த நான், அலறிக் கொண்டு ஓட்டமெடுத்ததை அம்மா நினைவு கூர்ந்து சிரித்தார்கள். என்னுடைய நிக்காஹ் அன்று.

சின்ன மாமாவுக்குக் கல்யாணமான பின்னால், புத்தம் புதிய மாமியோடு அவர் லீவுக்கு வருகிற சந்தர்ப்பங்களில் மொட்டை மாடியில் பாட்டுக் கச்சேரி நடக்கும்.

“எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா”

என்று மாமியும் நானும் பாடுவோம்.மாமி பாலசரஸ்வதி, நான் டி.எம்.எஸ்.

எங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த எசக்கியம்மன் கோவில் எப்போதும் வெறிச்சோடித்தான் கிடக்கும். தினமும் ஒரு பூசாரி வந்து அரை மணி நேரம் பூஜை நடத்திவிட்டுக் கோவிலைப் பூட்டிக் கொண்டு போய் விடுவார். வாய்க்காலுக்கு வருகிறவர்கள், குளித்து விட்டுக் கோவிலுக்கு வெளியே நின்று கும்பிட்டு விட்டுப் போவார்கள். ஒருநாள் குளிக்க வந்த நபரின் மணிப்பர்ஸை அபேஸ் செய்ய முயன்று தோற்ற ‘திருடன்’ ஒருவன் பிடிபட்டு, தர்ம அடிகளுக்குப் பின்னால், கோவிலின் முன்னால் தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டான். தோப்புக்கரணம் போடுகிறபோது, ரெண்டு முட்டிடு களும் மாறிமாறித் தரையில் பதியவேண்டுமென்று உத்தரவு. கால் முட்டிடுக்கள் ரெண்டிலும் ரத்தங்கசிய அந்தத் திருடன் தோப்புக்கரணம் போட்டதைப் பார்க்க ரொம்பப் பாவமாயிருந்தது.

வருஷத்துக்கொரு தடவை கோவிலில் கொடை வருகிறபோது பெரிய கொண்டாட்டமாயிருக்கும். பக்கத்துக் கிராமங்களிலிருந்தெல்லாம் கோடியணிந்த பக்தர்கள் கூட்டங்கூட்டமாய் வருவார்கள், . தாரை தப்பட்டை முழங்க.

ஒரு மூணு நாள், ஒரே கோலாகலந்தான். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

எங்கள் வீட்டின் விசாலமான வெராண்டாவிலும், தோட்டம் முழுக்கவும் பக்தர்கள் வியாபித்திருப்பார்கள்.

ரெண்டாம் இரவு அட்டகாசமாய் வில்லுப்பாட்டு நடக்கும்.தையத்தோம் தையத் தையத் ததுங்கின என்று பானையில் அடித்துப் பாடுகிறதைக் கேட்க ரொம்ப சுகமாயிருக்கும். ராத்திரி தூக்கமே வராது.பிள்ளைகள் எல்லாரும் கோயிலே பழியென்று கிடப்போம்.

நடுநிசியில் கிடா வெட்டுகிறபோது மட்டும்,, நாங்கள் பயந்து விடுவோம் என்று வீட்டுக்குக் கூட்டிப் போய்விடுவார்கள் நன்னி.

கோவிலிலிருந்து பிரசாதம் வரும். சும்மா சொல்லக் கூடாது, நாலஞ்சி பேர் வயிறு நிறைய சாப்பிடுகிற அளவு வரும். அந்த வாசமே ஒரு தூக்குத் தூக்கும்.

“கோவில்லயிருந்து வந்தத நாம சாப்புடலாமா அம்மா” என்கிற அக்காவின் சந்தேகத்துக்கு அம்மாவின் பதில்:

“சாப்புட்டா என்ன? பிஸ்மில்லா சொல்லிட்டு சாப்புடு.”

அப்புறம் என்ன, ஏறி மேய்ந்து விடுவோம்.

“கோவில்லயிருந்து நம்மளுக்கு ஏன் நன்னி சோறு குடுத்து வுடறாங்க?”

“நாம கோவிலுக்குக் கரண்டு தாரோம்லா, அதான் அவுக நமக்கு சாப்பாடு குடுத்து வுடுதாக.”

ஆமாம். அந்த மூணு நாளும் எசக்கியம்மன் கோவிலுக்கு மின்சார விநியோகம். இந்த சாய்பு வீட்டிலிருந்து தான்!

அந்த வசந்தகாலமெல்லாம் காலாவதியாகிக் கனகாலமாச்சு. நன்னா காலமாகித், தொடர்ந்து நன்னியும் போய்ச் சேர்ந்து கால் நூற்றாண்டு ஓடிப்போய் விட்டது. பாகப்பிரிவினையில், வீடு மாமாவுக்குப் போய்ச் சேர்ந்தது.பாழடைந்து போன வீட்டைப் புதுப்பித்து அதில் குடியிருக்க மாமாவுக்கு நாட்டமில்லை. வாய்க்கால், குளம் எல்லாம் வற்றிப் போன பிறகு, அந்த இடத்துக்கு மதிப்பில்லாமல் போனது. வீடு, தோட்டம் மொத்தத்தையும் அநாதை நிலையத்துக்கு அடிமாட்டு விலைக்குக் கொடுத்து விட்டார் மாமா. படிப்பெல்லாம் முடிந்து, கல்யாணம், பிள்ளைக் குட்டிகள், பிஸினஸ் என்று சென்னைக்குக் குடிபெயர்ந்த பின்னால், அந்தப் புராதன வீடு மட்டுமல்ல, பாளையங் கோட்டை என்கிற ஊருடனேயே தொடர்பு அடியோடு அற்றுப் போய்விட்டது.

வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கக்கூடும். அந்த இடத்தில் புதிதாய் ஒரு கட்டிடம் முளைத்திருக்கக் கூடும்.

எப்படியானாலும், பாளையங்கோட்டைக்கு ஒரு தரம் போய்வர வேண்டும், நான் வாழ்ந்த, படித்த ஊர் இப்போது எப்படியிருக்கிறதென்று பார்க்க வேண்டும். அந்த வீடு இப்போது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த நிலத்தையாவது போய்ப் பார்த்து வர வேண்டும் என வருஷக்கணக்காய் வளர்ந்து வந்த பேராவலுக்குக் கடைசியாய் ஒரு வடிகால் கொடுத்தே விட்டேன்.

நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸில் கிளம்பி திருநல்வேலி ஜங்ஷனில் போய் இறங்கியே விட்டேன்.ஒரு லாட்ஜில் ரூம் போட்டு இளைப்பாறி விட்டு, சாயங் காலமாய் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு பாளையங் கோட்டைக்குப் போனால், அந்தப் பிரதான சாலையே மாறிப்போன மாதிரி இருக்கிறது. புதிய கட்டிடங்கள், கல்யாண மண்டபங்கள், ஹோட்டேல்கள், பைப்பாஸ் ரோடுகள்…..

பாளை பஸ் ஸ்டாண்ட் வழியாய் சேவியர்ஸ் காலேஜுக்குப் போகிற வழியில், சரோஜினி பார்க் கேட்பாரற்றுக் கிடக்கிறது. பெயர்ப்பலகையைக் கூடக் காணவில்லை. சேவியர் கல்லூரிக்கும்

ஜான்ஸ் கல்லூரிக்கும் பொதுச் சொத்தான மரியாக் கான்ட்டீன் காணாமல் போய்விட்டது.

சமாதானபுரம் வழியாய் வடக்கு பஜாரையடைந்து, சங்கரம் பிள்ளைக் கடையில் பார்வையைப் பதிக்கிறேன். சங்கரம் பிள்ளை இருக்கிறாரோ போய்விட்டாரோ. கல்லூரிக் காலத்தில், ஓசியிலேயே எல்லாப் பத்திரிகைகளையும் புரட்டிப்பார்க்க என்னை அனுமதித்த சங்கரம் பிள்ளை.

அசோக் டக்கீஸ் சாலையில் இறங்குகிறபோது, ‘அசோக் டாக்கீஸெல்லாம் மூடியாச்சு’ என்கிறார் டிரைவர்.ஆட்டோ இடது புறம் வெட்டி, வாய்க்கால் பாலத்தின் விளிம்பில் வந்து நிற்கிறது.

“பாலத்து மேல வண்டி போகாது சார், இங்ஙனயே எறங்கிக்கிருங்க.”

இறங்கிக் கொண்டு, பாலத்தில் பாதங்களைப் பதிக்கிறேன்.யானைக்கு மட்டுமே அந்நியமாயிருந்த பாலத்தில், ரெண்டு கால் ஜீவராசிகள் நடப்பதற்கே இப்போது ப்ரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. வாய்க்காலில் தண்ணீர் சுத்தமாய் இல்லை.

அசுத்தமான தண்ணீர்கூட இல்லை. எல்லாம் காய்ந்து கிடக்கிறது. ஆனாலும் ஜன நடமாட்டம் கணிசமாய் இருக்கிறது. காரணம் கோவிலை நெருங்கின பிறகுதான் புரிகிறது.

அட, கோவிலில் இப்போது கொடை சீஸன்!

கோவிலைத் தாண்டி, டாங்க் வ்யூவை நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறேன். அங்கே வீடு என்று எதுவும் இல்லை. வேறே புதிய கட்டிடமும் இல்ட்லலை. தோட்டம் வெறும் பொட்டலாய்க் கிடக்கிறது. பொட்டலின் தெற்கு எல்லையில் ஓர் ஓலைக்குடிசை. குடிசை வாசலில் தலையில் தொப்பியணிந்த நபர்கள் சிலர் தென்படுகிறார்கள்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிற இடமாயிருக்குமோ இது?

ஒரு மினி மசூதி?

அப்படியிருந்தால், அங்கே மரிப் தொழுகை தொழுது கொள்ளலாம். பொழுது இருட்டிக் கொண்டு வருகிறது.

நான் வசித்த வீடும், விளையாடின தோட்டமும் காணாமல் போய்விட்ட மனவலியோடு இருண்டு கொண்டு வருகிற இந்த சாயங்காலச் சூழ்நிலை ஒத்துப் போகிறது.

குடிசையை நெருங்குகிறேன்.

அஸ்லாமு அலைக்கும் என்று வாழ்த்து வருகிறது.

பதில் வாழ்த்துச் சொல்லும்போது மரிப் தொழுகைக்கான பாங்கு அழைப்பு ஆரம்பிக்கிறது.

“லைட் போடலிங்களா?” என்று நான் கேட்டதற்கு, “இந்தா ஒரு நிமிஷத்துல லைட் வந்துரும் பாய்” என்று பதில் வருகிறது.

“நம்மப் பள்ளிவாசலுக்கு இன்னும் கரன்ட் வரலிங்க, ஹரிக்கேன் லைட்தான். ஆனா இப்ப மூணு நாளக்கிப் பள்ளிவாசல்ல ஜோரா லைட் எரியும்.”

சொன்னவரை நான் புதிராய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மசூதி வளாகத்தில் தற்காலிக ட்யூப் லைட்கள் நாலு உயிர் பெற்று ஒளிர்கின்றன. தொடர்ந்து அந்த நண்பர் புதிரை விடுவிக்கிறார்.

“கோவில்ல ஒரு மூணு நாளக்கி விசேஷம்ங்க பாய். மூணு நாளக்கி அங்க ஜெனரேட்டர் ஓடும். அதனால நம்மப் பள்ளிவாசலுக்கும் மூணு நாளக்கிக் கரன்ட் வரும், கோவிலிருந்து.”

(ஈஸ்வர அல்லா தேரே நாம்)

– தினமலர் வாரமலர், 13.11.2004.

– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.

திருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *