(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முத்து மரைக்காரின் கடை விறாந்தையில் தூணிலே சாய்ந்தவாறு காதர் நிற்கிறான். இருப்புக் கொள்ளாதவர் போல சொருகு பலகைகள் சாத்தியிருக்கும் அந்தத் தூணிலே சாய்வதும் பின் விலகி நிற்பதும், திண்ணையில் உலாவுவதும், தெருவிலே இறங்கி நிழலிலே ஒதுங்கி நிற்பதுமாக நீண்ட பொழுதை கழித்து விட்டான். நேரம் பொன்போல என்பார்கள் அவனைப் பொறுத்தவரை உப்பைப்போல சீனியையும்போல என்று கூடச் செல்லலாம்.
கௌண்டர் மேசைக்கு முன்னால் பின்னல் நாற்காலியில் ராஜகம்பீரத்துடன் ஆரோகணித்திருக்கும் முதலாளி முத்துமரைக்காரிடம் தனிமையாகக் கதைக்க வேண்டுமென்பதற்காகத்தான் இவ்வளவு பெறுமதியான பொழுதை சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு தெருவையும் விறாந்தைகளையும் தேயவைத்துக் கொண்டிருக்கிறான்.
முத்துமரைக்காரின் கடை பார்வைக்கு மிகச் சாதாரணமானது. இரண்டு கண்ணாடி அலுமாரிகள் பின்புறச் சுவரோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இடப்பக்க வலப்பக்க சுவர்களின் ஓரமாக நீளமான றாக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அலுமாரிகள் அலுமாரிகள் நிறைய சாறங்களும் சாரிகளும் அடையப்பட்டுள்ளன. றாக்கைகளில் பலவண்ணங்களில் பருத்தி நூற் கட்டுகளும், நைலோன், றேயோன் ஜரிகை நூற் கட்டைகளும் நிறைத்து வைக்கப் பட்டுள்ளன. நடுவிலே நீளமான ஒரு மேசை கைத்தறிக்குத் தேவையான பல பண் வகைகள் அதன் மேலும் சிலவற்றை உள்ளடக்கிய காட்போட் பெட்டிகளும் இருக்கின்றன. அதன் முன்பக்க ஓரத்தில் அடிப்பாதமுள்ள ஒற்றைத்தட்டுத் தராசு.
வியாபாரமோ எக்கச் சக்கம். காதர் வந்ததற்குப் பிறகு கொள்வனவும் கொடுப்பனவும் செய்து விட்டுப்போனவர்களின் விட்டுப்போனவர்களின் தொகை குறைந்தது ஐம்பதாவது இருக்கும். முதலாளி முத்துமரைக்காருக்கும் சிப்பந்தியாகப் பணிபுரிகிற அவரது மகனுக்கும் ஈடு மூச்சு இல்லாத வேலை. பையன் படு புத்திசாலி. நூல் நிறுப்பது, கட்டுவது, பிடவைகளை வாங்கி அடுக்குவது போன்ற வேலைகளைத் துண்டுப்பாவிலே நாடா ஓடுவதுபோல அவ்வளவு வேகமாச் செய்தான். என்றாலும் சில சந்தர்ப்பங்களிலே அவன் விழி பிதுங்கிப் போற போதெல்லாம் மரைக்கார் தார்ப்பீப்பா போன்ற தனது கனத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு மகனுக்கு ஒத்தாசை செய்வார். பின் அலுத்துக் களைத்து ஆடியசைந்து போய் கதிரையிலே பொத்தென்று விழுவார்.
இவற்றையெல்லாம் அணுவும் பிசகாமல் அவதானித்துக் கொண்டிருந்த காதரின் மனத்திரை எப்படியெல்லாமோ எண்ணியது. இவ்வளவு வியாபாரம் நடக்கிற கடையில் வியாபாரத்துக்கு இரண்டு சிப்பந்திகள் போதுமானது. ஒரு கூலியை அமர்த்தி இருக்கலாமே என்று அங்கலாய்த்துக் கொண்டான்.
நேரமும் பகல் பன்னிரண்டு மணியாகி விட்டது என்பதை கடைச்சுவர்க் கடிகாரம் ‘டண் டண் ‘ என்று ஒலித்து ஓய்ந்தது. அப்பாடா இப்பொழுதுதான் ஒருபாடாகக் கூட்டம் குறைந்தது. கடைசியாக இரண்டுபேர் மாத்திரம் கடைக்குள்ளே நின்று கொள்முதல் செய்து கொண்டிருந்தார்கள். மேலும் ஒருவரும் வராதது கண்டு தூணிலே சாய்ந்து நின்ற காதருக்கு ஆறுதலை அளித்தது.
அந்த இருவருங்கூட வெளியேறி விட்டார்கள். முதலாளியார் மழித்த மண்டையிலும் நெற்றியிலும் அதைத்த கன்னங்களிலும் ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருந்த வியர்வையைக் கைக்குட்டையாற் துடைத்துக் கொண்டே காதரை அண்ணாந்து பார்த்தார்.
“தம்பி மருமகன்! கனநேரங்குடி நிக்கிறாப் போல என்ன வேணும்? என்று காதரிடங் கேட்டார். காதர் மெல்ல அடியெடுத்து வைத்து அவர் முன்னால வந்து நின்றான்.
“மகன்! கடைக்குப் போய் ரெண்டு டீ வாங்கிட்டு வா”
லாச்சியைத்திறந்து இரண்டு பத்துச் சதக் குத்திகளை குத்திகளை எடுத்து மேசையிலே போட்டார். பையன் அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே போனான்.
முத்துமரைக்கார் அழைத்தது போல காதர் அவருக்குத் தூரத்து உறவில் மருமகன்தான். முத்துமரைக்காரின் மகள்களிலொருத்தியைக் கட்டியிருப்பவன் காதரின் பெரிய உம்மாவின் மகன். காதர் மரியாதையோடு அடக்கமான குரலில் பேச ஆரம்பித்தான். அதற்குள் மரைக்காரின் மகன் தேநீர்க் கிளாசைக் கொண்டு வந்து வாப்பாவின் கையில் கொடுத்துவிட்டுத் தன் இருக்கையிலமர்ந்து மற்றக் கிளாசிலிருந்த தேநீரைப் பருகினான்.
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று சொல்லிக் கொண்டே மரைக்கார் தேனீரைப் பருகிவிட்டுச் சாக்கிலே இருந்த கடுதாசி மடிப்பை விரித்து வெற்றிலை போடத் தொடங்கினார். பையன் வெறுங்கிளாஸ்களுடன் வெளியேறினான்.
“ம்… நான் லுகறுத் தொழுகைக்குப் பள்ளிக்குப் போகவேணும் கதக்கிறத்தக் கெதியா….”
மரைக்கார் துரிதப் படுத்தினார்.
“நான் சொந்தமா ஒரு தறி போடப் போறன் தறிய வாங்கிப் போட்டன். நூலுக்கு அதாவது, முதல்பாவுட நூலுக்கு உதவி செய்யுங்க எண்டு கேக்கத்தான் வந்தன்”
“இதுக்கா இவ்வளவு நேரம் தாமதிச்சாய். தேவையான நூலச் சொன்னா பொடியன் நிறுத்துக் கட்டித்தருவான். நானென்ன உனக்கிட்ட கூடவா எடுக்கப் போறன். நியாயமாத்தான் கணக்கப் போடுவன் காசத் தந்திற்றுப் போறதுதானே.”
“கையிலே காசில்ல. நூலக் கொண்டுபோய்ப் பாவோடி நெஞ்சி சாறன வித்துக் கணக்க அடக்கலாமெண்டுதான்….”
“ஓகோ அப்படியா சங்கதி. முந்தியெல்லாம் அப்படிச் செஞ்சதான். இப்ப நூலெடுக்கிறதும் கஷ்டம். தறியில்லாமக் கோட்டா எடுத்து நூல் யாவாரம் பண்ணுறதா பிட்டிசமெல்லாம் போடுகானுகள். ஒரு மாதிரிப் பார்த்துக் கீத்துத் தரலந்தான். உரிய காலத்தில கொண்டாந்து அடக்காட்டி பிஸினசுக்கு ஆபத்து வந்துரும். கைக்காசிக்கு விக்கவே நூலில்ல. உனக்குத் தாற நூல கைக்காசிக்கு வித்தா அந்தக் காசி இங்க றோல் பண்ணிக்கிட்டிரிக்கும்….!”
முதலாளி பிடிகொடுக்காத மாதிரி நீள மொழிந்து நிறுத்தினார்.
“நான் சுணக்கமாட்டன். கெதியாக் கொண்டாந்து தந்திருவன்”.
தாறதென்ன நெய்யிற சரக்கெல்லாம் நமக்கிட்டேயே கொண்டாந்து தரவேணும். உருப்படிக்கு இருவத்தஞ்சி சதங் கொறச்சித்தான் கணக்குப் போடுவன். நூலும் கட்டுக்குப் பத்திருவது கூட்டித்தான்… இஞ்சிப்பத்தன் ஆரும் வந்தா ஊட்டயும் அனுப்புவன் தறி ஆர்ர எண்டு சொல்லிர வேணும்”
மரைக்கார் பேச்சை நிறுத்தி விட்டு காதரை நிமிர்ந்து பார்த்தார். காதர் பேசமுடியாது நின்றான். அவன் மனம் போர்க்களமாகிக் கொண்டிருந்தது.
“என்னத்த யோசிக்கிறாய். இந்தப் போருத்தனையோடதான் எல்லானும் இங்க வந்து நூல வங்கிட்டுப்போய் தொழில் செய்யிறானுகள்.”
“எனக்கென்னமோ அது நல்லாப் பாடல்ல. காசப் பதினஞ்சு நாளையால கொண்டாந்து தாறன்…”
“ம்…ங்… நீ அந்த வழியால வாறாய். அதுக்கு நமக்கிட்டச் சரக்கில்ல. கொஞ்சம் மொதல வெச்சிக்கிட்டு றோல் பண்ணுறன். ஒண்டு…! இந்தப் பொருத்தனைய மிஞ்சி இங்க ஒருவனும் நூல்தரமாட்டான் தெரியுமா?”
மரைக்கார் ஆசனத்தை விட்டெழுந்து வெள்ளைத் தொப்பியைத் தலையிலே போட்டுக்கொண்டு தெருவிலே இறங்கி நடந்தார். பள்ளிவாசலை நோக்கி அவரது கல்கள் பெயர்கின்றன.
“நெய்யத் தொழிலில ஆனாக்கூடத் தெரியாத நீயெல்லாம் நூத்துக் கணக்கான தறிகளுக்குக் கோட்டா எடுத்து வச்சுக்கிட்டு பிஸினசு பண்ணுற ரகசியம் இதுதானா? பறுவாயில்ல பாப்பம்”
என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டு காதர் தெருவிலிறங்கி நடந்தான்.
(யாவும் கற்பனை)
– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஒக்டோபர் 2007, எம்.ஐ.எஸ்.ஹபீனா கலீல், மருதமுனை.