அலை தந்த ஆறுதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 201 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை மணி ஐந்தடித்தது. ‘தேனைத் தொட்டுக்க; தண்ணியத் தொட்டுக்க’ என்று பழகும் அலுவலக நட்புக் கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன். வாழ்க்கை நாட கத்தின் ஒரு வேடம் மாறி அடுத்த வேடம் தொடங்கியது. ஒருவர் அவசரம் அவசரமாக வந்தார். “சார்! பையை மறந்துப்புட்டீங்களே”யென்று பரிவோடு தந்துவிட்டுப் பதினைந்து ரூபாய் கடன் என்ற பேரில் வாங்கிக் கொண்டு போய்விட்டார். கடவுளின் தரிசனத்திற்காக ஏங்கும் மக்களைவிட, வாடகை வீடு பிடிப்போரும், ஏதாவது ஒரு வேலைக்கு ஏங்குவோரும் தான் அதிகம். அவர்களைப் போலவே நான் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குரிய பேருந்திற்காகப் பரிதாபமாகக் காத்திருந்தேன். பஸ் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். கவலையில்லை! ஆனால் அதற்குள் வாகனங்களின் ஒலிகள், “வாழ்க!’ “ஒழிக” கோஷங்கள், “ஐயர்! சாமி தருமம் போடுங்க” என்று சொல்லி என்னைக் சடையெழு வள்ளல்களில் ஒருவனாக்கப் பிச்சைக்காரர்கள் எடுக்கும் முயற்சி,பார்த்து விட்ட பாவத்திற்காக, எப்போதோ நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த உதவிக்காகச் சிலருடைய செயற்கை “ஹி! ஹி”க்கள், தெருப்பாடகர்களின் உள்ளம் நிறைந்த ஆனால் வயிறு ஒட்டிய பாடல்கள் எல்லாம் என்னைச் சிந்தனையளவில் காபி ஓட்டல் மிக்சரை நினைவு படுத்தின. “நாட்டில் ஒழுக்கம் இல்லை; அறம் இல்லை; நியாயம் போய்விட்டது” என்று நான் கேட்காத போதே என்னிடம் பேசிய ஒரு பெரியவர், பேருந்து வந்ததும் என்னைத் தன் முழங்கை ஆயுதத்தால் ஒரு தள்ளுத் தள்ளி விட்டு நாலைந்து பேரைச் செருப்புக்காலால் மிதித்து விட்டு, ஓர இடம் ஒன்று பார்த்து அமர்ந்து கொண்டார். விதி என்னை அவர் பக்கத்திலேயே அமரச் செய்தது. வரதட்சிணை, தீண்டாமை, வேலையில்லாத் திண்டாட்டம், மதமாற்றம் எல்லாவற்றையும் குளத்தில் அழுக்குத் துணி அலசுவது போல் அலசினார். அவர் அடுத்த “ஸ்டாப்பில்’ இறங்க வேண்டுமேயென்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன். என்மீது கடவுளுக்குக் கூடக் கோபம்! என் ‘பிரிஃப்கேஸ்’ ஒரு சின்ன “மெடிக்கல் ஷாப்” ஆனதால் கண்ணிமை நொடியில் ஒரு மாத்திரையை விழுங்கினேன். நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களைவிட அதனை விழுங்குவது எளிமையாகத்தான் இருந்தது. 

என்னை விட்டு என்றுமே பிரியாத என் கவலை களாகிய நண்பர்களின் துணையால் நான் இறங்கும் இடத்தில் பத்திரமாக இறங்கினேன். மாடு ஒன்று அரசியல் போஸ்டர் ஒன்றைச் சுவைத்துக் கொண் டிருந்தது. அதற்குக் கூட சினிமாவை விட அரசியலே அதிகம் பிடித்திருக்கின்றது. சின்னஞ்சிறு குழந்தைகள்கூட அரசியலை அக்குவேறு, ஆணி வேறாகப் பிய்ப்பதன் காரணத்தை அப்போதுதான் அறிந்து கொண்டேன். அறிவியல் மேதை ஆர்க்கமிடீஸ் மனநிலையில் இருந்த போது காய்கறிகளை வாங்கிவிட்டேன். வீட்டில் சிறுத் தொண்டர் பட்டபாடு பட்டேன். 

ஒவ்வொரு டவுன்பஸ் பிரயாணத்திற்குப் பிறகும் மனிதன் மறுபிறவி எடுக்கிறான் என்றார் புதுக்கவிதைப் புலவர்.பேருந்துப் பயணமானார்’ வீட்டில் உள்ளவர் களுக்கு எங்கே விளங்கப் போகிறது? தக்காளி என்ன விலை? ஏன் இவ்வளவு? பழம்பாதி, காய்பாதி வாங்கக் கூடாதா? கத்தரிக்காய் சொத்தை! வெண்டைக்காய் விறகு!” என்று வீட்டு நிதிமந்திரி மனைவி, குறை கூறி என்மீது அடுக்கிய குற்றங்களை அள்ளிவீசி என்னை ஒரு ‘முப்புரம்’ ஆக்கிவிட்டார். நாட்டு நடப்புத் தெரியாமல் எப்போதோ நண்பர் ஒருவர் சொன்ன விலையை மனத்தில் கொண்டு ஏதோ சொல்லிவிட்டேன். அவ்வளவு தான்! பூத்தொடுத்தாற்போல் பொய் சொல்லும் கலை வராத எனக்கு உண்மை பேசத் துணிவில்லை. அரிச்சந்திரன் உண்மை பேசிய காரணம் இப்போது புரிந்தது. என்னைத் தண்டிப்பதில் மகாத்மா காந்தி வழியைக் கடைப்பிடிப்பவள் என் மனைவி. உண்ணாவிரதம் இருந்தாள். பேச மறுத்தாள். என் குலக் கொழுந்துகள் எப்போதுமே எனக்கு எதிர்க்கட்சி தான். நான் தனித்து விடப்பட்டேன். சிக்மண்ட்ஃபிராய்டு கூறியதைப்போல் மனத்தைக் குழந்தை நிலைக்கு ஆக்கிக் கொண்டேன். என்னை விடப் பெரியவர்கள், போட்டோ வில் தான் இருக்கிறார்கள். நான் குழாய்த் தண்ணீர் குடித்தபோதே உலக வாழ்வை நீத்தவர்கள் அவர்கள். 

என்னை உருவாக்கிய பெருமகனாரின் சிரித்த முக நிழற் படத்தைக் கண்டேன். ஒரு பளிச்! மனித உறவுகள் யாவும் பணத்தின் வலிமையில்தான் சுழல்கின்றன என்பதனையும் புரிந்து கொண்டேன். 

தொலைபேசி ஓயாமல் மணி அடித்து அடித்து என்னைக் கூவியவண்ணம் இருந்தது. பரிந்துரைகள், அழைப்புகள், மிரட்டல்கள், போதாக்குறைக்கு வாசலில் பார்வையாளர்கள். சே! என்ன போலி வாழ்க்கை! 

அலுவல் காரணமாகத் திருப்பதி செல்வதாகக் கூறி ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நடைபாதை நளினங்கள், சோகங்கள், தவிப்புகள், தாண்டவங்கள் எல்லாவற்றையும் தரிசித்துக் கொண்டே சென்றேன். புகழ்பெறாத ரூசோக்கள், பாரதிகள், டிக்கன்ஸ்கள் உலவினார்கள். எத்தனையோ கோரக் காட்சிகளைக் கண்டபிறகும் கூட நான் புத்தனாக வில்லை. ஏன்? அவர் உள்ளம் தெளிந்த நீரோடை. என் உள்ளம் ஒரு பாதாள சாக்கடையாயிற்றே! 

நடைமெலிந்து உலகின் இரண்டாவது கடற்கரை யாகிய மெரினாவுக்கு வந்து சேர்ந்தேன். பொங்கிவரும் பெருநிலவு, கடலில் குளித்துக் குளித்து எழுந்து கொண் டிருந்தது. அது எழுவதைத்தான் அலைகள் கைகொட்டி ஆரவாரித்தன. 

அலையின் நேர்முகப் பேட்டிக்குத் தவங்கிடந்தேன். கயமையின் வேடங்கள், மனித விலங்குகளின் பேயாட்டங் கள், காசு கொடுத்துப் பார்க்க வேண்டாத ‘ஏப்படத் திரைக்காட்சிகள் எல்லாம் இருபத்தோராவது நூற்றாண்டின் வருகைக்கு வரவேற்பிதழ் வாசித்தளிப்பது போல் இருந்தன, கடற்கரையிலே! நேரம் சென்றது. 

நானும் கடலும் மட்டும் இருப்பதாக நினைத்து அலைகள் என்னிடத்து வந்தன. ஒரு சில மனிதர்களின் நிழலைக் கண்டதும் விருட்டென்று விலகின. காவல்துறை அலுவலர்கள் தங்கள் கடமையைச் செய்ய வந்தார்கள். என்னைப் பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். 

அதற்குள் மெரீனா என்னிடம் “இந்த மனிதர்கள் என்னைத் திறந்த வெளித் திருமண மண்டபமாகப் பயன் படுத்தட்டும். ஆனால் என்னை அசுத்தப்படுத்தாமல் இருக்கலாமல்லவா!” என்றது. 

மனிதர்கள் என்றதும் அலைகள் “மனிதர்களே! எங்கே அவர்கள் எங்களைத் தூர்த்து விடுவார்களோ என்றுதானே நாங்கள் விழித்துக்கொண்டே இருக்கிறோம்” என்றன. 

“உங்கள் தலைவியின் கணவன் வந்துவிட்டானா?” என்று “யாரணங்குற்றனை கடலே” எனத் தொடங்கும் குறுத்தொகைப் பாடலைக் கருத்தில கொண்டு கேட்டேன். 

அதற்கு அலைகள் “நாங்கள் அயரமாட்டோம். சோர்ந்துபோய் “நிலத்தின் பக்கம் வரமாட்டோம். நாங்கள் போட்ட பிச்சை தானே அது! விரும்பினால் ஆட் கொண்டு விடுவோம். எங்கள் அச்சம் எல்லாம் மனிதனைவிட அவன் மூளைக்குத்தான்! ஆனால் அவனுக்குத் துணிவுதான் இல்லை. கடலில் ஒன்றை யொன்று விழுங்கும் முதலைகள், சுறாக்கள், திமிங்கிலங் கள், நண்டுகள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் தங்கள் பூசல்களை வீட்டோடு வைத்துக் கொள்கின்றன. வாழ்ந்தாலும் கடல்! வீழ்ந்தாலும் கடல்!! உங்களைப் போல் அவை தற்கொலை செய்துக்கொள்வதில்லை. அதற்கு உரிமையும் கொடிபிடித்துக் கேட்பதில்லை” என்று பௌர்ணமி ஆதலால் சற்றுப் பேரிரைச்சலுடன் கூறின. 

“தேவர்களுக்கு அமுதம் அளித்த பெருமை உங்களுக்கு உண்டே! என்மனம் ஆறுதல் பெற ஒருவழி சொல்லக் கூடாதா?” என்று பணிந்து கேட்டேன்.

அப்போது ஓர் அலை, தரையிலிருந்து மேலே துள்ளிக் குதித்து அன்னக்கூட்டத்தைப் போல் வெள்ளிய நுரையுடன் கீதே விழுந்து மீண்டும் கடலுக்குள் சென்றது. புரிந்தது! “தேவர்களைத் தண்டிக்கத்தான். அமுதம்! மனிதனுக்கு ஆறுதலையும் அமைதியும் கொடுக்கத்தான் மரணம்! நம்மையறிந்து நாம் எப்படி நாம் பிறப்ப தில்லையோ, அப்படியே நம்மையறிந்து மாளக்கூடாது!” என்பதைத்தான் அது எனக்கு உணர்த்துவதாகப்பட்டது. 

நூல்களும், அனுபவமும் ஆராய்ச்சியும் உணர்த்தாத உண்மையை அந்த அலை எனக்குப் புரியவைத்து விட்டது. சிக்கல்களைக் கண்டு ஓடுபவன் கோழை. கவலையும் நோயும் நெருக்கடியும்தான் அவனை ஒரு வீரனாக்கும். அதனால்தான் ‘மெஸ்மர்’ சாதிக்காததை ‘சிக்மண்ட்ஃபிராய்டு’ சாதித்தார். 

கடைசியாக ஓரலை என்னருகே வந்து ஏதோ சொல்வதுபோல் தோன்றியது. “மனிதனே! உங்கள் நிலத்தில் இருக்கும் பெரிய மலையின் உயரத்தைவிட எங்கள் பணிவின் ஆழம் அதிகம் அந்த மலைதான் பொடி யாகிக் கரையில் மண்ணாக உன் போன்ற மனிதர்கள் பலரால் மிதிக்கப்படுவதைப் பார்க்கிறாயே! உன்மனத்தின் ஆழம் கடல் ஆழத்தைவிட மிகுதி. அதில் நேய வலையை வளர்ப்பாயாக! போ! மனிதப் பிறவி அன்புக்குரியது. சேர்ந்து வாழக் கற்றுக்கொடு! குடும்பம் அவனுக்குத்தான் உண்டு!” என்று கூறுவதுபோல் தோன்றியது. 

பொழுது விடியத் தொடங்கியது. மனத்தில் இருந்த இருளும் சிறிது சிறிதாக அகன்றது. ஓஸோனின் பின்னணியில் அறிவுக் கடலாம் பல்கலைக் கழகத்தைப் பார்த்து அயர்ந்து போனேன். தன் மூளையின் விரைவால் தன்னையே அழித்துக்கொள்ளும் மனிதனின் நடமாட்டம் தொடங்கியது. அந்த மனிதக்கடலில் நானும் ஒரு திவலைதானே! விருட்டென்று எழுந்தேன். வீடு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். வீடு வந்தது. வாழ்க்கை ஒரு மாறுதலைத் தந்தது. 

கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் பேராசிரியரின் படம் “அலை தந்த ஆறுதல் எப்படி? மனி தனைக் கேட்டிருந் தால் மாளவே செய்திருப்பான். அலை தந்த வாழ்வுதான் உன் வாழ்வு!” என்று கூறு வதுபோல் தோன்றியது எனக்கு. எனவேதான் நெய்தற் பாடல்கள் என்னை நெகிழச் செய்கின்றன. 

மீண்டும் தொலைபேசி! பார்வையாளர்கள்! ஹிஹிக் கள். ஆனால் மனம் தளரவில்லை. இப்போதெல்லாம் மனத்தில் அசாதாரணமான உறுதி தென்படுகிறது. 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *