அறியாத வயசில் செய்த புரியாத தவறுகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 10,271 
 
 

இன்னொவா கார் சுமங்கலி அபார்ட்மெண்ட் முன் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் தோற்றம் கண்ணியமாக இருந்தது. அரசு அதிகாரிகள் என்று பார்த்தவுடனேயே அந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி புரிந்து கொண்டான்.

“ சார்!…நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?…”

“ இன்கம் டேக்ஸ் ஆபிஸர் சத்திய நாராயணனை பார்க்க வேண்டும்!…”

“ அவர் சி. 27 ல் இருக்கிறார். 3- வது மாடி. வலது புறம் நாலாவது வீடு…,சார் வீட்டில் தான் இருக்கிறார்..”

அந்த நாலு பேர் கொண்ட கும்பல் 3-வது மாடிக்குப் போய் சி.27 பிளாட் காலிங் பெல்லை அழுத்தினார்கள்.

கதவைத் திறந்த திடகாத்திரமான நடுவயசு மனிதர் “யாரைப் பார்க்க வேண்டும்?…”

தொனியே சற்று அதிகாரமாக இருந்தது!

“இன்கம் டேக்ஸ் ஆபிஸர் சத்திய நாராயணன்..”

“ அப்படியா?….உள்ளே வந்து உட்காருங்க,,,என்ன வேலையா வந்தீங்க?…நான் என்ன செய்ய வேண்டும்?….”

அந்த நால்வரும் ஹாலில் இருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

“ சார்!…நாங்க கல்வித்துறையிலிருந்து வந்திருக்கிறோம்!….ஒரு சின்ன விசாரணை!…”

“ எதைப் பற்றி?…”

“ சமீபகாலமாக நம்ம ஊரில் பெண்கள் படிக்கும் ஸ்கூல்களில் விரும்பத் தகாத பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன…அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த ஒரு வாரமாக அதே செய்தியைப் பற்றி மாற்றி மாற்றி போடறாங்க!…அதனால் அரசு ஒரு குழுவை நியமித்து நடந்த நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து..எதிர்காலத்தில் மாணவ மாணவிகளிடம் இனி மேல் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காதபடி ஒரு விழிப்பு உணர்ச்சியை உருவாக்க விரும்புகிறது…”

“ அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?..”

“ தங்கள் பெண் வேணியிடமும்…உங்களிடமும் ஒரு சின்ன விசாரணை செய்ய வேண்டும்…”

“ தயவு செய்து வெளியே எழுந்து போகிறீர்களா?…நீங்கள் தவறான முகவரிக்கு வந்து விட்டீர்கள்!…” என்றார் கோபமாக.

“ வேணி உங்க பொண்ணுதானே?…”

“ வேணிங்கற பேரிலே எத்தனையோ பெண்கள் இந்த ஊரில் படிக்கிறாங்க!…இந்த பேப்பர்காரனுக பரபரப்புக்கு எதை வேண்டுமானாலும் எழுதுவானுக!….அதை எல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டு………நல்ல குடும்பங்கள் வசிக்கிற

-2-

அபார்மெண்ட் பக்கம் வந்து இப்படி பெண்கள் பெயர்களை கெடுக்கிற மாதிரி இப்படி விசாரிக்கிறது ரொம்பத் தப்புங்க!…நீங்க முதலில் இடத்தை காலி பண்ணுங்க!…” எண்றார் எரிச்சலுடன்.

“ சார்!,,,எங்களுக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறாங்க!,,,நாங்களும் பொறுப்பாக சரியான விசாரணை செய்து விட்டுத் தான் உங்க வீட்டிற்கு வந்தோம்!…”

“ உங்க பெண் வேணி பரிமளா மெட்ரிக்குலேசன் ஸ்கூலில் இந்த வருஷம் பிளஸ் டூ படிக்கிறாள்,…போன புதன் கிழமை தோழிகளோடு அவிநாசி ரோட்டில் ஒர் ஷாப்பிங் மாலில் மது அருந்தி விட்டு போதை தலைக்கேற நடு ரோட்டில் ஆபாசமாகப் பேசி ஆர்பாட்டம் செய்திருக்காங்க!….”

அதுவரை ஒரு மூலையில் நின்று அமைதியாக்கக் கேட்டுக் கொண்டிருந்த சத்திய நாராணனின் மனைவி கூச்சல் போட்டுக் கொண்டு ஹாலுக்கு மத்தியில் வந்தாள்.

“ என்னங்க நீங்க,,அவங்க சொல்லற கதையை கேட்டுக் கிட்டு…பேசாம இருக்கிறீங்க…நம்ம பெண்ணோட பெயரைக் கெடுக்கவே திட்டம் போட்டு வந்திருக்காங்க!…எல்லோரும் எழுந்து போங்க!…இல்லாட்டி நான் அசிங்கமாப் பேச வேண்டியிருக்கும்!…” என்று கத்தினாள்.

அதுவரை அமைதியாக இருந்த ஒருவர் “மிஸ்டர் சத்திய நாரயணன்!… நாங்க தக்க ஆதாரத்தோடு தான் உங்க வீட்டிற்கு வந்தோம்…நீங்க விசாரணைக்கு ஒத்துழைச்சா நல்லது…”

“ பத்திரிகையிலே போட்ட அந்த குடிகாரப் பொண்ணு எங்க பொண்ணு தான் என்பதற்கு என்ன ஆதாரம்?..”

இன்னொருவர் பையில் இருந்த ஒரு டேப்பை எடுத்து ஓரு காட்சியை போட்டுக் காட்டினார்.

டூ வீலரில் இருந்து நடு ரோட்டில் ஒரு பெண் விழுந்து கிடக்கிறாள். ஒரு மாணவன் டூ வீலரை நிறுத்தி விட்டு அந்தப் பெண்ணிடம் போய் மீண்டும் டூ வீலரில் வந்து ஏறும்படி சொல்கிறான். அதற்கு அந்தப் பெண் அவனை ஆபாசமாகத் திட்டுகிறாள், அவன் கெஞ்சிக் கொண்டு அவள் கையைப் பிடித்து தூக்கப் பார்க்கிறான்.

“ டேய்! பொறுக்கி….எனக்கு உன்னைப் பற்றியும் தெரியும்!….நீ அந்த முரளியை விட மோசமான…………..” என்று சொல்ல முடியாத வார்த்தைகளில் திட்டுகிறாள், கேமரா அவள் முன் வருகிறது…. முகம் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பெண் தடுமாறிக் கொண்டே எழுந்து நிற்கிறாள், கேமரா அவளை தெளிவாகக் காட்டிகிறது,. ஸ்கூல் ‘யூனிபார்ம்’மோடு கழுத்தில் மாட்டியிருக்கும் அடையாள அட்டை மார்பில் தொங்குகிறது. கேமரா அடையாள அட்டை யில் சிறிது நேரம் நிற்கிறது, அதில் S, வேணி, பிளஸ் டூ A செக்சன், பரிமளம் மெட்ரிக்குலேசன் பள்ளி என்று தெளிவாகத் தெரிகிறது!..

-3-

அதுவரை அதைப் பார்த்துக் கொண்டிருந்த சத்திய நாராயணின் மனைவி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, “ ஐயோ!…ஐயோ!….நம்ம மானத்தையே கெடுத்திட்டாளே!…நாம எப்படி அடுத்தவங்க முகத்தில் விழிப்பது? இரண்டு பேரும் எதையாவது குடிச்சுட்டு செத்திடுவோங்க!…” என்று தரையில் படுத்துக் கொண்டு கதறினாள். சத்திய நாராயணன் எழுந்து போய் “ அழாதே!..” என்று மனைவியை பக்கத்தில் உட்கார்ந்து சமாதானப் படுத்தினார் . அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

கல்வித் துறையில் இருந்து வந்த அந்த நாலு பேர்களுக்கும் அது தர்ம சங்கடமாகப் போய் விட்டது.

அதில் ஒருவர் மட்டும் சமாளித்துக் கொண்டு நிதானமாகப் பேசினார்.

“ சார்!…….தயவு செய்து இரண்டு பேரும் அழுவதை நிறுத்திக் கொள்ளுங்க……..பெரிய தப்பு ஒன்றும் நடந்திடலே,,,,,,,,உங்க பொண்ணுக்கு அறியாத வயசு…..மனசுக்கு ஒரு சின்னக் கஷ்டம்…. ஒரு நட்பு நகர்ந்து போனதை…தன் வாழ்க்கையே அழிஞ்சு போனதா நினைச்சு கவலைப் பட்டிருக்கு…தண்ணியடிச்சா எல்லாக் கஷ்டங்களும் போயிடும் என்று நண்பர்கள் சொல்வதைக் கேட்டிருக்காங்க….அதை நிஜமென்று நம்பி தோழிகள் உதவியோடு லிக்கர் சாப்பிட்டிருக்கு…..கூடப் போன பெண்களும் தங்கள் தோழியின் மிகப் பெரிய கஷ்டத்தைப் போக்க தாங்களும் துணை செய்வதாக நினைத்துக் கொண்டு கூடப் போயிருக்காங்க….லிக்கர் நிறைய சாப்பிட்டா எல்லாக் கவலையும் போய் விடுமென்று அளவுக்கு அதிகமா குடிச்சிட்டாங்க…அந்த லிக்கர் தன் வேலையைக் காட்டியிருக்கு….அதனால் தான் உங்க பொண்ணு தாறு மாறாகப் பேசியிருக்கா… மற்றபடி அவ தெரிந்து அப்படி பேசலே….இப்ப புரிஞ்சு ரொம்ப வேதனையும் வெக்கமும் பட்டிருக்கும்…இனி அது எந்தக் காலத்திலும் குடிக்காது…அது நொந்து போயிருக்கும்…நீங்க இரண்டு பேரும் பேரும் மேலும் காயப் படுத்திடாதீங்க….நாங்க வந்ததின் நோக்கமே வேறு!….” என்று தெளிவாகச் சொன்னார்.

“ நீங்க என்ன சார் சொல்ல வரறீங்க?…”

“ அளவுக்கு அதிகமா குடிச்சா போதை வரும்…அதன் விளைவைத் தான் நாம பார்த்தோம்…அறியாத பொண்ணு…டீன் ஏஜ்…அந்தந் வயசில் எல்லோருக்கும் வரும் ஒரு சின்ன விஷயம்… ஒரு நட்பு நகர்ந்து போனதை வாழ்க்கையே அழிஞ்சு போனதா நினைச்சு லிக்கர் சாப்பிட்டிருக்கு….லிக்கர் சாப்பிட யாராவது தூண்டுதல் இருக்கா?…’யூனிபார்ம்’மோடு வரும் பள்ளி மாணவிகளுக்கு அவ்வளவு சுலபமா லிக்கர் சப்ளை செய்பவர்கள் யார்?..கூடவே வந்து குடிச்ச மாணவர்கள் என்ன நோக்கத்தோடு வந்து குடிச்சாங்க…மாணவர்களுக்குப் பின்னால் வெளியாட்கள் யாராவது இருக்கிறார்களா?… உங்க பெண்ணை பைக்கில் கூட்டி வந்த மாணவன் அவளை வீட்டில் கொண்டு வந்து விடத் தான் கூட்டி வந்தானா? அல்லது அவனுக்கு வேறு நோக்கம் ஏதாவது உண்டா?……….இதையெல்லாம் ஆய்வு செய்து

-4-

மாணவ மாணவிகள் கையில் எளிதில் லிக்கர் கிடைக்காமல் செய்வதற்கும், குடியின் தீமைகளை அவர்களுக்கு எப்படி உணர்த்துவது என்றும், அறியா வயசில் செய்த இந்த தப்பை சிறுமிகளுக்குப் புரிய வைத்து தக்க பாதுகாப்பு உணர்வை ஊட்டி வேண்டிய பெற்றோரே அதை பெரிசு படுத்தி அவர்கள் வாழ்க்கையை கெடுத்து விடாமல் புத்திமதி சொல்வதும் தான் எங்களுக்கு கொடுக்கப் பட்ட கடமை!

நீங்க ஒன்றை நல்லா தெரிஞ்சுக்குக்கோ…குடிச்சு பழக்கப் பட்டவங்களுக்கு சீக்கிரம் போதை வந்திடாது! புதுசா குடிச்சவங்க தான் போதையில் இப்படி உளறுவாங்க….உங்க பெண் கவலையை மறக்க யார் பேச்சையோ கேட்டு முதல் தடவையா குடிச்சிருக்கு…அதனாலே மனசிலே இருக்கிற கோபத்தை கட்டுப் படுத்த முடியாம கண்டபடி திட்டியிருக்கு!…மற்றபடி உங்க பொண்ணுக்கு எந்த பெரிய தப்பும் நடக்கலே!…நீங்கதான் அதை பெருசு படுத்தாம பார்த்துக் கொள்ள வேண்டும்!……” என்று சொல்லி விட்டு, அந்த பெண்ணிடமும் பிரியமாக சில கேள்விகள் கேட்டு விட்டு அந்தக் குழு கிளம்பி விட்டது!

பரிமளம் மெட்ரிகுலேஷன் பள்ளி,

காலை பத்து மணி, அந்தக் கல்வித்துறையைச் சேர்ந்த அந்த விசாரணைக் குழுவினர் பள்ளி முதல்வர் அறைக்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் வருகையை முன்னதாகவே அந்தப் பள்ளிக்குச் சொல்லப் பட்டிருந்தது.

அந்த அறையில் ஏற்கனவே பள்ளி தாளாளரும் மற்றும் கரை வேட்டி ஆசாமிகள் இரண்டு பேர்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

முதல்வர் அந்த குழுவினரை வரவேற்று இருக்கைகள் கொடுத்தார்.

முதல்வரைப் பார்த்து அந்த குழு தலைவர் பேசினார்.

“ சார்!….போன வாரம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்த இரண்டு செய்திகளையும் நீங்க பார்த்திருப்பீங்க!….”

“ என்ன செய்தி சார்?,,,”

“ ஏழாவது வகுப்பில் படிக்கும் சில மாணவிகள் வகுப்பறையில் செல் போனில் ஆபாசப் படங்கள் பார்த்தது…….பிளஸ் டூ மாணவி குடித்து விட்டு தெருவில் ஆபாசமா பேசியது…”

“ நாங்களும் பத்திரிகைகளில் பார்த்தோம்…ஆமா…அதற்கும் எங்க ஸ்கூலுக்கும் என்ன சம்மந்தம்?…..” என்றார் முதல்வர்.

அதற்குள் “ பொறுப்பான அதிகாரி மாதிரி தெரியறீங்க…கொஞ்சம் பொறுப்பா நீங்க நடந்துக்க வேண்டாமா?….. எங்க கல்வி நிறுவனத்தை பிடிக்காதவங்க பேச்சைக் கேட்டிட்டு நீங்க பாட்டுக்கு விசாரணை என்று பெயரில் இங்கே வரலாமா?..” என்று கோபமாகக் கேட்டார் தாளாளர்.

-5-

“சார்….யார் தெரியுமா?….கல்வி மந்திரியோட மச்சான்…தெரியாம வந்திட்டோமென்று சொல்லிட்டு தப்பிச்சிட்டு போயிடுங்க,,,,இல்லாவிட்டா உங்க மேல என்கொயரி வந்திடும்!….” என்று ஒரு கரை வேட்டி சத்தம் போட்டது.

“ இங்கு யார் யார் என்ன பொறுப்பிலே இருக்கிறீங்க….அவர்களுடைய …பூர்விகம் செல்வாக்கு எல்லாம் என்ன என்று தெரிந்து தான், தக்க ஆதாரத்தோட இங்கே விசாரணைக்கு வந்திருக்கிறோம்!…நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா உங்களுக்குத் தான் நல்லது….”

“ அப்படியா என்ன ஆதாரம் இருக்கு?…”

பத்திரிகை வராத பல போட்டோக்களை ஸ்பாட்டிற்கு போய் படம் பிடித்த நிருபர்களிடமிருந்து அந்தக் குழு வாங்கி வந்திருக்கு. அவைகளை வரிசையாக எடுத்துப் போட்டார்கள்.

அந்தப் பெண் குடி போதையில் ரோட்டில் தகராறு செய்யும் பல காட்சிகள். அத்தனையிலும் வேணி ‘யூனிபார்ம்’மில் இருக்கிறாள். அடையாள அட்டையில் பரிமளம் மெட்ரிக்குலேசன் பள்ளி என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஏழாவது வகுப்பு பெண்கள் ஐந்து பேர்கள் வகுப்பில் ஆபாசப் படங்களை பார்த்ததை உங்க ஆசிரியர் கண்டித்து பேசுவது, நீங்க அந்த சிறுமிகளின் பெற்றோர்களை கூப்பிட்டு கண்டித்தது வரை உங்களுக்கே தெரியாமல் உங்க மாணவர்கள் செல்போன் காமிராவில் படம் பிடிச்சிருக்காங்க… அவைகளை எல்லாம் இந்த டேப்பில் பதிவு செய்திருக்கிறோம்!….”

“ சாரி!….சார்…..ஸ்கூல் பெயர் எந்த விதத்திலும் கெட்டுவிடக் கூடாது என்பதில் நாங்க அக்கறையோட இருக்கிறோம்!..” என்றார் முதல்வர்.

மற்றவர்கள் அந்தப் புகைப் படங்களை கைகளில் எடுத்துப் பார்த்து விட்டு, என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்கள்.

“ நீங்க முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்க!….ஸ்கூல் பெயர் கெடுவதிலோ…பெற்றோர் பெயர் கெடுவதிலோ….பெண் குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப் படுவதிலோ ………அரசுக்கு எந்தக் காலத்திலும் உடன்பாடு கிடையாது!… நடந்த தப்பை எதற்கு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு.

பெண் குழந்தைகளுக்கு கூட மது எப்படி சுலபமாக கிடைக்கிறது?…அதற்கு யார் காரணம்?

வயசு வந்த பெண்களோட மாணவர்களும் சேர்ந்து குடிக்கப் போகிறார்கள் என்றால் குடிக்க மட்டுமா?…அல்லது வேறு நோக்கம் இருக்கிறதா?

-6-

மாணவியை பைக்கில் அழைத்துப் போன மாணவன்….அந்தப் பெண்ணை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமா?….அல்லது வேறு எங்காவது அழைத்துப் போக திட்டம் இருந்ததா?

எல்லாப் பள்ளிகளிலுமே மாணவ மாணவிகளிடம் ஸ்மார்ட் போன் புழக்கத்தில் இருக்கிறதா?

இது போன்ற பல விஷயங்களை ரகசியமாக ஆய்வு செய்து எதிர் காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க முடிவு எடுக்கத் தான் இந்த விசாரணை!

குடி போதையில் இருந்த வேணியின் பெற்றோர்களிலிருந்து வகுப்பில் ஆபாசப் படம் பார்த்த ஐந்து சிறுமிகளின் பெற்றோர்கள் வரை விசாரணைக்கு அணுகினோம்!

எல்லோருமே நாங்கள் தவறான முகவரிக்கு வந்து விட்டதாகச் சொல்லி நடந்த சம்பவங்கள் முழுவதையும் மறைக்கப் பார்த்தார்கள்!

அவர்கள் தான் அப்படி என்றால் பெரிய கல்வி நிறுனத்தை நடத்தும் நீங்களும் அதே தவறைத் தான் செய்துள்ளீர்கள்!

ஆர்வ கோளாறில் அது எப்படி இருக்கும் என்று ஆபாசப் படங்களைப் பார்த்த சிறுமிகள் செய்த தவறும், அளவுக்கு அதிகமாக குடித்தால் சிறு மூளை பாதிக்கப் பட்டு என்ன செய்வோம் என்று தெரியாமல் குடித்த வேணியின் செயலும் தவறாக இருந்தாலும் அறியாத வயசில் செய்த புரியாத தவறுகள்!

அரசு அக்கறையோடு இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க நியமித்த எங்கள் குழுவிடம் படித்த பெற்றோர்களும் மூடி மறைக்கிறார்கள்!

பெரிய கல்வி நிறுவனம் நடத்தும் பொறுப்புள்ளவர்களும் கூட அரசு நியமித்த குழுவிடம் நடந்ததை மூடி மறைப்பது ரொம்பத் தப்புங்க!

உங்க செயலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது டீன் ஏஜ் குழந்தைகள் அறியாத வயசில் செய்த புரியாமல் செய்த தவறுகள் எங்களுக்குப் பெரிதாகத் தெரியலைங்க!…” என்று அந்த குழுத் தலைவர் சொன்னார்.

பள்ளி முதல்வர், தாளாளர் இருவரின் கம்பீரம் போய் அந்தக் குழுவின் முன் தலை குனிந்து அமர்ந்திருந்தார்கள்.

– பாக்யா பிப்ரவரி 3-9 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *