(இதற்கு முந்தைய ‘அதிதி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).
சுபத்ரா, மாருதி, மொரிகா, பட்டாதிகா, விஜயங்களா, லீலாவதி போன்ற பெரிய நிபுணர்கள் பெண்கள் குலத்தில் அவதரித்தது பலருக்கும் தெரியாது.
பெண் அரசிகளின், ராணிகளின், வீராங்கனைகளின் பட்டியல் மிக நீண்டது. வீரத்தாய் பற்றிய பாடல்கள் வேதத்திலும், புறநாநூற்றிலும் உள்ளது. வேறு எங்கும் வீரத்தாய் பாடல்கள் இல்லை.
கைகேயி தசரத மன்னனுக்கு சாரதியாக இருந்து போரில் வெற்றிவாகை சூட உதவியதால், மூன்று வரங்களைப் பெற்றாள்; ராமாயணம் நமக்குக் கிடைக்க உதவினாள். கைகேயி போல பல பெண்கள் ரதம் ஓட்டும் பணியில் இருந்தது புராணங்களை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும். கிருஷ்ணனின் மனைவி சத்யபாமாவும் ஒரு சிறந்த ரத சாரதி.
நற்குணங்கள், செழிப்பூட்டும் நதிகள், பூமி, நாடுகள், கவிதை, இலக்கணத்தின் யாப்பு அணிகள் முதலிய எல்லா நல்ல விஷயங்களுக்கும் பெண்களின் பெயர்களே இருக்கும். கீர்த்தி, கருணை, சாந்தி முதலிய நற்குணங்களின் பட்டியலை கண்ணன் கீதையில் அடுக்குகிறார்.
மென்மையான பூக்களின் பெயர்களும் பெண்பால் பெயர்களே. இதை சமஸ்கிருத இந்து இலக்கியம் தவிர வேறு எங்கும் காணமுடியாது. ஐரோப்பிய மொழிகளில் உள்ள பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருத பெயர்களின் மருவிய வடிவங்களே!
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது நம் மூலம் உலகிற்கு பரப்பப்பட்டது. “பூமி, தாய்-மக்கள் அதன் புதல்வர்கள்” என்பது அதர்வண வேத மந்திரம்.
பெண்களைப் போற்றவும், காக்கவும் ஸுமங்கலிப் பிரார்த்தனை; ஸுமங்கலி சுவாசினி பூஜை; குமாரி பூஜை; ரக்ஷா பந்தன் போன்ற எண்ணற்ற பண்டிகைகள் உள்ள மதம் இந்துமதம்.
பெயர்களிலும் பெண்களுக்கே முதலிடம். இதை இன்று மேல்நாட்டினரும் பின்பற்றுகின்றனர். சீதாராமன், ராதாகிருஷ்ணன், பார்வதிபரமேஸ்வரன் என்பது இந்துக்கள் கற்பித்தது. இன்று அவர்களும் ஜூலியாராபர்ட் என்பார்களே தவிர ராபர்ட் ஜூலியா என்று சொல்லமாட்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன் “ஜகதப்பிதரவ் வந்தே பார்வதிபரமேஸ்வரவ்” என்று சொல்லி பெண்களுக்கு முதலிடம் என்பதைக் காட்டினான்.
சுபத்ராவின் கருவில் இருந்தபோது அர்ஜுனனின் பேச்சைக்கேட்டு அபிமன்யு போர்க்கலையை அறிந்தான். கருவில் இருந்தபோது தந்தையின் தவறான வேத உச்சரிப்பால் அஷ்டாவக்ரன் (எட்டு கோணல்) கோணல் மாணலாகப் பிறந்தான்.
இதை அறிந்த முன்னோர்கள் பெண்களைப் பிரசவத்தின்போது தாய் வீட்டுக்கு அனுப்பி (பிறந்த அகம்) பாதுகாத்தனர். இந்துக்களின் இந்த கண்டுபிடிப்பை உலக விஞ்ஞாநிகளும் உறுதி செய்கின்றனர். ‘கருவிலே திரு’ என்பது நம் திருமுறைப் பாடல். இப்படி பெண்களுக்கு யார் பாதுகாப்பு கொடுத்தனர்?
வீட்டுவேலைகள் மட்டும் பெண்கள் செய்தால் போதும் பூஜை புனஸ்காரங்கள், யாக யக்ஞங்கள் எதுவும் செய்யாமலேயே கணவனின் புண்யத்தில் பாதியைப் பெறலாம் என்பது இந்துமத சாஸ்திரங்களில் உள்ளது. ஒவ்வொரு பூஜையின்போதும் கணவனின் வலதுபுறத்தில் மனைவி நின்றுகொண்டு, தர்ப்பைப் புல்லினால் கணவனைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் மனைவி அனுமதி கொடுத்து நான் இதைச் செய்கிறேன். அதில் பாதிப்புண்யம் அவளுக்கு என்று இதைச் செய்கிறேன் என்று கணவன் சொல்வதாக இந்து தர்மசாஸ்திரம் சொல்கிறது. ராமனும்கூட சீதையைக் காட்டில் கொண்டுவிடச் செய்த பின்னர் சீதையின் தங்கப்பதுமையை செய்துவைத்து யாக யக்ஞங்களைச் செய்தான் என்கிறது ராமாயணம்.
மனைவி இருந்தால்தான் தர்மப்பணிகளை கணவன் செய்யமுடியும். இதனால்தான் அவளுக்கு தர்மபத்தினி என்று பெயர். திருவள்ளுவரும் இதைக் குறளில் சொல்கிறார். நான்குவித ஆசிரமங்களில் “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் துணை…” என்பான் வள்ளுவன். சீதையும் கண்ணகியும் வருத்தப்படும் ராமாயண சிலப்பதிகாரப் பாடல்களிலும் இது வருகிறது.
துறவியர்க்கும், பிராமணர்களுக்கும், விருந்தினர்க்கும் சோறுபோடும் அரிய பாக்கியத்தை இழந்துவிட்டேனே என்று வருத்தப்படுகின்றனர். இப்படிப் பெண்கள் விருந்தோம்பலை கடமையாகக் கொண்டது உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை. சமஸ்கிருத, தமிழ் நூல்களில் மட்டுமே உண்டு. இமயம் முதல் குமரிவரை பெண்கள் இப்படி இருந்தனர் என்பது வியப்புக்குரிய விஷயம். ஏனெனில் பழங்கால உலகில் இந்தியாதான் உலகிலேயே பெரிய தேசம்.
திருமண மந்திரங்கள் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளன. அதில் உள்ள மந்திரங்கள் தற்கால சினிமா காதல் பாட்டுகளைத் தோற்கடித்து விடும். ‘நீயே மஹாராணி’ ‘என் இதயராணி’ என்று பாராட்டுகின்றன. இதயத்தைத் துளைக்கும் அம்பு படம் இன்று வாலன்டைன் டே காதலர்தின கார்டுகளில் இருக்கிறது. இது அதர்வண வேதமந்திரம். அதாவது நீ என் இதயராணி, மேலும் பாம்புராணி என்று ஒரு தேவதையை வேதம் குறிப்பிடுகிறது. பெண்கள் மஹாராணிகள்.
பெண்களை கொல்லக்கூடாது என்று சொல்லும் ஒரேமதம் இந்துமதம். இதைச் சாஸ்திரங்களில் எழுதியும் வைத்துள்ளனர். உலகில் வேறு எந்தக் கலாச்சாரத்திலும் இந்தவிதி இல்லை. தாடகையைக் கொல்ல ராமன் மறுக்கிறான். அப்போது விஸ்வாமித்திரர், “இது பேய், பெண் அல்ல. ஆகையால் கொல்லலாம்…” என்பதை ராமாயணத்தில் காணலாம். ஆண்-பெண்-அலி என்ற மூன்று நிலையில் வாழ்ந்த சிகண்டியைக் கொல்ல மறுத்ததால் பீஷ்மர் உயிரழந்தார்.
தோட்டத்தில் கீழே கிடந்த மாங்காயை எடுத்த சிறுமிக்கு மரணதண்டனை விதித்த நன்னனைப் பாடமாட்டோம் என்று தமிழ்ப் புலவர்கள் சபதம் செய்ததை சங்க இலக்கியம் பகர்கிறது. பெண்கொலை செய்வோரைச் சாடும் ஸ்லோகங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் விரவிக்கிடக்கின்றன. உலகில் இப்படிப் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தநாடு இந்தியா ஒன்றுதான். ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பது பொன்மொழி.
பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்து மணம் புரியும் வழக்கம் இந்தியாவில் இருந்ததால் பெண்களின் செல்வாக்கு தெரிகிறது. பெண்விலை கொடுக்காமலேயே என்னை மணம்புரிய அனுமதிப்பேன். என் காளையை அடக்கட்டும் என்கிறாள் யாதவ ஜாதிப்பெண். சங்க இலக்கியத்தில் கலித்தொகைப் பாடலில் இது வருகிறது. பெண்களுக்கு அவ்வளவு கிராக்கி.
பெண்களுக்கு எட்டுவகைத் திருமண வாய்ப்புகள் கிடைத்த ஒரேநாடு இந்தியாதான். மனுஸ்மிருதி சொன்ன எட்டுவகைத் திருமணங்களை தொல்காப்பியரும் அப்படியே அடுக்குகிறார். இவை ஒவ்வொன்றுக்கும் ராமாயண, மஹாபாரதப் புராணங்களில் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ருக்மிணியின் காதல் கடிதம், பீஷ்மர் அம்பா, அம்பிகா, அம்பாலிகா மோதல்; நள தமயந்தி காதல் முதலியன இதற்குச் சான்று.
புரட்சிகரப் பெண்களை இந்தியாவில் மட்டுமே காணலாம். கணவனைத் தவறாக குற்றம் சாட்டிக் கொன்ற பாண்டியன் அரசவைக்குள் நுழைந்து “டேய், அறிவுகெட்டவனே (தேரா மன்னா! செப்புவதுடையேல்) என்று அழைத்துப் பேசுகிறாள் கண்ணகி. எமனைப் பின்தொடர்ந்து சென்று திறமையான பேச்சினால் கணவனின் உயிரை மீட்கிறாள் சாவித்திரி. தன்னை சூதாட்டத்தில் பணயம் வைக்க உரிமையில்லை என்று சட்டம் பேசுகிறாள் திரவுபதி.
“நான் யாருடன் படுத்துக் கர்ப்பமாகி நீ பிறந்தாய் என்று எனக்கே தெரியாது. குலம், கோத்திரம் கேட்கும் குருவிடம் இதைச்சொல்” என்று உண்மை பேசுகிறாள் ஜாபாலா. அவனும் “என் அப்பா பெயர் தெரியாது; இதை அம்மாவே சொன்னாள்” என்று சொன்னவுடன் குரு நெகிழ்ந்துபோய், “நீ உண்மை பேசுகிறாய்; ஆகையால் நீ பிராமணனே…” என்று துணிகிறார் உபநிஷத்கால உண்மைப் பெண்ணுக்கு நிகர் எவர்? சத்யகாம ஜாபாலா என்ற அச்சிறுவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.
“பிறந்து மொழிபயின்று பின்னெல்லாம்” என்று செட்டியார் குலமங்கை புனிதவதி (காரைக்கால் அம்மையார்) பாடுவதால், பெண்கள் ஜாதி வித்தியாசமின்றி 1500 ஆண்டுகளுக்கு முன்னரே கல்வி பயின்றதை அறிகிறோம்.
பெண்களுக்கான விசேஷ விழாக்களின் பட்டியல் மிக நீண்டது. முன்னர் ரக்ஷாபந்தன் போன்ற பெண்களைப் பாதுகாக்கும் விழாக்களைக் கண்டோம். இதேபோல குழந்தைகளையும், கணவரையும் பாதுகாக்க பெண்களும் விரதம் அனுஷ்டிக்கின்றனர். சாவித்ரி விரதம்; காரடையான் நோன்பு; கணுப்பொங்கல்; வரலெட்சுமி விரதம்; ரிஷிபஞ்சமி; நாகபஞ்சமி; கரவா சவுத் போன்ற பல பண்டிகைகளும் உண்டு. வேறு எந்த மதத்திலும் இதைக்காண முடியாது.
சங்கப் பாடல்களிலும், சமஸ்கிருதப் பாடல்களிலும் “இந்தக் கணவனே மறுபிறப்பிலும் வாய்க்க வேண்டும்” என்று பெண்கள் பாடுகின்றனர். மேல் நாட்டிலோ இதற்கு நேர்மாறாக ஒரு வாழ்க்கையிலேயே மூன்று நான்கு பேரை பெண்கள் மணந்து விடுகின்றனர். காதலனைப் பற்றி அறிந்து ஓவியம் தீட்டி அவனுக்காகக் காத்திருந்ததை தமயந்தி, வாசவதத்தை முதலிய கதைகளிலும் காணலாம்.
பெண்களுக்கு அதிபயங்கர சிலபஸ் இருந்தது. இந்தப் பாடத்திட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாத்ஸ்யாயனாரின் காமசூத்திரத்தில் உள்ளது. பெண்கள் கற்காத பாடம் இல்லை. இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எவரும் சிந்தித்துக்கூட இருக்கமாட்டார்கள்.
விசேஷ உரிமைகள்: இந்தியாவில் பேருந்தில் பெண்களுக்கு என்று இருக்கைகள். இதுதவிர, ஆண்கள் உடனே எழுந்துநின்று இடமளிப்பார்கள். கோவில்களில், முக்கிய இடங்களில் அவர்களுக்கென தனிவரிசை. முத்தாய்ப்பாக இப்போது பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசப்பயணம்.
பாண்டியமன்னர் மீது கோபம்கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகியும், “பசு, பெண்டிர், பார்ப்பனர், வயதானவர் மற்றும் குழந்தைகளை விடுத்து மற்றவர்களை எரிக்க” என்று அக்னிதேவனுக்கு உத்தரவிடுகிறாள். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற வரிசையைக் கடைபிடித்ததால் இத்தனை சலுகை.
வேதபாட சாலையில் நுழையும் ஐந்து வயதுப் பாலகனுக்கு முதல்பாடம் “மாத்ரு தேவோ பவ” (தாயே கடவுள்) என்பதாகும்.
இமயம் முதல் குமரிவரை கணவன் பற்றிய கருத்துக்களும் ஒன்றாகவே இருக்கிறது. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதும் இந்தப் பிறவியில் யாரொருவன் கணவனாக இருக்கிறானோ அவனே இனிவரும் பிறவியிலும் கணவனாக இருக்க வேண்டும் என்பதும் சமஸ்க்ருத தமிழ்மொழி நூல்களில் விரவிக்கிடக்கின்றது. இந்தமாதிரிக் கருத்துக்களை இந்துமதத்திற்கு வெளியே காண்பது அரிதிலும் அரிது.
உலகிலுள்ள ஏனைய பண்பாட்டிற்கும் இந்துப் பண்பாட்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. இந்துக்கள் திருமணத்தை உடலின் இச்சையை பூர்த்தி செய்யும் ஒரு கருவியாகப் பார்க்கவில்லை. உடலின் தேவைகளோடு உள்ளத்தின் தேவைகளையும் ஒரு வழியாகக் கண்டனர். ஒரு மனிதன் திருமனமாகாதவரை அரை மனிதனே என்பது அவர்கள் கருத்து. இதைத்தான் அர்த்தநாரீஸ்வரர் (சிவன் ஒருபாதி; உமையாள் ஒருபாதி) சிலையிலும் உணர்த்தினர்.