அருகிலிருந்த டீக்கடை நோக்கி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 7,380 
 
 

நண்பன் போன் பண்ணிய வேளை இவன் வீட்டில் இல்லை.டீக்கடைக்குப் போயிருந்தான்,எங்கு போனாலும் செல்போனை பிள்ளை போல் தூக்கிக் கொண்டு செல்வான்,அருகில் உள்ள கடைதானே என எடுத்துச் செல்லவில்லை,

டீக் கடைக்காரருக்கு இவனது செல்போன் மேல் ஒரு கண்,கடைக்குப்போகும் போதெல்லாம் செல்போனை வாங்கி அதன் ஆப்சன்களுக்குள் சென்று பார்த்து விடுவது அவரது வழக்கம்,

ஒரு நாள் டீப்போட்டுக்கொடுத்து விட்டு செல் போனை வாங்கியவர் யாருக்கும் கேட்காத பேச்சில் “சார் போன் என்ன வெலை சார்”என்றார்,

இவன் ”இருபத்தியெட்டாயிரத்து முன்னூறு ரூபாய் என்றான் டீயைக்குடித்துக் கொண்டே/

அதிர்ந்து போனார் கடைக்காரர்,

”என்ன சார் சொல்றீஙக,அவ்வளவு வெலையா,”என்கிற கடைக்காரரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே ”இல்லல்ல,,,ஏழாயிரம் ரூபா, புள்ளைங்கதான் ஆன் லைன்ல புக்ப்பண்ணி வாங்கிக் குடுத்தாங்க,ஷோரூமுல இன்னும் ஆயிரம் ரூபா கொறைச்சலு.போனுக்கு ஆர்டர் போட்டு வாங்கிட்டேனே தவிர போன வாங்குன ரெண்டு நாளைக்கு தூக்கம் வரல,இவ்வளவு வெலைப் போட்டு போன் வாங்குற அளவுக்கு நாம ஒர்த்துதானாங்குற கேள்வி மண்டை யைக் கொடைஞ்சிக்கிட்டே இருந்துச்சி,எனக்கு அப்படித்தான் ஒரு டிரெஸ் போட்டாக் கூட இவ்வளவு வெலை உள்ள ட்ரெஸ்ஸப்போட நமக்கு தகுதி இருக்கான்னு கேட்டுக்குறுவேன் என்னைய நானே,,”என்றான்.

கடை டீவியில் நீயூஸ் ஓடிகொண்டிருந்தது,நீயூஸில் லாரி உரிமையாளர்களி ன் போராட்ட அறிவிப்பைச் சொன்னார்கள்.

கேட்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படும் பொழுது அதை எட்டிப்பெற போராடு வது தவிர்த்து வேறு வழியில்லையே எனச்சொல்லிக் கொண்டிருந்தார் டீ.வி ச் சேனலுக்கு பேட்டி கொடுத்த லாரி உரிமையாளர் ஒருவர்,

”சரிதான்,,,எதக்கேக்குறதுக்கும் போராட்டந்தான் வழின்னு சொன்னா அதத் தவிர்த்து வேற வழியே இல்லையா,,,”,என நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்க ”வேற என்ன செய்ய சொல்றீங்க, கேட்டுப் பாக்குறாங்க, பேசிப் பாக்குறாங்க, கெடைக்காத போது வேற வழியில்லாமத்தான போராட்டம் அறிவிக்கிறாங்க,பசிச்சா குழந்தை அழுகத்தான செய்யும்,

”இதுல பசி தப்பா,அழுகுறது தப்பா,”?ரெண்டும் கெடையாது,கவனிக்க மறந்தது நம்ம தப்பு,அத கவனப்படுத்தத்தான் கொழந்த அழுகையே தவிர்த்து வேறொ ன்னுமில்லை இவன்.

”அதே நேரம் கொழந்தைய அழுக விடமுன்னு பெத்தவ யாரும் விரும்புற தில்ல.,,,,,” என்றார் இவனுக்கருகில் நின்று டீக்குடித்துக் கொண்டிருந்தவர்,

ஒரு சின்னப்பெண் வந்து வடை வாங்கிப்போனாள்,நான்கு உளுந்த வடைக ளும் ,கொஞ்சம் சட்னியும் வைத்து வாங்கிக்கொண்டு போனாள்.

அவள் வாங்கிப்போனதையே பார்த்துகொண்டிருந்தான் சிறிது நேரம்,

அவளது அளவிற்கேற்ற சின்னதான நைட்டியில் பூந்தொட்டி நகர்ந்து போவது போல் சென்றாள்.

அவர் யாரெனத்தெரியவில்லை,ஆனால் மிகவும் தெரிந்தவர் போல்இவன் டீக் குடிக்கச் செல்கிற போதெல்லாம் இவனது அருகில் வந்து நின்று கொள்வார். பெஞ்சில் உட்கார்ந்திருந்தால் இவனது அருகில் வந்து அமர்ந்து கொள்வார்,

இவனுக்கு கொஞ்சம் தர்ம சங்கடம்,ஒரு நாள் கேட்டே விட்டான்,அதற்கு ”அவர் இல்ல சார்,தப்பா ஏதும் நெனைச்சிக்கிறாதீங்க, ஒங்களப் போல ஆட்களப் பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷம்,அவுங்க பக்கத்துல நிக்கணும் ,அவுங்க ளோடபேசணும்,பழகணுமுன்னு,,, ஆனா காலம் அதுக்கெல்லாம் அனுமதிக்கிற தில்ல,நெருங்கிப்போயி பழகுனா ஒண்ணு ஏதாவது காரியத்துக்காக வந்துருக்கானோன்னு நெனைச்சிக்கிறாங்க, இல்லையின்னா ஏதாவது பேசி கடைசியில காசு கேப்பானோன்னு நெனைக்கிறாங்க,அவுங்களச்சொல்றதுல குத்தம் இல்ல, நடக்குதுல்ல அப்பிடியும்,அதுனாலத்தான் அவுங்க சிந்தனையும் அப்பி டிப் போகுது, இதுல மட்டும் இல்ல,பொதுவாவே எல்லாத்துலயும் அப்பிடி இருக்குறதுனால எது நல்லது எது கெட்டதுன்னு தெரியமாட்டேங்குது, நடமா டுற மனுசங்களப்பூரா குற்றக் கண்ணோட்டத்தோட பாக்குற மனோ நிலை உருவாகிருக்கு,சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் ,இன்னும் இன்னுமான எல்லார் கிட்டயும் நூத்துக்கு அம்பது சதம் அந்த கண்ணோட்டம் இருக்கு.

அதுக்கு யோசிச்சிக்கிட்டே பாதி யாரு பக்கத்துலயும் போயி நிக்குறதில்ல, இப்ப என்ன நெனைச்சிக்கிட்டாலும் பரவாயில்லைன்னுதான் ஒங்க பக்கத்துல வந்து நின்னேன். நீங்க ஏதாவது நெனைச்சிங்கின்னா சொல்லுங்க ,இங்கயி ருந்து அப்பிடியே தூரத்துக்கு வெலகிப் போயிருறேன்” என்றார்,

ஐம்பது வயதுக்கு மிகாமல் தெரிந்தார்,ஒல்லியான உடம்பில் கசலையான தோற்றத்தை உள் பொதித்துத் தெரிந்தவர் சாம்பல்க்கலரில் வேஷ்டியும் அடர் பிரவ்னில் சட்டையும் அணிந்திருந்தார்,

இப்போது இதுதான் டெரெண்ட் போலும்,பெரும்பாலுமாய் இப்படியான ட்ரெஸ் காம்பினேஷனை பார்க்க முடிகிறது.

நன்றாகத்தான் தெரிந்தார் பார்ப்பதற்கு/

”ஏன் வெலகிப்போகணும்,ஏன் பழக்கத்த அத்துவிடணுமுன்னு நெனைக்கிறீங்க, மனிதஉறவுகளும்,பழக்க வழக்கங்களும் கெடைக்கிறதே அரிதாகிக்கிட்டுவர்ற இந்த நேரத்துல ஒங்களப்போலநல்ல உள்ளங்கள் வலிய வந்து பழகுறதே நான் செஞ்ச மிகப்பெரிய பாக்கியமில்லையா? என்றவாறே டீக் கடைக் காரரிடம் இருவருக்குமாய் சேர்த்து இன்னும் இரண்டு டீக்கள் சொல்லி விட்டு பெஞ்சில் அமர்ந்தான்,

கடை டீ வியில் ஒலித்த பாடலுக்கு தலையசைத்துக்கொண்டும் வைத்த கண் வாங்காமலும் பார்த்துக்கொண்டிருந்தார்.

இவன் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்தவர் அனிச்சையாக தம்பி நீங்க மட்டு ம் இல்ல,ஒங்களப்போல இன்னும் நாலைஞ்சி பேரு இந்தக் கடைக்கி டீக்குடி க்க வருவாங்க,அவுங்ககிட்டயும் இப்பிடித்தான் பழகுவேன்,

”எனக்குத்தெரியும் தம்பி.ஏங் வயசுக்கும் அனுபவத்துக்கும் நெறையப்பேரப் பாத்துருக்கேன் ,அதுல ஒங்களப்போல சில பேருதான் இப்பிடி இருப்பாங்க, தெரிவாங்க.,அவுங்க நடத்த பார்வை பழக்கம்,பேச்சு வார்த்தை எல்லாமே டோட்லா வேற மாதிரி இருக்கும்,அப்பிடி பட்டுத் தெரியிற ஒங்களப்போல உள்ளவுங்களப் பாக்கும் போது ஒரு மதிப்பு வருது மனசுக்குள்ள, கையெடு த்துக் கும்புடணும் போல இருக்கு.

அந்த மதிப்பு மேம்பட ஒங்ககிட்ட வந்து நிக்கிறேன். அது போலத்தான் முன்ன சொன்ன நாலைஞ்சி பேரையும் மதிப்பாப் பாக்குறேன்” என்றவரை ஏறிட்ட போது இரண்டாவது டீயைக்குடித்து விட்டு எழுந்து சென்றார்,”தம்பி வர்றேன்” என்றவராய்.

எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த டீக்கடைக்காரர்.”நீங்க ஒரு ஆளுதான் சார் அவருகூட நல்லா பேசுறீங்க,பழகுறீங்க,ஒங்களப்போல இன்னும் நாலைஞ்சி பேரையும் சேத்துக்கிடலாம்,மத்த யாரும் இவரக்கண்டா பக்கத்துல கூட் அவர மாட்டாங்க, இல்ல அவரு பக்கத்துல வந்தா வேற வேலையில கவனமா இருக்குறது போல காமிச்சிக்கிருவாங்க,தண்ணி சார்,தண்ணிண்ணா தண்ணி கொஞ்ச நஞ்ச தண்ணியில்ல,திகிடுதிம்பான தண்ணி,காலையில் எந்திரிச்ச ஒடனே தண்ணியோட மொகத்துலதான் முழிப்பாரு மனுசன்.

“இத்தனைக்கும்தெறைமையானதொழில்க்காரருசார்,அவரப்போலபொம்பளை யாளுகளுக்கு சட்டை தைக்க இன்னைக்கி வரைக்கும் உருப்படியான டெய்லர் யாரும் கெடையாது சார் நம்ம ஏரியாவுல,மனுசன் சட்டை தச்சிக்குடுத்தாரு ன்னா அப்பிடியே ஒடம்புல ஒட்டிக்கிட்டது போல இருக்கும் அவ்வளவு அழகா தைப்பாரு,அவருகிட்டத்தான் தைக்கப்போடுவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கிற ஆள்க இன்னிக்கி வரைக்கும் நம்ம ஏரியாவுல இருக்காங்க சார்,என்ன மனுசன்கிட்ட இன்னைக்கி துணி தைக்க குடுத்தோம்ன்னா என்னக்கி தைச்சி தருவாருன்னு உறுதி சொல்ல முடியாது,ஒரு வாரத்துலயும் குடுப்பாரு,ஒரு மாசத்துலயும் குடுப்பாரு,பத்து பதினைஞ்சி நாள்கள்லையும் குடுப்பாரு,அவரு எந்த நேரத்துல எப்பிடி இருப்பாருன்னு அவராலயே சொல்ல முடியாது,இதுல யாராவது வந்து எங்கயாவது வெளியூரு அது இதுன்னு கூப்புட்டா போயிரு வாரு,அவுங்க கூடப்போயி சுத்த,அவுங்களோடயே சாப்புட்டுக்கிற,அவுங்க வாங்கி ஊத்துற தண்ணிய குடிச்சிக்கிறன்னு அவருபாட்டுக்கு வீட்டுக்கவலை மறந்து திரிவாரு,குடும்பமும் அவரு கிட்ட தைக்கக் குடுத்தவுங்களும் அல்லா டுவாங்க,அவர கண்ணுல காங்குறவரைக்கும்,

”ஊரெல்லாம் சுத்திப்புட்டு வீட்டுக்கு வந்த மறுநா கடைய தெறந்து வச்சி ரெண்டே நாள்ல எல்லா சட்டையும் தைச்சி முடிச்சி அவுங்கவுங்க வீடு தேடிப் போயி குடுத்துட்டு வந்துருவாரு,

“இப்ப என்னதான் வீட்டுக்கு வீடு தையல் மிஷின வாங்கி வச்சிக்கிட்டு டொக்கட்டி, டொக்கட்டின்னு மிதிச்சிக்கிட்டு இருந்தாலும் அவரு தைக்கிற மாதிரி வராதுன்னு மிஷின் வச்சிருக்குற வீட்டுக்காரங்களே சொல்லுவாங்க,

”அவுங்ககிட்டயெல்லாம் இவரு சரிக்கி சம்மா வாதாடுவாரு,இப்பிடி நீங்களெ ல்லாம் மிஷின வாங்கி வச்சி மிதிச்சிக்கிட்டு கெடந்தீங்கன் னா எங்க பொழப்பு என்னாகுறது”ன்னு,,,,,பதிலுக்கு அவுங்களும் ஒண்ணும் சொல்லாம இவரு கொண்டு போயி குடுத்த ஜாக்கெட்ட வாங்கீட்டு காசக்குடுத்தனுப்பீருவாங்க,

”காசு கைக்கு வந்ததும் நேரா கடைதான்,சும்மாவே காசு கையில இல்லாத நேரத்துலயே கூட கடை முன்னாடி போயி தவம் கெடப்பாரு, இதுல காசு வேற கையில் இருக்கா சொல்லவா வேணும்,,?,

“வாடா தம்பி போகலாமுன்னு என்னையக்கூப்புடுவாரு,நானு இல்லைண்ணே போயிட்டு வாங்கன்னு அனுப்பீருவேன்,

”நானும் தண்ணி சாப்பிடுவேன் சார்,ஆனா வீட்டுக்குத்தெரியாம, புள்ளைகளு க்குதெரிஞ்சிறக்கூடாங்குறபயத்துலதான் சாப்புடுவேன், அதுவும் விருந்துக்கும் மருந்துக்கும் மட்டும்தான் ,அப்பக்கூட வேணுமுன்னா வேணும் வேணாமுன் னா வேணாமுங்குற அளவோட நிறுத்திக்கிறுவேன்.

“அவரும்என்னையக்கூப்புடும்போதுஇதச்சொல்லிக்காமிச்சித்தான்கூப்புடுவாரு, மத்தவங்கள போல ஒன்னைய படக்குன்னு கூப்புட்டுறவும் முடியாது,நீயும் கூப்புட்ட ஒடனே தண்ணி ஆசையில வர்ற ஆளும் கெடையாதுன்னுவாரு,

“ஆனா அவரு இப்பிடியெல்லாம் திரியிறதுனால குடும்பத்த நடு ரோட்டுல விட்டுறவோ சோத்துக்கு கஷ்டப்படவைக்கவோ இல்ல சார், குடும்பத்த நல்லா பாத்துக்கிட்டாரு, நல்ல மனுசன் சார் அவரு, யாராவது கஷ்டம் உதவின்னு வந்து நின்னா தாங்கிட்ட இல்லைன்னாக் கூட என்னையப்போல யார்கிட்ட யாவது வாங்கி குடுப்பாரு,அதுபோல யாருக்கு என்ன ஒண்ணுன்னாலும் போயி நிப்பாரு, அது இருக்குறவுங்க, இல்லாதவுங்க,தராதரம்,ஆளு வித்தி யாசம்ன்னு எதுவும் பாக்க மாட்டாரு,கல்யாண வீடு,காது குத்து ,சடங்கு ,யெழவு வீடுன்னு அவுங்க சொல்லி விடாமலேயே முன்னாடி போயி நிப்பாரு, இந்த ஏரியாக் காரங்களும்அவர நம்பி கடைக்கி ஜாமாங்க வாங்க அனுப்பு றதுலயிருந்து சமையல்க்காரரு கூட உதவிக்கு நிக்கிற வரைக்கும் நம்பி பக்கத்துல வச்சிக் கிருவாங்க,எல்லாம் முடிஞ்சி அவரு போகும் போது கையில பணமும் வீட்டு க்கு தேவையான சாப்பாடும் குடுத்து அனுப்புவாங்க, அவரும்வாங்குக்குருவாரு, இன்னும் சொல்லப் போனா உரிமையோட கேட்டும் வாங்கிக்குருவாரு. அப்படிப்பட்ட நல்ல மனுசன்,

”இப்ப இவரு மட்டும் ஒக்காந்து தொழில ஒழுங்கா பாத்தாருன்னு வையிங்க, கை நெறய வருமானம் வரும்,மனசு நெறஞ்சி குடும்பம் நடத்தலாம்.இப்பிடி வீடு வீடா படியேறிக் கிட்டு திரிய வேண்டிய தில்ல,யாரு காசு குடுப்பான்னு தொன்னாந்துக்கிட்டுத் திரிய வேண்டியதில்ல” என்றார் டீக்கடைக்காரர்.

டீப்பட்டறைக்குஅந்தப்பக்கமாய்நின்று வடைசுட்டுக்கொண்டிருந்தாள் அவரது மனைவி.

சட்டி நிறைந்த எண்ணெயில் அவள் சுட்டு எடுத்த வடைகளின் எண்ணிக்கை யை விட அவளது உழைப்பின் பிரயத்தனங்கள் நிறைந்து கொட்டித்தெரிந்தன அந்த இடத்தில்.

அவள் வடை சுட்ட இடத்திற்கு நேராக கடையின் மேற் கூரை புகையடித்துக் கறுத்திருந்தது,

“யெடம் மட்டும்தான் சார், அவுங்களோடது,மத்தபடி கூரை மேஞ்சி டீபட்டரை போட்டுஅடுப்புஅமைச்சதெல்லாம் ஏங் செலவு சார், எல்லாம் நாந்தான் பாத்துக் கிட்டேன்ஒரு லட்சத்துக்கு பக்கத்துல ஓடிப்போச்சி,கையில இருந்த கொஞ்சம் ரொக்கத்த வச்சிக்கிட்டு ,நகைய அடகு வச்சி,அங்கிட்டு இங்கிட்டு ஓடி கடன ஒடன வாங்கி போட்ட கடை சார் இது, இவ்வளவு செஞ்சி கடையப் போட்ட துக்கு அப்புறமும் ஏன் பாடு நின்ன பாடு இல்லை,மாசா மாசம் யெடத்துக்கு வாடகை, வாங்குன கடனுக்கு வட்டியும் ரொக்கமும்,பேங்குல வச்ச நகைக்கு பணம் கட்டுனதுன்னு போக அன்றாடம் வீட்டுப்பாடுக்குன்னு எடுத்து வச்சிக் கிட்டு அல்லாடுறேன்.பாடுன்னாபாடு பெரும்பாடா இருக்குது எனச் சொன்ன டீக்கடைக்காரரை ஏறிட்டவன்,,,,,

“அது ஏன் என்னோட பாடுன்னு மட்டும் பிரிச்சிப் பேசுறீங்க தம்பி,இதுல ஒங்கக் குடும்பத்துல உள்ள அத்தனை பேர் பங்கும் கலந்துக்கே தம்பி,இதோ ஒங்க வீட்டம்மா வடை போட்டுக்குடுத்து கடைக்கும்உதவியா இருந்துட்டு வீட்டுப் பாட்டையும் கவனிச்சிக்கிட்டு புள்ளைங் களையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைச்சி ஒங்களுக்கு பக்க துணையா இருந்து ஒங்களையும் கவனிச்சிக்கிறா ங்களே, அது முக்கியமில்லையா, புள்ளைங்க பள்ளிக்கூடத்துல இருந்து வந்த ஒடனே கடைக்கி ஏதாவது வாங்கி வர கடையில ஏதாவது உதவி செய்யன்னு இருக்காருங்களேஅதுமுக்கியமில்லையா”,எனஇவன் சொன்னதும் ”முக்கியம் தான் சார், முக்கியம்தான்,இதுல ஏங் பொண்டாட்டி யோட உழைப்பு கடையில பாதிக்கு மேல இருக்கும் சார், அவ இல்லைன்னா கடை இல்லை சார்,கடை மட்டும் இல்ல சார்,அவ இல்லைன்னா நான் கூட இல்ல சார், ஏங் ஒடம்புலயும் உசிருலயும் பாதி சார் அவ,

”ஆனா புள்ளைங்க நம்ம கஷ்டத்த உணராம வளருதோன்னு ஒரே யோச னையா இருக்கு,ஒரு பக்கம் பயமாவும் இருக்கு சார்,

”ஏன் பயப்படவும் யோசிக்கவும் செய்யணும்,நம்ம புள்ளைங்கதான ,நம்மதா கண்ட்ரோல்ல வச்சிக்கணும்,இப்ப புள்ளைங்கள நம்ம வளக்கலைங்குறது சரிதான்,வெளி சமுதாயம்தான் வளக்குது மறுக்குறதுக்கில்லை,ஆனா நம்ம என்ன செய்யிறமுன்னா புள்ளைங்க ஒண்ணு கேக்குறதுக்குள்ள ரெண்டா வாங்கிக்குடுக்குறோம்.அதபுள்ளைங்களுக்குச் செல்லம்,அதுக ஏமாந்து போகக் கூடாதுங்குற பேர்ல செய்யிறம்/

”எங்க காலங்கள்ல அப்பிடியில்லை,ஒன்னு கேட்டா பாதி இல்லை கால்வாசி தான் குடுத்தாங்க,ஏங் அப்பிடிக்குடுக்குறாங்கன்னு கேக்கும் போது எங்க முன் னாடி குடும்பத்தோட நெலைமைய வரை படமா வரைஞ்சி வச்சாங்க, எங்க ளுக்கு அது சரியா புரிஞ்சிச்சோ புரியலையோ,ஆனா கேட்டுக்கிட்டோம்,

கேட்டது கெடைக்காம ஏமாந்தோம்,எதிர்பார்த்தது கெடைக்காம புறந்தள்ளப் பட்டோம்.நிராகரிப் போடவலி எங்கயிருந்து ஆரம்பிக்குது ன்னு தெளிவா இல்லைன்னாக் கூட கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரம்பிச்சோம்.

”காதறுந்து போன புத்தகப்பையும்,தோள்பட்டையோரம் கிழிஞ்சி தொங்குற சட்டையும்,பின் புரம் கிழிஞ்சி போன தபால்ப்பை ட்ரவுசம் தான் நாங்க படிச்ச காலத்துல எங்க அடையாளம்;

”இன்னைக்கிஅப்பிடியில்லை,நாமளேபுள்ளைகளுக்குசொல்லத்தயங்குறோம், எங்கஇல்லைங்குறசொன்னா புள்ளைங்க ஏமாந்து போயிருமோன்னு நெனை க்கிறோம்.அது தப்புன்னு தோணுது, கேட்ட ஒண்ணு கெடைக்க லைங்கு போதுதான் புள்ளைங்க அது பத்தி யோசிக்கும், அதப்பத்தின அவதானிப்பு அதுகளுக்குள்ள வரும்,அப்பத்தான் அதுகளுக்குள்ள ஏன் கெடைக்கல நம்ம கேட்டதுங்குற கேள்வி பொறக்கும் ,கேள்விகதான விடைகளுக்கான அடிப்ப டை, அத விட்டுட்டு அதுகளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் குடுக்காமையே இருந்த முன்னாஅது நம்ம பண்ற தப்பில்லையா?அது இனிமே ஏற்பட விடாம பாத்துக்கிருவோம்,என்றவனாய் கடையை விட்டு வீடு வந்த போது நண்பனின் போன் திரும்பவும் ஒருமுறை ஒலித்தது,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *