அரசியல் வியாதி!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,948 
 

மனநலப்பிரிவு தலைமை மருத்துவரின் குளிர்பதனமூட்டப்பட்ட அறைக்குள், அந்த மூவர் பிரவேசித்தனர். 40 வயது சொர்ண சம்பத், 37 வயது சரஸ்வதி தம்பதியின், 10 வயது மகன் தென்னரசன்.
தென்னரசன் உள்ளே நுழையும் போதே, ஆன்மிகவாதி போல், இரு கைகளையும் உயர்த்தி, மனநல பிரிவு தலைவர் கிரிதரை ஆசீர்வதித்தான்.
“”ஹாய்… ஹாய்… ஹாய்!”
“”நீங்க அழைச்சிட்டு வந்திருக்கும் சிறுவன் தான் நோயாளியா?”
“”அழைத்து வரப்படவில்லை மருத்துவரே… இழுத்து வரப்பட்டிருக்கிறேன்!” என்றான் தென்னரசன் ஆங்காரமாய்.
“”சரி… உன் பெயர் தென்னரசன் தானே!”
“”தவறு… என் திருநாமம், தென்னரசனார் என்பதே!”
அரசியல் வியாதி!“”தோளில் துண்டு போட்டிருக்கிறாய். மினிஸ்டர் ஒயிட் காட்டன் சட்டை போட்டிருக்கிறாய். பட்டாப்பட்டி டவுசரை அடிக்கடி காட்டும் வேட்டி கட்டியிருக்கிறாய். கால்களில், முன் வளைந்திருக்கும் டயர் செருப்பு மாட்டியிருக்கிறாய். அரை லிட்டர் சென்ட் பூசியிருக்கிறாய். வலது கை கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும், துப்பாக்கி சுடுவது போல் அமைத்து, உயர்த்தி ஆட்டுகிறாய்… என்ன ஆயிற்று உனக்கு?”
“”நான் திராவிடன், அப்படித்தான் இருப்பேன்… நீவிர் ஆரியனா?” கிண்டலடித்தான்.
தென்னரசனின் பெற்றோரிடம் திரும்பினார் கிரிதர்.
“”உங்க பையனின் பிரச்னைகளை ஒண்ணுவிடாம சொல்லுங்க!”
“”ஆங்கில வகுப்பில், ஆங்கிலப் புத்தகத்தை கிழித்தெறிந்துவிட்டு, வகுப்பை விட்டு வெளிநடப்பு செய்கிறான். எல்லா வகுப்புகளிலும், சங்கோஜமில்லாமல் கெட்ட வார்த்தை பேசி, சபைக் குறிப்பிலிருந்து நீக்கி விடுங்கள் என்கிறான்; காகித அம்புகள் விடுகிறான்.
“”இன்னைக்கி என்ன கிழமைன்னு கேட்டா, செவ்வாய்கிழமைன்னு ஒற்றை வார்த்தைல பதில் சொல்லாம, வெறும்வாய், வருவாய், தருவாய், வெறுவாய், அருள்வாய், அறிவாய், தெரிவாய் என மிழற்றுகிறான். தவிர, எது பேசினாலும், அடுக்கு மொழி இல்லாம, எதுகை மோனை இல்லாம, இரட்டுறமொழிதல், இரட்டைக்கிளவி இல்லாம பேச மாட்டேங்குகிறான். வீட்ல பேசும் போது, பேச்சு தமிழ்ல பேசுற இவன், வெளில வந்துட்டா, தொண்டையை இறுக்கி, கரகர திராவிடர் குரலில் பேசுகிறான்!”
“அப்படியாப்பா?’ என்ற பாவனையில், தென்னரசனை மருத்துவர் திரும்பிப் பார்க்க, காது வரை வாய் அகட்டி சிரித்தான் தென்னரசன்.
“”அன்னன்னைக்கு பிரண்ட்சை கூட்டணியா சேத்துக்கிறான். காலைல கூட்டணி சேந்த நண்பர்களை, வாயில் வந்தபடி திட்டுறான்; மாலைல இவங்களை அடிச்சு விரட்டிட்டு, புதுக் கூட்டணி அமைச்சுக்கிறான்!”
“”ஓவ்!”
“”கேட்டா, அரசியல்ல நிரந்தர பகைவருமில்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்கிறான்!”
“”பலே!”
“”உறவினர், நண்பர்களில் உயிரோடு இருப்பவர்களை, கன்னாபின்னான்னு திட்டுறான்; செத்துட்டவங்களை வானளாவ புகழ்றான்!”
“”சரி தான்!”
“”டெய்லர் கடையிலிருந்து துண்டு துணிகள் கொண்டு வந்து, ஒண்ணோடு ஒண்ணு சேர்த்து ஆராய்ச்சி பண்றான். “என்னடா…’ன்னு கேட்டா, கட்சிக்கொடி தயார் பண்றானாம்!”
கெக்… கெக்… என்று சிரித்தான் தென்னரசன்.
“”கண்களுக்கு மையிட்டுக் கொள்கிறான். ஐப்ரோ பென்சிலால், நாஞ்சில் மனோகரன் டைப் மீசை வரைந்து கொள்கிறான். எங்க ஜாதிக்காரங்களை, பிரதமர் பதவியிலும், முதல்வர் பதவியிலும் தூக்கி உக்கார வைக்கறதுதான் அவனோட குறிக்கோள்ன்னு சொல்லி, எங்க ஜாதிக்காரங்களை உசுப்பேத்துறான்.”
ஓரக்கண்ணால் தென்னரசனை ஒருமுறை பார்த்துக் கொண்டார் மருத்துவர்.
“”இவன் மீது எதாவது குற்றச்சாட்டு வந்தா, உடனே இவன் வேறொரு பிரச்னையை பூதாகரமா கிளப்பி, தன் மீதான் குற்றச்சாட்டை ஒண்ணுமில்லாம பண்ணிடுவான். அடிக்கடி நல நிதின்னு வசூல் பண்ணி, பாக்கெட்டை ரொப்பிக்குவான். 25 வயசு நிறைஞ்ச வங்களுக்கு, இளங்கலை பட்டமும், 40 வயசு நிறைஞ்சவங்களுக்கு, டாக்டர் பட்டமும் அரசு இலவசமா வழங்கணும்ன்னு சொல்லி, ஒரு தடவை உண்ணாவிரதம் இருந்தான். உண்ணாவிரதம் இருந்த காலைல, 26 இட்லி, மதியம், இரண்டு பிளேட் மட்டன் பிரியாணி, ராத்திரி, எட்டு புரோட்டா, பாயா சாப்பிட்டான்!”
“”பிரமாதம்!”
“”வகுப்புல இருக்கும் அழகான பொட்டப் புள்ளைகளை, “கொ.ப.செ.,வா வந்திடு, கொ.ப.செ.,வா வந்திடு…’ன்னு கூப்பிடுறான் சார். இவனது கட்சி ஆட்சிக்கு வந்தால், வாரம் ஒருமுறை ரேஷனில், அஞ்சு லிட்டர் பீரும், ஒரு கிலோ மாட்டுக்கறியும் வழங்கப்படும் என, வாக்குறுதி தருகிறான் சார்!”
“”தென்னரசனாரின் கட்சி பெயர் என்ன?”
“”எப்படியும் வாழலாம் மக்கள் கட்சி!”
“”கட்சியின் கொள்கை!”
“”எங்க தாத்தா, தன்னோட கடைசி காலத்துல மனநலம் சரியில்லாம, “தத்து பித்து’ன்னு உளறிக் கொட்டிக்கிட்டு திரிஞ்சார்; 1954ல் செத்துட்டார். அவரோட கொள்கைதானாம், இவனோட கொள்கைகள். அடிக்கடி, “தாத்தா நாமம் வாழ்க…’ன்னு கோஷமிடுவான். “தாத்தாயிசம்’ சார்ந்ததே தன் கட்சிக் கொள்கைகள் எனவும் கூறுவான்.”
“”பல கட்சிகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிச்சிருக்கார் தென்னரசனார்!” – மருத்துவர்.
“”தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிக்கூடத்துக்கு வந்த பெருந்தகை யேன்னு டிஜிட்டல் பேனர் தயாரிச்சு, பள்ளிக் கூடத்துக்கு முன் உயர்த்தி கட்டிட்டான். இப்பவே இவன் கட்சில, 1,400 உறுப்பினர்கள் இருக்காங்க. உறுப்பினர்களெல்லாம் சின்ன சின்ன பசங்கன்னு நினைச்சிக்காதீங்க… பெரிய பெரிய ஆளுங்க. ஊருக்குள்ள எந்த மைக்ரோ பிரச்னைன்னாலும், அவைகளை மேக்ரோ பிரச்னைகளாக்கி, சுய விளம்பரம் தேடிக்குவான்!”
“”கில்லாடி!”
“”போலீசை பிரண்டு பிடிச்சு வச்சிருக்கான். பிடிக்காதவங்களை பொய் கேஸ் போட்டு டார்ச்சர் பண்ணிடுறான். போன வாரம் எங்க மேலயே புகார் செய்து, எங்களை நாள் முழுக்க ஸ்டேஷன்ல உக்கார வச்சிட்டான். மன்னிப்பு கடிதம் எழுதிக் குடுத்திட்டு, வீடு திரும்பினோம்.”
விக்கித்துப் போனார் மருத்துவர்.
“”புறம்போக்கு எடத்ல குடிசை போடுறது, போலி மது தயாரிச்சு டாஸ்மாக்ல விக்றது, கட்டப் பஞ்சாயத்து பண்றது, ஒத்துப் போற கட்சி கூட்டங்களுக்கு ஆள் தர்றது, ஒத்துப் போகாத கட்சி கூட்டங்களில் புகுந்து கலாட்டா பண்ணுவது, எல்லாம் செய்றான் சார் இவன்!”
“”தென்னரசனாரின் மீதான புகார்கள் அவ்வளவு தானா, இன்னும் இருக்கா?”
“”அடுத்தவன் ஏலம் எடுத்த குளத்துல, ராத்திரி போய், திருட்டுத் தனமா விரால் மீன் பிடிக்கறது, சேர்ந்திருக்குற புருஷன் – பொண்டாட்டிகளை பிரிக்கறது எல்லாம் செய்றான். எங்களுக்கு இவன் செய்யறது எதுவும் உடன்பாடில்லை. இவன் ஒழுங்கா படிச்சு, நல்ல வேலைக்கு போய், நேர்மையான குடிமகனா திகழணும்ன்னு விரும்புறோம். இவனுக்கு வந்திருக்கும் அரசியல் வியாதியை குணப்படுத்திக் குடுங்க டாக்டர்!”
“”எவ்வளவு நாளா இப்படி இருக்கார் உங்க மகன்?”
“”நாலு வயசுலயே இவனுக்கு அரசியல் வியாதி வந்து, இப்ப முத்திப் போயிருக்கு!”
“”யாரோடு சேர்ந்து உங்க மகன் கெட்டுப் போனார்ன்னு நம்புறீங்க?”
“”இவன் சுயம்பு. இவனோடு சேர்ந்து தான், ஊர் பசங்க எல்லாம் வீணாப் போறாங்க!”
தென்னரசனின் அருகில் வந்து நின்றார் மருத்துவர் கிரிதர்.
“”உங்க மகன் கிட்ட தனியா பேச விரும்புறேன்; வெளிய போய் காத்திருங்க!”
பெற்றோர் எழுந்து போயினர்.
“”நாம கொஞ்சம் பேசலாமா?”
“”மருத்துவரே… உங்கள் கிருத்துருவத்தை நானும் பொறுத்துக்குவேனே…”
“”உன்னை… உங்களை நான் எப்படி கூப்பிடுறது?”
“”கால் மீ, தலை!”
“”தலை… உங்க பெற்றோர் சொல்ற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க?”
பல நொடிகள், மருத்துவரை வெறித்தான் தென்னரசன்.
“”எனக்கு மன வியாதின்னு நினைச்சீங்களா? தப்பு… இலக்கை, குறுக்கு வழில அடையற நரித்தனம் வந்திருக்கு. எங்க பெற்றோர் சொல்ற மாதிரி, 12+3+2+3 வருஷம் படிச்சா வேலை காரன்டி இல்லை; வேல கிடைச்சாலும், நல்ல சம்பளத்துக்கு உறுதி இல்லை. எந்த உயரிய வேலைக்கு போனாலும், நான், 30 – 35 வருஷத்துல, ஒண்ணே கால் கோடி ரூபாய் சம்பளம் வாங்குவேன். அதுல, இன்கம்டாக்ஸ், அது, இதுன்னு, 10 – 20 பர்சன்ட் போயிடும்.
“”படிச்சு முடிச்சு வேலை கிடைக்காம, 30 வயசில அரசியலை பராக்கு பாக்றதுக்கு பதிலா, தத்தி, தத்தி நடக்கும் பருவத்துலயிருந்தே, அரசியலை சுவாசிக்க ஆரம்பிச்சுட்டேன். எனக்கு, 30 வயசு ஆகுறப்ப, குறைந்தபட்சம், 300 கோடி ரூபாய் சொத்து, 10க்கும் மேற்பட்ட மனைவியர், 20க்கும் மேற்பட்ட துணைவியர், ஆசியாவின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவனாகி விடுவேன். இன்னைக்கி நான் செய்ற தில்லுமுல்லுகள், கிராக்குதனங்கள் எல்லாம், நாளைய வெற்றிக்கான முதலீடுகள்!”
“”வாரே வாவ்… என்னம்மா பேசுறீங்க தலை!”
“”பேச்சுக்கு மயங்கி, தங்களது அடையாளங்களை தானம் செய்யும் இந்த தமிழர் கூட்டம். ஒரு தடவை கிறுக்குத் தனமாய் பேசினால், கிறுக்கு என்பான்; தொடர்ந்து நூறு தடவை அதேபோல பேசினால், தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவான். ஊழல் புரிவதை, “திறமை’ என்றும், நயவஞ்சகம் நினைப்பதை, “ராஜதந்திரம்’ என்றும், நம் சமூகம் மொழி பெயர்க்கும். இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்தால், அடுத்த, 20 வருஷத்துக்கு, வரி இல்லா உபரி பட்ஜெட் போடலாம். இந்தியா செய்யுமா? செய்யவே செய்யாது!
“”இந்தியாவின் நதிகளை இணைத்து, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை தடுத்து, இந்திய தேர்தல் முறையை மாற்றி, இந்தியர் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொண்டு வந்து, மதத் தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளினால், என்னைப் போன்ற சிறுவர்களுக்கு, ஏன் அரசியல் வியாதி வரப் போகிறது டாக்டர்?
“”எம்.எல்.ஏ.,க்களுக்கு குறைந்தபட்சம் கல்வித் தகுதியாக, இளங்கலை அரசியல் விஞ்ஞானம் அல்லது சரித்திரம் பட்டம். எம்.பி.,க்களுக்கு முதுகலை பட்டம். அரசியல்வாதிகளுக்கு, 60 வயதில் கட்டாய ஓய்வு. கட்சிகளுக்கு செலவே ஏற்படுத்தாத தேர்தல் முறை. ஓட்டளிக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து. இவையெல்லாம் அமலுக்கு வந்தால், என்னைப் போன்ற சிறுவர்களுக்கு, ஏன் அரசியல் வியாதி வரப்போகிறது டாக்டர்?”
“”அசாதாரணமான பேச்சு தலை!”
“”நான் சொன்ன எந்த சீர்திருத்தமும், இன்னும் நூறு வருடங்களுக்கு இந்தியாவில் நடக்காது. இந்தியரின் கும்பகர்ண தூக்கம் அப்படி! இப்பச் சொல்லுங்க டாக்டர்… என் அரசியல் வியாதியை குணப்படுத்தப் போறீங்களா அல்லது வைட்டமின் ஊசி போட்டு, போஷாக்காய் வளர்க்கப் போறீங்களா?”
“”வளர்ப்போம் தலை வளர்ப்போம். உங்க பெற்றோரின் உணர்வுகளை உதாசீனப்படுத்துங்க…”
“”மனநல மருத்துவனே… நீவிர் வாழிய வாழியவே. உமக்கு எதாவது வேண்டுமா?”
“”ஆமா தலை… இன்னும், 15 வருஷத்துல, நீங்க அரசியல்ல எங்கோ போய்டுவீங்க. அப்ப எனக்கு எதாவது யுனிவர்சிட்டில துணைவேந்தர் போஸ்ட் வாங்கித் தாங்க.”
“”ஏன் சின்னதா ஆசைப்படுற மருத்துவரே… உன்னை சுகாதார அமைச்சர் ஆக்கி விடுகிறேன்; சரியா?”
“”இது போதும் தலை, இது போதும்!”
தென்னரசனின் பெற்றோரை உள்ளுக்குள் வரவழைத்த கிரிதர், தலைக்கு மேல் இரு கை குவித்து, “”வருங்கால நிரந்தர முதல்வரை பெற்றெடுத்த பகுத்தறிவு பெட்டகங்களே… மகனின் தொலைநோக்கு பார்வையை உணர்ந்து, அமைதிப்படுங்கள்!”
“”தாத்தா நாமம் வாழ்க…” – கரகர திராவிட குரலில் முழங்கினான் தென்னரசன்.

– ஆடல்வல்லார் (மார்ச் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *