“எப்போ உண்டியலில் காசு விழுந்ததோ அந்த நிமிஷமே அது அரசாங்கத்திற்குச் சொந்தமாகிவிடுகிறது. அப்புறம் அதிலிருந்து சல்லிக்காசு கேட்க முடியாது!”
அறநிலைய அதிகாரி கறாராய்ப் பேசினார். எதிரே – ஊரை விட்டுத் தள்ளியிருந்த முருகன் கோவிலின் உண்டியலில் பணம் எண்ணப்பட்டுக கொண்டிருநதது.
பணிவுடன் அமர்ந்திருந்த சங்கர குருக்கள், “நான் என்ன எனக்காகவா கேட்கிறேன்…? கோவில் செலவிற்காகதானே!” என்றார் கெஞ்சலுடன்
“அப்படி என்னய்யா செலவு?”
“பக்தர்கள் இளைப்பார இங்கு மண்டபமில்லை. குடீநீர் வசதியில்லை. வருகிறவர்களெல்லாம் என்மேல் குறைபடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எழுதிப் போடக் கூடாதா என்கிறார்கள். எத்தனை முறைதான் எழுதுவதாம்!”
அதிகாரி அவரது பேச்சைக் கேட்டதாகவே தெரியவில்லை, “எண்ணி முடிச்சாச்சா..?” என்று அலுவலர்களின் மேல் பாய்ந்தார்.
“பக்தர்களின் வசதி போகட்டும சார்! ஆயிரமாயிரமாய் காணிக்கைகள் விழுது. ஆனால் முருகனுக்கே அலங்காரம் பண்ணுவதற்கு ஆபரணங்களில்லை. கோவிலுககுள் ஒரே இருட்டு! புழுக்கம்! மழை பெய்தால் ஒழுகறது!”
“மிஸ்டர் சங்கரன்! சொன்னால் உங்களுக்கு விளங்க மாட்டேன் கிறதே! வாரி கொடுக்கறதுக்கு இது என் பணமோ உங்கள் பணமே இல்லை. புரிஞ்சுக்குங்க கவர்மெண்ட் பணம். இதைச் செலவு பண்ணுவதற்கு எனக்கு அதிகாரமில்லை!”
“இருக்கலாம். எல்லாமே பக்தர்கள் காணிக்கையாகப் போட்டது தானே!”
“வாஸ்தவம். இல்லேங்களே. நான்தான் முன்பே சொன்னேனே! உண்டியலில் விழுந்த பின்பு கோவிலுககோ, இல்லை, இது முருகனுக்கோ இதில் துளியும் பாத்யதை இல்லை. தெரியாமல்தான் கேட்கிறேன். இங்கே வருமானம் வருகிறதென்பதிற்காக எல்லாவற்றையும் இங்கேயே செலவு பண்ணிர முடியுமா? அப்புறம் வருமானமில்லாத இடங்களுக்கெல்லாம் சம்பளம் யார் தருவார்கள்? முருகன் தருவானா?”
பணம் பெட்டியில் கொட்டப்பட்டு சீல் செய்யப்பட்டது. பத்திரமாய் டாக்ஸியில் ஏற்றப்பட்டது. அதிகாரியும் கௌரவத்துடன் ஏறிக் கிளம்பினார்.
“சம்பளம் கொடுககிறார்களாம்! பெரிய சம்பளம்! நான் முழுக்கக் கோவிலைக் கழுவி. பூஜை! சந்தனம் அரைப்பு! பிரசாதம்! எத்தனை பாடுபடுகிறேன்!
முருகா..! எனக்காகவா பணம் கேட்டேன்? எல்லாம் உனக்காகத்தானே! எனக்கு மட்டும வசதியிருந்தால் நான் ஏன் மற்றவர்களின் கையை எதிர்பார்க்கிறேன்?”
மறுவாரத்தில்-
பூஜையெல்லாம் முடித்து ராத்திரி கோவிலை மூடப் போனபோது “அப்பா!” என்று அவரது மகன் அலறிக் கொண்டு ஓடி வந்தான். “அப்பா! லாரி இடிச்சு நம்ம வீட்டு முன்னாடியிருந்த போஸ்ட் கம்பம் விழுந்திருச்சு! ஓடெல்லாம் காலி! கரண்ட் வேறு கட்!”
“முருகா! என்னப்பா இது சோதனை…! “பூசாரியிடம் சாவியைக் கொடுத்துவிட்டுச் சங்கரன் ஓடினார்.
வீட்டின் முன்பு கும்பல் திரண்டிருந்தது. தெரு முழுக்க இருட்டு. கம்பத்திலிருநது வயர் அறுந்து தொங்கிற்று. சூழ்நதிருந்தவர்கள் தங்களுக்குள் என்னவோ கிசுகிசுத்துக கொண்டனர். உள்ளே அவரது மனைவியும் மகள்களும் கண்களைச் கசக்கிக் கொண்டிருந்தனர்.
“வரிசையாய் நாலு கம்பம் சாஞ்சு கிடக்கே! எந்த கபோதி இடிச்சான்?”
“டெய்லர் லாரியாம். இடிச்சுட்டுப் போயே போயிட்டானாம்!”
“நம்பர் பார்த்தீங்களா..?
“இல்லை. உடனே பவர் போயிடுத்தே. எப்படிப் பார்க்க முடியும்?”
சங்கரன், உடைந்திருந்த ஓடுகளைப் பார்த்தா, விட்டத்தைப் பார்த்தார். “முருகா! குடும்பத்தில் ஏற்கெனவே வறுமை! சொத்தென்று சொல்லிக் கொள்ள இந்த வீடு மட்டுமதான் இருந்தது. இப்போது இதுவும்…”
இடிந்துபோய் அமர்ந்தவருக்கு ராத்திரி முழுக்கத் தூக்கமில்லை, மனது பாரமாய் அழுதது.
காலையில் தெரு ஜனங்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு, குருக்களே! போஸ்ட் கம்பத்தை சரிப்பண்ணலையா..? என்று கோஷம் போடாத குறை.
“நான் எப்படி சரி பண்ணுவேன்? எங்கிட்ட ஏது பணம்?”
“பணமில்லைன்னு சும்மாயிருந்தால் எப்படியாம்! உங்க கம்பத்தால் எங்க வீடுகளுக்கும் கூட சப்ளையில்லையே! மின்சார வாரியத்திற்குப் போய் ஆள் அழைச்சு வந்து சரி பண்ணுங்க!”
மின்சார வாரியத்தில் பியூன் அவரை சந்தோஷத்துடன் வரவேற்றான். வரும்படி கிடைக்கும் என்கிற சந்தோஷம்! என்ஜினியரிடம் அறிமுகப்படுத்த, அவ் ஃபைலை புரட்டிக் கொண்டே, “எல்லாம் கேள்விப்பட்டேன்! என்ன செய்யப் போறீங்க?” என்றார்.
“நீங்கதான் சார் பெரிய மனது வைக்கணும். என்னவோ நான்தான் லாரி வைச்சு இடிச்சு தள்ளினதுங்கிறது போல தெரு ஜனங்கள் எம்மேல கோபமா இருக்கா!”
“சரி பண்ணிரலாம். ஆனால் செலவு ஜாஸ்தியாகுமே!”
“செலவா…?”
அவர் பியூனை அழைத்து, “நாலு கம்பம், வயர், எலக்ட்ரீஷியன் எல்லாத்துக்கும் எவ்ளோ ஆகும்ப்பா. ஆயிரம்?”
“மேலேயே ஆகும் சார்!”
“ஆயிரமா..?” சங்கரன் மிரண்டார்… “அது கவர்மெண்ட் ரோடு கவர்மெண்ட் போஸ்ட் கம்பம்!”
என் வீட்டிற்கு முன்னாடி இருக்குங்கிறதைத் தவிர எனக்கும் அதுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை…”
“சம்பந்தம் இல்லேன்னா அப்புறம் எதுக்கு வந்தீங்களாம்?”
“எல்லாம் என் நேரம்! வயர், கம்பலெம்மாம் வாரியத்துல இல்லையா?”
“இருக்கு. ஆனால் பணமில்லாமல் எப்படித் தரமுடியும்?”
“ஐயா! நான் ஏழைய்யா. இது அந்த முருகனுக்கு அடுக்காது!”
“அப்போ அந்த முருகனையே அழைச்சு சரி பண்ணிக்குங்க” என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாய் வெளியேற்றினார்.
சங்கரன் நொந்து போனார். ஆயிரம்! எங்கே போவது? சாப்பாட்டுக்கே லாட்டரி! பையனின் படிப்பு! மகள்களின் திருமணம்! வயிற்றைக்கட்டி வாயைக் கட்டிப் பிழைப்பு நடத்தும்போது ஆயிரம்!.
அரசாங்கம் கம்பமும வயரும் இனாமாய்த் தருகிறது. அதை இவர்கள் விற்றுக் காசாக்கப் பார்க்கிறார்கள். அது நியாயமா என்று கேட்டால் அதை கேட்க நீ யார் என்பார்கள். ஆமாம் – நான் யார்! எல்லாம் அரசாங்கத்துப பணம்!
அரசாங்கத்து பணம் என்றார் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சுருட்டலாம். கேட்பாரில்லை. அது தப்பில்லை பாவமுமில்லை. அங்கீகரிக்கப்பட்ட நியாயம்!
நானும் கூட அரசாங்கச் சம்பளம்தான் வாங்குகிறேன். நம் கோவிலுககுக் கூடத்தான் வருமானம் எக்கச்சக்கமாய் வருகிறது! இருந்தும்கூட நானும் ஏழை! என் முருகனும் கூட ஏழை. இருவருமே வறுமையில் வாடுகிறோம்.
உண்டியல் பணத்தைக் கேட்டால் ‘அது சாமி சொத்தல்ல, அரசாங்கத்து சொத்து’ என்றிகார்கள்.
அரசாங்கத்துச் சொத்து என்று நினைத்ததும் மூளையில் ஒரு மின்னலடித்தது. அரசாங்கத்துச் சொத்து! உடன் கண்கள் விரிந்தன அப்போதே ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.
அன்று இரவு. யாருக்கும் தெரியாமல் சங்கரன் கோவிலை நோக்கி நடந்தார். உண்டியல்! “முருகா! என்னை மன்னிச்சிரு” என்று சுத்தியலால் பூட்டை லொட்!
பணத்தைச் சேகரித்துக கொண்டு சாஷ்டங்கமாய் முருகனின் காலில் விழுந்தார். “உன் கிருபையால் வருகிற இந்தப் பணத்தை உன் சொத்தில்லை என்கிறார்கள்.
உன் பணத்தை சுருட்டினால்தானே பாவம்? இதுதான் அரசாங்கத்துப பணமாயிற்றே! அரசாங்கம் என்று வரும்போது தான் யார் வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாமே! அடிக்கிறார்களே! இங்கு நான் திருடவில்லையென்றால் வேறு எவனாவது வேறு வழியில் அடிக்கப் போறான். அதற்கு நானே… மன்னித்துவிடு முருகா!”
மனதைத் தேற்றிக் கொண்டு சங்கரன் கிளம்பினார்.
மூன்றாம் நாள் அவருடைய வீட்டிலும் முருகன்கோவிலிலும் விளக்குகள் ஜெகஜோதியாய் எரிய ஆரம்பித்திருந்தன.
– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)