நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது.
ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். !
அது அவர்கள் வீட்டிலேயே நிகழுமென்று எதிர்பார்க்கவில்லை. !!
ஏன் எதிர்பார்த்தோம்..? ?….
அது பெரிய கதை. ஊரே சம்பந்தப்பட்டது. ஆனால் இருவர் ஈடுபட்டது.
அப்போது… வளைத்த இடமெல்லாம் என் இடமென்று இருந்த காலம். அன்று தண்டபாணி பிள்ளை பெரிய பணக்காரர். அவர் ஊரில் பெருமாள் கோவில் காட்டினாராம். அதற்கு குளமும் வெட்டினாராம்.
எங்கள் அனந்தக்குடி ஊருக்கு அன்று முதல் இன்று வரை ஒரே கோயில். ஒரே குளம்.
ஐம்பத்தைந்து வீடு, ஆடு, மாடுகளுக்கும் அந்தக் குளம்தான் குடிக்க, குளிக்க என்று புழக்கம்.
பெருமாள் கோயில் காலவெள்ளத்தில் பஞ்சாயத்துக்கு மாறி, அப்புறம் அறநிலையத் துறைக்கு மாறி… அரசாங்கக் கைக்குப் போய்விட்டது.
அதற்கு இப்போது உள்ளூர் அரசாங்க அலுவலர் அனந்தக்கிருஷ்ணன் சிறப்பு தனி அதிகாரி.
சந்திரசேகரன் குடும்பத்திற்கும், தண்டபாணி குடும்பத்திற்கும்…ஆதி முதலே ஜென்மப் பகை. அது அவர் மகன் அனந்தக்கிருஷ்ணனைத் தொற்றி… தண்டபாணி வழிப் பேரன் மலையப்பனையும் பற்றிக் கொண்டது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்துப் பார்ப்பது கிடையாது. ஒருவர் வைத்த அடியில் ஒருவர் அடி வைப்பது இல்லை.
சொத்து பத்து ஏராளமுள்ள கோயில் என்பதால்… சிறப்பு தனி அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அனந்தக்கிருஷ்ணன்….
முதல் வேலையாக… கோயில் சுத்தம், சுகாதாரம்,பூசை, புனஸ்காரங்கள் என்றவற்றையும் சரி செய்தான்.
அடுத்ததாக…. கோயில் மனைகளை நெறி செய்தான். அதில் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தது தண்டபாணி குடும்பம். அவைகளைக் கைப்பற்றினான்.
அடுத்து… குளம்.
பழைய பஞ்சாயத்தார்களும், சிறப்பு தனி அதிகாரிகளும் கோயில் கட்டி, குளம் வெட்டியது தண்டபாணி என்பதால்… குளத்தில் மீன் பிடித்தால் ஒரு பங்கு தண்டபாணி குடும்பத்திற்குக் கொடுத்து அனுப்புவார்கள். தாமரை இலையைப் பூக்காரர்களுக்குத் தண்டபாணி குடும்பம் குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டுவதை.. ‘ அது என்ன பெரிய காசு ?…’ என்று கண்டு கொள்ளாமல் போவார்கள்.
அனந்தக்கிருஷ்ணன் அதைச் செய்யவில்லை. மீன் பங்கை நிறுத்தினான். அடுத்து தாமரை இலை பறிப்பைத் தடுத்தான். குத்தகையை மறித்தான். அவர்கள் எங்கெங்கெல்லாமோ போக…
“அது கோயில் குளம்தானேய்யா. தனி அதிகாரி செய்யிறது சரி. எத்தனை வருசமா இப்படி கொள்ளையடிக்கிறீங்க. அடித்தப் பணத்தையெல்லாம் கட்டுங்க..”திருப்பித் தாக்க… அவமானப்பட்டு விட்டார்கள்.
அப்படி அவமானப்பட்டதற்கு அவர்கள் பதிலடி கொடுத்ததில்தான் ஊரே உறைந்தது. திக்குமுக்காடியது.
கோயிலும், குளமும் அவர்களே செய்ததால் குளத்திற்கு அவர்கள் மனை வழியாகத்தான் நூறு மீட்டர் தூரத்திற்கு நீர் வரத்து பாசன வாய்க்கால் இருந்தது. அப்படியே வடிகாலும் இருந்தது. அவைகளை அடைத்து விட்டார்கள்.!
அதனால்… குளத்திற்குத் தண்ணீர் வர வழி இல்லை. மழைக் காலத்தில் குளத்தில் நீர் நிரம்பி ஊர் தத்தளித்தது. மக்கள் அவதிப்பட்டார்கள்.
மக்கள் உபயோகத்திற்குப் புண்ணியம் கட்டிக்கொண்டன கொம்யூன் பஞ்சாயத்து குடிநீர்க் குழாய்கள்.
ஆடு, மாடுகள்….?
அடுத்த ஊருக்குப் போயின.
முதல் வருடம் அனந்தக்கருஷ்ணன் போலீசை வரவழைத்து வாய்க்காலைத் திறந்து விட்டான்.
மழைக்காலத்தில் அவர்கள் வீம்பிற்கு அவர்கள் வடிகாலைத் திறக்கவில்லை. தங்களின் விவசாய நிலம், பயிர் அழியுமென்று பிடிவாதமாக மறுத்து விட்டார்கள். ஊர் தத்தளிக்க வேண்டிய அபாயம்.
ஏதோ மனசு வைத்து மழை விட்டுவிட்டது.
அடுத்த வருடமும் அதே கதி.
வாய்க்கால் திறக்க கலெக்டர் வந்தார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வந்தார். தண்டபாணி குடும்பம் எதற்கும் அசையவில்லை.
மழைக் காலத்தில் ஊரெல்லாம் தத்தளிப்பு. கோடையில் வறட்சி. என்ன செய்ய…?
“இதற்கு உடனடி நிவாரணம் வேணுமின்னா… ஊரே திரண்டு போங்கைய்யா. அவன் போட்டிருக்கிற தடுப்பணைகளை வெட்டுங்க. ஊர் விழிச்சிக்கிட்டதால அவுங்களால ஒன்னும் பண்ண முடியாது. முரண்டு பிடிச்சா நாங்க நடவடிக்கை எடுக்க வசதியா இருக்கும். சட்டப்படி போகனும்ன்னா.. அந்த நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பு செய்யனும். அவன் மறுப்பான். முடியாதுன்னு நீதிமன்றத்துக்குப் போவான். வழக்கு இழுக்கும். வருடக் கணக்காகும். உடனடி நிவாரணத்துக்கு ஒத்துமையா இருந்தால்தான் காரியம் சாதிக்கலாம். !”தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சொல்லிவிட்டார்.
அப்புறம் எந்த போலீஸ் என்ன செய்யமுடியும். அவர்களும் கைவிரித்து விட்டார்கள்.
நான் ஊரிலுள்ளவர்களை அணுகினேன்.
தண்டபாணிபிள்ளைக் குடும்பம் ஊரில் பெரிய புள்ளி ! என்று சிலர் பயந்தனர். இன்னும் சிலர் அவர்கள் முரண்டு பிடிப்பதிலும் நியாயம் இருக்கிறதென்று ஒதுங்கினார்கள்.
ஏற்கனவே ஒற்றுமை இல்லாத ஊர். ஒன்று கூடவில்லை.
எஞ்சியது நான்கே நான்கு பேர்கள். நான் இன்னும் சிலர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதென்று முடிவெடுத்தோம்.
கட்சிக்காரர்கள் என்ற முறையில் மறுபடியும் போய் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரைச் சந்தித்தோம்.
“உங்க வீட்டுல ஆடு, மாடு இல்லே. மனுஷ மக்கள் குடிக்க, குளிக்க நகராட்சி குடிநீர் குழாய் இருக்கு. தேவை உள்ளவன் ஒன்னா வரட்டும். நீங்க ஏன் அலட்டிக்கிறீங்க….?”கேட்டார். தடாலடி அடித்தார்.
அவர் சொல்வதும் நியாயம்தான். ஒரு சின்னப் பிரச்சனை. குளத்திற்குத் தண்ணீர் விடவா… அவர் வருடா வருடம் வந்து நிற்க முடியும்..?
“டேய் ! விடுங்கடா. ஊர் தாங்க முடியாம ஒன்னு சேர்ந்து வர்ற அன்னைக்கு ஒதைக்கலாம். இந்தப் புத்தி நாங்க சொன்ன அன்னைக்கு ஏன் இல்லைன்னு கேட்கலாம்..!”என்று ஒருத்தன் கோபப்பட்டான்.
“மாப்ள..! இன்னைக்கு ஒன்னுக்கூடாதவன் ஊர்ல சாவுன்னா கண்டிப்பா ஒன்னு கூடுவாங்க. அன்னைக்கு எங்க தண்ணிப் பிடிப்பாங்க, எந்தக் குளத்துல தண்ணி எடுப்பாங்கன்னு பார்க்கலாம். இதுக்கு வழி தீர்த்துக்கிட்டு பொணத்தைத் தூக்குங்கடான்னு தகராறு செய்வோம். அன்னைக்கு வழி பிறக்கும். !”இன்னொருவன் ஆணித்தரமாகச் சொன்னான்.
சரியான பிடி !!
இன்றைக்குத் தண்டபாணி குடும்பத்திலேயே இழவு.!! அவர் மனைவியே இறந்து விட்டாள். முடிவு..?
இரவு பிணம் காக்க எங்களையெல்லாம் சேர்த்துப் பத்துப் பதினைந்து பேர்கள்தான் வந்திருந்தார்கள். அதனால் பிரச்சனையைக் கிளப்பவில்லை.
விடிந்து ஒருவர் பின் ஒருவராக எல்லோரும் கூடினார்கள்.
ஒரு பழுத்தப் பழத்தைப் பிடித்து…
“பெரியவரே.! என்ன செய்யப் போறாங்கன்னு கேளுங்க..?”உசுப்பி விட்டோம்.
நல்ல கூட்டத்திலேயேக் கேட்கச் சொன்னோம்.
அவரும் சமயம் பார்த்து..
“தண்ணிக்கு என்ன செய்யப் போறீங்க…?”அந்த வீட்டுப் பையன் மலையப்பனைக் கேட்டார்.
அவன் சளைக்கவில்லை.
“என் வீட்டு கிணத்துல மொண்டுப்பேன். முனிசிப்பாலிட்டி குழாய்ல தண்ணி எடுத்துப்பேன் !”சொன்னான்.
“ஏன்ய்யா ! உன் வீட்டுல கிணறு இருக்கு. பைப்பிருக்கு. இல்லாதவன் எங்கே எடுப்பான், தூக்குவான்..?”நண்பன் வெடித்தான்.
“இல்லாதவன் எக்கேடு கேட்டாவது போகட்டும் !”அவனும் தூக்கம் மறந்து வெடித்தான்.
நல்லது செய்கிறோமென்கிற நினைப்பில்லாமல்….. ‘ தங்களுக்கு எதிராக செயல்படுகின்றார்களே…! ‘ என்கிற காழ்ப்பு அவனுக்கு.
“இதுக்கு… வழி பொறக்கலைன்னா. உன் ஆத்தா பொணம் நாறும். எடுக்க விடமாட்டோம் !”எங்களில் இன்னொருத்தன் கத்தினான்.
அப்போதும் அவன் மிரளவில்லை, அயரவில்லை.
”ஊர்ல ஒருத்தன் வரலைன்னாலும் பரவாயில்லே. என் உறவு சனத்தை வச்சி எடுப்பேன் !”சொன்னான்.
அப்போதுதான் அதுவரையில் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எனக்கு வெடித்தது.
“ஏன்ய்யா…! ஊர் எப்படிப்போனா எனக்கு என்னன்னு சொல்றான். நீங்க எந்தவித ரோசமுமில்லாம இருக்கீங்க.? எழுந்திருங்க. தம்பிக்கு என்னமோ ஊர்க்காரங்க இல்லாம காரியம் நடந்திடும்ன்னு நெனப்பு. சாவுன்னு கேள்வி பட்டதும் ஊர்சனம்தான் ஓடி வந்து ராப்பொணம் காத்திச்சு. சொல்லச் சொன்ன இடத்துக்கெல்லாம் ஓடிச்சி. கூடுலேன்ன….தம்பி பொணம் காக்குமா ? உறவு சொல்லப் போகுமா..? இந்த ஊர் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்னன்னு தன் பிடிவாதம்தான் சரின்னு பேசுறான். கேட்டுக்கிட்டு மண் சுவர் மாதிரி உட்கார்ந்திருக்கிறீங்க..?”வெடித்தேன்.
“ஆமாம் ! அதானே..!”ஆளாளுக்குக் குரல். சலசலப்பு.
“இன்னைக்குப் பணம் இருக்கு. பணத்துக்குப் பத்து ஆள் பிடிப்பான். கிணத்துல தண்ணி தூக்குவான், எடுப்பான். இல்லாதப்பட்டவங்க என்ன பண்றது..? வாங்கடா. இவன் பொணத்தை எப்படி எடுக்கிறான்னு பார்ப்போம்..!”ஒருத்தன் கூட்டத்திலிருந்து ஆவேசமாகக் கத்த…
அப்போதுதான் எல்லோருக்கும் உணர்வு வந்து எழுந்தார்கள். அந்த வீட்டிற்கு முன் நடு சாலையில் அமர்ந்தார்கள்.
இந்த ஆவேசம், இடியை எதிர் பார்க்காத மலையப்பனுக்கு அதிர்ச்சி.
இந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராதது நடந்தது.
இறந்தவள் மகள்… இந்தப் பையனின் தாய். பெரிய முரடு. அவள்தான் தலையாய் இருந்து இவனுக்கு வழி காட்டி. அந்தக் குடும்பத்துக்கே ஆணிவேர், ஆட்டிப் படைப்பு.
நிலைமை புரிய ஆடிப்போனாள். அடுத்த வினாடி உள்ளே சென்றாள்.
திரும்ப மண் வெட்டியுடன் வந்தாள்.
“அம்மா …ஆஆ…!”மகன் அலறினான்.
“நீ சும்மா இருடா…”என்று அவனை அதட்டிய அவள்…
“வாங்கய்யா. நான் அந்த தடுப்பணையை வெட்டறேன். இந்தக் குளத்துக்குத் தண்ணீர் விடுறேன்.”என்று எங்களைப் பார்த்துக் கூறி நடந்தாள்.
எங்களால் நம்பமுடியவில்லை. எழுந்திரிக்க வில்லை. நாங்கள் ஏழாததைக் கண்ட அவள் தழுதழுத்த குரலில்…
“ஐயா..! என் மகன் இப்படி முரண்டா நிக்கிறதுக்கு நானும் ஒரு காரணம். ஊருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரியாம, பொல்லாப்பு வரும்ன்னு புரியாம, பகையை மனசுல வைச்சுக்கிட்டு புள்ளைக்குத் தூபம் போட்டேன். தகப்பனில்லாத புள்ளை ஆடிட்டான். அதுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். ஊர் ஒத்துமையா இருந்தா ஒரு ஆள், ஒத்தக் குடும்பம்…. என்னதான் வசதி ,வாய்ப்ப, செல்வாக்கு இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாதுக்கு இந்த நடப்பு ஒரு உதாரணம். நான் உணர்ந்துட்டேன். என் பயனும் இதை பார்த்துத் தெரிஞ்சுப்பான். வாங்க. நான் வாய்க்கால் மடைகளைத் திறக்கிறேன். இனி.. இது ஊர் குளம். உங்க குளம். பெருமாள் நம்ம எல்லாருக்கும் தெய்வம் !.”சொல்லி நடந்தாள் .
எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி, மலர்ச்சி.
இறந்து கிடைக்கும் அந்த கிழவி முகத்தில் கூட லேசாகப் புன்னகைக்க கீற்று.!!