அம்பலத்துடன் ஆறு நாட்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 158 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவம் அந்தச் சிறைச்சாலை அறைக்குள் ஒரு செவ்வாய்க்கிழமை மாலை கொண்டுவந்து தள்ளப்பட்டபோது, அந்தத் தாடி மனிதன் புகைத்தவாறு இருந்தான். வயது அறுபதிருக்கும். அவன் பார்வையில் மிகுந்த தீர்மானம் இருந்தது. சிவத்தை ஏறெடுத்துப் பார்த்தான். பேச்சைத் தொடங்குவதற்கு இன்னும் நேரம் வரவில்லை என்பது தாடி மனிதனுக்குத் தெரியும். சிகரெட் ஒன்றைச் சிவத்துக்குக் கொடுக்க முயன்றான். சிவம் ‘வேண்டாமென்று தலையாட்டினான். தாடி மனிதன் திரும்பவும் தன் புகைத்தலில் ஆழ்ந்தான். சிறைகளில் மனிதர்கள் தள்ளப்படும் நிலவரங்கள் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். குற்றங்கள் புரிந்தும் இருக்கலாம், புரியாமலும் இருந்திருக்கலாம், தர்க்கப் படுத்தியுமிருக்கலாம், ஆத்திரப்பட்டும் இருந்திருக்கலாம். சிறையில் தள்ளப்பட்டிருந்த தொன்றே நிச்சயம்.

சிவம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். தாடிக்காரனையும் தெரியவில்லை. சிறையின் அடைப்பும் பெரிதாகத் தோன்றவில்லை.

வெளியுலகில் அவனுக்கு இருந்த தொடர்புகளில் பிரச்சினை கள் இருந்தன. எந்தக் கணத்திலிருந்து நடந்தவற்றை அனுமானிக் கலாம்’ என்ற யோசனை எழ, மனக்களைப்பு இறுகக் கவ்வியது. ஒரு மூலையில் குந்தியிருக்க வேண்டும் என்று தோன்றி, தாடிக் காரனின் ஸ்தானத்திலிருந்து ஒரு தொலைவில் அமர்ந்தான். எவனுடனாவது பேச வேண்டுமென்றும் அவனுக்குத் தோன்றவே யில்லை .

தாடிக்காரன் அதையும் பார்த்துக்கொண்டே புகை ஊதி னான். சிவம் வெகுதூரம் போய்விட முடியாதென்பது தாடிக் காரனுக்குத் தெரிந்திருந்தது. சிவம் குந்தியிருந்து தன் கைமடிப்பில் முகத்தைப் புதைத்துத் தன் நிலையை ஆராய முயன்றான். தாடிக்காரன் புகையை நிறுத்தி, “உன்னுடைய பெயரென்ன?” என்று கேட்டான்.

“சிவம்” என்று பதிலளித்தவனுக்கு, தாடிக்காரன் பெயரை உடனே திருப்பிக் கேட்கத் தோன்றவில்லை. திரும்பவும் தலையைப் புதைக்க முயன்றான். வாழ்க்கையின் இன்பதுன்பக் கணக்கில், துன்பக் கணக்கு மட்டுமே வேர்கொண்டிருந்தது. கணங்கள் சில போனபின்னரே, நினவுகளும் துரத்தத் தலையை நிமிர்த்தி அந்தத் தாடி மனிதனைப் பார்த்தான்.

“உன்னுடைய பெயரென்ன?” சிவத்தின் குரலில் தோல்வி மிகச் சூழ்ந்திருந்தது.

தாடிக்காரன் தன் தனிமையை இழந்ததை உணர்ந்து சிலிர்த்துக்கொண்டான்.

“அம்பலம். தாடியம்பலம்” என்று தாடியைத் தடவிக் கொண்டான். சிவத்தினால் சிரிக்க முடியவில்லை. தாடியம் பலம், ‘சிவம் ஒரு கோபக்காரனாய் இருக்கக்கூடும்’ என்று யோசித்தான். ‘போகப்போகத் தெரியும். இளவயது’ என்றும் தோன்றியது.

மணியடித்தார்கள் – மாலை உணவிற்காக. அம்பலம் புறப்பட்டான். சிவத்தைப் பார்த்து, “வா, போகலாம்” என்றான்.

“பசி இல்லை ” என்றான் சிவம்.

“உனக்குப் பசி எடுக்கும் போது இங்கே சாப்பாடு கிடைக்காது. மறந்துபோனாயா? இது சிறை” என்றான் அம்பலம்.

சிவம் மிகுந்த களைப்புடன் சாப்பிட எழுந்தான். சிறையின் சூழல் இன்னும் சிவத்தின் மனதில் பதியவில்லை என்பது அம்பலத்துக்குத் தெரிந்திருந்தது. சாப்பாட்டு அறையில் பல வயதுக்காரர்களும் பலவித குரல்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட ஆயத்தமானார்கள். அம்பலத்தைக் கண்டவுடன் பலர் உற்சாகமடைந்தார்கள். அம்பலம் அந்தச் சிறையில் பிரபலமான ஓர் உற்சாக சக்தி என்பதைச் சிவம் உணர்ந்து கொண்டான்.

“யாரிவன்?” என்ற பலரின் கேள்விக்கு, அம்பலம் தலையைச் சற்றே சரித்து, “ஒரு புதிது” என்று பதிலளித்தான்.

ஓர் அரைத்தாடி மனிதன் அம்பலத்தின் மறுமொழியை உணர்ந்தவனாக சிவத்தைப் பார்த்து, ஒரு கணம் நின்று சிவத்தை உற்றுப்பார்த்துவிட்டுப் போனான். ஒரு சந்தைக் கடையின் ஆரவார நிலையை ஒத்திருந்த அந்தச் சாப்பாட்டு அறையில், அம்பலம் சிவத்திற்கு அருகிலேயே இருந்தான்.

“இந்தச் சிறையில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்” என்று அம்பலமும் அவனைச் சூழ இருந்தவர்களும் சொன்ன போது சிவத்தினால் உண்ண முடியவில்லை. இதையும் தாடி யம்பலம் பார்த்துக்கொண்டான்.

சிவம் தன் நிலையை உணரக் கஷ்டப்பட்டுக்கொண் டிருந்த அந்தக் கணத்தில், சங்கிலிகள் நிலத்தில் உராய்ந்து எழுகின்ற சத்தத்துடன் சிறைக் காவலர்களால் கடினத்துடன் அடக்கப்பட்டபடி, திமிர்ந்து கொண்டுவரப்பட்ட அந்த இருவரையும் சூழ்ந்து வந்த அதிர்வுகள், பலவிதமாகவும் பேசிக் கொண்டிருந்த கைதிகளை மௌனப்படுத்தின. பலவித வசவுகளை உரக்கவே சப்தித்துக்கொண்டு ஆர்ப்பாட்டமாகவும் திமிராகவும் அந்த இருவரும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை அடக்கச் சிறைக் காவலர் உரத்துத் திட்டியபடியும் அடித்தபடியும் இருந்தார்கள். அம்பலம் தன் தாடியைத் தடவியபடி அவர்களின் திமிறலைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தான். சிரிப்பலை உணவு அறை முழுவதிலும் பரவி, அந்த ஆர்ப்பாட்டக் கைதி களின் திமிறல் ஒலிகளை அடக்கின. சிரிப்பலை அடங்க, புதுக் கைதிகளின் விலங்கொலி மறுபடியும் அதிகரிக்க ஆரம்பித் தது. காவலர்கள் அவர்களை மறுபடியும் அடக்கினார்கள். இந்த நடப்புகள் சிவத்தின் பாதிப்பு நினைவுகளை அடக்கின.

சாப்பாடு முடிந்து அவர்கள் சிறைக்கூண்டிற்குப் போன போதே அம்பலத்துக்கும் சிவத்துக்கும் புதுக் கைதிகளை அவர்கள் கூட்டில் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. கை, கால் விலங்குகளை எடுத்துவிட்டு அவர்களை உள்ளே தள்ளிக் கம்பிக் கதவுகளை இழுத்துப் பூட்டியிருந்தார்கள்.

தாடியம்பலம் மறுபடியும் சிகரெட் புகையில் ஆழ்ந்தான். சிவத்துக்குப் புதுக் கைதிகளைப் பார்க்கப் பயமாக இருந்தது. அம்பலத்தின் நிதானமும் நிர்ச்சிந்தையும் தைரியத்தைக் கொடுத் தன. தள்ளப்பட்ட புதுக் கைதிகள் சிறைக்கூண்டின் கம்பிக் கதவுகளைப் பற்றிய படி, காவலர்களையும் வேறு மற்றவர்களை யும் உரத்த குரலில் திட்டியபடி இருந்தார்கள்.

“நிறுத்துங்கள்!” என்று அம்பலம் கத்தினான். புதுக் கைதிகள் கோபத்துடன் திரும்பி அம்பலத்தைப் பார்த்தார்கள்.

“இது சிறை! இங்கே நீங்கள் நினைத்தபடி எதுவும் நடக்காது.” அம்பலத்தின் உறுதி, அவர்களின் கோபத்தீயைத் தாண்டி விட்டிருந்திருக்க வேண்டும்.

“ஆ…” என்று பற்களைக் கடித்தபடி இருவரும் அம்ப லத்தை நோக்கி அவனைத் தாக்க ஓடிவந்தபோது, ஒரு புலியின் இலாவகத்துடன் அவன் ஒதுங்கிக்கொள்ள, கைதிகள் இருவரும் சிறையின் கற்சுவரில் மோதிக்கொண்டார்கள். இந்தச் சத்தத்தைக் கேட்ட காவலர்கள் ஓடிவந்து, அவர்களை அடக்கினார்கள். அவர்கள் ஆத்திரம் அடங்குவதாக இல்லை . எதிர்வரும் எல்லோரையும் சாடும் ஆத்திரத்துடன் இருந்த அவர்களை அம்பலம் ஆசுவாசப்படுத்த முயற்சித்தான்.

யாரோ ஒருத்தன் பெயரைச் சொல்லி, “அவன் சாக வேண்டும்” என்று வன்மப்பட்டார்கள்.

“இது சிறை! இங்கே நீங்கள் நினைத்தபடி எதுவும் நடக்காது.” மறுபடியும், அம்பலம் அவர்களுக்கு நினைவுறுத்தினான். அவர்களிருவரும் தாங்கள் சொன்னதையே திரும்பிச் சொன்னார்கள்.

அம்பலம் அதைக் கேட்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.

“நீ விருச்சிக ராசிக்காரன்” என்று அவர்களுள் பெரியவ 316 னாக இருந்தவனைக் காட்டிச் சொன்னான். “நீ கர்க்கடகம்” என்று மற்றவனை அதே மூச்சில் சுட்டிக்காட்டினான்.

சிவம் ஆச்சரியமடைந்தான். “என் விதி இங்கேயும் தொடர் கிறதா?” என்று யோசித்தவாறே நடப்பவைகளைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

“உனக்கெப்படித் தெரியும்? பைத்தியக்காரனே!” பெரியவன் ஆத்திரம் இன்னும் போகவில்லை. “இந்தப் பைத்தியத்தை விடு” என்று மற்றவன் பெரியவனுக்கு அறிவுரை சொன்னான்.

“உங்கள் சரித்திரம் முழுவதும் எனக்குத் தெரியவரும்” என்றான் அம்பலம்.

“வாயை மூட்டா பைத்தியக்காரனே!” என்று இருவரும் சொன்னர்களே தவிர, இம்முறை அவன் மேல் பாயவில்லை.

சிவத்துக்குத் தன் நிலையை மறக்க வேண்டும் போலிருக்கத் துாக்கம் அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது. அம்பலம் அவன்பாட்டில், தன் தலைமாட்டுக்கடியில் இருந்து ஒரு சிறு சுண்ணாம்புக்கட்டியை எடுத்து, சிறைச் சுவரில் இருந்த ஓட்டைக் கூடாகத் தெரிந்த ஓரிரு நட்சத்திரங்களைப் பார்த்த பின்னர், நிலத்தில் கோடுகளை வரைந்தான். கணக்குகள் போட்டான்.

“நீங்கள் தென்மேற்கிலிருந்து வருகிறீர்கள், இல்லையா?”

“உனக்கு இவ்வளவு நிச்சயமென்றால், எங்களை ஏன் கேட்கிறாய்?” சிறியவன் தன் ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு கேட்டான்.

“என் கணக்குகள் தப்பியதே இல்லை.” அம்பலம் பெருமைப் பட்டுக்கொண்டான்.

“நீ எந்தக் கணக்கைப்போட்டுச் சிறைக்குள் வந்து சேர்ந்தாய் செம்மறியே?” சிறியவன் திரும்பவும் சாடினான்.

“நீ மிகவும் சின்னவன். உனக்கு யோசிக்கத் தெரியவில்லை . சிறைக்குள் வந்தே இந்தக் கணக்குகளைப் படித்தேன். நீயும் படி, படிப்பதற்கு இதுதான் நல்ல இடம்.” அம்பலம் மறுபடியும் சிரித்தான்.

“இந்த இடத்தைவிட்டுத் தப்பியோடுவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்காத மேதை நீ , எந்தக் கணக்கைப் படித்தென்ன?” பெரியவன் நக்கலாகப் பதில் சொன்னான்.

“நான் தப்பியோடி உன் மாமியார் வீட்டில் மாட்டிக் கொள்ளவா?” தாடியம்பலம் நக்கல் பதிலுரைத்தான்.

உரையாடலில் அடியோடிய சினம் அடங்கவில்லை . சிவம் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.

“என்னுடைய பெயர் அம்பலம். தாடியம்பலம் என்று இங்கே என்னைச் சொல்வார்கள். உங்கள் பெயரென்ன?” தாடியை வழக்கம் போல் தடவிவிட்டுக்கொண்டான்.

“நீ கணக்கைப்போட்டுத் தெரிந்து கொள்.” சின்னவன் சவால் விட்டான்.

“இதற்கு எதற்குக் கணக்கு? இதோ பார்!” அம்பலம் தன் சக்தியைப் பிரகடனம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தான். “சங்கரன்!” என்று குரல் கொடுத்தான். ஒரு

காவலன் வந்து, “என்ன வேண்டும்?” என்றான்.

“இந்த எருமைகளின் பெயரைச் சொல்!” அம்பலம் காவலனுக்குக் கட்டளையிட்ட மாதிரியிருந்தது.

“பெரிய எருமையின் பெயர் நாதன். சின்ன எருமை, செல்வன்.”

காவலன், “அவ்வளவுதானா?” என்று கேட்டுவிட்டுத் தன் காவல் ஸ்தானத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.

பெரியவனையும் சின்னவனையும் பார்த்து, “இது எவ்வளவு சின்ன விஷயம்?” அம்பலம் கொக்கரித்துக்கொண்டான்.

“மற்றவைகளையும் நீயே கண்டுபிடி!” என்று செல்வன் சொன்னபின்னர், புதுக் கைதிகள் மூவரும் நித்திரை கொள்ளப் போனார்கள். அம்பலம் தன் கணக்கில் புதைந்திருந்ததில் இருந்து எழுந்து நித்திரை கொள்ளப் போனபோது இன்னும் நேரமாகிவிட்டது.

அடுத்த நாள் புதன்கிழமை காலை சிவம் எழுந்தபோது, தாடியம்பலம் ஏற்கனவே எழுந்திருந்ததைப் பார்த்தான். நிலத்தில் சுண்ணாம்புக் கட்டியில் போட்டிருந்த கிறுக்கல்கள் நடுவில், ஏதோ கணக்கில் அம்பலம் ஆழ்ந்திருந்தான். இரு பிரச்சினைகாரர்களும் இன்னும் துாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் மிகக் களைப்படைந்திருக்க வேண்டும்.

“என்ன கணக்குப் போடுகிறாய்?” சிவம், சிறை வாழ்க் கையை எதிர்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற உண்மையைத் தன் தலையில் புகுத்தியவனைக் கேட்டான்.

“உன்னைப் பற்றியில்லை. என்னை யோசிக்க விடு” என்று தாடியம்பலம், தன் தலையை நிமிர்த்தாமலே சொல்லிவிட்டுக் கணக்கில் ஆழ்ந்தான்.

“உனக்கு என்னென்ன கணக்குகள் தெரியும்?” சிவம் விடுவதாக இல்லை .

அம்பலம் சிவத்திற்குப் பதில் சொல்ல முனையவில்லை. தன் கணக்கில் ஆழ்ந்திருந்தான்.

“இந்தக் கணக்குகள் இன்னும் என்னைத் தொடர்கின் றனவே. இந்தத் தாடியம்பலம் யார்?” சிவம் பல சிந்தனைகளுடன் காலைக்கடன் முடிக்கப் போனான். தன் சூழலை முதல் முறையாக ஆராய முனைந்தான். தன் நிலையையும் அளவெடுக்க முயன்றான். ஒரு குறுகிய காலத்திற்குள் இப்படி விஷயங்கள் இறுகிப்போய், தீர்வில்லாத, தீர்வு இலகுவில் அடையவும் முடியாத ஒரு நிலைக்குப் போய்விட்டன. முடிவில்லாத மயான யாத்திரையாக வாழ்க்கை அமைந்து போனதான உணர்வு சிவத்தைக் கவ்வி யிருந்தது. காலைக்கடன் முடித்துத் திரும்புகையில் அம்பலம் கணக்குகளை முடித்து, சிகரெட் புகையில் ஆழ்ந்திருந்தான். திரும்பிவந்தவனைப் பார்த்து, “உன் குடும்பத்தினரைப் பற்றிய மனக்கவலைகளை விடு” என்று சொல்லித் தன் தாடியை அம்பலம் தடவிவிட்டுக்கொண்டான்.

“உனக்கெப்படித் தெரியும்?” சிவம் ஆச்சரியப்பட்டான்.

“உனக்குப் புரிகிற மாதிரிச் சொல்வதானால், இயற்கை சக்தி தாயக்கட்டை உருட்டுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், ஒரு இடம் இருக்கும். அதிலிருந்து கண்டுபிடிக்க முடியும். ஏ கழுதையே ! அது பிரச்சினையல்ல.” அம்பலம் ஒரு கணம் நிறுத்தித் தன் குரலை உயர்த்தினான்.

“நடக்கும் விஷயங்களுக்குள் ஒரு பொருளுமிருக்கும். அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.” அம்பலத்தின் கண்கள் பிரகாசமடைந்திருந்தன. ஆள்காட்டி விரலை ஆட்டிவிட்டு, மற்ற விரல்களாலும் தன் தலைமயிரைப் பற்றிக்கொண்டான்.

“என்ன சொல்லுகிறாய்?” சிவம் அம்பலத்தை உற்று நோக்கினான். “கழுதை” என்று அம்பலம் சொன்னதுவும் மனதில் தைக்கவில்லை.

“உனக்கு நடந்ததை எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்று என்னால் கணக்குப் போட முடியும். ஆனால், “ஏன் நடந்தது என்று முற்றாக என்னால் சொல்ல முடியாது.” அம்பலம் தலையைச் சொறிந்து கொண்டான். சிவத்துக்கு இரண்டாவது ஒரு பிரச்சினையாகத் தோன்றவில்லை.

“எனக்கு நடந்தவற்றைச் சொல்ல முடியுமா? சொல்லு! சொல்லு!” சிவத்தின் ஆச்சரியநிலை அதிகமாயிற்று.

“இல்லை! இல்லை! இல்லை! மடையனே!” அம்பலம் கத்தினான். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், ஒரு இடம் இருக்கிறது! அந்த இயற்கையைக் குலைக்காதே ! கேட்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. பதில் சொல்வதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. சரியான நேரம் வரும்போது நானே சொல்லுவேன்!

சிவத்தின் ஏமாற்றம் இலகுவில் அடங்குவதாக இல்லை. தோல்விகள் என்னென்ன விதத்தில் வருகின்றன?

“நானே உனக்கு என் கதையைச் சொல்வதற்கும் நேரம் வரவேண்டுமா? நான் உன்னை மாதிரி ஒரு சாத்திரக்காரன் இல்லை.”

சிவம் சொல்லி முடிப்பதற்குள் அம்பலம் மறுபடியும் தன் தலைமயிரைப் பற்றியபடி, “நான் ஒரு சாத்திரக்காரன் இல்லை ! நான் ஒரு சாத்திரக்காரன் இல்லை! நான் ஒரு சாத்திரக்காரன் இல்லை !” என்று கத்தினான்.

சிவம் அதிர்ச்சி அடைந்தான். அம்பலம் ஒரு பைத்தியக் காரனாய் இருக்கலாம் என்று தோன்றியது.

அம்பலத்தின் கூச்சலில் எருமைகள் இரண்டும் எழுந்தன. துாக்கக் கலக்கத்திலும், அம்பலத்தை அடக்கும் விதமாக, “பைத்தியமே! கொஞ்சம் மனிதனை நித்திரை கொள்ள விடேன்!” என்று சேர்ந்து கத்தின.

“உங்களை யார் இங்கே நித்திரை கொள்ள விடப்போகி றார்கள்? எருமைகளே எழும்புங்கள் ! இல்லையானால் தலையில் தண்ணீர் கொண்டு தெளிப்பார்கள்!” அம்பலம் சிறையின் நிதர்சனத்தை அவர்களுக்கு மறுபடியும் நினைவூட்ட முயன்றான்.

“உன் வாயை அடக்கு! நாங்கள் யார் தெரியுமா?” பெரிய எருமையின் கை மார்தட்டப்போகுமுன்னரே, அம்பலத்தின் சிரிப்பு வெடிக்க ஆரம்பித்துவிட்டது.

“வேண்டுமானால் திரும்பவும் போய்த் தூங்குங்கள்! உங்கள் வெளிக்கனவுகள் மறுபடியும் சிறைப்பட்ட நினைவுகளாகட்டும்! அதிகார பரம்பரை இங்கே ஆட்டுக்கல் அரைக்கப்போகிறது!” அம்பலம் சிரிப்பைத் தொடர்ந்தான்.

“நீ என்ன பரம்பரை?” சின்ன எருமை கேட்டது.

அம்பலம் எதோ சொல்வதற்குள், காலை உணவிற்காக மணியடித்தார்கள்.

“இதற்குத்தான் சொன்னேன் வெட்டிப்பேச்சு எதுவும் இல்லாமல் ஒரு நாள் பொழுதைத் தொடங்கு என்று.” அம்பலம் அவர்களைப் பேசியபின், சிவத்தைப் பார்த்து, “இவர்கள் காலைக்கடன் இன்னும் முடிக்காததினால், இவர்களுக்கு இன்று காலை உணவு கிடைக்காது. நீ வா, நாங்கள் போகலாம்” என்று சிவத்தின் கையைப் பற்றி, இழுத்து கொண்டு சிறைக் கதவருகில் அது திறக்கப்படுவதற்காய் ஆயத்தமானான்.

“இவர்கள் யார்?” சிவத்துக்கு, அம்பலம் மறுபடியும் “இடம் பொருள் ஏவல் எதுவுமில்லை” என்று சொல்லிக் கத்துவான் போல் தோன்றவில்லை.

“கடைக்காரர்கள். தொந்தியையும் அதிகாரத்தையும் பார்த்தால் தெரியவில்லையா? இவர்கள் பண்ணிய கொலையை தொழில் போட்டியில் காட்டிக் கொடுத்திருக்கிறான் எதிர்க்கடை “கொஞ்ச நாளில் வெளியே போய்விடுவோம். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்கிற நம்பிக்கை இவர்களுக்கு நிறைய இருக்கிறது.” அம்பலம் ஒரே மூச்சில் அமைதியாகச் சொல்லி முடிவதற்குள் கதவு திறக்கப்பட்டது. உணவுக்கோட்டில் மற்றவர்களுடன் நிற்கையில், சிவத்துக்கு அம்பலத்தை மேலும் கேள்விகள் கேட்கத் தோன்றவில்லை.

இந்தச் சிறைவாசம் ஒரு வெகு நீளமான காலக்கோடு. தனக்கு என்ன நடக்கக்கூடும் என்று அம்பலத்தைக் கேட்க நிறைய நேரம் இருக்கிறது. அவசரம் எதுவுமில்லை . சிவம் பொறுமையாகத் தாடியம்பலத்திற்குப் பின்னால் காலை உணவு பெற மெல்ல நடந்தான். காவலர்கள், எருமைகள் இருவரையும் அதிகாரப்படுத்துவது பின்னால் கேட்டது. இது விளையாடப்பட வேண்டிய விளையாட்டு.

“இன்று எங்கே கல்லுடைப்பு? உணவுக்கோட்டில் மூன்று பேர் தள்ளி முன்னால் இருந்தவன் ஒருவன் அம்பலத்தைக் கேட்டான்.

“இன்று கல்லுடைப்பு ஒன்றுமில்லை. பாதை போடக் கூட்டிக்கொண்டு போகப் போகிறார்கள்” என்றான் அம்பலம்.

காலை உணவு முடிந்து சற்றே மலைப்பாங்கான இடத் துக்கு நாற்பது, நாற்பது பேராக இரண்டு பஸ்களில் கூட்டிக் கொண்டுபோய் பாதை அமைப்பு வேலையில் கைதிகளை ஈடுபடுத்தினார்கள். எருமைகள் இரண்டையும் தங்கள் பஸ்சில் காணவில்லை. மற்ற பஸ்சில் வருகிறார்கள்’ என்று சிவம் யோசித்துக்கொண்டான்.

அம்பலத்துக்குத் தள்ளுவண்டியில் கல்லுகளைப் போட்டுக் கொண்டு போகிற வேலை. சிவத்தை, கற்களை வண்டியில் போடச்சொல்லிக் கட்டளை. அம்பலத்தைக் கொஞ்சநேர வேலைக்குப் பின் அதிகாரி ஒருவன் கூட்டிக்கொண்டு போய் விட்டான். அம்பலத்தின் வேலையும் சிவத்தின் கையில் விழுந்தது.

சிவம் துாரத்தில் இருந்தே அம்பலத்தையும் அந்த அதி காரியையும் பார்க்க முடிந்தது. சிறு கற்பாறையில் உட்கார்ந்து கையில் ஏதோ பேப்பர் தாள்களை வைத்துக்கொண்டு அவர்கள் விவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். வெய்யில் ஏற வேலைப் பளு தோற்ற ஆரம்பித்தது. சிவம் வேர்வையைத் துடைத்துக் கொண்டான்.

இது எல்லாம் என்ன வேலை? நான் செய்யாத வேலையா? வாழ்க்கையை, சாவுக்கு மிக அருகில் ஆரம்பித்து, உயிர்வாழ்வே முதலில் பிரதானமென்று உயிர்த்து, கூடப்பிறந்தவர்களின் உயிர்ப்பையும் தன் உயிர்ப்போடு இணைத்து, உயிர்ப்பு போட்டி யாகிற ஒரு நிலவரத்தில், கூடப்பிறந்தவனின் வாழ்க்கைப் போட்டியின் சில்லில் மாட்டி இந்தச் சிறைவாசத்தில் நசுங்கும் படியாகிவிட்டது. எங்கே இந்த அசைபோடலை ஆரம்பிக்கலாம்?

கூடவே ஒன்றாக இருந்ததெல்லாம் இரண்டாக , மூன் றாகப் பெருகி, பின்னர் ஒவ்வொன்றும் பெருகி, உயிரைப் பங்கு போட்டுக்கொண்டன. முதலில் என் உயிரைத்தான்…

மற்ற உயிர்கள் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்துவதை மட்டும் செய்திருந்தால், என்வழியே நான் நிம்மதியாகப் போயிருப்பேன்.

என்னில் பழியைப் போட்டுக் கூத்தாடத் தொடங்கிவிட்டன.

யார் சொல் நிற்கிறது என்பதற்கு சமூகத்து நிலை உதவியா யிருக்கிறது. எனக்கு என்ன நிலை? யாரையும் என்னால் பழிசொல்ல முடியாது. வாழ்க்கைப் போட்டியில் பின்னே தங்கியதற்கு என்னையேதான் குற்றம் சொல்லிக்கொள்ள வேண்டும்.

இந்தச் சிறையும் மனிதனை ஒடுக்குவதாகத்தான் இருக்கிறது. சிவம் தன் மனவலிப்பை நிறுத்த முயற்சிக்கவில்லை. கற்கள் கையை நெருக்கி, வலியைப் பெருக்கின. சிவம், தள்ளுவண்டியில் மற்றக் கற்களுடன் போய்ச் சேர்ந்து கொள்ளும் போது, ‘டக்’ என்று ஓசை எழுப்புவதோடு கற்களின் உயிர்ப்பு நின்று போய் விடுகிறதைப் பார்த்து அலுத்துக் கொண்டான்.

கற்களுக்குப் பெரும் நிறையாவது இருக்கிறது. எனக்கு என்ன இருந்தது? சிந்தனையைக் கலைக்கும் விதமாகப் பின்னால் இருந்து சத்தம் கேட்டது.

“தள்ளு, இனி நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று பின்னால் இருந்து வந்தான் தாடியம்பலம். சற்றுத் தள்ளி அவனைக் கூட்டிக்கொண்டு போன அதிகாரி வந்து கொண்டிருந்தான்.

“உனக்கு நடந்ததையே யோசித்துக்கொண்டிருந்தாய் என்றால், உன் சுவாசம் நின்று போகப்போகிறது. இந்த உலகத்தில் யோசிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.” மலைத்து நின்ற சிவத்தைத் தட்டிக்கொடுத்துவிட்டு தாடியம்பலம் கல் வண்டியைத் தள்ளிக்கொண்டு போக ஆரம்பித்தான்.

கொண்டு போய்க் கற்களைக் கொட்டிய பின்னர் பாதை போடும் இயந்திரத்தால் அதைச் சமன்படுத்திக்கொண்டிருந்த போது அதில் கோளாறு வந்துவிட்டிருந்தது. கைதிகளை சிறு கூட்டங்களாகப் பிரித்துக் கண்காணித்துக்கொள்ள ஆரம்பித் தார்கள். அம்பலம் சிவத்திற்கு அருகே வந்து உட்கார்ந்தான்.

“உனக்கு என்ன நடந்தது?”

“எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. ஆரம்பத்தி லிருந்தே சொல்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு சிறு காணியில் தோட்டம் செய்து பிழைக்க வேண்டிய நிலையில் இருந்தோம். என் தாய்தான் சொல்லுவாள் – தந்தைக்கு நிறையக் காணிகள் இருந்ததென்றும், அவருடைய சகோதரர்கள் சண்டை போட்டுக் காணிகளை எடுத்துக் கொண்டார்கள் என்றும். நெடுகவே என் தந்தைக்கிருந்த காணிச்சண்டைகள் ஓயவில்லை. என் தாயும் வெற்றிலை போட்டபடி, நெடுக வேலை செய்து கொண்டுதான் இருந்தாள். அவள் உழைப்பிலுந்தான் எங்கள் காலம் ஓடிக்கொண்டிருந்தது. நான் மூத்தவன். எனக்கு அடுத்து இரண்டு தங்கைகளும், பின்னர் மூன்று தம்பிமாரும் இருந்தனர். நான் பன்னிரண்டு வயதுவரை பள்ளிக்கூடம் போய்வந்து கொண்டிருந்தேன். அதற்குப் பின் என் தந்தைக்கு உதவி செய்யப் போய்விட்டேன். என் தங்கைமாரும் பருவ வயதுடன் பள்ளிக் கூடம் போவதை நிறுத்திக்கொண்டார்கள். எங்கள் கடும் உழைப்பில் அருகில் இருந்த காணியை வாங்க, எங்கள் நிலவரம் கொஞ்சம் முன்னேறியது. என் தம்பிமார் என்னைப் போல் கஷ்டப்படலாகாது என்று அவர்களைப் படிக்கவைத்தேன். இரண்டு பேர் எஞ்சினியர் ஆனார்கள். ஒருத்தன் மருத்துவர் ஆனான். அதுவும் பிரச்சினையாகிப் போனது. தங்கைகள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு போனார்கள். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நெடுக என் பெற்றோர் வற்புறுத்தியும் எனக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தது. என்னோடு படித்தவர்கள் எல்லோரும் அனேகமாக உத்தியோகம் பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள். என்னைப் போல் இருந்தவர்கள் சிலபேர் எங்கள் ஊரிலேயே இருந்தார்கள். என் தம்பிமார்கள் நல்ல நிலைக்கு வர நண்பர்கள் கூச்சத்துடனே என்னுடன் பழக ஆரம்பித்தார்கள். ஆனால், மணி என்றவன் ஒருவன்தான் என்னுடன் நட்பாக இருந்தான். என் பெற்றோர்கள் மறைந்து போக அவனுடன் தான் குடிக்கப்போவது வழக்கமாயிற்று. இரண்டு சுருட்டும் கொஞ்சம் கள் அல்லது சாராயமும் இருந்தால் போதும். பகல் உழைப்பிற்கும் அவ்வாறாகச் சிறு ஓய்வை மாலையில் இரசிப்பதற்கும் இருந்த வாழ்க்கை நடுவில் குடைச் சாமியைப் பார்க்க நேர்ந்தது.”

கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அம்பலம் ஒருதரம் தன்னுடம்பை சிலிர்த்துக்கொண்டான்.

“என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? குடைச் சாமியா?” அம்பலம் தன் தாடியை மறுபடியும் நீவிவிட்டுச் சிவத்தை உற்றுநோக்கியபடி கேட்டான். தன் மூளையின் ஒவ் வொரு அணுவையும் பாவித்து இந்தக் குடைச்சாமி என்று சொல்லப்படுகின்றவனை ஆராய முனைந்தான்.

“யாராய் இருக்கலாம், இந்தக் குடைச்சாமி?”

சிவம் தலையை ஆட்டி விட்டுத் தொடர்ந்தான்.

“அவரைச் சாமியார் என்று சொல்வதற்குத் தாடியொன் றுதான் அடையாளம். குடை நெடுக வைத்திருந்தபடியால், எல்லோரும் குடைச்சாமி என்று அவரைக் கூப்பிடுவார்கள். அந்தக் குடையில் பன்னிரண்டு பகுதிகள். வெறும் வேட்டியும் ஒரு சால்வையுந்தான் போட்டிருப்பார். ஆனால், வெள்ளை யாக இருக்கும். எங்கே இருந்து எங்கள் ஊருக்கு வந்தார் என்று ஒருவருக்கும் தெரியாது. குடைச்சாமி, கோவிலில் தங்குவதென்று பேசிக்கொண்டாலும், ஒருநாள் மாலை அவரைத் தொடர்ந்து போய்ப் பார்த்ததில் அவர் ஊருக்கு மூலையில் இருந்த வீடு ஒன்றில் தனியே இருந்தார். வேறு ஒருத்தரும் அந்த வீட்டில் இல்லை . அது ஒரு நாற்சார் வீடு. ஆனால், வீட்டு வாசல் கதவு , மற்ற வீடுகளைப் போல் ஒரு சுவருக்கு நடுவில் இல்லாது, இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையில் இருந்தது. சின்னச்சின்ன அறைகளாகப் பன்னிரண்டு அறைகள். அறைகளுக்கு நடுவிலும், ஒரு அறையில் இருந்து மற்ற அறைக்குப் போவதற்கு கதவு இருந்தது. பகலில் வீட்டு நடுவில் வரும் வெளிச்சம் அறைகளுக்குள் போதுமான அளவு வரும். ஆனால், குடைச்சாமி பகலில் ஊரெல்லாம் சுற்றுவார். அந்த வீட்டில் சமையல் அறை இல்லை. வெளியே தனியாக ஒரு சமையல் கட்டு இருந்தது.” வானத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த சிவத்தை சப்பாத்து ஒலி நிறுத்தியது.

“எல்லோரும் புறப்படுங்கள்” என்று அதிகாரி ஒருவன் கத்தியபடி கட்டளையிட்டான். அப்போதுதான் அவர்களுக்கு எருமைகளின் ஞாபகம் வந்தது. அவர்களைக் காணவில்லை. எல்லோரும் கைவிலங்கு பூட்டப்பட்ட பின்னர் அவரவர் பஸ்களில் ஏறிக்கொண்டார்கள். அம்பலம் சிவத்திற்கு அருகில் உட்கார்ந்துகொண்டான்.

“நீ எப்படிக் குடைச்சாமியை முதலில் சந்தித்தாய்?”

“நான் தோட்டத்திலிருந்து கடைக்குக் காய்கறி, தினமும் காலை ஒரு பத்தரை மணியளவில் சைக்கிளில் கொண்டு போவேன். போகிற வழியில் குடையையும் பிடித்தபடி போவார். வெள்ளை வேட்டியும் அதற்குமேல் ஒரு சிறு சால்வையுந்தான் – காவி கிடையாது. தோல் செருப்புப் போட்டிருப்பார். அவர் கண்ணில் ஓர் ஒளியிருக்கும். ஒதுங்கிநின்று என்னை அந்தக் கண்களால் பார்த்துவிட்டுப் போவார். எப்போது அவரைப் பார்க்கத் தொடங்கினேன் என்பதும் ஞாபகமில்லை. நீ சொன்னது போல் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நேரம் வரவேண்டும். அப்படியான ஒரு நேரம் ஒருநாளும் வந்திருக்கப்படாது. ஆனால், வந்து சேர்ந்தது.”

சிவம் பெருமூச்சு விட்டு, பஸ்சிற்கு வெளியே வயல்களையும் தோப்புக்களையும், நடந்து கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கும் மனிதர்களையும் பார்த்தான்.

“என்ன பார்க்கிறாய்?” அம்பலம் சிவத்தைக் கேட்கத் தொடங்கினான், “வெளியே எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றா?”

“வெளியே இருந்தால் சுதந்திரமா? அந்த யோசனைகளுக்கு எங்கே நேரம்? அதெல்லாம் இல்லை. என் சகோதரர்கள் செய்தவைகளால் நான் குடைச்சாமியிடம் போக நேர்ந்ததா இல்லை நான் எப்படியும் என் விதியினால் அவரிடம் போயிருப் பேனோ தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.” சிவம் பெருமூச்சு விட்டபின், அம்பலத்தால் தன் நிலைமையின் முழுப் பரிமாணங்களையும் உணர முடியும் என்ற நம்பிக்கை வந்தவனாகவும், அவன் சக்தியை எடைபோடும் விதமாகவும், தன் சகோதரர்களின் நினைப்பு வந்த களைப்பைப் போக்கடிக்கத் தன் மனத்தைச் சாடியெழுப்பும் விதமாகவும் தொடர்ந்து சொல்லலானான்.

“ஏன், நீயும் இந்தக் குடைச்சாமிபோல் தான் இருக்கிறாய். இதற்கும் மேலாக இந்த உலகத்து நடப்புகள் எல்லாம் தெரிந் தவன் மாதிரி வேறு கொக்கரிக்கிறாய். என் கதையெல்லாம் முதலில் கேட்டுக்கொள். பின்னர் என் சந்தேகங்களைக் கேட் கிறேன். விளங்கப்படுத்து பார்க்கலாம்.”

தாடியம்பலம், பஸ்சின் குலுக்கல்களைச் சட்டை செய்யாது, விலங்கிடப்பட்டிருந்த கைகளுடன் தாடியைத் தடவிவிட்டுக் கொண்டு பதில் சொன்னான்.

“அதற்கு இந்த இடம் சரிவராது. வா, சிறையில் மற்றவை களைப் பேசிக்கொள்ளலாம்.”

சிவத்திற்கும் அது உகந்தது தான். தனக்கு நடந்தவைகளை அசைபோட அந்த நேரத்தில் தனக்குச் சக்தியில்லை என்று தோன்றியது. அம்பலத்திற்கு நிறையப் பிரச்சினைகள் சிறையில் எதிர்பார்த்திருந்தன.

சிறையில் அம்பலமும் சிவமும் அவர்கள் அறையில் கொண்டு விடப்பட்டபோது, எருமைகள் இரண்டும் இருந்தன. காலின் மேல் கால் போட்டபடி படுத்திருந்தன. இவர்களைக் கண்டதும் மூத்த எருமை – நாதன், “கல்லுடைப்பு எப்படி?” என்று, காலை ஆட்டியபடியே கேட்டான்.

“ஆட்டுக்கல் அரைத்தது எப்படி?” என்று அம்பலம் திருப்பினான்.

“எங்களைப் பார்த்தால் ஆட்டுக்கல் அரைத்தவர்கள் மாதிரியாகவா தோன்றுகிறது?” சின்ன எருமை சேர்ந்து கொண்டது.

“இதெல்லாம் வெட்டிப்பேச்சு” என்று அம்பலத்திற்குத் தோன்றியது. வெளியே வேலை செய்துவிட்டுத் திரும்பியவர்கள் எல்லோரும் சாப்பாட்டிற்காகக் கூப்பாடு போட ஆரம்பித்தார் கள். அவர்கள் ஆரவாரம் சிறையின் சுவர்களிலெல்லாம் எதி ரொலித்துக் காதைச் செவிடாக்கும் போல் இருந்தது.

“இதற்குத்தான் காலையில் நேரத்திற்கு எழும்பாமல் தூங்க வேண்டும். எங்களைப் பார்! நேரத்திற்குக் காலையும் மத்தியான மும் சாப்பிட்டுவிட்டுத் துாங்குகிறோம்.” நாதன் கொக்கரித்துக் கொண்டான்.

“நாளைக்குப் பார்!” என்று அம்பலம் சவால் விட்டான். சிவம், அம்பலத்திடம், அவனுடன் வெளிக்களத்தில் பேசிக்கொண்டிருந்த அதிகாரி, என்ன கேட்டான் என்பதை விசாரித்தான்.

“எல்லோருக்கும் நாளை எப்படி விடியும் என்கிற விசனம் தான். அவன் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியாகும் என்று சாத்திரம் பார்த்துக்கொள்கிற ஆசைதான்.” அம்பலம் தாடியைத் தடவிக்கொண்டான்.

“அப்படியென்றால் நீ… உனக்கும்… சாத்திரம் தெரியுமா?” சிவம் பதட்டப்பட ஆரம்பித்தான். சாப்பாட்டிற்காக மணி அடித்தார்கள்.

“அதைப் பற்றிச் சாப்பிட்டபின் பேசிக்கொள்ளலாம்.” அம்பலம் அமைதியாக எழுந்தான்.

“இவன் குடைச்சாமிக்கு அடுத்ததாக என்ன தாடிச் சாமியா? சாத்திரம் எதிர்காலத்தை அறிவதற்கல்லவா? எதிர் காலத்தைப் பற்றி எனக்கென்ன யோசனை இருந்தது? நடந்து கொண்டிருந்தவற்றை மறக்கவல்லவோ போய்க் குடைச்சாமி யிடம் மாட்டிக்கொண்டேன்.” சிவம் கவலையுடன் அம்பலத்துடன் சாப்பாட்டு அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சாப்பாட்டு அறையில் அம்பலத்தின் அமைதியினால், அவனுடன் வழக்கமாகப் பேசுகிறவர்களும் அமைதியாக இருந்தார்கள். பசி வேறு. அம்பலத்திற்குச் சிவத்துக்கு என்ன நடந்தது என்பதை அறியவே ஆவலாக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.

வேலையில் இருந்து திரும்பி வந்த கைதிகள் அமைதியுடன் சாப்பிட்டதில், அம்பலத்தை ஒருவரும் சட்டை செய்யவில்லை. அம்பலத்திடம் சிவம் பாதிச் சாப்பாட்டின் பின் தனக்கு நடந்தவற்றைச் சொல்லத் தொடங்கினான்.

“என் தம்பிமார் முதலில் படிக்கப் போனார்கள். பின்னர் வேலை. கொஞ்சம் கொஞ்சமாகத் தாய், தந்தை, சகோதரிகள் இவர்களிடமிருந்தெல்லாம் பிரிய ஆரம்பித்தார்கள். அவர்கள் கலியாணங்கள் இந்தப் பிரிவை முற்றாக்கிவைத்துவிட்டன. அவர்கள் வீடுகளுக்குப் போனால் முன்கதவு வழியாக வரவேற்பு கிடைப்பதெல்லாம் போய்ப் பின்கதவு வழியாகப் போக வேண்டிய நிலைமையாகிவிட்டது. நானும் படித்திருந்து, எங்கள் தாய் தந்தையும் பணக்காரர்களாக இருந்திருந்தால், வித்தியாசமாக இருக்குமோ தெரியவில்லை. எங்கள் சகோதரிகளுக்கும் இந்த வரவேற்புதான். இதையெல்லாம் சட்டை செய்யாத மன வலிவுள் ளவர்களாக என் சகோதரிகள் இருந்தார்கள். இதனாலேயே, முதலில் என் தந்தைக்குக் கவலை வந்து, பின்னர் தாய்க்கும் வந்து ஒவ்வொருத்தராக இறந்து போனார்கள். வாழ்க்கை சூனியமாகிப்போன மாதிரிப் பட்டது.”

“விவரமாகச் சொல்லு. இப்படி மூளியாகச் சொல்லாதே!” அம்பலத்திற்கு சிவத்தின் விவரணைகள் திருப்திகரமாக இல்லை.

“எனக்கு நடந்ததெல்லாம் நடந்திருக்கப்படாது என்பது என் ஆசை. விவரங்களைச் சொல்லி மனக்கவலைப்படவா? எல்லாம் தெரிந்த உனக்கு இந்த விவரங்கள் எல்லாம் எதற்கு?”

“எல்லாம் தெரிந்தால், நான் ஏன் இந்தச் சிறையில் இருக்க வேண்டும்? சிலவற்றை அனுமானிக்கலாம். எல்லாவற்றையும் அறிய முடியாது. நீ இப்போதுதானே சிறைக்கு வந்திருக்கிறாய். போகப்போக இங்கேதான் மிகக் கூர்மையான புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியவரும்.” அம்பலம் சிறிய நகைப்புடன் தாடியைத் தடவிவிட்டுக் கொண்டான். தாடியம்பலம் சொல்லி முடிவதற்குள் சாப்பாட்டு அறையில் ஆரவாரம் எழ ஆரம்பித்தது. எருமைகள் இரண்டும் பெருத்த ஆரவாரத்துடன் சிறைக்காவலன் சங்கரனுடன் அவன் பின்னால் வந்துகொண்டிருந்தார்கள்.

“எங்களுக்கும் சாப்பாட்டைக் கொண்டு வாருங்கள்.” மூத்த எருமை கத்தியது.

“இவர்களுக்கு ஏன் இரண்டாம் முறையும் சாப்பாடு? இவர்கள் வேலைக்கும் வரவில்லை. இங்கே சுகமாக இருந்து விட்டு மறுபடியும் சாப்பிட வருகிறார்கள். இது என்ன நியாயம்?” 326 யாரோ ஒரு கைதி கத்தினான். ஒரு வினாடியில் கைதிகள் யாவரும் ஒன்றுசேர்ந்து கத்தினார்கள். “திருப்பிக் கொண்டு போய் அடையுங்கள் !” கைதிகளின் கூச்சல் சிறையை அதிர்த்தது. அம்பலம் எழுந்துகொண்டு, “அமைதி” என்றான். உடனே கைதிகள் யாவரும் அமைதியானார்கள்.

“சங்கரன்! உனக்கு இவர்கள் எவ்வளவு காசு கொடுத் தார்கள்? போ! இவர்களைக் கொண்டு போய் அடை!” அம்பலம் சங்கரனைத் திட்டினான்.

“சிறையதிகாரி சொல்லித்தான் இவன் எங்களைக் கொண்டு வந்திருக்கிறான். நீங்கள் யாரடா கேட்பதற்கு?” சின்ன எருமையும் பலமாகக் கத்த ஆரம்பித்தது. சொல்லி ஒரு கண் இமைக்கும் நேரத்தில் பக்கத்திலிருந்த கைதிகள் எருமைகளின் குரல்வளை களை நெருக்க ஆரம்பித்தன. எருமைகளின் திமிறல்களை அடக்கவும் ஒரு கூட்டம் சேர்ந்து கொண்டது. மீண்டும் அம்பலம் “அமைதி” என்று கத்திவிட்டு சங்கரனைக் கூப்பிட்டு, “இந்த எருமைகளைக் கொண்டுபோ!” என்று கட்டளையிட்டான். சங்கரன் அவர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டுபோகும் போதுதான் அவர்களை விட்டார்கள்.

“எருமைகளே! உங்கள் அதிகாரம் இங்கு செல்லாது! செல்லவும் விடமாட்டோம்.” கத்திய அம்பலத்தை வெறுப்புடன் பார்த்தபடி, “நாய்களே ! அதிகாரியிடம் உங்கள் அராஜகத்தைச் சொல்லுவோம்! பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப் போகிறது என்று.” சவால்விட்ட எருமைகள் இரண்டும் சங்கரன் பின்னால் இழுபட்டுக்கொண்டு போக ஆரம்பித்தன.

சிவத்தை இந்த ஆரவாரமும் பாதித்ததாகத் தெரியவில்லை . அம்பலத்தின் கொதிப்பு அடங்கவில்லை.

“எது அராஜகம்? சிறைக்குள்ளேயே பணம் கொடுத்து ஒருதரத்திற்கு இரண்டுதரம் சாப்பிட முயல்பவர்களின் திமிரைப் பார். கொலை செய்தவர்கள் அகராதியில் அராஜகம் ஏது?”

இந்தக் குழப்பத்தினால் எழுந்த ஆரவாரம் அடங்க நெடு நேரம் எடுத்தது. சாப்பாடு முடிந்து திரும்பவும் அம்பலமும் சிவமும் அவர்கள் அறைக்குள் விடப்பட்ட போது எருமைகள் இரண்டும் உறுமிக்கொண்டிருந்தன. இவர்களைப் பார்த்தவுடன் எருமைகளின் கோபம் அடங்காது பொங்க ஆரம்பித்தது.

“உங்கள் வன்மையையெல்லாம் அடக்குவோம்! இருந்து பாருங்கள்! பணம் பாதாளம் வரை பாயும்! உங்கள் சாவு இங்கேதான் !” கைவிரல்களை ஆட்டி மூத்த எருமை நாதன் எச்சரித்தான்.

“உங்கள் இருவரின் சாவையும் பார்த்தபின்னர்தான் என் சாவு! உங்கள் சாதகத்தில் சனியும் ராகுவும் கேதுவும் எங்கே எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு என்னடா தெரியும் எருமைகளே !” அம்பலம் உக்கிரமாகச் சிலிர்த்துக்கொண்டான்.

“கிரகங்கள் எங்கே இருக்கிறதென்பதைவிடப் பணம் எங்கே இருக்கிறதென்பதை முதலில் பார்!” – சின்ன எருமை செல்வன் தொடர்ந்தான்.

“எருமைகளே, பணம் உங்களிடம் இருந்து என்ன ஆனது? இங்கே நீங்கள் வருவதைத் தடுக்க முடிந்ததா?” – அம்பலம் தர்க்கத்தில் இறங்கினான்.

“நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று ஒரு கிழமை கழித்துப் பார்!” – செல்வன் மீண்டும் சவாலில் இறங்கினான்.

“ஒரு கிழமை நாட்களில் சனிக்கிழமையும் அடங்கும், தெரியுமா?” அம்பலம் பயமுறுத்தினான்.

“சனிக்கிழமை. சனிக்கிழமை…” சிவம் முணுமுணுக்க ஆரம்பித்தான். “குடைச்சாமிக்குக் கிடைத்த சனீஸ்வரன் மணி. மணியும் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்?”

“சனி என்றால் என்ன, ஞாயிறு என்றால் என்ன… இருந்து பாருங்களடா நாய்களே! உங்களோடு பேசி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்?” நாதன் சிறைக்கதவருகில் சென்று காவலாளி சங்கரனைக் கூப்பிட்டான்.

“அறிவிலிகளே! உங்களுக்கு என்ன தெரியும்?” தாடியம்பலம் பலமாகச் சிரிக்க ஆரம்பித்தான். செல்வன் இதையும் கவனிக் காமல் நாதன் அருகில் போய் நின்றான். இருவரும் மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

“இந்த இழவு பிடித்தவர்கள் இருக்கும் போது உன் கதை வேண்டாம். நாளை பார்க்கலாம்.” அம்பலம் சிவத்திடம் சொல்ல, சிவம் குந்தியிருந்தபடியே கண்களை மூடிக்கொண்டான். களைப்பில் துாக்கம் கலக்கியது.

அம்பலத்தின் கவனம் மறுபடியும் கூடிப் பேசிக்கொண் டிருந்த மூவர்மேல் விழுந்தது. “சங்கரன்! இவர்கள் காசுக்கு ஆசைப்படாதே! உனக்குப் பேராபத்து பின்னர் வந்து சேரும். நீ போய்விடு. போ!” அம்பலத்தின் கத்தலில் சிவம் கண்களைத் திறக்கும்படியாயிற்று. அம்பலத்தின் வாக்குவாதங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

அம்பலத்தின் எச்சரிக்கையைக் கேட்டு சங்கரன் பின் வாங்கிக் கொண்டான்.

“சங்கரன் நில்! நில்!” கதவுகளைப் பற்றியபடி நாதன் திரும்பிப் போய்க் கொண்டிருந்த சங்கரனை அழைத்தான். சங்கரன் முடியாதென்று தலையை ஆட்டி விட்டுப் போய்விட்டான். எருமைகளின் கோபம் அம்பலத்தின் மேல் தொடர்ந்தது. அவனைத் தாக்கினால் மறுபடியும் காவலாளிகள் தாக்கக்கூடும்.

“நீ யாரடா சங்கரனுக்குக் கட்டளையிடுவதற்கு? உன் னைத் தொலைத்துவிடுவோம்!” செல்வன் கத்தினான்.

“சனிக்கிழமை தாண்டியதன் பின் செய்து பாருங்கள்.” அம்பலம் இந்த முறை அமைதியாகவே சொன்னான்.

சிவம் ஆச்சரியமடைந்தான். “ஏன் சொல்லுகிறாய்?”

“இதுவெல்லாம் விபரிக்கிற விஷயங்கள் இல்லை. போய்ப் படுத்துத் துாங்கு.” அம்பலம் இந்த உலகத்தைத் தன் காலடியின் கீழே வைத்திருக்கும் சக்தி உள்ளவன் போல் சொன்னான்.

“வெளியில் அந்தக் குடைச்சாமி, உள்ளே நீ ஒரு தாடிச் சாமி – உங்கள் பாட்டிற்குப் பூடகம் பேசுவதற்கும் பண்ணுவ தற்கும் .” சிவம் முணுமுணுத்துக்கொண்டான். அவன் புலம்பல் எருமைகளுக்கும் கேட்டது.

“என்னது? இவன் சாமியாரா?” சிவத்தின் கேள்விக்குப் பின்னரே, அம்பலத்தின் மறுமொழியில் அர்த்தம் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்த செல்வனும் நாதனும் தங்கள் அதிர்ச்சியை அடக்க முயற்சித்தார்கள்.

“அவனையே கேள்.” சிவம் அலுத்துக்கொண்டு கண்ணயர முயற்சித்தான்.

நாதனும் செல்வனும் மெல்ல அம்பலத்தின் அருகில் போய் உட்கார்ந்தார்கள்.

“நீ… நீங்கள் சாமியாரா?”

அம்பலம் சிரிக்க ஆரம்பித்தான். அம்பலத்தின் சிரிப்பைப் பார்த்து இம்முறை எருமைகளால் கோபப்பட முடியாது இருந்தது.

சிரிப்பு அடங்கிய பின்னர் அம்பலம் தாடியை ஒருமுறை தடவிவிட்டுக்கொண்டு காலைச் சம்மணம் இட்டுக்கொண்டு நிதானமான குரலில் சொல்ல ஆரம்பித்தான்.

“நான் சாமியாரும் இல்லை, சாத்திரக்காரனும் இல்லை. நானும் உங்களைப் போல் ஒரு சிறைக் கைதி.”

“எங்களைப் போல் ஒரு கைதி என்று சொன்னால்… நீ… நீங்களும் தப்பிவிடுவீர்களா?”

அம்பலம் சிலிர்த்துக் கொண்டான். “நீங்கள் தப்புவதா? இல்லை, இல்லை! உலகத்தையே கொள்ளையடித்து ஒருவ னைக் கொலையும் செய்துவிட்டு வந்திருக்கிற மிருகங்கள் நீங்கள். நீங்கள் தப்புவதா… இல்லை நடக்காது.” அம்பலம் கத்தினான்.

நாதனும் செல்வனும் தங்கள் கடும் கோபத்தை அடக்கிக் கொண்டார்கள். “தாடி அம்பலத்தைக் கோபித்துக்கொள்ள முடியுமா” என்பதை முதலில் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்று பட்டது.

“இருந்து பார்!” என்று தங்கள் மூலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

குட்டித்துாக்கம் கைதிகள் யாவரையும் ஆட்கொண்டது.

அம்பலம் எழுந்தபோது சிறையில் மின்விளக்குகள் போடும் நேரமாகியிருந்தது. இடப்பக்கத்துச் சிறை அறையில் இருந்து கணபதி அம்பலத்தைக் கூப்பிட்டான். அவன் சத்தத்தின் வலிவில் மற்றவர்களின் தாக்கமும் கலைந்தது. அம்பலம் பிறகு பேசிக்கொள்ளலாமென்று சொன்னான். சிறை அறைகளின் தடுப்புகளை மீறும் விதமாக கைதிகள் ஆளையாள் கூப்பிட்டுக் கொள்ளும் சப்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டு வந்தன. அம்பலம் தன் தலைமாட்டில் இருந்த சுண்ணாம்புக் கட்டியை எடுத்துக் கணக்குகள் போடுவதில் இறங்கினான். சிவம், அம்பலம் இனியாவது என்ன கணக்குகள் போடுகிறா னென்று சொல்லுவான் என்ற நம்பிக்கையுடன் துருவிக் கேட்க ஆரம்பித்தான்.

“என்ன கணக்குகள் போடுகிறாய்?”

அம்பலம் இந்த முறை கோபமடையவில்லை. எல்லாம் எனக்கு நடப்பவற்றைப் பற்றித்தான். எனக்கு நடப்பவற்றில் நீயும் இருக்கிறாய் – இதோ, இந்த எருமைகளும் இருக்கின்றன, சங்கரனும் இருக்கிறான், இடப்பக்கத்து அறையில் கணபதியும் சின்னத்துரையும் இருக்கிறார்கள், வலப்பக்கத்து அறையில் லிங்கமும் ஆறுமுகமும் இருக்கிறார்கள்…”

“நிறுத்து! சொல்லாதே ! சொல்லாதே…!” குடைச்சாமியின் பரிசோதனகள் அவன் ஞாபகத்துக்கு வந்து, சிவம் வேர்க்க ஆரம்பித்தான்.

அம்பலம் தரையில் போட்ட தன் கிறுக்கல்களை ஒரு சிறு துணித்துண்டினால் அழித்துக்கொண்டான்.

“ஏன்? ஏன்…” அம்பலம் அமைதியாகத்தான் கேட்டான்.

தலையை, “முடியாது” என்று ஆட்டி விட்டு சிவம் முகத்தை மூடிக்கொண்டான். அம்பலம் “இவன் மனதை என்ன சொல்லித் திறக்கலாம்” என்கிற யோசனையில் ஆழ்ந்தான்.

“நான் சொல்லட்டுமா?” அம்பலம் தன் தாடியைத் தடவி விட்டுக்கொண்டான். சிவத்தை இந்த சவால் தாக்கி இருந்திருக்க வேண்டும்.

“நீயும் உன் சக்தியும். குடைச்சாமி, என்னை ஒரு “கேது” என்று சொன்னார். உனக்கு நான் கேதுவா, ராகுவா அல்லது சனியா?” சிவம் கத்த ஆரம்பித்தான்.

அம்பலம் மெல்லிய சிரிப்புடன் தாடியைத் தடவிக் கொண்டான்.

“சனி, சனியாக எல்லா நேரத்திலும் இருப்பதில்லை. ராகு எல்லா நேரத்திலும் ராகுவாக இருப்பதில்லை. கேது எல்லா நேரத்திலும் கேதுவாக இருப்பதில்லை. அதை உன் குடைச்சாமி சொன்னாரா?”

குடைச்சாமி அதிகம் பேசுவதே கிடையாது. அவர் கண்ணில் தோன்றிய ஒளியினால் அவரிடம் போய் மாட்டிக்கொண்டேன். தினமும் அவர் கண்களில் நான் பட வேண்டும் என்று தோன்றியது. பட்டு, அவர் அருள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை 330 இருந்தது .’ சிவத்துக்குப் பழைய நினைவுகள் ஓங்கின.

“எந்த நேரத்தில் உன்னை ஒரு கேது என்று குடைச்சாமி சொன்னார்?” அம்பலத்திற்கு சிவத்தின் பிரச்சினைகளைத் தீர ஆராய வேண்டும் என்கிற அவா பொங்க, தான் செய்வது

ஞானபூர்வமில்லாதது என்று தெரிந்தும் அவசரப்பட ஆரம்பித்தான்.

“என் தம்பிமாரைப் பற்றிச் சொன்னேன். அதிலிருந்து சொன்னால் தான் உன்னால் எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ள முடியும்…” சிவம் தொண்டையைக் கனைத்துக்கொள்ள, சாப்பாட்டு மணி அடிக்கத் தொடங்கியது.

“இன்று இந்தக் கதை இவ்வளவுதான்.” அம்பலம் தாடியை வருடியபடி எழுந்தான்.

“எனக்கு வாழ்க்கை …. உனக்குக் கதையா?” சிவம் அலுத்துக் கொண்டான். கோபப்படுவது அர்த்தமில்லாதது. கோபப்படு வதற்கான தராதரம் தனக்கில்லை என்ற உணர்வு சிவத்தை எப்போதோ ஆட்கொண்டுவிட்டது. எல்லோரும் உணவுக்காக நின்று கொண்டிருந்தபோது,

“யார் இந்தக் குடைச்சாமி?” நாதன், சிவத்தைக் குடைய முயற்சித்தான்.

சிவம் ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள், “நாய்க்கு ஏன் போர்த்தேங்காய்?” என்று அம்பலம் எருமைகள் மேலுள்ள தன் காழ்ப்பைக் கொட்டினான். செல்வனுக்குக் கோபம் பொங் கலானது.

“ஏன், உனக்குத்தான் எல்லாம் தெரியுமே! நீயே அதற்கு ஒரு விடை சொல்லு பார்க்கலாம்.”

அம்பலம் மறுமொழி சொல்ல ஆரம்பிப்பதற்குள், சிவம் நாதனுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.

“திருப்பியும் சொல்கிறேன். இது நேரத்தை வீணாக்கும் முயற்சி.” அம்பலம் சிவத்துக்கும் அறிவுரை சொல்ல முயற்சித்தான்.

“நீ ஏன் அவனைத் தடுக்கிறாய்?” செல்வன் மறுபடியும் கோபிக்கலானான்.

சிவம் பொறுமையாக பதிலளிக்கத் தொடங்கினான். எருமைகளும் கேட்டுக்கொண்டன. அம்பலம் இடையிடையில் எருமைகளைக் கேலி பண்ணும் தொனியில் தன் இடைச் செருகல்களை எறிந்து, முன்னேயும் பின்னாலும் நின்றுகொண் டிருந்தவர்களின் சிரிப்புகளைப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டான். சாப்பிடும் போது தாடியம்பலம் சிவத்திடம்,

“இனி உன்னிடம் நாளைதான் விபரங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். குடைச்சாமி என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது. பிரச்சினை, உன் தம்பிமார் என்ன சொன்னார்கள் என்பதுதான்.”

சிவத்துக்குத் திரும்பவும் மாரில் ஊசி குத்தியது. “அதைச் சொல்ல இன்று எனக்குச் சக்தியில்லை. நாளைதான் நல்லது.” சிவம் அலுத்துக்கொண்டான்.

அம்பலம் தன் சாப்பாட்டு மேசைக்கு முன்னால் சாப் பிட்டுக்கொண்டிருந்த பழைய சகபாடிகளுடன் தன் சம்பாஷ ணைகளை உற்சாகமாகத் தொடர்ந்தான். சிறையில் எல்லா விதமான நேரமும் இருப்பதை சிவம் பார்த்துக்கொண்டான்.

“நாளைக்கு எங்கே கூட்டிக்கொண்டு போவார்கள்?” அம்பலத்தை யாரோ கேட்டான்.

“வெறும் கல்லுடைப்பாய்த்தான் இருக்கும். பாதைக்குக் கொண்டு போவார்களோ தெரியாது. மழையென்றால் சிறை அறையிலேயே இருக்க வேண்டியதுதான்.” அம்பலத்திற்கு அதுவும் உகப்பானதுதான்.

“நாளைக்குக் கல்லுடைப்பு என்றால், என்ன செய்யப் போகிறீர்கள், எருமைகளே?” அம்பலம் திரும்பவும் சீண்டலில் இறங்கினான்.

வெடுக்காக ஏதோ பதில் சொல்ல முயன்ற செல்வனை, நாதன் அடக்கினான். “பார்ப்போம்” என்றான்.

சாப்பாடு முடிந்து எல்லோரும் தங்கள் அறைக்குப் போகும் நேரம், “நாளை வியாழன்” என்றான் அம்பலம். அதை யாரும் சட்டை செய்யும் நிலையில் இல்லை.

அன்றிரவு அம்பலத்தின் கணக்கும் இல்லை. எருமைகளுடன் சண்டையும் இல்லை. சிவத்துக்கு நன்றாகத் தாக்கம் தாங்கியது.

வியாழக்கிழமை காலை சிவம் எழும்பியபோது, அம்பலம் மறுபடியும் கணக்கில் ஆழ்ந்திருந்தான். எருமைகள் தூக்கத்தில் இருந்தன. “இன்றும் நேற்றையைப் போல் ஒருநாள் பொழுது” என்று யோசித்தபடியே காலைக்கடன் முடிக்கப் போனான்.

“இன்று நாள் பொழுது வேறுபடியாகப் போகும்.” அம்பலம் தலையை எடுக்காமலே சொன்னான். சிவத்திற்கு அம்பலத்தின் பிரகடனங்கள் ஆச்சரியத்தை அளிப்பது நின்றுபோகத் தொடங்கி யிருந்தது.

எருமைகளுக்கு, அன்று மற்றவர்களுடன் எழும்பி, காலை உணவிற்குப் போகும்படியாகிவிட்டது. காலை உணவிற்கு எல்லோரும் நின்று கொண்டிருந்தபோது, சங்கரன் நாதனிடம் வந்து, “நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். இன்று நீங்கள் வேலைக்குப் போகவேண்டியதுதான். சின்ன வேலையாக ஏற்பாடு செய்கிறேன்” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டுப் போய் விட்டான். செல்வன் : “எங்கே கூட்டிக்கொண்டு போகப் போகிறார்கள்?” கேட்பதற்கு முன்னரே சங்கரன் போய்விட்டான். அதட்டும் குரலில் முன்னாலும் பின்னாலும் நின்றவர்கள், “சங்கரன் என்ன சொன்னான்” என்று நச்சரிக்க ஆரம்பித்தபோது, “போய்த் தொலையுங்கள்!” என்று செல்வன் பதிலளிக்க, “ஏய் அம்பலம்! இவன் சொல்வதைக் கேள் !” ஒருவன் உணவுக் கோட்டில் முன்னால் நின்றுகொண்டிருந்த அம்பலத்திடம் கத்திச் சொன்னான்.

“என்னவாம்?” அம்பலம் பதிலுக்குக் கத்தினான்.

“சங்கரன் மறுபடியும் காசு வாங்கிக்கொண்டு இவர்களுக் குச் சகாயம் செய்கிறான். ஏதோ நடக்கிறது இங்கே!” என்று பின்னால் நின்றவன் கத்தினான்.

எருமைகளுக்குக் கோபம் மேலோங்கி அவனைத் தாக்கின. சிறைக்காவலர்கள் தாக்கப்பட்டவனைப் பிடித்துக்கொண்டு போக முயற்சித்தபோது, சூழ்ந்திருந்த கைதிகளுக்குக் கோபம் வந்து எல்லோரும் கத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் கத்தலைக் கேட்டு அதிகாரி ஒருத்தன் வந்து விசாரித்தான். அம்பலம், “இது என்ன நியாயம்? காசை வாங்கிக்கொண்டு அந்த எருமைகளுக்குச் சகாயம் செய்ய முயல்கிறான் உங்கள் காவலாளி. கேட்டவனை அடிக்கிறார்கள், அந்த மூளையில்லாத எருமைகள். அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவனைப் பிடித்துக்கொண்டு போகப் பார்க்கிறார்கள். இதை நிறுத்தவில்லையென்றால், அடுத்த நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்!” என்று கத்தினான். அதிகாரி சிறைக்காவலர்களிடம் அவனை விடச்சொல்லிவிட்டுப் போனான். “இது உங்கள் இராச்சியமில்லை !” என்று அம்பலம் கத்தினான். எருமைகள் அமைதியாக உணவுக்கோட்டில் நடக்க ஆரம்பித்தன.

காலை உணவு முடிந்து, பஸ்ஸில் எல்லோரையும் ஏற்றிச் செங்கல் சூளைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். செங்கற் களைச் சூளையிலிருந்து அடுக்கும் வேலை. எருமைகள் தலை யிலும் செங்கல்லைச் சுமத்தினார்கள். அம்பலம் சிவத்தின் அருகில் நின்று வேலை செய்ய ஆரம்பித்தான். அவன் பார்வை எருமைகள் மீதே இருந்தது. அவர்கள் தலையில் செங்கல் கூடை ஏற்றிவிடப்பட்டபோது, அம்பலத்தின் சந்தோஷத்திற்கு அள வில்லை. அம்பலத்தை அன்று ஒருவரும் சாத்திரம் பார்ப்பதற்குத் தொந்தரவு செய்யவில்லை. அம்பலம் மிகுந்த உற்சாகத்துடன் கற்களைக் கூடையில் அடுக்கிவிட ஆரம்பித்தான். கற்கள் அடுக்குவோரெல்லாம் வேலைக் களைப்புப் போகத் தங்களுக்குள் சம்பாஷிக்க ஆரம்பித்தார்கள். சங்கரன் எவ்வளவு காசு வாங்கிக் கொண்டு எருமைகளுக்கு உதவி செய்கிறான் என்பதைப் பற்றிய அனுமானங்கள், காவலாளிகளின் தொந்தரவுகள், அதிகாரிகளின் ஊழல்கள் இவற்றைத் தொடர்ந்து, சிவத்தைப் பற்றியும் விவா தித்துக் கொண்டார்கள். என்ன செய்து, சிவம் சிறைக்குள் வந்திருக்கிறான் என்பதை அறிய எல்லோரும் ஆவலாக இருந் தார்கள். அம்பலத்தின் சிறை அறையில் இப்பொழுது ஒன்றுக்கு மூன்று பேரைப் போட்டிருக்கிறார்கள். அம்பலம் இலகுவில் ஒன்றையும் தீர்க்கமாக விபரிப்பதில்லை.

“சிவம் ஒரு சாமியாரால் ஏமாற்றப்பட்டிருக்க வேண்டும். ஏதாவது கொலை நடந்ததா என்று தெரியவில்லை. ஒரு வீடு எரிந்த மாதிரித் தெரிகிறது. கேட்டுத்தான் சொல்ல வேண்டும். சிவம் இன்னும் ஒருவகை அதிர்ச்சியில் தான் இருக்கிறான்.”

“உனக்கே தெரியவில்லை என்றால், இது மிகவும் சிக் கலான விஷயமாக இருக்க வேண்டும். பெரிய குற்றம் இல்லை என்றால், இங்கு ஏன் அனுப்புகிறார்கள்? என்று ஒருத்தன் சொன்னான்.

அம்பலம் , “பொறுத்துக் கேட்கலாம்” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையில் ஆழ்ந்தான். ஆனால், அவன் அவாவும் அடங்க வில்லை. “குடைச்சாமி ஒரு தனிச்சாமி” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

எல்லோருக்கும் ஒருமணி நேரம் ஓய்வு கொடுத்தார்கள். ஒரு காவலாளி தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டி ருந்தான். அம்பலம், சிவத்தின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டான். எருமைகளும் பக்கத்தில் வந்து இருந்தன. அம்பலத் திற்கு எரிச்சலாகத்தான் இருந்தது. சிவம் தன்மேல் பட்டிருந்த செங்கல் துாள்களைத் தட்டி விட்டுக்கொண்டிருந்தான்.

“உன் தம்பி மாரைப் பற்றிச் சொல்வேன் என்று சொன் னாயே. இப்போது சொல்லேன்” என்று அம்பலம் சிவத்தைத் துாண்டினான்.

“என்ன சொல்வது? எப்படிச் சொல்வது?” சிவம் அலுத்துக் கொண்டான்.

“குடைச்சாமியிடம் எப்படிப் போய்ச் சேர்ந்தாய் என்று கேட்டேன். உன் தம்பிகளைப் பற்றிச் சொன்னால் தான், அது புரியும் என்றாய். குடைச்சாமி என்ன செய்தார் என்பதுதான் அறியவேண்டியதொன்றுபோல் தோன்றுகிறது.”

“பார்த்தாயா? இந்தத் தம்பிமாரின் கூத்துகளினால் இந்தச் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறேன். சாகும் வரை இதுதான் என் இடம். குடைச்சாமியின் தத்துவ பரிசோதனை என்ன என்பதே உனக்கு முக்கியம். எனக்கு நடந்தவைகள் முக்கியமில்லையா?” சிவம் சுயபரிதாபக் கடலில் மூழ்கப் பிரயாசித்தான்.

“ஏ முட்டாளே! எத்தனைதரம் நான் உனக்குச் சொல்வது? நடப்பவையெல்லாம் தனித்தனியாக நடப்பவையல்ல. எல்லாம் தொடர்புள்ளவையாகவும் தொடர்ச்சியாகவும் நடக்கும். பார்த்தாயா? குடைச்சாமியுடன் எனக்கும் உன் மூலமாகத் தொடர்பு வந்துவிட்டது. குடைச்சாமி என்ன பரிசோதனை செய்து, இந்தச் சாக்கடைக்குள் நீ வந்து சேர்ந்தாய் என்பதை அறியத்தான் கேட்டேன். குடைச்சாமியின் பரிசோதனைக்குள் உன் தம்பிமார் செய்த கூத்துகளினால் தான் மாட்டிக்கொண்டாய் என்று நீயே சொன்னாய். இல்லையா? எல்லாவற்றிற்கும் தொடர்புகள் உண்டு.” அம்பலத்தின் குரலில் பொறுமையின்மை யும் இருந்தது. அதே நேரத்தில் சிவத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையிருந்ததான உணர்வும் இருந்தது.

சிவத்திற்குச் சம்பவங்களின் தொடர்புகளை ஆராயும் மனநிலை இல்லை. எப்படிக் குடைச்சாமியிடம் தான் போனேன் என்பதைச் சொல்லுவோம் என்று தொடர்ந்தான்.

“இரண்டு எஞ்சினியர் தம்பிகளில் மூத்தவன் கருணா 334 கரன். அவனைக் கரன்” என்று செல்லமாகக் கூப்பிடுவோம். இளையவன் மகேந்திரன். அவனை “இந்திரன்” என்று கூப்பிடு வோம். அந்த மருத்துவனான தம்பியின் பேர் மனோகரன். எல்லோருக்கும் தம்பி ஆனபடியால், “தம்பி” என்பதே அவன் பேராகிவிட்டது. வளர்ந்து பெரிய ஆளானதின் பின்னர் அவர் களை எப்படிக் கூப்பிட முடியும்? பெரிய இடங்களில் அவர்கள் கலியாணம் செய்து, பெரிய வீடுகளில், பெரிய வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்கள். என் தாய், தந்தை இவர்கள் வாழ்வின் வளர்ச்சியைப் பார்ப்பதற்கு முன்னரே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நான்தான் அவர்கள் வாழ்க்கைத் தொடக் கத்தின் ஒரே நகரம் என்றாலும், ஒவ்வொருவர் வீடும் தொலைவில் இருந்தது. நான் கிராமத்திலிருந்து போனால், சிலவேளைகளில் ஒரேநாளில் எல்லோரையும் பார்த்துவிட முடியாது. அவர்கள் மனைவிமார் எல்லோரும் வேலைக்குப் போய் வந்து கொண் டிருந்தார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு குழந்தை ஒரு தம்பியின் குடும்பத்தோடு ஒரு நாள் என்ற கணக்கில் மூன்று நாளில் திரும்பி விடுவேன். தம்பியர் மனைவிகளுக்கு என்னையும் பிடிக் காது, என் சுருட்டையும் பிடிக்காது. ஊருக்குப் போய் மணியுடன் சாராயம் குடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தவுடன் போய் விடுவேன். முதலில், இவர்களிடம் போனால் நன்றாகத்தான் என்னைக் கவனித்துக் கொண்டார்கள். “ஊரில் என்ன நடக்கிறது” என்று விசாரிப்பார்கள். அப்பா, அம்மா இருந்தபோது அவர்களை, சகோதரிகள் எல்லோரையும் பற்றி விசாரிப்பார்கள். முதலில் நான் போன நேரம் சனி, ஞாயிறு என்றால் சிலவேளைகளில் கரன், இந்திரன் குடும்பங்களை ஒருவர் வீட்டிலேயே பார்க்க முடியும். பின்னர், நாட்கள் போக, அவர்களுக்குள் என்ன பூசலோ தெரியவில்லை. கரன் வீட்டிற்குப் போனால் தம்பி, இந்திரன் குடும்பத்தார் எப்படியிருக்கிறார்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள். இந்திரன் வீட்டிற்குப் போனால் தம்பி, கரன் குடும்பத்தார் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார்கள். நீங்கள் நகரத்திலேயே இருக்கிறீர்கள். நான் ஊரில் இருந்து வந்து உங்களுக்கு மற்றவர்கள் விவரம் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டால், அதுவும் பிடிப்பதில்லை. பொருட்கள் சேகரிப் பதில் அவர்களுக்குள் போட்டி விவரங்களை என்னிடம் இருந்து அறிவதற்குத்தான் அப்படி கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததை நான் சொல்லுவேன். ஆளுக்காள் சண்டையும் பிடித்துக்கொண்டு, நான்தான் அவரவரிடம் “அதைச் சொன்னேன், இதைச் சொன்னேன்” என்று வேறு சொல்ல ஆரம்பித்தார்கள். நான் எல்லோர் வீட்டிற்கும் போவதால், எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும் என்கிற கணக்கு இருந்திருக்கலாம். “இப்படி ஒரு படிக்காத சகோதரன் இருக்கிறான்” என்ற மரியாதைக்குறைவாகவும் இருக்கலாம். எனக்கு வாழ்க்கையில் இருந்த பிடிப்பெல்லாம் இவர்கள்தான். இவர்கள் போட்டியின் சூட்டில் இவர்களை ஒரு நிலைக்குக் கொண்டுவர நான் பட்டபாடுகளெல்லாம் அவர்கள் மனதில் சாம்பலாகிப் போயிருந்தது தெரிந்தது. இவர்களிடம் நான் போய்க்கொண்டிருந்தது அவர்கள் வாழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருநாளும் இல்லை . என் மனதில் சிறிது ஈரம் இருந்தது. அந்த ஈரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகப் போய் வந்து கொண்டிருந்தேன். அதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. படித்து வேலை பார்த்து நன்றாக வாழ்கிறவர்கள் போல் இருக்கிறவர்கள் எல்லோருடைய சுய நலத்தையும் பார்க்க அருவருப்பு எழ ஆரம்பித்தது.” சிவம் ஒரு கணம் நிறுத்தினான். அவனுக்குத் தாகம் எடுத்தது.

நாதன் செல்வனிடம் “இந்தப் புலம்பல்கள் எங்களுக்குச் சரிவராது, வா போகலாம்” என்று சொல்லி அவனைக் கூட்டிக் கொண்டு போனான். தாடியம்பலம் தாடியை வருடிக்கொண்டு சிவம் சொன்னவற்றை அசைபோட்டபின்னர் மெல்லியதாகச் சிரித்தான். “படித்து வேலை பார்ப்பவர்களைப் பற்றிச் சொன்னாயே உண்மைதான். அறிவுக்கும் படிப்பிற்கும் வெகுதுாரம் என்கிற நிலையாகிவிட்டது.” அம்பலத்தின் கண்கள் எங்கோ வானத்தில் பதிந்தன.

‘நான் எப்படிச் சிறைக்கு வந்தேன் என்பதை நல்ல வேளை யாரும் கேட்கவில்லை.’ அம்பலத்தின் சிந்தனையைக் கலைக்கும் விதமாகத் துாரத்தில் யாரோ உரத்த குரலில் விவாதிக்கும் சப்தம் கேட்டது. சிவமும் அம்பலமும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். காவலுக்கு இருந்தவனும் தன் துப்பாக்கியைச் சரிசெய்து கொண்டு நோக்கினான்.

எருமைகள் தான்!

அம்பலம் சிலிர்த்துக்கொண்டான். “எருமைகள் பன்றி களாகவும் மாறப்பார்க்கின்றன. சோம்பேறிகள் ” என்று சிவத் திடம் சொல்லிவிட்டு, “அவர்கள் தலையில் இன்னும் இரண்டு கூடை செங்கல் அடுக்குங்கள் !” என்று கத்தினான்.

“சரி! சரி! எல்லோரும் மறுபடியும் வேலையைத் தொடங் கலாம்” என்று காவலாளி உத்தரவிட்டான். “இந்த எருமைகள் தொடர்புக்கணக்கில் வக்கிரமாக மாட்டிக்கொண்டிருக்கின்றன. இருந்து பார்” என்று சிவத்திடம் சொன்னான்.

“எனக்கு விளங்கவில்லை” என்று சிவம் நடக்க ஆரம்பித்தான். “கவலைப்படாதே. நான் அறுதலாக விளக்குகிறேன்” என்று அம்பலம் மண்ணைத் தட்டிக்கொண்டு வேலயில் ஈடுபட ஆரம்பித்தான்.

அன்று வேலை முடிந்து மதிய உணவு சாப்பிடக் கைதிகள் உட்கார்ந்தபோது இரண்டரை மணியாகிவிட்டது. எல்லோரும் களைப்படைந்திருந்ததில், அதிகம் பேச்சில்லாமல் சீக்கிரம் சாப்பிட்டுச் சிறையறைகளில் தூங்க ஆரம்பித்தார்கள். எருமை களின் குறட்டை வெகுதுாரம் எதிரொலித்தது. பக்கத்து அறைக் காரர்கள், “இவர்கள் வாயில் துணியை அடையுங்கள்” என்று கத்தினார்கள். குறட்டையைக் களைப்பு வெல்ல, எல்லோரும் பகல் தூக்கத்தில் இறங்கினார்கள்.

அன்றிரவு, சாப்பாட்டு மேசையில் நான்கு கைதிகள் தள்ளி இருந்த எருமைகளுடன் அம்பலம் மறுபடியும் விவாதிக்க ஆரம்பித்தான்.

“நான் சொன்னேனே உங்கள் அதிகாரம் இங்கே செல்லாது என்று. கேட்டீர்களா? மத்தியானம் காவல்காரரிடம் அடி வாங்கியும் உங்களுக்கு இன்னும் அறிவு வரவில்லை .”

“மத்தியானம் ஒருத்தரும் எங்களை அடிக்கவில்லை. இந்த லஞ்சப் பிசாசுகள், கொடுத்த காசு காணாது என்று சண்டை பிடிக்கிறார்கள். மந்திரியிடம் இன்றல்லது நாளை பணம் கொண்டு போய்க் கொடுப்பார்கள். இந்த லஞ்சப் பிசாசுகளுக்கு வேலை ஆட்டம் காணப்போகிறது. இன்னும் இரண்டு நாட்களில் பார், என்ன நடக்கப்போகிறது என்று.”

“உண்மைதான், இரண்டு நாட்களில் பல விஷயங்கள் நடக்கலாம். நீங்கள் இவர்களை லஞ்சப் பிசாசுகள் என்று திட்டுவதுதான் கேலிக்குரியதாக இருக்கிறது. நீங்கள் செய்யாத அக்கிரமமா?”

“எங்களைப் பற்றி உனக்கு என்னடா தெரியும்? நீயும் உன் நக்கலும். இருந்து பார்!” நாதன் அம்பலத்திடம் விரலை ஆட்டிப் பயமுறுத்தினான்.

அம்பலம் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினான். சிரிப்பலை பல திசைகளிலும் பரவியது. எருமைகள் இந்த முறை சிலிர்த்துக் கொள்ளவில்லை. சிறையில் சிரிப்பலை பரவக் காரணம் தேவை யில்லை என்று சிவத்துக்குத் தோன்றியது. அம்பலத்தைக் கேட்டான்.

“என்னத்திற்குச் சிரிக்கிறாய்?”

“இவர்களின் நிச்சயம் உனக்குச் சிரிப்பைத் தரவில்லையா? மந்திரிக்கு லஞ்சம் கொடுத்து விடுதலை வாங்கிக்கொள்ள இது என்ன கத்திரிக்காயா?” அம்பலம் தன் சிந்தனைத்தொடரை வேறு பாதையில் திருப்பினான். “எருமைகளுக்கு இந்தச் சின்ன விஷயமும் தெரியவில்லை – எல்லா விஷயத்தையும் எங்களால் நிச்சயிக்க முடியாது.”

சிவம் குழப்பமடைந்தான். “ஆனால்…. ஆனால்…. நீ சொல்ல வில்லையா – இயற்கைச் சக்தி தாயக்கட்டை உருட்டுவதில்லை என்று .”

அம்பலம் சிறுநகை புரிந்தான். “ஏய், நீ விவரம் புரிந்த வனாகத்தான் இருக்கிறாய்! குடைச்சாமி சும்மா உன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை.”

“குடைச்சாமி இருக்கட்டும். நீ விஷயத்தைச் சொல்.” சிவம் ஒரு நல்ல பதிலை உடனே எதிர்பார்க்கலானான்.

“எல்லாச் சம்பவங்களும் எங்கள் கட்டுப்பாட்டில் நடப்ப தில்லை என்றால், சம்பவங்கள் எப்படியும் போக்கற்று, தாயக் கட்டை உருட்டுவதுபோல் நடக்கலாம் என்பதில்லை. சம்பவங் களுக்குள் ஒரு காரணகாரியத் தொடர்பு இருக்கும். நீ நடந்து போகும் போது கல் தடக்கினால், “எங்கேயோ பார்த்துக்கொண்டு நடந்து வந்துவிட்டேன்” என்று ஒரு காரணம் சொல்லத் தெண் டிக்கமாட்டாயா?”

“எப்படி, அவ்வாறு எங்கேயோ நான் பார்த்துக் கொண்டு வரலாயிற்று என்று திருப்பிக் கேட்டால்?” சிவம் தருக்கக் கோட்டை கிரமமாகத் தொடர்ந்தான்.

“அதற்கும் ஒரு காரணம் சொல்ல முடியும். நீ நடக்கத் தொடங்குவதற்கு முன் என்னை , “நான் தடுக்கி விழுவேனா?” என்று கேட்டால், அதற்குச் சாத்திரம் சொல்ல முடியாது. நீ அவ்வாறு கேட்க முயலும் போதே சம்பவத்தொடரின் திசை மாறிவிடும். மனித வாழ்க்கையில் எவ்வளவோ குழப்பங்கள் இருந்தாலும், ஒரு கணக்கிலும் தீர்மானத்திலிருந்தும் தப்ப முடியாது…” அம்பலம் ஒரு கவளம் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட போது மணியடித்தார்கள். அதிகாரி ஒருத்தன் சிறையில் சுகாதாரமாக இருக்க வேண்டியதைப் பற்றி பேசத் தொடங்கினான். கைதிகள் தங்கள் பாட்டில் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு மேல் நோக்கிச் சுடப்பட்ட துப்பாக்கிச் சத்தம் அவர்களை அமைதிப்படுத்தியது.

“எங்கள் கதையைப் பிறகு தொடரலாம்.” அம்பலம் சிவத்திடம் சொல்லிவிட்டு அமைதியானான். அதிகாரியின் பேச்சு முடிந்தவுடன், மறுபடியும் கைதிகள் தங்கள் சம்பாஷ ணைகளைத் தொடர்ந்தார்கள். சிறையறையில் பின்னால் எல்லோரும் கொண்டுபோய் விடப்பட்ட போது, அம்பலம் தன் கணக்குகளை சுண்ணாம்புக்கட்டியை எடுத்துக்கொண்டு தொடர்ந்தான். சிவம் சிறைக்கதவுகளைப் பற்றியபடி அந்தச் சிறையின் சூழலை ஒரு புதிய சுயஉணர்வுடன் அனுமானித்துக் கொள்ள முயற்சித்தான். எருமைகள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தன. சிறை அதிகாரி ஒருத்தன் இவர்கள் அறைக்கு வந்து, “எங்கே அம்பலம்?” என்றான். அவன் கையில் துண்டுக் காகிதம் ஒன்று இருந்தது. அம்பலம் தன் கணக்கிலிருந்து வெளிவந்து அதிகாரியைப் பார்த்தான்.

“உன்னால் இப்போது என்னுடன் வரமுடியுமா?” அதிகாரி கேட்டான்.

“இந்த அறையிலிருந்து ஒரு மணியாவது வெளியே போவது நல்லதுதான்” என்று சொல்லிக்கொண்டே அவருடன் புறப்பட்டான்.

எருமைகள், “எங்கே இவனைக் கூட்டிக்கொண்டு போகி றீர்கள்?” என்று கேட்டன. “வாயை மூடு” என்று சொல்லிக் கொண்டே அதிகாரி அம்பலத்தைக் கூட்டிக்கொண்டு போனான். சிறையறையின் இரும்புக் கதவுகள் மூடப்படும் சத்தம், கைதிகளின் சம்பாஷணை ஒலியை மீறி எழுந்தது. அம்பலம் போனவுடன் காவல் சங்கரன் வந்தான். எருமைகள், சங்கரனைக் கண்டவுடன் சிறைக்கம்பியை ஒட்டிக்கொண்டு, அவனை விவரங்கள் கேட்க ஆரம்பித்தன.

“எங்கே, என்னத்திற்காக அம்பலத்தைக் கூட்டிக்கொண்டு போகிறார்கள்?”

சங்கரன் விளக்கினான். “அதிகாரி அம்பலத்தைக் கூட்டிக் கொண்டுபோவது சாத்திரம் பார்க்கத்தான்.”

“உத்தியோக உயர்வு, பிள்ளைகள் படிப்பு, மகள் கல்யாணம், மகனுக்கு வேலை, மனைவி குடும்பத்தார் தொல்லை – இந்த மாதிரிப் பிரச்சினைகள் யாருக்கு இல்லை? கைதிகளிடமும் அதிகாரிகளிடமும் அம்பலம் சரியாகச் சாத்திரம் சொல்லுவான் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏன், எனக்கே சரியாகச் சொல்லி யிருக்கிறான். “தெரியாது என்றால், தெரியாதுதான்.” தனக்கு விருப்பம் இருந்தால் தான் சொல்லுவான். “எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு போவான். அவன் சாத்திரம் சொல்லுவது சிகரெட் மாதிரியான சலுகை களுக்கு மாத்திரம் இல்லை. இதனால், அவனுக்கு இங்கே சரியான மரியாதை.”

நாதன், “அம்பலம் இந்தச் சனிக்கிழமையைப் பற்றி என்ன சொன்னான் ” தன் புருவங்களை நெருக்கிக்கொண்டு செல்வனைக் கேட்டான்.

“ஞாபகம் வரவில்லை ” என்றான் செல்வன்.

“அவன் சொல்வதைச் சரியாகக் கேளுங்கள்” என்று சொல்லிக்கொண்டு சங்கரன் போக முயற்சித்தான்.

“சங்கரன் நில்! நில்!” நாதன் அவனை நிறுத்தி அவன் காதில் மெல்லியதாக, “உனக்குக் காசு வந்து சேர்ந்ததா?” என்று கேட்டான்.

“ம்…. ம்…” என்று தலையாட்டி விட்டுப் போய்விட்டான். அவர்களை மேலும் பேச இடம் கொடுக்கவில்லை. அம்பலத்தின் சக்தியைப் பற்றி அவனிடம் நிறையக் கேட்க வேண்டும் என்று அவர்கள் பார்த்தார்கள்.

சிவம் இவற்றைப் பார்த்துக்கொண்டான். “ஏன், நான் சாத்திரக்காரன் இல்லை என்று அம்பலம் சொல்லிக்கொள் கிறான்?” என்று யோசித்தபடியே குந்தியிருந்தான்.

குடைச்சாமி அம்பலத்தைப் போல் பேசுவாராக இருந்தால், அவரும் இதுமாதிரிச் சொல்லியிருக்க முடியும்.

மனிதர் யாவரையும் சூழும் ஒரு வானவெளி.

அந்த வானவெளியில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட கிரகங்கள். கிரகங்களுக்கு வீடுகள்.

அந்தக் கிரகங்களுக்கு ஆளையாள் பார்த்துக் கொள்வதும் சேர்ந்து கொள்வதும் மனிதரைச் சிப்பிலி ஆட்டுவதுமான ஒரு கூத்து.

பிறந்த உடனேயே ஆட்கொள்ளுமாமே?

சந்திரன் ஒரு பெண். அவளை நான் சுற்றி வந்தது அந்தக் குடைச்சாமிக்கு எப்படித் தெரிந்தது? கனகத்தைப் பார்த்தால் எனக்குச் சாராயம் தேவையில்லாமல் இருந்தது. வேறெதுவுமே தேவையில்லாமல் இருந்தது. கிரகங்கள் துரவே இருப்பதைப் போல் மனிதரும் தூரத்தூரத்தான் இருக்கிறார்கள். இந்தத் தொடர்புகள்தான் என்ன? அம்பலத்தைத்தான் கேட்க வேண்டும். என் கதையை முழுக்கச் சொன்னால்தான், அவனுக்கு விளங்கும். கனகம் தூரவே அமைந்து போனாள் – அம்பலத்திற்குக் கனகத்தின் நினைவுகள் வர நித்திரை கொள்ளப்போனான்.

அம்பலம் திரும்பி அறைக்குக் கொண்டுவரப்பட்டபோது, எல்லோரும் நித்திரை கொண்டிருந்தார்கள். நாளை நல்ல பொழு தாகப் போகும். எருமைகள்தான் என்ன செய்யப்போகின்றனவோ தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டு, அவனும் நித்திரை கொள்ளப்போனான்.

வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே அம்பலம் எழுந்து கொண்டான். மற்றவர்கள் எழும்பியபோது சுண்ணாம்புக் கட்டிக் கிறுக்கல்கள் நடுவில் அம்பலம் இருந்தான். சிவம், ‘இன்று அம்பலத்திடம் மற்றக் கதைகளைச் சொல்லி முடித்து விட வேண்டியதுதான் என்று யோசித்துக்கொண்டான். நாதனும் செல்வனும் அம்பலத்திடம் எவ்வாறு தங்கள் எதிர்காலம் பற்றிக் கேட்கலாம் என்று யோசித்தபடியே நாடியைத் தடவிக்கொண் டார்கள். காலை உணவிற்குப் பின்னர் சிறையின் பின்னாலேயே தோட்ட வேலை. தோட்ட வேலையின் நடுவில் அம்பலத்துடன் சிவத்தால் பேசமுடிந்தது. எருமைகள் இவர்கள் பக்கத்திலேயே வேலை செய்துகொண்டிருந்தன. அம்பலந்தான் முதலில் பேச்சைத் தொடங்கினான்.

சிவத்தினால் நன்றாகவும் எல்லாவற்றையும் சொல்லவும் முடியவில்லை . “முதலில் தம்பி குடும்பத்தார் நான் எதையோ திருடினேன் என்றார்கள். பின்னர், “முன்கதவு வழியாக வராதே, பின்கதவு வழியாக வா” என்றார்கள். அவர்கள் குழந்தைகளை என்னோடு பேசவிடாமல் தடுத்தார்கள். ஒருத்தன் வீட்டிற்குப் போனால், மற்றவன் என்ன செய்கிறான் என்று என்னைக் கேட்டார்கள். நான், இல்லாதவற்றை மற்றவர்களிடம் சொன்னேன் என்று பழித்தார்கள்.”

“ஏன்?” அம்பலம், சிவத்தின் விளக்கத்தைக் கேட்க முனைந்தான்.

சிவத்தை யாரும் இப்படிக் கேட்டதில்லை. விளக்க முயன்றான்.

“வாழ்க்கைப் போட்டியும் இந்தப் படித்தவர்களிடம் வழக்கமாகவே இருக்கும் சுயநலமாக இருந்திருக்கலாம். தன்னிடம் இருக்கிற பணத்தைவிட மற்றவனிடம் கூட இருந்து விடப்போகிற பயம் என்று தோன்றியது. எப்படிக் கூடப் பிறந்தவனைவிட இந்தப் போட்டி முக்கியமாயிற்று என்று தெரியவில்லை. இவர்கள் வளரும் பருவத்தில், இவர்கள் கல்லூரியில் படிக்கும் நாட்களில், நான் இவர்களுக்குப் பாசத்துடன் செய்தனவெல்லாம் இவர்களுக்கு மறந்து போயிற்று. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அன்பான வார்த்தையுமில்லாமல் போய்விட்டது. அதுதான் மனதை வருத்தியது. இவர்களிடம் என்ன காசா கேட்டேன்?”

கேட்டுக்கொண்டிருந்த நாதன், “ஏ அறிவில்லாத நாயே!” என்று தொடங்கினான்.

“உன் சகோதரர்கள் புதுப் பணக்காரர்கள். அதுவும் அரைப் பணக்காரர்கள் மாதிரித் தோன்றுகிறது. இந்தப் புதுப் பணக்காரருக்கு நடப்பது இதுதான். புதுப் பணக்காரருக்குச் சிறப்பாக வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது தெரியாது. அது என்னவென்றும் புரியாது. இப்படியே அடிதடிப்பட்டபடியே வாழ்க்கையைக் கொண்டுபோவதுதான் அவர்கள் தலையில் எழுதப்பட்டிருக்கிறது. பரம்பரைப் பணக்காரனைப் பார். ஒருநாளும் இப்படி சகோதரர்களுடன் முரண்படமாட்டான். ஏன் அவனிவனைப் பார்க்கிறாய்? எங்களைப் பார். நாங்கள் அடிபடுகிறோமா…?” நாதன் மார்தட்டிக்கொண்டான்.

“சிறப்பாக வாழ்க்கையைக் கொண்டு போகத் தெரிந்துதான், இரண்டு பேருமாய்ச் சிறைக்கு வந்திருக்கிறீர்களே! எருமைகளே!” அம்பலம் காறி உமிழ்ந்தான். “நீங்கள் முழுமுட்டாள்களாக இருக்கிற முழுப் பணக்காரர்கள். உங்களுக்குப் பொதுமக்களைச் சுரண்டவும் அவர்களை ஏமாற்றுவதையும் தவிர என்ன தெரியும்? இந்த உலகம் எவ்வாறு இயற்கைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. அது தெரியவும் வராது. ஒற்றுமையாக இரண்டு பேரும் பணத்தைக் கட்டிக்கொண்டு சாக நீங்கள் தயாரா?”

இந்த முறை நாதன் அம்பலத்தின் மீது பாய முயற்சிக்க வில்லை. கோபப்பட்ட செல்வனை அடக்கினான்.

“நீ இருந்து பார்” என்று நாதன் தன் வேலையில் ஈடு பட்டான். ஆனால், பின்னரும் இவர்கள் சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டான்.

அம்பலம் சிவத்தைப் பார்த்து, “இவர்கள் கிடந்தார்கள். நீ சொல்” என்றான்.

சிவம் தொடர்ந்தான். “அரைப் பணக்காரர்களோ முழுப் பணக்காரர்களோ எனக்கென்ன தெரியும்? ஒருமுறை என் பயணப் பையையும் வெளியே எறிந்து, “நீ ஊர் போய்ச் சேர்” என்று துரத்தினார்கள். சகோதரன் என்பதைவிட, ஒரு படிக்காத பட்டிக்காட்டான் என்கிற யோசனை வந்து சேர்ந்துவிட்டதோ தெரியவில்லை. அந்த முறை மனமுடைந்து ஊருக்கு வந்து ஒரு மாலைப்பொழுதில் என் நண்பன் மணியிடம் நகரத்தில் நடந்தவற்றையெல்லாம் சொல்லி, அவனுடன் சேர்ந்து வழக்கத் திற்கும் மேலாகவே ஏற்றிக்கொண்டு, அவனையும் கூட்டிக் கொண்டு குடைச்சாமி வீட்டுக்குப் போனேன். சாமியார் என்கிறார்களே, என் துயரத்தை அவரிடம் சொல்லலாம் என்பது என் யோசனை. ஆனால், அங்கே போனால் குடைச்சாமியைச் சுற்றி, அந்த ஊரில் பிரபலமான மனிதர் சிலபேர் இருந்தார்கள். குடைச்சாமி அந்த நாற்சார் வீட்டின் உள் முற்றத்தில் ஒரு சுழல் நாற்காலியில் இருந்தார். அறைக்கதவுகள் யாவும் திறந்திருந் தன. அங்கிருந்த பிரபலமான மனிதர்கள் சாமியாரைச் சுற்றி நிலத்தில் உட்கார்ந்திருந்தார்கள். தனியாக அவரிடம் எதுவும் அந்த நேரத்தில் சொல்லிவிட முடியாது போலிருந்தது. இந்த மனிதர்கள் எல்லோரும் பின்னர் எனக்குக் கொஞ்சம் கொஞ்ச மாகக் குடைச்சாமியினால் பரிச்சயமானார்கள். அங்கே கனகமும் இருந்தாள். கனகம், அவள் தந்தை கனகசபையுடன் அங்கு இருந்தாள். அவர் ஊரில் ஒரு பிரபலமான பணக்காரர். கனகத்தைப் பார்த்தவுடனேயே என் மனதினில் வார்த்தைகளில் அடங்காத ஒரு காந்த உணர்ச்சி என்னை ஆட்கொண்டது. குடைச்சாமி காலில் விழுந்தேன். மணி தடுமாறிக்கொண்டே நின்றுகொண்டிருந்தான்.

“நீ இப்படி கொஞ்ச நேரம் இரு” என்று என்னிடம் சொல்லி விட்டு குடைச்சாமி, அவரைக் கூடியிருந்தவர்களைப் பார்த்து, “சீக்கிரத்தில் நாங்கள் யாகம் செய்யலாம். செய்வதற்கான கிரகங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்துகொண் டிருக்கின்றன” என்று என்னையும் மணியையும் பார்த்துக் கொண்டார். “இப்போது சொல்” என்றவுடன், நான் என் பெயரைச் சொன்னேன். இறந்துபோன என் தாய், தந்தையின் விபரங்களையும் சொன்னேன். மணியும் என்னைப் பார்த்து விட்டுத் தானும் தன் பெயரையும் சொல்லித் தன் பூர்வீகத்தையும் சொன்னான். கனகசபை எங்களைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. மற்றையோர் – குடைச்சாமியையும் சேர்த்து அங்கே மொத்தமாக ஒன்பது பேர் இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னர் தெரியவந்தார்கள். குடைச்சாமி கணக்குப் போட்டபடி இருப்பார். ஒரு சின்னப் புத்தகத்தில் குறுக்கிக்குறுக்கிக் கணக்குப் போடுவார். அவரை யார் என்ன கேட்டார்கள்? இந்தக் கணக்குகளும் பின்னர் என்னைக் குழப்பும் விதமாக இருந்தாலும், குடைச்சாமியின் யாகத்தின் விபரங்களின் சில அம்சங்கள் புரிய ஆரம்பித்தன.”

சிவம், சிறைக் காவலாளியின் “வேலையைப் பாருங்கள் நாய்களே” என்ற அதிகாரக் குரல் கேட்டு, தன் கதையை நிறுத்தினான். அம்பலமும் எருமைகளும் சிறைக் காவலாளியைப் பார்த்து, “வேலை செய்துகொண்டுதான் இருக்கிறோம்” என்று சொன்னார்கள். அம்பலத்தைப் பார்த்தவுடன் காவலாளி பேசாது திரும்பிப்போனான்.

“நீ சொல்” என்று அம்பலம் சிவத்திடம் சொன்னான். சிவம் கதையைத் தொடர்ந்தான்.

“குடைச்சாமி என்னைப் பார்த்து, “நீ யார் என்று தெரியும். உன் நண்பனையும் தெரியும்” என்றார். அந்தக் கூட்டத்தில் அவரிடம் மேலே என் கதையைச் சொல்லத் தேவையில்லை 342 என்று தோன்றியது. எல்லோரும் போனபின்னர் அவரிடம் என் கதையைச் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால், அன்று எல்லோரும் போவதற்கு வெகு நேரமாகிவிட்டது. குடைச்சாமி என்ன செய்தார் என்றால், முதலில் ஒவ்வொருத் தரையும் கூப்பிட்டு,

“கனகசபை! – நீதான் சூரியன்
கனகம்! – நீ சந்திரன்
குமாரசாமி! – நீ செவ்வாய்
பத்மநாதன்! – நீ புதன்
செல்வராஜா ! – நீ வியாழன்
யோகநாதன்! – நீ சுக்கிரன்
மணி! – நீ சனி
துரை! – நீ ராகு
சிவம்! – நீ கேது”

என்று வரிசையாகச் சொன்னார். நானும் மணியும் திடுக்கிட்டுப் போனோம். மணி – சனீஸ்வரனாம், நான் கேதுவாம் ! சாமியார் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எங்கள் மப்பையும் மீறிப் பாதித்தன. சாமியார், “இந்த அடையாளங்களை ஒருத்தரும் மறக்கப்படாது. அப்படி மறந்தால், பெரிய பாதிப்பு ஏற்படும்!” என்று எச்சரித்துவிட்டு, மேலே கட்டளைகள் சொன்னார். முதலில் கனகசபையைக் கூட்டிக்கொண்டு போய் ஓர் அறையில் நாற்காலியில் உட்காரவைத்தார். இன்னொரு அறையில் குமார சாமி, இன்னொன்றில் பத்மநாதனையும் மணியையும் கூட்டிக் கொண்டு போய் உட்காரவைத்தார். மற்றப்படி செல்வராஜா, யோகநாதன், துரை எல்லோரும் ஒவ்வொரு அறையில், ஒவ்வொரு நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டார்கள். என்னையும் ஓர் அறை நாற்காலியில் வைத்தார். இருள் கவ்வ ஆரம்பித்தது. பின்னர்தான் அந்த நாள் அமாவாசை என்று எனக்குத் தெரிய வந்தது. இருள் கவிந்த பின்னர், குடைச்சாமி எல்லோருக்கும் சொன்னார், “நான் ஒருவனைக் கூட்டிக்கொண்டு வருவேன். இந்தக் கூடத்து நடுவில் அவனை உட்காரவைப்பேன். நீங்கள் அவனுடன் என்ன வேண்டுமானாலும் பேசலாம் – என்ன வேண்டுமென்றாலும் கேட்கலாம். உங்கள் அறையிலேயே நீங்கள் இருக்க வேண்டும். நீங்களும் உங்களுக்குள் என்ன வேண்டு மென்றாலும் பேசிக்கொள்ளலாம். ஆனால், நான் சொல்லும் வரையில் உங்கள் அறையிலிருந்து போக முடியாது.” இருட்டிலும் அவர் குரல் தீர்க்கமாகக் கேட்டது. கடைசியாக ஒருத்தனைக் கூட்டிக்கொண்டு வந்தார். அவன் பேர் சிதம்பரநாதன் என்று தெரியவந்தது. அவனைத் தான் உட்கார்ந்திருந்த சுற்றும் நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு, “இவர்கள் உன்னுடன் பேசினால், அவர்கள் திசையை நோக்கிப் பதில் சொல்ல வேண்டும்” என்று சொல்லிவிட்டுத் தானும் ஓர் அறையில் போய் உட்கார்ந்து கொண்டார். திடீரென்று வீட்டு விளக்குகளைப் போட்டார். எல்லா அறையிலும், வீட்டு முற்றத்திலும் விளக்குகள். வெளிச்சத்தில் எல்லோரும் தெரிந்தார்கள். இந்த …”

“எந்தெந்த அறையில் இவர்களை குடைச்சாமி உட்கார வைத்தார் என்று ஞாபகம் இருக்கிறதா?” அம்பலம் இடை வெட்டினான்.

“அதுதான் பெரிய பரிசோதனையாகிப் பிரச்சினையில் முடிந்தது. ஒருவிதமாக வெவ்வேறு அறைகளில் எங்கள் எல் லோரையும் இருத்தினார். பின்னர், போகப்போக யார் எங்கே இருப்பது என்பதை மாற்றினார். அதைப் பின்னால் விவரமாகச் சொல்கிறேன். நாங்கள் முதல் நாள் போன அன்று, குடைச்சாமி வீட்டு வாசல் வழியாக வந்து முற்றத்தில் இருந்து வீட்டை உள்நோக்கும் திசையில் நின்றால், வாசலை எதிர்கொள்ளும் அறைகளமைந்த கோட்டில் வலது மூலையில் இருக்கும் அறையில் தான் குடைச்சாமி இருந்தார். கோவிலைச் சுற்றுவதைப் போல் ஆன பாதையில் எல்லோர் இடத்தையும் சொல்கிறேன். செல்வ ராஜாவும் துரையும் அடுத்த அறை. பத்மநாதனும் மணியும் மூன்று அறைகள் தள்ளி மூலை அறைக்குப் போனார்கள். அந்த அறை, வீட்டு உள்பக்கமாகப் பார்க்கும் போது, வாசலோடு இருக்கும் அறைக்கோட்டில் வலது கைப்பக்கமாக இருக்கிற மூலையில் – விளங்குகிறதா?”

“ம்… ம்….” என்று அம்பலம் தலையாட்டினான். நாதன் இடைவெட்டி “இல்லை இல்லை. திரும்பவும் சொல்” என்று சொன்னான். அம்பலம் மிகக் கோபமடைந்தான்.

“இந்த எருமைகளை விடு. அதுவும் அறிவில்லாத எருமைகள். நீ மேலே சொல்” என்றான் அம்பலம். சிவம் நிலத்தில் கோடுகள் போட்டுக் காட்டினான்.

“அந்த வீடு தெற்கு நோக்கும் வீடு. வாசலில் இருந்து இடதுகைப்பக்கத்தில் மூன்றாவது அறையில் கனகம். அதற்கு அடுத்ததான அறையில் என்னையும் குமாரசாமியையும் இருத்தினார். அடுத்த அறையில் யோகநாதன். அடுத்த அறை யில் கனகசபை.”

“சிதம்பரநாதன் என்று சொன்னாயே, யார் அந்தச் சிதம்பரநாதன்?” செல்வன் கேட்டான். அம்பலம் இந்த முறை பொறுமையை இழக்கவில்லை.

சிவம் தொடர்ந்தான். ” அந்தச் சிதம்பரநாதன் பக்கத்து ஊர் வியாபாரி. அவனும் பணக்காரன்தான். என்னத்திற்காகக் குடைச்சாமியிடம் வந்து தனக்கு என்ன நடக்கப்போகிறது என்று கேட்டான் என்று முதலில் தெரியவில்லை. அங்கிருந்த வர்களில் நானும் மணியும் துரையும் தான் சாதாரண மனிதர்கள். மற்றவர்கள் எல்லோரும் பிரபலமானவர்களும் பணக்காரர் களுமான மனிதர்கள். கூடாத கிரகங்களுக்கு எங்களைப் போட்டிருந்தார் குடைச்சாமி.”

“இந்தத் துரை என்றவன் யார்?” இது நாதன்.

சிவத்திற்கு எங்கே தன் கவனம் குறைந்து, விவரங்களை எங்கே விட்டுவிடுவோமோ என்கிற பயம் எழுந்து எரிச்சலுற்றான்.

“குறுக்கே பேசி என்னைக் குழப்பாதே. சொல்வதைப் பொறுமையாகவும் கவனமாகவும் கேள். அவன் கனகசபை வீட்டு வேலைக்காரன். அவனும் செல்வராஜாவும் இருந்த அறையில் இருந்து ஆறு அறைகள் தள்ளி என்னையும் குமார சாமியையும் இருத்தினார். இரண்டு அறைகள் தள்ளி அதே கோட்டில் கனகசபையை இடது மூலை அறையில் இருத்தி யிருந்தார். கனகத்தைக் கொண்டு, நான் இருந்த அறைக்கும் துரை இருந்த அறைக்கும் நடுவில் இருந்த மூலை அறையில் இருத்தியிருந்தார். என்ன புதிர் என்றால், அந்த முற்றத்தின் நடுவில் இருந்து பார்த்தால் அறையில் இருக்கும் எல்லோரையும் பார்க்க முடியும்.”

“இது என்ன குழப்பக் கதையாக இருக்கிறதே. விளக்கிச் சொல்லேன்.” செல்வன் புரிய முனைந்தான்.

“எருமைகளே நான் விளக்கப்படுத்துகிறேன்.” அம்பலம் நிலத்தில் கோடுகள் வரைந்தான். பன்னிரண்டு கட்டங்களையும் அழகாகக் கீறினான்.

“இந்த மூலையில் குடைச்சாமி. இரண்டாவது இடத்தில் செல்வராஜாவும் துரையும், அதாவது வியாழனும் ராகுவும். நாலாவது இடமான மூலையில் பத்மநாதனும் மணியும், அதாவது புதனும் சனியும். ஏழாவது இடத்தில், அதுவும் ஒரு மூலையில், கனகம் – அதாவது சந்திரன். எட்டாவது இடத்தில் செவ்வாயும் கேதுவும் – அதாவது குமாரசாமியும் சிவமும். ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன். இந்தக் கோட்டு மூலையில் அமைந்த பத்தாவது இடத்தில் கனகசபை, அவர் சூரியன்.”

‘அது சரிதான்” என்று தலையாட்டினான் சிவம். தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.

“குடைச்சாமி விளக்கைப் போட்டவுடன், நடுவில் சுழல் நாற்காலியில் இருந்த சிதம்பரநாதனின் முதுகைத்தான் நான் பார்க்க முடிந்தது. யார் ஆள் என்றே தெரியவில்லை. அந்த ஆள் முதலில் செல்வராஜாவைப் பார்த்தபடி இருந்தார். செல்வராஜா , ” உங்கள் பெயரென்ன” என்று கேட்டார். “சிதம்பர நாதன்” என்று பதில் வந்தது. மணி, கனகத்தைப் பார்த்தபடி இருந்தான். நானும் திரும்பிக் கனகத்தைப் பார்த்தேன். அவளோ சிதம்பரநாதனின் முதுகைப் பார்த்தபடி இருந்தாள். “என்னத் துக்காகக் குடைச்சாமி அங்கே தன்னை இழுத்திருக்கிறார்?” என்கிற கேள்விக்குறி அவள் முகத்தில் இருந்தது எனக்கு நன்றாகவே தெரிந்தது. மணியுடன் கூட இருந்த பத்மநாதன், மணியைப் பார்த்து, “இங்கே பார்” என்று சொன்னவுடன், மணி திடுக்கிட்டு சிதம்பரநாதன் முதுகைப் பார்த்தான். பத்மநாதன் அடுத்த கேள்வி கேட்டார். எனக்குக் கேள்வி கேட்கவும் தோன்றவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று தீர்மானித்தேன். அந்த சக்தியான மனிதர் கூட்டத்தில் மணியையும் என்னையும் மற்றும் அங்கு வந்திருந்த சிதம்பர நாதனையும் தவிர எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது.

துரை, கனகசபை வீட்டு வேலைக்காரன் என்றபடியால், அவனை யும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. வரிசையாகச் சொன் னால் தான், எல்லோரும் என்ன மாதிரி அங்கே இந்தச் சிதம்பர நாதனைப் பரிச்சயம் செய்து கொள்ள முயன்றார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். செல்வராஜா அவ்வளவாக அன்று ஒன்றும் கேட்கவில்லை.”

“இந்தக் கிரகங்களுக்கான மனிதர் கனகசபை, செல்வராஜா இவர்களெல்லாம் யார்? என்ன தொழில்? அவற்றைத் தெரிந்து கொண்டாயா?” அம்பலம் தாடியை வருடிக்கொண்டான்.

“கனகசபை பெரிய மளிகைக் கடைகள் அந்தப் பிராந் தியத்தில் வைத்திருந்தார். குமாரசாமி ஒரு பள்ளிக்கூட அதிபர். பத்மநாதன் அரசியல்வாதி. அவர் எங்கள் தொகுதி மக்கள் பிரதிநிதி. செல்வராஜா ஒரு எஞ்சினியர். யோகநாதன் ஒரு பிரபல வழக்குரைஞர். தவிர, கனகம் கனகசபையின் மகள் என்பதை முன்னரே சொன்னேன். அவள் பெரிய படிப்புக ளெல்லாம் படித்து முடித்திருந்தாள். அவள் பெற்றோர் அவளுக்கு மாப்பிளை தேடிக்கொண்டிருப்பதாகப் பின்னர் தெரியவந்தது. இவர்களெல்லாம் தவிர மணி, துரை இவர்களைப் பற்றித்தான் சொல்லிவிட்டேனே. இந்தப் பெரிய மனிதர் கூட்டத்தில் எங்களுக்கு, அதாவது மணி, துரை மற்றும் எனக்கு இருப்பதற்கு ஒருமாதிரியாக இருந்தது. எங்களைக் கொண்டுவந்து ஏன் இந்தக் கூட்டத்துடன் குடைச்சாமி சேர்த்திருந்தார் என்பது முதலில் பெரும் புதிராக இருந்தது.

பத்மநாதன், துரை, மணி மற்றும் என்னைத் தவிர எல்லோரும் சிதம்பரநாதனுடன் தங்களைப் பரிச்சயமாக்கிக் கொண்டார்கள். ” அவர் என்ன செய்கிறார், குடும்பம், மற்றும் பூர்வீகத்தைப் பற்றின விவரங்கள், இவனைத் தெரியுமா, அவனைத் தெரியுமா என்கிற கேள்விகள் எங்கள் மூவருக்கும் சுவாரசி யத்தைத் தரவில்லை . கனகம், “உங்களுக்கு எத்தனை குழந் தைகள்?” என்று கேட்ட போது, அவள் குரலின் அழகில் மயங்கிப் போனேன். மணியை, அவனுடன் இருந்த பத்மநாதன், “அங்கே பார்” என்று சிதம்பரநாதன் பக்கமே கையைக் காட்டி அதட்டிய படி, அவன் கனகத்தையே பார்க்கும் முயற்சியிலிருந்து தடுத்தபடி இருந்தார். எனக்குப் பக்கத்து அறை என்றபடியால் கனகத்தை அருகில் பார்க்க முடிந்தது. துரையும் அவளைப் பார்த்த படியிருந்தான். குடைச்சாமி எல்லாவற்றையும் பார்த்தபடி மௌனமாக இருந்தார். எனக்கு சிதம்பரநாதனைக் கேள்விகள் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. கனகத்தைப் பார்க்க பத்மநாதன் விடவில்லையென்றதாலோ என்னவோ தெரியவில்லை, மணி, வெறியுடனான கோபத்தில் சிதம்பரநாதனைக் கேள்வி கேட்கத் தொடங்கினான்.

“என்னத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்” மணியன் கத்தியது, பெரிய மனிதர் கூட்டத்திற்குப் பிடிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் குடைச்சாமி பக்கம் திரும்பினார்கள். குடைச்சாமி மௌனமாக முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாது இருந்தார். சிதம்பரநாதன் தன் கதிரையில் இருந்து நெளிந்தபடியே , ஏதோ சொல்ல முயற்சித்தார். அதற்குள், “ஏய், என்ன பேசுகிறாய்?” என்று கனகசபையும் குமாரசாமியும் மணியனை அடக்க முயற்சித்தார்கள். மணியன் இவர்கள் பேச்சைக் கேட்கும் நிலையில் இல்லை. ஒரு வெறியடைந்தவனின் தத்துவப் போதனை யான பேச்சுடன், சிதம்பரநாதனைப் பார்த்து, “இவர்கள் கிடந்தார்கள். உனக்கு என்ன நடந்தால் தான் என்ன? காயமே இது பொய்யடா’ என்ற பாட்டு நீ கேள்விப்பட்டதில்லையா?” என்று சொல்லிவிட்டு, “வானமே எல்லை! வானமே எல்லை!” என்று பாட ஆரம்பித்தான். நடுவில், “சிவம், நீயும் பாடு, நீயும் பாடு” என்று என்னையும் பார்த்துக் கத்தினபோது, எனக்குக் கூச்சமாக இருந்தது. கனகம் எங்கே , “இந்தக் குடி காரனுடன் சேர்ந்த மற்றக் குடிகாரன்” என்று என்னைப் பார்க்கிறாளோ என்று அவளைத் திரும்பிப் பார்த்தால், அவள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தின் பிரகாசத்தில் என் நினைவுகள் யாவும் மறந்து, என்ன பேசுகிறேன் என்ற பிரக்ஞை இல்லாமலேயே , ” இந்தப் பூமி தொடக்கமுமில்லை, வானம் எல்லையுமில்லை. நிறுத்து உன் பாட்டை” என்று நான் அவனை அடக்க முயற்சித்தேன். அப்போது கனகம் என்னை உற்றுநோக்குவதை உணர்ந்தேன். அவளை நோக்கித் திரும்பியபோது, மணி வெறியுடன் திரும்பவும் கத்தினான். “ஏ சிவம், என்னைப் பாரடா! என்னைப் பாரடா!” என்று கூப்பிட்டு, “பூமி தொடக்கமுமில்லை, வானம் எல்லையுமில்லை” என்று இழுத்துப் பாடிவிட்டு, “இப்போது சரியா?” என்று கேட்டான்.

பெரிய மனிதர் கூட்டம், “ஏய், என்ன பேசுகிறாய்?” என்று மறுபடியும் மணியனை அடக்க முயற்சித்தது. ஆனால், மணியன் விடுவதாக இல்லை. “என்னத்திற்காக இங்கே இந்த ஆள் வந்திருக்கிறார் என்று உங்களுக்கும் தெரியவில்லை. இந்த ஆளைப் பார்த்தால் இவரும் உங்களை மாதிரியான பணக்காரன் மாதிரித்தான் தெரிகிறது. இங்கே இது என்ன கூத்து? என்ன நடக்கிறது இங்கே? பணத்தைக் கொடுத்துக் கடவுளையே வாங்குகிற மாதிரி ஒரு சாமியாரையே இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறீர்கள்.”

பெரிய மனிதருக்கு அப்போதுதான், மணியனை அலட்சியப் படுத்த முடியாது என்று புரிந்தது. கனகசபை, அவர் நண்பர் எல்லோர் நிலையையும் விளங்கப்படுத்துவதைப் போன்று, “இங்கே குடைச்சாமி எங்களை வரச்சொல்லி நாங்கள் வந்திருக் கிறோம். நீயும் சிவமும் இங்கே இந்த யாகத்திற்கு இன்று வந்து சேருவீர்கள் என்ற தீர்க்கதரிசனம் சாமியாருக்குத் தெரிந்தே இருக்கிறது. அதிலிருந்தே உனக்கு அவர் சக்தி தெரிந்திருக்க வேண்டும்….” என்று சொல்லிக்கொண்டு போனபோது, மணி அவரை இடைவெட்டினான்.

“இது யாகமும் இல்லை ஒன்றுமில்லை . இது ஒரு கூத்து. நீங்கள் தினமும் சாமியாரைப் பார்க்க வருகிறீர்கள். நாங்கள் இன்று வந்து மாட்டிக்கொண்டோம். எல்லோரும் இன்று ஒன்று சேர முடிந்தது. நாங்கள் இன்று வரவில்லையென்றால், வழக்கம்போல் சாமியாரை நீங்கள் பார்த்துவிட்டுப் போயிருப் பீர்கள். இதிலென்ன தீர்க்கதரிசனம்?”

மணியனின் வெறி தீர்ந்தது என்று யோசிக்கலானேன். எல்லோரும் குடைச்சாமியின் முகத்தைப் பார்த்தார்கள். அவர் முகத்தில் ஒருவிதமான உணர்ச்சிபாவமுமில்லை. கனகசபை இந்த இடைவெட்டினால் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்தார்.

“நீ சொல்வதைப்போல தற்செயலாக இவைகளெல்லாம் நடந்ததென்றால், இன்று அமாவாசையாக ஏன் அமைந்து போனது? எப்படி வெளியூரிலிருந்து முதல் முறையாகச் சிதம்பர நாதன் குடைச்சாமியின் இடத்திற்கு வந்திருக்க முடியும்? இன்றைக்குத்தானே நாங்கள் எல்லோரும் சிதம்பரநாதனை முதல் முறையாகப் பார்க்கிறோம். சாமியார் கட்டளையின்படி சிதம்பரநாதனைக் கேள்விகள் கேட்டுக்கொள்.”

சாமியார் சிதம்பரநாதனைப் பார்த்தார். அவர் பார்த்த விதம் சிதம்பரநாதனைப் பேசும்படி கட்டளை இட்ட மாதிரி இருந்தது.

“இளம் வாலிப வயதில் என் மகனுக்குத் தீராத குடல் வியாதி வந்திருக்கிறது. நாங்கள் பார்க்காத மருத்துவர் இல்லை, போகாத வைத்தியசாலையுமில்லை. ஒருவருஷக் கெடு கொடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். நான், என் மனைவி மற்றும் என் மகள் எல்லோரும் கவலையுடன் இருக்கிறோம். பணமிருந்தும் பிரயோசனமில்லாமல் இருக்கிறது. இவனுக்கு எப்போது குணமாகும், எப்படிக் குணமாகும் என்ற அவலத்துடன் சாமியாரிடம் சரண் அடைந்திருக்கிறோம்.” சிதம்பரநாதன் உணர்ச்சிவசமானார்.

“என்ன தீராத வியாதி?” மணி எகத்தாளமாகப் பேசத் தொடங்கினான். “ஒரு மாற்றமுமில்லாத தலையெழுத்துடன் இவ்வளவு வருஷங்களாகத் தோட்ட வேலை நான் செய்கிறேன். அதைவிடப் பெரிய வியாதி இந்தக் குடி. என்னால் அதை விடவும் முடியவில்லை . எந்த மருத்துவனிடம் நான் போவது? இப்படி அவலப்பட்டும் என் வாழ்க்கைத் திசையை மாற்றவா இந்தக் குடைச்சாமியிடம் வந்திருக்கிறேன்? இல்லை. இல்லை ஒருநாளும் இல்லை. இதோ இந்தக் கழுதை இருக்கிறானே அவன் கூப்பிட்டு நான் வந்திருக்கிறேன்” என்று என் பக்கம் கையைக் காட்டினான். அவன் வெறியில் தன் இருக்கையில் இருந்து எழுந்து, “ஓய் சிதம்பரநாதப் பெரியவரே! ஒரு வருஷ மாவது உங்கள் மகன் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும். அவன் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுங்கள். அதற்குப் பிறகு என்னவாவது நடக்கட்டும்” என்று சிதம்பரநாதனிடம் சொல்லி விட்டு, குடைச்சாமியைப் பார்த்து, “ஓய் குடைச்சாமி! நீர் என்ன பணக்காரருக்குத்தான் சாமியாரா? ஏன், என்னை முற்றத்து நடுக்கதிரையில் அமர்த்தி, இந்த நாய்களில் ஒருவனை சனீஸ்வரனாக்கினால் என்ன குறைந்தா போய்விடும்?” என்று பெருங்குரலில் கத்தி முடிவதற்குள்ளேயே, பெரிய மனிதர் 348 எல்லோரும் அவனைப் பேசி அடக்க முயற்சித்தார்கள். “வாடா, நாங்கள் போவோம்” என்று அவன் என்னையும் இழுத்துக் கொண்டு போக ஆரம்பித்தான். திரும்பிக் கனகத்தைப் பார்த்துக் கொண்டே வெளியேறினேன். அவளும் என்னைப் பார்த்தாள். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை.

“சிவம்” என்று குடைச்சாமி கூப்பிட்டது கேட்டது.

“நாளை வந்து என்னைப் பார்” என்று குடைச்சாமி கட்டளையிட்டார்.

“நீ வாடா” என்று மணியன் என்னை இழுத்துக்கொண்டு போனான்.

அடுத்த நாள் காலை தோட்டத்திலிருந்து நான் காய்கறி களைச் சந்தைக்குக் கொண்டுபோகும் போது, குடைச்சாமியைப் பார்த்தேன். அதே வெள்ளை வேட்டி. அதே குடை. அவர் முகத்தில் முன்னைய இரவின் நிகழ்ச்சியின் அனுபவம் எதுவும் தோற்றவில்லை. நான் “கேது” என்று தீர்மானித்தாரா அல்லது சபித்தாரா என்பது எனக்குப் புரியவில்லை.” சிவம் நிறுத்தினான்.

“அப்படித் தீர்மானிக்கவோ அல்லது சபிக்கவோ ஒருவ ருக்கும் சக்தியில்லை . நீ , மேலே நடந்ததைச் சொல்.” அம்பலம் எதையோ யோசித்தபடியே சொன்னான். சிவமும் தொடர்ந் தான். “அன்று மாலை பார்த்துக்கொள்ளலாம் என்று நான் போய்விட்டேன். நேரத்திற்குக் காய்கறிகள் சந்தைக்குப் போக வேண்டும். சாமியாருடன் பேச நேரமில்லை. அன்று மாலை மணியனையும் இழுத்துக்கொண்டு சாமியார் வீட்டிற்குப் போனேன். அன்று எங்களுக்குக் குடியுமில்லை வெறியுமில்லை. அவரிடம் போய் வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பது யோசனை. அவர் வீட்டிற்குப் போனால் முந்தைய நாள் இரவு வந்திருந்தவர்களில் பலர் இருந்தார்கள். சிதம்பரநாதன், குமாரசாமி, பத்மநாதன் இவர்களைக் காணவில்லை . கனகசபை, அவர் மகள் கனகம் – இவர்கள் வந்திருந்தார்கள். கனகத்தை பார்த்து எனக்கு மகிழ்ச்சி பெருகியது. குடைச்சாமி, “நீங்கள் எல்லோரும் நேற்றிரவு இருந்த உங்கள் அறைகளில் போயிருங்கள்” என்று கட்டளையிட்டார். அறைகளில் விளக்குகள் போடப்பட்டுத்தான் இருந்தன. ஆனால், நாற்காலிகள் போடப்பட்டிருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் அவரவர் அறைகளுக்குச் சரியாகப் போகத் தொடங்கினோம். மணியனுக்குத் தான் எந்த அறையில் இருந்தோம் என்ற ஞாபகமில்லாமல் இருந்தது. முதலில் கனகம் இருந்த அறைக்குப் போனான். பிறகு என் அறைக்கு வந்தான். “இதுதானா? இதுதானா?” என்று என்னைக் கேட்டான். குடைச்சாமி, “நிறுத்து!” என்று அவனைக் கட்டளையிட்டார்.

எல்லோரும் அடுத்த அமாவாசை இருட்டு முன் இங்கே வர வேண்டும்! அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அன்று சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சாமியார் போய்விட்டார். “வா, போவோம்” என்று மணியன் என்னை இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்தான். எனக்கோ கனகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் போலிருந்தது. அவள் தன் தந்தையுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அடுத்த அமாவாசையன்று…”

சிவம் சொல்லிக்கொண்டிருக்கும் போது, வேலை முடிந்த தற்கான மணியடித்தது. அவன் தன் கதையை நிறுத்திய பிறகே பல பேர் அவன் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது. எல்லோருக்கும் புதிராக இருந்தது. கைதிகள் யாவரும் அம்பலத் திடம் விவரங்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அம்பலம் தாடியைத் தடவிவிட்டபடியே சிவத்துக்கு நடந்த சம்பவங்களை எல்லோருக்கும் விளக்க ஆரம்பித்தான்.

“முதலில் இதைக் கேளுங்கள். மிதுன லக்கினத்தில் குடைச்சாமி. இரண்டாவது இடத்தில் வியாழனும் ராகுவும்; அதாவது, செல்வராஜாவும் துரையும். நாலாம் இடத்தில் புதனும் சனியும் – பத்மநாதனும் மணியும். ஏழாம் இடத்தில் சந்திரன் – கனகம். எட்டில் செவ்வாயும் கேதுவும் – குமார சாமியும் சிவமும். ஒன்பதாம் இடத்தில் யோகநாதன் – சுக்கிரன். பத்தாம் இடத்தில் கனகசபை – சூரியன். முழுக் கதையையும் கேட்டபின்னர் மற்ற விஷயங்களைப் புரிந்து கொண்டு விளக்கு கிறேன்.”

அம்பலம் தானும் யோசிக்கத் தொடங்கினான். குடைச்சாமி செய்தது யாகமா? அல்லது பரிசோதனையா? சிவத்திற்கு நடந்தவற்றை முற்றாகக் கேட்டால் தான் தெரியும்.

அன்று சிவம் சிறையில் அம்பலத்துடன் இருக்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் தனக்கு நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து சொன்னான். இரவு நெடுநேரம் இந்தக் கதை தொடர்ந்தது.

“அடுத்த அமாவாசை நான் மணியனையும் கூட்டிக்கொண்டு போனேன். அன்றும் மணி வெறியுடன் தான் குடைச்சாமி வீட்டிற்குப் போனான். நான் அன்று குடிக்கவில்லை. கனகத்தைப் பார்க்கலாம் என்ற ஆசை என்னை ஆட்டியது. அன்று குடைச் சாமி தன் கையில் வைத்திருந்த துண்டுக்காகிதத்தைப் பார்த்துக் கிரகங்கள் எல்லோரையும் வெவ்வேறு அறையில் இருத்தினார். எல்லோரும் இருந்த இடமும் ஞாபகத்துக்கு வரவில்லை. என்னை முதல் துரை இடத்துக்கு அனுப்பினார். கனகம் நாலாவது இடம். துரையையும் மணியையும் எட்டாவது இடத்துக்கு அனுப்பினார்.”

“கொஞ்சம் நிறுத்து!” அம்பலம் கையைக் காட்டினான். “செல்வராஜாவை அல்லது குமாரசாமியை எந்த இடத்தில் வைத்தார் என்று ஞாபகமிருக்கிறதா?”

சிவம் யோசித்தான். “சரியாக ஞாபகமில்லை. வீட்டு வாசலுடன் இருக்கும் கோட்டில் அமைந்த அறைகள் ஒன்றில்தான் குமாரசாமி இருந்திருக்க வேண்டும். செல்வராஜா வீட்டு வாசலுடன் ஒட்டிய அறையில் இருந்த மாதிரி ஞாபகம்.”

சிவத்தின் கதை தொடர்ந்தது. “முந்தைய அமாவாசை போலவே சிதம்பரநாதனை என்ன வேண்டுமானாலும் கேட்க லாம் என்று சொல்லிக் குடைச்சாமி, முந்திய அமாவாசையில் தான் இருந்த மூலை அறையில் போய் உட்கார்ந்தார். வழக்கம் போல் சிதம்பரநாதன் நடுவில் வந்து உட்கார்ந்தார். அம்பலம் கிரகங்களைப் பற்றிச் சொன்னமாதிரி மனிதர்கள் எல்லா நேரமும் ஒன்றாக இருப்பதில்லை. சிலபேர் சந்தோஷமாக இருந்தார்கள், சிலபேர் ஏதோ யோசித்தபடி இருந்தார்கள். குடைச்சாமி கூப்பிட்டு அறைகளில் உட்கார்த்தியவுடன் வெவ் வேறு கிரக மனிதர்களும் அவரவர் இயற்கையான சுபாவத்தை அடைந்த மாதிரி எனக்குத் தோற்றியது. அறையில் குடைச்சாமி இருத்தியிருக்கிறாரே என்கிற மாதிரியான உணர்வுகள் இல்லை. ஆனால், ஒன்று சொல்கிறேன், மனிதர்கள் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருத்தருக்கும் பல்வேறு முகங்கள். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு முகம். ஊர்ப் பெரிய மனிதர்களுக்கு பல முகங்கள் நிறைய இருந்தனவென்பது குடைச்சாமி யாகத்தில் நன்றாகவே தெரிந்தது. துரை, மணி மற்றும் எனக்கெல்லாம் இந்தக் குறை பெரிதாக இல்லை. மணியனுக்குக் குடிக்க வேண்டும். துரைக்குக் கனகசபையிடம் நல்ல பேர் வேண்டும். எனக்குக் கனகத்தில் ஆசை ஆரம்பித் திருந்தது. அவ்வளவுதான். வேறு முகங்கள் எங்களுக்கு இல்லை . அது ஒருபுறம் இருக்க, அந்தக் கூட்டத்திலும் கனகத்தைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று எனக்குத் தோற்றவில்லை. துரையும் மணியும் ஏதோ விவாதம் புரிய ஆரம்பித்தார்கள். துரை, கனகசபைக்குப் பின்னால் “ஒரு நாயைப் போல் ” ஓடுகிறான் என்று மணியன் இரைந்தான். “ஒரு குடிகாரனுக்குத் தன் நிலைமை ஒருநாளும் தெரியவராது” என்று துரை திருப்பிக் கத்தினான். அந்தப் பெரிய மனிதர் கூட்டம், ஒரு சிறிது நேரம் இவர்கள் விவாதத்தைப் பார்த்த பின்னர் சிதம்பர நாதனுடன் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். சிதம்பரநாதன் மகனின் வியாதி அடங்குவதாக இல்லையாம். அவர் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தார். நவீன மருத்துவத்தின் ஆச்சரியக் கண்டுபிடிப்புகளைப் பற்றி கனகம் அவரிடம் சொன்னாள். சிதம்பரநாதனுக்கு அது ஆறுதலாக இருந்தது.

குடைச்சாமி ஏதோ எங்கள் எல்லோரையும் கிரகங்கள் என்று சொன்னாரே தவிர, இந்தப் பெரிய மனிதர் கூட்டத்திற்கும் எங்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. எங்களுக்கும் என்றால் நான், துரை, மணி இவர்களைச் சொல்கிறேன். பணக்காரராயும் சமூகத்தில் வலிவு படைத்தவர்களாயும் இருக்கிறவர்களைக் கடவுளைப் போலிருக்கிற சாமியாரே மதித்து நடத்தி, எங்களைப் போலிருக்கிற ஏழைகளையும் நசிந்து போனவர்களையும் சனியனாயும் ராகுவாயும் கேதுவாயும் சபித்துக் கேவலப்படுத்துவது மணியனை ஆத்திரப்படுத்தியது.” சிவம் ஒரு கணம் நிறுத்தினான்.

“இதிலென்ன ஆச்சரியம்?” அம்பலம் தாடியைத் தடவிக் கொண்டான்.

“அதில் மணியன் ஆத்திரப்படுவதற்கு என்ன இருக்கிறது? காட்டிற்குப் போனால் சிங்கம் புலிகளும் இருக்கும். அவர்க ளுக்கு இரையாக மான், மரைகளும் இருக்கும். மனிதர்களுக் குள்ளும் இது மாதிரித்தான்.” கேட்டுக்கொண்டிருந்த நாதன் சொன்னான்.

“எருமைகளே ! மானாய் இருக்கும் மனிதன் சிங்கமாய் மாற ஒரு வினாடி போதும். யானைக்கும் அடி சறுக்கும் என்றெல்லாம் கேள்விப்படவில்லையா? இதெல்லாம் உங்கள் புத்திக்கு எட்டாதது. இதற்குள் நீங்கள் ஏன் வருகிறீர்கள்?” அம்பலம் எரிச்சலுற்றான்.

சிவம் இந்த உரையாடலினால் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்தான். “கிரகங்களை இடம் மாற்றியதனால், புதிய நெருக்கங்கள் ஏற்படாது போனாலும் தொடர்புகள் மாறிப் போயின. துரையோடு மணி விவாதித்துக்கொண்டிருந்த தினால், அதற்கு முந்திய முறை போல் மணியன் பெரிய மனிதர் யாருடனும் சண்டை போடவில்லை . பெரிய மனிதர்கள் தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக்கொண்ட மாதிரி இருந்தது. எல்லோரும் சிதம்பரநாதனுடன் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதிலேயே குடைச்சாமி கவனமாக இருந்தார். என் கவனம் கனகத்திலேயே இருந்தது. சிதம்பரநாதனிடம் ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அவர் மகனின் வியாதி அடங்குவதாக இல்லையென்றால், நான் என்ன சொல்ல முடியும்? மருத்துவனாக இருக்கிற என் தம்பி மனோகரனைப் பற்றி அவரிடம் சொன்னேன். மருத்துவத்தில் என்ன துறையில் அவனுக்கு விசேஷ பயிற்சி இருக்கிறது என்று கேட்டார்கள். எனக்கென்ன தெரியும்? அவன் பிரபலமான மருத்துவன் என்பதையும் அவன் நகரத்து விலாசத்தையும் சொன்னேன். “ஓ! அவன் உன் தம்பியா?” என்று பலபேரும் சொன்னார்கள். “தெரியாமல் போயிற்றே” என்று குமாரசாமி குறைப்பட்டுக் கொண்டார். அவன் உயர்நிலையை வைத்து என்னை மேலெழுப் பிக்கொள்ளும் யோசனை எனக்கேது? சிதம்பரநாதன் “குடல் சிகிச்சை என் தம்பிக்கு தெரியுமா?” என்று கேட்டார். அவனைத் தான் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். பேச்சு என் பக்கம் திரும்பியதில் கனகமும் என்னைப் பார்த்தாள். கனகம் என்னைப் பார்த்தது துரைக்குப் பிடிக்காமல் போய் விட்டது. அவளுக்குக் காவல்காரன் தான் என்ற யோசனையு டன் என்னைப் பார்த்து முறைத்தான். மணியன் துரையுடன் தன் விவாதத்தை நிறுத்துவதாக இல்லை. “இங்கே பாரடா” என்று மணியன் துரையனை மறுபடியும் விவாதிப்பதற்கு இழுத்தான். கனகசபைக்கு மணியன் மேல் எரிச்சல் வந்தது. ஆனால், துரையைப் பார்த்து, ” அங்கே மணியனுடன் என்ன விவாதிக்கிறாய்?” என்று விவாதத்தை அடக்க முயற்சித்தார். “மணியன் அங்கிருக்கத் தகுதியில்லாத நாய்” என்று துரை கனகசபையிடம் சொல்ல, மணியன் பதிலுக்கு துரையைப் பார்த்து, “நீ பணக்காரர் கால்கழுவும் தண்ணீரைக் குடிக்கும் பன்றி” என்று சொல்ல, இரண்டு பேரும் கைகலப்புக்குத் தயாரானார்கள். கனகசபை வேறுவழி தோன்றாதவராகக் குடைச்சாமியைப் பார்க்க முயன்றார். குடைச்சாமி சிதம்ப ரநாதனைப் பார்த்தபடி இருந்தார். சிதம்பரநாதன் சண்டை பிடித்துக்கொண்டு இருந்த ராகுவையும் சனியையும் ஒரு சிறிது நேரம் பார்த்துவிட்டு, அவரும் குடைச்சாமியைப் பார்க்க முயன்றார். வேறுவழியில்லாது யோகநாதனும் பத்மநாதனும் எழும்பிப் போய், துரையையும் மணியையும் பிரித்துவிட்டார்கள். செல்வராஜா எழும்பி வந்து, “இங்கே பார் மணி! எங்களைக் குடைச்சாமி கூட்டிக்கொண்டுவந்திருப்பது சிதம்பரநாதனின் மகனுக்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பதற்கு. இந்த நேரத்தில் சண்டைபிடித்தாயானால், அவரால் ஒன்றும் சொல்ல முடியாது. சாகக்கிடக்கும் ஓர் உயிரில் கருணை வைத்தாவது சமாதானமாக ஏதாவது சொல். இல்லையென்றால் அமைதி யாகவாவது இரு” என்று சொன்னார். மணி, தன் எரிச்சலை அவர்கள் பக்கம் திருப்பினான்.

“இந்தப் பெரிய மனிதர்களாய் இருக்கிறீர்கள். இந்தச் சின்ன விஷயம் கூட உங்களுக்குத் தெரியவில்லை. இந்த மடைச் சாமியுடன் நீங்கள் நேரத்தை வீணாக்குவதைவிட்டு ஒரு மருத்துவனிடம் சிதம்பரநாதனின் மகனைக் கூட்டிக்கொண்டு போவது நல்லது. அது இனிமேல் சரிவராது என்றால், அவனுக்கு சந்தோஷம் கிடைக்க முயற்சி செய்யுங்கள் ! வேணுமென்றால் கள்ளோ சாராயமோ நான் வாங்கிக் கொடுக்கிறேன்” என்று கத்தினான். எல்லோரும் குடைச்சாமி பக்கம் திரும்பினார்கள். குடைச்சாமி எல்லோரையும் அடுத்த அமாவாசையன்று வரச்சொல்லிவிட்டு, சிதம்பரநாதனைப் பார்த்து, “நீ கொஞ்சம் நில்!” என்றார். நாங்கள் எல்லோரும் அன்று போய்விட்டோம். அடுத்த இரண்டு அமாவாசைகளுக்குள் விஷயங்கள் முற்றிப் போயின. அதை நாளைதான் தொடர வேண்டும்.” சிவம் நிறுத்தினான்.

கதையைச் சொல்ல நேர்ந்தது சிவத்துக்கு ஆறுதலைக் கொடுத்தது. பல நாட்களுக்குப் பின்னர் நிம்மதியாக நித்திரை கொள்ள ஆரம்பித்தான்.

எருமைகள் இரண்டும் குழம்பிப்போய்விட்டன. சிவம் சொன்ன பெரிய மனிதர்களில் அவர்களுக்குக் கனகசபை, பத்மநாதன், யோகநாதன் இவர்களைத் தெரிந்திருந்தது. ஆனால், நேரடித் தொடர்புகள் இல்லை.

‘இவர்கள் ஏன் இந்தச் சின்ன மனிதர்களுடன் போய்ச் சேர்ந்தார்கள்?

குடைச்சாமி என்ன செய்ய முயன்றார்? நாளைக்கு இந்தத் தாடி அம்பலத்தைக் கேட்டுக்கொள்ளலாம்’ என்று நித்திரை கொள்ளப் போய்ச் சேர்ந்தன.

அம்பலம் தாடியை வருடிக்கொண்டே சிந்திக்க ஆரம்பித் தான். குடைச்சாமியை நினைத்து ஒருதரம் தனக்குள் சிரித்தபடி, “மடையன்” என்று முணுமுணுத்துக்கொண்டான். அவனுக்கு நித்திரை வர நெடுநேரம் எடுத்தது.

சனிக்கிழமை ஒரு வித்தியாசமான நாளாக அமைந்தது. அம்பலம் எழுந்தபோது காலை உணவைத் தப்பவிட்டிருந் தான். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு தன் இருத்தலைப் பிரகடனப்படுத்திக்கொண்டான். வழக்கம் போல் கணக்குப் போடத் தோன்றவும் இல்லை. இன்னமும் சிவமும் எருமைகளும் துாங்கியபடி இருந்தார்கள். மற்றக் கைதிகள் ஆரவாரம் ஒன்றும் இல்லை. எங்கேயோ கூட்டிக்கொண்டு போகப்பட்டிருக்க வேண்டும். காவலாளி சங்கரன் வந்து எருமைகளை எழுப்ப முயன்றபோது, அம்பலம் அவனைத் துரத்தினான்.

“ஏய் சங்கரன்! அவர்கள் நேற்று இரவிரவாகக் கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பாதே!”

சங்கரன், அம்பலத்தின் கட்டளையைப் புறக்கணித்தவனாக அவர்களை எழுப்ப முயன்றபோதே, அம்பலத்திற்கு ஏதோ பின்னணியில் நடக்கிறது என்று புரிந்தது. சங்கரனை அதட்டினான்.

“ஏய்! என்ன நடக்கிறது இங்கே?”

மற்றச் சிறைக் கைதிகள் இல்லாமல் தனியாக அம்பலம் இருக்கும் நிலையைச் சங்கரன் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தபடி, “அது உனக்குத் தேவையில்லாத விஷயம்” என்று உறுமினான்.

“என்ன நடக்கப்போகிறது என்று பாரேன்!” அம்பலம் எகத்தாளமாகச் சிரிக்க, சங்கரனைப் பயம் கவ்விக்கொள்ள ஆரம்பித்தது.

“உன்னை என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று அலுத்துக்கொண்டு, சங்கரன் திரும்ப முயன்றபோது, எருமைகள் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டன.

“சாப்பிட ஆயத்தமாகுங்கள்!” என்று சங்கரன் அவர்களைப் பார்த்துச் சொல்ல, “நாங்களும் வருவோம்” என்று அம்பலம் சொன்னான்.

“வந்து தொலையுங்கள் ! சிறிது நேரத்தில் நான் உங்களைக் கூட்டிக்கொண்டுபோக வருவேன்” என்று சங்கரன் சொல்லி விட்டுப் போனான்.

அம்பலம் சிவத்தை எழுப்பினான். சிவம் மிகவும் களைப் படைந்திருந்தான். எருமைகள் காலைக்கடனுக்குப் போய் வரும் வரைக்கும் அம்பலமும் சிவமும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

“என்ன நடக்கிறது? எல்லோரும் சாப்பிட்டு எங்கேயோ போய்விட்ட மாதிரி இருக்கிறதே.” சிவம் சிறையின் அமை தியை அனுமானித்து அம்பலத்திடம் விளக்க முயன்றான்.

எருமைகள் வந்தவுடன் சங்கரன் வந்து, “நீங்கள் ஆயத்த 354 மில்லாதபடியால் இவர்களை மட்டுமே நான் சாப்பிடக் கூட்டிக்கொண்டு போகப்போகிறேன். உங்களுக்கு மத்தியா னம்தான் சாப்பாடு” என்று சொல்லிவிட்டு அவர்களை இழுத்துக்கொண்டு போனான். அம்பலத்திற்கு, காவலாளி சங்கரன் இப்படி அவசரம் அவசரமாக இவர்களை இழுத்துக் கொண்டுபோவது ஏதோ திட்டத்தின்படி என்று புரிந்தாலும், சங்கரனை இந்தமுறை பயப்படுத்தவோ அல்லது இகழவோ முயலவில்லை. பேசாமல் காலைக்கடன் முடிக்கப் போனான்.

சிவம் தன் அறையின் கம்பிகளுக்கப்பால் இருக்கும் உலகத்தின் நிலையைக் கற்பனை செய்ய முனைந்தான். தன் சகோதரிகளையும் அவர்கள் குடும்பங்களையும் நினைத்துக் கொண்டான். “நான் சிறைப்பட்டபோது, அவர்களாவது வந்து பார்த்தார்கள். என் தம்பிகளில் ஒருவனாவது வந்து பார்க்க வில்லை . என் வழக்கில் ஒரு நல்ல வழக்குரைஞன் வாதாடி யிருப்பானென்றால், நான் விடுதலை செய்யப்பட்டிருப்பேன். அவ்வளவு தூரம் ஏன்? எனக்கு நல்ல சமூக நிலை இருந்தால், என்னைப் பிடித்துக்கொண்டு போயிருக்க மாட்டார்களே! கிரகங்கள் சூழ்வதைவிட மற்ற மனிதர்கள் சூழ்வது, ஒரு மனிதனை மிகவும் பாதிக்கிறது. தூரத்தில் வானவெளியில் இருக்கும் கிரகங்கள் என்ன செய்ய முடியும்? குடைச்சாமி அதைப் புரிந்து கொண்டாரா?”

நெஞ்சில் கசப்பு எழுந்தது. அம்பலம் திரும்பி வந்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டான். சிவம் காலைக்கடன் செய்யப் போனான்.

அம்பலம் தாடியைத் தடவியபடியே குடைச்சாமியின் பரிசோதனையைக் கிரகித்து கொள்ள முயன்றான்.

சிதம்பரநாதன் சாதகத்தில் லக்கினம் மிதுனத்தில். இரண் டில் வியாழனும் ராகுவும். நாலில் புதனும் சனியும். ஏழில் சந்திரன். எட்டில் செவ்வாயும் கேதுவும், ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன். பத்தில் சூரியன். சுகவீனமாக இருந்த மகனைக் கூட்டிக்கொண்டு பரிசோதனை செய்ய முடியாததனால், சிதம்பரநாதனின் சாதகத்தை வைத்துப் பரிசோதனை நடந்தி ருக்கிறது. சிதம்பரநாதனின் சாதகப்படி எந்த நேரத்தில் அவருக்குப் பெரிய மனப்பாதிப்பு நேர இருக்கிறது என்பதைப் பார்த்து, அவர் மகன் குணமடைவானா என்று சொல்ல முயன்றிருக்கிறார் குடைச்சாமி. அவர் மகனும் அவரும் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தீர்மானித்துக் கொண்டாரா? குடைச்சாமி மிகப்பெரிய முட்டாள் யோசனை யில் இறங்கி, இந்தச் சிவத்தைப் படுகுழியில் தள்ளியிருக்கிறார். குடைச்சாமி முழு முட்டாள் மாதிரியாகவும் தெரியவில்லை. சிவம் கேதுவாக இருந்தால்…

இப்போது முதல் பிரச்சினை இந்த எருமைகள் என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்று அனுமானிப்பதுதான்.

நேரம்! சரியாய் அமைய வேண்டிய நேரம்! எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நேரம்! இது தெரியாதவரைக்கும் திட்டம் தீட்டுவதெல்லாம் வீண் முயற்சி. நேரம் கழித்தே நேரத்தின் அருமையும் விஷயங்களின் அமைப்பும் தெரிய வருகிறது. முதலிலேயே தெரிந்து கொள்பவன் சாத்திரக்காரனா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

சிவம் திரும்பி வந்தான்.

“எருமைகள் ஏதோ திட்டம் தீட்டியிருக்கின்றன. பணம் கொடுத்துத்தான்.” என்று அம்பலம் சொல்லத் தொடங்கினான்.

“உனக்கு வருங்காலம் தீர்மானிப்பதுதான் தொழில் இல்லையா?” சிவம் கேட்ட தொனியில், “இந்த எருமைகளுக்கு என்ன நடந்தால் என்ன” என்பது இருந்ததென்பதை அம்பலம் புரிந்து கொண்டான்.

“சிவம், இவ்வளவு உனக்கு நடந்திருந்தும் சம்பவங்களின் தொடர்புகளும், எவ்வாறு மனிதர்கள் வக்கிரமமாகத் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் புரியவில்லையே!” அம்பலம் சொல்லி முடிப்பதற்குள், “டக் டக்’ என்று சப்பாத்து ஒலி கேட்டது. வந்த காவலர்கள் இருவரும் அறை எண்ணைச் சரிபார்த்த பின்னர், “நீங்கள் எங்களுடன் வாருங்கள் ! சீக்கிரம்! சீக்கிரம்!” என்று கட்டளையிட்டுக் கூட்டிக்கொண்டுபோக ஆரம்பித்தார்கள். அம்பலம் சிவத்தைப் பார்த்து, “போகலாம்” என்று தலையாட்டினான்.

“இது எருமைகள் போட்ட திட்டத்தில் நடக்கும் குளறுபடி” என்பது அம்பலத்திற்குப் புரிந்தது.

“சிவம் கேது என்றால், இது விடுதலை நேரம். எருமைகள் திரும்பி வந்து ஏமாறப்போகின்றன” என்று தனக்குள் சொல்லிச் சிரித்துக்கொண்டான். காவலர்கள் ஒன்றும் பேசவில்லை. வழக்கமாக இருக்கும் காவலர்கள் யாவரும் மற்றக் கைதிகளுடன் வெளிவேலைக் காவலுக்குப் போய்விட்டிருந்தார்கள். அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி, காயங்களுக்குக் கட்டுப்போடும் துணியால், கண், மூக்கு, காதுகள் தவிர தலையின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிக்கட்டினார்கள். கைகாலிலும் துணியால் சுற்றினார்கள். சிவப்பு மையை அங்கங்கு தெளித்தார்கள். வாயைத் திறந்து ஏதாவது சொல்ல வேண்டிய நேரம் அதுவல்ல என்பது அம்பலத் திற்குத் தெரிந்தது. விரலை வாய்மேல் வைத்துச் சிவத்தை அமைதி யாக இருக்கும்படி சொன்னான். நன்றாக அடிபட்டு வைத்திய சாலைக்குக் கொண்டுபோகப்படுகிறவர்கள் மாதிரி சிவத்தையும் அம்பலத்தையும் மாற்றிவிட்டிருந்தார்கள். சிறையின் வெளிக் காவலர்கள் பரிசோதனை செய்து அம்புலன்ஸை அனுப்பும் போது, “நாதன், செல்வன்” என்ற பெயர்கள் கேட்டன. அம்பலம் சிரித்துக்கொண்டான்.

“இது இன்னும் குழப்பத்தில் முடியப்போகிறது.”

அம்புலன்ஸைப் பாதி வழியில் ஒரு மறைவான இடத்தில் நிறுத்தி, இவர்களை இறக்கிவிட்டு அவர்களைப் போல் கட்டுப் போடப்பட்டிருந்த இருவரை அவர்களுக்குப் பதிலாக ஏற்றினார்கள்.

“உங்கள் கார் இன்னும் அரை மணி நேரத்தில் வரும். கந்தசாமி காசு முழுவதும் தந்துவிட்டான். நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களால் பேச முடியாது. நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை” என்று அவர்களுக்குப் பதிலாக ஏற்றி யிருந்தவர்களைக் காட்டினார்கள், காவலர்கள். “தேவைக்கு இந்தக் காசை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடைகளும் இந்தப் பையில் இருக்கின்றன” என்று சொல்லி ஒரு பையை அவர்களிடம் வீசி எறிந்து அம்புலன்ஸில் ஏறிக்கொண்டார்கள். அம்புலன்ஸ் அவசரமாகப் போய்ச் சேர்ந்தது.

கட்டுகளை அவிழ்த்து மாற்று உடைகளை அணிந்தபின் அம்பலம், சிவத்திற்குச் சம்பவங்களைப் புரியவைக்க முயற்சிப் பதற்கு முன் அங்கிருந்து ஓடிவிடவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, “இந்தக் கட்டுகளை இங்கு போட முடியாது. வா, நாங்கள் இங்கிருந்து உடனே போய்விட வேண்டும்” என்று சொல்லி அவனை இழுத்துக் கொண்டு குறுக்குப் பாதை ஒன்றில் போக ஆரம்பித்தான். வெகுதுாரம் போனபின்னர் கட்டுத்துணிகளை எறிந்த பின்னர், அம்பலம் சிவத்துக்கு விவரிக்க முயன்றான். “எருமைகள் காசைக் கொடுத்துத் தங்களுக்கு விடுதலையை ஒழுங்குபடுத்தியிருக்கின்றன. சிறையில் விபத்தாகக் காயம்பட்டதாகப் பாவனை செய்து, பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு போக ஒழுங்குகள் செய்து, போகும் வழியில் இரண்டு ஊமையர்களைப் பிடித்து அவர்களுக்குப் பதிலாக அனுப்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். மற்றக் கைதிகள் வெளியில் போகும் போது, இவர்கள் பின்னால் தங்கி இந்த மருத்துவ மனைக்குப் போகிற மாதிரி ஏற்பாடு. ஏற்பாடு செய்தவர்கள் முழு விவரத்தையும் சங்கரனிடம் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. வந்தவர்களுக்கு எருமைகள் யார் என்று தெரியாது. சிறை அறையின் எண் மட்டுமே தெரியும். ஏற்பாடுகளின்படி இவர்கள் இருவர்மட்டுமே சிறை அறையில் இருக்கப்பட வேண்டியவர்கள். நாங்களும் துாங்கிவிட்டு எழும்ப நேரமாகி, இவர்களும் சாப்பிடப் போய் நேரத்திற்குத் திரும்பாததினால், இந்தக் காவலர்கள் அனுப்பப்பட்ட நேரத்தில் நாங்கள் தான் சிறை அறையில் இருக்கும்படி ஆனது. நாங்கள்தான் எருமைகள் என்று இந்த முட்டாள்கள் எங்களை இப்படி நாடகமாடி விடுவித்திருக்கிறார்கள்.”

“எங்களுக்கு என்ன நடக்கப்போகிறது?” சிவம் பதட்டப்பட்டான்.

“கவலைப்படாதே! எருமைகள் சிறையறைக்குத் திரும்பும் போது நாங்கள் இல்லாததைத் தெரிந்து கொண்டு நடந்தவற்றைப் புரிந்து கொள்வார்கள். அவர்களைத் தப்ப வைக்க முயற்சித்த திட்டம் தெரியவந்தால், அதிகாரிகளுக்கும் பிரச்சினை வரும். இதனால், நாங்கள் தான் அந்த ஊமைகளாகிப் போனவர்கள் என்று சொல்லி மேலிடத்தை ஏமாற்றிவிடுவார்கள். முற்றாகவே எங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. எருமைகளுக்கு விடுதலை கிடைக்க இருந்த ஒரு வாய்ப்பும் போய்விட்டது. இந்த மாதிரி நாடகம் திரும்ப நடத்துவது மிகக் கஷ்டம். குடைச்சாமி சொன்னது சரிதான். நீ கேது! கைதிகளை விடுவிக்கும் சக்தி!” அம்பலம் தனக்குக் கிடைத்த சுதந்திரத்தையும் எருமை களுக்கு வரப்போகிற கோபத்தையும் நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

“முதல் வேலையாக இந்தத் தாடியை எடுத்துவிட வேண்டும்” என்று சிவம் நினைவூட்டினான்.

வெகுதுாரம் நடந்து அந்த ஊரைக் கண்டார்கள். அம்பலம் தாடியை எடுத்த பின்னர் ஒரு ஹோட்டலில் தங்க முடிவெடுத் தார்கள். அம்பலத்திற்கு வெளியுலகின் வெளிச்சம் கண்ணைக் கூசவைத்தது. அப்போதுதான் சக கைதிகள் ஞாபகம் வந்தது. “எங்களுக்கு விபத்து நடந்து வைத்தியசாலைக்குக் கொண்டு போன கதையை அதிகாரி, சங்கரனிடம் சொன்னால் போதும். எல்லோருக்கும் இந்தக் கதையைச் சொல்லிவிடுவார்கள். இடப் பக்கத்து அறையில் கணபதி, சின்னத்துரை…. வலது அறையில் லிங்கம், ஆறுமுகம்…. எங்களுக்கு உண்மையாக நடந்ததைத் தெரிந்து கொள்வார்களா? அவர்கள் புத்திசாலிகள். கட்டாயம் தெரிந்துகொள்வார்கள்.

“இவர்கள் தந்திருக்கிற காசு நிறைய நாள் வரும். மெய்யான எதிர்காலம் சுவாரசியமானதுதான்.”

அம்பலம் நெடுமூச்சு விட்டுக்கொண்டான். அன்று நன்றாகச் சாப்பிட்டு, நடந்த களையினால் துாங்க ஆரம்பித்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் எழும்பி, “என்ன செய்யலாம்” என்கிற யோசனையுடன் திட்டங்கள் போட ஆரம்பித்தார்கள்.

“நீயும் என்னுடன் வா, என் ஊருக்குப் போகலாம். என் தோட்டத்தில் வேலை செய்யலாம்.” சிவம் அம்பலத்தை அழைத்தான்.

“நீ குடைச்சாமி கதையைச் சொல்லி முடி.” அம்பலம் தாடியை வருடினான்.

சிவம் எதிர்பாராத விடுதலையினால் உற்சாகமடைந்திருந்தான். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்ற பயமும் கவ்வியது.

“நீ என்ன மடையனாக இருக்கிறாய்? குடைச்சாமி கவலை எனக்கே போய்விட்டது. நீ ஏன் இந்தக் கதையைத் திரும்பவும் நினைவூட்டுகிறாய்? நான் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா?”

“மனிதனுக்கான சாபம் இதுதான். கணத்துக்குக்கணம் கிடைப்பதை வைத்தே வாழ்க்கையை ஓட்டப்பார்க்கிறோம். நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்ற யோசனை கொஞ்சமும் உன்னிடம் இப்போது இல்லை, பார்த்தாயா ? ஆனால், எல்லாவற்றிற்கும் தொடர்ச்சியிருக்கிறது. குடைச்சாமி விவகாரம் முற்றாகத் தெரிந்தால் தான் நாளை உனக்கு என்ன நடக்கப் போகிறது என்று என்னால் சொல்ல முடியும். இன்னொரு முறை சிறைக்கு இழுக்கப்படமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?” மயான யாத்திரைக்குத் திரும்பவும் இழுக்கிற அம்பலத்தைப் பார்த்து அவனுக்குக் கோபம் வந்தது.

“உனக்குக் கோபம் இந்த நேரத்தில் வரப்படாது.” அம்பலம் எச்சரித்தான். “இன்னும் எங்கள் நிலவரம் தெளிவாகவில்லை . நீ இப்போது என்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறாய். உன் எதிர்காலமும் என் எதிர்காலமும் தனித்தனியாகக் கணிக்க முடியாது. நீ சொன்னால் தான் என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியும். உனக்கே குடைச்சாமி என்ன செய்தார் என்று அறிய விருப்பமில்லையா?”

மறுபடியும் சிறைக்குள் போன மாதிரி உணர்வு சிவத்தை ஆட்கொண்டது. சொல்ல ஆரம்பித்தான்.

“அடுத்த அமாவாசை அன்று மனியனைக் குடிவெறியில் லாமல் குடைச்சாமியிடம் கூட்டிக்கொண்டு போனேன். போய்வந்தபின்னர் குடிக்கப் போகலாம் என்று சொல்லி வைத்தேன். துரையிடம் அவனுக்குக் காழ்ப்பு இன்னமும் இருந்தது. “இந்த அடிமைத்தனம் எப்போது போகப்போகிறது?” என்று குறைப்பட்டுக்கொண்டே வந்தான். குடைச்சாமியிடம் அன்றாவது என் குறைகளைச் சொல்லி வழி கேட்கலாம் என்று இருந்தேன். என்னையும் ஒருநாள் நடுமுற்றத்தில் இருத்தி கிரகங்களைச் சூழவிட்டு எனக்கு என்ன நடக்கப்போகிறது என்று சொல்லக் கூடும். “நீ பணக்காரனில்லை – உனக்காக இப்படியான ஒரு கூத்து குடைச்சாமி அடிக்காது. உனக்கு இந்தப் பெரிய மனிதர் கூட்டம் வந்து உட்காருமா? நீ இருந்து பார். இந்தப் பெரிய மனிதர் கூட்டம் எப்படியான ஒரு சுயநலக் கும்பல் என்று” என மணி தர்க்கித்தான். அவனிடம் கனகத்தைப் பார்க்கத்தான் நான் போகிறேன் என்று சொல்லலாமா என்று முதலில் யோசித்து, அப்புறம் அதைத் தெரியப்படுத்திக்கொள்ளலாம் என்று முடி வெடுத்தேன். துரை இன்னும் வந்திருக்கவில்லை. குடைச்சாமி அதுபற்றிக் குறைப்பட்டுக்கொண்டிருந்தார். கனகசபை, “அவன் இப்போது வந்துவிடுவான்” என்று சாமியாரை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார். கனகம், எஞ்சினியர் செல்வராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவர்களை இடைவெட்டிக்கொண்டு ஏதாவது பேசத் தயக்கமாக இருந்தது. மணி , அரசியல்வாதி பத்மநாதனைப் பார்த்தபடி, ஒரு மூலையில் நின்றோம். சிதம்பரநாதன் வந்து குடைச்சாமி காலில் விழுந்து மற்றும் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு என் பக்கம் வந்தார். “சிவம், உன் தம்பி மனோகரனிடம் என் மகனைக் காட்டினோம். அவன் கெட்டிக்கார மருத்துவன் போல் தோன்றுகிறான். அவனி டம் விசேஷ சிகிச்சைக்கு இன்னும் ஒரு கிழமையில் போகப் போகிறோம்” என்று சொன்னார். சந்தோஷமாக இருந்தார். அவர் சொன்னதை எல்லோரும் பார்த்தார்கள். என் தம்பியை நல்ல மருத்துவன் என்று சொன்னதும் எனக்குச் சந்தோஷமாக இருந்தது. துரை வந்து சேர்ந்ததும், முன்னரைப் போலவே குடைச் சாமி ஒரு துண்டுக் காகிதக் கணக்கைப் பார்த்து, எல்லோரையும் அறைகளில் உட்காரவைத்தார். எல்லோரையும் எங்கெங்கே உட்காரவைத்தார் என்று உன்னிப்பாக அன்று கவனிக்க அவசிய மில்லை . ஏனென்றால் நான், கனகசபை, கனகம், துரை இப்படி எங்கள் நாலு பேரைத் தவிர எல்லோரும் முந்தைய முறை போன்றுதான் உட்காரவைக்கப்பட்டார்கள். உன் கணக்குப்படி கனகம் பதினோராம் இடத்தில், நான் பன்னிரண்டில், கனகசபை இரண்டில், துரை ஆறில். அந்த முறை, துரை என்ன செய்கிறான் என்று பார்ப்பதில் குடைச்சாமி மும்முரமாக இருந்தார். துரையோ கனகசபை அல்லது கனகம் என்ன உத்தரவு இடப்போகிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது. எனக்கு அதிர்ஷ்ட ம் இருந்தால், கனகம் அடுத்தமுறை என் அறையில் வரக்கூடும். பக்கத்து அறை என்றாலும் எனக்கு சந்தோஷமாகவே இருந்தது. குடைச்சாமி துரையைப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கனகசபை பார்த்துவிட்டு, “ஏய் துரை! நீயும் சிதம்பரநாதனை ஏதாவது கேளேன்” என்று உத்தரவிட்ட பின்னர்தான் துரைக்குக் கேள்வி கேட்கலாம் என்று தோன்றியது. “எந்த மருத்துவமனையில் இப்போது உங்கள் மகனை வைத்திருக்கிறீர்கள்? என்று சிதம்பர நாதனைக் கேட்டான். என் தம்பி மனோகரன் இப்போது தன் மகனுக்கு மருத்துவம் பார்க்கும் விவரத்தைச் சொன்னார். “அவன் நல்ல மருத்துவன்” என்று தான் கேள்விப்பட்டதையும் சொன்னார். துரை, “இந்த முட்டாள் சிவத்தின் தம்பி எப்படி நல்ல மருத்துவனாக இருக்க முடியும்” என்ற நக்கல் நோக்குடன் என்னைப் பார்ப்பதாகத் தோன்றியது. குடைச்சாமி இவன் இப்படிப் பார்ப்பதையும் பார்த்துக் கொண்டார். எல்லோரும், என்ன சிகிச்சை செய்யப்போகிறார்கள் என்கிற விவரத்தைக் கேட்டார்கள். கனகம் என்னைப் பார்த்து, “உனக்கு எத்தனை சகோதரர்கள்?” என்று கேட்டாள். எல்லா விவரமும் சொன்னேன். “நீ மாத்திரம் எப்படித் தோட்ட வேலை செய்யலாயிற்று?” என்று கேட்டாள். “நான் படிக்கப் போயிருந்தால், இப்போது இவர்கள் எல்லோரும் தோட்ட வேலை செய்து கொண்டிருப் பார்கள்” என்றேன். “ஓ” என்றாள். அவளுக்கு என் நிலைமை புரிந்திருக்கும் என்று பட்டது. குடைச்சாமி இடங்கள் மாற்றியதால் கிரகங்களுக்குள்ளும், மற்றும் அவர்கள் சிதம்பரநாதனை அணுகு வதான உறவுகளிலும் மாற்றங்கள் இருந்தனதான். அன்றுதான் குழப்பமில்லாமல் யாகம் முடிந்திருந்தது – மணியன் குடி வெறியுடன் வரவில்லையென்றதால் . அடுத்த அமாவாசைக் கான ஏற்பாடுகளை எல்லோருக்கும் குடைச்சாமி சொல்லிவிட்டு, பெரிய மனிதர்கள் எல்லோரையும் பின் தங்கும்படி கேட்டுக் கொண்டார்.

“சிவம்! நீயும் நில். மற்றவர்கள் போகலாம்!” என்று கட்டளையிட்டார்.

துரைக்கு இது பெரிய அவமானமாகப்பட்டது. மணி தான் சாராயம் குடிக்கப்போவதில் அவசரமாக இருந்ததில், “நீ இந்தப் பெரிய கூட்டத்துடன் சேர்ந்துவிட்டாய். இவர்க ளைப் போல் எல்லோரையும் ஏமாற்றக் கற்றுக்கொள்ளாதே!” என்று புத்திமதி சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அந்த முறையாவது குடைச்சாமியிடம் என் தம்பிமாரைப் பற்றிச் சொல்லி என் கவலைகளை நிவர்த்திக்கலாம் என்று பார்த்தேன். குடைச்சாமி எல்லோரையும் முற்றத்தில் அமர்த்தி எல்லோரைப் பற்றியும் ஒவ்வொரு வரி சொன்னார். மற்றப் பெரிய மனிதர்களுக்கு இது வழக்கமானது என்று தெரிந்தது.

“கனகசபை – நீ, புதுக் கொள்முதல் செய்வதென்றால் இரண்டு வாரம் பொறு!

கனகம் – உன் சகோதரிகளுடன் இரண்டு கிழமைகளுக்கு அதிக பேச்சுவார்த்தைகள் வேண்டாம்!

குமாரசாமி – நீ பிரயாணம் செய்ய, இது நல்ல நேரம்!

செல்வராஜா – உனக்கு இன்னும் மூன்று கிழமைகளில் உத்தியோக உயர்வு வரும்!

பத்மநாதன் – வெளிநாட்டுப் பிரயாணம் ஒன்றும் இப்போது நல்லதல்ல!

யோகநாதன் – மூன்று வழக்கு வெற்றிகள் எதிர்பார்க்கலாம்!

அப்புறம் என்னைப் பார்த்தார். “நீ கவனமாக இரு!” என்று சொல்லிவிட்டு, சிதம்பரநாதனைக் கூட்டிக்கொண்டு வெளியே போய்விட்டார். மற்றவர்கள் முற்றத்தில் இருந்து தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அங்கிருந்து நான் என்ன செய்வது? குடைச்சாமியிடம் என் தம்பிமாரைப் பற்றிச் சொல்ல அன்றும் சந்தர்ப்பமில்லாது போனது. மணி யனிடம் ஓடினேன். நடந்தவற்றைச் சொன்னேன். “ஏற்கனவே நான் சொல்லவில்லையா? இது ஒரு பெரிய மனிதர் மாதிரி இருக்கிற மிருகக் கூட்டம். இதற்குள் போகாதே!” மணி உபதேசம் செய்தான்.

என்னை ஏன் ‘கவனமாக இரு’ என்று சொன்னார் என்பதுதான் புரியவில்லை என்று அவனிடம் சொன்னேன்.

“என்னத்துக்காகப் பயப்படுகிறாய்? நீ கவனமாக இருந்து ஆகப்போவது என்ன?” என்று தேற்றினான். குடித்ததில் கவலைகள் எங்கோ போய்விட்டன. கனகத்தைப் பார்ப்பதற்கு நான் ஆசைப்பட்டதைச் சொன்னேன்.

“அது சரிவராது! நீ அவளைத் தொடரலாம். ஆனால், அடைய முடியாது. வீணாக நேரத்தைச் செலவிடாதே” என்று சொல்லிவிட்டான். நான் ஏதோ மாயமந்திரத்தால் கட்டுண்ட மாதிரி அவள் பின்னால் போய்க்கொண்டிருக்கிறேன் என்பதைச் சொன்னபோது, அதுதான் குடைச்சாமி உன்னைக் “கவனமாக இரு” என்று சொல்லியிருக்கிறார் என்றான்.

அடுத்த அமாவாசை பெரும் இருளாகிப்போனது.

மணியன் அன்று நன்றாகக் குடித்திருந்தான். இவன் குடித்தாலே பிரச்சினை. ஒருமாதிரி அவனை இழுத்துக்கொண்டு போயிருந்தேன். உபதேசம் யார் காதில் விழுகிறது? எல்லோரும் கவனமாக இருக்கச் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள். இருந்தும் அன்று போய்ச் சேர்ந்தேன். குடைச்சாமி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த உடனேயே அங்கிருந்த மௌனம் ஏதோ நடந்துவிட்டது என்ப

தைக் காட்டியது. எல்லோரும் முற்றத்தில் கூடியிருந்தார்கள். குடைச்சாமி நடுவில் ஒரு நாற்காலியில் இருந்தார்.

நானும் மணியனும் போன உடனேயே, “வந்துவிட்டான் பாவி” என்று சிதம்பரநாதன் பெருங்குரலில் தொடங்கி, “உன் பேச்சைக் கேட்டு உன் தம்பியிடம் போய் என் மகனைக் காட்டினேன். போயேவிட்டான். அறுவைச் சிகிச்சை செய்கிறேன் என்று சொல்லிக் கொடு இருந்த ஒரு வருஷமும் ஒரு மாதமாகிச் சுருங்கி, இப்போது என் மகன் சாம்பல். உன் தம்பியே சொன்னான் “நீ ஒரு போக்கற்ற கழுதை” என்று. உன் பேச்சை நம்பி அவனிடம் காட்டக் கொண்டுபோனேனே” என்று தலையில் அடித்துக்கொண்டார்.

பெரிய மனிதர் கூட்டமும் குடைச்சாமியும் என்ன பேசுவது என்று தெரியாமல் என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குடைச்சாமி, கனகம் இவர்கள் ஒருவரும் என் கண்ணிற்குத் தோற்றவில்லை. எல்லாம் சூனியமாகப்பட்டது. மணியனுக்கு, சிதம்பரநாதனின் குற்றச்சாட்டால் ஆத்திரம் தலைக்கேறிவிட்டது.

“உன் மகன் செத்ததற்கு இவன் என்ன செய்வான்? ஒரு பெண் புலம்புவதைப் போல் புலம்புகிறாய். உங்களுக்கு இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியவில்லை . ஏய் குடைச்சாமி! நீயாவது எடுத்துச்சொல்லேன். யாகம் செய்கிறேன் என்று கூத்தடித்தாயே! அந்தப் பையன் சாவை உன்னால் நிறுத்த முடிந்ததா? இப்படி நடக்கப்போகிறது என்றாவது எச்சரித்தாயா? நீ எரிந்து சாம்பலாக வேண்டும்! இந்தா வருகிறேன்” என்று கத்திவிட்டு, என் கையையும் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடிப்போய், பின்னால் சமையல் கட்டிலிருந்து எரியும் விறகை எடுத்துக்கொண்டு என் கையில் திணித்தான். “நீயே இந்தத் தீயை வை! உன் கையால் இந்தக் கூட்டம் எரிந்து சாம்பலாகட்டும்!”

என் கையை இழுத்துக்கொண்டு முன்வாசலில் நுழையும் போதே எல்லோரும் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். செல்வ ராஜா , என் கையிலிருந்து எரியும் விறகைப் பறித்து வெளியே எறிந்தார்.

“போகட்டும் வாடா” என்று மணியன் என்னை இழுத்துக் கொண்டு போனான். அவனிடத்துக்குப் போய் எனக்கும் வார்த்துக் கொடுத்தான். அடுத்த நாள் நான் எழும்ப நேரமாகிவிட்டது.

எழுப்பியது ஊர்காவலர்.

குடைச்சாமி வீடு எரிந்து சாம்பலாகிப்போயிருந்தது. குடைச்சாமியையும் காணவில்லை. எல்லோரும் அவரும் எரிந்து போயிருக்கக்கூடும் என்று சொன்னார்கள். நான்தான் குடைச்சாமி 362 வீட்டிற்கு நெருப்பு வைத்ததாகவும், அவர் மறைவிற்கும் நான் காரணம் என்று என்னைச் சிறையில் தள்ளினார்கள். அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை எரிந்து போனாரா என்றுகூட ஒருத்தருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை . வழக்கில் பெரிய மனிதர்கள் எல்லோரும் நான் எரியும் விறகுடன் குடைச்சாமி வீட்டை எரிக்க முயன்றதாகச் சாட்சி சொன்னார்கள். மணியன் பேச்சு நீதிமன்றத்தில் செல்லவில்லை. என் சகோதரிகள் என் வழக்கிற்கு வந்தார்கள். என் தம்பிமார் வரவில்லை . ஆயுள் சிறைத்தண்டனைக்காக நான் சிறைக்கு வந்ததிலிருந்து என் கதை உனக்குத் தெரியும்தானே.” சிவம் சொல்லி முடித்தான்.

அவன் இந்தக் கவலையிலிருந்து மீள முடியாது போலிருந் தது. “குடைச்சாமி இப்படி ஆட்களை அறைகளில் இருத்தி என்ன செய்ய முயன்றார்?” சிவம் அப்போதுதான் விளங்கிக் கொள்ள முயன்றான்.

அம்பலம் சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு தன் சிந்தனைத்தீயை வளர்க்க முயன்றான். “ஏய் சிவம்! நான் உன் ஊருக்கு முதல் வருகிறேன். அங்கு வந்து இந்தக் குடைச் சாமியின் கூத்துகளை விளக்குகிறேன். எனக்கும் முடியாத பிரயாணம் இருக்கிறது.”

ஞாயிறு பகல் பிரயாணம் செய்து அன்றிரவு சிவத்தின் ஊர் போய்ச் சேர்ந்தார்கள். இரவு, சிவத்தின் சகோதரிகளுக்கு அவன் விடுதலை ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. “எப்படி விடுதலை ஆனாய்?” என்று கேட்க முனைந்தார்கள். “அது சொல்வதற்கு நேரம் இதுவல்ல” என்று சிவம் சொன்னான். அந்தக் கணத்தில் விடுதலை சந்தோஷத்தைத் தருவதாகத்தான் இருந்தது.

திங்கள்கிழமை காலை எழுந்து தன் சுதந்திரத்தை அனுப விப்பதற்காய்த் தன் தோட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் போய்ப் பார்த்து வந்தான். அவன் சகோதரிகள் குடும்பம், தோட்டத்தை அவனில்லாத போது நன்றாகவே பராமரித்திருந் திருக்கிறார்கள். சூரிய ஒளியும் பட்சிகளின் கூவலும் படபடப்பும், செடிகள் சூரிய ஒளியில் குளிக்கத் தயாராவதும் சிறையில் ஏது? காலைக்கடன்களை முடித்து அம்பலத்தையும் இழுத்துக் கொண்டு மணியனிடம் ஓடினான். மணியனுக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் தாங்கவில்லை. “வா, கொஞ்சம் போடலாம்” என்று சிவத்தையும் அம்பலத்தையும் கூட்டிக்கொண்டு போகப் புறப்பட்டான். அம்பலத்தின் அறிவுச் சக்தியை மணியனுக்கு விபரித்தான். சிறையில் நடந்தவற்றையெல்லாம் சொன்னார்கள். மத்தியானம் சாப்பிட்டு ஒரு குட்டித்துாக்கமும் போட்ட பின்னர், மத்தியான வெய்யில் அடங்கும் நேரத்தில் அம்பலம், “குடைச்சாமி இருந்த வீட்டைக் காட்டு. முதலில் அங்கே போவோம்” என்றான். போனால், குடைச்சாமியின் எரிந்த வீட்டு நிலத்தைத் துப்புர வாக்கி வைத்திருந்தார்கள். அறைகளின் அத்திவாரச் சுவர்கள் தரைமட்டத்துடன், சாதகக் குறிப்புக் கோடுகள் போட்ட மாதிரி அழகாக இருந்தன. அம்பலம் இடத்தை நன்றாகப் பார்த்துக்கொண்டான்.

“இந்தக் குடைச்சாமி செய்ய முயன்றதென்ன?” மணி கேட்டான்.

அம்பலம் இன்னும் எடுக்காதிருந்த தாடியை வழக்கம் போல் வருடிக்கொண்டான்.

“குடைச்சாமிக்குப் பல விஷயங்கள் தெரிந்தும் சில ஆதாரமானவை தெரியாமல் போய்விட்டது. கிரக நிலைகள் ஒரு மனிதனின் பிறப்பு நிலையிலிருந்து மாறுவன. கிரகங்கள் குணாதிசயம் படைத்தவை என்று, பழங்காலச் சாத்திரத்தை குடைச்சாமி நினைத்துக்கொண்டார். கிரக நிலைகள் காலப் பிரமாணத்தின்படி மாற , அவை எப்படி ஒரு மனிதனைப் பாதிக்க முடியும் என்று பார்த்திருக்கிறார். எப்படிப் பாதிக்கப் போகின்றன என்று பார்த்துச் சாத்திரம் சொல்ல முயன்றி ருக்கிறார். சாத்திரப்படி ராகு பலன் இருந்தால் வியாதிகள் குணமாகும். அதனால் தான், துரை என்ன சொல்கிறான் என்று பார்க்க முயன்றிருக்கிறார். கிரகங்கள் குணாதிசயம் படைத்தவை யானால் பல கிரகங்களின் பாதிப்பையும் பார்த்துச் சொல்லலாம் என்பதால், ஒன்பது கிரகங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். யாகம் என்றால் இருக்கும் நிலையை மாற்ற முயற்சிக்கும் வேள்வி. பரிசோதனையென்றால் என்ன நடக்கும் என்று தீர்மானிக்க முயல்வது. அவர் செய்தது பரிசோதனைதான். ஆனால், அதற்கு யாகம் என்று சொல்லிக்கொண்டார் – பரிச்சயமான மொழியில் சொல்லுவோம் என்று. பழைய சாத்திரங்களில் சந்திரன் ஆண். ஆனால், குடைச்சாமி கனகத்தைப் போட்டிருந்தாரே. சிவம் தொடர்ச்சியாய்ப் பரிசோதனைக்கு வரவேண்டுமென்றோ என்னவோ?” சிரித்துக் கொண்டபின்னர், “சனீசுவரன், சூரியன் மகன். மணி அவர் மகன் இல்லையே. குணாதிசயத்தை மாத்திரம் வைத்து இந்தப் பரிசோதனை செய்திருக்கிறார். பரிசோதனை செய்து முடிவதற்குள் சிதம்பர நாதனின் மகன் இறக்க நேர்ந்துவிட்டது.” அம்பலம் சொல்லி முடித்தான்.

“நீயும் குடைச்சாமி மாதிரி கணக்குகள் போடுகிறாயே. அது என்ன கணக்கு?” சிவம் கேட்டான்.

“அது இலகுவான விஷயம். கிரகங்கள் கடிகாரங்கள் மாதிரி – ஒவ்வொரு வகை நேரம் சொல்லும் வான் மணிக்கூடுகள். சூரியன் எழ, சந்தோஷம் பெருகுகிறது இல்லையா? அது மாதிரி. அதைச் சொல்லி விளக்கப்படுத்த முடியாது. கிரக நிலைக் கணக்குகள் இந்த நேரத்தைச் சொல்லும்.

எந்தெந்த நேரத்தில் என்னென்ன நடக்கும் என்பது அறிய நிறைய அனுபவம் தேவை. சம்பவங்களின் தொடர்ச்சியும் நன்றாகத் தெரிய வேண்டும்.” அம்பலம் தன் நரைமயிரைக் காட்டிக்கொண்டான்.

“இந்தக் குடைச்சாமி வீட்டை யார் கொளுத்தினார்கள்? குடைச்சாமி உயிருடன் இருக்கிறாரா இல்லையா?” மணி அம்பலத்தின் மூளையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று முயற்சித்தான்.

“அது பெரிய பிரச்சினை இல்லை. குடைச்சாமிக்கு அந்த வீடு ஏது? யாரோ ஒரு பெரிய மனிதன், “சாமி” என்று அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். தன் நிலை ஆட்டம் கண்டு போனதால், அவரே நெருப்பு வைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். அவர் எரிந்த மாதிரித் தெரியாததினால், அவர் உயிருடன்தான் எங்கேயோ போயிருக்கிறார்.” அம்பலம் போகப் புறப்பட்டான்.

“எங்கே போகப் புறப்பட்டாய்? நீ இங்கேயே என்னுடன் இருக்கலாம்.” சிவத்திற்கு அம்பலம் போய்விடுவதைப் பற்றிக் கவலை வந்தது.

“என் கணக்குகள் எனக்குத்தான் தெரியும். நான் பிரிய வேண்டிய நேரம் வந்திருக்கிறது.”

அம்பலத்தின் தீர்மானத்தை சிவம் புரிந்துகொண்டான். “அம்பலம், என் தம்பிகள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? உனக்கு ஏதாவது விளக்கங்கள் உண்டா?”

அம்பலம் சிரித்துக்கொண்டான். “முதலைகள் நிரம்பிய குட்டைகள் பார்த்திருக்கிறாயா? பிறந்த முதலைக் குஞ்சுக ளையே உணவாக்கப்பார்க்கப் பெரிய முதலைகள் முயலும். உயிர் வகைகளில் வித்தியாசமேது? தானில்லாதது எதுவும் தானாகாது. நானே நான்! நானே நான்! என்று ஆயிரம் முறை சொல்லிக்கொள். கூடப்பிறந்ததுவும் வாழ்க்கையில் சேர்ந்ததுவும், கூடவருவதுவும் உன் உயிரல்ல. வேறு உயிராக இருக்கும் வரை கட்டியும் பிடிக்கலாம் கழுத்தையும் அறுக்கலாம்.”

“கருணையாக வார்த்தைகள் சொல்வதற்குக் கூடப்பிறக்கத் தேவையில்லை என்பது தெரிகிறது. அப்படியிருக்கும் போது வெறுத்து ஒதுக்கும் சகோதரர்களை எப்படி விபரிப்பாய்?” சிவத்தின் சகோதரக் கவலைகள் போகமாட்டா என்பது தெரிந்தது.

அம்பலம் தாடியைச் சொறிந்தபடி, “சகோதரர்களில் ஒருத்தன் தான் உயிர்க்க முடியும் என்கிற மாதிரி விதிர்த்துக் கொண்டு ஆளையாள் சாடி வருத்திக்கொள்வது மனித பரிணாம வக்கிரம். அதுவும் பாசமிருந்தால் இன்னமும் வருத்தும். இதற்கு மருந்து சொல்கிறேன் கேட்டுக்கொள். “நானே நான். நானே நான். நானே நான்.” இதை ஒரு பத்தாயிரம் முறை சொல். உனக்கே புரியும்.” சிவம் புரியாதவனாய் நின்றான். அம்பலம் நடக்க ஆரம்பித்தான்.

“அடுத்த கணக்கு எங்கே? எப்போது?” சிவம் கேட்டான்.

“குடைச்சாமியுடன். அவர் தவறுகளைத் திருத்திக்காட்ட வேண்டும்.” அம்பலம் நடந்து போகச் சூரியன் அவன் வலது புறத்தில் பெருங்கோடு வரைந்தான். அவன் தாடியும் தெரிந்தது.

“உன் தாடியை எடுத்துவிடு!” சிவம் கத்தினான்.

அம்பலம், தலையை “முடியாது” என்று ஆட்டியபடியே போய்ச் சேர்ந்தான். அவன் உருவம் மறையும் வரை சிவமும் மணியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“நானே நான்! நானே நான்!” என்று சிவம் சொல்லிப் பார்த்துக்கொண்டான்.

– கண்ணில் தெரியுது வானம், 2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *