கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 1,470 
 
 

(1996ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம் மூன்று 

புரூக்லீன் தடுப்பு முகாம் 

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது எங்கள் விடயத்தில் சரியாகி விட்டது. இரண்டு நாள்கள் ஹில்டன் ஹொட்டலில் வைத்திருந்தார்கள். பொஸ்டன் குளோப் பத்திரிகையில் எங்களைப்பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப்படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். ‘வோய்ஸ் ஒவ் அமெரிக்கா. பி.பி.ஸி ஆகியவற்றிலெல்லாம் எங்களைப்பற்றிய செய்தியை ஒலிபரப்பினார்கள். இலங்கை இனக்கலவரம் சர்வதேச வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் எங்களது பயணமும் தொடங்கியிருந்தது. இதனால்தான் எங்களைப்பற்றிய செய்தியும் பிரபலமாகியிருந்தது. எங்களைப்பற்றிய பூர்வாங்க விசாரணைகள் முடிந்ததும் எங்களை நியூயார்க்குக்கு அனுப்பினார்கள். அப்பொழுதுகூட எங்களுக்குத் தடுப்பு முகாமுக்கு அனுப்பும் விடயம் தெரிந்திருக்கவில்லை. 

பிரத்தியேக பஸ்ஸொன்றில் எங்களை நியூயார்க் அனுப்பிய பொழுது ஏற்கனவே இரண்டு நாள்கள் ஆடம்பர ஹொட்டலான ஹில்டனில் இருந்த சந்தோசத்தில் நாங்கள் சந்தோசமாகவேயிருந்தோம். நியூயார்க் நகரைப்பற்றி, அதன் பிரசித்தி பற்றி இலங்கையிலேயே அறிந்திருந்தோம். அத்தகையதொரு நகருக்குச் செல்வதை நினைத்ததுமே நெஞ்சில் களிப்பு. பல்வேறு கனவுகள். திட்டங்களுடன் படம் விரித்தன. அன்று மட்டுமல்ல இன்றும் கூட என் நெஞ்சை ஒரு கேள்வி குடைந்தபடி தானிருக்கின்றது. பொஸ்டனில் பிடிபட்ட எங்களை எதற்காக நியுயார்க் அனுப்பினார்கள். பொஸ்டனில் தமிழ் அமைப்புகள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின. இந்நிலையில் எங்களை அங்கேயே வைத்திருந்தால் அரசியல்ரீதியில் அமெரிக்க அரசுக்குப் பிரச்சினை வரலாமென்று அமெரிக்க அரசு எண்ணியி ருந்திருக்கலாம் என்ற ஒரு காரணம்தான் எனக்குப்படுகின்றது. பொஸ்டனிலிருந்து நியூயார்க்குக்கான எங்களது பயணம் எமக்கு இன்பமாகவேயிருந்தது. முதன் முதலாக எகஸ்பிரஸ்வே’யில் பயணம். பல்வேறு வகைகளினான் ‘ட்ரக்கு’களை வியப்புடன் பார்த்தோம். அடிக்கடி இரண்டு ட்ரெயிலர்களை ஒன்றாக இணைத்தபடி செல்லும் ட்ரக்குகள் நெஞ்சில் ஆச்சரியத்தை விளைவித்தன. அப்பாடா. ஒரு வழியாக எதிர்ப்பட்ட தடைகளையெல்லாம் கடந்து விட்டோமென்று பட்டது. எல்லாரும் ஒருவிதமான ஆனந்தத்தில் மூழ்கியிருந்தோம். எனக்கு வீட்டு ஞாபகங்கள் எழுந்தன. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் உழைத்து வீட்டுப் பிரச்சினைகளை முடித்து விடவேண்டும். தம்பியை மெதுவாக இங்கு இழுத்து விடவேண்டும். அக்காவின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்தி வைத்து விட வேண்டும். எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்து விட்டுத்தான் கௌசல்யாவின் நிலையைப்பார்க்க வேண்டும். கௌசல்யாவின் நினைவுகள் நெஞ்சுக்கு இதமாகவிருந்தன. கௌசல்யாவுக்கு எத்தனையோ தடவைகள் எடுத்துக்கூறி விட்டேன். எனது பொறுப்புகள். பிரச்சினைகள் பற்றி விரிவாக விளங்கப்படுத்தி விட்டேன். அவள் பிடிவாதமாக என்னைத்தான் மணப்பதாகக் காத்து நிற்கப்போவதாகக் கூறுகின்றாள். இந்நிலையில் நானென்ன செய்ய? காத்து நிற்கும் பட்சத்தில் ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை. 

நியூயார்க் நகருக்குள் நுழைந்தபோதும் எங்களுக்கு நிலைமை விளங்கவில்லை. பஸ் நியூயார்க்கின் வறுமை படர்ந்த பகுதியொன் றினுள் நுழைந்தபோதுதான் நெஞ்சை ஏதோ நெருடியது. வறுமையான தோற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த கறுப்பினப்பிள்ளைகள், பழமை வாய்ந்த கட்டடங்கள். இவ்விதமானதொரு பிரதேசத்தினூடு பஸ் சென்றபோது எங்களுக்கு நிலைமை விளங்காமற் போனாலும். எங்கேயோ பிழையொன்றிருப்பது புரிந்தது. கடைசியில் பஸ் பழைமையானதொரு கட்டடம் ஒன்றின் முன்னால் சென்று நின்றது. 

நாங்கள் எங்கள் உடைமைகளுடனிறங்கப் பணிக்கப்பட்டோம். அப்பொழுதும் எங்களுக்கு நிலைமை வடிவாகப்புரியவில்லை. ஐந்தாவது மாடியை அடைந்தபோதுதான் நிலைமை ஓரளவு புரிந்தது. நாங்கள் சென்றடைந்த பகுதி ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த வரவேற்புக்கூடம். சிறைக்காவலரைப்போன்ற தோற்றத்துடன் மேசையில் கோப்பொன்றில் மூழ்கியிருந்தவரிடம் எங்களை ஒப்படைத்த பொஸ்டன் குடிவரவு அதிகாரி ‘குட் லக்’ கூறிவிட்டுப் போனபோதுதான் சூழலின் யதார்த்தமே எங்களுக்கு உறைத்தது. ஏதோ ஒரு வகையான சிறையொன்றுக்கு நாங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றோமென்ற உண்மையை உணர்த்தியது. 

கம்பிக் கதவுகளுக்குப் பின்னால் எங்களை ஆவலுடன், சிறை ஆடைகளுடன் நோக்கியபடியிருந்த விழிகள் புரிய வைத்தன. சிறைக்காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எங்கள் உடமைகளெல்லாம் எங்களிடமிருந்து நீக்கப்பட்டன. எங்களிடமிருந்த பணம் எடுக்கப்பட்டது. நாங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறும் சமயத்தில் அவை மீண்டும் தரப்படும் எனக்கூறப்பட்டது. லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது போல் பூர்வாங்க சோதனைகள் நடத்தப்பட்டன. கைரேகைகள் எடுக்கபட்டன. ஒரு வழியாகச் சோதனைகளெல்லாம் முடிவடைந்த பின்னர் எங்களுக்குச் சிறை ஆடைகள் தரப்பட்டன. அணிந்து கொண்டு உள்ளே சென்றோம். 

‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதைதான்’ இவ்விதம் இராஜசுந்தரத்தார் ஒரு வித விரக்தியுடன் கூறினார். ‘பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்’ இவ்விதம் சிவகுமார் சலித்துக்கொண்டார். ‘ஊரிலை பிரச்சினையென்று வெளிக்கிட்டா… இப்பிடி மாட்டுப்படுவமென்று தெரிந்திருந்தால் அங்கேயே கிடந்து செத்துத் தொலைத்திருக்கலாமே’ இவ்விதமாக ரவிச்சந்திரன் முணுமுணுத்துக் கொண்டான். அருளராசா எதுவுமே பேசாமல் மௌனமாகவிருந்தான். நடப்பதைப்பார்ப்போம்’ இவ்விதம் கூறினேன். 

எங்களுக்குப் பின்னால் சிறைக்கதவுகள் மூடப்பட்டன. மல்லர்களைப்போல் கறுப்பினத்துக் காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். ஐந்தாவது மாடித் தடுப்புமுகாமின் கூடம், இணைக்கும் நடைபாதை, கூடம் என்னும் மாதிரியானதொரு அமைப்பில் காணப்பட்டது. ஒவ்வொரு படுக்கைக்கூடத்துக்கும் எதிராக ஒரு கூடம் பொழுது போக்குவதற்காகக் காணப்பட்டது. இப்பொழுதுபோக்குக் கூடத்தில் ஒரு மூலையில் தொலைக்காட்சிப் பெட்டி. ‘வென்டிங் மெஷின்’ (காசு போட்டுப் பொருளெடுக்கும் இயந்திரம்). டேபிள் டெனிஸ் விளையாட மேசை, தொலைபேசிகள் ஆகியவை காணப்பட்டன. படுக்கைகளுக்கான கூடத்தில் பங்பெட்ஸ்’ (Bunk Beds).. கப்பல்களில், மாணவர் விடுதிகளில் இருப்பதுபோல். இரு கட்டில்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாகக்காணப்பட்டன. கூடங்களை இணைக்கும் நடைபாதைகள் பலமான இருப்புக்கதவுகளுடன், காவலர்களுடன் காணப்பட்டன. 

இரு கூடங்களையும் இணைக்கும் நடைபாதையுடன் சேர்ந்து குளியலறை, மலசலக்கூடம் ஆகியவை காணப்பட்டன. இது தவிர உணவுண்ணும் கூடம், தேகப்பயிற்சி செய்வதற்கான கூடம் ஆகியவை யுமிருந்தன. நோய் வாய்ப்படும் சந்தர்ப்பத்தில் மருத்துவ வசதிகள் பெறுவதற்கான வசதிகளும் அளிக்கப்பட்டன. மருத்துவரின் அறை தடுப்பு முகாமின் முன் பக்கத்தில், வரவேற்புக் கூடத்துக்கு முன்பாக அமைந்திருந்தது. 

எங்களது பகுதியில் தடுப்புக் கைதிகள் அனைவரும் ஆண்களே. பெண்கள் வேறொரு பகுதியிலிருந்தார்கள். உணவுக்காகக் காத்து நிற்கும்போது மட்டும் முன்னதாகவே உணவை முடித்து விட்டுச் செல்லும் பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு ஆண்கள் முண்டியடித்துக் கொள்வார்கள். இதற்காகவே சமையலறையில் வேலை செய்வதற்காகப் போட்டி போடுவார்கள். இவ்விதம் வேலை செய்தால் ஒரு நாளைக்கு ஒரு டொலர் சம்பளமாகத்தருவார்கள். 

அத்தியாயம் நான்கு 

தடுப்புமுகாம் வாழ்வு! 

நாங்கள் தங்கியிருந்த தடுப்பு முகாமில் ஆண்கள் இருநூறு வரையிலிருந்தார்கள். பெரும்பாலா 

னவர்கள் ஆபிரிக்க, தென்னமெரிக்காவைச்சேர்ந்தவர்கள். நாடென்று பார்த்தால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களே அதிகமானவர்களாக விருந்தார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் நாம் ஐவர்தாம். பங்களாதேஷ். இந்தியாவைச்சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமே யிருந்தார்கள். எல்சல்வடோர். கௌதமாலா போன்ற மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்களுமிருந்தார்கள். 

விமான நிலையங்களில் போதிய கடவுச்சீட்டுகள். ஆவணங் களின்றி அகப்பட்டவர்கள். அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள், சட்ட விரோதமாக வேலை செய்து அகப்பட்டவர்கள், போதைவஸ்து முதலான குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்து நிற்பவர்கள்.. இவ்விதம் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு விதமான கைதிகள் அங்கிருந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் நிலை பெரிதும் பரிதாபத்துக்குரியது. 

பெரும்பாலானவர்கள் இரண்டு வருடங்களாக உள்ளே கிடக்கின்றார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் போதிய ஆவணங்களின்றி அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள்தாம். உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில், உணர்வுகள் அழிக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்களின் நிலை வெளியில் பூச்சுப்பூசிக்கொண்டு, மினுங்கிக்கொண்டிருந்த உலகின் மாபெரும் வல்லரசொன்றின் இன்னுமொரு இருண்ட பக்கத்தை எனக்கு உணர்த்தி வைத்தது. அமெரிக்கர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் புத்திசாலிகள் கடின உழைப்பாளிகள் விடா முயற்சி, மனோபலம் மிக்கவர்கள் எத்தனையோவற்றில் உலகின் முன் மாதிரியாகத்திகழுபவர்கள், ஆனால் அதே அமெரிக்காவில்தான் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மனோ வியாதி பிடித்த ‘டெட் பண்டி’ போன்ற கொலையாளிகளும் இருக்கின்றார்கள். உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் அகதிகளும் தடுப்பு முகாம்களென்ற பெயரில் திகழும் சிறைகளில் வாடுகின்றார்கள். வாய்க்கு வாய் நீதி, நியாயம், சமத்துவ மென்று முழங்குமொரு நாட்டில் காணப்படும் மேற்படி நிலைமைகள் ஆய்வுக்குரியன. 

நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடத்துக்குச் சென்றதும். எங்களைச் சுற்றி ஆப்கானிஸ்தானைச்சேர்ந்த அப்துல்லா. எல்சல்வடோரைச் சேர்ந்த டானியல், கௌதமாலாவைச்சேர்ந்த டேவ் ஆகியோர் எங்களைப்பற்றி எங்கள் நாட்டைப்பற்றி, எவ்விதம் இங்கு அகப்பட்டோம் என்பது பற்றியெல்லாம் ஆர்வத்துடன். வெகு ஆதரவுடன் விசாரித்தார்கள். ஸ்ரீலங்காக் கலவரம் உலகம் முழுவதும் தெரிந்திருந்த காலகட்டத்தில் வந்திருந்ததால். அவர்களுக்குச் ஸ்ரீலங்காவைத் தெரிந்திருந்தது. எங்கள் கதையைக் கேட்டு அனுதாபப்பட்டுக்கொண்டார்கள். 

‘இந்த அமெரிக்கர்களே இப்படித்தான். எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் பிரச்சினை தருவது இவர்கள்தாம்’. இவ்விதம் டானியல் கூறினான். 

டானியலுக்குப் பதினெட்டு வயதுதானிருக்கும். இன்னும் சிறுவனுக்குரிய தன்மைகளை அவன் முகம் இழந்து விடவில்லை. 

அவன் தொடர்ந்தும் கூறினான்: ‘ எங்களுடைய நாட்டுப்பிரச்சினைக்குக் காரணமே இந்த அமெரிக்கர்கள்தாம். இவர்கள் தருகின்ற பிரச்சினை களிலிருந்து தப்பிப்பிழைத்து இங்கு வந்தாலோ மனிதாபிமானமே யில்லாமல் மிருகங்களைப் போல் அடைத்து வைத்து. மனோரீதியாகச் சித்திரவதை செய்கின்றார்கள்: 

‘நீ எவ்வளவு காலமாக இங்கிருக்கிறாய் டானியல்’ இவ்விதம் கேட்ட எனக்கு அவனுக்குப் பதில் ஆப்கானிஸ்தானைச்சேர்ந்த அப்துல்லா பதில் தந்தான். அப்துல்லாவின் பதில் என்னை மட்டுமல்ல, எங்கள் எல்லாரையும் கலங்க வைத்தது. 

‘கடந்த இரண்டு வருடங்களாக நானுமென் நாட்டைச்சேர்ந்த சிலரும் இருக்கிறோம், ஆனால் டானியல் வந்து ஒரு வருசமாயிருக்கும்: இரண்டு வருசங்கள்.. இவங்கள். இந்த அமெரிக்கன்கள் என்ன செய்கின்றான்கள்?’ கலக்கத்தால் சற்றே பொறுமையிழந்த ஆர் இராஜசுந்தரத்தார். 

இவங்களுடைய சட்டங்களின்படி எந்த வித ஆவணங்களு மில்லாமல் நாட்டுக்குள் வரமுன்பாகப் பிடிபட்டால் . அப்படிப்பட்ட வர்களுடைய வழக்குகள் முடியும் வரையில் உள்ளேயே இருக்க வேண்டியதுதான். அதற்கு ஒரு வருசம் எடுக்கலாம் அல்லது இரண்டு வருசங்களாவதெடுக்கலாம்.’ 

இவ்விதமாக எங்களுடன் சிறிது ஆதரவாகக்கதைத்துவிட்டு அவர்கள் தத்தமது வழமையான அலுவல்களைப்பார்ப்பதற்குப்புறப்பட்டு விட்டார்கள். நாங்கள் எல்லாரும் சிறிது நேரம் கூடிக்கதைத்தோம். எங்கள் எல்லோரிலும் இராஜசுந்தரத்தாரே பெரிதும் கலகத்துடன் காணப்பட்டார். 

இப்படி இரண்டு, மூன்று வருசங்கள் உள்ளேயே கிடக்க வேண்டுமென்றதை நினைச்சால்.. காசைச்செலவழித்து ஏன் வெளிக் கிட்டனென்று இருக்கு. ஊரிலை மனுசியும், பிள்ளைகளையும் விட்டு விட்டுக் கனடாவுக்குப்போய்க் கெதியிலை கூப்பிடுறனென்றிருக்கிறேன்: 

‘அண்ணை! மனதைத்தளரவிட்டு ஆகப்போறதென்னவிருக்கு? இனி எப்படி இங்கிருந்து தப்பலாமென்பதைப்பார்ப்பம்.’ 

இவ்விதம் சிவகுமார் கூறவும், அவரை இடை மறித் த இராஜசுந்தரத்தார் கேட்டார்: 

‘நீயென்ன ஜெயில் பிரேக்கைச் சொல்லுறியோ?’ 

‘அண்ணை, நான் அதைச்சொல்லேலை. எப்பிடி இங்கையிருந்து வெளியிலை போகலாமென்றதைத்தான் சொன்னனான். 

‘பொஸ்டன் தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்களுடன் கதைத்தால் ஏதாவது வெளிக்கலாம்’ இவ்விதம் நான் கூறினேன். 

‘ஆனால், எப்பிடி அவங்களோடை கதைக்கிறது?’ அருள்ராசா கேட்டான். 

அப்பொழுதுதான் பொஸ்டன் அமைப்பைச்சேர்ந்தவர்களின் தொலைபேசி எண் கூட எம்மிடமில்லை என்ற உண்மை விளங்கியது. 

இதற்கு ரவிச்சந்திரன் கூறினான்: ‘அண்ணை, எனக்குத் தெரிஞ்சவங்கள் நியூயார்க்கிலை இருக்கிறான்கள். அவங்களிட்டைக் கேட்டுப்பார்த்தால் கட்டாயம் எடுத்துத்தருவான்கள்.!’ 

இவ்விதம் சிறிது நேரம் கூடிக்கதைத்தபடியிருந்து விட்டு. ஒவ்வொருவரும் தத்தமது படுக்கைகளுக்குத்திரும்பினோம். நானும். அருள்ராசாவும் ஒரு ‘பங் பெட்டில்’ மேல் கட்டிலில் அவனும் கீழ்க் கட்டிலில் நானுமாகப்படுத்துக்கொண்டோம். 

வந்து ஒரு மாதம் ஓடி, ஒளிந்தது. இதற்கிடையில் தடுப்பு முகாம் வாழ்க்கைக்கு ஓரளவு பழக்கப்படுத்தியாகிவிட்டது. 

காலை, மதியம், மாலையுடன் மூன்று நேரச்சாப்பாடு முடிந்து விடும். வழக்கமாக இரவும் சாப்பிடும் வழக்கமுள்ள எமக்கு, இரவெல் லாம் வயிற்றைப்பசி சுரண்டத்தொடங்கி விடும். ஒவ்வொரு முறை உணவுக்கூடத்துக்குச் செல்லும்போதும், ஒவ்வொரு கூடத்தைச் சேர்ந்தவர்களும் வரிசையாகக்காத்து நிற்பார்கள். முதலில் பெண் கைதிகள் வந்து உணவுண்டு விட்டுச்செல்வார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டைத்திறந்து விடுவார்கள். சாப்பாட்டைப் பொறுத்த வரையில், எங்களுக்குப் பழக்கமில்லாதபோதும் சத்தானதை நிறையுணவாகப் போட்டார்கள். காலையில் ஒரு ‘யூஸ்’, கோப்பி, ஒரு பழம், பால் மற்றும் ‘சீரியல்’ இது தவிர ‘ஸ்கிராம்பிள் எக்’ அல்லது ‘பான் கேக்’. ‘சிரப்பு’டன் தருவார்கள். மத்தியான் சோறு. ‘ஸ்பாகட்டி இறைச்சி உருண்டைகள். ஒரு ‘யூஸ்’, பழம், கோப்பி தருவார்கள். பின்னேரம்போல் இரவுணவைத்தந்து விடுவார்கள். பழங்கள் அல்லது கோப்பியையோ நாங்கள் எங்கள் கூடத்துக்கு எடுத்துச்செல்ல முடியாது. காவலர்கள் விட மாட்டார்கள். அகப்பட்டால் பறித்து விடுவார்கள். எங்களுக்கோ இரவெல்லாம் பசி வயிற்றைக் கிண்டும். களவாக, எப்படியோ பழங்களைக்கடத்திக்கொண்டு சென்று விடுவோம். இன்னுமொரு முக்கியமான விடயம்… அடிக்கடி முகாமின் கைதிகளை நின்ற இடங்களிலேயே நிற்கும் படி ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துவிட்டு, சிறை அதிகாரிகள் வந்து கணக்கிடுவார்கள். அப்படிக்கணக்கிடும்போது சில சமயங்களில் ஒன்றிரண்டு பிழைத்து விடும். அவ்விதம் எண்ணிக்கையில் பிழையிருந்தால். மீண்டும். மீண்டும் சரியான எண்ணிக்கை வரும் வரையிலும் கணக்கிடுவார்கள்.

– தொடரும்…

– அமெரிக்கா (நாவல்), முதற் பதிப்பு: 1996, மகுடம் பதிப்பக வெளியீடு, இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *