அன்பைத் தவிர என்னிடம் சொல்ல எதுவும் இல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 5,652 
 
 

‘ஆண்டவா.. இருக்கற எல்லா பிரச்சனைக்கும் விமோச்சனமே இல்லையா..?’ என மனதிற்குள் வேண்டிக்கொண்டே தொழிற்சாலைக்கு கிளம்பினார் குருசாமி… எடுபிடி வேலை தான்.. ஆனாலும் வயது அதிகமாகிவிட்டதால் ஓடியாடி வேலை செய்ய முடிவதில்லை.. ஒரே பரபரப்புடன் காலை வேலை முடிந்து சுள்ளென்று பசிக்க ஆரம்பித்தது. துளி நேரம் ஒருவரும் உட்கார விடவில்லை. கை அலம்பி வரும் போது தான் அந்த சத்தம் கேட்டது.

“தயிர் இல்லாத மதிய சாப்பாடா? சான்ஸே இல்ல.. எனக்கு தயிர் வேணும்.. இந்தா பத்து ரூபா.. போய் வாங்கிட்டு வா..”, என்று சொல்லி, குருசாமியை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பினான் ரமேஷ்.

அந்த மிகப்பெரிய தொழிற்சாலையில் சூப்பர்வைசராக உள்ளான். சரியாக யாரிடமும் முகம் கொடுத்து பேசமாட்டான். அவன் தொழிற்சாலைக்குள் வந்துவிட்டால் அவன் வைத்தது தான் சட்டம். முதலாளியும் அவன் மீது மிகுந்த மதிப்பு வைந்திருந்ததால், யாரும் எதுவும் எதிர்த்தும் பேச முடியாது. அதனால் அனைவருக்குமே அவன் மேல் ஒரு வெறுப்பு, கோபம் இருந்தாலும் யாராலும் காட்ட முடியாது. அதைச் சரியாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் ரமேஷ்.

வெயில் வாட்டி எடுத்தது. இன்னும் சாப்பிட வேறு இல்லை. வழக்கமாக அருகில் இருக்கும் கடை விடுமுறை போல.. சாத்தி இருந்தது. ‘இந்த கடை இருக்கும் என நினைத்து நடந்தே வந்தாச்சு.. சைக்கிள் கூட கொண்டு வரல.. பக்கத்துல எதுவும் கடை இல்லை.. கொஞ்சம் தூரம் நடந்தா தான் தயிர் கிடைக்கிற கடை வரும்.. ம் என்ன பண்ணலாம்..’, என யோசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தார் குருசாமி.

வெயில் கொடுத்த வியர்வைப் பரிசு, மெல்ல மெல்ல சட்டையை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது. மரமில்லாச் சாலை, வயதான உடம்பு, கொளுத்தும் சூரியன், பசிக்கும் வயிறு, காலை முதல் பார்த்த இடைவிடாத வேலை எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கதக்களி ஆட, அப்படியே சாலையோரம் மயங்கி விழுந்தார்.

மதிய நேரமாதலால் சாலையில் அவ்வளவு வாகனங்கள் இல்லை. ஆட்கள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. வழக்கம் போல அந்தப்பக்கம் ஏதேச்சையாக வந்த மனிதர்களும், மனிதப்புத்திக்கு தகுந்த மாதிரி கண்டுகொள்ளாமலேயே கடந்து கொண்டிருந்தனர். இவர் தள்ளாடி நடந்து வருவதை, முன்பு இருந்தே கவனித்து வந்த தெரு நாயொன்று, இவர் மயங்கி விழுந்ததும், கண்டுக்காத மாதிரியே ஒதுங்கிச் செல்லாமல் இவர் அருகில் வந்தது. இவர் இந்த நாய்க்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதற்கும் நன்றி காட்டவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

அதன் பசியில் வாடிய கண்களுக்கு சில நொடி நேரம் காட்சிப்பொருளாக மட்டுமே அவர் இருந்தார். இருந்தும் அவர் அருகில் சென்று அதன் குணம் மறக்காமல் வழக்கம் போல குரைக்க ஆரம்பித்தது.

தள்ளாடியபடியே நடந்துவந்த ஒரு கீரைக்காரப் பாட்டியின் காதில் நாயின் குரைப்பும், மங்கலாக கீழே மயங்கிக்கிடந்த குருசாமியும் கண்ணில் பட, வயதோதிக உடம்பைத் தூக்கிக்கொண்டு ஓடும் வேகத்தில் நடந்து வந்தார். அவரைக் கண்டதும் தன் குரைப்பை நிறுத்திக்கொண்டது நாய். ஏதோ தீர்வு வேண்டி வேண்டியது போலவும், தீர்வு கிடைத்தவுடன் வேண்டுதலை சட்டென நிறுத்தியது போலவும் இருந்தது அதன் செய்கை..

பாட்டி குருசாமியின் அருகில் வந்து அமர்ந்தார். கொதிக்கும் தரை அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை..

தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, கையில் சிறிது ஊற்றி குருசாமியின் முகத்தில் அடித்தார். எந்த சலனமும் இல்லை. மீண்டும் ஒரு முறை கையில் அதிக தண்ணீர் ஊற்றி அடித்துவிட்டு, குருசாமியின் தோளைப் பிடித்து,

“ஐயா… ஐயா… எந்திரி..”, என்றவாறு சொல்லும் போதே, கண்களை மெல்லத்திறந்தார் குருசாமி.

“பாட்டி.. ரொம்ப நன்றிங்க..”, என்றவாறு எழுந்து நிற்க முயல, மீண்டும் தள்ளாட்டமாய் இருக்கவே கீழே அமர்ந்து கொண்டார்..

“ஏம்பா.. இப்படி வெயில்ல அலையிற?”

“அது என் தலைவிதி பாட்டி.. நானா விருப்பப்பட்டு அலையிறேன்..”

“அது சரி.. நீங்க ஏன் இப்படி வெயில்ல அலையறீங்க?”

“ம்.. இன்னிக்கு உனக்கு தண்ணி தெளிச்சு விடனும்னு இருக்கும் போல..”

“பாட்டி.. இவ்வளவு வெயில் அடிச்சாலும், இவ்வளவு வயசு ஆனாலும் நல்லாத்தான் பேசறீங்க”

“சரி.. சரி.. இந்தா தண்ணி குடிச்சிக்கோ.. மெல்லமா எழுந்து கிளம்பு..”

“சரி பாட்டி..”, என்றவாறு இப்போது குருசாமி எழ முயல, இதற்குள் கூடியிருந்த இரண்டு மூன்று பேர்.. அவரைத் தூக்கிவிட்டனர்..

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நாய், பாட்டியைப் பாசமாய்ப் பார்க்க, அதைச் சரியாகக் கவனித்த பாட்டி, தான் சாப்பிட்டுவிட்டு மீதி வைத்திருந்த பழைய சோற்றை அங்கு கிடந்த ஒரு அகலமான கல்லில் கொட்ட, ஆர்வமாய் சென்று சாப்பிடத் தொடங்கியது நாய்.

‘இத்தனை வயதுக்குப்பின்பும், தன்னை தன் பிள்ளைகளே தள்ளி வைத்த பின்பும், தன்னால் இப்படி உதவ முடிகிறதே’, என நினைத்தவாறே தன் வீட்டை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார் பாட்டி. தனக்கான உணவை முடித்துவிட்டு பாட்டி செல்லும் திசையிலேயே, பாட்டி பின்னாலேயே நடக்கத் தொடங்கியது அந்த நாய். இவற்றை திருப்தியாய் பார்த்தவாறே தன் தேடுதலை மீண்டும் ஆரம்பித்தார் குருசாமி..

***

வேறு கடைக்குப் போய், தயிர் வாங்கிக் கொண்டு குருசாமி வரும் போது உணவு இடைவேளை முடிந்திருந்தது.

உடலின் தளர்ச்சியின் கூடே, தாமதித்து வந்துவிட்டோமே என்ற பயமும் குருசாமிக்கு ஒரு நடுக்கத்தை கொடுத்தது.

‘நல்ல நாட்களிலேயே ஒழுங்கா பேசமாட்டான்.. இப்போ இவ்ளோ லேட்டா வேற வறோம்.. கடவுளே என்ன நடக்கப்போகுதோ’ என்று நினைத்த‌வாறு ரமேஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்த அறையில் நுழைய, அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவிக் கொண்டிருந்தான் சூப்பர்வைசர். பக்கென்று அடித்துக் கொண்டது நெஞ்சம்.

அவன் கை கழுவிக் கொண்டு, கைக்குட்டையால் துடைத்தவாறே, முகத்தைத் திருப்ப, எள்ளும் கொள்ளும் வெடிக்குமென்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு, அப்படியே மாற்றாய் ஒன்று அங்கு நிகழ்ந்தது.

முகம் முழுதும் அவ்வளவு சிரித்தபடி குருசாமியைப் பார்த்தான் ரமேஷ். ‘இது மாதிரி இதுவரை இவனை பார்த்ததே இல்லையே.. இது என்ன கனவா?.. ம்கூம்.. நிச்சயமாகே வாய்ப்பே இல்லை.. இப்போது தானே விழுந்து எழுந்து வருகிறோம் என்ற நினைப்பினூடே உடல் வலியும், பசியும் வர..’

“வாங்க.. குருசாமி.. நீங்க இன்னும் சாப்பிடல தானே.. ஸ்பெஷலான சாப்பாடு இருக்கு.. சாப்பிட்டுக்கோங்க..”

“இந்தாங்க தயிறு.. நீங்க என்ன சொல்றீங்கனு எனக்குப் புரியலையே!”

“எல்லாம் நல்ல விஷயம் தான்.. நீங்க கடைக்கு கிளம்பினவுடனே, முதலாளி வீட்ல இருந்து சாப்பாடு வந்துச்சு.. கூடவே ஒரு நல்ல சேதியும்”

“ஓ..”

“நான் சாப்பிட்டுட்டேன்.. இன்னும் ரெண்டு பேரு வயிறு நிறைய சாப்பிடலாம் போல.. நீங்க சாப்பிடுங்க”

“சரிங்க சார்.. ஏதோ நல்ல சேதினு சொன்னிங்க… அது என்னனு சொல்லலையே!”

“நல்ல சேதி எனக்குத்தானே..!”

“பரவால்ல சார்… நல்ல சேதிய பகிர்ந்துக்கலாம்.. அது பல மடங்காகும்.. சொல்லுங்க..”

“என்னைய சென்னை பேக்டரிக்கு இன்னும் பெரிய பதவி கொடுத்து அனுப்பி வைக்கறார் நம்ம முதலாளி”

‘என்னாது… இது எங்களுக்கு நல்ல சேதி இல்லையா… போய்யா சூப்பர்வைசரு… இப்ப விட்டா டப்பாங்குத்து ஆட்டமே ஆடுவேன்… நான் மட்டுமா.. இந்த பேக்டரியே ஆடுமே’, என மனதிற்குள் நினைத்துக்கொண்டவர் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, “அச்சச்சோ.. என்ன சார் சொல்றீங்க.. நீங்க சென்னை பேக்டரிக்குப் போகப் போறீங்களா?”

“வருத்தப்படாதிங்க குருசாமி..” ‘நான் எங்க வருத்தப்படறேன்’ என நினைத்துக்கொண்டார்..

“இப்ப சாப்பிடுங்க குருசாமி” “சரிங்க சார்.. “, என சொல்லிவிட்டு ஒரு மூன்று நிமிடம் நன்றாக தேய்த்து தேய்த்து கைகளைக் கழுவினார்.. சூப்பர்வைசரையே கழுவி ஊத்தினது மாதிரி ஒரு திருப்தி மனதிற்குள் எழ.. காலையில் கடவுளை வேண்டியது ஞாபகம் வந்தது.

‘ஓ… ஏதோ ஞாபகமறதியில கடவுள் நம்ம வேண்டுதலை நிறைவேத்திட்டார் போல…’ சாப்பிடப் போனவரை மீண்டும் கூப்பிட்டான் ரமேஷ்..

“குருசாமி..”

“சொல்லுங்க சார்..”

“நான் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்”

“சொல்லுங்க சார்.. உங்களுக்கும் இனி ஓடியாடற வேலை இல்லை…” “சா..சார்..” “பதறாதீங்க.. ஸ்டோர் ரூம்ல வேலை.. வேற எங்கேயும் வெளியே போக வேண்டாம்… சம்பளமும் அதிகம்.. இதெல்லாம் உங்க முகம் சுழிக்காத உழைப்புக்கும், நேர்மைக்கும் கிடைச்ச பரிசு..”

“முதலாளி தான் தெய்வம் சார்… செலவு நாளாக நாளாக எல்லை மீறுதே என்ன பண்றதுனே நெனச்சுக்கிட்டே இருந்தேன்..அப்பறம் சார்.. ஒன்னு சொல்லனும்”

“சொல்லுங்க குருசாமி”

“எவ்வளவு உயர்ந்த பதவில இருந்தாலும், வயசானவங்க உங்களுக்கு கீழ வேலை பார்த்தாங்கனா, கொஞ்சம் நேரம், காலம் பார்த்து வேலை வாங்குங்க”, எனச் சொல்ல வேண்டுமென்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் சொன்னதோ, “அது ஒன்னுமில்லிங்க சார்.. சம்பள உயர்வும், ஸ்டோர் ரூம் வேலையும் கிடைச்சவுடனே, கையும் ஓடல காலும் ஓடல.. வாயி கூட உலறுது..”, என்று சொன்னவாறே முதலாளி கொடுத்தனிப்பிய சாப்பாட்டை, கடவுளுக்கு நன்றி கூறியவாறே.. சுவைக்க ஆரம்பித்தார் குருசாமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *