அன்னப்பறவை வாகனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,132 
 
 

ஆவடி நகராட்சி துவக்கப்பள்ளியில் நாலாம் வகுப்பில் படிக்கும் காத்தமுத்துக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பம் அதிகம். அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள். முதலாவது மணக்க மணக்கக் கிடைக்கும் மதிய உணவு. அடுத்தது வீட்டிலிருந்து பள்ளிக் கூடம் போகும் வழியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய வாகனங்கள். கடைசியாக பத்தாம் வகுப்பில் படிக்கும் ஸ்டீபன் அண்ணன்.

பள்ளிக் கூடத்தில் போன வருடம் மைதானத்தின் ஓரத்தில் இருந்த அந்த கழிப்பறையில் சிறுநீர் கழித்து விட்டு வகுப்புக்கு வரும் போது நாலு எட்டாப்பு படிக்கும் அண்ணன்கள் இவனை வீட்டிலிருந்து காசு திருடிக் கொண்டுவரச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த ஸ்டீபன் அண்ணன் அவர்களைக் கடுமையாக எச்சரித்துக் காத்தமுத்துவைக் காப்பாற்றினான். பள்ளிக்கூடத்தில் ஸ்டீபன் அண்ணன் மேல் எல்லாப் பசங்களுக்கும் ஒருவிதமான பயம் இருந்தது. ஸ்டீபன் அண்ணன் நல்ல வளர்த்தியா இருப்பான். கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியவனாம். அவன் வம்புக்குப் போக மாட்டான் ஆனால் வம்பு பண்ணியவனை விடமாட்டான் என்று பசங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

இந்தச் சம்பவத்திற்குப் பின் ஸ்டீபனுக்கும் காத்தமுத்துவிற்கும் இடையில் ஒரு நெருக்கமான நட்பு ஏற்பட்டு விட்டது. மற்ற அண்ணன்கள் கூட காத்தமுத்துவிடம் வம்புக்கு வருவதில்லை. மதிய உணவில் போடப்படும் அவித்த முட்டை காத்தமுத்துவிற்குப் பிடிக்காது. அதை ஆனால் வாங்கிக் கொண்டு வந்து ஸ்டீபன் அண்ணனுக்குத் தருவான். காமராஜர் சிலை இருக்கும் டோல்கேட் அருகில் ஸ்டீபனுக்கு வீடு. காத்தமுத்துவிற்கு அண்ணா சிலை அருகில் வீடு. தினமும் காலையில் காத்தமுத்து காமராஜர் சிலைக்கு வரும் வரையில் காத்திருந்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்வான். அதேபோல் மாலையில் காத்தமுத்துவை பத்திரமாகச் சாலையைக் கடக்க வைத்து விட்டுத் தன் வீட்டிற்குச் செல்வான்.

காத்தமுத்துவின் அப்பா சண்முகம் ஒரு டிரைவர் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். தினமும் இரவு பத்துமணிக்குத்தான் வருவார். வந்தவுடன் குளித்து விட்டுத்தான் சாப்பிடுவார். காத்தமுத்துவிற்கு அப்பாவிடம் பேசவே நேரம் கிடைக்காது. காலையில் விடியும் முன்பே அவருக்கு முதலாளியிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துவிடும். இவன் கண் விழிக்கும் முன்பே கிளம்பினால் இரவில் இவன் கண்ணுறங்கிய பின்புதான் வருவார்.

ஒருநாள் காத்தமுத்துவின் அப்பாவுக்கு முதலாளியிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஆகவே காலையில் வீட்டில் இருந்தார். காத்தமுத்துவிற்குக் கண் விழித்ததும் அப்பாவை வீட்டில் பார்த்ததே மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அப்பா அவனையும் அம்மாவையும் கூட்டிக் கொண்டு ஐயார் பவனில் காலை நாஷ்டா வாங்கித் தந்தார்‌. வீட்டிலிருந்து அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதில் அவனுக்கு ஏக குஷி. அப்பாவிடம், அவர் என்ன டிரைவர்? பஸ்ஸா, லாரியா இல்லை காரா எவ்வளவு வேகமாகப் போவீர்கள்? வண்டியின் நிறம் என்ன? என்றெல்லாம் மூச்சு விடாமல் கேள்வி கேட்டுக் தள்ளினான். அதற்கு அவர் புன்முறுவலுடன், “நான் ஓட்டற வண்டியில் ஏறியவர்கள் அதற்கப்புறம் வேற யார் வண்டியிலும் ஏன் மாட்டார்கள்” என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

முன்னெப்போதோ அப்பாவின் வேலை பற்றி ஸ்டீபன் அண்ணன் கேட்டிருந்தான். பார்த்ததும் ஞாபமாக அண்ணனிடம் அப்பா சொன்ன பதிலைச் சொல்ல வேண்டும்.

ஐயார் பவனில் வயிறு நிறைய மசால் தோசையும், இட்லி வடைகறியும் நாஷ்டா சாப்பிட்ட பின்பு இவன் பள்ளிக்கு செல்வதற்காக காமராஜர் சிலையை நோக்கி நடக்க அப்பாவும் அம்மாவும் அவனுக்குக் கை காட்டி வழியனுப்பி விட்டு ரயில் நிலையம் செல்லும் வழியாக வீட்டுக்குச் சென்றார்கள்.

காமராஜர் சிலையை அடையும் முன் அவனது கனவு வாகனங்கள் வரிசையாக நிற்கும். அன்னப்பறவை போல, சிங்கங்கள் இருபுறமும் இருப்பது போல் என்று எவர்சில்வரில் பளபளப்பாகச் சூரிய ஒளிபட்டுச் ஜொலிக்கும். அதில் உள்ள நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து போக வேண்டும் என்ற ஆசை மனதில் உண்டு. ஒருநாள் பள்ளியில் விளையாட்டு விழா.

விழா முடிந்து வீடு திரும்பும் போது நன்றாக இருட்டி விட்டது. நடந்து வரும் போது அந்த வாகனங்கள் அருகில் அதிகம் ஆள் நடமாட்டம் இல்லை. மெல்ல அன்னப்பறவை அலங்கார வண்டியின் நாற்காலியில் அமர்ந்து கொள்ள நினைத்து அருகில் போன போது, “யாருடா அது போ, போ தூரப் போ என்று யாரோ அதட்டியதில் பயந்து ஓடி விட்டான். ஆனாலும் அந்த வண்டியில் ஏறி வேண்டும் ஊர்வலம் போக வேண்டும் என்ற எண்ணம் மனதில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது.

அது ஒரு வெள்ளிக்கிழமை. பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பியவன் காமராஜர் சிலை பக்கத்திலிருந்தே போலீஸ் எல்லோரையும் நிற்க விடாமல் துரத்திக் கொண்டிருந்தனர். பாவத்தைத் தாண்டி ராமரத்னா தியேட்டர் பக்கத்தில் ஏகப்பட்ட கூட்டம். ஏதோ புதுப்படம் அங்கே அன்று வெளியாகிறது போல. தியேட்டருக்குள் இருபதடி உயரத்தில் மூன்று நடிகர்களின் கட் அவுட்கள். மூன்று நடிகர்களின் ரசிகர் பட்டாளங்கள் சாலையில் பட்டாசு கொளுத்துவது, கட் அவுட்களுக்குப் பால் அபிஷேகம் செய்வது என்று பரபரப்பாக இருந்தன.

தியேட்டருக்குள் ஸ்டீபன் அண்ணன் இருப்பதைப் பார்த்த காத்தமுத்து அண்ணா அண்ணா என்று கத்தினான். பட்டாசு சப்தத்தில் ஸ்டீபனுக்கு காத்தமுத்து கூப்பிட்டது காது கேட்கவில்லை.‌ ஆனால் அங்கிருந்த ஒரு ரசிகர் காதில் விழுந்தது. உடனே பாய்ந்து வந்தவன், “தம்பி நீ ஸ்டீபனுக்கு வேண்டிய பையனா? நல்லதாப் போச்சு எங்கூட வா என்று தியேட்டருக்குள் கூட்டிப் போனான்.

இதற்குள் கூட்டத்தில் காத்தமுத்து ஸ்டீபனைத் தேடினால் ஆள் கண்ணில் படவில்லை. இவனைக் கூட்டி வந்தவன் கையில் பத்து விரல்களிலும் மோதிரம் போட்டுக் கொண்டு பட்டுச் சட்டை , ஜரிகை வேட்டியில் பளபளப்பாகப் பணக்காரக் களையுடன் இருந்தவரிடம் கண்ணடித்தபடி , “தலைவரே இந்தப் பையன் நம்ம ஸ்டீபனுக்கு வேண்டிய பையன். கட் அவுட்டில் ஏறி அபிஷேகம் செய்ய சரியான ஆளாக இருப்பான். அவங்க இரண்டு பேர் மன்ற ஆளுங்களுக்கு முன்னால நாம பாலபிஷேகம் செய்து விடலாம்” என்றான். “ஓ நம்ம ஸ்டீபனோட சேர்ந்த பையனா, அப்போ சரி” என்றார் தலைவரும் நமட்டுச் சிரிப்புடன். காத்தமுத்துவைக் கூட்டி வந்தவன் அவன் கையில் ஒரு பால் பாக்கெட்டைக் கொடுத்து மெல்ல கட் அவுட்டில் ஏற்றி விட அவனிடம் ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டைக் காட்டி ஆசை காட்டிக் கொண்டிருந்தான். ஸ்டீபன் பெயரும், ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டும் மந்திரமாக வேலை செய்ய கட் அவுட்டின் பின்புறம் உள்ள சவுக்குக் கட்டைகளில் கால் வைத்து மேலேற ஆரம்பித்தான். ஆடி மாதக் காற்று கொஞ்சம் சீற்றமாகவே அடித்துக் கொண்டு இருந்தது. காற்றில் கட் அவுட் பயங்கரமாக ஆடிக் கொண்டிருந்தது.

காத்தமுத்து கிட்டத்தட்ட கட் அவுட்டின் முக்கால் உயரம் ஏறியதும் பாரம் தாங்காமலும் காற்றின் வேகத்தாலும் கட் அவுட் சரியத் துவங்கியது. சரிவதைக் கண்ட ரசிகர்கள் திசைக்கொருவராக ஓட பேரொலியுடன் கட் அவுட் தரையில் வீழ்ந்தது.

அம்பத்தூரில் இருந்த காத்தமுத்துவின் அப்பா சண்முகத்தை முதலாளி அழைத்தார். கையில் ஒரு விலாசத்தைக்கொடுத்து உடனே வண்டியை எடுத்துக் கொண்டு ஆவடி செல்லச் சொன்னார். வீட்டில் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வர எண்ணி வண்டியைத் திருப்பினார் சண்முகம். அவர் வீட்டருகில் ஏகப்பட்ட கூட்டம். வீட்டை நெருங்க முடியவில்லை. ஏகப்பட்ட பட்டாசு வெடிச்சத்தம். இரண்டு தெருக்களுக்கு முன்வண்டியை நிறுத்தினார்.அங்கே சண்முகத்திற்குப் பிடித்த அந்த நடிகர் அங்கே இருந்தார். ரசிகர் மன்றத் தலைவர் சண்முகத்திடம் இன்னும் பத்து நிமிடத்தில் ரெடியாயிடும் என்றார்.

பக்கத்துத் தெருவாசிகள் அவரைப் பரிதாபத்துடன் பார்க்க சற்றுக் குழப்பத்துடன், ‘சரிங்கய்யா” என்றார்.

அடுத்த பத்தாவது நிமிடம் காத்தமுத்து அவன் ஆசைப்பட்ட எவர்சில்வர் அன்னப்பறவை வாகனத்தில் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து அவன் தந்தை கண்ணீருடன் செலுத்த ஊர்வலமாய்ப் பயணித்துக் கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *