அனாமிகா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 565 
 
 

லக்கேஜ் பிரிவில் ஹெல்மெட் ஒப்படைத்து பிளாஸ்டிக டோக்கன் வாங்கி பத்திரப்படுத்தி விட்டு, மனைவி எழுதிக் கொடுத்த லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தேன். டிராலி அவசியமில்லை என்ற பட்டது. பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு முதலில் பிஸ்கெட்டுகள் அடுக்கின பகுதிக்குச் சென்றேன்.

புதிதாக அறிமுகமாயிருந்த க்ரிம் பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்துப் போட்டுக் கொண்டேன். சரவணனுக்கு க்ரிம் பிஸ்கெட் இருந்தால் டிபன்கூடத் தேவையில்லை. சின்னவன் திவாகருக்கு லிட்டில் ஹார்ட்ஸ்’ தான் இஷ்டம் அதிலும் ஒன்று எடுத்தேன்.

மளிகைப் பிரிவுக்கு வந்து மலர்விழியின் லிஸ்ட்படி வெள்ளைப் பட்டாணி, கோதுமை ரவை, குலோப்ஜாமூன் மிக்ஸ், மிக்ஸட் ஃப்ரூட், ஜாம், டொமேட்டோ சாஸ், நூடுல்ஸ் பாக்கெட்ஸ் என்று ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டுக் கொண்டு திரும்பிய போது தான் அழகு சாதனங்கள் பிரிவில் அவளைப் பார்த்தேன்.

பின்புறமாகத் தான் தெரிந்தாள் என்றாலும் எனக்கு அறிமுகம் உள்ளவள் என்று மூளையின் நினைவு அடுக்கிலிருந்து தகவல் வந்தது.

வாளிப்பான தேகம், பளிரென்று நிறம், படகுக் கழுத்து வைத்துத் தைக்கப்பட்ட ஜாக்கெட். அதிலும் உயரம் குறைவான ஜாக்கெட் அதனால் தேகத்தின் வனப்பு சந்தேகத்திற்கு இடமில்லாமல் பிரகடனப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்க, சரேலென்ற இடுப்புச் சரிவு சந்தேகம் இல்லை .

இவள் எனக்குத் தெரிந்தவள். யார்? நிச்சயமாக ஆஃபீஸ் பெண் இல்லை . ஆபீஸில் ஏழு பெண்கள். ஏழு பேரும் நாற்பதைக் கடந்தவர்கள்.

இவளுக்கு முப்பதுக்கு உள்ளேதான் இருக்கும்.

அவளின் முகத்தை உடனேப் பார்த்தாக வேண்டுமென்கிற உந்துதல் ஏற்பட்டது. அடேயி நீ இரண்டு குழுந்தைகளுக்கு அப்பா என்ற உள்ளே ஒரு குரல் ஒலிக்க. “சேச்சே! தெரிந்தவளாகப் படுகிறதே யாரென்று பார்க்கிற ஆர்வம் மட்டும்தான்” என்று பதில் சொல்லிக் கொண்டேன்.

நான் அழகு சாதனப் பொருள்கள் இருந்த பகுதிக்கு வர, அவள் தன் டிராலியைத் தள்ளிக் கொண்டு பில் போடும் பகுதிக்கு நடந்தாள். இன்னும் முகம் தெரியவில்லை .

“மேடம். இந்த லிப்ஸ்டிக்கை விட்டுட்டீங்க” பணிப்பெண் குரல் கொடுக்க, பாப் செய்த நெளிக் கூந்தலை சிலுப்பலாகத் திருப்பியபடி வந்த அவள் முகத்தைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகப் பொங்கியது.

மை காட்! அனாமிகாவா இவள்? பத்து வருடங்களுக்கு முன் அழகி, இப்போது… பேரழகி!

வாசனையாக சமீபித்து அந்த லிப்ஸ்டிக் எடுத்துக் கொண்டு மீண்டும் பில் கவுண்ட்ட ருக்கு அவள் நடப்பதற்குள் அவள் பாதங்களில் கொஞ்சின வெள்ளிக் கொலுசு, பாலிஷ் பூசப்பட்ட நகங்கள், ட்விஸ் செய்யப்பட்ட புருவங்கள், டாலர் கோர்த்த தங்கச் செயின், கறுப்பு உள்ளாடை, லோ ஹிப்பில் சேலை, என்ற அத்தனை விஷயங்கள் கவனித்தற்காக மானசீகமாக மலர்விழியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

அனாமிகா இந்த ஊரில்தான் இருக்கிறாள் என்பதோ, இதோ இருபதடி தள்ளி சூயிங்கம் மென்றபடி பில்லுக்கு கிரெடிட் கார்டை நீட்டுகிறாள் என்பதோ என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

கும்பகோணத்தற்கு போன மாதம் போயிருந்த போது இவள் அண்ணன் சங்கரனைச் சந்தித்தபோது, “அனாமிகாவைப் பத்தி ஒரு தகவலும் தெரியலிங்க சார், அவ எங்க இருக்கான்னே தெரியலை. ஒரு வேளை இருக்காளோ, இல்லை விபத்து கிபத்துல செத்துதான் போய்ட்டாளோ” என்று அலுப்பாகப் பேசினான்.

“ஏன் அப்படியெல்லாம் சொல்றீங்க?”

“பின்னே என்ன சார்? இந்த பத்து வருஷத்தில் எங்க குடும்பத்தில் நல்லதும் கெட்டதுமா எவ்வளவு நடந்துடுச்சி. எதுக்காவது வந்தாளா? முதல்ல அப்பா செத்தாரு. பேப்பர்ல அத போட்டோ போட்டு விளம்பரம் கொடுத்தோம். வரலை. என் தம்பிக்கு கல்யாணம் நடந்துச்சி. அம்மா செத்துப் போனாங்க. எதுக்கும் வரலையே.”

“இதெல்லாம் அந்தப் பொண்ணுக்குத் தெரியாமலேயேப் போயிருக்கலாம் இல்லையா?”

“அதான் சார் எங்களுக்கும் புரியலை. கோவமா இருக்க வேண்டியது நாங்கதான். என்ன தான் சினிமால காதலை ரசிச்சாலும் வாழ்க்கைன்னு வர்றப்ப அவ்வளவு சுலபமா ஏத்துக்க முடியாது சார். எங்கப்பா, அம்மா ரெண்டு பேருமே அவளோட காதலை எதிர்த்தாங்க. லெட்டர் எழுதி வெச்சிட்டு அந்தப் பையனோடவே ஓடிப் போய்ட்டா, எல்லாரோட கோபமும் தணிஞ்சதும் புருஷனோட ஆசீர்வாதம் வாங்க வருவான்னு எதிர்பார்த்தோம். வரவே இல்லை. எவ்வளவு கல் நெஞ்சம் பாருங்க?”

“உங்க ஆதங்கம் புரியுது. கவலைப்படாதீங்க. கூடிய சீக்கிரம் உங்க சிஸ்டர் பத்தி நல்ல தகவல் உங்களுக்குக் கிடைக்கும்.”

ஒரு ஆறுதலுக்காக இவள் அண்ணனிடம் சொல்லி விட்டு வந்த நானே அவளை இப்படி இங்கே சந்திப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஆக… உயிரோடுதான் இருக்கிறாள். தங்கச் செயின், மோதிரம், விலை உயர்ந்த செருப்புகள், கிரெடிட் கார்டு இதெல்லாம் பார்க்கும் போது செழிப்பாகவும் இருக்கிறாள் என்பது புரிகிறது.

எங்கே தங்கி இருக்கிறாள்? எத்தனைக் குழந்தைகள்? ஏன் தன் குடும்பத்தைத் தொடர்பே கொள்ளாமல் இருந்து விட்டாள்?

இப்போது இந்தக் கேள்விகளுக்கு எனக்கு விடைகள் தேவை.

அவளிடம் நேராகச் சென்று கேட்பதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. காரணம், என்னை அவளுக்கு அறிமுகம் கிடையாது. நான்தான் அவளை பலமுறைப் பார்த்திருக்கிறேன்.

அப்போது கும்பகோணத்தில் அவள் வீட்டுக்கு மூன்றாவது ஃபிளாட் பில்டிங்கில் இரண்டாவது மாடியில் என் வீடு என் அறையின் ஜன்னலைத் திறந்தால் அவள் வீட்டின் வாசல் தெரியும். மூணாவது வீட்டுல இருக்குமே அனாமிகான்னு ஒரு பொண்ணு அது லெட்டர் எழுதி வெச்சுட்டு வீட்டை விட்டு ஓடிப் போயிடுச்சாம்” என்று என் அம்மா என் அப்பாவிடம் சொன்ன போது, என் மனம் துக்கப்பட்டது உண்மை .

அனாமிகா ஓடிப் போன பிறகுதான் அவள் அண்ணனுடன் டென்னிஸ் கிளப்பில் அறிமுகம். அப்புறம் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது. குடும்பத்துடன் இங்கே வந்தாயிற்று.

எனக்குத் தெரிந்த, என்னைத் தெரியாத அந்த அனாமிகாவிடம் என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டு எப்படி கேட்பது என்ற எனக்குள் பலவிதமாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க… அனாமிகா தன் பொருள்கள் போட்டுத் தரப்பட்ட இரண்டு கேரி பேகுடன் வாசலை நோக்கி நடக்க… நான் அவசரமாக பில்லிங் பகுதி வந்து எனது கூடையின் பொருள்களைக் கவிழ்த்து பார்வையை மட்டும் அவள் முதுகை விட்டு விலக்காமலிருந்தேன்.

தவற விட்டு விட்டால் மறுபடி அவளைச் சந்திப்பேனா, மாட்டேனோ?

அவசரமாகப் பணம் கொடுத்து பாக்கி வாங்கி, பொருள்கள் கொண்ட பையுடன் ஓட்ட நடையால் ஹெல்மெட் பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன்.

பிஸியான அந்த சாலையின் பிளாட்பாரத்தின் தூரத்தில் அவள் போய்க் கொண்டிருக்க, நான் அவசர நடையாய் அவளைத் தொடர்ந்தேன்.

எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதென்பதில் இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வராத காரணத்தால் அவளைத் தொடர்ந்து செல்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை .

ச்சை! பத்து வருடத்திற்கு முன்பும் பாழாய்ப் போன தயக்கம். இப்போதும் தயக்கம்.

அனாமிகா இப்போது ஒரு கடைக்குள் கதவு தள்ளி நுழைந்து மறைந்தாள். நானும் நுழைய முற்பட்டு தடுமாறி நின்றேன்.

அது பெண்களுக்கு மட்டுமான பியூட்டி பார்லர். பேசவோ, அறிமுகப்படுத்திக் கொள்ளவோ சரியான இடமில்லை.

நான் அருகில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தபடி காத்திருந்தேன்.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு அவள் அந்த அழகு நிலையத்திலிருந்து வெளிப்பட்டாள்.

நான் அவளை நோக்கி நடந்தேன். நான் அவளை மிகவும் நெருங்கி தொண்டையையும் சரி செய்து கொண்ட நேரத்தில், பிளாட்பார ஓரத்தில் தேங்கி நின்ற ஒரு ஆட்டோவில் சட்டென்று அவள் ஏறி விட ஆட்டோ புறப்பட்டது.

ஸ்கூட்டரை கிளப்பி சாலையில் கலந்து விரட்டி மூன்று சிக்னல்களுக்குப் பிறகு அந்த ஆட்டோவைக் கண்டு விட்டேன்.

நிதானமாக ஆட்டோவைத் தொடர்ந்தேன்.

அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஆட்டோ அசோக் நகரில் ஒரு உள்நகரின் கிராஸ் தெருவில் குறிப்பிட்ட வீட்டின் முன்பாக நிற்க, நான் தூரத்திலேயே ஸ்கூட்டரை நிறுத்தினேன்.

அனாமிகா ஆட்டோவுக்குப் பணம் கொடுத்ததும் நேராக வீட்டின் வாசலுக்குச் சென்று சாவி போட்டுத் திறந்து உள்ளே சென்றாள். அவள் விளக்குகளைப் போட்டது ஜன்னல்களில் தெரிய நான் தைரியப்படுத்திக் கொண்டு அவள் வீட்டை நெருங்கினேன்.

அழைப்பு மணியை அழுத்தினேன். உள்ளே குயில் சங்கீதம் பாடியது.

கொலுசுக் கால்கள் சமீபித்தன. கதவு திறக்கப்பட்டது. என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

“வாங்க, உள்ளே வாங்க” என்றாள்.

அப்போதே அவளும் என்னைப் பார்த்திருப்பாளோ, இன்னும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தான். நான் பிரமிப்புடன் உள்ளே சென்றேன்.

“உட்காருங்க சார். ஒரு வழியா விடாம என்னை ஃபாலோ பண்ணி வீட்டுக்கே வந்துட்டீங்க. அப்புறம்?” புன்னகையோடு எதிரே அமர்ந்து “எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. ஆனா நான் கொஞ்சம் காஸ்ட்லி! பரவாயில்லையா? ஃபைவ் தவுஸண்ட் ரூபிஸ் வைச்சிருக்கீங்களா?” என்றாள் அனாமிகா.

அதிர்ந்து போன எனக்கு அவள் அண்ணனின் கேள்விகளுக்கு விடை புரிந்த மாதிரி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *