(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உலகக் காட்டிலே அந்த வேடன் வேட்டைக்குப் புறப்பட்டான்.
சாதாரணமாக மனிதர்கள் யாவருமே வயிற்றைக் கழுவுந் தொழிலைத்தானே தெரிவு செய்வார்கள்? ஆனால் அந்த வேடன் அப்படிச் செய்யவில்லை.
அவன் தன் ஆத்மபசிக்கே இரைதேட விரும்பினான்.
அழகு மின்னுகிற, யௌவனம் ஜாடை காட்டுகின்ற பட்சிகளை நோக்கி அவன் தன் பயணத்தை ஆரம்பித்தான்.
தனது பயணத்தின் நடுவிலே பல வேடுவர்களை அவன் சந்தித்தான். அவர்களும் அவனைப்போலவே வேடர்கள் தான்.
ஆனால், அவர்கள் விருப்புகளே தனி. உலகத்துப் பொருளை எல்லாம் தானே அடையத் துடித்த வேட்டைக்காரன்.
உலகமெங்கணும் என் அதிகார ஆட்சியே இருக்க வேண்டுமெனத் துடித்த அராஜகத் தன்மைமிக்க வேட்டைக்காரன்.
கடவுளின் மென்னியைத் தன் கால்களால் நசுக்கிக் கொண்டே ‘கதிமோட்சம்’ கேட்கின்ற வேட்டைக்காரன்.
வலோத்காரத்தால் தன் இரத்த வெறிச் சித்தாந் தத்தைச் செயற்படுத்த விழையும் வேட்டைக்காரன்.
இப்படியான பல வேட்டைக்காரர்களை அவன் உலக கானகத்தே சந்தித்தான். இதில் என்ன அதிசயமென்றால் அந்தக் காட்டுக்குள்ளே, அவர்களே வேடர்களாகவும் இருந்தார்கள். அவர்களிற் பலரே கர்ஜிக்கும் சிங்கமென – சீறும் புலியென இன்னமும் பல கொடிய விலங்குகளெனவும் இருந்தார்கள்.
அந்த ஒரு வேடன் மட்டும் அழகிய பறவைகளை நேசித்தான். அவற்றை அன்பு வேட்டையாட விரும்பி னான். அவற்றையே அவன் கனவாய், கருத்தாய், நினை வாய், நிம்மதியாய்க் கருதி வாழ்ந்தான்.
எத்தனையோ அழகு தம் அருகிலேயே இருக்கவும், அதனை உணர்கின்ற பக்குவமற்று, அவற்றை அநுபவிக்கின்ற நினைவுகள் அற்றுத் திரிந்த அசட்டு வேடர்களுக்கு நடுவே அந்த ஒரு வேடன் மட்டும் அழகுகளை அணைத்தான். ஆனந்தித்தான்.
இவ்வாறான மகிழ்ச்சிகளிலே கலாரசிகனான வேடன் உள்ளாழ்ந்து திரிகையிலே அந்த உலகக் காட்டிடைத் திரிந்த வேற்றாவல் வேடர்கள் உறுமினார்கள். மாற்றுக் கருத்து மிருகங்கள் அப்பாவி வேடனை நாலா புறமும் கொலைவெறியோடு துரத்தின.
இவற்றால் அந்த வேடனின் ஆசைக்கனவுகளை அழிக்க முடியவில்லை. அவனது சுந்தர வேட்கையைச் சுட்டெரிக்க முடியவில்லை.
ஒருநாள் –
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அவனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன.
அடிகள் – உதைகள் – கடிகள் தாராளமாக அக் கலை வேடனுக்குக் கிடைத்தன.
தாக்குண்ட அவன் ஓடினான். எங்கென்று அவனுக்கே தெரியவில்லை.
அந்த வேடன் விழைந்த பறவைகள் அவன் பக்கலிருந்து பிரிக்கப்பட்டன. தன்னந் தனியனாய்த் துரத்தப்பட்ட ஏகாங்கி வேடன் புல்லர்தம் அட்டகாசத்தால் ஆறாத அல்லலுற்றான்.
மேலே – வானத்தே – மோனத் தவத் தாழ்ந்திருந்த கடவுளின் மனச்சாட்சி அவரையே கிண்டியது.
கீழே – பூமியிலே அந்த அழகு விரும்பிக் கலைஞன் படும்பாட்டை அது தீர்க்கமாக எடுத்தியம்பிற்று.
கடவுள் கண்ணைத் திறந்தார்.
சாந்தியின்றிப் புவனக் காட்டிடைத் தனியனாக்கப்பட்டு – விரட்டப்பட்டு – சித்திரவதைக் குள்ளாக்கப்பட்ட வேடன்பால் கொடிய சர்ப்பமாக உருக்கொண்டு வந்தார் கடவுள்.
அந்த வேடனின் ஆத்மாவை, கருணை பெருகுந் தன் கரங்களிலே ஏந்தியபடி அவர் தன்னகம் விரைந்தார்.
உலகத்துப் பேய்கள் – உன்மத்த நாய்கள் அந்தக் கலை வேடனின் வெற்றுடலைச் சாப்பிட்டுத் தம் சுய தேவையைப் பூர்த்தி செய்தன.
– சௌந்தர்யா பூஜை (இனிய சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1970, பிரசுரித்தவர்: ஐ.குமாரசாமி, கல்வளை, சண்டிருப்பாய்.