அந்த ஒரு முத்தம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 3,802 
 

குறிப்பு: சுமார் 32 வருடங்களுக்கு முன் நான் வேலை பார்த்த இடத்தில் ஆங்கிலத்தில் எழுதி சிறு பரிசையும் வென்று முதன் முதலாக அந்த கம்பெனியின் மாத இதழில் வெளியான என் முதல் சிறுகதை ஆகும்.

தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் அது…

வாசு வேலைக்கு வந்து தான் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி யோசிக்கலானான்.

அவன் ஒரு கட்டிட தொழிலாளி… நாள் சம்பளத்தில் வேலை செய்பவன்…

ஒரு பீடியை பற்ற வைத்தவன், எதிரே இருந்த இரண்டு மாடியை அடைந்திருந்த புது கட்டிடத்தை நோட்டமிட்டான்… பாதி பீடி தீர, அதை தூக்கி எறிந்தான்.

ஒரு குப்பை வாறும் லாரி, அந்த வீதியை, குப்பையை உறிஞ்சும் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரத்துடன் குப்பையை அள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தது….அது அவன் தூக்கி எறிந்த பீடியை உறிஞ்சி எடுக்காமல் போனதை கவனித்த வாசு, ‘ஒரு வேளை உறிஞ்சி இருந்தால் ஏதேனும் தீ விபத்து நேர்ந்திருக்கலாம்….நள்ள வேளை நடக்கவில்லை!’ என எண்ணியபடி கட்டிடத்தின் மேலே திரும்பவும் நோட்டமிட்டான் வாசு…

இன்னும் மற்ற தொழிலாளர்கள் வந்து சேரவில்லை. இவன் மட்டும் தான் அங்கு இருந்தான்…. தினமும் முதலில் பணிக்கு வந்து சேர்ந்து அதன் மூலம் தன் சூப்பர்வைசரிடம் நற்பெயரை வாங்கும் உள்ளம் கொண்டவன் வாசு…. இதனால் ஏற்கனவே அவனுக்கு இரண்டு முறை சம்பள உயர்வு கிடைத்துள்ளது!… மேலும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்றே எப்பொழுதும் தினமும் முதல் ஆளாக வேலைக்கு வந்து விடுவான். சூப்பர்வைசரையும் மிஞ்சும்படியாக வேலைகளை தானாகவே திட்டமிடுவான்…..

சைக்கிளில் டீ விற்றுக்கொண்டு வந்தவனிடம் ஒரு டீ வாங்கி உறிஞ்சி, கூடவே இன்னொரு பீடியை பற்ற வைத்து……, இரண்டையும் மாறி மாறி உறிஞ்சிக் குடித்தவாறே….. அன்று நாள் முழுக்க செய்ய வேண்டிய வேலைகளை யோசித்துப் பார்த்து….. அதை சூப்பர்வைசர் வந்ததும் சொல்லி…. அதற்கும் இன்னொரு நற்பெயர் வாங்க வேண்டுமென…. கட்டிடத்தை மேலும் கீழும் பார்த்தவன், டீ முடிந்ததும் மீதியிருந்த பீடியை கடைசியாக இரண்டு முறை கப்கப்பென்று உறிஞ்சி தூக்கி எறிந்துவிட்டு….அவன் எங்கு சென்று தன் அடுத்த பணியை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

இப்போது தான் கவனிக்க வேண்டிய வேலையை தொடங்க இரண்டாவது மாடிக்கு விறுவிறுவென தாவிச் சென்றான்.

இரண்டாவது மாடியில் வீதியை ஒட்டியவாறு எழுப்ப வேண்டிய தூணை பார்த்து அதில் கம்பி கட்டும் வேலையை சரிபார்த்து…. மீதமிருந்த வேலையை கவனிக்கலானான்….

அவன் கிட்டதட்ட மேலிருந்து கீழே விழும்படியான ஒரு ஆபத்தான சூழ்நிலையில் பாதுகாப்பின்றி வேலை செய்து கொண்டிருந்தான்….

(‘வா வா அன்பே… வா வா….எனக்கு அந்த ஒரு முத்தத்தை தா!’….. ஏற்கனவே இரண்டு நாட்களாக உயிர் வாழ பிடிக்காமல் அந்த ஒரு முத்தத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த நான்…. என் காதலி என் அருகே வந்து சேர்ந்ததும் என் உள்ளம் பூகம்பமாய் வெடித்து குதுகலமாய் ஆட்டம் கண்டது…. ஆனால் அவள் ஏனோ இன்னும் என்னை நெருங்காமல் முத்தம் தர மறுக்கிறாள்!…. என்னாலும் அவளை நெருங்க முடியாது. அவள் தான் என்னிடம் வர வேண்டும்…. என்னால் எதுவும் முயற்சிக்க முடியுமா என்று பார்த்தால்…..ஊஹூம்…. போக முடியாது…..

‘வா என் அன்பே… வா என் அருகே…. வா…. எனக்கு அந்த ஒரு முத்தத்தை தா…. என்னை வாட்டாதே… உன் அந்த ஒரு முத்தத்தால் என் ஜீவனை சமாதி நிலைக்கு அனுப்பிவிடு..நான் செத்து விடுகிறேன்…அந்த ஒரு முத்தத்திற்காகத் தானே நான் உயிர் வாழ்கிறேன்?!…. என்னை ஏமாற்றாதே… வா என் அன்பே….. வா…. எனக்கு அந்த ஒரு முத்தத்தைத் தா!’)

தூணின் கம்பிகளை சரிபார்த்து கட்டிக்கொண்டிருந்த வாசு மெல்ல சினிமா பாட்டு ஒன்று பாட ஆரம்பித்தான்…அது நேற்று தன் மனைவியுடன் உறவாட நினைத்த தருணத்தில் ஏதோ ஊடலால் தவிர்க்க…. மனதில் வருடும்படியாக நீண்டு கொண்டிருப்பதால் உருவான பாட்டு…

“வருவாளா?…. அவள் வருவாளா?… என் உடைந்து போன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?… என் பள்ளம் ஆகிப்போன உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா?….” பாடிக்கொண்டே வேலையில் மும்முரமாக இருந்தான் வாசு.

(‘வா வா அன்பே… வா…. தா முத்தம் தா!’ என் மனதை புரிந்து கொண்டவளாக… அவள் என்னை நெருங்க ஆரம்பித்தாள்!… எனினும் இன்னும் அந்த முத்தத்தை தரும்படியாக என்னை நெருங்காமல் என்னை சோதித்துப் பார்த்தாள்!. என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…. பித்துப் பிடித்தவனாய் மறுபடியும் பாடத் தொடங்கினேன்… ‘வா வா அன்பே… வா வா….எனக்கு அந்த முத்தத்தைத் தா!’)

கட்டிட வேலையை பார்க்க மற்ற தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து, சூப்பர்வைசகர்க்காக காத்திருந்தனர். சூப்பர்வைசர் சொல்படிதான் அவர்கள் அந்த நாளுக்கான வேலையை ஆரம்பிப்பார்கள்.

மேலே வாசு தன் பணியில் மும்முரமாக இருப்பதை கவனித்து அவனை மெச்சிக் கொண்டிருந்தார்கள்.

(அந்த ஒரு முத்தத்திற்காக ஏங்கி கருகிக் கொண்டிருந்த என் இதயத்தை புரிந்து கொண்டவளாக… என் உடலையும் கருகி என்னை அந்த ஒரு முத்தத்தினால் சாகடித்து என் ஜீவனை சமாதியாக்க…. இதோ என் காதலி என்னை நெருங்கிவிட்டாள்…. அந்த ஒரு முத்தமும் தந்துவிட மிக மிக நெருங்கி விட்டாள்….அந்த முத்தமும் தந்து… என்னை குதூகலமாக…மகிழ்ச்சி வெள்ளத்தில் துடிதுடித்து வானத்தில் பறக்க விட்டாள்!….. ஜ்ஜ்ஜ்ஜூம்ம்ம்!)

‘ஜ்ஜ்ஜ்ஜூம்ம்ம்….’

ஏதோ ஒன்று வானத்தை நோக்கி பறக்க….அது என்ன என்று திரும்பிப் பார்த்தவர்கள்…. ‘ஓ தீபாவளிப் பட்டாசு வகை ஏரோப்பிளேன் தானே அது?!…. அது எப்படி தானாக பறக்கிறது?’ என்று ஆச்சரியமாக பார்த்தார்கள்.

பறந்து சென்ற அந்த ஏரோப்பிளேன் பட்டாசு….வாசுவை பதம் பார்த்தது. அவன் பாதுகாப்பின்றி நின்றிருந்த நிலையை தடுமாற்றம் செய்து…. இரண்டாவது மாடியிலிருந்து விழும்படியாக செய்தது…. விழுந்தவன் மண்டையை கான்கிரீட் தரை பதம் பார்க்க… இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சில வினாடிகளில் இறந்து போனான் வாசு!

‘தன்வினை தன்னைச் சுடும்!’ என்பதாக அவன் வீசி எறிந்த பீடி ஒன்று… காற்று வாக்கில்…அருகே பற்றவைக்கப்படாமல் சும்மா கிடந்திருந்த தீபாவளிப் பண்டிகை பட்டாசு ஏரோப்பிளேன் மீது விழ…. அதை சில வினாடிகளில் பற்ற வைத்து… அந்த ஏரோப்ளேன் வாசுவையே பதம் பார்த்து அவன் உயிரை பலி வாங்கியது!!!

கட்டிட வேலையில் இருப்பவர்களே!…. பாதுகாப்பாக வேலை செய்யுங்கள்!! உங்கள் உயிர் உங்கள் கையில்!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *