மணியைப் பார்த்தேன் ஏழு.
ஏழரை மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தான் ஷங்கர் . அவனால் வர முடியாவிட்டாலும் என்னை அழைத்துக் கொண்டு போக கார் வருமெனச் சொன்னான்.
ஷங்கர் வீட்டில் விருந்து.
தொழில் விஷயமாக அளிக்கும் விருந்தில் எனக்கென்ன வேலை என்று நான் எவ்வளவோ சொல்லியும் ஷங்கர் கேட்கவில்லை. பலவிதமான ஆட்களைப் பார்க்கப் போகிறீர்கள். அவர்கள்தானே உங்கள் கதைகளுக்குக் கருப்பொருள் என்று பெரிதாகச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, டெலிபோனை வைத்து விட்டான். அவன் அழைப்பை மறுப்பதென்பது மிகவும் சிரமமான காரியம்.
ஷங்கரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
தொழில் – ஏற்றுமதி இறக்குமதி. இத் தொழில் என்றாலே அதில் எல்லாம் அடக்கம். அவனைப் பற்றி நான் விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. காலை சென்னையில் காப்பி. மதியம் தில்லியில் உணவு. இரவுச்சாப்பாடு மும்பையில். மாதம் பதினைந்து நாள் உடம்பில் இறக்கை முளைத்துவிடும். பறந்து கொண்டே இருப்பான், உலகம் முழுவதும்.
ஷங்கரும் எனக்குமிடையே எப்படி நட்பு இருக்க முடியுமென்று என்னுடைய பல நண்பர்களுக்கு ஆச்சர்யம். இதில் ஆச்சர்யப் படுவதற்கு எதுவுமில்லை . அவன் என்னுடைய பழைய மாணவன். தலை மாணாக்கன் என்றுதான் சொல்ல வேண்டும். சிவில் சர்வீஸ் , மருத்துவம், பொறியியல் ஆகிய எந்தத் துறைக்கும் அவன் தகுதியுடையவனாக இருந்தும் அது எதற்கும் போகாமல், அவன் கொச்சிக்குப் போய் ஒரு மீன் ஏற்றுமதி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. “என்ன இப்படி மீன் வியாபாரத்துக்குப் போய் சேர்ந்திருக்கே?” என்றதற்கு அவன் பதில்: “மச்சாவதாரத்திலிருந்து ஆரம்பிச்சாத்தானே திருவிக்கிரமனா விசுவருபம் எடுக்க முடியும்?”
அவனால் விசுவரூபம் எடுக்க முடிந்தது. அவன் பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளவில்லை. இதில் ஏற்படும் அனுபவங்களும் அவனுக்கு முக்கியமானவையாக இருந்தன. அவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வான். ஒரே சமயத்தில் விளையாடுபவனாகவும், பார்வையாளனாகவும் அவனால் இருக்க முடிந்தது என்பதுதான் அவன் தனித்தன்மை.
யாருக்காக விருந்து என்று அவனை நான் கேட்டன். “இந்திய அமெரிக்கப் பிரஜை. தொழிலதிபர். இவர்கள்தானே இன்றைய பிராமணர்கள், நம் நாட்டில்..” என்று அவன் சொன்னபோது, அவன் புன்னகை செய்வது கூட டெலிபோனில் தெரிவதுபோல் எனக்கொரு பிரமை.
அந்த இந்திய அமெரிக்கப் பிரஜை முப்பது வருஷமாக அமெரிக்காவில் இருக்கிறாராம். அவர் என்ன வியாபாரம் செய்கிறாரென்று ஷங்கர் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஏதோ மருந்துத் தொழில் சம்பந்தப்பட்டது என்று மட்டும் புரிந்தது.
அந்த இந்திய அமெரிக்கப் பிரஜை, அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கிழக்குக் கடற்கரை ஓரப் பகுதியில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் அப்பா அந்தக் கிராமத்தை விட்டு வேலை நிமித்தம் சென்னைக்கு வந்துவிட்டார். இதற்குப் பிறகு அவருக்கும் அந்தக் கிராமத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லாமல் போய்விட்டது. அந்தக் கிராமத்து உப்பைத் தின்றவன் என்று அந்த இந்திய அமெரிக்கப் பிரஜையின் அப்பா அடிக்கடி சிரித்துக் கொண்டே சொல்வாராம். காரணம் அந்தக் கிராமத்தில் தின்பதற்கு உப்பைத் தவிர வேறு எதுவும் கிடையாது.
பச்சைப்பணத்தில் மூழ்கித்திளைத்த அந்த இந்திய அமெரிக்கப் பிரஜைக்கு திடீரென்று ஒரு நாள் ஒரு பசுமையான எண்ணம் தோன்றிற்று.
அவர் அவருடைய அந்த குக்கிராமத்து உப்பைத் தின்று வளர்ந்தவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவர் அப்பா தின்றவர் என்ற காரணத்தினால் அந்தக் கிராமத்தைப் பசுமை கொழிக்கும் ஊராக ஏன் மாற்றிவிடக் கூடாது என்ற பசுமையான எண்ணம். இந்தியாவில் இப்போதுள்ள தாராளமயமாக்குதல் என்ற பொருளாதாரக் கொள்கை வெயிலில் சந்தோஷமாகக் குளிர் காயலாம். தேசபக்தியையும் நிரூபித்துக் காட்டலாம். இதற்கு ஊதியமுண்டு எனும்போது வலிய வீட்டுக்கு வரும் திருமகளுக்கு அனுமதி மறுக்கலாமா? –
இவ்வாறெல்லாம் அவரைப் பற்றிப் பேசிய ஷங்கரிடம் நான் கேட்டேன். “நீ அவருக்கு எதற்கு விருந்தளிக்கிறாய்?”
“எனக்கு மட்டும் தேசபக்தி இல்லையா? பச்சைப் பணத்தை பாரத நாட்டுக்கு இறக்குமதி செய்வது என் பணி” என்றான்.
வாசல் மணி ஒலித்தது.
ஐயப்ப பக்தர் ஒருவர் நின்று கொண்டிருந்தார், கதவைத் திறந்ததும். என் பெயரைச் சொன்னார். நான் தலையசைத்தேன்.
“ஐயா வீட்டிலேந்து வர்றேன் போகலாங்களா?”
அவனைப் பொருத்தவரையில் உலகத்தில் ஒரு ஐயாதான் உண்டு என்று அவன் நினைப்பதாக எனக்குத் தோன்றிற்று.
நான் புறப்பட்டேன்.
நான்கு நாட்களாக நல்ல மழை. எழில்மிகு சென்னையில் வீதிகள் தோறும் ஆங்காங்கே நீர்த் தீவுகள்.
ஷங்கர் நுங்கம்பாக்கத்தில், பைகிராப்ட் கார்டன்ஸிலிருந்தான். பெரிய வீடு. பணக்கரார்கள் வசிக்கும் நுங்கம்பாக்கத்தில் பாலும் தேனும் தெருவில் பெருகியோடுவதற்கு பதிலாக, இப்பொழுது அழுக்கு மழைத்தண்ணீர் இடுப்பளவு ஓடிக் கொண்டிருந்தது. மரணம் ஏழை, பணக்காரன் என்று பார்ப்பதில்லை என்பார்கள். ‘தி கிரேட் லெவலர்’. இவ்வகையில் மழையும் மரணமும் ஒன்று என்று தோன்றியது. மழையில் குடிசைகளும் காலி.
ஷங்கரின் புதிய படகுக் கார், நீர் வெள்ளத்தில் படகு போலவே சென்றது.
ஷங்கரின் வீட்டு வாசலில் நிறைய கார்கள். நிறைய பேரை விருந்துக்குக் கூப்பிட்டிருந்தானென்று தெரிந்தது. அத்தனைப் பேரும் வந்திருக்கிறார்கள். ஷங்கரின் செல்வாக்கை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
பெரிய ஹால். சோபாக்களிலும், நாற்காலிகளிலும் ஆணும் பெண்ணுமாய் பல பேர் உட்கார்ந்திருந்தனர். ஷங்கர் என்னை அறிமுகம் செய்து வைத்தான், அவனுக்கே உரித்தான உயர்வு நவிற்சி மொழியில்: “என் ஆசிரியர், சர்வதேசப் புகழ் வாய்ந்த எழுத்தாளர். இந்தியாவின் தலைசிறந்த அறிவுஜீவி.”
முன்பெல்லாம் ஷங்கர் இப்படி அறிமுகம் செய்தால், நான் மிகுந்த கோபத்துடன் என் எதிர்ப்பை தெரிவிப்பதுண்டு. இப்படிச் சொல்வது அவனுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்றால், நான் ஏன் இதற்குக் குறுக்கே நிற்க வேண்டுமென்று இப்பொழுதெல்லாம் அவன் கூறுவதை மௌனமாக ஏற்றுக் கொண்டு அங்கிருக்கும் யாரையும் பார்க்காமல் ஓரமாய்ப் போய் உட்கார்ந்துவிடுவது என் வழக்கமாகிவிட்டது.
இப்பொழுதும் அதுபோல் உட்கார்ந்தேன். என் பக்கத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். உத்தரப்பிரதேசத்து ராஜ்புத் என்று தம்மைப்பற்றிக்கூறிக் கொண்டார். தமிழ் நாட்டில் இருபது வருஷமாயிருக்கிறார். தத்துவத்தில் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்.
என்னைப் பற்றி ஷங்கர் அவரிடம் கூறியிருக்க வேண்டும். அவர் பேச்சிலிருந்து எனக்கு இது தெரிந்தது.
அங்கிருந்தவர்களில் பலர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தொழிலதிபர்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த செல்வாக்குள்ள சில அரசியல்வாதிகள்.
முக்கிய விருந்தினர், அந்த இந்திய அமெரிக்கப் பிரஜை இன்னும் வரவில்லை . கவர்னர் மாளிகையில் சில முக்கியப் புள்ளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக ஷங்கர் எல்லோருக்கும் பொதுவாக அறிவித்தான். கிண்டியிலிருந்து கிளம்பிவிட்டதாகவும், வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னான்.
என் அருகில் உட்கார்ந்திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தைத்ரிய உபநிஷத்திலிருந்து ஒரு மேற்கோள் எடுத்துக்காட்டி, ஜார்ஜ், சான்ட்யாயனா கூறுவது அதனுடன் எப்படி ஒத்திருக்கின்றது என்பது பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அவர் கையிலிருந்த தம்ளரில் விஸ்கி பாதியாகியிருந்தது.
ஏதாவது பேசியாக வேண்டுமென்பதற்காக நான் அவரிடம் சொன்னேன்: “இவ்வளவு படித்திருக்கிறீர்களே?”
அவர் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு மீதமிருந்த விஸ்கியையும் ஒரே மடக்கில் குடித்துவிட்டுச் சொன்னார்: “என்ன படித்திருந்தால் என்ன நான் அரசாங்கக் கோப்புகளுடன்தானே மாரடிக்க வேண்டும்”
“விட்டுவிடலாமே வேலையை?” என்றேன் நான்.
“விடலாம். ஆனால் விட்ட பிறகு நான் தைத்ரிய உபநிஷத்திலிருந்து மேற்கோள் காட்டுவதை யார் கேட்பார்கள்?” என்றார், தன்னையே கண்டு இரக்கப்படுவது போன்ற ஒரு குரலில்.
“நீங்கள் இப்போது எந்தத் துறையில் இருக்கிறீர்கள்?”
“வர்த்த க வரி…”
அவரைப் பார்க்கப் போகும் வியாபாரிகள் அனைவரும் அவருடைய உபநிஷதப் பிரசங்கத்தைக் கேட்காமலிருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. சில கெட்டிக்கார வியாபாரிகள் சில உபநிஷதங்களைப் படித்துவிட்ட பிறகே அவரைப் பார்ப்பதற்குச் செல்லக் கூடும்.
முக்கிய விருந்தினர் வந்துவிட்டார். அங்கு ஒரு சலசலப்பு.
வாட்டசாட்டமான உருவம். மல்யுத்தக்காரரைப் போலிருந்தார் அவர். தலையில் முடியேயில்லை . வேட்டி, ஜிப்பா . ‘உலகம் இன்புற்றிருப்பதைத் தவிர வேறொன்றுமறியேன் பராபரமே’ என்பது போல முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகை. ம அவருக்குப் பின்னால் அவருடைய செக்ரட்ரிசூட்டிலிருந்தான். கையில் ஒரு ப்ரீஃப்கேஸ் வைத்திருந்தான். அவன் எல்லாரையும் சந்தேகக் கண்களுடன் சுற்றும்முற்றும் பார்த்தான்.
“மிஸ்டர் அனுஜ் அமெரிக்காவில் பாரத நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவர்..”
“ராமானுஜம் என்று சொல்லுங்கள். நான் அமெரிக்காவில் தான் அனுஜ் ” என்றார் அந்த இந்திய – அமெரிக்கப் பிரஜை.
“எஸ், தாங்க்யு … மிஸ்டர் ராமானுஜம் அமெரிக்காவில் அமோக வெற்றியடைந்த இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவர். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது எனக்கும் தஞ்சாவூர் மாவட்டந்தான். அங்கு அவருடைய சொந்தக் கிராமமாகிய நெய்தலூரை தத்தெடுத்துக் கொண்டு அதை குபேரப்பட்டினமாக மாற்ற அமெரிக்காவிலிருந்து இங்கு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இதைத் தவிர, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் சில வியாபார ஒப்பந்தங்கள்……. ராமானுஜத்தினுடைய தேசபக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்றான் ஷங்கர்.
அவன் கையில் விஸ்கி தம்ளரை எடுத்துக் கொண்டு ‘சீயர்ஸ்’ என்றான்.
மற்றவர்களும் தம்ளர்களை உராசினார்கள்.
ராமானுஜம் கையில் ஜூஸ் இருந்தது. ‘இந்தியாவுக்கு வந்தால் நான் குடிப்பதில்லை’ என்று பல இந்திய – அமெரிக்கர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். கோயிலுக்கெல்லாம் போக வேண்டியிருக்கிறது ரத்தத்தில் ‘ஆல்கஹால்’ ஓடுவதை நான் விரும்பவில்லை என்று ஒரு சிலர் சொல்வதுண்டு.
“நெய்தலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் எங்கே இருக்கிறது?” என்றார் ஒருவர்.
அவர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரென்று தோன்றியது.
“கிழக்குக் கடற்கரை ஓரம்…. ஒரு குக்கிராமம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தைத் தத்தெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் மிஸ்டர் ராமானுஜத்துடைய குறிக்கோள். அதுவும் அவருடைய சொந்தக் கிராமம்” என்றான் ஷங்கர்.
ராமானுஜம் புன்னகையுடன் தலையசைத்துக் கொண்டே ‘ஜூஸை’ உறிஞ்சினார்.
வரிசையாக பாதாம், முந்திரிப்பருப்பு, வால்நட், கடலை, பாலேடு, சம்மோஸா, வடை ஆகியவை நிறைந்த தட்டுகள் உலா வந்து கொண்டிருந்தன.
“மிஸ்டர் ராமானுஜம் போன்ற நல்ல எண்ணம் கொண்ட இந்திய – அமெரிக்கர்கள் தம் கிராமங்களைத் தத்தெடுத்துக் கொண்டால், இந்தியாவில் வறுமையே இருக்காது.” என்றார் ஒருவர்.
இந்தியக் கிராமங்கள் மட்டுமல்லாமல் சென்னை நகர வீதிகளையும் யாராவது தத்தெடுத்துக் கொண்டால் தேவலை’ என்றேன் நான்.
திடீரென்று அங்கு ஓர் அமைதி நிலவியது. எல்லாரும் என் திசை நோக்கிப் பார்த்தார்கள். நான் சொன்னது அபஸ்வரமாக ஒலித்ததோ என்ற சந்தேகம் எனக்கு. நான் இதைக் கிண்டலாகக் கூறவில்லை என்பதை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?
ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு ராமானுஜம் சொன்னார்: “அவர் சொல்வது சரிதான். இந்திய நகரங்களின் வீதி சீரமைப்புக்காக அமெரிக்க இந்தியர்களின் சின்டிகேட் உருவாக்குவது பற்றி என்னைச் சிந்திக்கத் தூண்டுகிறது அவர் யோஜனை.”
“குட் நாட் ஏ பாட் ஐடியா” என்றான் ஷங்கர்.
“நமது பதினெட்டு மேஜர் புராணங்களும் கட்டுக்கதைகள் என்றா நினைக்கிறீர்கள்?” என்று குரலை மிகவும் தாழ்த்தி என்னிடம் கேட்டார் அந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.
‘ஆமாம்’ என்றால் விவாதம் தொடருமென்று அஞ்சி நான் ‘இல்லை’ என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முயன்றேன்.
அவர் விடவில்லை “அவை கட்டுக்கதைகள் என்றுதான் பெரும்பான்மையோர் கருதுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. காரணம் தெரியுமா?”
“தெரியும்.”
“என்ன தெரியும்?”
ஷங்கர் ஆபத்பாந்தவனாக என் அருகில் வந்தான்…. “நீங்கள் இரண்டு பேரும் சந்தித்ததில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நீங்கள் இருவரும் விவாதிப்பதற்குப் பல விஷயங்கள் இருக்கக்கூடும்.” என்றான், முகத்தில் விஷமப் புன்னகையுடன்.
“அவருடைய கிராமத்தை தத்தெடுத்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?” என்றார் அந்த உத்தரப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி.
“அக் கிராமம் உப்புப் பிரதேசம். அங்கு ஒரு பெரிய தொழிற்சாலை துவங்க திட்டமிட்டிருக்கிறார். இதைத் தவிர தென்னை மரங்கள் , கடலோர செடி கொடி வகைகள் போன்றவை நட்டு, அந்தப் பகுதியே பசுமை பூத்துக் குலுங்க வேண்டுமென்பது அவர் திட்டம். ஒரு ரெஸிடென்ஷியல் ஸ்கூல் , காலேஜ், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல், சுற்றுலா வசதிகள் என்ற பிரும்மாண்டமான எண்ணங்கள் அவருக்குக்கிருக்கிறது” என்றான் ஷங்கர்.
“பயங்கர மழை” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெண் அங்கு வந்தாள். நாட்டியமாடுபவள் போல் தோன்றியது. வயதைக் குறைத்துக் காட்ட அசாத்திய சிரமம் எடுத்துக் கொண்டிருப்பா ளென்று எனக்குப்பட்டது.
“ராமானுஜம் போன்ற இந்திய – அமெரிக்கப் பிரஜைகள் இந்தியாவுக்கு விஜயம் செய்தால் வேறு எதைப் பார்க்க முடியும் இந்த நாட்டில்?” என்றான் ஷங்கர் குரலைச் சற்று உயர்த்தி.
ராமானுஜம் முகத்தில் கேள்விக் குறி தோன்ற ஷங்கரைப் பார்த்தார்.
“ஒரே மழை என்கிறார் சித்ரா. காரணம் சொன்னேன்.”
அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் அவர் புன்னகை செய்தார்.
அவர் எழுந்து ஷங்கரை நோக்கி வந்தார்.
“உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்” என்றார்.
“பர்ஸனல்?” என்றான் அவன்.
“பர்ஸனல் ஏதுமில்லை . என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நான் எது செய்தாலும் வெளிப்படையாகவே செய்வேன். இப்பொழுது ராஜ்பவனில் என் திட்டத்தைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியவர்களிடம் விவாதித்து விட்டேன். அவர்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. அந்தக் கிராமத்தில் இப்பொழுது வீடுகளே இல்லையாம் . மிகவும் தாழ்வான பிரதேசம் என்பதால் எல்லோரும் காலி செய்து கொண்டு போய்விட்டார்களாம். முதலில் அந்த இடத்தின் நிலமட்டத்தை உயர்த்த வேண்டும்” என்றார் அவர்.
“மை காட்! செலவைப் பற்றி யோசித்தீர்களா?” என்றான் ஷங்கர்.
“வானந்தான் எல்லை” என்றார் அவர் புன்னகையுடன்
எதற்கும் துணிந்த ஷங்கருக்கே அவர் இவ்வாறு சொன்னது சிறிது அதிர்ச்சியைத் தந்தது.
“ஒரு சென்டிமென்ட்டுக்காக இவ்வளவா விலை கொடுக்க வேண்டும்?” என்றான் ஷங்கர்.
“மும்பை சென்னை வியாபார ஒப்பந்தங்களை நினைக்கும் போது நான் இதற்காகச் செலவழிக்கப் போவது நிலக்கடலை விலைதான்’ என்றார் அவர் புன்னகையுடன்.
“எத்தனை ஆகுமென்று நினைக்கிறீர்கள்?” “இதுதான் உங்கள் பொறுப்பு.” என்றார் அவர்..
அப்பொழுது தொழிலதிபர் ஒருவர் அங்கு வந்தார். “நான் இந்தத் துறையில் தான் சிறப்பாக ஆய்வு செய்து வருகிறேன். ஷங்கருக்கு உதவியாக இருப்பது என் பொறுப்பு” என்றார் அவர்.
அப்பொழுது வந்த விஸ்கி தட்டில் காலியான தன் தம்ளரை வைத்துவிட்டு, இன்னொரு தம்ளரை அவர் எடுத்துக் கொண்டார்.
“இந்தியாவின் வறுமை, பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் வறுமைக் கோட்டின் கீழே எண்பது சதவீதத்துக்கு மேலே இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது” என்றார் அவர்.
‘இங்கு தான் நம் நாட்டு தத்துவம் நமக்குத் துணையாக இருக்கிறது” என்றார் அந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.
“எப்படி?” என்றார் அந்த தொழிலதிபர்.
“நம் நாட்டு ஏழைகளில் பெரும்பான்மையோருக்கு தாம் ஏழைகளாக இருக்கின்றோம் என்றே தெரியாது. இருப்பதையே சொர்க்கமாகக் கொண்டு மகிழும் ஆத்ம திருப்தியை நம் தத்துவம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இது பாரம்பரியமாக வரும் தத்துவ வரப்பிரசாதம். ஏழையின் ஆத்மாவுக்கும் பணக்காரனின் ஆத்மாவுக்கும் என்ன வித்தியாசம்? ‘அஹம் பிரும்மாஸ்மி’ பாவனையுடன் போராட முடியுமா? மாயாதத்துவத்தைப் பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டால் தான் இது புரியும்…”
அவர் தம்ளரைக் காலி செய்து கீழே வைத்தார்.
ராமானுஜம் சொன்னார்: “நாளைக் காலையில் என்னுடன் அரசாங்க டெலிகேஷன் வருகிறது, அந்தக் கிராமத்தைப் பார்க்க. ஷங்கர் நீங்களும் எங்களுடன் வர வேண்டும்….”
ராமானுஜம் அந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை .
“நாளைக்கா?” என்றான் ஷங்கர்.
“ஆமாம் பணிகளை உடனே தொடங்கியாக வேண்டும். இதற்குக் காரணமுமிருக்கிறது.”
“என்ன காரணம்?”
“உங்கள் அரசாங்கம் தில்லியில் ஆட்டம் கண்டிருக்கிறது. இது வீழ்ந்தால் அடுத்து வரும் அரசாங்கம் எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது…”
“இந்த மாநிலத்திலுள்ள குக்கிராமத்துக்கும் மத்தியில் ஆட்சி தொடருமா இல்லையா என்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்றார் அந்தத் தொழிலதிபர்.
ராமானுஜம் பதில் சொல்லவில்லை .
என்ன சம்பந்தமென்று எனக்கும் புரியவில்லை.
“இங்கு தமிழ் நாட்டில் ஒரு வாரம்… பிறகு மும்பையில் பதினைந்து நாட்கள் தில்லியில் ஒரு வாரம் ஆக ஒரு மாதந்தான் என்னால் இந்தியாவிலிருக்க முடியும். இதற்குள் இது பற்றிய புராஜெக்ட் பேப்பர் தயாராக வேண்டும்…” என்றார் ராமானுஜம்.
மும்பையிலும் சென்னையிலும் அவர் மேற்கொள்ளவிருந்த ஒப்பந்தங்கள் என் நினைவுக்கு வந்தன. சம்பந்தம் புரிந்தது. ஊதியம் இல்லாமலா தேசபக்தி?
அந்த நாட்டிய மங்கை பக்கம் திடீரென்று திரும்பி ராமானுஜம் சொன்னார். “அந்தக் கிராமத்தில் ஒரு கலாசார மையம் தொடங்கலா மென்பதும் என் எண்ணம். உங்கள் உதவியும் தேவைப்படும்… உங்கள் பெயர் என்ன?”
“சித்ரா. நிச்சயமாக உதவி செய்வேன். நான் ஒரு திட்டம் தயாரித்துத் தருகிறேன்.”
இதற்குள் அங்கிருந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு பெரும் புள்ளிகள் அங்கு வந்தனர்.
“நம்முடைய தமிழ் நாட்டுக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அந்த மையம் இருக்க வேண்டும். நாட்டார் கலைகளுக்கு முக்கியத்துவம் தந்தால்தான் தமிழ்ப் பெருமக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்…” என்றார் அவர்களிலொருவர்.
“கிளாஸிகல் கலைகள், நாட்டார் கலைகள் எல்லாவற்றிற்கும் நிச்சயமாய் அங்கு இடமுண்டு…” என்றான் ஷங்கர்.
“மக்களின் வறுமையை அவர்கள் எப்படி ஒரு வேளை உணவுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்து விளக்கும் வீதி நாடகங்களும் தேவை” என்றார் இன்னொரு அரசியல்வாதி.
விஸ்கி தட்டேந்தியவன், ஓரத்தில் நிற்பதைப் பார்த்து அருகில் வரும்படி அவர் சைகை செய்தார்.
அப்போது அங்கு வந்த இந்திய அமெரிக்கப் பிரஜையின் செக்ரட்ரி, மொபைல் போனை அவரிடம் கொடுத்தான்.
“யார் பேசுகிறார்கள்?”
‘நீங்கள் பேசுங்கள்’ என்பது போல் அவன் சைகை செய்தான்.
அவர் பேசினார். முகத்தில் கலவரம் தோன்றியது.
போனை செக்ரட்ரியிடம் கொடுத்தார்.
“என்ன பிரச்சினை?” என்றான் ஷங்கர்.
“நாளைக்கு அந்தக் கிராமத்துக்குப் போக முடியாது” என்றார் அவர்.
“ஏன்?”
“அந்தக் கிராமமே இல்லை. கடல் மட்டத்துக்குக் கீழே போய் விட்டது.”
“கவலைப்படாதீர்கள். உங்கள் பெயர் உள்ளளவும் அக்குக்கிராமத்தின் பெயர் சரித்திரத்திலிருக்கும்” என்றான் ஷங்கர்.