(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நந்திக் கடற் பிரதேசத்தைச் சுற்றி இரண் டாவது தடவையாக இராணுவம் நிலை கொண்டிருந்தது.
வட்டுவக் கல்லுக்கும் வெள்ளாமுள்ளி வாய்க்காலுக்குமிடையே பொது மக்கள் போக்கு வரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டி ருந்தது. நேராக தொடுவதற்குப் பதிலாக தலை யைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல முழு நந்திக் கடலையும் சுற்றி அவர்கள் பயணப்பட வேண்டியிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்கும் போது 2009 மே 19ம் திகதிக்கு முன்ன ரான ஒரு நிலைமையைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
நந்திக் கடல் நீரேரியும் கடலும் இணை யும் இடத்தில் ‘அது’ கிடந்தது.
அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவ வீரனொருவன் காலையில் ‘ஒன்று’க் குப் போகும் போது ‘அதை’க் கண்டான். அதன் பிறகு அரை மணி நேரத்தில் நாட்டின் முழுப் பாதுகாப்பு அங்கங்களும் அந்த இடத்தில் தமது கவனத்தைக் குவித்தன. முழு நந்திக் கடற் பிரதேசத்தையும் சுற்றி உடனடி யாக இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டது. எந்தவொரு தாக்குதலையும் எதிர் கொள்ளும் தைரியத்துடன் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருந்தார்கள்.
மூன்றாவது முறையாகவும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றி ருந்தான் கனகு என அழைக்கப்படுகிற கனகராசா. இம்முறையாவது தனது முறைப்பாட்டைக் கொடுத்து விட வேண்டும் என்ற ஆதங்கம் அவனில் இருந்தது.
ஏற்கனவே இரண்டு முறை பொலிஸுக்கு வந்தும் அவனது முறைப்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொள்வதில் அசிரத்தை காட்டியிருந் தார்கள். வீட்டிலும் தனது தோட்டத்திலிருந்தும் காணாமல் போனதாகக் குறிப்பிட்ட பொருட்களில் தங்கமோ வெள்ளியோ பணமோ உள்ளடங்கி யிருக்கவில்லை. எனவே பொலிஸ் நிலையத் தலைவாசலிலே ஒரு முறை திருப்பி விடப்பட்டான். மறு முறை உள்ளே வந்து விபரம் சொன்ன போது வெற்றிலை வாயோடு நின்றிருந்த வயதான பொலீஸ்காரன் கிண்டலாகச் சிரித்தான்.
எல்லா அவமானத்தையும் தாங்கிப் பழக்கப்பட்டவன் தமிழன். அவனது சிரிப்பைக் கனகராசா ஒரு பொருட்டாக மதிக்காததைப் போல அவனது வார்த்தைகளையும் பொலிஸார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
இம்முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்றுதான் கனகு வந்திருந்தான்.
முல்லைத் தீவிலிருந்து வட்டுவக்கல், வெள்ளாமுள்ளிவாய்க்கால், கரையான் முள்ளிவாய்க்கால், ரெட்டைவாய்க்கால், புதுக்குடியிருப்பு, வட்டக் கச்சி, ஊடாகப் பரந்தனில் இணையும் ஏ 35 பாதையில் பயணிப்பவர்களும் ஏ 9 பாதையிலுள்ள மாங்குளத்திலிருந்து பிரியும் ஏ 34 வீதியில் ஒட்டு சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று வழியாக ஏ 35 பாதையில் இணை பவர்களும் அந்தக் கடையில் இறங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்வது வழக்கம். வட்டுவக்கல்லில் அமைந்திருந்த அந்தக் கடையில் சுடச்சுட வடை, தோசை, தேனீர் கிடைக்கும்.
வாகனங்கள் நிறுத்தப்பட, பயணிகள் கூட்டமாக வந்து மொய்ப் பார்கள். சிற்றுண்டி தயாரிக்கும் சமையற்காரர்களும் பரிமாறுபவர்களும் பம்பரமாகச் சுழலுவார்கள். கடையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் படப் பாடல்கள் காது ஜவ்வைக் கிழித்துவிடுமாப்போல அலறும். அந்தக் கடையின் அடுப்பு எந்த ஒரு வேளையிலும் அணைவதில்லை. பெரும் பாத்திரங்களில் வெவ்வேறு விதமான வடைகள் பொரிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு அடுப்பிற்கும் ஒவ்வொருவர் நிற்பார். அடுப்புக் களிலுள்ள பாத்திரங்களிலிருந்து இறக்கப்படும் பொருட்களை எடுத்துச் சென்று கடைக்குள் கொண்டு செல்லும் நபர் காலில் சுடுநீர் ஊற்றியவரைப் போல் ஓடித் திரிவார்.
கனகு கல்லாவில் இருந்து பெருஞ்சத்தமிட்டுக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டேயிருப்பான். கிட்டத்தட்ட ஓர் ஓய்வற்ற தொழிற்சாலை போல அந்தக் கடை இயங்கிக் கொண்டிருந்தது.
அடிக்கடி அப்பாதையில் பயணம் செய்யும் நபர்களின் மனதில் ஒரு கேள்வி இருந்தது. எந்த நேரம் வந்தாலும் கல்லாவில் இருக்கும் கனகு எப்போது உறங்குகிறான் என்பதுதான் அந்தக் கேள்விக்
இப்படிப் பெரும் கலகலப்பாக இருந்த கடை நாளா வட்டத்தில் நாட்டில் குறிப்பாக வடக்கில் ஏற்பட்ட பிரச்சினைகளால் சாதாரண ஒரு தேனீர்க் கடையாகச் சுருங்கிப் போனது.
ஓஹோவென்று இருந்த காலத்தில் நெடுங்கேணியில் தோட்டம் ஒன்றை வாங்கிப் போட்டிருந்தான் கனகு. பிறகு அதற்குள் ஒரு வீட்டையும் கட்டி அங்கேயே குடியேறினான். கடை ஆரவாரமில்லாமல் நடந்து வந்தது. அவ்வப்போது வரும் பயணிகளும் பிரதேசத்து மக்களுமே அவனது வாடிக்கையாளர்களாக இருந்தனர். பிரச்சினை உக்கிரம் அடைந்த போது ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது கடையைத் திறப்பதும் பூட்டிவிட்டு நெடுங்கேணிக்குப் போய்விடுவதுமாக இருந்து வந்தான்.
பிரச்சினை முடிந்து விட்டதால் மீண்டும் பாதையில் பயணம் களைகட்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. கடைக்குப் பின்னால் பரணில் இருந்த பெரும் பாத்திரங்கள் மீண்டும் அடுப்பில் ஏறும் காலம் நெருங்கி வருகிறது என்று எதிர்பார்த்தபடியிருந்தான். வயது போய் உடம்பில் பழைய தெம்பு அற்றுப்போன நிலையிலும் கடை வியாபாரம் எழும்பி விட்டதென்றால் பிள்ளைகளுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி விடலாம் என்று அவன் நம்பினான்.
இப்படியிருந்த வேளையில் இரண்டு வாரங்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரு வெள்ளம் கரை புரண்டோடவே கடையை மூடிவிட்டு நெடுங்கேணிக்குப் போயிருந்தான் கனகு. மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து திரும்பி வந்த போது பல பொருட்கள் காணாமல் போயிருந்தன.
ஒரு மணி நேரம் அவன் காத்திருந்த நிலையில் வெள்ளாமுள்ளி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள புதிய பதட்டத்தைத் தலையில் சுமந்தபடி வந்திறங்கினார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி. விறைப்போடு அவரை நிமிர்ந்து பார்த்த கனகுவை அருகில் அழைத்து அவர் விசாரித்தார். அவன் சொல்லத் தொடங்கினான்.
உலகின் நான்காவது பெரிய ராணுவத்தையே ஓட ஓட விரட்டிய வர்கள் என்று பெருமையடித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை நசுக்கி எறிந்த ராணுவம் இன்னொரு புரட்சியோ கிளர்ச்சியோ முளை விடாமல் மிகுந்த அவதானத்துடன் அதே வேகத்துடன் இயங்கி வந்தது. இதனால்தான் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், தஸ்தாவேஜுகள் என்பவற்றைத் தொடர்ந்து கைப்பற்றி வந்தது. நாட்டை யும் அதன் பொருளாதாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததிலும் இனிமேலும் எந்த ராணுவ வீரனும் உயிர்த்தியாகம் பண்ண வேண்டியதில்லை என்பதிலும் இராணுவத்துக்கு மிகுந்த நிம்மதியிருந்தது.
அப்படியான ஒரு நிம்மதியைச் சற்றுக் கலைத்து விட்டது ‘அது’.
‘அதை’க் கண்டதிலிருந்து வெளியே செய்தியை விடாமல் ஆராய்ந்தது ராணுவம். ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தது. ‘அதன்’ அருகே சென்று பார்க்கச் சில வீரர்கள் முன்வந்த போதும் கட்டளை அதிகாரி மறுத்து விட்டார். ‘அது’ ஒருவேளை பேரழிவை உண்டாக்கக் கூடிய ஒன்றாக இருந்தால் பிரச்சினை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தி விடும்.
நந்திக் கடனீரேரியை இராணுவம் சுற்றி வளைத்த செய்தி வாய்க்கு வாய் பரவி அங்கு ஊடகக்காரர்கள் வந்து குவியத் தொடங்கினர். ஆனால் யாரும் குறித்த பிரதேசத்துக்குள் செல்ல இராணுவம் அனுமதி மறுத்தது. ஊடகக்காரரின் குடைச்சலைப் பொறுக்க முடியாமல் அவர்களை முகாமுக்குள் அழைத்த கட்டளை அதிகாரி இப்படிச் சொன்னார்:-
“இது மற்றொரு நீர் மூழ்கியாக இருக்கலாம். அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு வெடி குண்டாகக் கூட இருக்கலாம். அது கோள வடிவானது. நீருக்குள் ‘அது’ மிதப்பதாகவும் தெரியவில்லை. ஒரு சிறிய பகுதியே வெளியே தெரிகிறது. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. எமது அதிகாரிகள் ‘அது’ குறித்து ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படுவ தற்கு ராணுவம் ஒரு போதும் அனுமதிக்காது. எனவேதான் பயணப் பாதையையும் தற்காலிகமாகத் திருப்பி விட்டிருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ‘அதை’க் கண்டு பிடித்து விடுவோம்.”
தொலைக் காட்சிகளில் ‘பிரேக்கிங் நியூஸ்’ சொன்னார்கள். ‘அதை’ப் படம் பிடிக்கவோ அருகில் போகவோ இராணுவம் அனுமதிக் காத நிலையில் கடனீரேரியைப் பின்னணியாக வைத்துக் கடந்த வருடம் நடந்த இறுதிக் கட்டப் போரை தொலைக்காட்சிக்காரர்கள் விவரித்துக் கொண்டிருந்தார்கள். வானொலி, பத்திரிகைகளுக்கு ‘அது’ சீனிப் பாகு போட்ட அவலாக மாறியது.
நந்திக் கடனீரேரிப் பிரதேசம் மீண்டும் பத்திரிகைகளில் வரை படமாக வெளிவந்தது. ‘அது’ கிடக்கும் இடம் சிகப்பு நிறவட்டத்துக்குள் கறுப்புப் புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருந்தது. 2009ல் இராணுவத்தின் எத்தனையாம் இலக்க இராணுவ அணி எந்த இடங்களில் எப்படி முன்னேறியது என்று அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டிருந்தது.
அது பிரபாகரனின் மற்றொரு நீர் மூழ்கிக் கப்பலே என்று அடித்துச் சத்தியம் பண்ணியிருந்தது ஒரு பத்திரிகை. ஏற்கனவே கைப் பற்றப்பட்ட நீர் மூழ்கியின் படத்தைப் பிரசுரித்து அங்கம் அங்கமாக விளக்கம் சொல்லியிருந்தது. இதே போலப் பல நீர்மூழ்கிகள் நீருக்குள் ளேயே ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கடைசி நேரத்தில் பிரபா கரன் நீருக்குள் சுழியோடிச் சென்று இந்நீர்மூழ்கிகளில் தப்பிச் செல்வதற்கு இருந்தார் என்றும் அப்பத்திரிகை நீண்ட விளக்கம் கொடுத்திருந்தது. நீர் மூழ்கிக்குள்ளும் குளிரூட்டப்பட்ட அறையொன்று பிரத்தியேகமாக இருந்ததாகவும் அது சொன்னது.
ஒரு பத்திரிகையாளர் மற்றொரு கோணத்தில் தனது பார்வை யைச் செலுத்தியிருந்தார். ‘அது’ அண்மையில் அல்லது எப்போதாவது நீருக்குள் வீழ்ந்து மேலே வந்த ஒரு விண் ஆய்வு கூடத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது. எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பிக் கொண்டிருக்கும் விண் கூடங்கள் ஒன்றுக் கொன்று மோதுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்ற வண கூடங்கள் ஒன்றுக் படியால் அவற்றில் ஒரு பகுதியே இதுவாக இருக்கலாம் என்றிருந்தார். அல்லது தனது காலத்தை முடித்துத் தன்னை அழித்துக் கொண்ட ஆய்வு கூடத்தின் பகுதியாகவும் இருக்கக் கூடும் என்பது அவரது கருத்தாக இருந்தது. அதே இடத்தில் விழுந்திருக்கவோ அல்லது வேறு ஓரிடத்தில் விழுந்து வெள்ள நீரில் இழுபட்டு வந்திருக்கவோ சாத்தியம் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.
வானொலிகள் ‘அது’ குறித்து நேயர்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘அது’ பிரபாகரனின் பண மூட்டை என்று ஒருவர் சொன்னார். ஒரு பயங்கரக் குண்டு என்றும் இறுதி நேரத்தில் வெடிக்க வைப்பதற்காகப் பிரபாகரன் பிரத்தியேகமாகத் தயாரித்தது என்றும் இன்னொருவர் சொன்னார். ‘அது’ ஒரு செத்துப் போன பெரிய ஆமையாக இருக்கும் என்று மற்றொருவர் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு பிரபாகரன் எதையும் வித்தியாசமாகச் செய்யக் கூடியவர் என்பதால் நீர்வழியூடாகத் தப்பிச் செல்லச் செல்லமாக அந்த ஆமையை வளர்த்து வந்திருக்கலாம் என்றார் இன்னுமொருவர்.
பூமியின் கீழ்ப் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னுமிருக்கின்றன, அவை அவ்வப்போது வெளியே வருகின்றன. மழை வெள்ளத்தில் மண் அரிப்பின் காரணமாக கறுப்புப் பைகளில் கட்டப்பட்டுப் புதைக்கப்பட்ட ஆயுதங்களே அவை என்பது இக்கருத்துப் பரிமாறலில் பங்கு கொண்ட ஒரு புத்திஜீவியின் வாய்மொழியாயிருந்தது.
ராணுவம் நந்திக் கடனீரேரியை விட்டு அகலவேயில்லை. பொது மக்களுக்கோ சொத்துக்களுக்கோ நாட்டுக்கோ எவ்வித அசம்பா விதங்களும் நேராமல் காப்பது என்ற அவர்களது நோக்கில் இராணுவத் தலைமைகள் உறுதியாக இருந்தன. ‘விபரீதமாக எதுவும் நேர்ந்து விடாமல் தலைமைகள் தியா பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு’ என்று கட்டளை அதிகாரி சகல இராணுவ வீரர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
முந்நூறுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஒரே நாளில் அங்கு வந்து குவிந்திருந்தார்கள். இவர்களைக் கையாள்வதே இராணுவத்துக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. தொலைக் காட்சித் தயாரிப்பாளர்கள் ‘அதை’ எப்படியாவது படம் பிடித்துக் காட்டி விடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தனர். திரும்புமிடமெல்லாம் அவர்களது கைத் தொலைபேசிகள் சிணுங்கியபடியே இருந்தன.
இராணுவத் தலைமைகளின் ஜீப் வண்டிகள் எல்லாத் தெருக் களிலும் சீறியபடி வருவதும் போவதுமாக இருந்தன. ஒவ்வொரு முகாமி லிருந்தும் வரும் அதிகாரிகள் ‘அது’ கிடந்த இடத்தைத் தூரத்தில் நின்றபடி பைனாகுலரில் பார்ப்பதும் தாடையைச் சொறிவதுமாகத் திரும்பி வந்தார்கள். ராணுவத் தலைமைகளை ஊடகவியலாளர்கள் துரத்தத் தொடங்கினார்கள். ‘அது’ என்னவென்று தெரியாமல் இராணுவ உயரதிகாரிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில் விளக்கம் கேட்டு கமராவை உயர்த்திப் பிடிப்பதும் கைத்தொலைபேசிகளையும் ஒலிவாங்கிகளையும் எடுத்துக் கொண்டு பின்னால் திரிவதுமாக அவர்களை ஊடகவியலாளர்கள் ஆக்கினைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இராணுவ அதிகாரிகள் இந்நிலையில் அதியுச்சக் கோபத்தில் இருந்த போதும் ஊடகங்களுக்குக் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். கோபத்தில் இறுகிப் போயிருந்த முகங்களில் ஒரு வரட்டுப் புன்னகையை ஏற்படுத்திச் சமாளித்துக் கொண்டு தமது கடமைகளில் கண்ணாயிருந்தனர்.
ஊடகவியலாளர்களின் அல்லோலகல்லோலத்தை அடக்கிவிட வேண்டும் என்று கட்டளை அதிகாரி விரும்பினார். அவர்களை அழைத்து,
“நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு முதல் ஒரு முடிவுக்கு வந்து விடுவோம்” என்றார்.
“முடிவு என்றால்…?”
“‘அது’ என்ன என்பது தெரிந்து விடும்.”
“எப்படி அணுகப் போகிறீர்கள்? என்ன செய்து கண்டு பிடிக்கப் போகிறீர்கள்?”
“நாளை தீர்மானிக்கப்படும்.”
“ஊடகங்கள் அனுமதிக்கப்படுமா?”
“நிச்சயமாக… ஆனால் ‘அது’ கிடக்குமிடத்திலிருந்து ஐந்நூறு மீற்றர்களுக்கு அப்பால்.”
இராணுவம் இரவிரவாகக் காவல் நின்றது. ‘அது’ கிடக்கும் இடத்தை நோக்கிப் பாரிய வெளிச்சம் இடப்பட்டிருந்தது.
அடுத்த நாட் காலை 11.00 மணி.
கட்டளை அதிகாரியும் மற்றும் உயரதிகாரிகள் சிலரும் அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். ஊடகவியலாளர்களுக்கு இராணுவ ஹெல்மட் வழங்கப்பட்டு அறுநூறு மீறற்ர்களுக்கு அப்பால் நிறுத்தப் பட்டார்கள்.
அவர்கள் தங்களது கைத் தொலைபேசி மூலம் தங்களது நிலையங்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு நேர்முக வர்ணனை செய்து கொண்டிருக்க,
முந்நூறு மீற்றர் தொலைவில் ராணுவ உயரதிகாரிகள் நின்றிருக்க,
இராணுவ அதிகாரிகளோடு வந்த விசேட பாதுகாப்பு உடைய ணிந்த ஐந்து வீரர்களில் மூன்று வீரர்கள் ரொக்கட் லோஞ்சர்களை ‘அதை’ நோக்கிப் பிடித்தபடி இருநூறு மீற்றர் தூரத்தில் நிற்க,
ஏனைய இரண்டு வீரர்களும் வெள்ளம் அடித்து வந்த கனகு வின் சீனச் சட்டியின் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள்.
– 30.05.2010
– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.