கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,141 
 
 

பாரதி நினைவு நாள் பேச்சுப் போட்டி, அந்தப் பள்ளியில் விமரிசையாக நடந்துகொண்டு இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்ற சுமார் இருபது மாணவ, மாணவிகள் பெயர் தந்திருந்தனர்.

அந்தப் போட்டிக்கு நடுவர்களாக ஆங்கில ஆசிரியர் மைக்கேல், தமிழ் ஆசிரியர் பரசு இருவரையும் நியமித்திருந்தார் தலைமை ஆசிரியர். மாணவர் ஒவ்வொருவராக மேடை ஏறிப் பேசப் பேச, இருவரும் தங்கள் கையிலிருந்த பேப்பரில் மார்க் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

சில மாணவர்கள் பொளந்து கட்டினார்கள். சிலர் கொஞ்சம் தடுமாறினார்கள். குரல் வளம், கருத்து வளம், சொல்லும் பாங்கு என தனித்தனியே கவனித்து மார்க் வழங்கினர் ஆசிரியர்கள்.

போட்டி முடிந்த பின், இருவரும் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தனர். இருவரின் கையிலிருந்த பேப்பர்களையும் வாங்கிப் பார்த்தார் ஹெச்.எம்.

‘‘என்ன மிஸ்டர் பரசு! நீங்க தமிழ் வாத்தியார்ங்கிறதை நிரூபிச்சிட்டீங்களே! போட்டியில கலந்துக்கிட்ட மாணவர்கள் பெயர்களைத் தமிழ்லயே எழுதியிருக்கீங்க. வெரிகுட்! ஆனா, ஒண்ணு கவனிச்சீங்களா… தமிழ்ப் போட்டியில் பேசின மாணவர்களின் பெயர்களைத் தமிழ்ல எழுதினீங்க… ஓ.கே! ஆனா, ஆங்கிலப் போட்டியில் கலந்துக்கிட்ட ஸ்டூடன்ட்ஸ் பெயர்களை ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கலாமே? அதற்குமா தமிழ்?’’

‘அட, ஆமாம்! இது ஏன் தனக்குத் தோன்றவில்லை’ என்று பரசு யோசித்துக்கொண்டு இருந்தபோதே, மைக்கேல் கொடுத்த பேப்பரை நோட்டம் விடலானார் ஹெச்.எம்.

மைக்கேல் ஆங்கில ஆசிரியர் என்பதால், மாணவர்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தார்.

‘‘மைக்கேல், ஆங்கிலப் போட்டிக்கு ஆங்கிலம் ஓ.கே. ஆனா, தமிழில் பேசிய மாணவர் களின் பெயர்களையாவது தமிழில் எழுதி இருக்கலாமே?’’ என்று ஹெச்.எம். கேட்பார் என்று எதிர்பார்த்தார் பரசு.

கேட்கவில்லை!

வெளியான தேதி: 12 மார்ச் 2006

0 thoughts on “அது மட்டும்..?

  1. நல்ல கதை. நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மையை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிஷினரி பள்ளிகள் வீதி தோறும் முளைத்து, சொந்த மொழியின் பெருமையைக் குலைத்துப் போட்ட விதம் இப்படித்தான். தமிழ்ப் பள்ளிகளும் அரசாங்கப் பள்ளிகளும் இனிமேலாவது விழித்துக்கொண்டு ஆங்கிலம் வெறும் மொழிதான் என்பதை மாணவர்க்குஉணர்த்த வேண்டும். எவ்வளவுதான் ஆங்கிலம் படித்து வளர்ந்தாலும் வெள்ளைக்காரப் பண்பாட்டுக்கு அடிமையாகாமல் சொந்த மொழியை மதித்துப் போற்றும் போக்கு வளரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *