அது மட்டுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 4,016 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி, கந்தசாமியின் அகக்கண் முன் வந்தது. அதே வாத்தியார் சுப்பராயர் தாம் தம்முடைய ஒரு சாண் பிரம்புடனும் கயிறு கட்டிய பழைய மூக்குக்கண்ணாடியுடனும் காட்சியளித்தார். இவ்வளவு வருஷங்களில் வீசைக்கணக்கான நாசிகா சூரணத்தை ஏற்றுமதி செய்த அவர் திருமூக்கு முன்னைக்கு இப்போது பெரிதாகி இருந்தது. தாலூகா போர்டு எடுபடுவதற்கு முன் தர்மபுரி தாலூகாவைச் சார்ந்த காவாப்பட்டியில் அவர் தலைமை உபாத்தியாயராக இருந்தார். அப்பொழுது பள்ளிக்கூடந்தான் அவருடைய கோட்டை; பையன்கள் குடிஜனங்கள்.

‘கோலாடாவிட்டால் குரங்கு. ஆடாது’ என்பது சுப்பராயர் மூலமந்திரம். பையன்களைக் குரங்கு களாகப் பாவித்த அவர், அந்த உபமானத்தை இன்னும் விரித்துத் தம்மைக் குரங்காட்டியாகப் பாவித்துக்கொண்டிருப்பாரா? அவ்வளவு தூரம் அவர் சிந்தனை செய்திருந்தால் அந்தப் பழமொழியை அவர் ஏன் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்?

பையன்களை அடிப்பதென்றால் அவர் முறையே வேறு. குற்றவாளியாகிய பையனைப் பெஞ்சிமேலே குப்புறப் படுக்க வைப்பார். தலையையும் காலையும் சில பையன்கள் பிடித்துக்கொள்வார்கள். சுப்ப ராயர் ஒரு சிமிட்டாப்பொடியை எடுத்து உறிஞ்சுவார். தம் செங்கோலாகிய பிரம்பை எடுத்துக் கொள்வார். பிறகு அவருடைய உத்ஸாகத்தைப் பார்த்தால், “தண்டிப்பதும் ஒரு கலை; ஆத்திரமில்லாமல் அவசரப்படாமல் நிதானமாக முறைபிறழாமல் தண்டிப்பது ஒரு கலைதான்” என்று தோன்றும்.

இந்த மாதிரியான தண்டனையை ஒரு முறை பெற்றவன் கந்தசாமி. அங்கே அவன் தகப்பனார் இரண்டு வருஷம் உத்தியோகத்தில் இருந்தார். மூன்றாவது நான்காவது வகுப்புகளை அவன் காவாப்பட்டிப் பள்ளிக்கூடத்தில் படித்தான். நான்காம் வகுப்பில் படித்தபோதுதான் அந்தப் பிரப்பம்பழப் பூசை நடந்தது. அவனுடைய அப்பா சும்மா விடுவாரா? மேல் அதிகாரிகளுக்கு எழுதினார். கடைசியில், பாவம் சுப்பராயரை அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றித் தாலூகாவில் ஒரு மூலையில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஓர் உதவி உபாத்தியாயராக நியமித்து விட்டார்கள்.

சுப்பராயர் அதன்பிறகு தம் செங்கோலை அதிக மாகப் பிரயோகிப்பதில்லை. ஆனாலும் கண்ணுக்குக் கண்ணாடியும் மூக்குக்குப் பொடியும் எவ்வளவு அவசியமாக இருந்தனவோ அவ்வளவு அவசியமாக அவர் கைக்குப் பிரம்பு இருந்தது. அதை அவர் கையில் வைத்துக்கொள்ளாவிட்டால் ஒன்றும் ஓடாது. தலைமை உபாத்தியாயர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். சுப்பராயர் சில நாள் பிரம்பைத் தொடாமல் இருந்தார். ஆனாலும் பென்ஸிலையாவது வைத்துக்கொண்டுதான் பாடம் சொல்லிக் கொடுப் பார். “பாவம்; வயசானவர், போகட்டும்” என்று பெரிய உபாத்தியாயர் அவரைத் தொந்தரவு செய்ய வில்லை. அதனால் அவரது பிரம்பு மறுபடியும் அவர் கையில் ஏறிக்கொண்டது.

பிரம்புபாணியாக அவர் தோற்றினாலும் அதை அவர் உபயோகிப்பதில்லை. ‘குட்டுப்பட்ட’ பழைய அநுபவம் ஒன்று இருந்தது; அதோடு காலமும் மாறிக் கொண்டே வருகிறதல்லவா?

துரைத்தனத்தார் தாலூகா போர்டுகளை எடுத்து விட்டனர். பள்ளிக்கூடங்களெல்லாம் ஜில்லா போர் டின் நிர்வாகத்தில் வந்தன. ஒரு ஜில்லாவின் மேல் கோடியில் இருந்தவர்கள் கீழ்க்கோடிக்கும் தென் கோடியில் உள்ளவர்கள் வடகோடிக்கும் மாற்றப் பட்டார்கள். அதுவும் சேலம் ஜில்லாவில் போக்கு வரத்துச் சௌகரியங்கள் குறைவு. ஒரு தாலூகா விற்குள்ளே வளைய வளைய வந்து சிநேகிதர்களைச் சம்பாதித்துக்கொண்ட ‘பழைய பெருச்சாளி கள்’ ஆசைமுகம் மறைந்து போகும்படி எங் கெங்கோ மாற்றப்பட்டார்கள். அந்தக் கலவரத் தில் சுப்பராயருக்கு அதிருஷ்டம் அடித்தது. நல்ல காவேரி தீரமாக , பட்டணத்துக்குப் பட்டணம், கிராமத்துக்குக் கிராமம் என்று சொல்லும்படியாக ஓர் ஊர் கிடைத்தது. நாமக்கல் தாலூகா மோகனூரில் உள்ள உயர்தர எலிமென்டரி பாடசாலையில் நான்காம் வகுப்பு உபாத்தியாயராக அவர் வந்து சேர்ந்தார். ‘அக்கிரஹார வாசம்; காவேரி ஸ்நானம்; சிவாலய தரிசனம்’ – இந்தமாதிரி வயசான மனிதர்களுடைய கவனத்துக்குப் பாத்திரமான விஷயங்களெல்லாம் அங்கே பொருந்தியிருந்தன.

இந்தச் சந்தோஷ வாழ்விலே கலக்கத்தை உண்டு பண்ணக் கந்தசாமி பிள்ளை வந்து சேர்ந்தார். இப்பொழுது அவர் கந்தசாமி அல்ல; கந்தசாமி பிள்ளை; அவர் ‘ஸ்கூல் பைனல்’ பரீக்ஷையில் சிறப் பாகத் தேறி ‘டிரெயினிங்’ பரீக்ஷை கொடுத்து அதில் மாகாணத்திலேயே முதல்வராகி நின்றவர். சேலம் ஜில்லாவில் எடுத்தவுடனே ஒரு பெரிய பள்ளிக் கூடத்தில் வேலை கிடைத்தது. இரண்டாவது வருஷமே மோகனூர்ப் பாடசாலைக்குத் தலைமை உபாத்தியாயராக வந்து சேர்ந்தார்.

“இவர் அதே சுப்பராயர்தாம்” என்று கந்தசாமி பிள்ளை அறிந்துகொண்டார்.

“இவன் அதே கந்தசாமிதான்” என்று சுப்பராயர் தெரிந்து கொண்டார்.

அட படுபாவி! நீ எங்கேயடா வந்து சேர்ந்தாய்! இந்த இடத்திலே சௌக்கியமாக இருக்கலாமென்று எண்ணியிருந்தோமே. இவன்கீழ் நாம் வேலை பார்ப் பதைவிட நாக்கைப் பிடுங்கிச் செத்துப்போகலாமே , சீசீ! உத்தியோகம் அடிமை வாழ்வு. ஈசுவரா! என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வரவா இந்த ஊருக்கு அழைத்து வந்தாய்?’ என்று அவர் அங்கலாய்த்தார். அவ்வூரில் உள்ள காந்தமலை யென்னும் குன்றில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய போய்த் தரிசித்து வந்தார். என்ன என்னவோ வேண்டிக் கொண்டார்.

கந்தசாமியோ அந்தக் கிழவரை மற்ற உபாத்தி யாயர்களைப் போலவே நடத்தி வந்தான். ஆனாலும் சுப்பராயருக்கு அவன் பார்வையிலே ஏதோ விஷம் இருப்பது போலவே தோன்றியது. “ஸார்” என்று கந்தசாமி தம்மைக் கூப்பிடும் போதெல்லாம் ‘ஏதோ பழிவாங்கத்தான் கூப்பிடுகிறான்’ என்று நினைத்துக் கொள்வார். அவன் சிரித்துக்கொண்டே அவரைப் பார்த்தால், உள்ளுக்குள்ளே ஏதோ பெரிய சூழ்ச்சி செய்தபடியே தம்மைப் பரிகாசம் செய்கிறானென்று எண்ணுவார். பாவம்! கந்தசாமி வந்தது முதல் அவருடைய காவேரி ஸ்நானம் கிரமமாக நடைபெறவில்லை; ஆகாரம் சரியாக இறங்கவில்லை.

கடைசியில் துணிந்து ஜில்லா போர்டாருக்கு ஒரு விண்ணப்பம் எழுதினார். தம்முடைய பந்துக்கள் வேறு இடங்களில் இருப்பதாகவும், வயசான காலத் தில் அவர்களுக்குப் பக்கத்தில் இருக்க விரும்புவதாக வும், அவ்வளவு வருஷங்களாக நன்றியுள்ள ஊழியனாக இருந்ததற்கு இந்தப் பெரிய உபகாரத்தைச் செய்ய வேண்டு மென்றும் வக்கணையாகக் கர்நாடக தோரணையில் இரண்டு பக்கங்களை நிரப்பித் தலைமை உபாத்தியாயர் மூலமாக அனுப்பினார். அனுப்பி விட்டு ஒவ்வொரு நாளும் தமக்கு மாற்றுதல் உத்தரவு வருமென்று எதிர்பார்த்தார். வரவே இல்லை.

இங்கே ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருந்தது அவருக்கு. ஒவ்வொருநாளும் அந்தப் படுபாவி முகத்தில் விழிப்பதற்கு அவர் மனம் சம்மதிக்கவில்லை. ஒன்றும் தோன்றாமல் இரண்டு மாதம் லீவுக்கு எழுதினார். லீவு வந்தது.

பெண்டாட்டி பிள்ளைகளைத் தம் மைத்துனன் வீட்டில் விட்டுச் சேலத்திற்கு ஓடினார். ஜில்லா போர்டு பிரஸிடெண்ட் துரையைக் கண்டு அழுதார். குமாஸ்தாக்களுக்குச் சுகந்த புஷ்பங்களும் சுவர்ண புஷ்பங்களும் சமர்ப்பித்தார். கடைசியில் ஒருவாறு காரியத்தைச் சாதித்துக்கொண்டு வந்து சேர்ந்தார். லீவு முடிந்தவுடன் எடப்பாடி உயர்தர எலிமெண்டரி பாடசாலையில் முதல் உதவி உபாத்தியாயராக வேலை பார்க்கும்படி அவருக்கு உத்தரவு வந்தது. அன்று தான் அவருக்குப் பழைய உயிரும் வந்தது.

மோகனூருக்குப் போய் நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டார். காந்தமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்தார். காவேரிக்கு ஒரு நமஸ்காரம் செய்தார். கால் மண்ணை அங்கேயே உதறி விட்டு எடப்பாடிக்குப் புறப்பட்டு விட்டார்.

எடப்பாடிக்குச் சுப்பராயர் வந்து இரண்டு மாதங்கள் ஆயின. அங்கே தலைமை உபாத்தியாயராக இருந்தவர் வயசானவர். அடுத்த வருஷம் உத்தி யோகத்திலிருந்து விலகப்போகிறவர். தூண்டித் துருவிப் பார்த்தால் சுப்பராயருக்கு ஒருவிதத்தில் உறவாகக்கூட இருந்தார். நாராயணையர் என்பது அவர் திருநாமம். இரண்டு பேரும் கர்நாடகப் போர் வழிகளாதலால் மனமொத்துப் பழகினார்கள். காவேரி தீரத்தை விட்டு வந்த சுப்பராயருக்கு அவருடைய பழக்கம் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

ஆனால் ……?

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் திடீ ரென்று நாராயணையர் மாரடைப்பினால் இறந்து விட்டார். ‘சரி, நமக்குத்தான் தலைமைப் பதவி கிடைக்கும். இன்னும் இரண்டு வருஷமோ மூன்று வருஷமோ வேலையில் இருக்கப் போகிறோம். அதற் குள் ஒரு தடவை இதைப்போன்ற பெரிய பள்ளிக் கூடத்தில் ஹெட்மாஸ்டராக இருந்து அந்தக் கௌரவத்தோடே ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார். ஒரு வாரம் அவர் ஆக்டிங் ஹெட்மாஸ்டராகக்கூட இருந்தார்.

அடுத்த வாரம் திங்கட்கிழமை வந்தது. ஒரு புதிய ஹெட்மாஸ்டர் ஜில்லா போர்டாரிடமிருந்து தமக்கு ஒன்றும், அந்த ஆக்டிங் ஹெட்மாஸ்டருக்கு மற்றொன்றுமாக இரண்டு உத்தரவுகளைப் பெற்று வந்தார். எதிர்பாராத விதமாக நாராயணையர் காலமாகி விட்டபடியால் இந்த ஏற்பாட்டை ஜில்லா போர்டார் அவசர அவசரமாகச் செய்தார்கள். புதிய ஹெட்மாஸ்டராக அனுப்ப எண்ணியவரை நேரே வருவித்து உத்தரவுகளையும் கையிலே கொடுத்து விட்டார்கள்.

சுப்பராயர் ஆசையில் மண் விழுந்தது. அது மட்டுமா?

நிமிர்ந்து பார்த்தார். அந்தப் புது ஹெட் மாஸ்டர் யார் தெரியுமா? சாக்ஷாத் கந்தசாமிதான்.

அவர் கைப்பிரம்பின் தழும்பு பட்ட அவனேதான்!

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *