அதிகப் பிரசங்கி 

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 123 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னுடைய பெயர் வேங்கடரமண ஐயர். விலாஸம் 22/1, சகாராம் தெரு, முத்தியால் பேட்டை, மதராஸ். தொழில், கதை எழுதுவது. புனைபெயர் உபயோகிப்பதில்லை. மற்றவர் என்ன செய்தாலும் செய்யட்டும், என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டால், ஒரு கதையை எழுதிவிட்டு, பிறகு புனை பெயருக்குப் பின்னால் ஒருவன் ஒளிந்துகொள்வது ஒருவிதமான பயங்கொள்ளித்தனம் தவிர வேறில்லை. ஸ்பஷ்டமாக என்னுடைய நாமதேயத் தின் கீழாகவே, ‘மலயமாருத’ப் பத்திரிகையில் என் கதைகளை நீங்கள் அடிக்கடி வாசித்திருப்பீர்கள்.

சென்ற வெள்ளிக்கிழமை இதழில்கூட ஒரு கதை வெளிவந்திருக்கிறது.  ‘கொச்சி மெயில் கொலை’ என்று அதற்குப் பெயர்.

சுமார் நாலு மாதங்களுக்கு முன்பாக, ஒரு ராத்திரி, பங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் மெயில் வண்டியில் ஒரு கொலை நடந்து அமர்க்க ளப் பட்டது உங்களுக்கு ஞாபகத்திற்கு வரும்.

வெகு தனவானான ஒரு சேட்டு, முதல் கிளாஸ் வண்டியில் ராத்திரி பங்களூரில் ஏறினார். காலையில் மதராஸில் வண்டியைத் திறந்து பார்த்த பொழுது அவருடைய கழுத்து துண்டாக வெட்டப்பட்டுச் கிடந்தது. அவருடைய பெட்டிப்பூட்டு உடைந்து திறந்து இருந்தது. அதிலுள்ள சாமான்கள் அநே கமாய்த் தரையில் சிதறிக் கிடந்தன. ஏதாவது திருட்டுப் போய்விட்டதோ இல்லையோ என்று சொல்ல முடியவில்லை. ஆனால் சேட்டின் கைவிர லில் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த மோதிரம் அப்படியே இருந்தது. என்ன முயற்சி செய்தும் கண்டுபிடிக்க போலீஸாரால் கொலைகாரனைக் முடியவில்லை.

இவ் விஷயங்களையே அஸ்திவாரமாக வைத் துக்கொண்டு, பெயர்களை மாத்திரம் மாற்றிவிட்டு, என்னுடைய ‘கொச்சி மெயில் கொலை’க் கதையை எழுதினேன். என்னுடைய ‘துப்புப் புலி துமாள ராவ்’ என்பவரைக் கதையில் நுழைத் த இரண்டே நாட்களில் குற்றவாளியின் பிடரியின் மேல் கையை வைத்துவிட்டார் அவர் என்பதை என்னுடைய இதர கதைகளைப் படித்திருக்கும் நண்பர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

இந்த அபாரமான திறமை அவருக்கு மாத் திரம் எப்படி லபித்தது என்று கேட்டால், அவர் அடிக்கடி விநயத்துடன் சொல் லு கி ற மாதிரி, இரண்டே வார்த்தைகளில் அடக்கி விடலாம். முதல் வார்த்தை, ஊகம். இரண்டாவது, ஊக்கம். அவருடைய அநுமானத்தின் வழியைப் படிப்படி யாகக் காண்பிக்கிறேன்.

பெட்டி திறக்கப்பட்டுச் சாமான்கள் சிதறிக் கிடந்தபடியால், அதில் இருந்த சாமான் ஏதோ ஒன் றுக்காகக் குற்றவாளி தேடியிருக்க வேண்டும். அதற்காகவாவது வண்டியின் விளக்கை ‘ஸ்விட்சு’ செய்திருக்க வேண்டும். அப்பொழுது சேட்டின் கை மோதிரம் அவனுடைய கண்ணில் நன்றாகத் தென்பட்டிருக்க வேண்டும். இருந்தும் அவன் அதை எடுத்துக்கொள்ளவில்லை. ஆகையால் அவ னுடைய கருத்து சாதாரணத் திருட்டல்ல. அப்படி யானால், பெட்டியிலிருந்து திருடியது, அதாவது ஒரு கொலை செய்தாவது திருடியே ஆக வேண்டியிருந் தது, என்னவாக இருக்கக் கூடும்? ஒரு முக்கியமான தஸ்தாவேஜி! அதாவது C வ ெ றாரு மனிதனை ஆபத்தில் மாட்டிய ஒரு தஸ்தாவேஜி, இந்தச் சேட் டின் கையில் சிக்கியிருந்தால் மாத்திரமே, அதை அபகரிக்கும் பொருட்டு அம் மனிதன் ஒரு கொலைக் குத் துணிந்திருப்பான். ஆனால் இந்தக் காரி யத்தை முடிப்பதற்கு ஒரு வேலைக்காரனை அல்லது கூலி ஆளை அனுப்ப மாட்டான். ஏனென்றால், சேட்டின் கையினின்றும் தப்பிவிட்டு, அதற்குப் பதிலாக வேலைக்காரன் கையில் தஸ்தாவேஜியும் தானும் சிக்கிக்கொள்ளுவதில் என்ன லாபம்? ஆகையால் அக்கறைப்பட்டவன், ஒன்று தானே வந்திருக்க வேண்டும், அல்லது, ஆப்த சிநேகிதனை அல்லது மகனை அந்த மெயிலில் அனுப்பியிருக்க வேண்டும். அந்தச் சேட்டின் விரோதிகளில் எவன் அந்த மெயிலில் பிரயாணம் செய்தான்? அல்லது, எவனுடைய மகன் அல்லது ஆப்த சிநேகிதன் அ விதம் போனான்? இதைத்தானே கண்டுபிடிக். வேண்டியது?

இது வரையில் துப்புப் புலி துமாளராவின் ஊகம். இதற்கு மேல் அவருடைய ஊக்கம். எவ்வ ளவு ஊக்கத்துடன் இரண்டே நாளில் ஆளைக் கண்டுபிடித்து, கோர்ட்டில் வேண்டி யிருக்கும் சாக்ஷி அத்தாட்சியுடன் போலீஸார் வசம் ஒப் பித்தார் என்பதை ‘மலய மாருத’த்தில் நீங்கள் படிக்கலாம். ஆகையால் இங்கே சொல்லி, அதன் பிரதிகள் விலை போவதை நான் கெடுக்க வேண் டாம்.

ஆனால் இந்தக் காரியத்தையெல்லாம் ஏன் போலீஸாரே விவேகத்துடன் செய்யக்கூடாது என்றாவது, இப்பேர்ப்பட்டவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகவென்று நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் என்றாவது எனக்கு விளங்கவில்லை. உங்களுக்கும் அவ்விதமென்றே எண்ணுகிறேன். இந்தச் சரித்திரத்தை முழுவதும் படியுங்கள், உங்களுடைய ஆச்சரியம் இன்னும் பன்மடங்காகு மென்று உறுதியாய்ச் சொல்லுகிறேன்.

வெள்ளிக்கிழமை உறங்கப் போவதற்கு முன் பாக, ‘மலய மாருத’ ஆபீசிலிருந்து எனக் கு கிடைத்த அன்பளிப்புப் பிரதியில் என்னுடைய கதையைக் கவனத்துடன் படித்தேன். சில சமயம் ஏதாவது அச்சுப்பிழைநேருவது உண்டு. சொன்னால் நம்ப மாட்டீர்கள்: ஒரு தடவை ‘துப்புப்புலி துமாளராவ்’ என்பதற்குப் பதிலாக ‘உப்புபுளி இன்னார்’ என்றே அச்சிட்டு விளம்பரம் செய்திருந் தார்கள். இந்தத் தடவை ஒரு பிழையும் இல்லை. சங் தோஷத்துடன் உறங்கப்போனேன். சனிக் கிழமை காலையில் சந்தோஷத்துடன் கண் விழித் தேன். அன்று காலை வெளி வந்த ‘சூரியோதயம் என்ற தினசரிப் பத்திரிகைப் பிரதி வழக்கம் போல் ஜன்னலின் வழியாய் உள்ளே போடப்பட் டிருந்தது. படுக்கையில் படுத்தபடியே, கை நீட்டி அதை எடுத்துச் சந்தோஷத்துடன் பக்கங்களைப் புரட்டினேன். நண்பர்களே ! அச்சமயம் பின் வரு மாறு ஒரு செய்தியைப் படித்தபொழுது எனக்கு உண்டான ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் நீங்களே ஊகித்துக்கொள்ள வேண்டும். என்னால் வர்ணிக்க முடியாது.

மரணம். நேற்று இரவு ஒன்பது மணிக்கு அவருடைய வாசமாகிய முத்தியால்பேட்டை, சகா ராம் தெரு, 22/1 நம்பர் வீட்டில், ஹிருதயக் கோளாறினால் ஸ்ரீ வி. வேங்கடரமண ஐயர் திடீ ரென்று மரித்ததைக் கேட்க நாம் வருத்தப்படுகி றோம். (வருத்தப்படவாவது! பத்திராதிபர் தலை யில் இடி விழ! நான்தான் இன்னும் கொட்டாப் புளி மாதிரி உயிரோடு இருக்கும்பொழுது, இம்மாதிரி சனிக்கிழமையும் காலை வேளையுமாய் அபசகுன மான ஒரு செய்தியைப் படித்தால், எனக்கு உண்டாகும் வருத்தத்திற்கு அவருடைய வருத்தம் எந் மூலை?) அவருக்கு மனைவி சந்ததி கிடையாது ஆனால் அவருடைய மரணத்தினால் எழுத்தாளர் உலகத்திற்கே ஒரு பெரும் நஷ்டம் நேர்ந்துவிட்ட தென்று சொல்லவேண்டும்.’

போகிறது! இந்த மட்டுமாவது சொன்னாரே! நானும் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கி றேன். ஒன்றிலாவது எவரும் தம்முடைய மரண விளம்பரத்தைத் தாமே படித்ததில்லை.

இந்த அபத்தத்தை உடனே திருத்துவதற் காக, ஒரு ஷர்ட்டை மாட்டிக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, பத்திரிகையும் கையுமாகச் சூரியோ தய’த்தின் ஆபீசுக்குச் சென்றேன்.

அங்கு இருந்த காவற்காரன் தான் படித்துக் கொண்டிருந்த பத்திரிகையிலிருந்து கண்களை நிமிர்த்தி என்னை நோக்கி, “என்ன பேர் என்று சொல்வது?” என்று கேட்டான்.

“வி. வேங்கடரமண ஐயர்” என்றேன்.

“நீங்கதானா நேத்தி ராத்திரி செத்துப் போனது?” என்று கேட்டான்.

‘காமாட்டிப் பயலே ! நேத்திக்குச் செத்திருந் தால் இன்னிக்கு உன்கிட்டவா வருவேன்?” என்று கத்தினேன். அவன் பதில் சொல்லாமல் உள்ளே போனான். அங்கே என்ன நடந்ததோ, வெளியே வந்து பேசாமல் என்னை உள்ளே அழைத்துப் போனான்.

பத்திராதிபரிடம் வெகு படபடப்பாய்ப் பேசி னேன். அவர் நிதானமாக மூக்குக் கண்ணாடியைத் துடைத்தார்.”த்ஸொ, த்ஸொ, மன்னிக்க வேண் டும். ஆனால் இதுவரை எங்கள் பேபரில் இம்மாதிரி ஒரு தப்பு நேர்ந்த வழக்கமே இல்லை என்றார்.

“எனக்கு மாத்திரம் வழக்கமா- -முந்தின நாள் செத்துப்போய்விட்டு மறுநாள் உங்களிடம் வந்து ஆக்ஷேபிப்பது?” என்று கேட்டேன்.

“கோபித்துக்கொள்ளாதேயுங்கள்” என்று அவர் சாந்தப்படுத்தினார். “இந்தச் செய்தி எங்க ளுக்கு எழுத்து மூலமாகக் கிடைத்திராது போனால் இதைப்பேபரில் போட்டிருக்கவே மாட்டோம். இந் தத் தவறுதலைத் திருத்தி நாளைக்கே பிரசுரம் செய்துவிடுகிறோம். மிகுந்த சந்தோஷத்துடன் செய்துவிடுகிறோம். ஆனால் எவனோ உங்களுடைய விரோதிதானே இம்மாதிரி எங்களுக்கு எழுதி யனுப்பியிருக்க வேண்டும். அவனைக் கண்டுபிடித் வேண்டாமா?” என்று துச் சிக்ஷை செய்ய கேட்டார்.

“அவசியம் செய்ய வேண்டும். இங்கிருந்து நேராகப் போலீசு ஸ்டேஷனுக்குத்தான் போகப் போகிறேன் ” என்றேன்.

“போலீஸில் விசாரிக்கப் போவதானால் எ லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும். இல்லாத போனால் ஏதாவது காரணத்தைச் சொல்லி உங்க ளுடைய கேசைத் தட்டிக் கழித்து விடுவார்கள். ஆகையால் அந்தப் பொய்க் கடிதத்தை என்னு டைய குமாஸ்தா மூலம் அனுப்புகிறேன். அவர் உங்களுடன் சென்று, அதை இன்ஸ்பெக்டர் கையில் தந்து, அது எங்களுக்குக் கிடைத்ததைப் பற்றி வாக்குமூலம் கொடுப்பார்” என்றார்.

“ரொம்ப வந்தனம். நானும் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய சாமுண்டீசுவரி’ என்கிற கதையில்—”

அது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் சீக்கிரம் போகாத போனால், இன்ஸ்பெக்டர் அகப்பட மாட்டான்” என்று எங் களிருவரையும் மெல்ல வெளியே தள்ளினார்.

குமாஸ்தாவும் நானும் அடுத்து உள்ள போலீசு ஸ்டேஷனுக்குச் சென்றோம். நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் அங்கே இருந்தார். “இவரை எனக் குத்தெரியும். இவருடைய பெயர் சந்திரமௌளீசுவர ஐயர். மௌளி என்று சொல்லுவார்கள். மிகவும் கெட்டிக்காரர்” என்று குமாஸ்தா என் காதோடு சொல்லிவிட்டு, இன்ஸ்பெக்டரிடம், விஷயத்தையும் ஆபீசில் நடந்த சம்பாஷணையையும் எடுத்துரைத்தார்.

அவர் முடிப்பதற்குச் சற்று முந்தியே, இன்ஸ் பெக்டர் தம்முடைய கைக்குட்டையை எடுத்து வாயை மூடிக்கொண்டு, வெகு வேகமாய் அடுத்த அறைக்குச் சென்று அங்கே சற்று இருமிவிட்டு இரண்டு நிமிஷம் கழித்தே திரும்பி வந்தார். கவனிக்க வேண்டிய விஷயம் இவ்வளவு முக்கிய மானதாக இல்லாத போனால், அவர் தம்முடைய சிரிப்பை அடக்குவதற்காகச் சென்றார் என்றே எண்ணியிருப்பேன். ஆனால் அம்மாதிரியான சந்தே கத்தை அவருடைய வார்த்தைகள் நீக்கின.

“ஸார், இது ஒரு ஹாஸ்யம் என்று எண்ணி எவனாவது செய்திருந்தால், அவன் நெஞ்சில் ஈரமில் லாதவன். அதற்காகவே அவனைத் தண்டிக்கவேண் டும். அல்லது நீங்கள் அறியாமல் உங்களுக்கு ஒரு கொடிய விரோதி ஏற்பட்டிருக்கிறான்; உங்களுக்கு ஏதோ தீங்கு செய்யப் பார்க்கிறான். ஆகையால் இதை அவசியம் விசாரித்தே தீரவேண்டும். நீங்கள் சற்று இங்கே தங்கியிருங்கள். உங்களுக்கு வழக்க மாய் ஸப்ளை செய்யும் ஹோட்டலிலிருந்து முதலில் காப்பி தருவிக்கிறேன்” என்றார்.

“எந்த ஹோட்டலில் சாப்பிடுகிறேன் என்பது கூட உங்களுக்குத் தெரியுமா?” என்று ஆச்சரியப்பட்டேன்.

“உங்களைப் போன்ற எழுத்தாள ச்ரேஷ்ட ரைக் குறித்து எல்லா விஷயமும் தெரிந்து வைத் துக்கொள்ள வேண்டியது போலீசாருடைய கடமை அல்லவா?” என்று சொல்லிவிட்டு, வராந்தா வுக்குச் சென்று இரண்டு மூன்று கான்ஸ்டேபில் களிடம் ஏதோ சொல்லி வெளியே அனுப்பினார்.

சுமார் பத்து மணி இருக்கும் ; ஒரு கான்ஸ்டே பிள் திரும்பி வந்து சலாம் செய்துவிட்டு, “இப்பொழுதுதான் மலய மாருத ‘த்தின் ஆபீசு திறந் தார்கள்’ என்று சொல்லி ஏதோ ஒரு கடிதக் கட்டை அவரிடம் கொடுத்தான்.

இன்ஸ்பெக்டர் அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். பிறகு குமாஸ்தா கொடுத்த பொய்க் கடிதத்துடன் ஒத்து நோக்கினார். என்னிடம் வந்தார்.

“இது என்ன, சொல்லுங்கள்” என்றார்.

“இது நான் ‘மலய மாருத’த்திற்கு அனுப்பின ‘கொச்சி மெயில் கொலை’ என்கிற கதை என்றேன்.

“கை எழுத்து யாருடையது?”

“முழுவதும் என்னுடையது.”

“சூரியோதய’த்திற்குக் கிடைத்த மரண ரிபோர்ட்டுக் கடிதத்தைச் சற்றுப் பாருங்கள்” என்று நீட்டினார்.

என்னுடைய ஆச்சரியத்தை என்ன சொல்லு வேன்! அதுவும் என்னுடைய கை எழுத்தாகவே இருந்தது. இது ஒன்றும் எனக்குப் புரியவில்லை.

“என்னைக் குறித்து நானே அவ்விதக் கடிதம் எழுதினேன் என்று சொல்லுகிறீர்களா?” என்று கோபத்துடன் கேட்டேன்.

“நான் ஒன்றும் அப்படி நிச்சயமாய்த் தெரிந்தது போலச் சொல்லவில்லை. ஆனால் இதுமாத்திரம் சொல்லுவேன்: ஏதோ சுயலாபத்திற்காகவோ, பிறருக்குக் கெடுதலை உத்தேசித்தோ, மனிதர்கள் தங்களுடைய மரணம் நேர்ந்துவிட்டதாகத் தாங் களே பேபர்களுக்கு ரிபோர்ட்டு செய்ததற்குத் திருஷ்டாந்தங்களைப் புஸ்தகங்களில் படிக்கிறோம்”.

“ஆகையினாலே?”

“ஆகையினாலே, வேறொன்றும் இல்லை. இந்தச் சந்தேகத்தை நீக்கிவிடலாமென்று ‘மலய மாருத ஆபீசிலிருந்து உங்களுடைய கை எழுத்தை வெறு மனே மேல் அதிகாரிகளுக்குக் காண்பிப்பதற்காக வரவழைத்தேன். அது இப்படி இருப்பதும் ஆச் சரியமாய்த்தான் இருக்கிறது.”

“போதும்! எவனோ எனக்கு விரோதி செய்த காரியத்தை விசாரிக்கும்படி உங்களைக் கேட்டுக் கொண்டால், நான் ஒரு பைத்தியக்காரனென்று நிரூபிக்கப் பார்க்கிறீர்களா? நான் வீட்டிற்குப் போகிறேன்” என்று புறப்பட்டேன்.

“சற்றுப் பொறுங்கள்’ என்று அவர் தடுத்தார்.

“ஒருவேளை நீங்களே இந்தக் காரியத்தைச் செய்திருந்தால் அதனுடைய உள்வயணத்தை விசாரிக்க வேண்டியதும் என்னுடைய கடமை அல்லவா? ஆகையால் விசாரணை முடிகிற வரையில் நீங்க இங்கேதான் இருக்க வேண்டும்” என்றார்.

“என்னை அரெஸ்டா செய்கிறீர்கள்? அவ்வளவு துணிச்சலா? என்றைக்காவது ஒரு நாள் இதற்கெல்லாம் நீங்கள் உத்தரவாதம் செய்ய வேண்டியிருக்கும் என்று ஞாபகம் இருக்கிறதா?” என்று சீறினேன்.

“என்னுடைய காரியங்களுக்கு நான் எப்பொழுதும் உத்தரவாதம். ஆனால் அரெஸ்ட் என்று பெரிய வார்த்தையை உபயோகிப்பானேன்? தற்காலம் என்னுடைய அதிதியாக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். அவ்வளவுதானே?”

“என்னுடைய கதைகளில்_” என்று ஆரம்பித்தேன்.

“ஆமாம்! ஆனால் அவைகளை இப்பொழுது சொல்லாதேயுங்கள். நான் சீக்கிரம் போய் ஹோட்டல்காரனை உங்களுக்கு ஆகாரம் அனுப் பச் சொல்ல வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வெளியே போய் விட்டார்.

‘சிவனே!’ என்று அங்கே இருந்தேன். மத்தியானம் சுமார் ஒரு மணிக்கு, என்னுடைய வீட்டுக்குத் தபால் கொடுக்கும் தபால்காரனுடன் அவர் திரும்பி வந்தார். எனக்கு ஒரு ரெஜிஸ்டர் பார்சல் வந்திருந்தது. ரசீதில் ஒப்பமிட்டேன்.

அவர் பார்சலைப் பிரித்தார். அதற்குள் ஒரு கடித மும், ஒரு சம்புடத்தில் பாதம் ஹல்வாவும் இருந் எவரோ ஒருவர், என்னுடைய ‘கொச்சி மெயில் கொலை’க் கதையைப் படித்துவிட்டு, அள விலா ஆனந்த மடைந்தவர், தம்முடைய நன்றி யைத் தெரிவித்து எனக்கும் சிறிதாவது ஆனந்த முண்டாகும் பொருட்டு ஹல்வாவை

ஹல்வாவை அனுப்பிய தாகக் கடிதத்தில் கண்டிருந்ததையும் என்னவோ ஒரு ஜடாவல்லபர் என்று கையொப்பம் இட்டிருந் ததையும் அவர் படித்தார்.

இங்கே கொடுங்கள் ஹல்வாவை” என்று கை நீட்டினேன்.

“அதற்கு முன் இந்த வேடிக்கையைப் பாருங் கள். இந்தக் கடிதமும் இந்தப் பார்சலின் மேல் விலாசமுங்கூட உங்களுடைய கை எழுத்தில் இருக் கின்றன. கவனித்துப் பாருங்கள்” என்றார்.

அவர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. வாஸ்தவத்தைச் சொல்லுகிறேன், எனக்குத் தலை சுழல ஆரம்பித்தது. ஒரு நாளைக்குள் எத்தனை விபத்தையும் ஆச்சரியத்தையும் ஒரு மனிதனால் தாங்க முடியும்? அன்று பொழுது விடிந்து நான் திடுக்கிட்டது இது மூன்றாம் தடவை.

“என்னுடைய கதை ‘மாஹேந்திரன்’ என் பதில்-” என்று ஆரம்பித்தேன்.

அதை இப்பொழுது சொல்லிவிடாதேயுங் கள். அக் கதையை நான் என்றைக்காவது ஒ நாள் உட்கார்ந்து படித்து முடிப்பதாகத் தீர்மானித திருக்கிறேன். இப்பொழுதே எதையாவது நீங்கள் சொல்லிவிட்டால் எனக்கு ஸ்வாரஸ்யம் போய் விடும்” என்று சொல்லிப் பேச்சுப் பராக்கில் ஹல் வாவையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த அழகுக்கு நான் அவருடைய அதிதியாம்! அதிதி! என்னை ஒரு வார்த்தை பேச விடுவதில்லை. எனக்கு வந்த ஹல்வாவும் அவரைச் சேர்ந் தது. நல்ல அதிதி பூஜை!

இதெல்லாம் நடந்தது முந்தாநாள் சனிக்கிழமை யன்று. இன்று காலைவரை போலீசு ஸ்டேஷனிலேயே இருந்தேன். ஆறு மணிக்கு என்னைத் தட்டி எழுப்பி, இன்ஸ்பெக்டர் தம்முடைய மோட்டார் சைகிளில் ஏற்றி என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார். வழியில் ஒன்றும் பேச முடியவில்லை.

வீடு வந்து சேர்ந்தவுடன், “நானும் எத்த னையோ கதைகள் எழுதியிருக்கிறேன்” என்று  ஆரம்பித்தேன்.

“நானும் அவைகளைப் பற்றித்தான் பேசப் போகிறேன். முக்கியமாய், ‘கொச்சி மெயில் கொலை’ யைப் பற்றி” என்றார்.

“பேசுங்கள்.”

“அதில் உங்களுடைய தூக்குப்புளி துமாள ராவ் என்ன செய்திருக்கிறார், தெரியுமோ?”

“அவருடைய பெயர் துப்புப் புலி துமாளராவ்” என்று திருத்தினேன்.

“எனக்கு என்னவோ, நான் சொன்ன பெயர் தான் அழகாயும் பொருத்தமாயும் தோன்றுகிறது. அப்புறம் உங்கள் இஷ்டம். அவர் இந்தத் தடவை குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி குற்ற வாளியைக் கண்டுபிடித்துவிட்டார்.”

“மன்னிக்க வேண்டும். இது ஒன்றும் அவருக் குப் புதிதல்ல. என்னுடைய துப்பறியும் கதை ஒவ் வொன்றிலும் அவர் வருவார். ஒவ்வொன்றிலும் குற்றவாளியைத் தவறாமல் கண்டுபிடிப்பார். என் னுடைய ‘வீணுலகம்’ என்கிற கதையில்”

“ஆமாமாம். ஆனால் ஒவ்வொரு கதையையும் இது மாதிரி நீங்கள் வாஸ்தவ சம்பவங்களை அஸ்தி வாரமாக வைத்துக்கொண்டு எழுதவில்லையே ?”

“இல்லை. என்னுடைய-”

“ஒவ்வொரு கதைக்குப் பின்னாலேயும் ஒரு நிஜக் குற்றவாளி ஒளிந்துகொண்டு தன்னைக் கண்டுபிடிக்கிறவர் பேரில் பாய்வதற்குத் தயாராக இல்லையே?”

“இல்லை. ஆனால் நான் எழுதிய ”

“இந்தத் தடவை, உங்களுடைய போதாத காலம், உங்களுடைய புலி கொண்ட ஒவ்வோர் ஊக மும் சரி, எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் சரி, செய்த ஒவ்வொரு விசாரணையும் சரி. உள் விவரம் தெரிந்தவர்களுக்கு, பங்களூர் மெயிலில் கொலை செய்தவனுடைய பெயரும் விலாசமும் புஸ்தகத் தின் கவரின் மேல் பெரிய எழுத்தில் அச்சிட்ட மாதிரியே இருக்கிறது.

“அப்படியானால் அவன் யார் என்று உங் களுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கிறதே?’

“நன்றாகத் தெரியும். நாங்களும் தூங்க வில்லை. ஆனால் உங்களுடைய வேங்கை மாதிரி ஒரு புஸ்தகத்தின் ஏடுகளுக்குள்ளே மாத்திரம் சஞ்சா ரம் செய்தால் எங்களுக்குக் காரியம் கூடிவிடுகிறதா? மூட்டையைக் கட்டிக்கொண்டு ஆயிரம் மைல் போய், பம்பாயிலும் குஜராத்திலும், கொல்லப் பட்ட சேட்டின் சிநேகிதர்களையும் விரோதிகளையும் டஜன் கணக்காய் விசாரித்த பிறகே, குற்றவாளி யார் என்று வேண்டிய அத்தாட்சியுடன் நிர்ண யிக்க முடிந்தது. இதற்கு நாலு மாதம் பிடித்து விட்டது.”

“சரி, தெரிந்தவுடனே அவனை அரஸ்டு செய்வதற்கென்ன?”

“அவன் இப்போது ஒரு மாதமாய், பலத்த ரோகத்துடன் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். பிழைப்பது அரிது என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். ஆகையால் என்ன செய்வது என்று மேல் அதிகாரிகள் ஆலோசித்துக்கொண்டு இருக் கையிலே உங்களுடைய கதை வெள்ளிக்கிழமை காலை ‘மலய மாருத ‘த்தில் வெளிவந்து எல்லாவற் றையும் கோளாறாக்கிவிட்டது.'”

“அது எப்படி? என்ன கோளாறு?”

“முதலில் அந்தக் கொலை செய்தவன் என்ன நினைப்பான், சொல்லுங்கள். ‘இந்தப் போலீசுக் காரர்கள் ஒன்றும் தெரியாமல் இருட்டில் தடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில், இவர் யார், வேங்கடரமண ஐயராம், அவர்களுக்குத் தீவட்டி பிடித்து வழி காட்டுகிறார் ! முதலில் இவ ரைத் தீர்த்துவிட வேண்டும்’ என்றுதானே ?”

“ஓ! கதை எழுதுவதில் இப்படி ஓர் ஆபத்தா! இப்பொழுது தெரிகிறது, நீங்கள் சொன்ன பிறகு. அதற்காக?”

“அதற்காகத்தான் உங்களுடைய மரணம் தானாகவே நேர்ந்து விட்டதாகச் ‘சூரியோதய’க் காரரைப் பிரசுரம் செய்யச் சொன்னேன்”

“அதற்கு நான் சும்மா இருப்பேனா?”

“சும்மா இருப்பீர்கள் என்று கனவிலும் எண்ணவில்லை. நீங்கள் அவரிடம் வருவீர்கள், வந்த வுடனே உங்களை என்னிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்றும், அதுவரை இன்னார் இன்னார் இன் இன்ன சொல்லுவது என்றும் ஒவ்வொரு வருக்கும் சிக்ஷை செய்திருந்தேன்: பத்திராதி பருக்கு, குமாஸ்தாவுக்கு, காவல்காரனுக்குக் கூடத்தான். என்ன தொழில், போங்கள்!”

“தொழில் பிடிக்காத போனால் ராஜீநாமாச் செய்துவிடுகிறதுதானே?”

“இதற்குள்ளே பாருங்கள் ! அவன் வெள்ளிக் கிழமை மத்தியானமே உங்களுக்காக ஹல்வாவைத் தபாலில் சேர்த்து விட்டான். சனிக்கிழமை கிடைத்தது. அதையும் எதிர்பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.”

“அப்படியா? நீங்கள் எதிர்பார்த்ததன் பலன் ஹல்வா எனக்குக் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை”

“வாய்க்கு எட்டியிருந்தால் தெரியும், பங்க ளூர் மெயில் கொலைக்கு உபகதையாகச் சகாராம் தெருக் கொலை நடந்திருக்கும். ஆனால் ‘மலய மாரு த’த்தின் சந்தாதார்கள் படிக்கும்படி ஸ்வாரஸ்ய மாய் அதை எழுதுவதற்கு நீங்கள் இருக்க மாட்டீர் களே என்கிற குறைதான்.”

“எனக்கு உடம்பு சிலிர்த்தது. ஹல்வாவில் விஷம் கலந்திருந்தது என்றா சொல்லுகிறீர்கள்?”

“அதைப் பரீக்ஷை செய்து சர்க்கார் கெமிஸ் ட்டு கொடுத்த ரிபோர்ட்டைக் காண்பிக்கிறேன். நிர்ப்பந்தித்தால் ஹல்வாவிலே கொஞ்சம் கொடுக்கிறேன்.”

“நீங்களே சாப்பிடுங்கள்; இதிலே ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை. ‘சூரியோதய’க்கா ரருக்கு என்னைக் குறித்து யார் எழுதினார்?”

“நான்தான். பேபரில் போடுவதற்கு அவர் கொஞ்சத்தில் சம்மதித்தாரா ? எழுத்து மூலமாய்க் கொடுத்தால்தான் போடுவேன் என்றார். எவ்வளவு கஷ்டப்பட்டேனென்று எண்ணுகிறீர்கள்?”

“அதில் என் கை எழுத்தை ‘போர்ஜ்’ செய் வானேன்?'”

“முந்தா நாள் தினம் நான் செய்த மாதிரி செய்வதற்காகத்தான். ‘இதனால் உங்கள் பேரி லேயே சந்தேகம் ஏற்படுகிறது. விசாரித்து முடிகிற வரையில் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டும் என்று சொல்லி, உங்களுடைய பாது காப்புக்காக உங்களை எங்கள் கண் பார்வையில் வைத்திருப்பதற்காகத்தான்.”

“உங்களுக்குச் சாமர்த்தியமாய் ‘போர்ஜ்’ செய் யக் கூடத் தெரியும் போல இருக்கிறதே?”

“வீண் ஸ்தோத்திரம் செய்யாதேயுங்கள்! எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால் பல தடவை ஜெயிலுக்குப் போய் வந்து இப்பொழுது தொழிலிலிருந்து ‘ரிடையர்’ ஆகியிருக்கிற ஒரு போர்ஜரி பண்டிதனை எனக்குத் தெரியும். அவனுக்குத் தாண்டவராயன் என்று செல்லப் பெயர். அவனைக் கொண்டு எழுதச் சொன்னேன். மாதிரிக் கையெ ழுத்து ‘மலய மாருத’ ஆபீசில் கட்டு கட்டாய்க் கிடைத்தது ஞாபகம் இருக்கும் பொழுதே சொல்லி விடுகிறேன் தாண்டவராயனுக்குப் பத்து ரூபாய் கூலி கொடுத்தேன். உங்களுக்குச் சௌகரியப்பட்ட பொழுது அதை எனக்குத் திருப் பிக் கொடுத்தால் போதும்.”

“இது வேறயா! நீங்கள் கண்டுபிடிக்க முடி யாமல் திணறிக்கொண்டிருக்கும் பொழுது நான் சாமர்த்தியமாய்த் துப்பறிந்து கதை எழுதின தற்கு லாபம், இரண்டு நாள் போலீசு லாக்காப்பில் இருந்தது போதாது என்று பத்து ரூபாய் அப ராதம் வேறயா? ஹல்வா பார்சலில் வைத்திருந்த கடிதத்திற்காக எவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டும்?”

“அது என்னமாய் என்னுடைய கை வரிசை யாய் இருக்க முடியும்? அதெல்லாம் உங்களையும் கொலை செய்ய எத்தனித்த தனவானுடைய செலவு. அவனுக்கும் தாண்டவராயனைத் தெரியுமாம். சந்தேகம் தன்மேல் திரும்பாமல் இருக்கும் பொருட்டுத் தாண்டவராயனை விட்டு எழுதச் சொல்லியிருக்கிறான்.”

“மாதிரிக்குக் கையெழுத்து ஏது?”

“நீங்கள் அந்தத் தனவானுடைய அறுபதாம் வயதுத் திருவிழாவுக்காக ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதியிருந்தீர்களாம். அது இப்பொழுது உபயோகப்பட்டது.”

“சரி. இனி என் ஆயுசு உள்ளவரையில் ஒரு வருக்கும் வாழ்த்துக் கடிதம் எழுதப் போவதில்லை. அவரை வாழ்த்தினால் என்னுடைய ஆயுசுக்கு அல் லவா மோசமாக இருக்கிறது!”

“நல்ல தீர்மானம்!”

“இருக்கட்டும். இன்னிக்கு ஏன் என்னை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டீர்கள்? ஹல்வாவுக்குப் பிறகு துப்பாக்கி கிளம்பினால்?”

“இனிப் பயமில்லை. நேற்று ராத்திரி அந்தக் கொலைகாரன், வியாதி முற்றிப் போய் இறந்து விட்டான். அதனால்தான் தாண்டவராயனும் தன்னுடைய பங்கை ஒப்புக்கொண்டுவிட்டான்.”

“அடேயப்பா! நானும் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன்-‘”

“அதெல்லாம் அப்படியே இருக்கட்டும். அதொன்றையும் கிளப்பவேண்டாம். இப்பொழுது நடந்ததை ஒரு கதையாக எழுதுங்கள். வந்தது வரட்டுமென்று நானும் அதை எப்படியாவது வாசித்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித் துக்கொண்டே போய்விட்டார்.

‘வந்தது வரட்டுமாவது! என் கதையை வாசிப் பது ஒருமனிதனுக்கு அவ்வளவு அபாயமா? ‘டபார்!’ என்று வெடித்தா போவான்? இது சுத்த அதிகப் பிரசங்கித்தனம்! இருந்தாலும் அவர் சொன்னபடி, ஒரு ‘ப்ளாட்’டைத் தேடாமல் தயாராக இருக்கும் வாஸ்தவத்தையே ஒரு கதையாய் எழுதினால் அதற்காகக் கிடைக்கும் பணத்திலிருந்து அவருக்குப் பத்து ரூபாயைக் கொடுத்துத் தொலைத்துவிட்டு மீதத்திற்கு ஹல்வா வாங்கிக் கவலையற்றுச் சாப் பிடலாம் அல்லவா? அப்படியே செய்கிறேன். அவருக்கு ஹல்வாவில் பங்கு கிடையாது. சுத்த அதிகப் பிரசங்கி!

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *