அணைந்த பெருமாளின் மனமகிழ்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 2,504 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்பாவித் தோற்றமுடைய அணஞ்ச பெருமான் உண்மையில் ஒரு ரசமான பேர்வழி என்பது அவனோடு பேசிப் பழகினால் தான் தெரியும்.

அணஞ்ச பெருமாள் சிறுவர்களாலும் வேறு சிலராலும் ’டிம் அடிச்ச பெருமாள்’ ’ஒளிபோன பெருமாள்”, என்றெல்லாம் அவனது பெயர் காரணமாக பரிகசிக்கப்படுவது வழக்கம்.

அவன் பிறந்து வளர்ந்த ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் சிவன் அணைந்த பெருமாள் என்பதாம். அதனால் அவ்வூரில் அவ்வப்போது சிலருக்கு அந்தப் பெயர் சூட்டப்படுவது உண்டு. அது நீளமாக இருக்கிறது என்று அணைந்த பெருமாள் எனச் சுருக்கப்படுவதும், பேச்சு வழக்கில் அணஞ்ச பெருமாள் என்று சிதைந்து போவதும் தவிர்க்க முடியாத நியதிகளாக அமைந்துவிட்டன.

வளர்ச்சி குன்றிய உருவம், குள்ளம், ஒல்லி, கறுப்பு திறம்.முகத்தோற்றமும் வசீகரமானதாக இல்லை.சிறப்பாக எடுத்துக்காட்டக்கூடிய செயலாற்றல் எதையும் அவன் பெற்றிருக்கவுமில்லை. அவனுக்கு வயது முப்பது இருக்கலாம். கல்யாணமாகியிருந்தது.தனிக்குடித்தனம் தான்.வருமானம் என்று ஏதோ கொஞ்சம் வருவதற்கு வழி இருந்தது. தாராளமாகச் செலவு செய்து, இஷ்டப்பட்டவைகளை வாங்கி, விரும்பியவற்றை நினைத்தபோது செய்து சாப்பிட்டு, உல்லாசமாக உடுத்து, எடுப்பாக ஊரிலே அலைந்து திரிவதற்கு அந்த வருமானம் உதவும் அளவில் இல்லை.

என்றாலும், அணஞ்ச பெருமாள் ‘அங்கிங் கெனாதபடி எங்கும்’ காணப்பட்டான். பொழுது போகவேண்டுமே!

அவனைப் போன்றவர்கள் கூடி சும்மாயிருந்து சுவையாக வம்பளத்து சோம்பலாகக் காலக் கொலை செய்கிற இடங்களில் எல்லாம் அவனும் ஆஜராகி விடுவான். அவர்களோடு சேர்ந்து ஊர்க்கதைகள் பேசிக் களிப்பான். வேண்டியவர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்குப் போவான். அதையும் இதையும் பேசிப் பொழுது போக்குவான்.

இப்படியாக அவனுக்குச் சுவையான விஷயங்கள் சேர்ந்து விடும்.

அது பட்டிக்காடும் இல்லாத, பட்டணக்கரையும் இல்லாத ஒரு சுமாரான ஊர். எதுவும் செய்யாமல், முன்னோர்கள் தேடிவைத்த சொத்தை வைத்துக்கொண்டு, சோம்பேறித்தனமாக ’சுகஜீவனம்’ என்ற பெயரில் நாளோட்ட, வாழ்ந்த மத்தியதர வர்க்கத்தினர் கணிசமாக இருந்தார்கள். உண்பதும், உறங்குவதும், ஊர்வம்பு பேசிக் களிப்பதும்தான் அவர்களுடைய வாழ்க்கை நியதியாக இருந்தது.

எதிரே இருக்கிறபோது ஒருவனை புகழ்ந்தும் வியந்தும் பேசுவார்கள். அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டால், இனிக்கப் பேசிய அவனையே பேச்சால் குதறி எடுத்துப்பிய்த்து விளாசுவதில் தனி இன்பம் காண்பது அவ்வூராரின் இயல்பு.பொதுவாக எவனைப்பற்றியும் எவருக்கும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆளை நேரில் காண்கிறபோது நல்லவன் ஆக மதிக்கப்படுகிறவன், பின்னால் வெறும்பயல், அல்பன், சின்னப்பயல், உருப்படாத பயல் என்ற நிலைக்கு இறங்கிவிடுவான்.

சிவன் அணைந்த பெருமாளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ’ஒரு கடைச் செங்கல்லும் பிடாரி’ என்பதுபோல,ஒருங்குகூடிய ஓரினப் பறவைகள் போல, அவ்வூர்வாசிகள் எல்லோரும் ஓர் நிறை, ஒரு நோக்கு, ஒரே போக்கு உடையவர்களாகத்தான் வ ள ர் ந் து வாழ்ந்தார்கள். அணைந்த பெருமாள் மட்டும் தனிவழி போக முடியுமா என்ன?

ஆனாலும் அவனிடமும் ஒரு தனி நோக்கு உண்டு. அவன் திருவாயைத் திறந்துவிட்டாலே அது தானாகப் புரிந்து விடும்.

அணைந்த பெருமாள் ஏதோ முக்கிய அலுவல் மீது போகிறவன்போல வேகமாய் நடந்துகொண்டிருந்தான். ஒரு வீட்டின் வாசலில் சும்மா நின்ற தாறும்பூநாத பிள்ளை “என்னய்யா, ரொம்ப அவசரயோ?” என்று கேட்டு அவனுக்கு திடீர் பிரேக் போட்டார்.

நாறும்பூநாதர் என்பதும் ஒரு ‘சாமி பெயர்’ தான். அத்தப் பக்கத்து ஊர்களில் தமிழ் மணம் கமழும் அருமையான பெயர்களே சாமிகளுக்குச் சூட்டி, அவற்றையே தங்கள் குழந்தைகளுக்கும் இட்டு மகிழ்கிற வழக்கம் நிலைபெற்றிருந்தது. அதனுல் தனி ரகமான பெயர்களை உடைய நபர்கள் அந்த வட்டாரத்தில் காணப்பட்டனர்.

“அவசரம் என்ன அவசரம்! வெயிலுகந்த நாத பிள்ளையை பார்க்கப் போயிருந்தேன். அவாள் வீட்டில் இல்லை…” என்று சொன்னான், நின்றaன்.

“அவர் மகளுக்குக் கல்யாணம்னு பேச்சு வந்துதே என்ன ஆச்சு? ஒரு ஏற்பாடும் நடக்கிறதாத் தெரியவியே!” என்றார் நாறும்பூ .

“பண விஷயத்திலே தகராறு இருக்கும்போல் தோணுது. இவரு ஐயாயிரம் ரூபாய் நகையும், ரெண்டாயிரம் ரொக்கமும் கொடுக்கத் தயார்தான். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மூவாயிரம் ரொக்கம் கேட்டாங்க, கல்யாணமும் பண்ணிவிடணும்னு சொன்னுங்க. ஆகவே அந்த இடம் முடிவாகலே.”

‘ஏதோ கட்டையோ, நெட்டையோ பார்த்துச் செய்து விட வேண்டியதுதான். பெண்ணுக்கும் வயசு ஏறிக்கிட்டுப் போகுதில்லே’ என்று அக்கறையோடும், பரிவோடும் பேசுகிற வர்போல் ‘நாவன்னா’ சொல்லி வைத்தார்.

அணஞ்ச பெருமாள் அவர் அருகில் நெருங்கி நின்று, அப்படியும் இப்படியும் தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னான். வயசு ஆனா என்ன அண்ணாச்சி? கல்யாணம்னு ஒண்னு ஆனால்தான எல்லாம்! அந்தப் பொண்ணு அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவிச்சுக்கிட்டுத்தான் இருக்கு!’

‘அது என்னய்யா விஷயம்?’ என்று சுவாரஸ்யமாக விசாரித்தார் மற்றவர்.

‘உங்களுக்குத் தெரியாதா? பக்கத்து வீட்டிலே ஒரு பையன் இருக்கான், ரொம்ப ஸ்டைல் மாஸ்டர். எங்கேயோ ஒரு ஆபிசிலே கிளார்க் வேலை பார்க்கிறான். நீங்க கூடப் பார்த்திருக்கலாம் அவனே. சைக்கிளில் போயிட்டுப் போயிட்டு வருவான். அவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் காதல். வேண்டியதெல்லாம் ஒழுங்க நடந்துக்கிட்டு இருக்குது’.

‘அப்படியா! அப்படியா?’ என்று அதிசயித்தார்; சந்தேகம் தொனிக்கவும் கேட்டார் அண்ணாச்சி.

‘நான் சும்மாவா சொல்றேன்? பல பேருக்கும் தொிஞ்ச ரகசியமாக்சே, அந்தப் பெண்ணும் இன்னொண்னும் சினிமாவுக்குப் போகும். தியேட்டர்லே வந்து ரெடியா நிற்பான் ஸ்டைல் மாஸ்டர். இன்னெரு புள்ளைக்கும் ஜோடி சேர ஒரு பையன் உண்டு. ஜாலியா சினிமா பார்ப்பாங்க. ஒரு நாள் இதை நேரிலே பார்த்த ஒருத்தர்தான் என் கிட்டச் சொன்னாரு!’ என்று அணஞ்ச பெருமாள் அடித்துச் சொன்னுன்,

‘அட அப்படியா! இது மாதிரியும் நடக்குதா!’

இதிலே என்ன அதிசயம் இருக்கு அண்ணாச்சி? இதெல்லாம் இப்போ சகஜம். சின்ன ஊர்களிலும், பெரிய ஊர்களிலும், டவுன் ஸைடிலேயும் நடக்கிறதைப் பார்த்தால் நாமெல்லாம் அசந்து போக வேண்டியதுதான். ரோடிலே நடந்துபோக நியாயமில்லே. பொம்பளைகளும், சின்னப் பொண்ணுகளும் எதிரே வந்தால், விலகி வழி விடுகிறதே கிடையாது. இடிச்சுக்கிட்டுத்தான் போறது, வர்றது. சினிமா பார்த்துவிட்டு வரும் போதும் ஆண்களோடு

இடிச்சு மோதிக்கிட்டுத்தான் வாருங்க. அதுக்காகத்தான் அவங்க சினிமாவுக்கே போருங்க. சினிமா முடிஞ்ச பிறகு ஓட்டல், லாட்ஜ்னு தேடிப்போக வேண்டியதுதான். உங்களுக்குத் தெரியுமா, இப்போதெல்லாம் லாட்ஜ்கள் எப்பவும் ஃபுல்தான். இதுமாதிரி ஜோடிகள்தான் வந்து மொய்க்குதே. சாதாரணமானவங்களுக்கு ரூம் கிடைக்கிறதே சிரமமாக இருக்கு. அணைந்த பெருமாள் இந்த விஷயத்தில் ஒரு ‘அத்தாரிட்’டி மாதிரி உறுதியாகப் பேசினான்.

“அது சரி. வெயிலுப்பிள்ளைவாள் மகள் வந்து …” என்று இழுத்தார் நாவன்னா,

‘அம்மையைப்போல் தானே இருக்கும்! அவள் கீர்த்திப் பிரதாபம் ஊரறிஞ்ச விஷயம் இல்லையா?’ என்று கூறிச் சிரித்தான் அனந்த பெருமாள்.

இந்த ரீதியில் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அவன். தெரு முனையில் குழைக்காதர் அவனைக் கண்டு கும்பிடுபோட்டான்,

மகரநெடும் குழைக்காதர் என்பது ஒரு பகவானின் திருநாமம். இந்த நெடும் பெயருடையார் சிலர் உண்டு. வெறும் ‘குழைக்காதர்’ என்து பெயரை குறுக்கிக்கொள் வோரும் உண்டு. .

‘என்னவே, நாயன்னா ரொம்ப நேரமாப் பேசிக்கிட்டிருந் தாரே, என்ன சமாச்சாரம்?’ என்று அவன் விசாரித்தான்.

‘சவத்துப் பயலுக்கு வேலை என்ன! வண்டி மறிச்சான் மாதிரி தெருவிலே நின்னுக்கிட்டு, போறவன் வாறவனை எல்லாம் வழிமறிச்சு, அது என்ன-இது ஏன்-அவன் எப்படிஇவள் இப்படின்னு தொன தொணத்திடுவான் ஐயா. ஊரிலே எங்கே கல்யாணம் வருது, யார் வீட்டிலே புள்ளை பொறந்ததுன்னு விசாரிச்சுத் தெரியலேன்னு சொன்னா, அவனுக்குத் தலை வெடிச்சிடும். பெண்டாட்டிக்குப் பயந்த பயல்!’ என்று அணைந்த பெருமாள் அடித்து விளாசினான்.

‘அவளை நேற்று டவுணிலே பார்த்தேனே’ என்றான் குழைக்காதர்.

‘நேற்று மட்டும் தான? தினம் டவுணில் அவளைப் பார்க்கலாம். குலுக்கி மினுக்கிக்கிட்டு அலைவா. தினம் சினிமா தான். ஓட்டல் தான். ஸ்டூடண்ட்ஸ் சிலபேரு தொடர்பு அவளுக்கு. புருசன் எருமை மாடு மாதிரியிருக்கான். அவளோ நாகரிகம். ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கா. பின்னே கேட்பானேன் ஜாலியா கிளம்பிடுறா. இவனை அவள் மதிக்கிறதே கிடையாது. முதல்லே கொஞ்சம் அதட்டி மிரட்டிப் பார்த்தான். போடா பிஸ்கின்னு எடுத்தெறிஞ்சு பேசிட்டாள். இப்படி இருக்கு வீட்டு நிலைமை!’

குழைக்காதர் தலையை ஆட்டினான். ‘அநேக இடங்களில் இப்படித்தானிருக்கு’ என்றான்.

‘ஆமா ஆமா. பொம்பளைக ரொம்பவும் துணிஞ்சிட்டாளுக. சினிமா வேறே அவங்களுக்கு ஏத்தபடி தான் வருது. அதுகளை பார்த்துப் பார்த்து, நாமும் இதுமாதிரி எல்லாம் நடப்போமேன்னு கிளம்பிடுறாளுக’ என்று அணைந்த பெருமாள் அளந்தான்.

இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்த தெரு வழியாக இளம் பெண் ஒருத்தி போனாள். நன்றாக பவுடர் பூசி, கண்ணுக்கு மையிட்டு, சிரத்தையோடு சிங்காரித்துக் கொண்டிருந்த அவள் ஒரு கையில் ரிஸ்ட் வாட்ச்சும், இன்னொரு கையில் வளையல்களும் அணிந்திருத்தாள். அவ் வழியாகத்தான் பஸ்ஸுக்குப் போகவேண்டும்.

‘பஸ்ஸுக்குப் போறா போலிருக்கு, ரொம்ப ஸ்டைலா ட்ரெஸ் செய்துகொண்டு வேறே எங்கே போகப் போறா’ என்றான் காதர்.

‘ஊம்ங்’ என்று இழுத்தான் பெருமாள். ‘இவளுக்கு கல்யாணமாகி இரண்டு மாசம்தான் ஆகுது. புருஷன் உடனேயே மெட்றாஸ் போயிட்டான். அவனுக்கு அங்கே வேலை. வீடு பார்த்து, அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கான், இங்கே இவள் அவன் தம்பியோடு சிரிச்சுப் பேசி

விளேயாடி, புருசன் இல்லாத குறையை போக்கடிச்சுக் கிட்டா,

‘வேண்டியது தானே என வழிமொழிந்தான்’ நண்பன்.

இவ்வாறு பேசி, இவ்வேனேக்கு இவ்வளவு போதும் என்று இருவருக்கும் திருப்தி ஏற்பட்டதும், அவர்கள் பிரிந்து போனுர்கள்,

அணைந்த பெருமாளுக்கு மகிழ்வண்ண நாதன் என்ருெரு நண்பன். அவன் வீட்டில் போய் இவன் பேசியும் துரங்கியும் பொழுது போக்குவது வழக்கம். உமையொருபாகன், திருப்பாற்கடல்நம்பி, பன்னிருகைப் பெருமாள் என்று இன்னும் சிலரும் வந்து சேர்வார்கள்.

அந்த வீடு ஒரு மடம் மாதிரி. மகிழ்வண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் பெரியவர்கள் யாரும் கிடையாது. எனவே அவர்கள் சோம்பேறித்தன மாகப் பொழுதுபோக்குவதற்கு ரொம்ப வசதியான இடம்.

அவர்கள் எப்போதும் பொம்பிளைகளைப் பற்றித்தான் பேசி மகிழ்ந்தார்கள். அணேந்த பெருமாள் தான் அதிகம் பேசுவது வழக்கம். அந்த ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த பெண்களைப்பற்றி-தாலியறுத்தவள், வாழ்வரசி, கல்யாணம் ஆகாதிருந்தவள், வாழாவெட்டியாக இருப்பவள் பற்றி எல்லாம் விவரங்களோடு பேசுவான். அந்த ஊரில் எவளுமே ஒழுங்கானவள் இல்லை என்ற முடிவுக்கே வர நேரிடும் அவன் பேச்சைக் கேட்கிறவர்களுக்கு.

அதைக் குறிப்பிட்டுக் கேட்டால், இந்த ஊரில் மட்டுமா! எல்லா இடங்களிலுமே பொம்பிளேகள் அப்படித் தான் இருக்கிருங்க. தெருவிலே நடந்துபோகிற ஆண் பிள்ளைகளை இடிச்சுக்கிட்டு அலைகிறவங்க முழிக்கிற முழியே இதைக் காட்டிக்கொடுக்குமே என்ற ரீதியில் அவன் பேசுவான்.

அனந்த பெருமாளோடு எப்பவாவது பேசிப் பழகும் திருமலைக்கொழுந்துவுக்கு, இவன் ஏன் இப்படி இருக்கிருன்? ல்லாரையும் மட்டம்தட்டிப் பேசுவதிலும், ஒருத்திகூட ழுங்கானவள் இல்லை என்று அடித்து விளாசுவதிலும் 龛 ஒ இவனுக்கு ஏன் இவ்வளவு திருப்தி: யாரிடம் பேச்சு கொடுத் தாலும் இவன் இதே தன்மையில் தான் பேசுகிருன். இது ஏனே? என்ற சந்தேகம் எழுந்தது.

அவன் பிறவிக்குணம் அது என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆளுல் அதைவிட அந்தரங்கமான-ஆழமானகோளாறு எதுவும் அவன் உள்ளத்தைப் பற்றிக்கொண் டிருக்கக்கூடும் என்ற எண்ணமும் திருமலைக்கொழுந்துக்கு ஏற்பட்டது.

ஒருநாள் அவன் அணைந்த பெருமாள் வீட்டுக்குப் போக தேர்ந்தது. வீட்டினுள் நுழைவதற்கு முன்பே, பெரும் சத்தம் அவன் காதைத் தாக்கியதால் திருமலை வெளியிலேயே நின்றுவிட்டான்.

அணஞ்ச பெருமாளின் மனைவி குழல்வாய்மொழி தான் காட்டுக் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள். மரியாதை இல்லாமல் கத்தினுள். நீரு ஒரு ஆம்பளையா? சம்பாதிக்கத் துப்பு இல்லையே. அது என்ன செலவு இது என்ன செலவு என்று கணக்குக் கேட்கமட்டும் வாய் இருக்குதே! இது திருமலையின் காதில் விழுந்தது. அவள் மேலும் மோசமாக, கண்டபடி, தாக்கிப் பேசினுள். அணஞ்ச பெருமாள் கீச்மூச் சென்று குரல் கொடுக்கவே இல்லை.

‘சரி சரி. இப்போ நிலைமை சரியில்லை’ என்று நினைத்து, திருமலைக்கொழுந்து வந்த வழியே திரும்பிவிட்டான்.

அன்று மாலே அவன் பக்கத்து டவுனுக்குப் போயிருந் தான். அங்கே சினிமா தியேட்டர் பக்கம் பார்வையில் பட்ட ஜோடிகளில் ஒருத்தி அவன் கவனத்தைக் கவர்ந்தாள். “இவள் வந்து அணஞ்ச பெருமாள் பெண்டாட்டி அல்லவா!’ என்று திடுக்கிட்டான். அவளே தான்.

குழல்வாய்மொழி குஷி மூடில் காணப்பட்டாள். அவள் இடித்து உரசி நெருக்கமாகச் சேர்ந்து போக வசதி யாக அருகே சென்றவன் அணைந்த பெருமாள் அல்ல, எவனே ஒரு உல்லாசி.

சூழ்நிலை மறந்த சுந்தரி சுந்தரனுக உலாவிய அவர்களைக் கண்டு ஒகோ! இப்படியா சங்க தி!’ என்று விசிலடித்துக் கொண்டது திருமலையின் மனக்குறளி.

பிறகு அவனது கண்கள் விழிப்புடன் ஆராய்வதில் ஈடு பட்டன. குழல்வாய்மொழி ஒரு மாதிரி’தான்; அவள் கட்டின புருஷனை மதிப்பதே இல்லை என்கிற உண்மை அவனுக்கு வெகு விரைவிலேயே புரிந்துவிட்டது.

‘சரிதான், அணஞ்ச பெருமாளின் மனக்கோளாறுக்கு அடிப்படைக் காரணம் இதுதான். தான் திருடி அசல் நம்பாள் என்ற தத்துவத்தை இங்கே உபயோகிக்கலாம். சூடு கண்டு நாக்கு புண்ணாகிவிட்ட பூனை எப்பவும் எங்கும் எதை யும் சந்தேகித்துக் கொண்டே திரியும் என்பதையும் பிரயோ கிக்கலாம். அவன் மனைவி மோசமானவள்; அவனுக்கு அடங்கி நடக்காதவள். அதஞல் அவன் ஊரில் உள்ள எல்லோருமே அப்படித்தான் என்று எண்ணுகிருன். அவ்வாறு உறுதியாக நம்புவதில் அவனுக்கு ஒரு திருப்தி உண்டாகிறது. தன் மனைவி ஒழுங்காக நடக்கவில்லை என்பதளுல் அவனுக்கு அவள்மீது ஏற்பட்ட வெறுப்பு. இதர பெண்கள் மீதும் பெரும் மனக் கசப்பாக வளர்ந்து கொழுந்துவிட்டது. உள்ளுற அவன் தன் மனைவியை வெறுக்கிருன். எல்லாப் பெண்களே யு மே வெறுக்கிருன். பெண் இனத்தையே கேவலமாக மதிப்பிட்டுப் பேசுவதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பழி வாங்குகிற சந்தோஷம் அவனுக்கு. அதனுல் தான் அவன் சதா இந்த ரீதியில் புலம்பித்திரிகிருன் என்று திருமலைக் கொழுந்துவின் அறிவு முடிவுகட்டியது.

“பாவம், அணஞ்ச பெருமாள்!” என்று அவன் மனம் அனுதாபப்பட்டது.

– ‘சிவாஜி ஆண்டு மலர் 1973

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *