மகளின் திருமண முகூர்த்தம் முடிந்ததுமே, “ஏப்பா,… பந்தி போடச் சொல்லிரு. ஆவணி கடைசி மூர்த்தம் வேற! அடுத்த மாசம் கல்யாணம் வெக்க முடியாதுங்கறதுனால, இன்னைக்கு நெறையக் கல்யாணம் இருக்கும். வந்திருக்கிறவங்க ரெண்டு – மூணு கல்யாணத்துக்கு அட்டன்ட் பண்ண வேண்டி இருந்தாலும் இருக்கும். லேட் பண்ணுனா அடுத்த கல்யாணத்துல சாப்புட்டுக்கலாம்னு போனாலும் போயிருவாங்க. அதனால, நீ போயி பந்தி ஏற்பாடு பண்ணி, எல்லாத்தையும் சாப்பிடக் கூப்பிட்டு கெவுனிச்சுக்கோ” மகன் பூபாலனிடம் சொன்னார் முத்துக்கண்ணு.
“செரீங்ப்பா…! நான் பாத்துக்கறேன!” என விலகி நடந்தவனை நிறுத்தி, “பக்கத்துலயே இருந்து பாத்துக்க. வந்தவங்க எல்லாரும் திருப்தியா சாப்பிட்டுட்டுப் போகோணும். அது ரொம்ப முக்கியம். ஃப்ரண்ட்ஸ் பாத்துக்குவாங்க, மாமன் – மச்சான் பாத்துக்குவாங்கன்னு, நீ வேற ஏதாவது சோலியைப் பாக்கப் போயறாத. இங்க வர்றவங்களப் பாக்கறதுக்கு நானும் உங்க அம்மாவும் இருக்கறோம். நீ பந்திய நல்லா கவனிச்சாப் போதும்” என வலியுறுத்தினார்.
திருமண ஏற்பாடு தொடங்கியதிலிருந்தே முத்துக்கண்ணு சமையல் விஷயத்தில் மிக கவனமாக இருந்தார்.
“கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தாலே, ரெண்டு கேள்விதான் முக்கியமாக் கேப்பாங்க. பொண்ணு மாப்பிள்ளை ஜோடிப் பொருத்தம் எப்படின்னு விசாரிப்பாங்க. அடுத்தது, சாப்பாடு எப்படி இருந்துச்சுன்னு கேப்பாங்க. ஆனா, கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு, பொண்ணு – மாப்பிள்ளை எப்படி இருந்தாலும், சாப்பாடு நல்லா இருந்தாகணும். இல்லாட்டி அதப் பத்திக் கண்டிப்பா குறை சொல்லுவாங்க” என்றவர், “திருநங்கைகள் நல்லா சமைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கறேன். நானே கூட ஒரு கல்யாணத்துல அவங்க செஞ்ச பிரியாணி சாப்பிட்டுருக்கறேன். பிரமாதமா இருந்துச்சு. அதே மாதிரி சைவத்துல சிறப்பா சமைக்கிற திருநங்கைகளை விசாரிச்சு ஏற்பாடு பண்ணிக்கலாம்” என்றார்.
“திருநங்கைகள்னா ஒரு மாதிரி பாப்பாங்களே…” என்றாள், அவரது மனைவி கோகிலம்.
“இப்பல்லாம் அது ரொம்பவே மாறிடுச்சு. திருநங்கைகள்ல பலரும் கௌரவமான தொழில் செய்பறவங்களா இருக்கறாங்க. அவங்க மேல இருந்த தவறான சமூகப் பார்வைகளும் பெரும்பாலும் மாறிடுச்சு. ஒரு சிலர் மட்டும்தான் இன்னும் மாறாம இருக்கறாங்க. அவங்களக் குறிக்கிற வார்த்தையே பாரு, மொதல்ல ‘அலி’ன்னு மட்டும்தான் பொதுவாவும் ஏளனமாவும் சொல்லுவாங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, ‘அரவாணி’ன்னு மரியாதையாக் குறிப்பிட ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் இன்னும் சிறப்பா, ‘திருநங்கை’ன்னு பெருமதிப்போட குறிப்பிட ஆரம்பிச்சு, அதுவே இப்பப் புழக்கமா ஆயிடுச்சு. வேற மொழிகள்ல அவங்களக்
குறிக்கறதுக்கு இந்த அளவுக்கு மதிப்பான வார்த்தை இருக்குதான்னு தெரியல. ஆனா, தமிழ்ல அவ்வளவு அழகா, இனிமையா, பெருமதிப்போட திருநங்கைன்னு சொல்றோம். அது வெறும் வார்த்தை அளவுல மட்டும் இருந்தாப் பத்தாது. அவங்களுக்கான மதிப்ப, மரியாதைய, அவங்களோட நாம பழகற விதத்துலயும், அவங்கள நாம வேலைக்கும் தொழிலுக்கும் இயல்பா பயன்படுத்துறதுலயும்தான் இருக்குது” என்றார்.
முத்துக்கண்ணு முற்போக்கானவர் என்பதோடு, சமூக சேவை மனப்பான்மையும் கொண்டவர். தம்மால் இயன்ற சேவைகளை எப்போதும் செய்வார். அவரது திருமண நாள், பிள்ளைகளின் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் ஆகியவற்றை முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் காப்பகங்கள், மனநலக் காப்பகங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்குள்ளவர்களுக்கு ஒரு நேரம் விருந்து படைத்து, அவர்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டாடுவது வழக்கம்.
எனவே, திருநங்கையர் சமையல் எனும் அவரது தீர்மானத்தை, மகனும், மணப்பெண்ணான மகளும் உடனே ஒத்துக்கொண்டனர்.
பலரிடம் விசாரித்து, அதிகமானோர் பரிந்துரைத்த திருநங்கையர் சமையல் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பூபாலன் உணவு மண்டபத்துக்குச் சென்றான். அப்போது 11:30 மணிதான் என்பதால் அந்த முதல் பந்திக்கு முந்தியடிப்பவர் எவரும் இல்லை, பந்தி விரிப்புகளில் பாதி இடம் காலி. பரிசாரகர்கள் பரிமாறத் தொடங்கியிருந்தனர்.
அப்போது சமையல் கட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு வந்த சிலர், “சமையலுக்கு ஆம்பளைக, பொம்பளைக யாரும் கெடைக்கலையா? இதுகதானா கெடைச்சுது?” என்று பேசிக்கொண்டு வந்தனர்.
அதைக் கேட்டு, “ஏனுங், என்ன சமாச்சாரம்?” என்று அமர்ந்திருந்தவர்கள் கேட்க, “எட்டுக்கும் பத்துக்கும் எடைப்பட்டதுகதான் அங்க சமையல் முளுக்கவே. தூத் திருமதிர்ச்ச…! இதுக சமைச்சா மனுசன் திம்பானா? பேசாம மொய்ய வெச்சுட்டுப் போயற வேண்டீதுதான்” என வெறுப்பாக சொல்லிவிட்டு வெளியேறினர்.
அவர்கள் யார் என்று பூபாலனுக்குத் தெரியவில்லை. மாப்பிள்ளை வீட்டாராகவோ, அப்பாவுக்குத் தெரிந்தவர்களாகவோ இருக்கலாம்.
என்ன செய்வது? அவர்களைத் தடுத்துப் பேசி சாப்பிட அழைப்பதா, வேண்டாமா என அவனுக்குப் புரியவில்லை. தூய்மையான ஆடைகள், கையுறைகள், நாசி மற்றும் வாய்த் திரை ஆகியவற்றை அணிந்து, மிக சுகாதாரமான முறையிலேயே திருநங்கைகள் சமைத்துக்கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களைக் கண்டு அந்த ஆண்கள் அருவருப்பாக முகம் சுளித்தனர். அவர்களிடம் பேசிப் புரிய வைக்க முடியுமா?
அவர்களது செயல் அவனுக்கு மிகுந்த வேதனை அளித்தது. திருநங்கைகள் குறித்த பார்வைகள் வெகுவாக மாறிவரும் இந்தக் காலகட்டத்திலும் இன்னும் இத்தகைய மனிதர்கள் உள்ளனரே என வருந்தினான்.
பந்தியில் அமர்ந்திருந்த மற்ற சிலரும் முகம் சுளித்தபடி எழுந்து செல்ல ஆயத்தமாகினர். அவர்களில் அவனுக்குத் தெரிந்தவர்களும் உறவினர்கள் சிலரும் இருக்கவே, “யாரும் எந்திரிக்காதீங்க. தயவு செஞ்சு உக்காந்து சாப்பிடுங்க!” என்று கேட்டுக்கொண்டான்.
ஓரிருவர் அவன் சொல்வதற்காக அமர்ந்தனர். மற்றவர்கள் அப்படியே நின்றிருந்தனர்.
“தயவுசெஞ்சு நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. யாரோ சில திருநங்கைகள் பிச்சை எடுக்கறதையும், பாலியல் தொழில் பண்றதையும் வெச்சு, எல்லா திருநங்கைகளும் அந்த மாதிரிதான்னு தப்பா நெனைக்காதீங்க. இந்த மாதிரி உழைச்சு வாழறவங்களும் நெறைய இருக்கறாங்க. புரியாத சில பேர், அவங்களோட குறையக் கேவலமா நினைச்சு அவமானப்படுத்தற மாதிரி, நீங்களும் அவங்களோட சமையலை இழிவா நெனச்சு, சாப்பிடாமப் போயிடாதீங்க. அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்கதான். அவங்களோட உணர்ச்சிகளையும், திறமைகளையும் மதிக்காம, வீட்லருந்தும் சமூகத்துலருந்தும் ஒதுக்கிவெச்சு, அவமதிக்கறதுனாலதான் அவங்கள்ல பல பேரு பிச்சைக்காரங்களாவும், பாலியல் தொழில் செய்யறவங்களாவும் ஆகறாங்க. நீங்களும் அந்த மாதிரி தப்ப, வேதனைய அவங்களுக்கு செய்யாதீங்கன்னு தாழ்மையோட கேட்டுக்கறேன்.”
அவன் சொல்வதை உணர்ந்துகொண்டோ, அல்லது அவன் இவ்வளவு தூரம் சொல்லியும் கேளாமல் போய்விட்டால் அவனது குடும்பத்தாரை அவமதிப்பதாக ஆகிவிடும் எனக் கருதியோ, அவர்களும் அமர்ந்து வேண்டாவெறுப்பாக உணவருந்தலாயினர்.
ஆனால் சாப்பிட சாப்பிட, சமையல் ருசியில் மகிழ்ந்து, ரசித்துச் சுவைத்தனர். ஒவ்வொரு வகையறாக்களையும் பாராட்டி, மீண்டும் கேட்டு வாங்கி வயிறார உண்டனர்.
“நாங்க கூட சமையல் எப்படி இருக்குமோன்னு நெனைச்சோம். சமையல் பிரமாதம்” எனப் பலரும் பூபாலனிடம் பாராட்டவே, “அதை அவங்ககிட்டயே சொல்லுங்க” எனக் கூறி, அந்தத் திருநங்கையர்களை அழைத்து வந்து, அவர்களிடமே சொல்ல வைத்தான்.
சிலர் அவர்களிடம் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டு, அலைபேசி எண்ணும் வாங்கிக்கொண்டனர்.
அப்போது திருநங்கையர்களின் முகத்தில் கட்டற்ற மகிழ்ச்சியைக் காண பூபாலனுக்கு மனம் நிறைவாக இருந்தது.
திருமண வைபவங்கள் யாவும் முடிந்து, வந்திருந்தவர்கள் அனைவரும் சென்றாயிற்று. மணமக்கள், மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். முத்துக்கண்ணு, ஒரு சில நெருங்கிய உறவினர்கள், பூபாலன், அவனது நெருங்கிய நண்பர்கள், பல்வேறு பணியாட்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தனர்.
கடைசியாக சமையற்காரத் திருநங்கைகளும் சாப்பிட்டு முடித்துவிட்டு வர, அவர்களுக்கான கட்டணத்தை வழங்க முத்துக்கண்ணு பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார்.
அப்போது திருநங்கையர்களின் பார்வை வரவேற்பு மேஜையில் இருந்த உண்டியல் மீது பட்டது. அதில் அபலைப் பெண்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய அனாதைக் குழந்தைகள் காப்பகமான சரணாலயத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அருகிலேயே ஓர் அறிவிப்பு அட்டை.
‘மணமகள் வீட்டுத் தரப்பில் மொய் வாங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, சரணாலயத்துக்கு நன்கொடையாகத் தங்களால் இயன்ற தொகையை செலுத்தினால் மிகவும் மகிழ்வோம்!’
அதைச் சுட்டிக்காட்டிய திருநங்கையர், “உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசுங்க ஐயா” என்று முத்துக்கண்ணுவைப் பாராட்டினர்.
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா. யார் யாரோ, எவ்வளவோ பெரிய பெரிய சேவைகளை செய்யறாங்க. சில பேர் அதுக்காக தியாகங்கள் கூட பண்றாங்க. இந்த சரணாலயத்தையே எடுத்துக்கங்க,… இந்த மாதிரி காப்பகங்கள் நடத்தறது எவ்வளவு சிரமம்! அவங்களையெல்லாம் பாத்துக்கறதுக்கு, பராமரிக்கறதுக்கு எவ்வளவு பெரிய மனசும், கருணையும் வேணும்! அதைப் பாக்கும்போது, நான் செய்யதெல்லாம் அணில் சேவை மாதிரிதான்” என்றுவிட்டு, “இந்தாங்க உங்க ஃபீஸ். அட்வான்ஸ் போக மீதி ஏழாயர்ருவா இருக்குது. எதுக்கும் நீங்களும் ஒரு சலக்கா எண்ணிப் பாத்துக்கங்க” என்று தலைமை சமையற்காரியான திருநங்கையிடம் பணத்தைக் கொடுத்தார்.
பவ்யமாக வாங்கிக்கொண்ட அவள், கை கூப்பி வணங்கியபடி, அதை அப்படியே சரணாலய உண்டியலில் போட்டுவிட்டாள்.
முத்துக்கண்ணுவும் பூபாலனும் திகைத்து, நெகிழ்ந்தனர்.
– சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி – 2021ல் ஆறுதல் பரிசு பெற்றது.
– பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால் (2022) என்னும் எனது சிறுகதைத் தொகுப்பில் வெளியானது.