அட மானிடா நலமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 10,501 
 
 

விமானம் மேலே கிளம்பிய போது மறுபக்கத்தில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்தேன். கண்களை மூடி நிஸ்டையில் இருப்பதுபோல சிலையாய்ப் போயிருந்தான். முகிற்கூட்டங்களைத் தாண்டி விமானம் உயரச் சென்று நேர்ப்பாதையில் செல்லத் தொடங்க, இருக்கைப் பட்டியைத் தளர்த்தலாம் என்ற அறிவித்தல் வந்தது. சிலர் இருக்கைப் பட்டியைத் தளர்த்தி கழிவறை நோக்கிச் சென்றார்கள். அவன் எழுந்து நின்று அழகாகச் சோம்பல் முறித்தான். சோம்பல் முறித்தான் என்பதைவிட, சோம்பல் முறிப்பது போன்ற பாவனையில் என்னை அணுவணுவாய் சித்திரவதை செய்தான் என்றுதான் சொல்லவேண்டும். என்னதான் மறுத்தாலும் மனசு பிடிவாதமாய்ச் சொன்னது, ‘கி இஸ் கியூட்’. அவன் என்னுடைய வயதை ஒத்தவனாக இருக்கலாம். எடுப்பாய் நிறமாய் உயரமாகவும், ஆண்மை மிக்க அரும்பு மீசையோடு அழகாகவும் இருந்தான். என்னைப் போலவே அவனும் கோடைகால விடுமுறைப் பயணியாக இருக்கலாம்.

விமான நிலையத்தில் வரிசையாக நின்றபோது, எனக்குப் பின்னால் சற்றுத் தள்ளி எங்கள் வரிசையில் அவனும் நின்றதை நான் முதலில் அவதானித்திருந்தேன். அவனைக் கண்டதில் இருந்து என்னை அறியாமலே எனக்கு அவன்மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவனை அடிக்கடி திரும்பிப் பார்க்க வேண்டும் என்று என் மனசு துடிப்பது எனக்குள் புரிந்தது. அவன் வேறு இனத்தவனாக வேறு மொழி பேசுபவனாக இருக்கலாம். ஆனாலும் ஈர்ப்பு என்பது நேரம், காலம், மதம், மொழி, இனம், பால் எல்லாம் பார்த்து வருவதில்லயே!

விமானத்திலும் நான் பயணம் செய்த இருக்கைக்கு மறுபக்கத்தில்தான் அவன் அமர்ந்திருந்தான். அனது கவனத்தைத் என்பக்கம் திருப்ப வேண்டும் என்ற ஆவலில் அடிக்கடி கழிவறைப்பக்கம் சென்று வருவது போலப் பாவனை செய்து பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அவனைக் கடந்து செல்லும் போது, அவன்மீது கடைக்கண் பார்வையைப் படரவிட்ட படியே சென்றாலும் அவனோ என்னைத் திரும்பிப் பார்ப்பதாக இல்லை. அவனிடம் கவர்ச்சியான புன்சிரிப்போடு கூடிய இளமை துள்ளுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

என்னுடைய இளமையின் ரகசியத்தில் எனக்கு அளவுக்கதிகமான நம்பிக்கை இருந்தது. இப்போதெல்லாம், வயது வித்தியாசம் பார்க்காமல் பல ஆண்களின் பார்வை எல்லாம் எங்கேயும் எப்போதும் என்மீது திரும்புவதை என்னால் அவதானிக்க முடிந்தது. கோடை மாரி குளிர்காலம் என்றெல்லாம் பருவங்கள் மாறுவது போல என் உடம்பின் பருவமாற்றத்தில், இது ஆண்களுக்கான இதமான குளிர்காலமாக இருக்கலாம்.

நீண்ட தூரப் பயணம் என்பதால் நான் எனக்குப் பிடித்தமான பாடல்களைத் தெரிவு செய்து எம்பி – 3யில் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவனும் ஒரு எம்பி – 3யோடு தான் உட்கார்ந்திருந்தான். பாடலை ரசித்து ரசித்து அதற்கேற்ப தலை அசைத்துக் கொண்டிருந்தான். சில சமயங்களில் ஒரு இரை மீட்கும் மாடு போல, கண்களை மூடித் தலையசைத்துக் கொண்டு இருப்பது போன்றும் தோற்றம் தந்தான். திரும்பியே பார்க்கமாட்டானா என்ற எரிச்சலில், அவனது கவனத்தைத் திருப்ப ஏதாவது செய்ய வேண்டும் போலவும் இருந்தது. ஒரு சமயம் மேலே வைத்திருந்த கைப்பையை எடுக்க நான் முயற்ச்சி செய்தபோது முடியாமற் போகவே, யாராவது உதவி செய்வார்களா என்று திரும்பிப் பார்த்தேன். அவன் உதட்டுப் புன்னகையோடு, பாடலில் லயித்து மூழ்கிப் போயிருந்தான். அவனுக்கு முன்னால் குனிந்து, ‘எக்யூஸ்மீ’ என்றேன். நிமிர்ந்து பார்த்தவன் நிலைமையைப் புரிந்து கொண்டு, எழுந்து வந்து உதவி செய்தான். கண்களால் மட்டுமல்ல வாயைத் திறந்தும் அவனுக்கு நன்றி சொன்னேன். ஒரு அலட்சியப் புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டான்.

அவனை வளைச்சுப் போடுவது ஒன்றும் அவ்வளவு கஸ்டமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவன் யார், அவனது பின்னணி என்ன என்று தெரியாமல் அதைச் செய்வதில் எனக்கு எந்தவித உடன்பாடும் இருக்கவில்லை. ஆனாலும் நீண்ட பயணம் என்பதால் பொழுது போக்குவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் போலவும் தோன்றியது. வேடிக்கையாக அவனோடு பொழுது போக்குவதற்கான சந்தர்பத்திற்காக என் மனசு ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தது.

நான் பார்க்காத சமயங்களில் அவன் என்னைப் பார்ப்பதை நான் மெல்ல அவதானித்தேன். அவன் பார்க்காத நேரம் பார்த்து நானும் அவனைப் பார்க்கத் தொடங்கினேன். அவனது கடைக்கண் பார்வைக்காக என் மனசு ஏங்குவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என்னைப் போலவே அவனுக்கும் அந்த ஏக்கம் இருந்ததோ தெரியவில்லை. ஒரு சமயம் தற்செயலாக இருவரின் விழிகளும் திடீரெனச் சந்தித்துக் கொள்ள, அந்த இளமைத் தேடலின் இதயத் துடிப்பில் சொர்க்கமே தெரிவது போலிருந்தது.

என்னோடு ஒட்டிக் கொள்வானா? என் மார்பிலே முகம் புதைத்திருக்க, இடது கையால் அணைத்தபடி அவன் முடிகளில் விரல் நுளைத்து இதமாக வருடிவிடுவதில் இருக்கும் அந்த சுகம், நினைத்துப் பார்த்தால் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. முயற்சி செய்தால் நெருங்கி வருவான் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்த்தது. இப்படித்தான் எனது செல்லப் பிராணியும் முதன் முதலில் என்னைப் பார்த்ததும் என்னைக் கவர்ந்திழுத்து என்னோடு ஒட்டிக் கொண்டது. எனது பிறந்த தினத்திலன்று எனது நண்பர்கள் எனக்கு ஏதாவது பரிசு தரவேண்டும் என்று என்னை அங்கே அழைத்துச் சென்றார்கள். செல்லப் பிராணிகளைப் பாதுகாக்கும் இடம் என்று சொன்னார்கள். பூனைகள் நாய்கள் எலிகள் என்று பல பிராணிகளும் அங்கே இருந்தன. அவற்றை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்த நாய்க்குட்டி மட்டும் ஓடிவந்து என் காலைச் சுற்றி சுற்றி வந்து என்னைப் பரிதாபமாகப் பார்த்தது.

‘ஆண் குட்டி அதுதான் உன்னைச் சுத்துதடி’ என்று தோழிகள் வேடிக்கையாக் கேலி செய்தார்கள். செல்லப் பிராணிகளுக்கு எங்க வீட்டிலே இடமில்லை, வீட்டிலே கடைசி வரையும் சம்மதிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சிறு வயதில் இருந்தே செல்லப் பிராணிகள் மீது எனக்குள் வளர்ந்த ஆசை என்னை விடவில்லை. எப்படியோ அம்மாவைச் சமாளிகக்கலாம், சம்மதிக்க வைக்கலாம் என்ற நப்பாசையுடன் ஒரு விதமாகச் சம்மதித்து வீட்டிற்குக் கொண்டு சென்றேன். முதலில் அம்மா ஏனோ தானோ என்று குதித்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நாய்க்குட்டியோடு ஒட்டிக் கொண்டாள். ரோமியோ என்று பெயரையும் அவளே சூட்டினாள். 

ஆறேழு மாதங்கள் சென்றிருக்கும் ரோமியோ நல்ல புஸ்டியாய், கொழுகொழு என்று வளர்ந்து துள்ளுவதும் குதிப்பதுமாய் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. மிருக வைத்தியரிடம் கொண்டு சென்று தடுப்பூசிகள் எல்லாம் போட்டோம். அவர் வேறு ஒரு தினத்திற்கு நாள் குறித்து ரோமியோவை மீண்டும் கொண்டு வரும்படி சொன்னார். ஏன் என்று கேட்டேன். ‘பிக்ஸ்’ பண்ணவேண்டும் என்றார். முதலில் எனக்கு விளங்கவில்லை. என் முகபாவனையில் இருந்து அவருக்குப் புரிந்திருக்க வேண்டும், ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாகச் சொன்னார்.

 வாயில்லா ஜீவன்கள் என்பதால் மானிடர்கள் தங்கள் வசதிக்கும், தேவைக்குமேற்ப எல்லாவற்றையுமே மாற்றி அமைத்து விடுகிறார்கள். பருவவாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் ரோமியோவிற்குத் தெரியாமலே அதன் மறுபக்க வாழ்க்கை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. நீண்ட நாட்களாக ரோமியோவைப் பார்க்கும் போதெல்லம் அந்த நிகழ்ச்சி எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. இயற்கையான சில  உணர்வுகள் மறுக்கப்பட் நிலையில், தன் உணர்வுகளை வெளியே எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் இருந்த ரோமியோவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு…!

‘அவசர அறிவித்தல்..!’

விமானத்தில் ஏதோ கோளாறு என்று திடீரென அறிவித்தல் வந்ததில் எனது சிந்தனை கலைந்தது. விமானப் பணிப் பெண்களின் ஆரவாரமான பரபரப்பைப் பார்த்ததும் எல்லோர் முகத்திலும் பயக்களை குடிகொண்டது. இப்படித்தான் சமீபத்தில் பிரான்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானபோது மத்தியரேகையைக் கடக்கும்போது அதில் உள்ள அதிககாற்றழுத்தம் காரணமாக உடைந்திருக்கலாம் என்றும், கனமான மேகக்கூட்டத்தோடு வேகமாக மோதியதால் உடைந்திருக்கலாம் என்றும் ஆளுக்காள் பலவிதமான கதைகளும் சொல்லிப் பயமுறுத்தியிருந்தார்கள்.

போதக்குறைக்கு இணையத்தளத்தில் உடைந்த பாகங்களையும் யாரோ படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். இதன் தாக்கத்தால் குழம்பிப் போயிருந்த பயணிகளை உள்ளே இருந்த சில சிகப்பு விளக்குகளும் கண்களை மூடித்திறந்து பயமுறுத்தத் தொடங்கின. விமானம் பூமியை நோக்கி கீழே வேகமாகச் சரிவது போன்ற உணர்வில் பயணிகள் கூக்குரலிட, என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை இறுக மூடிப் பிரார்த்தித்தேன். அதன்பின் என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. எங்கோ பாதாளம் நோக்கிச் செல்லும் உணர்வில் அப்படியே நான் மயங்கிப் போயிருக்க வேண்டும்.

ஆரவாரம் கேட்டுக் கண்விழித்துப் பார்த்தேன். யமலோகமா? பயத்திலே இமைகள்கூடத் துடிக்க மறுத்தன. அமேசன் காடுபோல உயர்ந்து நெடுத்த மரங்களுக்கு நடுவே, கலிவர்ஸ் ரவல்ஸ் (Gulliver’s Travels) கதையிலே வருவது போன்ற பிரமாண்டமான உருவங்கள் என்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தன. நீண்ட மெல்லிய விரல்களில் கூரிய நகங்களோடு, கொறிலாக்கள்போல இல்லை கரடிகள் போல உயரமான தோற்றம் தந்தன. ஒருவேளை கொங்கோ காடாகக்கூட இருக்கலாம், அங்கேதான் இப்படியான சில கொரிலாக்கள் இன்னமும் உயிரோடு எஞ்சியிருப்பதாச் சமீபத்தில் படித்திருந்தேன். ஆனால் விமானம் சென்ற பாதை அதுவல்ல என்பதும் தட்டுத்தடுமாறி ஞாபகத்திற்கு வந்தது. தங்கள் மொழியில் அவை ஏதோ பேசிக் கொண்டன. இவர்களின் வழித் தோன்றல்கள்தான் நாங்களோ என்ற சந்தேகம் சட்டென்று என்னைத் தொட்டுச் சென்றது.

என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் நினைவுபடுத்த முடிந்தாலும் எங்கே இருக்கிறேன் என்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆங்காங்கே இரத்தம் உறைந்த நிலையில் உடம்பெல்லாம் வலித்தது. என்னைத் தூக்கிச் சென்று ஏதேதோ மருத்துவம் செய்து பார்த்தன. நான் உயிர் தப்பிப் பிழைத்திருப்பதாகப் பேசிக்கொண்டன. தினமும் எதுவேதுவோ எல்லாம் வந்து என்னை வேடிக்கை பார்த்துச் சென்றன. சில இளசுகளின் கண்கள் என் மார்பில் பட்டுத் தெறித்தன. மனசு அவ்வப்போது வலித்தாலும் வேறு வழி தெரியாத நிலையில் இப்போது வாழும் இந்த வாழ்க்கைதான் எனக்கு முடிவான வாழ்க்கை என்றாகி விட்டதோ என்ற நிலையில் நான் உடைந்து போயிருந்தேன்.

என்னைப் பார்த்து அடிக்கடி ஜெனி என்று அழைப்பதில் இருந்து எனக்கு ஜெனி என்று அதுகள் பெயர் சூடியிருப்பது எனக்குப் புரிந்தது. எனது இடுப்பிலே பட்டி கட்டி, எங்கேயும் தப்பி ஓடிவிடாதவாறு கவனமாக என்னையும் அவ்வப்போது வெளியே அழைத்துச் செல்வதுண்டு. அப்போதெல்லாம் எங்கள் ரோமியோவை இப்படித்தான் நான் வெளியே அழைத்துச் சென்ற ஞாபகம் எனக்கு வரும். ஒருநாள் அதுகள் என்னை அழைத்துச் செல்லும்போது திடீரென மறுபக்கத்தில் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அவனைக் கண்டதில் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியியால் ஒருகணம் அப்படியே நான் உறைந்து போனேன்.

என்னைப் போலவே இடுப்பில் பட்டி கட்டியபடி அவனும் இருந்தான். இதுகள் மறுபக்கமிருந்த அதுகளைக் குசலம் விசாரித்தன. என்னைக் காட்டி இதுகள் ஏதோ சொல்ல அவனைக் காட்டி அதுகள் ஏதோ சொல்ல, எல்லாமே விழுந்து விழுந்து சிரித்தன. ஆனால் அவன் மட்டும் என்னை அடிக்கடி திரும்பிப் பார்ப்பதும் அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதுமாய் இருந்தான். எனக்குள்ளும் இனம்புரியாத சந்தோஸப் பிரவாகம் கிளர்ந்து எழுந்ததில் நானும் தடுமாறிப் போனேன். அதன் பின் அவனை அடிக்கடி சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்படி எதிரெதிரே நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் இன்பக் கிளுகிளுப்பில் இருவரும் மெய்மறந்து போவதுண்டு.

 கொஞ்ச நாட்களாக அவன் என்னைக் கண்டதும் மட்டற்ற மகிழ்சியில் துள்ளுவதும், சில சமயங்களில் கட்டுக்கடங்காமல் இடுப்புப் பட்டியை அறுத்துக் கொண்டு என்னிடம் ஓடிவர முயற்சிப்பதுமாய் இருந்தான். இது பருவக் கோளாறு என்றும் விரகதாபத்தில் துடிக்கிறான் என்றும் அதுகள் அது பற்றிய சைகைகள் காட்டித் தங்களுக்குள் பேசிக் கொள்வதில் இருந்தும் எங்களைப்பற்றி அதுகள் என்ன நினைக்கிறன என்பதை ஓரளவு என்னால் அனுமானிக்கக் கூடியதாக இருந்தது.

கடந்த ஒரு வாரமாக ஜாக்கைக் காணாமல் ஏங்கித் தவிப்பதும், எங்கேயாவது அவன் தென்படுகிறானா என்று தினமும் ஆவலோடு தேடிப்பார்ப்பதுமாய் இருந்தேன். வெறுமையின் பாதிப்பில் ஏதோ ஒன்று, அவனைக் காண்பதில் இருந்த இதமான அந்த சுகம் என்னிடம் இருந்து பலவந்தமாய்ப் பறித் தெடுக்கப்பட்டு விட்டதாய் மனசுக்குள் குமைந்தேன். அவனது பிரிவின் ஏக்கம் என்னை வாட்டிவதைத்தது. என்னாச்சு அவனுக்கு? எங்கே தொலைந்தான்? மனசுக்குள் எழுந்த விடைதெரியாக் கேள்விகளுக்கு மௌனப் பதில்கள்தான்; காத்திருந்தன.

மீண்டும் ஒரு நாள் எனக்கு எதிர்பாராத ஆச்சரியம் காத்திருந்தது. யாரைத் தொலைந்து போனான் என்று நினைத்தேனோ அவன் தூரத்தில் அசைந்து கொண்டு வருவதைக் கண்டு கொண்டேன். ஒரு வேளை இதுவரை காலமும் அவன் நோய்வாய்ப்பட்டு இருந்திருப்பானோ என்றுகூட நினைத்தேன். அவன் நெருங்கி வந்தபோது ஒரு காதலனுக்காகக் காத்திருக்கும் காதலிபோல, என் நெஞ்சம் படபடத்தது. என்னைக் கண்டதும் இன்பக் கிளுகிளுப்பில் துள்ளிப் பாய்வானோ, கட்டுக்கடங்காமல் போய்விடுவானோ என்றெல்லம் பயந்தபடி ஏக்கத்தோடு அவனைப் பார்த்தேன். 

ஆனால் அவனோ அருகே வந்தபோது, என்னைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. என்னைப் பார்த்தும் பார்க்காதது போன்ற பாவனையில் என்னைக் கடந்து அதுகளோடு சென்றான். நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லையே என்ற ஏமாற்ற அதிர்ச்சியில் நான் அப்படியே திகைத்துப் போனேன். ‘என்னாச்சு என் மன்மத ராசாவிற்கு?’

அதுகள் தங்களுக்குள் பேசிக் கொண்டு மெல்ல நடந்தன.

“அம்மா, அந்த ஜெனியைக் கண்டால் வழமையாக எங்க ஜாக் நாணிக் கோணித் துள்ளிக் குதிப்பானே, அன்றைக்குக்கூட அவளைக் கண்டதும் என்னமாய்த் துள்ளித் துள்ளிக் குதித்தான். இன்றைக்கு மட்டும் ஏன் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல், ஜெனியைப் பார்த்தும் பார்க்காதது போல நல்ல பிள்ளையாய் நடந்து வந்தான், என்னாச்சும்மா அவனுக்கு?” குட்டிக் கொரிலா தாயைப் பார்த்துக் கேட்டது.

“அதுவா, அவனைத்தான் சென்ற வாரம் மனிதவைத்தியசாலைக்குக் கொண்டுபோய் நலமடித்து விட்டோமே, அதனாலேதான் அவன் அடங்கிப் போனான்.!” என்றது அம்மா கொரிலா.

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *