கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 228 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆலமரம் சாய்ந்து விட்டது.

நோர்த்மாத்தளைச்சந்தி ஆலமரம் சாய்ந்து மண்ணில் வீழ்ந்து கிடக்கின்றது. ஆம் ‘அட்சய வடமாக” வீற்றிருந்த ஆலமரம் சாய்ந்து தான் விட்டது.!

சீதா பிராட்டி மீது இராவணன் கொண்ட காதல், இருக்கும் இடத்தைத் துருவித்தேடி; சல்லடையாகத் துளைத்த, இராமபாணங்களினால் உயிரை விட்டு மண்ணில் சாய்ந்து விட்ட அவனை: மண்டோதரி தலைவிரி கோலமாக, ஆரத் தழுவி; கிடப்பது போல; ஆலமரம் சாய்ந்து மண்ணில் வீழ்ந்து கிடக்கின்றது.

“ஜே…ஜே…” திரண்டு விட்ட பெருங்கூட்டம். வேடிக்கை பார்க்க, விசனம் விசாரிக்க, விமர்சனம் செய்யவென்றெல்லாம் முண்டியடித்துக் கொண்டு அலை மோதுகின்றது. பேரிரைச்சல்… பெருங் கூக்குரல்களின் கதம்ப நிகழ்ச்சி; நிரலின்றி; சன்னதமாடும் மேடையாக ஆலமரத்துச்சந்தி அல்லோகல்லோலப்படுகின்றது; அவசரக்குடுக்கைகளின் பக்கவாத்தியங்களோடு. இவை எதையுமே கண்டு கொள்ளாது; நான்கு திசைகளிலுமிருந்தும்; சந்தியில் சங்கமிக்கும் வீதிகளை ஆக்கிரமித்து போக்குவரத்தை தடைப்படுத்தி நெடுஞ்சாண் கிடையாக; அவலமாகக் கிடக்கின்றது ஆலமரம்.

நாற்சந்தியில் “நான்’ என்ற இறுமாப்புடன் நின்ற ஆலமரம் “தலைவிதியே” என்பது போல தலை சாய்த்து வீழ்ந்து விட்டது.

அது மண்ணில் சாய்ந்து விட்ட பரிதாபத்தை, ரப்பர் ஸ்டோரில் பற்றிய தீயாகப் பார்க்க வந்த பெருங்கூட்டம் “வார்த்தைப் பதாதைகளை” வீசி வழியை மறைத்து திரண்டு நிற்கின்றது.

“கச… முச…” என்ற களேபரத்தில் அல்லோலகல்லோலப்படுகின்றது. ஆலமரத்துச் சந்தி. இதற்கிடையில் பாதைகளில் நீண்டு விட்ட வாகனத் தொடரின் நெரிச்சல்.. நெரிச்சல்… நெரிச்சல்

எப்படியும் போய்விட வேண்டும் என்ற தவிப்பில் நாலாறு காதம் “ஹார்ன்’ நாதமாக ஒலிக்கின்றது.

கூடி நிற்கும் கூட்டத்தில் சிறுசுகளின்களைகட்டும் கும்மாளம் ‘ரெப்’ சங்கீதம் என அதிர; வாய்க்கு வாய் விமர்சனம் வேறு! வகை வகையாக; வீழ்ந்துவிட்ட ஆலமரத்திற்கு இனாமாக கிடைக்கும் பரிசு இவை!

“என்னடா சந்தி ஆலமரமாக நிற்கிற…”

“போ…போ…என் முன்னே நிக்காத”

எரிச்சல் கொண்ட கன்டாக்கு ஆலமரத்தினை துணைக்கழைப்பது பிரட்டுக்களத்தில்! ஆலமரம் இங்கு செய்த தவறுதான் என்ன?

நின்றால் மரம். அது தரும் நிழல் சுகம். மரம் பழுத்தால் கனி. பட்சிகளின் அட்சய பாத்திரம். அரிந்தால் அதன் உடலம் தரும் ஆயிரமாயிர உபகரணங்கள், தளபாடங்கள். தலை சாய்க்க கட்டில். இறுதியில் சுடுகாட்டுப் பெட்டி. மரம் சரிந்து சாய்ந்ததால் கணப் பொழுதில் வெட்டி, சிதைத்து, பிளந்து, பிரித்து, கூர்கூராக்கி, பாகம் பாகமாக, வகிந்து, அங்கம் அங்கமாக அரிந்து அரிந்து…. விறகாக்கி…. என்னெ அநியாயம் என்ன அநியாயம்?

கத்தி, கோடாரி, வெட்டரி வாள்கள், ஆப்பு, சிலசு என்று விதம் விதமாக ஆயுதங்கள் வந்து குவிந்து விட்டன.

கணப்பொழுதில் மரத்தை துண்டாடும் வேலைகள் “ஜரூராக” நடக்கின்றது. எல்லாமே துரித கதியில், நான் முந்தி நீ…. முந்தி என்று அவசரமாக வெட்டி வெட்டி விளையாடுகின்றனர்.

நோர்த்மாத்தளை சந்தியில் நின்ற ஆலமரம் சாய்ந்து நாழிகை கடக்கும் முன் நடக்கும் உபசாரங்கள் தான், இவை. காலங்காலமாக சந்தியில் நின்று; நிழல் தந்த ஆலமரத்திற்கு பிரதி உபகாரமாக நடக்கும்; கைமாறு நன்றி உபசரணைகள்.

கண்டி மாநகரின் தலையைச் சுற்றி வரும் மகாவலி நதியின் இருகரையிலும் கைகோர்த்து; மலையகத்தையும் வடக்கையும் இணைத்து கருஞ்சாரையென தெளியும் ஏ – நயின் பாதையில் ஒரு முக்கிய சந்திதான் நோர்த் மாத்தளை ஊர்ச்சந்தியாகும்.

பாரிய தோட்டங்களை உள்ளடக்கமாகக் கொண்ட இந்த சந்தியில் காலங்காலமாக குடை பிடித்து; நின்றது இந்த ஆலமரம். தலைமுறை தலைமுறையாக கிடைக்கும் நித்திய தரிசனம் இந்த ஆலமரம்.

மாத்தளை நகருக்கு வடக்கே அமைந்ததால் நோர்த் மாத்தளை வடக்கிலுள்ள மாத்தளை என ஊருக்கு பெயர் வந்துள்ளது. இவ்வாறு இவ்வூர் அணி சேர்த்துக் கொண்டு டால்’ அடிக்க; சந்தியும் ; தன் பங்கிற்கு, ஆலடிச்சந்தியென உயர்வு நவிற்சிகொண்டது.

இந்த தோட்ட சாம்ராஜ்யத்தின் நாற்ச்சந்தியில்; காலச்சக்கரத்தின் ஆணி வேரை ஊன்றி; கால ஓட்டத்துக்கு சாட்சியாக குடைப்பிடித்தது. ஓர் ஆலமரம்.

“ஆல் இல்லா ஊருக்கு அழகு பாழாகி விட்டது’ என்ற ஊர் பேச்சுக்கு இடமின்றி சந்தியில் நிற்கும் ஆலவிருட்சத்தின் விழுதுகள், தரையோடு கைகோர்த்து, கர்ப்பார்ந்த காலம் மோனத்தவத்தில்; மெஞ்ஞானம் பெற, நிஷ்டை கூடி நிற்கும் முனி புங்கவர்களின் இலட்சணத்திற்கு கட்டியம் கூறி நின்றன.

சடாயுவின் இறக்கைகளைப் போன்ற கிளைகள், தாடகையின் கைகளைப் போன்ற நீண்ட வாதுகள்; அதில் சிவப்புக்கல் கருக்கண்களாக இலைக்காது களுக்கிடையில் எட்டிப் பார்க்கும் ஆலம் பழங்கள் ; கொத்துக் கொத்தாக…

கடும் பச்சை வட்டக்கிளைகளில் முத்துப் புன்னகை வீசி, எட்டிப் பார்க்கும் மூக்குத்தி மஞ்சள் தளிர்கள், “ஆலமரத்துக்குப் பூவா இல்லை இதோ நாங்கள் இருக்கின்றோம்” என முழம் போட்டு நிற்கும் இறக்கைகளில் முகிழ்க்கும் குருத்துக்கள் மலர்களாக ‘டால்’ அடிக்க அத்த குருத்துக்களில் குந்தி “கொட்டரா குருவிகள்” கோதி, குரல் கொடுத்து விளையாடினால். பகல் மணி ஒன்று. பச்சைக்கிளிகளைப் பழிப்பது போல சிறகடித்துப் பறக்கும். “கொட்டரா” குரல் கொடுத்தால் ” மணிக் கூட்டினைப் பார்க்கத் தேவை இல்லை.

ஆலமரத்தில் அடிக்கடி மாறும் ரூபலாவண்ணியங்கள் இப்படி பலப்பலவாகும்.

இந்த ஆலமரத்தை ஒரு பத்து இருபது பேர் சங்கிலியாக கைகோர்த்து பிணைத்து கட்டிப் பிடித்தாலும் பிடிக்க முடியாது. மரத்தைச் சுற்றி சரம் கோர்த்துத் தொங்கும் விழுதுகள் வேறு, காவல் அரண்களாக புடை சூழ்ந்துள்ளன. தரையில் ஊன்றியும்; ஊஞ்சல்களாக தொங்கியும் அவை ஆடி அசைந்து நிற்கின்றன.

அன்று வெள்ளைக்காரன்; ஸ்டேலிங் பவுன் கம்பெனிகளாக நடத்திய ஆலமரத்தோடு தொடர்ந்துள்ள தோட்டம்; நாட்டின் சுதந்திரத்தோடு சுதேச முதலாளிமார்கைக்கு மாறிய போதே நாலாறு பிரிவுகளாகி விட்டது. முதலில் ரூபாய் பின்னர் சில்லரையாகி மவுசு குறைந்து விட்டது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்து நான்கில் காணி உச்சவரம்பும்; காணி சீர்திருத்தமும் அமுலாகிய போது; மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதித்தது போல தோட்டம் காடாக்கப்பட்டு படிப்படியாக கிராமமாக மாற தோட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு லயமும் அதனைச் சுற்றிய பத்தடி நிலமும் மட்டுமே வாழ்க்கை என்றாகி விட்டது.

இவ்வாறு வாழ்ந்து; சிதைந்த; கதைக்கு ஒரே ஒரு மௌன சாட்சியாக நின்றது இந்த ஆலமரம் மட்டும் தான்.

இந்த தோட்டத்தில் பூர்வீகத்தையும், ; இன்று பொலிவிழந்த அதன் நிலையினையும்; கூறவும்; இந்த ஆலமரத்தின் ஆதிபூர்வீகத்தை எடுத்து சொல்லக் கூடியவர்கள் இருக்கின்றார்களா?

“வெள்ளைக்காரன் காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கிய காலத்தில் கரத்தை வண்டியும் வண்டித்தடமும் இருந்த காலத்திலேயே இருந்தது. இந்த ஆலமரம்’ என்பது ஒரு கட்சி. இல்லை இல்லை தோட்டம் போட்ட போது; நம்ம கங்காணிகளில் ஒருவர் நட்டு வச்சது தான் இந்த ஆலமரம் என்பது இன்னுமொரு கட்சியின் வாதம்.

இப்படி பல வாதப் பிரதிவாதங்கள்…. இந்த எரிந்த கட்சி; எரியாத கட்சி லாவணி ஒப்பாரிகளை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாது யார் என்ன சொன்னால் எனக்கு என்ன? என்று காற்றின் இரகசியங்களைக் கேட்டு; தலையாட்டிக் கொண்டு சந்தியில் நின்றது ஆலமரம்.

எத்தனையோ மரங்களை அதிரடிச் சோதனை போட்டு அசைத்த காற்று; இந்த ஆலமரத்தை ஏனோ அசைத்தது கூடக் கிடையாது. காற்றுக்கும் ஆலமரத்துக்கும் அப்படி என்னதான் இரகசிய பேச்சு வார்த்தையோ? இயற்கையின் இரகசிய உடன்பாடா? உடன் படிக்கையா?

இந்த ஆலமரத்தின் வயசு தான் என்ன? ஒரு படையே தங்கி நிற்கும் அளவிற்கு – வியாபித்து நிற்கும் ஆலமரங்களின் வயசு தான் என்ன?

பேய் மழையோ! பெருங் புயற்காற்றோ இல்லாத ஒரு மாலை வேளையில் “யாரும் என்னை எப்போதும் சாய்க்க முடியாது” என்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நின்ற ஆலமரம் காற்றின் எந்த அதிரடி தாக்குதலோ!. சூறாவளியின் சுற்றுப் பயணமோ! வாயு பகவானின் கரந்தடி கண்டனமோ இல்லாமல் திடீரென குலுங்கி இலைகள் எல்லாம் சலசலத்து பலத்த ஓசையை எழுப்ப; மெல்ல சரிந்து; தரையில் பயங்கரமாக வீழ்ந்தது.

எதிர்பாராத திடீர் முடிவு. நினைத்தும் பார்க்காத நிகழ்வு ஆலமரம் வீழ்ந்து விட்டது. ஆலமரத்தின் அடியில் வீற்றிருந்த வழிப்பிள்ளையார் அப்படியே குந்தி இருக்கின்றார். ஆலமரத்தின் பிரம்மாண்டமான அடிப்பாகம் அவரை உரசாமல் விலகி வீழ்ந்தது. ஆலமரம் வீழ்ந்தும் விநாயகனுக்கு எதுவிதமான விக்கினங்களும் கிடையாது.

அவர் விக்கினங்களை தீர்த்து வைக்கும் விக்னேஸ்வரர் அல்லவா.

வீழ்ந்த ஆலமரத்தை துண்டாடும் வேலை துரிதமாக தொடங்கி விட்டது. தலைவேறு; கிளை வேறு, முண்டம் வேறாக தாமதமின்றி சிதைக்கின்றார்கள். வாள் பிடித்து அறுப்பவர்கள்; கோடரி தூக்கி கொத்துபவர்கள்; மத்தியில் விறகாக எரிக்கும் மரமாக இருந்தால் ஆகா! நல்லதொரு “சான்ஸ்” போய் விட்டதே என்று வாயூறிக் கொண்டவர்கள் “வெட்டுங்க வெட்டுங்க” “சுறுக்கா வெட்டுங்க” என்று வெறுப்பைக் கக்கி விட்டு அகன்றனர். சலிப்புடன்!

மரம் பழுத்தால் வௌவால், மரம் சாய்ந்தால் வெட்டரிவாள்…ச்சே..சே… சாலையின் இரு திசைகளிலும் மட்டுமல்ல நான்கு திசைகளிலும் நீண்ட வாகனத் தொடரின் ”ஹார்ன் ” ஓசை காதை பிளத்தெடுக்கின்றது.

அறக்கப்பறக்க ஓடி வந்த மரவியாபாரிகள் “என்ன பெரிய மரமாக இருந்து என்ன பிரயோசனம் ஒரு பலகைத் துண்டுக்கு ஆகுமா? என்று பழித்து பேசினர் இந்த களேபரத்திலும் டிவி காமிராவிற்கு முகம் கொடுத்து நிற்கும் அவசரகுடுக்களை பின் தள்ளி; முந்திரிக் கொட்டைகளாக முந்திக் கொள்ளும் “லோக்கல் அரசியல் குஞ்சுகள்!”

சாய்ந்த மரத்தை அரிந்து குவித்த குவியலையும், அடிப்பாகம் முதல் நுனி

வரையும் ஒரு வாரத்துக்கும் பின் வந்து ஆராய்ந்த உத்தியோக ரீதியான வனபரிபாலன இலாக்கா அதிகாரிகள் ஆராய்ந்து; “ஐநூறு வருடங்களுக்கும் மேல் இருக்கலாமென ” ஆலமரத்தின் வயதை ஊகித்துக் கூறி; மரண அத்தாட்சிப்பத்திரத்தை வாய் மொழியாக வழங்கிச் சென்றனர்.

சந்தி ஆலமரத்தின்! வயது ஐநூறு வருடங்களுக்கு மேல். பல தலைமுறை களுக்கு சாட்சியான இந்த ஆலமரம் எத்தனை தலைமுறைகளை கண்டிருக்கும்?

இந்தத் தோட்டத்திற்கு மட்டுமல்ல; பன்னாமத்துக்கும் இலங்கை நாட்டின் கடைசி முடி மன்னனை கொண்டிருந்த கண்டி இராஜ்ஜியத்துக்கும்; ஏகாதிபத்திய ஆட்சிக்கும் சாட்சி கூறும் பக்கங்களையும், பதிவுகளையும் தன்னுள் அடக்கியிருந்த ஆலமரம் சாய்ந்து விட்டது.

ஐநூறு வருடங்களுக்கு மேலான வரலாற்றை கண்ணாரக் கண்டு களித்த ஆலமரத்துக்கு மட்டும் வாய் பேச முடிந்தால், எழுத முடிந்தால், எத்தனை எத்தனை கதைகளை சொல்ல முடியும். எத்தனை எத்தனையோ சம்பவங்களை அனுபவங்களை இந்த மண்ணின் வரலாற்றை இதில் வாழ்ந்து மடிந்த மக்களின் இன்ப துன்பங்களை எழுத முடியும். வாய் திறந்து சொல்லாது விட்டால் என்ன? மனதில் உள்ளதைக் கொட்டி எழுதாது விட்டால் என்ன? உண்மை உண்மைதானே!

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து படகேறி; மன்னாரில் இறங்கி அடர்ந்த வனாந்திரங்களுக்கூடாக நடந்து; நாலந்த கணவாயைக்கடந்து; மலையகத்தில் காடழித்து தோட்டம் போட்ட மக்களுக்கு ஒரு மௌன சாட்சியும்; சத்திய பிம்பமும் இந்த ஆலமரமே! மனசாட்சி இல்லாத மக்களுக்கும், நாட்டிற்கும் இந்த மரம் தான் சாட்சியோ?

“அன்று கண்டி சீமைக்கு” வெள்ளைக்காரனின் வெள்ளிப்பணத் திற்காக; தீரயோசிக்காமல் புறப்பட்டவர்கள், நடுவழியில் இறந்தவர்கள், திரும்பிப் போனவர்கள், போக நினைத்தும் போக முடியாமல் ஏக்கத்துடன் இறந்தவர்கள் உட்பட; இங்கேயே தங்கி வம்சத்தை விருத்தி செய்து, இன்று மலையக தமிழ் தேசிய இனமாக பரிணமித்தவர்களின் வேர்களையும், விழுதுகளையும் இந்த ஆலமரம் உள்ளடக்கித்தானே உள்ளது!

கண்டியின் கடைசி மன்னனை வேலூக்கு கப்பலில் ஏற்றிய பின்னர் தாம் நினைத்தவை நடக்கவில்லை என ஏமாற்றம் அடைந்து, வஞ்சினம் தீர்க்கும் எண்ணத்துடன் வெங்கட சுவாமிக்கு தம்புள்ள குகைக் கோயிலில் பட்டம் சூட்டி; அவனை பல்லக்கில் சுமந்து வரும் வழியில்; கவுடுப்பளளையில் வாழ்ந்த விவசாயி ஜனாப் செய்கு ஜுனைதீன் ஒளியா, காதர் சாகிபு ஆகியோரை சந்திப்பதற்கு முன்னர், இந்த ஆலமர நிழலில் இளைப்பாறிய போது; புது அரசனுக்கு ஏமாற்றம் காத்திருக்கின்றது; என்பதை ஆலமரம் தான் அறிந்திருக்குமா? வயிற்றோட்டம் கண்டிறந்த புது மன்னன் தான் அறிந்திருப்பானா?

கண்டி இராச்சியத்தில் சிறை பிடிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ரொபட் நொக்ஸ் தப்பி; திருகோணமலைக்குச் சென்று கப்பலேறியதை வழியில் நிழல் தந்து நின்ற இந்த ஆலமரம் அறியாதது என்ன?

இதன் பட்டையில் குத்தி; அவன் குறியீடு வைத்துப் போனதைக் கூற ஆலமரத்திற்கு வாயேது? நாவேது? வார்த்தைகள் தான் உண்டா?

எத்தனை பெரிய மரமாக இருந்தும் என்ன பிரயோசனம்? ”எரிக்க முடியாதே” என வீழ்ந்து கிடக்கும் மரத்தின் மீது வசைபாடி எரிச்சலை கொட்டித் தீர்க்கும் கொடூரங்கள் வாழும் போது! ஒரு செம்புத் தண்ணீரை வார்க்காத வயிற் றெரிச்சல்களுக்கு பதில் சொல்ல வரம் இல்லாத மரம்; சூடாக, “ஒரு சொல் ” சொன்னால் போதுமே!

மரத்திற்கு வாயிருந்தால்; நாம் வாயடைத்து ஊமையாக மௌனியாகி விட வேண்டும். என்பதால் தான் அவற்றிற்கு வாய் இல்லையோ? தெய்வமே…!

நம் வயிற்றை நிரப்பும் அவற்றிற்கு பேச வாயில்லை அந்த வரம் ஏன் இல்லை?

ஆதியில் தமிழ் நாட்டிலிருந்து ஆசை வார்த்தைகள் காட்டி, கங்காணிமார் கட்டி வந்த சனங்கள்; தங்கச்சி மடம், அக்காமடம் கடந்து, மண்டபம் கேம்ட்பில் பதிந்து இராமேசுவரத்தில் படகுகளில் ஏறி, தட்டப்பாறையில் நடந்து, இராமர் அணையைக் கடந்து, மன்னார், அரிப்பு, மாந்தை ஆகிய துறைகளில் இறங்கி, அடர்ந்த உலர்வலயக் காடுகளில் நடந்து; கொடிய காட்டுச்சுரம், அம்மை ஆகிய நோய்களில் பாதிப்புற்று; கொடிய வனவிலங்குகள், சர்ப்பங்கள் விஷ ஜந்துக்கள் என்பவற்றினால் தொல்லையுற்று மடிந்து; உறவுகளைப் பிரிந்து, தப்பிப்பிழைத்து, நாலந்த கணவாய்க் கூடாக பன்னாமத்தை நோக்கி நடந்து முன்னேறுகையில்; அவ்வழியில் நின்ற இந்த ஆலமரம் இந்த அவலங்களைக் கண்டு வாய்விட்டு; அழுது….அழுது.

கண்கலங்கி நிற்கையில்; நடைபயணிகளின் மரணப்பயணம் நீண்டு கொண்டு தானே இருந்தது. தடுக்க முடிந்ததா?

அண்டிப் பிழைக்க வந்த மக்களை ஆலமரத்தினடியில் அமர்ந்து ஏமாற்றிப் பிழைத்த முடவனின் கதையை, வழிவழியாக செவிவழியாக கூறும் போது; ஆலமரம் தலையசைத்து, கிளைகளை உலுப்பி “ஆமாம்” போடத்தானே செய்தது ஒரு குரல் கொடுத்ததா இல்லையே இல்லை…. இல்லை.

நோர்த் மாத்தளை தோட்டத்தைச் சுற்றி சவுக்குடன் குதிரையில் வலம் வரும் வெள்ளைதுரை. தோட்டத்தின் நடுமையத்திலுள்ள குன்றில் அவனுக்காக அமைத்த பெரிய பங்காளா. தேயிலை, இறப்பர், கொக்கோ தொழிற்சாலைகள் இவற்றை உருவாக்க தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் அயரா உழைப்பு என்பவற்றையெல்லாம் கண்டு ஆலமரம் மனசு’ வெதும்பாமலா இருந்திருக்கும்

துரைமார்களின் காட்டுத் தார்பார், பெரிய கங்காணிமார்களின் அடாவடித்தனம், பெண்டாளும் சண்டாளர்களின் துரோகங்கள் தொழிலாளர்களின் அப்பாவித்தனம் இவற்றையெல்லாம் கண்டு பெருமூச்சி விட்டு; இரவிலும் தூங்காது; சலசலத்துக் கொண்டு தானே இந்த ஆலமரம் காலங்காலமாக கண் விழித்து நின்றது.

தோட்டங்கள் தோறும் அமைக்கப்பட்ட அம்மன், பிள்ளையார், முருகன்; காளி ஆலயங்கள் மலை உச்சியில் நிறுவப்பட்ட முனி, சிந்தாகட்டி கோயில்கள் மற்றும் முனியாண்டி, மாடாசுவாமி, கவாத்து சாமி, ரோதமுனி, வால்ராசா, வால்முனி கோயில்கள் இவைகளில் நடந்த உற்சவங்கள் திருவிழாக்கள் என்பவற்றை யெல்லாம் வருடந்தோறும் பார்த்து பார்த்து மகிழ்ந்து வளர்ந்து கொண்டுதான் இருந்தது இந்த ஆலமரம் தோட்டத்திற்குள் நாட்டாரும் வெளியாரும் நுழைய முடியாத காலம் அது!

வெற்றிலை பாக்கு விற்கும் மகாவெல நாட்டு விவசாயி முதல், வளையல், சீத்தை விற்கும் சீனாக்காரன் வரை அனுமதி பெற வேண்டும். இந்த சிறப்புரிமைக்கு ஆலமரமும் பச்சைக் கொடிதான்

அடைக்கப்பட்ட அந்த தோட்டத்தில் காமன் கூத்து, பொன்னார் சங்கர் கூத்து, அருச்சுணன் தபசு, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்படிவஸ்தா, காவடி, கும்மி, கோலாட்டம் என்பவைகள் எல்லாம் நடந்தேறிய போது; ஆலமரம் வரை இந்த ஆட்டங்கள் வந்து போயின. ஆலமரமும் ஓர் எல்லையாகி ஒரு கதாபாத்திரமானது.

வீரமாகாளி பூசாரி “ஓடாத பேயை எல்லாம் ஒட்டி வந்து; உச்சி தலைமயிரை பிய்த்து ஆணி வைத்து அடித்தபோது; ஆடாமல் ஆசையாமல் நின்று; பேயையும் குடி ஏற்றுக் கொண்டது, இந்த ஆலமரம். விழுதுகள் பல துணையாக தாங்கும் போது; பேய்ப் பயம் எதற்கு? என்ற எண்ணமா? மனதில் உறுதி கொண்ட மரம்.

அந்த காலத்தில் இப்போது போன்று ஆலமரத்துச் சந்தியில் கடைகள் குடியிருப்புகள் இல்லை. சந்தியிலுள்ள அம்மன் ஆலயமும் “ஆத்தா” கட்டிய தாகத்தான் கூறுகின்றனர். சந்தியில் இறங்கி நேரே தோட்டத்திற்குள் போனால் தான் சனங்களை காண முடியும் அரிசிக் காம்பிரா முதல்; ஆசுபத்திரி வரை அங்கே தான்!

சந்தியில் வடை சுட்டு விற்றபாட்டி, வடைக்காக மரக்கிளையில் ஏங்கி அமர்ந்திருந்த காகத்தை; பின்னர் வந்து சேர்ந்த சுண்டல் கடலைக்காரன் படிப்படியாக ரோட்டோரத்தில் வந்து சேர்ந்த பெட்டிக்கடை; பின்னர் வந்த டீக்கடை இவை பற்றி வரலாறுகளை இந்த ஆலமரம் மட்டும் தானே அறியும். அன்று தோட்டத்தில் பிள்ளை மடுவமாக ஆரம்பித்த பாடசாலை இன்று பதினைந்து ஆசிரியர்களோடு நிகழ்ந்தாலும் அன்று வித்தியா மாளிகை வாசிப்பிற்கும் சுந்தரமூர்த்தி வாத்தியாரின் மனக்கணக்கிற்கும் ஈடாகுமா என்று “நைற் ஸ்கூல் நல்ல தம்பி’ நெஞ்சார புகழ்வதும் ஆலயத்திற்கு சரியெனவே படுகின்றது. அதன் மனசாட்சி அதற்கு!

எழுபத்தி நான்கில் தோட்டம் மூடப்பட்ட நிலையில்; தோட்டப் பாடசாலை மறையும் நிலை ஏற்பட, தனியார் தோட்ட முதலாளி ஒருவரை பிடித்து; அவர் பொறுப்பில் பாடசாலையை உயர்ப்பித்து கல்விக் கண்களை மூடவிடாது; தோட்டத்தில் படித்த இளைஞர் காப்பாற்ற, “சாகும் வரை இதில் படிப்பிக்கின்றோம்.” “வாய்ப்பு தாருங்கள்” என்று வந்த சிலர் எல்லாம் நிறைவேறி, பாடசாலை சுவீகரிப்பும் நடந்து, அரசாங்க நியமனம் கிடைத்தவுடன் தலாவாக்கொல ஆசிரிய கலாசாலை என்று போய்; பின்னர் இந்த பாடசாலை பக்கமே வராது அட்டன் நுவரெலியா என்று அங்கேயே

குடியேறி மவுசு காட்டி, சொந்த பந்தங்களின் இழவு சாவு வீடென்றால் வேன் பிடித்து இறுதி நேரத்தில் சடங்கிற்காக வந்து, உடனே திரும்ப வேண்டும் என்று ஓடிய போது; ஆலமரம் தனக்குள் நகைக்காமலா இருந்திருக்கும்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண பத்திர பரீட்சையையே பல தடவைகள் எடுத்து, ஒட்டு மொத்தமாக ஆறுபாடங்களை சான்றிதழில் காட்டிய இவர்கள், தனக்கு வாழ்வளித்த தோட்டப் பாடசாலையை மதிக்காமல்; அற்ப மவுசு காட்டி ஆலமரத்துச் சந்தியில் புது வாழ்வுப் பெருமையில் “வேனை ” விட்டு இறங்காமல் நடப்பு காட்டியது ஆலமரத்திற்கு மட்டுமா நகைப்பானது, நடிப்புச் சுதேசிகள்.

அன்று தோட்டத்துக்கு பாடசாலைக்கு ஆண்டிற்கு ஒரு தடவை வந்து, “பாஸ் பெயில்” போடும் ஸ்கூல்” இன்ஸ்பெக்டர் ஒரு சர்வபலதாரி பாடசாலை வரவு, பாஸ் பெயில் என்பதிலேயே “கிராண்ட்” தங்கி உள்ளது.

இன்று பாடத்திற்கொரு அதிகாரி. மாதா மாதம் வாரா வாரம் பாடசாலைக்கு வந்து, “காலை எட்டு மணிக்கு பாடசாலையை தரிசித்தேன். பிற்பகல் ஒரு மணிக்கு திரும்பிச் செல்கிறேன் ” என்று காலை பத்து மணிக்கு வருகை தந்து, அரை மணித்தியாலத்திற்கு மேல் பாடசாலையில் தரிக்காது, ஏறாத வாகனத்தின் இலக்கத்தையும் “லொக் பூக்கில்’ குறித்து “டிரவுலிங்கிளைமுக்கும்” ஏற்பாடு செய்து; திரும்பிச் செல்லும் வழியில் தனது மர பிசினஸ்சையும் கவனித்துவிட்டு ஆலமரச் சந்தியில் பஸ் ஏறிச் செல்லும் கல்வி அதிகாரியையும் புறக்கணிக்காது, நிழல் தந்து நின்று, வழியனுப்பி வைப்பதும் இச்சந்தி ஆலமரம் தான்; குறிப்பறியாத நாமும் மரம் என்பதாலா?

அல்லது, “காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்லமரம்” என்ற பாடலை ஆலமரம் மனப்பாடம் செய்தா வைத்துள்ளது?

தோட்டத்திலுள்ள சிலர் சம்பளக் கிழமையில் மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள வள்ளிவெல கள்ளுத்தவறணைக்கு இரகசியமாக போய் வந்தார்கள். போகும் போது இரகசியமாக போனவர்கள் திரும்பி வரும் போது; “ஈன ஜென்மம் எடுத்தேனே என் ஐயனே என்னை ஏன் படைத்தாய்” என்று தள்ளாடி வந்து; தலைக்கேறிய சூர் தணியும் மட்டும் சந்தி ஆலமரத்தடியில் குந்தி இருந்து போனார்கள். இவர்கள் யார் எவர் என்ற இரகசியத்தை ஆலமரம் வெளியிட்டு காட்டிக் கொடுத்ததே இல்லை. இல்லவே இல்லை

தற்போதும் இரவு பகலின்றி கஞ்சா, பீடி, தூள்; “பாபுல்” என்று எத்தனையோ வியாபாரங்கள் ஆலமரநிழலில் நடக்கத்தான் செய்கின்றன. ம்….ம்…. ஆலமரம் ஒன்றையுமே கண்டு கொள்வதில்லை அவனவன் பிழைப்பு அவனோடு! நமக்கென்ன என்று மாமூல் வாங்கும் அதிகாரியைப்போல் பாரா முகமாக இருக்கின்றது. கேட்பார் யார்?

வர்ண வர்ண சினிமா போஸ்டர்கள்; அரசியல் கட்சி போஸ்டர்கள் இன்னும் துண்டுப் பிரசுரங்கள் என்பவற்றை அடித்தவர்கள் பசை உலரும் முன்னே கிழித்தவர்கள் அனைவரையும் ஆலமரம் அறியும். நட்ட நடுநிசியில் நடந்தாலும் கண் கொண்டு பார்த்த காட்சி. ஆனால் ஓட்டை வாயனாக உளறியதே கிடையாது.

ஆலமரத்தின் பெருந்தன்மை இது. தோட்டத்தில் தொழிற்சங்கத்திற்கு ஆள் சேர்க்க இரவோடு; இரவாக சிலர் வந்து ஆலமரத்தின் அடியில் நின்றார்கள். இரகசியமாக சந்திப்பு நடந்தது. “ஜில்லாவில் துண்டு எடுத்த விடயம் எப்படியோ நிர்வாகத்திற்கு எட்டிவிட்டது. “ஜில்லாவில் ” துண்டு எடுக்க முன் நின்று பேசிய ஒருவனே அதனையும் நிர்வாகத்திடம் கூறி நல்ல பெயர் வாங்கி விட்டான்.

இரண்டு மூன்று குடும்பங்கள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி; பற்றுச்சீட்டில் சிவப்பு மையில் எழுதி; இருபத்தி நாலுமணி நேரத்தில் சட்டி; முட்டி சாமன்களுடன் வெளியேற்றப்பட்டு ஆலமரத்துச் சந்திக்கு அனுப்பப்பட்டனர். தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவம் சேர்ப்போருக்கு இது ஒரு பாடமாக அமையட்டும் என்று நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை இது!

பிள்ளைக்குட்டிகளோடு பதுளை பக்கம் போன இவர்களின் கதி என்ன என்று ஆலமரம் அறியவே இல்லை. ம்… ஏன் இப்படி? தன்னை கடந்து செல்லும் சவ ஊர்வலத்திற்கு கூட; ஒரு வெள்ளைக்கொடியைப் போட்டு அனுதாபத்தை தெரிவிக்காத மரம் தானே இது!

வர்ண வர்ண பெனர்களை மட்டும் கட்டிக் கொண்டால் போதுமா? அரசியல் கட்சிகளோடு அப்படி என்ன உறவு வேண்டி இருக்கிறது.

சவ ஊர்வலம்; திருமண ஊர்வலம்; சீர்கொண்டு செல்லும் ஊர்வலம் என்பவற்றிற்கு சாட்சியாக இருந்தால் மட்டும் போதுமா? இவ்வளவு பெரிய உருவம் இருந்தும் என்ன பயன்?

ஐம்பத்தி எட்டில் தனக்கு முன்னே ரோடுகளுக்கு விளக்கம் கூறி நிற்கும்; சீமெந்துத் திண்டில் உள்ள தமிழ் எழுத்துகளுக்கு தார் பூசும் போது பார்த்துக் கொண்டு தானே இருந்தது. பெரிய மகா உருவம் ஆனாலும் தடுப்பதற்கு தைரியம் இல்லையே!

தியசேனபுர, ஹிங்கிராங்கொட, மெதிரிகிரிய பகுதிகளில் தாரில் முக்கி; எரிகாயம் உட்பட; காயப்படுத்தி; குற்று உயிரும் குலை உயிருமாக போராடிக் கொண்டிருப்பவர்களை மாத்தளை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போது, சாட்சியாக வழியில் ஒரு கைகாட்டி மரமாக, தலையாட்டி பொம்மையாக நின்றால் போதுமா?

எழுபத்தி நான்கில் தோட்டங்கள் திடீரென மூடப்பட்ட போது, பஞ்சத்தில் நடுரோட்டுக்கு வந்து, ஆலமரச்சந்தியில் முட்டி வைத்து சமைக்க, படுக்க மரம் இடம் கொடுத்தது பெரும் புண்ணியம் தான்! குஞ்சு குழுவான்கள் மீது கொண்ட வாஞ்சையோ…..!

எண்பத்தி மூன்றில் லயங்கள்; கடைகள், ஆலயங்கள், வீடுகள் என்பனவெல்லாம் எரியூட்டப்பட்டு மக்கள் வெட்டி, அடித்து விரட்டப்பட்டு காடுகளில் தஞ்சம் புகுந்த போது யார்? யார்? அடித்தான். யார் யார்? எரித்தான் என்பதற்கு சரியான சாட்சி இந்த ஆலமரம் மட்டும் தான்!

தேரையும், கோயிலையும் எரித்தவன், பெற்றோல் கொடுத்தவன், கூடி நின்று களித்தவன், தண்ணீர் ஊற்றி அணைத்தவன், பரிகசித்தவன், பரிதவித்தவன் அனைத்திற்குமே நீதிமன்றம் ஏறி சாட்சி கூறாத ஒரே கண்கண்ட சாட்சி இந்த ஆலமரம் தான்.

“இனி இந்த தோட்டத்திற்கு திரும்பி வருவதே இல்லை” என்ற சுயமரியாதையுடன்; தன் மானத்துடன் வடக்கிற்கு போய் அங்கும் வாழமுடியாமல் தாயகத்திற்குச் சென்று முகாம்களில் நோயில் இறந்தவர்கள், வடக்கில் குடி புகுந்த இடங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள், வீராப்புடன் போய்; “ஈரபலாக்கா, பொலஸ்கா ” போல் ஆகுமா? என்று நப்பாசையுடன் வந்தவர்கள் யார் யார் எப்படியானவர்கள் என்ற புள்ளி விபரமும் ஆலமரத்திற்கு அத்துப்படி

திரும்பி வந்து ஆலமரத்தடியில் குந்தி, பல்லவராயன் கட்டையும், கைதடி முகாமைப் பற்றியும் குறை கூறியவர்களுக்கும் நிழல் கொடுத்து நின்று, ஓட்டுக் கேட்டு, மனம் நொந்து தமிழ்ச்சாதியின்’ பெருமையைப்பற்றி எப்படி, என்ன… யூகித்திருக்கும்?

எண்பது வயதிலும் “இந்தியா கடுதாசி வருமா? அங்கு போய்விட்டால் போதும் என்று வராத தபாலை தினமும் எதிர்பார்த்து ஆலமரத்துச் சந்தில் குந்தி இருந்து “நாளை வரும்” என்ற நம்பிக்கையோடு கிழிந்த வேட்டியின் பக்கத்தை மூடிக்கொண்டு மேட்டுலயத்திற்கு திரும்பும் பழனி தாத்தா; “எங்க அப்பா என்னய சின்ன பிள்ளையா இந்த தோட்டத்திற்கு அழைத்து வந்த போதே இந்த ஆலமரம் இப்படித்தான் இருந்திச்சி” என்று தனது பெருமையைக் கூறும் கிழவன்; இந்தியா ஆசை நிறைவேறாமலே எண்பத்தி மூன்றில் நடக்கமுடியாத நிலையில், உறவுகள் காட்டிற்கு ஓடிவிட; பாயோடு எரிக்கப்பட்ட போதும் கிழவனின் நட்புக்காக ம்….. ஒரு ஒப்பாரி சொல்லி ஒரு பாட்டம் அழுதிருக்குமா இந்த மரம்? ம்…. கிடையாது.

தலைமுறை தலைமுறைக்கு காட்சியாக நின்றால் மட்டும் போதுமா? அந்த புகழ் வேண்டியது தானா?

தோட்டத்து கிழவன் ஒருவனின் பேரனும் இன்னும் சில இளைஞர்களும் இரகசியமாக நடு இரவில் கூடி அதிகாலை வரை கிசுகிசுத்துக் கொண்டார்கள். சிவப்புச் சட்டை, கரிய மீசையுடன் வந்து போன அந்த சிங்கள இளைஞனுடன் சென்ற கிழவனின் பேரன் திரும்பி தோட்டத்திற்கே வரவில்லை. “கீழைக்காற்று” வீசியது. “இருண்ட விளக்குகள் இருளில் பேசின. ஆலமரத்திற்கு ஒட்டகக்காது. துடிதுடிப்புடன் அவர்கள் பேசிய கருத்துகள், புரட்சிகரமான எண்ணங்கள் எல்லாம் பழமை வாய்ந்த இந்த “இராஜபாட் ஆலமரத்திற்கு” தெரியுமா? புரியுமா? என்ன? புரியுதோ இல்லையோ அது தன் போக்கில் வளர்ந்து நிற்கின்றது. மாற்றங்கள் மட்டும் தான் மாறாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஒரு வித்து சிறிய விதை ஒரு பாரிய விருட்சமாக வளர்ந்து நிற்கின்றதே!

பிரம்ம வித்தையின் சூக்கும இரகசியம் இதுவா? காற்றின் அதிரடிச் சோதனையோ இல்லை. பறகைகள் சில ஆலமரக்கிளைகளில் அமர்ந்து பழங்களிலுள்ள புழுக்களை கொத்தி கொத்தி துளைத்து உண்டு மகிழ்கின்றன. அப்போது!

திடீரென சட… சடவென கிளைகளை நெட்டி முறித்து சடாரென்று சாய்ந்து நிலத்தில் வீழ்ந்தது ஆலமரம். இதனை யாரும் எதிர்பார்த்திருக்கவே இல்லை கிளைகள் பட்டுப் போயோ, இலைகள் கருகியோ, எதுவித பாதிப்போ, நோயோ இன்றி இருந்த ஆலமரம் சாய்ந்து வீழ்ந்து விட்டது.

அது அடியோடு சாய்ந்து விட்டது. அதன் ஆணிவேர் குடி கொண்டிருந்த இடத்தில் பெரும் பள்ளம். “இங்கிது பொறுப்பதற்கில்லை” இப்படி இனி வாழ்ந்து என்ன பயன் கொடுமைகளை கண்டு மனம் புழுங்கி; சாட்சியாக நின்றால் மட்டும் போதுமா? அநீதியை அழிக்க முடியாமல் சந்தியில் இனியும் சாட்சியாக நிற்பது அவமானம் அவமானம் என்று நினைத்தது போலும். சந்தி ஆலமரம் சாய்ந்து விட்டது.

விஷ்ணு காயாவை வழிபட்டு, புத்த காயாவிற்கு செல்லும் வழியில் காலம் காலமாக நிற்பது அட்சயவடம் என்ற ஆல விருட்சம். இந்த அட்சய வடத்தில் தான்; மோட்சம் செல்லாத பிதிர்கள் இருப்பிடமாக கொண்டுள்ளார்கள் என்பது ஒரு ஐதீகம். அங்கே பிதிர்கடன் செய்தால் அவர்கள் மோட்சம் செல்வார்களாம்….!

இலங்கையை தேயிலை தேசமாக்கிய பிதிர்களுக்கு சாட்சியான இந்த அட்சய வடம் மண்ணில் வீழ்ந்து விட்டது.

ஓடி வரும் காற்று உசுப்பி, அதிரடியாக தகர்க்கவில்லை அந்திமாலைப் பொழுதில் சந்தியில் காலங்காலமாக நின்ற ஆல விருட்சம் சாய்ந்து விட்டது.

பிரம்ம வித்தையின் சூக்ம இரகசியமாக நின்ற ஆலமரம் சாய்ந்து விட்டது.

அட்சய பாத்திரமாக, பரம்பரை பரம்பரையாக காலங்காலமாக கண்ணீரையே தீர்த்தமாகக் கொண்ட இலோட்சோபலட்ச மலையக மக்களுக்கு ஓர் அட்சய வடமாக நின்று, பிதிர் மோட்சம் கொடுக்காமல் இனியும் வெறும் பார்வையாளனாக குடை பிடித்த நிற்பதால்; பயன் ஏதும் இல்லை என்று சந்தியில் நின்ற ஆலமரம் நினைத்ததுவோ என்னவோ யார் அறிவார்! அது மண்ணில் சாய்ந்தே விட்டது. ஆலமரத்தின் மனசாட்சி அதன் தூரை, அரித்துத் தின்றிருக்க வேண்டும் அதன் வேர்கள் அதனுடன் உறவற்று வேறாகி விட்டனவோ?

என்னவோ? சாய்ந்து விட்டது. ஆலமரம் மண்ணில் சாய்ந்து விட்டது. அது என்ன, விஷ்ணுகாயா, புத்தகாயா வழியிலுள்ள அட்சய வடமா? இல்லையே சாதாரண; சந்தி ஆலமரம் தானே! மண்ணில் சாய்ந்து விட்டது. ஓர் ஆலமரத்தால் வேறு என்ன தான் செய்ய முடியும்?

– வீரகேசரி, அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *