அடைபட்ட கதவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,647 
 
 

பாஷோ அவனின் இரட்டை சக்கர வாகனத்தில் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். குமரன் நினைவகம் அருகில் அதை நிறுத்திவிட்டு வானத்தைப் பார்த்தான். வானம் நீல மயமாக நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

நட்சத்திரங்களை எண்ணுகிற பாட்டி செத்துப் போய் ரொம்ப வருடம் ஆகிவிட்டது அவனுக்கும் அப்படித்தான் எப்பவாவது நட்சத்திரங்களை எண்ண வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. ஆனால் அதெல்லாம் பல சமயங்களில் முடிந்ததில்லை

பெரும்பாலும் வீட்டிற்குள் தான் அடைந்திருக்க வேண்டும் ஊரில் இருக்கிற போதெல்லாம் ஊரடங்கு சட்டம் துப்பாக்கி சத்தம் இல்லாவிட்டால் பசி இதன் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும்.

இப்போது இங்கே வானம் பார்க்கவும் வானத்தில் நட்சத்திரங்களை பார்க்கவும் நிலவு அவ்வப்போது வந்து போவதை பார்க்கவும் அவனுக்கு ஏதுவாக இருக்கிறது .அதுதான் அவன் அவ்வப்போது இரட்டை சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நல்ல நடுராத்திரியில் வீதிகளில் உலா வருவான்.

அவன் முன்னால் நின்றிருந்த காவல்துறைக்காரன் தன்னுடைய வாகனத்தை கை காட்டி நிறுத்தினான்.

“என்ன இங்க?”

“நின்னு நட்சத்திரம் பாக்கறன்”

“நட்சத்திரம் என்ன ..சினிமா நட்சத்திரம்?”

“இல்ல மேல”

“தமிழ் நல்லா வருது போல இருக்கு”

“வருது”

“இங்கே வந்து எத்தனை வருஷம் ஆச்சு”

“மூணு வருஷம் ஆச்சு”

“என்ன வேலை செய்ற”

“எல்லாரும் பண்ற தான் பனியன் கம்பெனி ..ஒரு சின்ன கடை வைத்து இருக்கேன்”

“சரி சரி உன்னுடைய விஷா எல்லாம் முடிஞ்சிடுச்சா”

“அதான் இருக்கு டூரிஸ்ட் விசா”.

“ஆமா சரி வேற.. இந்த வண்டி”

“என்னோடது”

“உனக்கு எல்லாம் வண்டி தர்ராங்களா”

“தந்திருக்காங்க”

“ஆதார் கார்டு”

“வாங்கிட்டேன்”

“அட.. பேன்நம்பர் எல்லாம் வச்சிருக்கியா”

“பேன்நம்பர் இல்லாம எப்படி வியாபாரம் பண்ண முடியும் . காசு குடுத்தா எல்லாம் கெடைக்கும். அது ஆப்ரிக்க்காரனோ ஆஸ்திரேலியாக்காரனோ..”

“சரி வேற .என்ன இது யாருடைய படம் தெரியுமா”

“தெரியும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்காக உங்க ஊருல செத்துப்போனவர்”

“அங்க சுதந்திரப் போராட்டம் எல்லாம் இருக்கா”

“எங்க நைஜீரியாவில் இந்த மாதிரி போராட்டங்கள் வெடிக்கும்..துப்பாக்கி சூடு இருக்கும் .ராணுவ மறைந்திருக்கும்..எல்லாத்தியுமே ஒரு வன்முறை இருக்கும் எங்க வீட்டு பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்க முடியாது.உங்க ஊரு ரொம்ப நல்லா தான் இருக்கா”

“சேரி சேரி.சரி டிரைவிங் லைசென்ஸ் வச்சிருக்கியா”

“வச்சிருக்கேன்.”

“யார் பெயரில்”

“என் பெயர் தாங்க பாக்கணுமாம”

“அதப் பாத்தா என்ன.எல்லாம்..அப்புறம் இந்த இன்ஷூரன்ஸ் ரெடி பண்ணி இருக்கியா”

“பண்ணி இருக்கேன்”

“சரி நீ எதுக்கும் ஸ்டேஷன் வந்துட்டு போ.பக்கம் தானே வா போலாம்”

“எதுக்குங்க ஸ்டேஷன் என் வண்டி வண்டிக்கு லைசென்ஸ் இருக்குன்னு சொல்றேன் அப்புறம் எதுக்கு கேக்குறீங்க”

“இல்ல எதுக்கும் வந்துட்டு போங்க”

பர்சிலிருந்து 200 ரூபாய் எடுத்து அந்த காவல்துறை காரனிடம் தந்தான் பாஷோ

“சரி சரி சீக்கிரம் போ. திரியாதே.சந்தேக கேஸ் போட்டுருவாங்க”

வண்டியை முடுக்க ஆரம்பித்தான் பாஷோ.

அந்த காவல்துறைக்காரன் வாங்கி கொண்ட பணத்தை பார்த்தபடி பேண்ட் பாக்கெட்டில் சொருகினான்.

“சரி சரி சீக்கிரம் போ செக்கிங்க வந்தா சிரமம்.கண்டிப்பா பண்ணுவாங்க”

“அதுக்கு நீ கண்டுக்காத ..எல்லாம் கம்மி தான்”

பாஷோ வண்டியை முடுக்கிக் கொண்டே மெல்ல அண்ணா பெரியார் சிலைகளை கடந்து வந்தான். இன்னும் கொஞ்ச நேரம் இந்த நடுஇரவில் நட்சத்திரங்களும் வானமும் பார்த்தபடி வண்டி ஓட்டிச் செல்லலாம் என்று அவன் நினைத்திருந்தான்

நைஜீரியாவில் அவன் காதலி ரேனா இப்படித்தான் நடுஇரவில் வானமும் நட்சத்திரங்களும் பார்க்க ஆசைபடுவாள்.நமக்கு எல்லாம் அது வாழ்க்கையில் கெடைக்கலே நீ இந்தியாவில் இருக்க உனக்கு அதெல்லாம் வாச்சு இருக்கா என்று பலமுறை கேட்டு இருக்கிறாள்.

அங்க இது மாதிரி இல்ல ..நல்லா இருக்கும் என்று அவன் சொல்லியிருக்கிறான் அப்போ நான் இந்தியா வரணும் உங்களுடன் வானமும் நிலமும் நட்சத்திரங்களும் பார்க்கிற மாதிரி படுத்துக்கிடக்கணூம் …..ரோட்டில் படுத்து கிடக்க வேண்டும், ரோட்லே திரியணும்

“அங்க முடியும்”

“எப்ப வர்ற”

“நீ கல்யாணம் பண்ணிட்டு கூட்டிப்போக”

“ஓகே ஓகே நீ அதுவரை காத்திரு”

நாலைந்து தெருக்கள் என்று அலைந்து வானமும் வெறிச்சென்ற சாலைகளும் பார்த்தான் .அவன் குமரன் அடிபட்ட இடத்திற்கு வந்தபோது அங்கு முன்னால் இருந்த இரண்டு காவல்துறையினர் அவனை கை நீட்டி விரித்து நிற்கவைத்தனர்

நான் இப்போதுதான் ஒரு காவல்துறையினரைக் கடந்து வந்திருக்கிறோம் என்று சொன்னால் அவர்கள் நம்பப் போகிறார்களா என்ற சந்தேகம் வந்தது.

தன் காதலியை கூட்டிக்கொண்டு வந்து வானமும் நட்சத்திரங்களும் பார்க்க சுதந்திரமாக போக முடியும். படுத்துக் கிடந்து கொண்டு வானத்தை ரசிக்க முடியும் என்று சட்டெனத் தோன்றவில்லை. வருத்தம் மேலெழும்பியது

அவனுக்கு அவன் தன் பர்சில் இன்னும் பணம் மிச்சம் இருக்கிறதா என்று தேட வேண்டும் என்று நினைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *