அடிமை சவாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,207 
 
 

காசுபணம் இல்லாதவர்கள் வாழ்க்‍கையில், ஆண்-பெண் உறவில் இன்பம் என்பது எந்த அளவுக்‍கு அர்த்தப்பூர்வமாக இருக்‍கிறது என்கிற தாழ்வு மனப்பான்மை ஒவ்வொரு முறை உச்சநிலையை நெருங்குகிற போதும் அவனுக்‍குத் தோன்ற அப்படியே அடங்கிப் போகிறான். அவன் மனைவியின் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்ப்பது இது முதல் முறை இல்லை. எப்பொழுதாவது அரிதாகப் பூக்‍கும் சந்தோஷ நிகழ்வின்போது கூட மனம் ததும்ப சிரிக்‍க முடியாமல் அமைதியாக இருக்‍கச் செய்வது அவன் தினசரி சேகரித்து வைத்திருக்‍கும் அவமான எண்ணங்கள்தான்.

வாழ்நாள் முழுவதும் சாக்‍கடை நாற்றம் மாதிரியான அவமானங்கள்… எல்லாவற்றையும் கடந்து போயாக வேண்டும். வாழ்ந்தாக வேண்டும். அலுவலகத்தில நுழையும் போதே உயரதிகாரி கேட்பார், “ஏன்டா யாராவது காபி குடிச்சா டம்ளர எடுத்து வைக்‍க மாட்டியா, அதைவிட என்ன புடுங்குற வேலை உனக்‍கு, இங்க பாரு காபி கொட்டி வடவடன்னு ஒட்டிப்போய் இருக்‍கு, நல்ல எருமமாடு மாதிரி வளந்திருக்‍க, யாராவது சொன்னாத்தான் செய்வியா, ஒனக்‍கா செய்யத் தெரியாதா”

யார் மேல் உள்ள கோபத்தை வந்து இவ்வாறு காட்டுகிறார் என்பது புரியாது. வீட்டில் மனைவி மேல் உள்ள கோபமாக இருக்‍கலாம். சொன்ன பேச்சை கேட்காத பிள்ளைகள் மேல் உள்ள கோபமாக இருக்‍கலாம். அலுவலகத்துக்‍கு வரும் வழியில் குறுக்‍கே வந்து விழுந்த பள்ளிச் சிறுவன் மேல் உள்ள கோபமாக இருக்‍கலாம். எல்லா கோபங்களுக்‍கும் அனுமதிக்‍கப்பட்ட, எதிர்வினையற்ற ஒரே வடிகால் அவன்தான்.

அவன் கண்களில் எழ வேண்டிய கோபத்தையும், தன்மான உணர்ச்சியையும் தட்டிக்‍ கழிப்பது அவன் வாங்கும் சொற்ப சம்பளம் ஒரு காரணமாக இருக்‍கலாம். குறிப்பிட்ட சில வேலைகளை இப்படி ஏன் விளம்பரம் செய்யக்‍ கூடாது. “இங்கே சம்பளத்துக்‍கு அவமானப்படத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே வேலைக்‍கு வேண்டும்” என்று அவன் அடிக்‍கடி மனதிற்குள் சொல்லிக்‍ கொள்வதுண்டு. எப்பொழுதுமே கடைபிடிக்‍கப்படும் வியாபார உத்திகளில் இதுவும் ஒன்று. அவர்களுக்‍கு அடிமைகள் தேவை, சுற்றிவளைத்து இப்படித்தான் கேட்பார்கள் போல. கண்களில் கோபம் காட்டக்‍ கூடாது. பணிவு என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வேலைக்‍கு உணவு கிட்டும்.

கடந்த மாதம் ஏதோ ஒருநாளிலிருந்து தட்டச்சு செய்த காகிதத்தை தேடச் செய்வதை ஒருவித புது டார்ச்சராக கடைபிடிக்‍க ஆரம்பித்திருந்தார் அந்த பத்மநாபன். அவர் எதற்காக இப்படி குறிவைக்‍கிறார் என்று வெகு நாட்களாகவே அவனுக்‍குப் புரியவில்லை. சிலர் அதிகாரத்திமிறை காட்டுவதற்கு நிச்சயமாக ஆழமானதொரு காரணம் இருக்‍கும். பத்மநாபனின் கீழ்த்தரமான அந்த வஞ்சக எண்ணம், “ஏன் ஒரு கொலையை செய்துவிட்டு தூக்‍கில் தொங்கக்‍ கூடாது” என சந்தேகமின்றி யாரையும் சிந்திக்‍க வைக்‍கும்.

அவருடைய போக்‍கு “என் அதிகாரத்தின் எல்லையைப் பார்க்‍கிறாயா” என்று தண்டோரா போடும் தலையாரியைப் போல் வெளிப்படையாக இருக்‍கும். அவர் வெளிப்படையாக யாருக்‍கோ தன்னுடைய அதிகாரத் திமிறைக்‍ காட்ட நினைப்பது அனைவருக்‍கும் புரிந்தே இருந்தது. அனைவரும் ஏதோ ஒரு வித மாயைக்‍கு உட்பட்டு மனதிற்குள்ளாக திட்டியபடி தலைகுனிந்து வேலையை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவன் மட்டுமே விஷயம் புரியாமல் வெகுநாட்களாக அவமானத்தில் மருகிக்‍ கொண்டிருந்தான்.

“அந்தாளுக்‍கு என்னக்‍ கண்டாலே ஆக மாட்டேங்குதுய்யா” என பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பிக்‍ கொண்டிருந்தான். பத்மநாபன் திட்டித் தீர்க்‍கும் பொழுதெல்லாம், கண்களில் வெறுப்பைவிட வேறு ஏதோ ஒரு எதிர்பார்ப்பு வெளிப்படுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பார்வை எப்பொழுதும் மேற்குப் பக்‍கமாகத்தான் இருக்‍கும். அந்தப் பக்‍கமாக செல்லவே அவனுக்‍கு பயமாக இருக்‍கும். நேரத்துக்‍கு தேநீர் வரவில்லையென்றால் தேனீரில் சூடு குறைந்திருந்தால், தேநீரில் ஆடை விழுந்திருந்தால், இல்லாத கோப்பை தேடித் தருமாறு கோரி, என் ஒவ்வொரு முறையும் அவனை அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருப்பார். சில சமயங்களில் இரட்டை அர்த்தங்களில் வேறு வார்த்தைகள் வெளிப்படும்.

“எனக்‍கு ஆடையில்லாத தேநீர் வேண்டும்” என்று மேற்குப் பக்‍கமாகப் பார்த்தவாறு..

தனது சக ஊழியர் மேல் உள்ள கோபத்தை நேரடியாக வெளிப்படுத்த ​முடியவில்லையென்றால் அதற்கு பலி ஆடாக இருப்பதும் அவன்தான். என்னவிதமான மோசமான வார்த்தைகள் எல்லாம் உள்ளதோ, அவ்வளவையும் சத்தமாக திட்டித் தீர்த்த பிறகுதான் நிம்மதியடைவார். அவனும் தன் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு எதையும் புரிந்து கொள்ள முடியாத மரமண்டையாகவே காணப்படுவான். அவனைத் திட்டுவதன் மூலம் தன்னைத்தான் அந்த பத்மநாபன் திட்டகிறார் என்பது அந்த சக ஊழியருக்‍கும் தெரியும். பத்மநாபனை பதிலுக்‍குத் திட்டுவதற்கு பயன்படுபவனும் அவன்தான்.

தேனீர் ஏன் இவ்வளவு ஆறிப்போய் இருக்‍கிறது என்கிற சப்பை காரணத்தைக் கூறி பத்மநாபன் திட்டினால், பதிலுக்‍கு தேநீர் ஏன் இவ்வளவு சூடாக இருக்‍கிறது என சக ஊழியர் திட்டுவார். தனது பிறப்பே ஒரு பாவப்பட்ட பிறப்பு என்று அவன் எண்ணிக்‍கொள்வான். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் கோபத்தையும், பழிவாங்குதலையும் வெளிப்படுத்துவதற்குக்‍ கூட வலிமை இல்லாதவர்களை, வாயில்லா பூச்சிகளை பயன்படுத்திக்‍ கொள்கிறார்கள் என்பது கேவலமான, பச்சையான உண்மை. ஆனால் இவனைப் போன்ற தத்தியான வேலைக்‍காரர்கள் அதை ஏற்றுக்‍ கொள்ள தயாராய் இருக்‍கும்பொழுது யார் வந்துதான் காப்பாற்றப் போகிறார்கள். ஆனால் காக்‍கும் எண்ணத்துடனும் சிலர் இருக்‍கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம்.

அலுவலகத்தின் மேற்கு திசையில் அமர்ந்திருக்‍கும் திருமதி. சாந்திகணேஷ், பத்மநாபனுக்‍கும், சகஊழியருக்‍கும் இடையே தேநீர் குறித்த சண்டை நிகழ்ந்து கொண்டிருக்‍கும் பொழுது, அவனை அழைத்துக் கூறுவார்,

“தேநீர் மிக அருமையாக இருந்தது, உன்னைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அருமையாக டீ தயாரிக்‍க முடியாது” என வாயாரப் புகழ்வார். பத்மநாபன் தனக்‍கு பதில் கிடைத்துவிட்ட திருப்தியில் சமாதானமடைவார். அவருக்‍கு சண்டைக்‍ கோழிகளை அடக்‍குவதில் அலாதியான இன்பம் என்று நினைத்துக்‍ கொள்வதில் பெருமை.

அன்று உண்மையில் இல்லாத ஒரு கோப்பை தேடச் சொல்லி அவனை வதைத்துக்‍ கொண்டிருந்தார். அப்படியொரு கோப்பு இல்லையென்று மேற்கு பக்‍கமாக அமர்ந்திருக்‍கும் இருவருக்‍குத் தெரியும். தனக்‍கு இன்றைக்‍குரிய பதில் கிடைக்‍கவில்லை என்கிற ஆதங்கத்தில் அவன் மீது சூடான வார்த்தைகளை அள்ளித் தெளித்துக்‍ கொண்டிருந்தார். பத்மநாபன், மேஜையின் மேல், மேஜையின் அடியில், சக ஊழியரின் ​மேஜையில் என அனைத்து இண்டு-இடுக்‍குகளிலும் அவனை தேடவைத்து கொடுமைபடுத்திக்‍ கொண்டிருந்தார். 40 நிமிடங்களாக பத்மநாபன் செய்யும் அட்டகாசங்களைப் பொறுக்‍க முடியாத திருமதி.மீனாகுமார், அந்த ஃபைல் எம்.டி. அறைக்‍கு 2 நாட்களுக்‍கு முன்னதாகவே சென்றுவிட்டதாக ஒரு பொய்யைக் கூறி அவனைக் காப்பாற்றினார். பத்மநாபனும் பதில் கிடைத்துவிட்ட சந்தேஷத்தில் அமைதியடைந்தார். அவனோ இன்று காலை யார் முகத்தில் விழித்தோம் என்று ​யோசித்துக்‍ கொண்டே நகர்ந்து சென்றான்.

ஒரு வயதான சக ஊழியர் கூறினார். எதிர்க்‍கத் துணிவில்லாதவனுக்‍கு வாழ்க்‍கை நரகம்தான் என்று.

அவன் தன்னுடைய தகுதி இவ்வளவுதான் என்று முடிவெடுத்துக்‍ கொண்டான். பிறப்பினாலேயே ஒருவனுடைய தகுதி நிர்ணயிக்‍கப்படுகிறது என்று அவன் முழுமையாக நம்பினான். தான் பிறந்த நேரத்தில் ஏதோ தவறு இருக்‍கிறது என முழுமையாக நம்பினான். முற்பிறவியில் ஏதேனும் தவறு செய்திருந்தால் தன்னை மன்னித்துவிடுமாறு ஆயிரம் முறை கடவுளிடம் வேண்டியிருப்பான். எந்தப் பலனும் இதுவரை ஏற்படவில்லை. வாழ்க்‍கை ஒரு புரியாத்தனத்தோடு நகர்ந்து கொண்டே இருந்தது.

ஏதோ அலுவலக வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. வாங்குகிற சம்பளத்துக்‍கு வேலை செய்கிறான் என்று திருப்தியாவது பட்டுக்‍ கொள்ளலாம். ஆனால் உயரதிகாரி வீட்டிற்கு காய்கறி வாங்கித் தருவதில் இருந்து, குழந்தைகளை பள்ளிக்‍கூடம் அழைத்துச் செல்வது, கரண்ட் பில் கட்டுவது, வண்டிக்‍கு பஞ்சர் போடுவது, தேய்த்த துணிகளை வாங்கி வருவது, மதிய லஞ்ச் சூடாக இருக்‍க ​வேண்டும் என்பதற்காக வீட்டிற்கே சென்று வாங்கிவரச் சொல்வது, சானிட்டரி நாப்கின் வாங்கித் தருவது வரை அவனது புடனியில் ஏறி அமர்ந்து குதிரை ஓட்ட அலுவலகத்தில் ஒரு ஏழெட்டு பேர் உள்ளனர். இவர்க​ளுடைய வேலைகளைச் சொல்வதில் அவர்களுக்‍குள் அவ்வப்போது போட்டிகளும், சண்டைகளும் வேறு ஏற்படுவதுண்டு.

“நேற்றுதான் பெரியசாமி வீட்டிற்குச் சென்று வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொடுத்தாய் அல்லவா? என் வீட்டு பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக்‍ கொண்டு தேங்கி நிற்கிறது என்று 2 நாட்களாக சொல்லிக்‍ கொண்டிருக்‍கிறேன். காதுலேயே போட்டுக்‍கொள்ள மாட்டேங்ற” என அந்த பெரியாசமி காதுகளில் விழுகின்ற மாதிரி சத்தம் போட்டுக் ​கூறுவார் பத்மநாபன்.

பத்மநாபனின் வாயில் விழக்‍கூடாது என்பதற்காகவே அவனும் வெட்கமில்லாமல் சென்று அடைப்பை சரி செய்துவிட்டு வருவான். மதிய இடைவேளையில் அவன் ஒவ்வொரு வீடாக சென்று உணவை டிபன் பாக்‍ஸ்களில் அடைத்துக்‍ கொண்டு எடுத்து வந்த பின்னர். 5 நிமிடம் அதிகமானதிற்கு ஒரு சத்தம். உணவு ஆறியிருப்பதற்கு ஒரு சத்தம் என தனித்தனியாக 4 பேரிடம் பேச்சு வாங்குவான். உணவு ஆறியிருந்தாலோ, சுவை குன்றியிருந்தாலோ அதற்குக் காரணமான மனைவியைத் திட்ட மாட்டார்கள். அதை ​எடுத்து வர காரணமாக இருந்த அவனைப்பிடித்து தலைமுதல் கால்வரை தனித்தனியாக வர்ணித்து வசை மழை பொழிவார்கள். உணவை எடுத்து வருவதாலேயே சுவை குன்றிப் போகும் அதிசயம் எல்லாம் அவன் முன்னிலையில் நடைபெறுவது மிகச் சாதாரணம்.

அன்று அவன் மனைவி உணவு பறிமாறிக்‍ கொண்டிருந்த போது உணவில் ஏதோ ஒரு பூச்சி தென்பட அதைப் பார்த்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான். பின் மெலிதாக சிரித்தவாறு அதை எடுத்து வெளியே வைத்துவிட்டு, அந்த உணவை உண்ண ஆரம்பித்தான். எதார்த்தமாக அதை கவனித்துவிட்ட அவன் மனைவி அவனை கடிந்து கொண்டாள். தட்டை வெடுக்‍கென்று பிடுங்கி சாப்பாட்டை வெளியே எடுத்துச்சென்று கொட்டிவிட்டு புதிதாக சமைத்து உணவிட்டாள்.

“சாப்பாட்டுல ஏதாவது கெடந்தா வாயத் தெறந்து சொல்ல மாட்டீங்களா, அப்பிடி என்ன சோகம் நடந்திருச்சுன்னு இப்புடி விரக்‍தியா நடந்துக்‍கிறீங்க. இப்ப நமக்‍கு புள்ள இல்லன்னா என்னா, நமக்‍கென்ன வயசாயிடுச்சா என்ன, கண்டிப்பா கடவுள் கண்ண தெறப்பாரு. முப்பாத்தம்மனுக்‍கு முடிஞ்சு வச்சிருக்‍கேன். எல்லாம் நல்லபடியா நடக்‍கும் கவலப்படாதிங்க.”

ஆனால் அவளுக்‍குத் தெரியவில்லை அவன் ஒரு வழியாகிப் போனான் என்பது. அவனால் ஆயிரம் வசவுகளை எதிர்ப்பேச்சில்லாமல் வாங்கிக்‍ கொள்ள முடியும். ஒரு எதிர்ச்செயல் கூட அவனால் செய்ய முடியாது. அவன் என்றோ அடிமையாகிப் போனான்.

ஒரு மனைவி கணவனிடம் எதிர்பார்க்‍கும் சின்னஞ்சிறு கோபங்களையும், கடிந்து கொள்ளுதலையும், முக்‍கியமாக மனைவியை அணைக்‍கும்போது மெலிதாக வெளிப்படும் ஆண்மைத்தன்மை நிரம்பிய முரட்டுத்தனமும் அவனிடம் மொத்தமாக செத்துப் போய்விட்டன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவன் மனதளவில் காயடிக்‍கப்பட்ட ஒரு விலங்காக மாறிப்போனான்.

அடுத்தவர் தன்மானமும் காக்‍கப்பட வேண்டும் என்கிற நாகரிகமடைந்த மனிதனின் மிகச்சிறந்த மனிதப் பண்பு இல்லாமல் போனதைப் பார்க்‍கும்பொழுது, மனிதர்கள் இன்னும் நாகரிகமடைய வெகுதூரம் பயணம் செய்ய வெண்டும் என்பதையே எடுத்துக்‍ காட்டுகிறது.

அந்த அலுவலகத்தின் வயதான பெரியவர் அன்று உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலில் அவதிப்பட்டுக்‍ கொண்டிருந்த பொழுது, ஏதேனும் மருந்து வாங்கி வரவா என அவன் உண்மையான அக்‍கறையுடன் கேட்டான்.

அவர் கூறினார்.

“நான் உன்கிட்ட மருந்து வாங்கி வரச் சொல்லி அதிகாரமாக கேட்கும்போது, நீ அலட்சியமா, ‘என்னால முடியாது’ன்னு மறுத்தால், நான் உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்‍குவேன், மருந்து வாங்கிவரச் சொல்லி”

அவனுக்‍கு இந்த வார்த்தைகள் புரிந்ததாகத் தெரியவில்லை.

“நான் எதுக்‍குங்க மறுக்‍க போறேன்” என்று அவன் கூறினான்.

நல்லவர்கள் ஒருசிலர் இந்த பூமியில் இருப்பதால்தான் இங்கு வறட்சி காலங்களில் அவ்வப்பொழுது மழை பொழிகிறது என்கிற கூற்று ஒருவேளை உண்மையாக இருக்‍கும் பட்சத்தில், அன்று பெய்த மழைக்‍கு அந்த பெரியவர் ஒருவேளை காரணமாக இருந்திருக்‍கலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *