மழை நன்றாகவே பொழிகிறது. பூமி நன்றாகவே விளைகிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் வாடுகின்றனர். இந்த உலகில் வாழ உணவு மிக முக்கியம். அதை இயற்க்கை தர மறுக்கவில்லை. வேறு எதுவோ தடுக்கிறது.
மார்க்கம்பட்டி ஒரு தீவு போன்ற மலைகளால் சூழ்ந்த பகுதி. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கிருந்து நகரத்துக்கு செல்ல கொடிய மிருகங்கள் வாழும் வனத்தையும்,என்றும் வற்றாமல் ஓடும் நதியையும் கடக்க வேண்டும். அங்கிருக்கும் ஒரு குடும்பத்தைத்தவிர யாரும் படிக்கவில்லை. அரசாங்கமும்,முதலாளியும்,
கடவுளும், அரண்மனை போன்ற வீட்டில் வசிக்கும் சிம்மாசி குடும்பம் மட்டும் தான்.
சிம்மாசி தனது சிலையை வைத்து ஒரு கோவில் கட்டியுள்ளான். வெளியில் சென்றுவர ஒரு ஹெலிகாப்டர் வைத்துள்ளான். அரசாங்கம் எவ்வளவோ முயன்றும் பள்ளிக்கூடமோ,மருத்துவமனையோ கட்ட முடியவில்லை. அந்த பகுதி மக்களை வைத்தே அதை எதிர்த்து,அங்கு எந்த அதிகாரிகளும் வர பயப்படும் படி செய்து விடுவான். பல மக்கள் நல அமைப்புகளும் போராடி வெல்ல முடியவில்லை.
அங்கே வாசனை பூக்கள் மட்டுமே விளைவிக்க அனுமதிப்பான். தப்பித்தவறி கூட உணவுப்பொருட்களை விளைவிக்க அனுமதிக்க மாட்டான். ஆங்கிலேயர் காலம் முதல் வாசனை திரவியம் தயாரிக்கும் வெளிநாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது அவனது குடும்பம். அந்தக்கம்பெனி இலவசமாக வழங்கியது தான் ஹெலிகாப்டர். அங்கிருக்கும் மக்களுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப்பொருட்களை தருவித்து குறைவாகவே வழங்குவான்.
அவனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறோம் என்பதையே மக்கள் அறியாமல் இருந்தனர்.
தனது ஒரே மகளை வெளிநாட்டில் படிக்க வைத்தான். படிப்பு முடிந்து வந்த மகளுக்கு வித, விதமான பழங்கள்,உணவுப்பொருட்கள் வந்திறங்கின. அவன் வீட்டிலிருந்து தூக்கிக்கொட்டும் குப்பைகளிலிருந்து வெளியே வரும் வாசனை,அங்கிருந்தவர்களை யோசிக்க வைத்தது. இருந்தாலும் கடவுளெனும் முதலாளியை எதிர்த்து பேசினால் கொன்று விடுவார் என்ற பயத்தால் அமைதியாயினர்.
ஒரு நாள் தந்தைக்கு தெரியாமல் ஊரைச்சுற்றிப்பார்க்க சென்ற சிம்மாசி மகள் கன்யாசிக்கு மக்களின் ஒட்டிய வயிறு,அழுக்கு ஆடைகள்,கூரைவீடு,வெகுளித்தனம் இவற்றைப்பார்த்து கவலை வந்தது. ‘எல்லோரும் மனிதர்கள் தானே? இவர்களை அடிமைகளாக்கியா நாம் அரண்மனையில் வாழ்கின்றோம்?’ சிந்தித்தாள்.
அவளது செயல்பாடுகளைக்கண்ட சிம்மாசி அவளை வெளிநாட்டுக்கே சென்று விடும்படி கூற,சரியென்றதோடு தந்தை,தாயையும் உடனழைத்து சென்றாள்.
தன்னுடன் படித்த நீலாவை இங்கேயே நிர்வாகத்தை கவனிக்க விட்டுச்சென்றாள். ஐந்து வருடங்களை தந்தையை மார்க்கம்பட்டிக்கு வர அனுமதிக்காத கன்யாசி,இன்று வந்து பக்கத்து நகரத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்யச்சொன்ன போது சிம்மாசிக்கு தூக்கி வாரிப்போட்டது.
“என்னம்மா இதெல்லாம் புதுசா இருக்கு? பஸ்ல எப்படி மார்க்கம்பட்டிக்கு போக முடியும்?” என கேட்டு ஏறியவருக்கு பேருந்தில் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
அவரிடம் வேலை செய்த பலர் பேருந்திலிருந்தனர்.
“ஐயா நீங்க உண்மீலயே கடவுள் தானுங்க. மாக்கம்பட்டிதான் ஒலகம்னிருந்த நெம்மளுக்கு வெளில பெருசா ஒலகம் இருக்குங்கிறத ரோட்டப்போட்டு பஸ்ஸ உட்டு காட்டிட்டீங்க. அது மட்டுங்களா? பூ மட்டுலுமே வெளைஞ்ச நெலத்த நெல்லும்,கொள்ளும் வெளையற நெலமா மாத்திப்போட்டீங்க. மாமரம்,பலா மரம்,தென்னமரம்,பாக்கு மரம்,கொய்யா மரம் ன்னு பசிய போக்கற பழங்கொடுக்கிற மரமாகற நாத்துகள நட்டு வச்சுப்போட்டீங்க. பள்ளிக்கொடம்,வைத்தியம் பாக்கற எடம்னு மாத்திப்போட்டீங்க. நீங்கதான் இதெல்லாம் வெளிதேசத்துலருந்து பண்ணச்சொன்னீங்கன்னு நீலாப்பொண்ணு சொல்லுச்சுங்க. உங்க பக்கத்ல உக்காந்துட்டு வரோனும்ன நம்ம அம்முணி சொல்லுச்சுன்னும் நீலாப்பொண்ணு சொல்லுச்சுங்க” என தன்னிடம் அடிமைப்பட்டுக்கிடந்த பெரியவர் சொல்லச்சொல்ல,கோபம் தலைக்கேறி கண்கள் சிவந்தவராய் மகளை ஏறிட்டார் சிம்மாசி.
“இதிலென்ன தப்பிருக்கு? மேகம் மழையக்கொடுக்குது. பூமி விளைஞ்சு உணவைக்கொடுக்குது. அது உங்களுக்கும் எனக்கும் மட்டுமில்ல,ஊருக்கேதான். பறவைகள்,பாம்பு,பல்லி,ஆடு,மாடு எல்லாத்துக்கும் தான். கடவுளோ,இயற்க்கையோ உயிர் வாழத்தேவையான எல்லாத்தையும் படைச்சிட்டுத்தான் உயிர்களுக்கு உடம்பு கொடுத்திருக்கு. அதைத்தடுக்க நமக்கு உரிமையில்லை. அவங்க முகத்த பாருங்க.எவ்வளவு சந்தோசம்னு.எந்த நாட்டுலயோ வாழற சில பேரு வாசனைபிடிக்க, நம்ம மக்கள் வயித்துல அடிக்கனமா?விலையுயர்ந்த காரும், ஹெலிகாப்டரும்,நவரத்தினங்களும் வாங்க,பளிங்கு கல்லுல நாம மட்டும் வீடுகட்டிக்க இவங்க வாழ்க்கைய இழக்கனமா?நான் தான் நீலாவை வச்சு உங்களால உருவாக்கப்பட்ட நரகத்த,நகரமா மாத்தினேன்” என்று மகள் சொன்னபோது பேருந்து மார்க்கம்பட்டியில் நின்றது. இறங்கியவருக்கு அனைத்தும் புதிதாகத்தெரிந்தது.
“ஆயிரம் பேர் உயிர் வாழ ஒரு மனுசன் உயிரைக்கூட தேவைன்னா விடலாம். ஆயிரம் பேர் வாழ்வதைக்கெடுத்து ஒரு மனுசனோட குடும்பம் மட்டுமே உயிர் வாழக்கூடாது” என்ற மகள் கன்யாசியின் வார்த்தைகள் சிம்மாசியின் ஆசையையும்,ஆணவத்தையும் சுக்குநூறாக்கியது.