இங்கே எவருக்காகிலும் ‘பகத் ‘தோ- குச்சுமாதிரியான நீண்ட ரொட்டி- ‘ஷொக்கோலத்தீனோ ‘ -சாக்லேட் கொண்ட சிறிய ரொட்டி – வேண்டுமெனில் அங்கேதான் போகணும் அதாவது லுக்லோன்* திசைநோக்கி. சுற்றிலும் வீட்டுத் தோட்டத்தைப் பராமரிக்கச் செல்லும் பெண் அணிகிற தொப்பியின் தோற்றத்துடன், ஏதோ மேலும் மேலும் ஒட்டிக்கொள்ள முயலுகின்றதோ என நம்பும்படியான பாஸ்(1) ரக வீடுகள்.
எப்போதாகிலும் சாலை ஓரத்தில் அந்தப்பகுதிக்குச் சம்பந்தமிலாத ஒன்றிரண்டு கார்கள் நிற்கக்கூடும். அவை மிமிஸான்** போகிற கார்களாக இருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் அப்பகுதியில் பிரசித்தமான இயற்கை பூங்காவைப் பார்ப்பதற்கென்று வந்தவர்களாக இருக்கலாம், ஏனெனில் பேரூரில் இருக்கிற துக்கடா இரயில்வே ஸ்டேஷனை விட்டால் அவர்களுக்கு வேறு கதியில்லை. கடைக்குள் நுழைந்ததும் ஆண்கள் செய்கிற காரியம், தங்கள் குளிர் கண்ணாடியைக் கழட்டிக்கொள்வது. ‘கடைக்குள்ளே வெளிச்சம் போதாதா ‘ என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால் அதனைவிட ‘ அவள் ‘ அழகாய் இருப்பதே முக்கிய காரணம்.
அடர்த்தியான அளகாபாரம், முகத்தில் ஒரு பகுதியை கபளீகரம் செய்திருக்கும் பெரிய கண்கள், மெல்லிய ஆனால் செழுமையான அதரங்கள்:அழகென்றால் ஏதோ ஏனோதானோ அல்ல, கொள்ளை அழகு. அவர்களது வியப்பின் அர்த்தமென்ன என்பதைச் சுலபமாக விளங்கிக்கொள்வாள். கதவினைத் தள்ளிக்கொண்டு நுழைந்தார்களோ இல்லையோ அவர்கள் மனதிலெழும்: ‘இப்படியான தேவதைக்கு இங்கென்ன வேலை ? ‘ என்கிற கேள்வி இவளுக்கும் புரியாமலில்லை ஆனால் இன்றுவரை அதனை சமாளிக்க இயலாமல் மீதிச் சில்லறையை அவர்களிடம் திருப்பித் தருகின்றபோதெல்லாம் அவளது கால்களில் ஒருவித நடுக்கம் இருப்பதும் உண்மை. வாடிக்கையாளர்களை நேரிட்டுப்ப்பார்ப்பதில்லை. தவிர அவர்களின் வாகனங்களையும், அவை கடற்கரை திசைக்காய் விரைவதையும் அல்லது அவர்கள் தங்கியுள்ள நீச்சல்குளங்கள்கொண்ட ஹோட்டல்களுக்குத் திரும்புவதையும் அவள் தவிர்க்க நினைக்கிறாள்.
ஒருமுறை கொஞ்சம் துணிச்சலான இளைஞன்- சந்தேகமில்லாமல் நிச்சயமா பாரீஸ் நகரத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்கவேண்டும்- அன்றைக்குக் கடைக்கு வந்தவன் சட்டென அவளது கைகளைப் பற்றினான்: ‘நாமிருவரும் இதற்கு முன்னால ஏதோவொரு இடத்திலே சந்திச்சிருக்கணுமே ‘, என்கிறான். ‘ ‘இருக்கமுடியாது ‘, என்பதாக அவளது தோளினை மெல்ல உயர்த்தியவள், அவனை விலக்கினாள். ‘இந்த ரொட்டிக் கடையைவிட்டா அவளுக்கு நாதி ஏது ? வேறெங்கே போவாள் ?. அவளையாவது வேறு இடங்களில் பார்த்திருப்பதாவது ? ‘.
தூரத்தில் வீடுகள்: அப்பகுதிமக்களிடையே பழக்கத்திலிருக்கிற உறவுகளின் இடைவெளியைக் குறைக்க நினைத்ததுபோல தனிமையிற் செயல்படுகின்றன. வேலிகள், ஒழுங்குபடுத்திய தோட்டங்கள், மறுபடியும் பெயிண்ட் அடிக்கப்பட்ட வெளிக்கதவுகள் உதவியால், மனிதவாழ்க்கையின் செயல்பாட்டை அவற்றுள் சில சொல்ல முயலுகின்றன. பெரியதொரு நிலப்பரப்பு, இடைக்கிடை ழெனே செடிகள் முளைத்திருக்க – வாள்பட்டறையில் அறுபடவென்று காத்திருக்கும்- பைன்மரங்களின் அணிவகுப்பு, பாலைவெளியில் மூழ்குவதற்கு முன்னால், இழுத்து மூச்சுவிடுவதன் அவசியங்கருதி நமக்காக வளர்ந்திருப்பதைப்போல. சிலசமயங்களில் கிடைத்த இடைவெளியின் தயவில் பண்ணைவரை உலர்ந்து நீண்டிருக்கும் மண்பாதையையும், அதில் நாய்களையும் காணமுடிகிறது..
‘அசப்பிலே நீயொரு நடிகைதான் ‘. என்பது அவளது தந்தையின் பிரமிப்பு வார்த்தைகள். அவளுக்கு பதின்மூன்று பதினான்கு வயதிருக்கலாம். பின்னேரம் முடிவுக்கு வந்திருந்தது. மாடியில், அவர் அப்போதுதான் தூங்கி எழுந்து, தம்மகளின் வீட்டுப்பாடங்கள் செய்துக்கொண்டிருக்கிற மேசையில் காப்பிகுடித்துக்கொண்டிருக்கிறார். நிசப்தம் குடிகொண்டிருக்க, சற்றே வேலையை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் நேரம் -கூரைக்குமேலே சூரியன் ஆரஞ்சுவண்ணத்தில் தன்னைமாற்றிக்கொண்டு கடைசியாய் ஒருமுறை இவர்களுக்காக காத்திருக்கும் நேரம். ரொட்டிக்கடையின் சூட்டடுப்பைப் பற்றியோ, ஞாயிற்றுக்கிழமைக்கான தமது ரொட்டிக்கடையின் பிரத்தியேக தயாரிப்புகளைப் பற்றியோ, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டவைகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் பற்றிய கவலைகளோ அவருக்கு இல்லாத நேரம். தமது மகள்மீது கவனம் மீண்டும் திரும்புகிறது. அருவியாய் சரிந்திருக்கும் கூந்தலும், பெரிய கண்களும், இவரைப்போலவே ஷெரீஸ்பழ வண்ணத்திலிருக்கிற அவளது அதரங்களையும் வரிசைப்படுத்திப் பார்த்தார். ‘அசப்பில் ஒரு நடிகைதான் ‘ வாய்விட்டுச் சொன்னார். வாக்கியம் இருவருக்கும் இடையில் அந்தரத்தில் நிற்கிறது-அப்படியே பரவுகிறது- அமைதியைக் கிழித்துக்கொண்டு சட்டென இவளை வந்தடைகிறது. இவள் தலை நிமிர்ந்தாள். தந்தையின் மகோன்னத வாக்கியம் – இவளைப் பிடித்து உலுக்கியது வாஸ்த்துவம்.
அதற்குபிறகு – அப்பாவை நினைக்கும்போதெல்லாம் சட்டென்று அவரது வியப்புக்குரல் காதில்விழுகிறது- இரவில், ரொட்டி சுடும் அடுப்பினருகே – கூடவே அன்றைக்கு மாடியில் காப்பிக் குவளைக்குபின்னால் அமர்ந்திருந்தக் காட்சியும். அவரைக்காணும்போது-தூக்கங் கலையாத அவர் முகத்தில், அதியசமான கலவைகளாலான ஒருவிதபயம் படிந்திருப்பதையும் வாசிக்க முடிகிறது.
பிறகொருநாள், வீட்டுப்பரணில் அம்மா விட்டுபோன சினிமா இதழ்களைக் கண்டாள். பழைய ‘சினிமா உலகம் ‘ பொத்தகத்தின் பிரதிகள் சில, ‘கருப்பு வெள்ளை ‘ பொத்தகங்களில் சில, ‘அந்தரங்கம் ‘ பத்திரிகை… அவற்றைப் புரட்ட சட்டென்று ஊரிலுள்ள மற்ற பெண்களிலும் தான் வேறுபட்டவள் என்பது புரிந்தது. ஒருவேளை இந்தப் பொத்தகங்களில் உள்ள நடிகைகள்: ‘லா ஃபாம் ஆ லொர்ஷிதே ‘ பட நாயகி ‘டில்டா தமர் ‘, ‘பிராங்க்கோ ‘வை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் ‘அந்த்தோனெல்லா ‘, ‘ஹாரி விடாலி ‘ன் அடுத்தப் படத்தில் ஜோடி சேரவிருக்கும் ‘பார்பரா லாழ் ‘ ஆக இவர்களில் ஒருத்தியாக இருக்கலாம்.
சினிமா இதழ்களைத் தனது அறைக்கு வாரிவந்தாள். கட்டிலுக்குக் கீழே அவை குவிந்து கிடக்கின்றன. இவைகளைக்காட்டிலும், அவளுக்கு பெட்ரோல் பங்க்கில் கிடைக்கிற ‘பிரமியர் ‘, ஸ்டுடியோ ‘.. மாதிரியான இதழ்கள் தேவலாம் என்கிற எண்ணம். அவை கொட்டை எழுத்துக்களில், சுவாரஸ்யமான செய்திகளைத் தாங்கிவரும்: ‘ ‘தப்பான மனைவி ‘ படத்தில், நிர்வாணமாக கட்டழகி ‘கிட்டி ‘. படத்தில் அவர் வருகின்ற காட்சிகளில் ஏகக் கிளுகிளுப்பு… ‘ என்பது மாதிரியான செய்திகள்.
சினிமாவுக்குப் போவதென்பதும் அவளுக்கு மிக அரிதாகத்தான் நேர்ந்தது. ஊரிலிருந்த ஒரே சினிமா கொட்டகையும் நகராட்சித்திடல், பள்ளி, நகராட்சிக்கூடம் இவைகளுக்கிடையே சிக்குண்டு கிடந்தது. தவிர அங்கிச் சுற்றித் திரியும் தென் அமெரிக்காவினை நினைவுபடுத்துகிற சொறிநாய்களின் கூட்டத்தைக் கடந்தாக வேண்டும். பெரும்பாலான சமயங்களில் படத்திற்கான சுவரொட்டிகள் உரிய நேரத்தில் வராமற்போக திரைபடங்களின் தலைப்புகள் பச்சைவண்ண மார்க்கரால் எழுதபட்டிருக்கும். இப்படியான சிரமங்களுக்கிடையிலும் ஓரிருமுறை சினிமாவுக்குப் போனதுண்டு, எனினும் மிஞ்சியதென்னவோ ஏமாற்றமே. குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்த காட்சிகளையும், அதற்கான ஆடைகளில் வலம் வரும் மாந்தர்களையும் படத்தில் இவள் எதிர்பார்த்திருக்க, மாறாக பிரச்சினைகளைப் பேசுகிற படமாக அது இருக்கும். ஒருவர் தவறாமல் அழுதுவடிந்துகொண்டிருப்பார்கள். அவளைச் சுற்றிலும் உள்ள இருக்கைகள் ஆட்களின்றி வெறுமனே பார்ப்பதற்கு சிலுவையாய்க் கண்ணிற்படும். அவளுக்கு முன்னே, மூன்றுவரிசைகள் தள்ளி, வாலிபப்பையன்கள் கூட்டமொன்று அடிக்கடி இவளைப் பார்ப்பதும், சட்டென்று திரும்பிக்கொள்வதுமுண்டு.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, குளோது அவைளைப் பார்ப்பதற்கென்று வருகிறான். நகராட்சி கூடத்தில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டிருந்தது. ஆள் கொஞ்சம் வாட்டசாட்டமாயிருப்பான், கூடவே ருக்பீ ஆடிக்கொண்டிருந்தவன், லுக்லூனிலிருந்து வந்திருந்தான். மதுவொன்றின் விற்பனை பிரதிநிதி. ஆனால் அவன் குடிப்பதில்லை.
கூட்டமில்லாத நேரங்களில், பிறந்ததிலிருந்து இவள் பார்த்துக்கொண்டிருக்கிற எதிர்வீட்டிலிருந்து அலுத்துப்போய் அவளது கவனம் திரும்பி இருக்கிற நேரமாகப்பார்த்து கடைக்குள் நுழைகிறான். இவளை வியப்பில் ஆழ்த்தவென்றே அவனிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. இடைக்கிடை அவன் அடிக்கடி தொழில் நிமித்தமாகப் போய் வருகிற பொர்தோ(3) நகரைப் பற்றிய செய்திகள், தகவல்களையும் ஆர்வமாய்ச் சேர்த்துக்கொள்கிறான். சிலவேளைகளில் சொல்வதற்கேதும் இல்லாதவன்போல, கடை சன்னல் கண்ணாடிக்கு மறுபுறம் இவளோடுசேர்ந்துகொண்டு அவனும் பார்க்கிறான். அவன் இன்னும் திருமணம் முடிக்கவில்லை. காத்திருக்கிறான்.
அன்று திங்கட்கிழமை, ரம்மியமான காலம். சின்ன ரயிலைப் பிடித்து மர்க்கேஸ்வரை அவள் வரவேண்டியிருந்தது. அங்குள்ள ‘இயற்கை பூங்காவில் ‘ அந்தக்கால குடியிருப்பை – ஓகோவென்றிருந்த அந்தக்காலத்து ‘லாந்து ‘*** பிரதேச பண்ணையொன்றுடன் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். அவளுடலை கவுனொன்று அலங்கரித்திருந்தது கூடுதலாகக், கண்களில் குளிர் கண்ணாடி, கால்களில் மாடல் பெண்களின் உயரத்தை இவளிடம் கொண்டுவந்திருந்த குதி உயர்ந்த செருப்புகள்.
இரயிலைவிட்டு இறங்கியபின்னரும் இனிமையான அனுபவக் கலவையிலிருந்து அவளால் மீளமுடிவதில்லை: பரந்துகிடக்கும் புல்வெளிகள், அவற்றில் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள். மில்லெட், ரைட் போன்ற தானிய நிலங்கள். பண்ணை முதலாளியின் வீடு, குடியானவனுடைய வீடு, இடையனுடைய வீடு…இவ்விடத்திற்கு, என்றைக்காவது ஒரு நாளைக்கு இவைகளை நினைவுபடுத்திக்கொண்டு மீண்டும் வரத்தான் வேண்டும், அவளது மனம் சொல்கிறது. துணைக்கு கேமராவுடன் ஒருவன். இவ் வண்ணக்காட்சியை பதிவு செய்வதற்கான உரிய இடத்தினை அவன் தேடிமுடிக்கட்டுமென்று இவள் காத்திருப்பாள். ‘மத்மசல்- அப்படியே ஒரு போட்டோ எடுத்திடட்டுமா. தொந்தரவு ஏதுமில்லையே- – அங்கேதான்-அப்படித்தான் -மெர்சி ‘ என அவன் அவளைச் சுற்றி சுற்றி வருவான்.
அங்கே பாரீஸில்:மச்சி! தப்பு பண்ணிட்டியேடா. நீ வேண்டியவன் மாத்திரமல்ல. அதற்கும் மேலே. என்னடா சொல்ற அவள் இங்கேதான் இருக்கிறாளா. இப்படிக்கூட நடக்குமா என்ன ? சரி..சரி இப்பவும் ஒண்ணும் குடி முழுகிப்போகலை. நீ என்ன பண்றன்னா, வண்டியை எடுத்துக்கிற. அங்கே திரும்பப் போறே. அவளை மீண்டும் கண்டுபிடிக்கிறவரை ஒரு புதர் விடாம அலசற.
அவள் அக்கறையோடு கேட்பதைப் புரிந்துகொண்ட வழிகாட்டி, அவளுக்காக மேலும் மேலும் சின்ன சின்ன விஷயத்தைக்கூட தவிர்க்காமல் விவரித்துச் சொல்லிக்கொண்டு போகிறான். கிராந்து -லாந்து($)வைப்பற்றி சமீபத்தில்தான் அறிந்திருந்த வழிகாட்டிக்கு, இம்மாதிரியான விபரங்கள் அதன் வரலாற்றினை மெருகூட்ட உதவுமென்கிற நம்பிக்கை. தவிர இப்பகுதியில் இவளைப்போல இப்படி ஆர்வங்காட்டுகிற மனிதர்களையும் இதற்குமுன் அவன் கண்டதில்லை.
அவன் மனது அவளுக்கும் புரிந்திருந்தது. அவனது விவரிப்பைப் விளங்கிக்கொண்டதற்கு அடையாளமாகத் தலையாட்டியவள், உடன்வந்திருந்த பார்வையாளர்களில் எவரேனும் ஒருவர், என்றேனும் ஒருநாள் கொஞ்சநேரமாகிலும் அவளைத் தவிர்த்து மற்றவற்றில் கவனம் செலுத்துவார்களா என்கிற நினைப்பில் தேடுகிறாள்.
எப்போதாகிலும் சில நேரங்களில் அடர்ந்த மரங்களுக்கிடையில் காணநேரும் ஒரு திறந்தவெளி-இரண்டு ஹெக்டாரோ அல்லது அதற்கும் கூடுதல் பரப்புகொண்டதாக -உழவு எந்திரங்களைக் கண்டறியாத-அப்பிரதேசத்தின் கையிருப்பு என்கிற ஒரே தகுதிகொண்ட நிலப்பகுதி. மறக்கப்பட்ட கழுவெளி, மனித வாழ்க்கை அலட்சியம் காட்டும் பூமி. இருபுறமும் நீர்நிலைகள் வெள்ளிப்பாளங்களாகக் கிடக்க, நடைபழகச் சாத்தியமுண்டு. அவற்றுள் சில தானியவிளைச்சலுடன் தலை நிமிர்ந்து நிற்கின்றன, இடைக்கிடை பட்டமரங்கள் மேலும் மேலும் வெளுத்துக்கொண்டிருக்கின்றன, ஆங்காங்கே பிரப்பஞ்செடிகள். – தலையை உயர்த்த கண்களிற் படுகிற பைன்மரங்களை மாத்திரம் தவிர்த்தோமெனில் சட்டென்று ‘காமார்கு ‘(2) பிரதேசத்தில் இருக்கிற நினைப்பு. பிறகு கண்ணுக்கெட்டியவரை பரந்துகிடக்கும் வானில், ஏகாந்தத் தனிமையில், புரிதல் மறுக்கும் சூரியன்: கைகள் விறைத்துபோனால் உறையவைக்கும் பனிக்கால சூரியன் அல்லாது போனால் அனல் கக்கும் கோடைகால சூரியன். பார்ப்பதற்கு ஏதோ பயமுறுத்தும் தோற்றமென்றாலும் உண்மையில் எவருக்கும் தீங்கிழைக்காத பரமசாதுவான பூமி.
இப்பொழுதெல்லாம் அவள் பொர்தோ(3) நகரத்திற்குப் போய்வருகிறாள். தங்கள் ஊரோடு கலாச்சார பரிவர்த்தனைகள் செய்துகொள்ளும் ஊரிலிரிருந்து வரும் விருந்தினர்களை வரவேற்கும் குழுவில் ஆர்வத்தோடுபங்கேற்று வருபவர்களுக்குத் தமது ஊரிலிலுள்ள பழமைச் சின்னங்களை அறிமுகப்படுத்துகிறாள். ஞாயிற்றுக்கிழமைகளில், இவள் புருஷன் குளோது மூத்தவனை விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் செல்கிறான். ஐந்து வயதாகிற சின்னப் பெண் ‘அவளது அம்மாவை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ‘ வேறு அடிக்கடி சொல்லிக்கொள்கிறான். இவளைப்போலவே இந்த வயதிலேயே கருகருவென்று அடர்த்தியாய் தலைமுடி, கடவுளால் அக்கறையோடு படைக்கப்பட்டவை என அராபியக் கவிஞனொருவனால் வருணிக்கக்கூடியக் கண்கள். அவளைக் கையில் பிடித்திருக்கும் தருணம், அவளால் அவனுக்குக் கிடைப்பது மனநிறைவா அசெளகரியமா என்பதில் குழப்பம் இருக்கிறது. ஆனாலும் அடிக்கடி அவளை ‘என் மகள் ‘ ‘என் மகள் ‘ எனச் சொல்லிக்கொள்கிறான், ‘என் ‘ என்கிற சொல்லை அவன் சற்றே அழுந்தவும் உச்சரிக்கிறான். ரொட்டிக்கடையில் இப்போதெல்லாம் மளிகைக் கடைப்பொருள்களும் கிடைக்கின்றன. சின்னதாய் ‘பார் ‘ திறக்கவும் எண்ணமிருக்கிறதாம். இதெல்லாம் இங்கே கொஞ்சம் அவசியந்தான்.
– ஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை – எரிக் ஓல்தெர்
( பிரெஞ்சிலிருந்து தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா – நவம்பர் 2005)
-Luglon – பிரான்சின் தென்மேற்கிலுள்ள ஒரு பேரூர்.
**Mimizan -பிரான்சின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நகரம்
***Lande – பிரான்சின் தென்மேற்குப் பிரதேசம்
$ -Grande-Lande – The Big Lande
1. பிரான்சு நாட்டின் மேற்குக் கடற்கரை பிரதேச வீடுகள்
2. பிரான்சு நாட்டின் தெற்குக் கடற்கரை பிரதேசம்
3. சிவப்பு ஒயினுக்குப் பிரசித்திப் பெற்ற பிரதேசத்தின் தலை நகர்.