அகத்தினியனின் அகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 2,133 
 
 

எங்கும் வண்ணவண்ணத் தோரணங்கள், ரம்மியமான இசை முழங்கும் ஒரே பரபரப்பு. மாணவர்களின் கொண்டாட்டத்தில் அந்த அரசு கலைக் கல்லூரியே களைகட்டி இருந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியின் பிரதான மண்டபம் முன் அழகான உடைகளுடன் இறுதியாண்டு மாணவர்களை வரவேற்கக் காத்திருந்தனர். கல்லூரி வழக்கமே அமர்களப்பட்டது

கல்லூரி வளாகத்தின் மரங்கள் எல்லாம் மாணவர்களுக்குக் குடையாகி கதிரவன் கண்ணிலிருந்து மறைத்து நின்று அன்பை, பசுமையான நினைவுகளை, அவர்கள் ஆட்டோகிராப் வாங்கும் சுழலாகியிருந்தது.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டு இருந்தன. கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர் அனைவரும் சிறப்பு விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்து கம்பீரமாக இறங்கினார் விருந்தினர் அகத்தினியன். அனைவருக்கும் ஏக பிரமிப்பு தாளவில்லை இந்தக் காலத்தில் இப்படி ஒரு பாரம்பரியமிக்க குதிரைவண்டியா என்று அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டியைப் பார்த்திருப்போம் ஆனால் இது விசித்திரமாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது எல்லோர் மனதிலும் பிரம்மிப்பு ஏற்பட்டது.

‘நல்வரவு அகத்தினியன்’ என்று முதல்வர் வினைதீர்த்தான் அழைக்கக் கல்லூரியின் துணைமுதல்வர் இறையரசி பூங்கொத்துக் கொடுத்து முக்கிய விருந்தினரை வரவேற்றார். மாணவ தலைவர்கள் விழா அரங்கில் சிறப்பு விருந்தினர் அகத்தினியன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றனர்.

விழா மேடையில் கடவுள் வாழ்த்தில் துவங்கி வரவேற்புரை என நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருந்தன கடைசியாக சிறப்பு விருந்தினர் அகத்தினியன் அவர்களைப் பேச அழைத்தனர். கல்லூரிப் பேராசிரியர்களைப் பார்த்து ‘ என் அருமை நண்பர்களே’ என்றார், மாணவர்கள் பக்கம் திரும்பி ‘வருங்காலத் தலைவர்களே’ என்றார், மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை உற்சாகமான கரஒலியால் தெரிவித்தனர். இறுதியாண்டு மாணவர்களைப் பார்த்து ‘ விழா நாயகர்களே’ என்று புகழ்ந்தார்.

மாணவர்கள் மனதை தன் பேச்சால் ஈர்த்து இயல்பாகச் சிரிக்கவைத்த பின் சிந்தனைக் கருத்துக்களை மாணவர்கள் மனதில் பதியவைத்தார். சிறப்பு விருந்தினராகத் தனது சீரிய கருத்துகளைப் பதிவிட்டுவிட்டு மேடையிலிருந்து கிளம்பினார் அகத்தினியன். முதல்வர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் என அனைவரும் மேடையில் மேலும் சில நிகழ்வுகள் நடைபெற இருந்ததால் அரங்கிலேயே இருந்தனர்.

அரங்கைவிட்டு வெளியே வந்த அகத்தினியன் கல்லூரியின் முற்றத்திலிருந்த நாற்காலியொன்றில் வந்து அமர்ந்தார். அவருடன் கல்லூரியின் துணை முதல்வர் இறையரசியும் வந்து அமர்ந்தார்.

‘என்ன மலரும் நினைவுகளாக..?’ என்று நெகிழ்ச்சியுடன் கேட்டாள் இறையரசி

சுமார் இருபது வருடங்களுக்கு முன் இருவரும் அக்கல்லூரியின் மாணவர்களாக இருந்தவர்கள். அகத்தினியன் இறுதியாண்டு படித்த போது முதலாம் ஆண்டு மாணவியாக இருந்தார் இறையரசி.

‘இறையரசி என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா..?’ என்று ஆச்சர்யம் மேலிட கேட்டார் அகத்தினியன்.

‘இந்தக் கல்லூரியில் சேர்ந்த புதிதில் உங்கள் அளவான பேச்சும் அமைதியான முகம், பண்பு மாறாத நேர்த்தியான தோற்றதால் என்னை கவர்த்தவர் நீங்கள். என்னை முதன் முதலில் காதல் கவிதை எழுதத் தூண்டியவர் நீங்கள் தான். இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.’ என்றாள் இறையரசி.

அதற்கு அகத்தினியன் ‘அது உண்மைதான், மூன்றாம் ஆண்டு தான் கல்லூரி வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் படிப்பு முடிந்து ஒவ்வொருவரும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிச் ஆளுக்கொரு திசையில் பறந்துவிட்டோம்.’ என்றபோது

இறையரசி குறுக்கிட்டு ‘உண்மையில் சொல்ல வேண்டுமானால் இன்றுவரை உங்கள் நிராகரிப்புக்குக் காரணம் எனக்குப் புரியவேயில்லை இனியன்.’ என்று சொல்லி மௌனமானாள் இறையரசி.

‘என் வாழ்க்கைக் கனவுகளை நோக்கி என்னைத் துரத்திச் சென்றவை அந்த காரணங்கள் தான்.’ என்று சஸ்பென்ஸ் கொடுத்தார் அகத்தினியன்.

வியப்பு மேலிட‘நீங்கள் என்ன சொல்றீங்க எனக்கு ஒன்றும் புரியவில்லையே…’ என்றாள் இறையரசி.

தொடர்ந்தார் அகத்தினியன் ‘ நான் விரும்பிப் படிக்க விரும்பிய கல்லூரியில் என்னைச் சேர்க்க மறுத்து விட்டனர். அது என் தகுதிக்கு மிஞ்சிய கல்லூரி’ என்று சொல்லி இடமளிக்க மறுத்துவிட்டனர். ‘நீ கிழிக்கிற கிழிப்புக்கு இங்கேயே ஏதாவது ஒரு கல்லூரியில் படித்தால் போதும். இல்லாவிட்டால் ஏதாவது வேலைக்குப் போ’ என்று பெற்றோர் கறாராகக் கூறிவிட்டனர்.’

‘உங்கள் பெற்றோர் ஏன் அப்படி சொன்னாங்க..?’ என்று இறையரசி
கேட்க

‘ அப்போ எனக்குப் படிப்பை விட விளையாட்டில் தான் ஆர்வம் அதிகமாக இருந்துச்சு. அதுவு இல்லாம சின்னவயசுல நான் பண்ணின ஒரு காரியமும் அதோட சேந்துக்கிச்சு.’ என்று மீண்டும் பீடிகை போட்டான் அகத்தினியன்.

இறையரசி முகத்தில் எந்த வித உணர்வுகளையும் காட்டிக்கொள்ளாமல் ‘அப்படி என்ன காரியம் பண்ணுனீங்க ..?’ என்று கேட்டாள்

‘எல்லோரையும் போல பதின்பருவம் எனக்கு அவ்வளவு எளிதா அமையல. இறப்பின் விளிம்பு வரை நான் சென்ற காலகட்டம் அது. அப்போ நான் ஒன்பதாம் வகுப்புப் படிச்சுக்கிட்டு இருந்தேன் என்பது நினைவிருக்கிறது, அதை இன்று நினைத்தாலும் வேதனையால் என் மனம் ரணமாகி வலிக்கிறது.’ என்று சற்றே நிறுத்தினார் அகத்தினியன்.

‘என்ன ஒம்பதாக்கிளஸ் படிச்சது அவ்வளவு கஷ்டமா’ என்று சிரித்தாள் இறையரசி

அகத்தினியனால் சிரிக்க முடியவில்லை முகம் வாடியது

அவன் முகத்தை பார்த்த இறையரசி ‘அப்படியென்ன தான் நடந்தது கொஞ்சம் சொல்லுங்களேன்..?’ என்று தன் புருவத்தை உயர்த்தி ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்திருந்த இறையரசி பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

‘என் அம்மா, தங்கை இவர்களுக்குப் பிறகு என்னைத் தொட்டுப் பேசும் உரிமையில் ஒரே பெண் எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மிருணாளினி தான்.’ என்றான் அகத்தினியன்

இறையரசி ஆர்வம் மிகுதியால் ‘அவள் வாழ்க்கையில் எதாவது விளையாடியதா..?’ என்று கேட்டு முடிப்பதற்குள்

‘அவள் தான் என் வாழ்க்கையோடு விளையாடிட்டா.’ என்றான் அகத்தினியன்

‘நீங்க என்ன சொல்கிறீங்க ..?’ என்று கேட்டாள் இறையரசி

‘அதை இன்று நினைத்தால் ஏதோ பருவக் கோளாறு எனத் தோன்றினாலும் அது அவமானமாக இருக்கு.’ என்று வருத்தமாக சொன்னான் அகத்தினியன்

‘சரி அப்புறம் என்னத்த பண்ணினீங்க..?’ என்று புதிரான மனநிலையில் கேட்டாள் இறையரசி

‘அந்த பதிமூன்று பதினான்கு வயதில் எனக்கு என் உடலில் மற்றம் ஏற்படுவது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. அதிலும் எதிர்ப் பாலினம் பற்றிய புரிதலே எனக்கு இல்ல. பள்ளிநாட்கள் முழுவதும் அப்படியே கழிந்தன ‘ என்றார் அகத்தினியன்

‘அந்த வயதில் அப்படித் தோன்றுவது இயல்பு தானே.’ என்று அழுத்தமாக சொன்னார் இறையரசி.

‘ஆமாம், எனக்கு ஆண்களின் உடல் கூறுகளைக் காட்டிலும் பெண் உடல் அமைப்புதான் புரியாதபுதிராக இருந்தது. அந்தப் புதிருக்கு விடை காண முயன்றது தான் தவறாகிப் போனது. அந்த நேரத்தில் தான் எதிர்ப் பாலினம் பற்றிய, உடல் கூறுகள் பற்றிய சந்தேகங்கள் எழும். அம்மா மார்போடு அணைத்து உச்சி முகரும் போதும், மாலையில் பள்ளியைவிட்டு வரும்போது அம்மா உறங்கிக்கொண்டு இருப்பார்கள் அப்போது என்னையும் அணைத்துப்படுக்க வைத்துத் தன்னுடன் தூங்கச் செய்வார்கள் அப்போதும், அம்மாவின் தடித்த மார்பகம் எப்படி இருக்கும் என அம்மா அறியாத நேரத்தில் தொட்டுப் பார்க்கத் தூண்டும். நான் தாய்ப் பால் குடித்த அதே மார்பகம் தான்.

ஆனால் அந்த வயதில் அதும்கூட தெரியாதவனாகத் தான் நான் இருந்திருக்கே. அப்படி ஒரு அறியாத வயதில் நானும் மிருணாளினியும் செல்லமாக அடித்து விளையாடிக் கொண்டிருந்த போது அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் தவறுகள் நடந்து விட்டன. இதை அவள் தோழி ஒருத்தி மூலம் என் அம்மாவிடம் சொல்லிவிட்டாள். இது எப்படியோ எங்கள் தெருவில் உள்ளவர்களுக்கும் தெரிந்துவிட்டது.’ என்று அகத்தினியன் கூறிக்கொண்டிருக்கும் போது

அதிர்ச்சியில் உறைந்தவளாய் ‘அய்யயோ அப்புறம் என்ன நடந்துச்சு’ என்றாள் இறையரசி.

‘அன்று மாலை நான் பள்ளியைவிட்டு வருவதற்காகக் காத்திருந்தனர் என் பெற்றோர். அம்மா அப்பா இருவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.’ அகத்தினியனுக்கு அன்று நடந்ததை கண்முன் வருகிறது. அம்மா அகத்தினியனை பார்த்து ‘டேய் நில்லு’ என்று அனல் கக்கும் பார்வையை வீச அகத்தினியனுக்கு அது நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல் இருந்தது.

‘என்னம்மா’ என்று வாஞ்சையுடன் கேட்டான். அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் குறும்புத்தனமும் துருதுருப்பும் இல்லை அப்போது.

‘மிருணாளினி கிட்ட நீ என்ன பண்ணினே..?’ என்று கேட்டார் அம்மா.

‘அப்போது, என் கண்கள் கண்ணீரில் கனத்தது என்னால் எதுவும் பேச முடியவில்லை அப்பா எழுந்து வந்து கோபம்தீர அடித்ததில் குச்சியே உடைந்து விட்டது. என் பெற்றோரின் மன வருத்தம் அவர்களின் வார்த்தைகளில் தெரித்தது. அந்தச் சுடும் வார்த்தைகள் என்னை உயிருடன் கொன்று புதைத்ததைப் போல் உணர்ந்தேன். அன்று இரவு என்உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தேன். ஆனால் ஏதோ அதைத் தடுக்க வெறும் உயிரற்ற சதை பிண்டமாக நடமாடினேன்.’ என்று கூறும்போது அகத்தினியனுக்கு கண்கள் கலங்கின. அதைகாட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தார்…

நிலைமையைப் புரிந்து கொண்ட அம்மா என்னைத் தனியே அழைத்து “பெண்கள் ஒவ்வொருவரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள்” என்று கூற கூற பெண்கள் மீதான மரியாதையை விடப் பயம் தான் எனக்கு அதிகரித்து.” என்று அகத்தினியன் அம்மாவை நினைவு கூற,

‘ஓ…பயம் நம்மைப் பலவீனப் படுத்திவிடுமே…’ என்று பதட்டமாக முக பாவத்துடன் கேட்டாள் இறையரசி.

‘சரியாச் சொன்ன, அம்மா என் மனதைப் புரிந்துகொண்டவராக மேலும் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கு.’ என்று அகத்தினியன் அமைதியாக கூறினான்.

‘அம்மா அப்படி என்ன சொன்னாங்க. ‘ என்று ஈடுபாட்டுடன் கேட்டார் இறையரசி.

அகத்தினியன் மீண்டும் அம்மாவை நினைவு கூர்நந்தான் “உனக்கு எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. மனதில் தவறான எண்ணங்கள் வரும்போது அவற்றைக் கடப்பதற்கு, உன் சிந்தனையை மாற்றி உடற்பயிற்சியிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்து. நீ பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. உன்னைத் தவறாகப் பேசியவர்களின் முன்னால் நீ வாழ்ந்துகாட்ட வேண்டும்… தெரியுமா..? சாமானியனாக இல்லாமல் சாதனை நாயகனாக அப்போது தான் உன் தவறுகள் மறக்கவும்படும் மன்னிக்கவும்படும்.” என்று கூறிவிட்டு என் நெற்றியில் முத்தமிட்டார்.’ என்று உணர்வுகள் ததும்ப கூறிக்கொண்டிருந்தார் அகத்தினியன்.

‘அது தான் அம்மா’ என்று கண்கலங்கினார் பேராசிரியை இறையரசி

‘அதற்குப் பிறகு பெண்கள் இருக்கும் திசையைக் கூட நான் திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு ஆசிரமப் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டனர். அங்கு முழுமையாக என்னை விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கினேன். அதுமட்டுமல்லாது நான் ஒரு தலித் இளைஞன். அதற்குத் தக்கவாறும் நடந்துகொள்ள வேண்டும் என்று என் தந்தை நான் கல்லூரியில் சேரும் போது கூறினார்..’ என்று சன்னமாக சிரித்தான் அகத்தினியன்.

‘பெரியவர்கள் கண்ணியத்திற்குரியவர்கள் அத்தோடு பழமை வாதிகளாகவும் இருக்கிறார்கள்.’ என்று பதிலுக்கு சொன்னாள் இறையரசி.

‘கல்லூரிப் படிப்பை முடித்த ஓர் ஆண்டிலேயே மாநில கால்பந்து அணியில் இடம் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஒரு நிறுவனத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு விளையாட்டுப் பயிற்சிக்காக டில்லி சென்றேன்.’ என்று அகத்தினியன் கூறிக்கொண்டிருக்கும் போது இறையரசி குறுக்கிட்டு

‘நம் கல்லூரியில் படிக்கும் போதே கால்பந்து அணியில் நீங்கள் இருந்தீங்களா..?’ என்று சந்தேகமாக கேட்டாள்.

‘அப்போது நம் கல்லூரியில் கால்பந்து அணியே கிடையாது தெரியுமா..? ஆனாலும் நகரில் உள்ள மாவட்டக் கால்பந்து அணியில் சேர நம் கல்லூரி தான் பயிற்சிக் களமாக இருந்தது.’ என்று தொடர்ந்தார் அகத்தினியன்.

“டில்லியில் சாப்பாட்டிற்கே கூடத் திண்டாடிய காலம்உண்டு, இரண்டு ஆண்டுகள் பகுதிநேர வேலை பார்த்துக் கொண்டே கடுமையான உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் பெற்றேன். அந்த நேரத்தில் ஒரு நல்ல பயிற்சியாளர் எனக்குக் கிடைத்தார். அப்போது அந்தப் பயிற்சியாளரின் நண்பரிடம் குதிரை ஏற்றப் பயிற்சிக் களத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குதான் குதிரை ஏற்றத்தைப் பற்றிப் படிக்கும் ஆர்வம் வந்தது. அதற்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் கால்பந்து அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது இந்திய அரசு பயிற்சிக்காகச் சிலரைத் தேர்வு செய்து லண்டனுக்கு அனுப்பியது அதில் நானும் ஒருவனாக இருந்தேன். லண்டனில் 8 மாத பயிற்சி, அந்த எட்டுமாதமும் மிகமிக கடுமையான காலமாக இருந்தது எனலாம். அங்கு தான் குதிரையேற்றம் பற்றிய பட்டப்படிப்பு (Equestrian studies degree) முடித்தேன்.’ என்று தனது கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தார் அகத்தினியன்.

‘நிறையக் கஸ்டங்களைக் கடந்து வந்திருக்கீங்க.’ என்று ஆதங்கத்துடன் கூறினாள் இறையரசி.

‘என்னைப் போன்றவர்களுக்கு அவ்வளவு எளிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கல. எல்லா இடங்களிலும் அரசியல் செய்தாங்க அதையும் தாண்டி நல்ல மனிதர்கள் சிலரால் கிடைத்த அரிய வாய்ப்பு அது.’ என்று அகத்தினியன் கூற .

அதற்கு இறையரசி ‘நீங்க அதைச் சரியாகப் பயன்படுத்திருக்கீங்க.’ என்றாள் இறையரசி.

‘ஆமா, பயிற்சி வகுப்புகளும், நல்ல புத்தகங்களும் தான் என்னைச் சிறந்த மனிதனாக்கி உங்கள் முன் நிற்க வைத்திருக்கிறது.’ என்று பெருமிதத்த்துடன் கூறினார் அகத்தினியன்.

‘உண்மைதான் விவேகானந்தரிகன் மேற்கோளுடன் இன்று நீங்க ஆற்றிய எழுச்சியூட்டும் உரையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ‘ என்றாள் இறையரசி.

“உயர்ந்த குறிக்கோளை மட்டுமே நினைக்காமல், அதை அடையும் வழியைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். அதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி உள்ளது.”

என்று நீங்கள் மேடையில் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல அவை அனுபவ வலிகளின் வெற்றி மொழிகள்.’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினாள் இறையரசி.

‘தங்களிடம் இருக்கும் அளவற்ற ஆற்றலை அவரவர்தான் உணர வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் அப்படிப் பேசினேன்.’ என்ற போது மனம் லேசானத்தை உணர்ந்தான் அகத்தினியன்

இறையரசிக்கு குதிரை வண்டி நினைவுக்கு வர ‘அது சரி இனியன், இந்த அழகிய குதிரை வண்டி..?’ என்று கேட்டாள்.

அகத்தினியன் இறையரசியின் கண்களை பார்த்து சிரித்து கொண்டே ‘அதுதானே என்னடா… இன்னும் கேட்கலையே ன்னு நினைச்சேன். எல்லா ஒரு விளம்பரத்திற்குத் தான்.’ என்றார்.

உடனே இறையரசி ‘என்ன சும்மா விளம்பரத்திற்காகவா அப்படினா..?’ என்று கேட்ட

‘அப்படினா… குதிரையேற்றப் பல்கலைக்கழகம் ஒன்றை உலகத் தரத்திற்கு உருவாக்க உள்ளோம் தெரியுமா..? ‘ என்று அகத்தினியன் தனது வருங்கால கனவு திட்டம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார்.

‘ஓ… அப்படியா.., குதிரையேற்றம் பற்றிய கல்வி அவ்வளவு முக்கியமானதா என்ன? எதற்காக இந்த முயற்சி அதற்கு ஏதாவது முக்கியக்காரணம் இருக்கிறதா..?’ என்று கேட்டாள் இறையரசி

‘அப்படிப்பார்த்தால் நாம் படிக்கும் எல்லாத்துறையும் அப்படித்தான். இதில்இயற்கை சார்ந்த, விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தபடிப்புகளும் இருக்கும், வனவிலங்குகளைப் புகைப்படம் எடுத்தல் எனப் பல துறைகளையும் உள்ளடக்கிய படிப்புகள் செயல்முறை வடிவில் இங்குப் பயிற்றுவிக்கப்படும். வணிகம், சந்தைப்படுத்துதல், மருத்துவம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு எங்களைப் போன்ற ஒலிம்பிக் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சிலரின் துணையுடன் மத்திய அரசு உருவாக்கியுள்ள ஒரு மிகப்பெரிய நவீனப் பல்கலைக்கழகம் இதுவாகும்.’ என்று ஆர்வமாக சொன்னார் அகத்தினியன்.

‘கேட்கவே ஆச்சர்யமாக இருக்கு… ஒரு காலத்தில் மிட்டா மிராசுதார்கள் மற்றும் ஜமீன்தார்கள் மட்டுமே குதிரை வண்டிகளில் வலம் வந்தார்கள், சாமானிய மக்களையும் குதிரை வண்டியில் வலம் வர வைத்தது வாடகைக் குதிரை வண்டிகள் தான். றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த குதிரை வண்டிகள், நவீன மோட்டார் வாகனங்களின் படையெடுப்புக்குப் பிறகு காணாமல் போய்விட்டன.’ என்றாள் இறையரசி வியப்பு குறையாமல்.

‘ஆமாம்… நம்மை விட்டு நிஜமாகவே மறைந்து, நினைவில் மட்டும் மறையாமல் இருப்பது குதிரைவண்டிகள் தான்.’ என்றார் அகத்தினியன் அமைதியாக.

‘சரி, நீங்க கால்பந்துப் பயிற்சி மையம் தானே நடத்திறீங்க..? ‘ என்று கேட்டாள் இறையரசி.

‘ஆமாம் அது என் மன ஆறுதலுக்காக ஒலிம்பிக் போட்டி கால்பந்து அணிக்குத் தகுதியான நமது அணியைத் தயார் செய்யும் முயற்சி தான். குதிரையேற்ற பல்கலைக்கழகம் என்பது ஒரு குழுவினரின் முயற்சி இதில் மக்கள் தொடர்பு (Public Relations) குழுவில் இருக்கிறேன். சுற்றுலாத் தலங்களில் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலா குதிரை வண்டி சவாரியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்’ என்று பதில்கூறினார் அகத்தினியன்.

“ஓ அற்புதமான யோசனை தான் வாழ்த்துக்கள்… நீங்கள் இங்கு வரும்போது பார்க்கவே சும்மா கம்பீரமான ராஜா வருவது போல் இருந்தது. காத்து மாசு கலக்காம இருக்கும்… காதுக்கும் தொந்தரவு வராதுல்ல… ” என்று தலையாட்டி கொண்டே சிரித்தாள் இறையரசி

‘மிகச் சரியான கணிப்புத் தான்’ என்றார் அகத்தினியன்

‘சரி, இனியன் உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டாள் இறையரசி.

அகத்தினியன் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுத் பிறகு ‘அதில் பெரிதாக ஆர்வம் இல்லை’ என்றார்

‘அது சரி என்னைப் பற்றி இவ்வளவு கேட்டாயே இப்ப உன்னைப் பற்றிச் சொல் நீ எப்படி இருக்கே..?’ என்று கேட்டான் அகத்தினியன்

‘என் மகன் அகிலன் இந்திய வர்த்தக சேவை அதிகாரியாகத் தேர்வாகி இருக்கிறான். (Indian Trade Service). மகள் இனியா இளங்கலை உளவியல் படிக்கிறாள். கணவர் பொறியாளர்.’ என்று தன்னைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி முடித்தார் பேராசிரியயை இறையரசி.

‘ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டாய் சரி  எனக்கும் நேரமாகிவிட்டது, கல்லூரி விழாவே முடிந்து அனைவரும் வந்து விடுவார்கள் நான் கிளம்புகிறேன்.’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து குதிரை வண்டி இருக்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர்.

அகத்தினியன் விடைபெற்றுக் கிளம்பும் முன் ‘இறையரசி நீ கேட்ட கேள்விகான விடை இதில் இருக்கிறது. நான் புறப்படுகிறேன்.’ என்றார்

வண்டி கிளம்பி கல்லூரி வளாகத்தைக் கடக்கும் வரை குதிரை வண்டி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு இருந்துவிட்டுத் தன் கையிலிருந்த காகிதத்தைப் பிரித்து பார்த்தாள் இறையரசி அமைதியாக.

‘அச்சம் தவிர்த்து உச்சம்தொட என்னுள்
அன்று கவிதை என இறையருள் புகுத்தினாய்…
அது நிராகரிப்பு அல்ல அர்ப்பணிப்பு..! ’

என்று எழுதி இருந்தது. இறையரசி மனதிற்குள் பிறப்பால் எல்லோரும் சமமே, அவரவர் செய்யும் செயல்களில் மட்டுமே பெருமை வந்து சேருகிறது. என்று மனதிற்குள் நினைத்தவாறே… கல்லூரி நுழைவாயிலைப் பார்த்தவாறு இறையரசியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

– பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2021, நன்னன் குடி, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *