கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 140 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காத்திருத்தல் எனக்குப் பழகிய விசயம்தான் என்றாலும், தகிக்கும் வெயிலில் பேருந்தை எதிர்பார்த்தல் கொஞ்சம் கடினமானதுதான். ரோம் நகரில் கோடையில் வெப்பநிலை 40 யை சர்வசாதாரணமாகத் தொடும் என்பதையும் வெள்ளையாய் இருப்பவர்கள் ஊரில் எல்லாம் வெயில் அடிக்காது என்பதையும் தெரிந்து கொண்டேன். என் விடுதிக்குப் போகவேண்டிய பேருந்து ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கு ஒரு முறைதான், அந்தப் பேருந்தும் ஊர் சுற்றி உலகம் சுற்றி ஒரு 30 நிமிடங்கள் பயணப்படும். ஒரு கையில் கிட்டத்தட்ட 10 கிலோ சுமையுள்ள பை, மறுகையில் ஆண்டிராய்டு சிறுகணினி என மேலடுக்கு கீழடுக்குத் தெரிய சிறு உடைகளில் உலாவிக்கொண்டிருந்த இத்தாலியப் பெண்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ரோமின் ஓர் எல்லையான, அனாநீனா பேருந்து நிலையத்தில் மறு ஓரத்தில் கடைகளை விரித்திருந்த வங்காளதேசத்தவர்களை காவல்துறையினர் வழமைப்போல கடவுச்சீட்டு சான்றிதழ்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கடந்துதான் சென்றார்கள், இருந்த போதிலும் ஏறத்தாழ வங்கத்தவனை போலக்காட்சியளிக்கும் என்னை எதுவும் கேட்கவில்லை, ஒரு வேளை எனது பொறியியாளர் தோற்றக் கண்ணாடியும், கைக்கணினியும் தேவைப்பட்ட நன்மதிப்பைக் கொடுத்திருக்கலாம். அறிவுசார்ந்த வேலைக்கு வந்திருந்தாலும், கைக்காசைக் கொட்டி படிக்க வந்திருந்தாலும், வெள்ளையர்களைப் பொருத்த மட்டில், மாநிற, கருப்பானவர்கள் எல்லோருமே அகதிகள்தான். ஆனாலும் சில சமயங்களில் தோரணையும், திமிரான பார்வையும், தேவையற்ற, இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும்.

கையில் இருக்கும் 10 கிலோ சுமையில், என் அம்மா எனக்காக தயார் செய்து இத்தாலி வந்த நண்பனிடம் கொடுத்தனுப்பிய, பருப்பு சாம்பார், கோழிக்கறி, ஆட்டுக்கறி சமைக்கத் தேவையான வாசனைப்பொருட்கள், காயவைத்த கறிவேப்பிலை, நம்ம ஊர் மல்லிப்பொடி என ஐரோப்பாவில் வசிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அரிதற்கரிய விசயங்கள் அனைத்தும் இருக்கின்றன. இந்தப் பையை வாங்குவதற்காகவே 100 ஈரோ செலவழித்து, விடியற்காலையில் மிலான் வரை சென்று, வாங்கி வருகின்றேன். காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை, கையில் இருந்தது பத்து ஈரோ மதிப்புள்ள தாளும், இரண்டு ஈரோ மதிப்புள்ள நாணயமும்தான். இரண்டு ஈரோவிற்கு பழச்சாறு வாங்கிக்கொண்டு ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தேன். திக்காலுக்கு திக்கால், சிலப்பிரயாணிகள் என பேருந்து வறட்சியாக இருந்தது.

ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” படத்தின் முன்னோட்டக்காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்த பொழுது,

“அஸ்லாம் அலைக்கும்” என யாரோ ஒருவர் தோளைத் தொட, திரும்பிப்பார்த்தேன். என் நிறத்தில் ஒருத்தன் என்னைப்பார்த்து சிரித்தான்.

. பார்த்துக்கொண்டிருந்த ஒளிக்காட்சியை சடுதியில் மாற்றிவிட்டு, அவனை என்னவேண்டும் என்ற தொனியில் பார்த்தேன்.

அனேகமாக வங்காளத்தேசத்தவன் என்பது அவன் பேசிய உடைந்த இந்தி, சுமாரான இத்தாலியத்தை வைத்து தெரிந்தது. எனக்கு இரண்டு மொழிகளும் அரைகுறை என்றாலும் அவனுக்குப் பசிக்கிறது என்பதும், காசு தரமுடியுமா எனக் கேட்கிறான் என்பது புரிந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக

“இங்கிலீஷ் இங்கிலீஷ்” என்றேன்.

கொச்சையான ஆங்கிலத்திலும் அதையேத்தான் சொன்னான்.

“இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை, காலையில் இருந்து கடையில் நின்றதால், எதுவும் சாப்பிடவில்லை. காவல்துறை வருவதால் எனது முதலாளி என்னை வீட்டுக்குப்போய்விட்டு நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்”

அவனின் சூழல் புரிந்தது. பிச்சையோ உதவியோ, யாராவது என்னிடம் காசு கேட்டால், என்னிடம் அந்த சமயத்தில் பணம் இருந்தால் யோசிக்காமல் கொடுத்துவிடுவேன். அது அவனை திருடனாவதில் இருந்து காப்பாற்றுகிறது என்பது என் எண்ணம். ஏதாவது, நாணயங்கள் இருக்கின்றதா என யோசித்ததில், எதுவும் தட்டுப்படவில்லை. இருக்கின்ற பத்து ஈரோவை வைத்துத்தான், அடுத்த படிப்பு உதவித் தொகை வரும் வரை ஒரு வாரம் ஓட்டவேண்டும்.

‘காசு இல்லை, வேண்டுமானால் இந்த பழச்சாறை எடுத்துக்கொள்… அண்ணாந்துதான் குடித்தேன்” என்றேன் ஆங்கிலத்தில்.

அவன் குடித்த வேகம், எத்தனைப் பசியில் இருந்திருப்பான் என்பதைக் காட்டியது. நன்றி சொல்லிவிட்டு கடைசி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.

கள்ளச்சிரிப்புடன், “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” முன்னோட்டக்காட்சிகளைப் பார்த்துவிட்டு விடுதி நிறுத்தத்தில், பேருந்தைவிட்டு இறங்கி நடந்து கொண்டிருந்தபோது, வாசனைப்பொருட்கள் அடங்கிய பையை பேருந்திலேயே விட்டுவிட்டேன் என்பதை உணர, அந்த வங்கதேசத்தவன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இருந்து என் பையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான்.

“சகோதரா, நீங்கள் இதை மறந்து வைத்து விட்டீர்கள்”

பத்து ஈரோத்தாளை எடுத்துக் கொடுத்து ஏதாவது சாப்பிடு என சொல்லுவதை விட, அவனை எனது விடுதிக்குக் கூட்டிப்போய் சமைத்துப்போடுவது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. அந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சிகளை நிரந்தரமாக அழித்துவிட்டு, அவனுடன் எனதுவிடுதி அறையை நோக்கி நடந்தேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *