கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 14,961 
 

சுழித்துக்கொண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே நீண்டிருந்த ஈரமான மூங்கில்களின் மேல் கால் பதித்து நடந்து கடக்கும்போது எதிர்ப்புறம் கைநீட்டி அழைக்கும் அந்த அழகான இளைஞன் மேல் கண் பதிந்து கவனம் சிதற கால் லேசாகச் சறுக்குகிறது. நதியில் காத்திருக்கும் முதலைகள் இடறிவிழும் அவளை விழுங்க வாய் பிளக்கும்போது அந்த இளைஞன், “மிம்மி வெய் எழுந்திரு , போலீஸ்….” என்கிறான் பதற்றத்துடன். ததும்புகிற பெரிய மார்பகங்களோடும், சிவந்த முகத்தோடும் குனிந்து அவளை உலுக்கி எழுப்பிய மாலதியம்மாள் கண்களை நிறைத்தபடி “எழுந்திருடி… போலீஸ்…” என்றாள் அவசரமாய்.

போலீஸ் என்ற வார்த்தை தாக்கியதுமே தூக்கம் முற்றுமாய் விலகி விருட்டென்று எழுந்திருந்தாள் சீதா. போலீஸ்… தினம் தினம் எதிர்பார்க்கும் போலீஸ்… இம்மிக்ரேஷன் போலீஸ்….

பர்மாவிலிருந்து எல்லை கடந்து தாய்லாந்தின் பாதுகாப்பில் வாழ வந்த ‘மிம்மி வெய்’ என்கிற சீதா, சீரழிந்த பொருளாதாரத்தால், ராணுவ ஆட்சியின் கொடுமைகளுக்குப் பயந்து நாட்டைத் துறந்து, தாய்லாந்தின் செழிப்பு அளிக்கும் ஏராளமான சாத்தியக்கூறுகள் ஈர்க்க, வீசா இல்லாமல் விதிமுறைகளை மீறி, ஊருக்குள் வந்து வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருத்தி. கூரான நாசியும், அழகான பல் வரிசையும், வாளிப்பான இருபது வயது தேகமுமாய் வீட்டு வேலை செய்யும் பெண் என்கிற அடையாளத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருந்தாள். கடிகாரம் ஆறு தொட நகர்ந்து கொண்டிருந்தது. அறைச் சுவர் முழுக்கச் சிதறியிருந்த சல்மான்களும், மாதுரி தீக்ஷித்துக்களும், அவளைக் கண் விலக்காமல் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவளுடைய அறை, அந்த மூன்றாயிரம் சதுர அடி வீட்டில் அவளைப் போன்ற பணிப்பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜன்னலில்லாத அறை. அவளின் சொற்ப உடமைகளை நிரப்பிக்கொள்ளச் சின்ன அலமாரி, சன்னமான கட்டில், ஒட்டினாற்போல ஒரு குளியலறை. தாய்லாந்தில் நாலு வருடம் வீட்டு வேலை செய்து சம்பாதித்தால், அம்மா, அக்கா, தம்பி எல்லோரும் ஒன்றாய்க் குடியிருக்க இது போன்ற சின்ன அறை வைத்த வீடு பர்மாவில் கட்டிக்கொள்ளலாம். ”சட்டுன்னு எழுந்து எங்கியாவது ஒளிஞ்சுக்கோ. பக்கத்துத் தெருவிலே சோதனை பண்றாங்களாம்” மாலதி அம்மாள் பதற்றம் அடங்காமல் சொல்கிறாள். இந்தியர்கள் வசிக்கும், பாங்காக்கின் ‘சுகும்வித்’ பகுதியில் நெருக்கமாய்க் குவிந்திருந்த அடுக்குமாடி வீடுகளில் அநேக இந்தியர்கள் அதுபோல பர்மிய அகதிகளை வேலைக்கு அமர்த்துவது காலம் காலமாய் நடந்துவருவதுதான். காவல் துறை தேடி வருவது அவளைப் போன்ற பர்மா அகதிகளைத் தேடி. மாலதியின் பின்புறமாய் வந்து நின்ற நடராஜன் பதற்றமாய் இருந்தார். அவளைத் திருப்பியனுப்பும்படி ஒரு மாதமாய் மாலதியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அந்த அகதிப் பெண் வீட்டில் இருப்பது தெரிந்து அகப்பட்டுக்கொண்டால் ஆயிரமாயிரமாய் அபராதம் கட்டவேண்டி வரும். தாய்லாந்தில் ஒரு பிரபல நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் அவர் சங்கடத்துக்குள்ளாகலாம். டிபோர்ட் செய்துவிடுவார்கள் என்கிற பயம். பர்மிய அகதிகளை மௌனமான அங்கீகரிப்பில் காலம்காலமாய் ஏற்றுக்கொண்டிருந்த தாய்லாந்து ஓர் அரசியல் நெருக்கடியால் அவள் போன்றவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கத் துவங்கிய அந்த ஒரு மாதமாய் நடராஜன் அந்தப் பிரச்சனையை எதிர்பார்த்திருந்தார். அவர் தாய்லாந்திற்கு வேலை நிமித்தம் வந்தபோது பர்மிய அகதிகள் பரவலாய் எங்கும் தென்பட்டார்கள். நூற்பாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் கடினமான வேலை செய்ய, மருத்துவமனைகளில் தாதிகளாய், இந்தியர்களின் வீடுகளில் வீட்டுவேலை, சமையல், குழந்தைகள் பராமரிப்பு என்று வீட்டோடு வீடாய் இருந்து அத்தனை பணிகளைச் செய்ய தயாராய் இருந்த இந்திய வம்சாவளி பர்மியப் பெண்கள் ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் இருப்பது, அந்தச் சமூகம் மறைமுகமாய் அனுமதித்த ஒன்றுதான். உள்ளூர் பணியாளர்களுக்குத் தரும் சம்பளத்தில் பாதி கொடுத்தாலும் நாணய மதிப்பின் வித்தியாசத்தால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் பர்மிய அகதிகளைப் பணிக்கு அமர்த்துவதில் தாய்லாந்தவர்களுக்கு எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. சீதாவும் அப்படி வந்தவள்தான்.

அவள் வயதொத்த இளம் பெண்களுடன் எல்லை தாண்டும் அபாயம் அறியாமல் வந்தவள். இடைத்தரகன் ஒருவன் மூலமாய், மேசார்ட் எல்லையில் தங்கிக் காத்திருந்து தாய்லாந்து ராணுவத்தைச் சரிகட்டி சரியான சமயத்தில் எல்லை கடக்கும் ஆபத்தான பயணம். கூட்டி வந்த தரகன் எல்லையருகில் ஒரு வீட்டில் அத்தனை பேரையும் கிடத்தி வைத்திருந்தான். வெளியே தலைகாட்டாமல் முடங்கிக்கிடந்து, இரண்டு வேளை காய்ந்த சப்பாத்தியையும் பருப்பையும் சாப்பிட்டுப் பசியாறி, கூடைக்குள் திணித்து வைத்த கோழிகள் போல இதர பெண்களோடு அந்தச் சின்ன வீட்டில் அடங்கிக்கிடந்த பின் ஒரு நாள் பின்னிரவில் அந்த நீளமான வண்டி வந்தது. அவர்கள் எல்லோரையும் தரையில் உட்கார வைத்து, காய்கறி மூட்டைகளை மேலே அடுக்கி, எட்டு மணி நேர வேதனைக்குப் பின் தாய்லாந்து வந்த பயணம். தரகன் அவர்கள் எல்லாரையும் ஒவ்வோர் இடத்துக்குக் கூட்டிச் சென்றான். அப்படிதான் மாலதி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். சீதா வெளிச்சம் பார்த்தது அங்கு வந்துதான். பெரிய அறைகள் கொண்ட அந்தப் பிரமாண்டமான வீடு அவளுக்கு வேறு விதமான சிறை. வீட்டில் யாருமில்லாத போது மணி அடித்தால் கதவைத் திறக்க பயம். தொலைபேசித் தொடர்பைக் கண்டுபிடித்து வீட்டுக்கு போலீஸ் வந்துவிடும் என்று பர்மாவுக்கு ஃபோன் போட பயம். கடிதப் போக்குவரத்து மட்டும் அவர்களைக் கூட்டிவந்த தரகன் மூலமாய் நடக்கும். வெளியே போய் யாரையும் பார்க்க முடியாது. காய்ச்சல் வந்தால் மாலதியம்மாள் தருவதுதான் மருந்து. தாய்லாந்தின் செல்வச் சிறப்பைப் பற்றி நிறையப் படித்தாலும், சீதாவுக்குத் தெரிந்த தாய்லாந்து, மாலதி வீடும் சுற்றுமுற்றும் தெரியும் உயரமான கட்டடங்களும் தான். செய்திப் பத்திரிகைகளில் நிதானமாகப் படித்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வாள். ஐந்து வருடம் இருந்தால் போதும் அதன் பிறகு திரும்பிப்போய் நாகுவைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தாள். அதற்குள் சுச்சி தலைமையில் பர்மாவில் ஜனநாயகம் திரும்பிவிடும், ஜனநாயகத்துக்குக் குரல் எழுப்பும் மாணவர்களை ஒடுக்க அரசாங்கம் மூடி வைத்திருக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டுவிடும், நின்று போன படிப்பைத் தொடரலாம். எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பது கடினமாக இருப்பதில்லை . வந்த இரண்டு வருடங்கள் ஆபத்தில்லாமல் நகர்ந்த வாழ்க்கை ; நாலாயிரம் பாட் சம்பளத்தில் அவள் சொற்ப செலவும், இடைத்தரகனுக்கு கமிஷனும் போக வீட்டுக்கு அனுப்ப முடிந்த, உள்ளூர் மதிப்பில் பத்து மடங்காய்ப் பெருகும் பணம் அவர்கள் வாழ்க்கையைச் சௌகர்யமாய் எதிர்கொள்ளப் போதுமானதாய் இருந்தது. இரவு சுக்கும்வித் தெருவோரம் நடந்து போய் பொதுத் தொலைபேசிப் பெட்டியிலிருந்து அவ்வப்போது வீட்டிற்கு ஃபோன் போட முடிந்தது. மாலதி குடும்பத்தினர் வெளியே போயிருக்கும்போது டிவிடி ப்ளேயரில் சுக்கும்வித் ப்ளாசாவில் சல்லிசாய்க் கிடைக்கிற இந்தியப் படங்களைப் பார்க்கிற இரண்டு மணி நேரம் வேறு உலகத்தில் திளைக்க முடிந்தது. சின்னதாய் செல்ஃபோன், பவுரட் மார்க்கெட்டில் சல்லிசாய் அழகு சாதனங்கள், இந்திரா மார்க்கெட்டில் விற்கும் பழைய ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் வாங்க அனுமதித்த வாழ்க்கை. அதற்கப்புறம் முளைத்து விஸ்வரூபமெடுத்தது அந்த அரசியல் பிரச்சனை. பர்மாவின் ராணுவத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்கள் தீவிரமடைந்து, ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வலுக்கத் துவங்கிய துர்பாக்கியம். அந்தப் போராட்டத்தின் பாதிப்பு தாய்லாந்து பர்மா எல்லைப் பிரதேசங்களில் எதிரொலிக்க ஆரம்பித்தது. விடுதலைப் படையினர் சிலர், தாக்கப்படும் தங்கள் வீரர்களுக்கு மருத்துவ வசதி கோரி தாய்லாந்தின் மருத்துவமனை ஒன்றை ஆக்ரமித்துக்கொள்ள கொந்தளிப்பான நிலையை எட்டியது அந்தப் பிரச்சனை. பத்திரிகைகளின் கொட்டை எழுத்துக்களில் விழித்துக்கொண்டன, தொலைக்காட்சிகள் ஓயாமல் வாயாடின், அகதிகளைக் காப்பாற்றுகிறோம் என்று போராளிகளுக்குத் தாய்லாந்து அரசு ஆதரவு தருவதாக பர்மிய அரசு குரல் கொடுத்தது, எதிர்க்கட்சிகள் அன்னியர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோஷம் போட்டன. தாய்லாந்து அரசு , எதிர்க்கட்சிகளைத் திருப்தி செய்ய பர்மா நாட்டவரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டவுடன் மெல்லத் துவங்கியது போலீஸ் கெடுபிடி. ஆயிரக்கணக்கான அகதிகள் தாய்லாந்து புகலிடம் இழக்கத் துவங்கினார்கள். எல்லையோர தொழிற்சாலைகளில், மருத்துவமனைகளில், பாங்காக் குடியிருப்புகளில் … நேரம் செல்லச் செல்ல நடராஜனுக்கு படபடப்பு அதிகமாகி மாலதியிடம் இரைய ஆரம்பித்தார். அவளை என்ன செய்வது? எங்கே ஒளித்து வைப்பது? வீட்டுக்குள் நுழைந்து எல்லா இடங்களிலும் தேடினால்? வெளியே அனுப்பிவிடலாமா? அவள் வெளியே போகும்போது பிடிபட்டால் இந்த வீட்டில் வேலை பார்த்தது தெரிந்துவிடுமே… அந்தப் பெண்ணுக்கு இணையான சங்கடத்தில் இருந்தார்கள் இருவரும். முடிவாக அவள் வீட்டில் இருக்கக்கூடாது என்று பிடிவாதமாய்ச் சொன்னார் நடராஜன். ”அப்பா, அண்ணன், உறவுக்காரங்க ஃபோன் நம்பர் இருக்குதா? அவங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லு. யாரையாவது அனுப்பி கூட்டிப்போகச் சொல்லலாமா….”

அப்பா…. உயிரோடு இருக்கிறாரா இறந்து போனாரா என்று கூட தெரியாத அப்பா. மிங்லா சே மார்க்கெட்டில் பலசரக்கு வியாபாரம் செய்த அப்பா. ஜனநாயக ஆட்சி கோரி போராடிய நூற்றுக்கணக்கான மக்களை ராணுவம் சுட்டுத் தள்ளி ரத்த வெள்ளம் ஓடியதையும், அவர் நண்பர்கள் பலர் சிறையிலிருப்பதையும் அடிக்கடி விவரிக்கும் அப்பா. அரசியல் ஈடுபாட்டால் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போரிடும் தேசிய ஜனநாயக முன்னணியில் பங்கெடுத்துக்கொண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக ஏதாவது கூட்டம், உண்ணாவிரதம் என்று கிளம்பிப் போகும் அப்பா.

கடைசியாகப் பார்த்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு… ஓர் அமைதியான இரவில் நாலைந்து ராணுவ வீரர்கள் கதவை உடைத்து வீட்டில் நுழைந்து அவரை ரத்தம் வர அடித்த நாள். ஒருவன் துப்பாக்கியைத் தூக்கி அவரைக் குறிபார்த்தபடி எப்போது வேண்டுமானாலும் சுடுவான் என்கிறமாதிரி நின்றுகொண்டு…. ‘பென்னையாவ் ஷூலே? பென்னையாவ் ஷலே….’ என்று கேட்டுக்கொண்டேயிருக்க இன்னும் இருவர் அவரைத் தாக்கினார்கள். குறுக்கே போன அம்மா பூட்சு காலால் உதைபட்டதையும், தாக்கப் போன அண்ணனை இருவர் பிடித்துக்கொள்ள ஒருவன் துப்பாக்கியைத் திருப்பி அடி வயிற்றில் குத்தினதும் நினைத்தால் இன்னும் வலிக்கும் நாள். அப்பாவின் காலைப் பிடித்துத் தரையோடு இழுத்துப் போய் ஜீப்பில் தூக்கிப் போட்டு எடுத்துச்சென்ற அந்த இரவுக்குப் பிறகு அவர் திரும்பி வரவில்லை . போலீஸ் கம்ப்ளெயிண்ட், மனித உரிமைக் கழகம், பத்திரிகைகளில் கட்டுரை என்று தனி மனித உரிமைகளுக்கு எந்த வித வாய்ப்பும் கொடுக்காத சமூக அமைப்பில் விசாரிக்கக்கூட பயம். அதுபோல காணாமல் போனவர்களை ‘இன்சேன்’ சிறையில் வைத்து உயிர் போகும் வரை வேலை வாங்கிச் சித்ரவதை செய்வார்கள் என்று தெரியும்.

அப்பா திரும்பி வருவார் என்று காத்துக்கொண்டிருந்த அம்மா அந்த நம்பிக்கையை இழந்து இரண்டு வருடங்களாயிற்று. அக்கம் பக்கத்திலிருந்து அவ்வப்போது மாண்டலேயிலும், பண்டுக்கிலும் நிறையப் பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திகள் கசியும் போது அப்பா நினைவு அந்த வீட்டில் மௌனமாய்க் கவியும். “பணம் குடுத்து சரிக்கட்டிட முடியாதுங்களா?” என்ன செய்தாவது அவளைக் காப்பாற்ற முடியுமா என்று மன்றாடிய மாலதியின் பரிந்துரைப்பையெல்லாம் கேட்க அவர் தயாராயில்லை. “நிலைமை தீவிரமாயிட்டுது. இத்தனை நாள் இல்லீகல் இம்மிக்ரண்டா ஒரு பொண்ணை வீட்டுல வச்சிருந்ததே மடத்தனம். விவாதம் பண்ண நேரமில்லை மாலதி. அவளை வெளியே அனுப்பிடு.”

”ஒரு நாள் அவகாசம் குடுங்க ஐயா. வர்மாஜி கிட்ட ஃபோன் போட்டு சொல்லி, கூட்டிகிட்டு போயிடச் சொல்றேன”

வர்மாஜி பர்மாவிலிருந்து அகதிப் பெண்களைத் தருவிக்கும் தரகன். யாருக்காவது பணியாள் வேண்டுமென்றால் இவர்களின் பிரத்யேகத் தகவல் தொடர்பில் தெரிந்துகொண்டு தேவைக்கேற்ப ஆள் அனுப்புவான். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவனுக்குச் செலுத்த வேண்டும்.

அவர்கள் வாக்குவாதத்தின் இறுதியில் அப்போதைக்குத் தப்பும் வழி என்று யோசித்து சீதா அந்தக் குடியிருப்பின் இரைச்சலான மோட்டர் ஓடும் அறையில், குப்பைக் கூளங்களுக்கிடையே கிடத்தப்பட்டாள். கதவு திறந்ததில் வெளிச்சம் தாக்கி பெருச்சாளிகள் உசுப்பேறி ஓடின. அப்புறப்படுத்தாத இரண்டு நாள் குப்பையின் நாற்றம் மூச்சை இறுக்கியது. கதவை மூடிய பின் சூழ்ந்த இருட்டில் மௌனமாய் போலீஸ் வருவதை எதிர்நோக்கி வெளியே கேட்கும் பேச்சுக்குரல்களை பயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவள், தலையைக் கவிழ்த்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அப்பாவைத் தொடர்ந்து ஒரு நாள் அண்ணனும் காணாமல் போனான். அவன் ஜனநாயக ஆட்சிக்குப் போராடும் கொரில்லாப் படையில் சேர்ந்துவிட்டதாய் அக்கா சொன்னாள். அவ்வப்போது ராணுவத்திலிருந்து யாராவது வந்து அண்ணனைப் பற்றி விசாரித்துவிட்டு தகவல் கேட்டு மிரட்டிவிட்டுப் போகும்போது அவன் உயிரோடு இருப்பது ஊர்ஜிதமாகும். எல்லை தாண்டிப் போய் ரட்சபுரியில் ஒரு நூற்பாலையில் வேலை செய்கிற அக்காள் ஒரு முறை அண்ணனை விசாரிக்க ராணுவத்திலிருந்து வந்தவனுக்குச் சரியாக பதில் சொல்லவில்லை என்று அடி வாங்கி ஆபாசமான வசவுகளால் மிரட்டப்பட்ட பிறகு இரு பெண்களையும் வீட்டில் வைத்திருக்கப் பயந்து அம்மாதான் அவள் எல்லை தாண்டி தாய்லாந்து போக ஏற்பாடு செய்தாள். நித்தம் நித்தம் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற பயந்து சாகவேண்டியதில்லை. கஷ்டப்பட்டு எல்லை தாண்டிவிட்டால் போதும் ஊருக்குள் போய்ச் சமாளித்துக்கொள்ளலாம்.

அவர்கள் பயந்ததுபோல அந்தக் குடியிருப்புக்குக் காவல் துறை வரவில்லை . மூன்று மணி நேர காத்திருத்தலுக்குப் பின் சீதா வெளியே வந்தாள். போலீஸ்காரர்கள் திரும்பிப்போய்விட்டதாய்ப் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்ன தகவலில் மாலதி அவளைக் கூப்பிட்டு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கச் சொன்னாள்.

அலுவலகம் சென்ற முதல் காரியமாய் நடராஜன் தொலைபேசியில் ஏஜெண்ட் வர்மாவைக் கூப்பிட்டு சீதாவைக் கூட்டிப்போகச் சொன்னார். வர்மாவும் பயத்தில் இருந்தான். மருத்துவமனை விவகாரத்தால் ஊரு முழுக்க போலீஸ் கெடுபிடி அதிகமாகிவிட்டதாயும் இப்போது கூட்டிப் போனால் சிக்கிக்கொள்வோம் என்றும் சொன்னவனை மேற்கொண்டு பேசவிடாமல் அன்றைக்கே வந்து கூட்டிப்போகுமாறு கண்டிப்புடன் சொல்லிவிட்டு வைத்தார் நடராஜன். வீட்டிற்கு வந்ததும் வாக்குவாதம் தொடர்ந்தது. பாஸ்போர்ட் செய்து தரலாம், விசா ஏற்பாடு செய்யலாம் என்ற மாலதியின் அத்தனை வாதங்களையும் நிராகரித்தார். நல்ல நிலையில் இருக்கும் அவரைப்போன்ற வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் கறக்கவே போலீஸ் அவரை இம்சை செய்யும் என்று நண்பர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ‘வீட்டோட இருந்து ராத்திரி பகல் பாக்காம அத்தனை வேலையும் செய்றா. அர்ஜுனை தம்பி மாதிரி பாத்துக்கறா. சின்ன வயசு , ஊர்ல கஷ்டம்னு நம்மை நம்பி வந்த பொண்ணை தீடீர்னு தொரத்தினா எங்க போகும்?’ ‘நாம இங்க வேலை செய்ய வந்த வெளிநாட்டவங்க… நமக்கு இதால ஏதாவது பிரச்சனை வந்தா நம்மை யாரு காப்பாத்தறது? மூணு மாச சம்பளம் குடுத்து அனுப்பிடு.’ வர்மா பத்து மணிக்கு வண்டியோடு வந்தான். சீதா துணிகளைக் கட்டிய மூட்டை முடிச்சும், அழுது ஓய்ந்த கண்களுமாய் இதற்கெல்லாம் தயாரானவள்போல பேசாமல் இருந்தாள். இன்னும் சில பெண்கள் வண்டியில் இருந்தார்கள். மேசாட் வரை ஓட்டிச் சென்று ஒரு வாரம் கழித்து எல்லையில் அவர்களைக் கடக்க வைக்க ஏற்பாடு செய்திருப்பதாய்ச் சொன்னான். அவள் போவதை உணர்ந்து கூச்சலிட்டு ரகளை செய்த அர்ஜுனை ஆத்திர மிகுதியில் அடித்து அறைக்குள் கொண்டு கிடத்தினார்.

சீதா போகும் முன் மாலதியைக் கட்டிக்கொண்டு ‘பயமாயிருக்கு அக்கா’ என்று அழுததும் வண்டியில் தரையில் காலைக் கட்டி உட்கார்ந்ததும் நினைவில் மோத குற்ற உணர்வு மறைய ஓரிரு நாட்கள் ஆனது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் அலுவலகத்தில் யாரோ பேசி ஏற்பாடு செய்ததாய் பணிப்பெண் வீட்டிற்கு வந்து வேலையைத் தொடங்கினாள். அர்ஜுன் அவளை ரொம்ப அடிக்கிறான், நம்ம சாப்பாடு சமைக்கவே தெரியவில்லை என்பது போன்ற மாலதியின் அற்ப முறையீடல்களை நடராஜன் பொருட்படுத்தவில்லை.

சீதா அவர்கள் வீட்டை விட்டு விலகிய ஒரு வாரத்தில் அவர்களின் அவசரகதியான வாழ்க்கைச் சுழற்சியில் அந்தப் பெண்ணின் நினைவு மெல்ல மெல்ல கரைந்து போனது. நடராஜன், பிரச்சனை ஒன்று நீங்கிய நிம்மதியில் அலுவலகக் கவலைகளில் மறுபடி மூழ்கி வீட்டுக்குத் தூக்கி வரும் கோப்புகளோடு ஒன்றிப் போனார். அர்ஜுனும் ‘சீதா எங்கடா’ என்றால், ‘பம்மா பேய்ட்டா … நாலிக்கு வர்வா’ என்று சொல்லப் பழகினான்.

மருத்துவமனையை முற்றுகையிட்ட கொரில்லாக்கள் தாய்லாந்து ராணுவத்தின் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், செய்தித் தாள்களின் பரபரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் கூச்சலைக் குறைத்து நிதியமைச்சகத்தின் ஊழல் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். வார இறுதியில் நடக்கப் போகும் கால்பந்தாட்ட ஆட்ட ஆர்வத்தில் மக்கள் மூழ்க, அகதிகள் மூட்டை முடிச்சோடு வெளியேறும் புகைப்படத்தோடு முதல் பக்கச் செய்தியாக வந்துகொண்டிருந்த பாங்காக் போஸ்டின் பர்மா செய்திகள் மெல்ல மூன்றாம் பக்கத்துக்குச் சறுக்கின. மாலதி அவள் நினைவு வரும்போதெல்லாம், ‘போட்டும், இனியாவது அம்மா குடும்பத்தோடு அவ ஊரிலேயே இருக்கட்டும்’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். வார இறுதி பாங்காக் போஸ்டில், எல்லையைக் கடந்த பெண்களை பர்மா ராணுவத்தினர் கைப்பற்றிக் கற்பழித்ததாய் வந்த சிறிய பெட்டிச் செய்தியை அவர்கள் யாரும் படிக்கவில்லை .

– மார்ச் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *