வணிகவகுப்பும் ரெட்வைனும்!

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 24,713 
 

அன்று விமானம் மூன்று மணிநேரம் தாமதம் என்று மின்னஞ்சல் மூலம் அறிவித்தார்கள். ஏற்கனவே போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பனில் உள்ள சர்வதேச விமான நிலையமான ஹம்பேர்ட்டோ டெல்காடோ விமான நிலையத்திற்கு வந்திருந்தபடியால், வணிக வகுப்பினர் தங்குமிடத்தில் தங்கியிருந்தேன். வாடகைக்கு எடுத்த வண்டியையும் திருப்பிக் கொடுத்திருந்ததால், வேறு எங்கும் செல்ல மனம் வரவில்லை.

விரும்பிய அளவு தேவையான உணவு வகைகளை எடுத்து இலவசமாகச் சாப்பிடக் கூடிய வசதிகளை ஏற்படுத்தி இருந்தனர். உணவு பிடித்ததோ இல்லையோ, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கு கிடைத்ததை சாப்பிடப் பழகி வைத்திருந்தேன். ஓய்வெடுப்பதற்கு வசதியான இருக்கைகளும் போட்டிருந்தார்கள். முக்கியமாக மடிக்கணனி, செல்போன்களுக்கான தொடர்பு வசதிகளும் அங்கே போதிய அளவு இருந்தன. அங்கிருந்த அனேகமானவர்கள் குடும்பத்தை மறந்து செல்போனோடு தங்கள் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள்.

வணிக வகுப்பு என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். நான் சொல்ல வந்தது வணிக பாடம் படிக்கும் வகுப்பல்ல, இது கொஞ்சம் பணம் படைத்த வசதியானவர்களுக்கான வகுப்பாகும். வர்த்தகர்கள்தான் பயணிக்க வேண்டுமென்றில்லை, விமானத்தில் பயணிக்கத் தகுதி பெற்ற யாரும் இந்த வணிகவகுப்பில் பயணிக்கலாம். பொதுவாகப் பணம் படைத்த வர்த்தகர்களும், உயர் அரசபணியாளர்களும், அரசியல் வாதிகளும்தான் இதில் பயணிப்பதுண்டு. சக பயணிகளின் தொந்தரவு இல்லாமல், விமானத்தில் தனிக் கபின் போல, கை காலை நீட்டிப் படுத்துக் கொண்டு செல்லக்கூடியதாக உங்கள் இருக்கை உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.

வசதி என்றால் என்ன என்ற கேள்விக்கு நான் பதில்தரவும் முனையவில்லை. தொடர்வண்டியில் பயணிக்கும்போது, உங்களுக்கான ஒரு இருக்கையை ஒதுக்குவதற்கோ, அல்லது பயணத்தின் போது படுத்துக் கொண்டு செல்வதற்கோ வசதிகள் இருப்பது போல, விமானத்தில் பயணிக்கும் போதும் அது போன்ற சில வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். வசதிகள்தான் முக்கியம் என்று பார்த்தால், நிம்மதியாகப் பயணிக்க என்ன கொஞ்சம் பணம் அதிகமாகச் செலவாகும், அவ்வளவுதான்.

தொழில் சம்பந்தமாக விமானத்தில் பயணிக்கும் போதெல்லாம், இந்த வணிக வகுப்பில்தான் பயணிப்பதுண்டு. நிறுவனத்தின் செலவில் இந்த வசதிகள் கிடைப்பதற்குக் காரணம் அவர்களுக்கும் எங்களின் தேவைகள் இருப்பதால், அவர்கள் இறால் போட்டு சுறாபிடிக்கும் கதைதான். உள்ளே வரும்போது உங்கள் விமான பயணச்சீட்டை வரவேற்பு மேசையில் நிற்பவரிடம் காட்டினால் போதுமானது, அங்கே உள்ள வசதிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

விமானநிலையத்தில் உள்ள தங்குமறைக்கு வந்த நான் தேவையான உணவை எடுத்துக் கொண்டு எனக்கு ஏற்ற இருக்கை ஒன்றைத் தெரிவு செய்து அமர்ந்து கொண்டேன். என்னைச் சுற்றிவர என்ன நடக்கிறது என்று அவதானித்தேன். ஒருவர் அங்குமிங்கும் நடந்தபடி வீடியோ உரையாடல் மேற்கொண்டிருந்தார். ஆர்வம் காரணமாக அவர் என்னைக் கடந்து செல்லும் போதெல்லாம் எட்டிப் பார்த்தேன். வெள்ளைத் தாடி விட்ட ஒருவரின் முகம்தான் அதில் தெரிந்தது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அவர் கதைத்துக் கொண்டிருந்தார். வணிகம் சார்ந்த உரையாடலாக இருக்கலாம், அவருக்குக் கடைசி அழைப்பு வந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை. நல்ல காலம், வணிக வகுப்பு என்பதால் அங்கேதான் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கே வந்து அவரைத் தேடிப்பிடித்து அவசரமாக அழைத்துச் சென்றார்கள்.

அருகே இருந்தவர் தானும் அவரைக் கவனித்ததாக சொன்னார். எங்களுக்கான அறிமுகம் அப்போதுதான் ஆரம்பமானது. அவர் ஒரு போத்துக்கேயர், நன்றாக ஆங்கிலம் கதைத்தார். றொட்றிக்கோ என்று தனது பெயரை அறிமுகம் செய்தார். மதுபான வர்த்தக விடயமாக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட லண்டன் செல்வதாகக் குறிப்பிட்டார். தனது விமானமும் தாமதமாகிவிட்டது என்று குறிப்பிட்டார். நானும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராச்சியத்தைக் கைப்பற்றிய போது, கரையோரப் பகுதி மக்களைக் கத்தோலிக்கர்களாக மதம் மாற்றிச் சில்வா, பெர்னான்டோ, பெரேரா, மாட்டின், மரியா என்று தங்கள் பெயர்களையே அந்த மக்களுக்கும் சூடினார்கள் என்பது நினைவில் வந்தது. அதனால்தான் இங்கே சந்தித்த போர்த்துக்கேய மக்களின் பெயர்களும் எனக்குப் பழக்கமான பெயர்களாக இருந்தன. நண்பர் வைன் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் என்பதால் எங்கள் உரையாடலும் அது சம்பந்தமானதாவே அமைந்தது.

‘நீங்க போட்டோ பகுதியைச் சேந்தவரா?’ என்று கேட்டேன்.

‘ஆமாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’

‘இல்லை, போட் வைன் உலகப் பிரசித்தி பெற்றது, அதனால்தான் கேட்டேன்’ என்றேன்.

‘அங்கே போட்டோவுக்கு வந்திருந்தீர்களா?’

‘ஆமாம், நானும் நண்பனும் குவின்ராவுக்கு வந்திருந்தோம்.’ என்றேன்.

‘நீங்க அங்கே வந்து பார்த்ததில் மகிழ்ச்சி, உங்களுக்குப் போட்டோ பிடித்திருந்ததா?

‘ரொம்பவே பிடித்திருந்தது. இலங்கையில் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கேயும் மலைச்சரிவுகளில் தேயிலை செடிகள் நிரையாக இருப்பதைப் போல, இங்கேயும் திராட்சைக் கொடிகள் மலைச்சரிவுகளில் நிரையாக நிற்பதைப் பார்த்து ரசிக்கக்கூடியதாக இருந்தது.’

‘இங்கே உள்ள ‘வின்யாட்’ என்று சொல்லப்படுகின்ற திராட்சைத் தோட்டங்கள் உள்ள இடங்களைச் சுமார் 14 பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். முக்கியமாக போட்டோ பகுதியைத் திராட்சை தோட்டங்களுக்கான மரபுரிமைப் பகுதியாக ஐக்கியநாடுகள் மரபுரிமை அமையம் அறிவித்திருப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கின்றது.’

‘உங்க நாட்டு வைன் உற்பத்தி எவ்வளவு இருக்கும்?’

‘நாங்க ஐரோப்பிய ஒன்றியத்தில் 5வது இடத்தில் அதிக வைன் ஏற்றுமதியாளர்களாக இருக்கிறோம். உலகச் சந்தையைப் பொறுத்த வரையில் 10வது இடத்தில், பின்னால்தான் இருக்கிறோம். சரியாகத் தெரியவில்லை கடந்த வருடம் சுமார் 936 மில்லியன் டொலர் வரை பெறுமதியான 306 மில்லியன் லிற்ரேஸ் வைன் ஏற்றுமதி செய்திருக்கிறோம் என நினைக்கின்றேன்’ என்றார்.

‘உங்க போட் வைன்தான் சிறந்தது என்று நினைக்கிறீகளா?’

‘நிச்சயமாக, இதில் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். யார் என்ன சொன்னாலும் வைனுக்கு எங்கள் பரம்பரை வாழ்ந்த டோரோ போட்டோதான் பிரபலமானது. இதை டோரோ பள்ளத்தாக்கில் உள்ள என்னைப் போன்ற சிலர் குடும்ப வியாபாரமாகவே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். இதைவிட லிஸ்போவா, அல்என்ரியோ போன்ற பகுதிகளிலும் வைன் உற்பத்தி செய்கின்றார்கள். இதைவிடச் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்காகக் கொஞ்சம் வைன் இறக்குமதியும் செய்கின்றோம்’ என்றார்.

‘லிஸ்பனில் ஆற்றங்கரையில் வைன் பீப்பாக்கள் ஏற்றிய படகுகளைப் பார்த்தேன். அப்பொழுதான் விசாரித்தபோது, நீண்டகாலமாகப் போட்டோ பகுதியில் இருந்து படகுகள் மூலம் வைன் கொண்டு வருவதாகச் சொன்னார்கள், இது உண்மையா?’

‘ஆமாம், அது எமது நீண்டகால பாரம்பரியம், அப்போது வீதிப் போக்குவரத்துக்கள் குறைவான காலம் என்பதால் வைன் பீப்பாக்களைக் கொண்டு செல்வதற்குப் படகுகளைத்தான் பயன் படுத்தினார்கள். அதனால்தான் இங்கே அனேகமான மதுச்சாலைகள் ஆற்றங்கரைகளில் இருக்கின்றன.’ என்றார்.

‘சிறந்த வைன் என்று நீங்கள் எதைச் சிபார்சு செய்வீங்க?’

‘எனக்குப் பிடித்தமானது என்றால் போட்வைன்தான். இன்னும் சொல்வதென்றால்

TourigaNacional, Aragonez, Alfrocheiro , Trincadeira Nghdwtwiwr சொல்லலாம்’ என்றார்.

‘யார் எல்லாம் உங்க வைனை வாங்குகிறார்கள்?’

‘முக்கியமாகப் பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, அங்கோலா போன்ற நாடுகள் அதிகம் வாங்குகின்றன. இப்போ கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளும் புதிதாக எங்களுடன் வைன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன, அது சம்பந்தமாகத்தான் லண்டன் போகிறேன். கனடாவில் எங்க வைனுக்கு வரவேற்பிருக்கா?’ என்றார்.

‘இருக்கு, எங்க இனப் பெண்கள் முன்பு பொதுஇடங்களில் மதுபானமே அருந்துவதில்லை, இப்போது உங்கள் ரெட்வைன் அறிமுகத்தால், உடலாரோக்கியத்திற்கு நல்லதென்று சமூக நிகழ்ச்சிகளில் ‘ரெட்வைன்’ அருந்தத் தொடங்கி விட்டார்கள்’ என்றேன்.

‘நல்லது, அதனாலே எங்களுக்கு வருமானம்தானே, ஆமா என்ன பிராண்ட் வைன் பாவிக்கிறாங்க’ என்றார்.

‘தெரியலை, நான் நினைக்கிறேன் உங்க ‘பைராடா டிஓசி’ ரெட்வைனைத்தான் விரும்பிச் சாப்பிடுவாங்க என்று, ஆமா கோவிட் காலத்தில் இங்கேயும் வைன் உற்பத்தி பாதிக்கப்பட்டதா?’

‘பெரிதாக இல்லை, காலநிலை சீர்கேடு, மற்றும் கோவிட்-19 காரணமாக சென்றவருடம் உற்பத்தி இரண்டு வீதத்தால் குறைந்திருக்கிறது. உணவு விடுதிகள், மதுச்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாலும், போக்குவரத்து தடைப்பட்டதாலும் வைன்பாவனையும் குறைந்திருந்தது. திரும்பவும் பழையபடி எங்கள் சந்தையைப் பிடிக்க வேண்டும்’ என்றார்.

‘வைனுக்குப் புதிய சந்தைகள் ஏதாவது கிடைத்தனவா?’

‘பெல்ஜியம், டென்மார்க், உக்ரைன், மெக்சிக்கோ போன்ற நாடுகள் ஆர்வம் காட்டியிருக்கின்றன. சந்தைப்படுத்துவது இப்போது நடக்கும் உக்ரைன் போரால் சற்று தாமதமாகிறது.’ என்றவர், ‘சரி இவ்வளவு கேள்விகளையும் கேட்டீர்களே, அங்கே வந்தபோது வைன் ரேஸ்ட் பண்ணிப்பார்தீங்களா? உங்களுக்கு எந்த வைன் பிடித்திருந்தது? அது பிடித்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டார்.

நான் சிரித்துவிட்டுச் சொன்னேன் ‘நான் மதுபானம் அருந்தவதில்லை, திராட்சைப்பழம் சாப்பிட்டுப் பார்த்தேன் ருசியாக இருந்தது. நண்பர்தான் அங்கே வைனை ருசிபார்த்து விட்டு நன்றாக இருப்பதாகச் சொன்னார்’ என்றேன்.

‘நீங்கள் திராட்சைப் பழத்தை விரும்பிச் சாப்பிட்டதாகச் சொன்னீங்க, அப்போ ஏன் வைன் குடிக்க மாட்டேன் என்று சொல்றீங்க?’ அவர் வைன் வணிகர் என்பதால் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதிலேயே கவனமாக இருந்தார்.

‘நீங்கள் கேட்டதும் எனக்கு எங்க ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தர் சொன்னதொரு கதை நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால் சுவாமியின் சீடன் ஒருநாள் அவருக்கு இரவு உணவின்போது திராட்சைப்பழங்களைப் பரிமாறினான். அதை அவர் சாப்பிடும் போது ‘சுவாமி எனக்கொரு சந்தேகம்’ என்றான். ‘என்ன சந்தேகம் கேள்’ என்று சுவாமி கேட்டார்.

அதற்கு அவன் ‘நீங்கள் திராட்சைப்பழம் சாப்பிடலாம் என்றால் ஏன் அதன் சாற்றைப் பதப்படுத்திச் செய்யும் வைன் சாப்பிட மாட்டேன் என்று சொல்கிறீர்கள், இரண்டும் ஒன்றுதானே?’ என்றான். சுவாமி இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கப் படுத்தினாலும் சீடன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மறுநாள் காலையில் சுவாமி எல்லா சீடர்களையும் அழைத்தார். கேள்வி கேட்ட சீடனை மட்டும் தண்ணீர் தொட்டிக்கு அருகே அமரச் சொன்னார். அந்தச் சீடன் கேட்ட கேள்வியை எல்லாச் சீடர்களுக்கும் சொன்னார், அப்புறம் ஒவ்வொரு சீடனாக கேள்வி கேட்ட சீடனின் தலையில் அங்கே உள்ள செம்மண்ணைக் கையால் அள்ளிக் கொட்டச் சொன்னார். ஒவ்வொரு முறையும் ‘நோகுதா’ என்று கேட்ட போது சீடன் இல்லை என்று பதிலளித்தான். அதேபோல தண்ணீரையும் கோப்பையில் எடுத்துத் தலையில் ஊற்றச் சொன்னார், அப்பொழுதும் சீடன் நோகவில்லை என்று சொல்லிச் சிரித்தான். இப்போது அருகே இருந்த செங்கட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து சீடனின் தலையிலே போடச் சொன்னார். உடனே சீடனோ தலையிலே கை வைத்துக் கொண்டு ‘வேண்டாம்’ என்று கத்தினான். ‘அதே மண்ணும், அதே தண்ணியும் சேர்ந்து உருவானதுதானே இந்தச் செங்கட்டி ஏன் இதை மட்டும் நோகும் என்கிறாய்’ என்று சுவாமி கேட்டார். சீடன் உண்மையைப் புரிந்து கொண்டதால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.

கதையைச் சொல்லிவிட்டு அவரைப் பார்த்தேன்.

‘புரியுது, இது உங்க கலாச்சாரத்திற்கு ஏற்ற கதையாக இருக்கலாம், ஆனால் இங்கே வைன் எங்க வாழ்க்கையோடு கலந்து விட்டது, எங்க வியாபாரமே இதில் தானே தங்கியிருக்கின்றது!’ என்றார்.

‘நான் கணக்காளராக இருந்தாலும், ஒரு எழுத்தாளனாகவும் இருக்கின்றேன். அதனால்தான் இவற்றை அறிந்து வைத்திருந்தேன். எனது நண்பர் வைனைப்பற்றிச் சொன்ன விடயங்களும், உங்களைப் போன்ற அனுபவசாலிகளிடம் பெற்ற விடயங்களும் ஒரு கதைக்கு வலுவூட்டக் கூடியன.’ என்றேன்.

‘அப்போ, நீங்கள் எழுதப்போகும் கதையில் எனக்கும் பங்குண்டு’ என்றவர், நேரத்தைப் பார்த்துவிட்டு, பயணத்திற்கான நேரம் வந்துவிட்டதாகச் சொல்லி விடைபெற்றார்.

எனக்கும் நேரமாகிவிட்டதால் விமானத்தை நோக்கிப் புறப்பட்டேன். வணிக வகுப்பில் எல்லோருக்கும் வைன் பரிமாறினார்கள், போத்துக்கேயரின் போட் வைனாகக்கூட இருக்கலாம்.

விமானப்பணிப்பெண் சிரித்த முகத்தோடு வைன் போத்தல்களைக் காட்டி எது வேண்டும் என்று கேட்டபோது, சுவாமி விவேகானந்தர்தான் கண்ணுக்குள் நின்றார், ‘வேண்டாம்’ என்று சொன்னேன், ஆச்சரியமாகப் பார்த்த அவள் தலையை அசைத்துவிட்டு அடுத்தவரிடம் சென்றாள். வணிக வகுப்பில் இப்படியும் ஒரு பயணியா என்று அவள் மனதுக்குள் வியந்தபடி என்னைக் கடந்து போயிருக்கலாம். மற்றப் பயணிகள் விரும்பிய வைனைக் கேட்டுவாங்கி அருந்தினார்கள், சுவாமி விவேகானந்தர் சொன்ன, எனக்குத் தெரிந்த கதை அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

Print Friendly, PDF & Email

3 thoughts on “வணிகவகுப்பும் ரெட்வைனும்!

  1. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற இனிய நந்தவனத்தின் வெளியீடான வெளிநாட்டுச் சிறுகதைகள் தொகுப்பில் இந்தக் கதையைப் படிக்க முடிந்தது. அருமையான தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கதைகளையே வாசித்த எங்களுக்கு நேரடியாகவே தமிழில் எழுதப்பட்ட இது போன்ற கதைகள் கிடைத்தது வரப்பிரசாதமே!

  2. தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். மதுபானமும் அப்படித்தான். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கு முதற்காரணம் புரிந்துணர்வு இல்லாமை, சந்தேகம், அடுத்தது மதுபானம். எமது சமூகத்திற்கு இப்படி எடுத்துச் சொன்னால்தான் புரிந்து கொள்வார்கள்.

  3. ‘அதே மண்ணும், அதே தண்ணியும் சேர்ந்து உருவானதுதானே இந்தச் செங்கட்டி ஏன் இதை மட்டும் நோகும் என்கிறாய்’ என்று சுவாமி விவேகானந்தா கேட்டார். சீடன் உண்மையைப் புரிந்து கொண்டதால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.

    விவேகானந்தரின் இந்தக் அனக்டடோட் நிகழ்வை சாதாரணமாக யாரேனும் பொராணிகர், கதாகாலட்சேபத்தில், சொல்லியிருந்தால் கூட சாதாரணமாகக் கேட்டுக் கடந்திருப்பார்கள் எவரும்.’வணிக வகுப்பும் ரெட் வைனும்’ என்ற இந்தச் சிறுகதையின் கிளைமாக்ஸாக இதை வைத்தபின், இந்தக் கதையைப் படித்த எவருக்குமே இந்தக் கதை மறக்க முடியாது.
    எழுத்தாளருக்கு என் வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *