பாடமும் பாயாசமும்

 

முதல் பாடவேளை, வகுப்பில் பாதி மாணவர்கள் இன்னும் வரவில்லை.

முதல் வகுப்பு என்றால் பாடம் நடத்துவதற்கு லாயிக்கற்றது. முழுமையாக எல்லா மாணவர்களும் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒவ்வொருவராக வருவர். ஒவ்வொருவரும் ஒவ்வொருக்குமான கதை சொல்வார். கேட்டால் நமக்குக் கோபம் தான் வரும். எனவே யாரையும் ஏன் தாமதம் என்று கேட்பதே இல்லை.

சிறிது நேரத்தில் பாடம் நடத்த ஆரம்பித்தேன்.

ஒரே நேர்கோட்டில் மாணவர்களைக் கொண்டு வருவதற்கு, ஏதேனும் வெளி விஷயம் பேசி, வகுப்பின் கவனத்தை இழுத்துப்பிடிக்க வேண்டும். அனைவரின் கடிவாளத்தையும் கையில் பிடித்துக் கொண்டே தான் பாடத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இந்தச் சிக்கலுக்குத் தான், எனக்கு முதல் வகுப்பு வராமல் பார்த்துக்கொள்வேன். எதற்கு வம்பு மாணவர்களோடு, அவர்கள் பாணியிலேயே போய்விடுவது நமக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது. ஆனால், இன்று முதல் வகுப்பாக விடுமுறை போட்ட சக ஆசிரியருக்காக வர வேண்டியதாயிற்று.

வகுப்பு கொஞ்சம் கொஞ்சமாக என் வசம் வரத்தொடங்கியிருந்தது. மாணவர்களைப் பேச்சால் கட்டிப் போட்டு ஆள்வதில், அந்த இடத்தில் பெரும் இறுமாப்பு தான் எனக்கு.

மாணவர்களுக்கு நான் பாடம் நடத்தும் பொழுது, அவர்களின் கவனத்தை என் மேல் கொண்டுவருவதற்காகப் பல உத்திகளைக் கையாண்டுப் பாடம் நடத்துவேன். ஒரு பிரம்மாண்டத்தை அப்படியே விளக்கி அதனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, ஆச்சரியமாகப் பார்க்க வைப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் எனக்கு. வேறு ஒரு உலகை, அதன் விசித்திரமான வடிவமைப்பை அங்குலம் அங்குலமாகத் தொட்டுத் தடவி அங்கேயே அனுபவிக்க வைத்து விடும் இலாபகத்தை என்னால் வகுப்பில் செய்து காட்டி விட முடியும்.

அப்படித்தான் அன்றும் ஆரம்பித்தேன். ”கடவுள் எவ்வளவு பெரிய பலசாலி? அவரிடம் எவ்வாறு அவ்வளவு சக்திகள் வந்தன? பல கோடிப்பேர்களுக்கு ஒரே நேரத்தில் எப்படி அருள்பாலிக்கிறார்? என்று என் கேள்விகள் வரிசையாக மாணவர்களிடம் போய்க்கொண்டே இருந்தன.

யாரும் பதில் பேசவில்லை. ஒரு கேள்விக்கான பதிலை இதுவரை நாம் தேடிக்கொண்டிருப்பதாக இருந்தால் கேள்விக்குப் பதில் சொல்வதில் இருந்து சற்று விலகியே இருப்போம். அதைத்தான் வகுப்பில் உள்ள மாணவர்களும் செய்தனர்.

கேள்வி கேட்டால், நிசப்தம் ஆகிவிடுவது அல்லது தலையைக் குனிந்து கொள்வது அல்லது வேறு பக்கம் பார்ப்பது என்பதாக அவர் அவரின் செயல்கள் இருந்தன.

நான் தொடர்ந்து, கடவுள் குறித்தான விரிந்த தளத்திற்குள் செல்ல ஆரம்பித்தேன். அவர்கள் புரிந்து கொள்ளும் ஆற்றலை விட அதிகமாகவும் பேசி விடாமல், அவர்களுக்கு ஏற்ற வகையில் யோசித்துப் பல விஷயங்களையும் புரிய வைத்துவிட வேண்டும் எனப் பேசினேன். இது போல் என்னுடைய எல்லா வகுப்புகளிலும் பேசுவது வழக்கம் என்பதால் அன்றும் சரமாரியான வார்த்தைகள் வகுப்பில் வந்து விழுந்தன.

வகுப்பு நிசப்தமானது. என் வார்த்தைகள் மேலும் கீழும் ஏறி இறங்கி விளையாட ஆரம்பித்தன. யார் யாரோ பக்கத்தில் நின்று அவர்கள் படித்த நூலில் இருக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டு இருந்தார்கள். அவை என் மூளை வழியாக மாணவர்களிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தன. அவை வேக வேகமாக வரிசைக்கிரகமாகப் போர்ப் படை வீரர்கள் போல் முன்னின்று காரியம் செய்து கொண்டிருந்தன.

நூலகங்களில் என்றோ கஷ்டப்பட்டுப் படித்த பல நூல்கள் தன் அட்டைப் படத்தைக் காட்டிவிட்டுச் சென்றன. இடையிடையே சமகால யோசனைகள், சமகாலப் பிரச்சனைகள் இவையும் அவர்களைக் கொஞ்சம் யோசிக்க வைக்க வெளிவந்தன.

பெருங்குரலெடுத்து வகுப்பிற்குள் அனைவரையும் திக்குமுக்காட வைப்பதில் என் திறமைக்கு எப்பொழுதும் ஒரு தேர்வை வைத்துக் கொண்டே இருப்பேன்.

”யோசித்துப் பாருங்கள் மாணவர்களே, திருவண்ணாமலையில் சாதாரண நபராக 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு சாமியார், ஆயிரம் சீடர்களுடன் பல கோடிகளுக்கு முதலாளி ஆகி, ஒரு தனி தேசத்தையே உருவாக்குவதற்கு முயல்கிறார் என்றால் யார் கொடுத்தது இவ்வளவு செல்வத்தை இவர்களுக்கு? இவ்வளவு சீக்கிரம் ஒருவர் இப்படிச் செல்வந்தராக முடியுமா? இவரைப்போல் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை சாமியார்கள்? கடவுள் பெயரால் நாம் ஏமாறுகிறோம் நம்மை ஏமாற்றி, அவர்கள் மிகப் பெரும் அளவிற்கு கொழுத்துப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்

”மாணவர்களை யோசியுங்கள். கடவுள் மென்மைக்கும் மென்மையானவர். சுடர்விட்டு எரியும் தீக்கு பெரும் தீயாய் ஆனவர். அவனே உலகத்தின் மையப் பொருள். அவனே அறிவியல். அவனே உலகை இயக்குகிறான். உலக மக்கள் யாவருக்கும் பொதுவாய் இருக்கிறான். இதைப் புரிந்து கொள்ளாமல் இடையிலுள்ள ஏஜெண்டுகளை நம்பாதீர்கள். அவர்கள் நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் நபர்கள் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இடைத்தரகர்கள் ஆன இந்தச் சாமியார்கள் உங்கள் இறை நம்பிக்கையை மாற்றி அவர்கள் காட்டும் வழியில் உங்களைச் செல்வதற்குப் பழக்கி விடுவார்கள்.” பேசிக்க் கொண்டே இருக்கையில், ராமர் எனும் மாணவன் எழுந்து,

”சார். எல்லாச் சாமியார்களும் இப்படி இல்லை சார். எங்க ஊர்ல உள்ள சாமியார் காலேஜ், ஸ்கூல், ஆஸ்பத்திரி எல்லாம் கட்டித் தந்திருக்கிறார். ரொம்ப சக்தி வாய்ந்தவர். அவர் ஆசிர்வாதம் செய்தார்ண்ணா போதும். எல்லாம் சரியாகிவிடும்.” என்று இதுவரை அமைதியாக இருந்த ராமர் எழுந்து தனக்கு இஷ்டமான சாமியாரை நல்லவர் எனும் தொனியில் பேசினான்.

ராமர் கொஞ்சம் சுய புத்தி இல்லாதவன். யார் என்ன சொன்னாலும் நம்பும் புத்தி அவனோடது. அப்படித்தான் அந்தச் சாமியாரோட பேச்சில் மயங்கிப் போய் அலைகிறான். இவனப் போல ஆளுங்கள மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்தான் என மனதில் எண்ணியவாறே எனது பேச்சைத் தொடர்ந்தேன்

”மாணவர்களே, ராமர் சரியாக ஒரு கேள்வி கேட்டான். இப்படித்தான் எல்லோரும் கடவுளை விட்டுவிட்டு சாமியார்களைச் சக்தி வாய்ந்தவர் என நம்பி அலைகிறீர்கள். அருளும், அரவணைப்பும் தருவது தான் ஆன்மீகம். இதையே மூலதனமாக்கி மக்களை உயர வைத்தால் அது தான் ஆன்மீகம். அதைவிட்டு அருளுக்கும் அரவணைப்புக்கும் ஈடாகச் செல்வத்தைப் பெற்றுச் சாமியார்கள் உயர்ந்தால் அது ஆன்மீகமா? யோகா ஒரு உடல் சார்ந்த விஞ்ஞானம். இதைச் சூட்சுமமாக்கிப் பண மழையில் சாமியார்கள் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எத்தனை விஞ்ஞானிகள் இந்த உலகுக்காக எவ்வளவோ விஷயங்களை கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் பணம் கொடுத்து இருக்கிறோமா?”

”ராமர், இது உனக்கு ப்புரியுதா? நீ பிறர் சொன்னால் கேட்பாய். சுயமாகச் சிந்தித்து பார். ஏழைச் சாமியார் என்று யாராவது இருந்தால் சொல். ஸ்கூல், காலேஜ், மருத்துவமனை எல்லாம் இலவசம் என்று எத்தனை சாமியார்கள் சொல்லியிருக்கிறார் என்று எல்லா மாணவர்களையும் கவனித்தவாறு கேட்டேன்.

நமக்கென்ன என்று மாணவர்கள் யாரும் பதில் கூறாமல் இருந்தார்கள்.

”எந்தக் கடவுளும் இது போன்ற சாமியார்களை நமக்கு இனம் காட்டவில்லை. அவரவர் கடவுளை வணங்காமல், இவர்களைப் போன்றவர்களை வணங்க வைக்கும் இழிநிலைக்கு, இவர்கள் ஆன்மீகத்தை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். கடவுளையும் கடவுளின் பெருமையையும் அழித்துப் புதிய ஆன்மீகக் கொள்கைகளால் நாட்டை சூறையாடுகின்றனர்.

“மாணவர்களே ஆன்மீகம் பெரும் புனிதத் தன்மை வாய்ந்தது. மானிடப் பிறப்பை அறிந்து, உணர்ந்து வாழச் செய்வது அது. சகோதரத்துவத்தையும், ஆசையற்றுப் பாசமுடன் முழுமையாக வாழ்ந்து வரும் வாழ்க்கையையும் அது கற்றுத்தருகிறது. எனவே, ஆன்மீகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.”

”அடுத்த வகுப்பில் வாய்ப்பு இருந்தால், இன்னும் பல செய்திகளைப் பேசுவதற்கு முயற்சிப்போம்”

எனது வகுப்பை இத்தோடு முடிக்கலாம் என்று நிறைவு செய்தேன்

நேரம் பார்த்தேன். வகுப்புக்கான நேரம் தாண்டி 5 நிமிடம் ஆகியிருந்தது. அடுத்த வகுப்புக்கான மேடம் வகுப்பின் வெளியே நின்றிருந்தார்.

“நன்றி மாணவர்களே மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி வகுப்பிலிருந்து வேகமாக வெளியே வந்து, கல்லூரி நூலகத்தை நோக்கி நடந்தேன்.

இன்றைக்கு நடத்திய பாடம் எனக்குள் ஒரு திருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதை அப்படியே அசைபோட்டுக் கொண்டே இருந்தேன்.

நாடு இன்றைக்கு எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது? இதை நினைத்தால் பயமாக இருக்கிறது. உலகம் இவ்வாறு இருக்கிறது என்று கூடத் தெரியாமல், மாணவச் சமூகம் இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கான பாடத்திட்டங்கள் எதுவும் சமூக விழிப்புணர்வைக் குறித்துப் பேசுவதாக இல்லை

ஆன்மீகப் போர்வைக்குள் அழுகிப்போன பிணங்களின் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மணம் வீசும் திரவியங்களைத் தடவிச் சமூகம் ஜீரணித்துக் கொண்டு இருக்கிறது. மாணவர்களைக் கூட விட்டு வைக்காத ஆன்மீக உலகம். இவர்களை மூளைச்சலவை செய்து வசியப்படுத்தி வைத்திருக்கிறது.

இப்படியே யோசித்துக் கொண்டிருப்பது கூடத் தவறுதான். இதுபோன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு இத்தகைய விழிப்புணர்வுச் செய்திகளைக் கூறிக் கொண்டிருப்பதைப் போல இன்னும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

கல்லூரி முடித்து விரைவாகவே இன்று வீட்டிற்கு வந்துவிட்டேன். காரணம் கல்யாண வயதில் இறந்துபோன என் தங்கையின் நினைவு நாள். வரும் போதே சாமி கும்பிடத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்துவிட்டேன். சர்க்கரைப் பொங்கல், தங்கைக்குப் பிடித்த பால் பாயாசமும், உருளைக்கிழங்கு வறுவலும் தயாராகி இருந்தது. குளித்துவிட்டுச் சாமி கும்பிட வேண்டியதுதான்.

மனைவி படங்களுக்கெல்லாம் பூ வைத்துக் கொண்டு இருந்தாள். கோடிப்பட்டுத் துணியை நான்காக மடித்து என் தங்கையின் போட்டோவுக்கு அலங்கரித்துப் பூ மாலைகளைப் போட்டிருந்தார். போட்டோவுக்கு இருபுறமும் குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தன.

விளக்குகள், பூஜைப் பொருள்கள் அனைத்தும் நேற்றே துலக்கிப் பள பள என்று இருந்தன.

”நேரம் ஆகிறது போய் குளிச்சிட்டு வாங்க” மனைவி அதட்டினாள்.

”அவ்வளவுதான் குளிச்சிட்டு வேகமாக வந்தரேன். பசங்க 2 பேரையும் முகம் கழுவி இருக்கச் சொல்லு. வீதியில் போய் விளையாட போறாங்க”

எல்லோரும் சாமி கும்பிடத் தயார்.

“டேய் தம்பி… சிவபுராணம் பாட்டுப் போடு”

”ஸ்பீக்கரில் போடவாப்பா” மூத்தவன் கேட்டுக்கொண்டே தன் செல்லில் கூகுள் மூலம் சிவபுராணம் போட்டான்.

ஸ்பீக்கரில் போட்டதால் கணீரென்று ”நமச்சிவாய வாழ்க” பாடல் ஒலித்தது.

”சத்தம் ஓவரா இருக்கு. குறை.”. சின்னவன் கூறிக்கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

படையல் போடப்பட்டு எல்லாம் தயாராக இருந்தது. ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம் காட்டிச் சாமி கும்பிட்டு நின்றோம்.

”போதும்… பாட்டை நிறுத்து”

பின்னாடியிருந்துப் பெரியவனுக்குக் கூறினான்.

சூடம் மலை ஏறும் வரை அமைதியாய் இருந்தோம். மலை ஏறியதும் படையல் நகர்த்தித் திருநீறு எல்லாம் பூசியதற்குப் பிறகு பால்பாயாசம் வைத்த டம்ளரை எடுத்துச் சின்னவனை நோக்கி,

”தம்பி வா… சாமிப் பிரசாதம்… கொஞ்சம் வாயில ஊத்திக்கோ” என்று பக்கத்தில் கூப்பிட்டேன்.

”வேண்டாம்பா… வேண்டாம்பா… இது சாத்தானுக்குப் படைத்தது. சாப்பிடக்கூடாதாம். எங்க மிஸ் சொன்னாங்க, இதைச் சாப்பிட்டால் ஆண்டவரோட ராஜ்ஜியம் நமக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்.”

சொல்லிவிட்டுத் தள்ளி நின்று கொண்டான்.

எனக்குத் தலை சுற்றியது.

உச்சி வேர்த்தது.

கால் நுனி கூசியது. 

பாடமும் பாயாசமும் மீது 3 கருத்துக்கள்

 1. கவின் says:

  சரியான சவுக்கடி மதம் என்ற பெயரில் செய்யும் அறிவின்மை இக்கதையுள் வெளிப்பட்டுள்ளது.

 2. Dr Veeramani says:

  பாடத்தை படித்தேன் பாயசத்தை குடித்தேன்..

  பாடம் புரிந்ததால் பாயசம் கசந்தது.

  போதிப்பவர்கள் பொய்யான வர்களாய் இருக்கலாம்..
  போதனைகள் நிஜமாய் பிஞ்சுகளின் மனதில் தங்கிவிடுகிறது என்கிற நெருப்பை எழுத்தாகி நம்மை சுடுகிறார் இந்த ஆசிரியர்.. இவர் இந்தக் கதை மூலம் ஆசிரியர் கெல்லாம் ஆசிரியராக அவதாரம் எடுக்கிறார்..
  உணர்ந்ததை தெரிந்ததை தைரியமாக உலகுக்கு சொல்பவனே படைப்பாளி..
  அப்படி நிதர்சமான இந்த கதையை எழுதிய ஐயா பாரதி சந்திரன் அவர்களுக்கும், பிரசுரித்த பெருமகனாருக்கும் என் ராயல் சல்யூட்.

  • பாரதிசந்திரன் says:

   நன்றி எழுத்தாளர் வீரமணி அய்யா,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)